19 – அகரநதி
அங்கிருந்து கிளம்பிய நதி நேராக சரணின் இல்லத்திற்கு சென்றாள்.
“சரணா…. டேய் சரணா….”, என அழைத்துக்கொண்டே உள்ளே நுழைந்தாள்.
“அடடே…. வாடா யாள் குட்டி….இப்பதான் இந்த பெரியப்பா வீட்டுக்கு வரணும்னு தோணிச்சா?”,பரமசிவம் கேட்டபடி அவளைத் தோளில் சாய்த்துக் கொண்டார்.
“நான் எப்ப லீவுக்கு வந்தாலும் வந்துட்டு தானே இருக்கேன் பெரியப்பா”, அவளும் சலுகையுடன் அவர் தோளில் இடித்தாள்.
“ஹாஹா… ஆமா… சரி இன்னிக்கு இராத்திரி இங்கயே தங்கிக்க குட்டி. நாம இராத்திரி மாடில உக்காந்து சாப்பிட்டுகிட்டே பேசி எத்தனை மாசம் ஆச்சி…. நீ இல்லாம உன் பெரியம்மாவும் வரமாட்டேங்குற மாடிக்கு”, பரமசிவம்.
“இன்னிக்கு முடியாது பெரியப்பா. நாளைக்கு நான் ஊருக்கு கிளம்பணும். இரண்டு நாள்ல பரிட்சை ஆரம்பிக்குது. செம் முடிஞ்சி வர லீவ்ல வரேன். சரணா பெரியம்மால்லாம் எங்க பெரியப்பா?”, நதியாள்.
“அப்படியா… சரி குட்டி. பரிட்சை நல்லா எழுதணும். ஜாக்கிரதையா இரு ஊருல. யாராவது எதாவது வம்பு பண்ணா எனக்கு ஒரு போன் போடு நான் வந்து அவங்கள கவனிச்சிக்கறேன்”, பரமசிவம் அவளை ஆசையாகப் பார்த்தபடிக் கூறினார்.
“அவகிட்ட யாரு வம்பு இழுக்க போறாங்க? இவ யார்கிட்டயும் வம்பு இழுக்காம இருக்கச் சொல்லி அனுப்புங்க”, எனக் கூறியபடி சரண் வந்தான்.
“என்னடா என் புள்ளைய கிண்டல் பண்ற?”, பரமசிவம் குரலைக் கடினமாக்கி வினவினார்.
“சும்மா சொன்னேன் ப்பா…. நான் கிளம்பறேன்”, என சரண் பம்மியபடிக் கூறினான்.
“இரு சரணா. நானும் வரேன். பெரியப்பா விருந்து எந்த இடத்துல?”, நதியாள்.
“நம்ம மாந்தோப்பு தாத்தாவோட மாந்தோப்புல தான். ஆத்தோரமா இருக்கும்ல அங்க தான்”, பரமசிவம்.
“சரி பெரியப்பா. இப்ப நானும் சரணாவும் அகன் வீட்டுக்கு போறோம். தோப்புக்கு அங்கிருந்து வந்துடறோம். பெரியம்மா எங்க?”, நதியாள்.
“அவ வெள்ளன்னமே கிளம்பி சுந்தரம் மாமா வீட்டுக்கு போயிட்டா, திலகா வரச்சொன்னான்னுட்டு. நானும் இப்ப கிளம்பி வரது தான். நீங்க முன்ன போங்க”, என அவர்களை அனுப்பிவிட்டுத் தயாராகச் சென்றார்.
நதியாளும் சரணும் அமைதியாக நடந்துக் கொண்டிருந்தனர். சரணின் முகம் சற்றே வாட்டமாக இருந்தது.
“என்ன சரணா…. ஏன் டல்லாகிட்ட?”, நதியாள்.
“ஒன்னுமில்ல”, சரண்.
“அட சொல்லு. என்னாச்சி?”, நதியாள்.
“அப்பா என்கிட்ட பாசமா பேசி ரொம்ப வருஷம் ஆகுது யாள். இன்னும் அவருக்கு என்மேல கோவம் கொறையல போல”, சரண் முகத்தைத் தொங்கப் போட்டபடிக் கூறினான்.
“ஏன் கோவம்? நீ என்ன பண்ண?”, நதியாள்.
“நான் ஸ்கூல் படிக்கறப்ப நம்ம பிரதாப் மாமா பொண்ணு கூட சண்டை வந்துச்சே உனக்கு நியாபகம் இருக்கா?”, சரண்.
“யாரு அந்த ஒட்டடகுச்சி மாதிரி ஒன்னு கண்ணாடி போட்டுட்டு சுத்துமே அதுவா?”, நதியாள்.
“அது தான். அவள நான் விளையாட்டுக்கு கிண்டல் பண்ணேன். அத அந்த சோடாபுட்டி பெருசு பண்ணி அவங்க அப்பா கிட்ட போட்டுவிட்டு பிரச்சினைய பெரிசு பண்ணிட்டாங்க எல்லா கிழவிங்களும் சேர்ந்து. இதுல நான் அவள தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு வேற சொல்லவும் நான் அதுக்கு சந்நியாசம் போனாலும் போவேனே தவிர இவள கட்டிக்கமாட்டேன்னு சொல்லிட்டேன். அது நம்ம அப்பத்தா கிழவி காதுல அரக்குறையா விழுந்து ஒப்பாரி வச்சி இன்னும் பிரச்சினை பண்ணி அப்பாக்கு என்மேல கோவம் வந்துரிச்சி. அப்ப இருந்து இப்படி தான் உருமிகிட்டே இருக்காரு”,சரண்.
“இதுக்கா இத்தனை வருஷமா பெரியப்பா கோவமா இருப்பாரு?”,நதியாள் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி அவனைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“அது மட்டும் இல்ல….”, சரண் தயங்கியபடிக் கூறினான்.
“முழுசா உண்மைய சொல்லு”, நதியாள்.
“அவ்வளவு பிரச்சினை பண்ணிட்டாங்கற காண்டுல நான் அவள பிடிச்சி அடிச்சிட்டேன். பொம்பள புள்ளைய அடிக்கற அளவுக்கு வந்துட்டியான்னு அப்பவே என்னை அடிபின்னிட்டாங்க. அப்ப இருந்து அந்த மாமா குடும்பம் கூட இருந்த நெருக்கம் கொறஞ்சி போச்சி அதான்…”, எனக் கூறி முடித்தான் சரண்.
“அவள அடிச்சது தப்பு சரணா. அப்படியும் கோவம் தீரலன்னா இன்னும் பிடிச்சி திட்டிவிட்டு இருக்கலாம். இல்லையா கொஞ்ச நாள் கழிச்சி எதாவது செஞ்சி இருக்கலாம் . சரி விடு பெரியப்பாக்கு உன்மேல பாசம் ஜாஸ்தி தான். வெளியே காமிச்சிக்கறது இல்ல. உன் கல்யாண பேச்சு எடுத்தா எல்லாம் சரி ஆகிடும் “, நதியாள் அவளின் தோளில் தட்டி ஆறுதல் கூறினாள்.
“ம்க்கும்…. இது ஒன்னு தான் இப்ப குறைச்சல்… உனக்கு கல்யாணம் ஆகாம நான் பண்ணிக்கறதா?”, சரண்.
“எனக்காக நீ ஏன் வையிட் பண்ணணும்? உனக்கு ஆசை வந்தா பொண்ண பாக்க சொல்லு இல்லையா, உனக்கு பிடிச்ச பொண்ணு இருந்தா சொல்லு நான் வீட்ல பேசறேன். உன் கல்யாணத்துல ஜாலியா என்ஜாய் பண்ணணும் சரணா. இதுவரைக்கும் நம்ம பேமிலில யாரு கல்யாணமும் நான் போனதில்ல. உன் கல்யாணத்துல எந்த சடங்கும் விடாம எல்லாத்தையும் பாத்து என்ஜாய் பண்ணணும். சோ நீ பர்ஸ்ட் பண்ணிக்க”, நதியாள்.
“நீ ஆபீஸ் லீவ் போடறதுக்கு என் கல்யாணம் தான் கெடச்சதா?”, என அவளின் காதைத் திருகினான் சரண்.
“சரி வா. பர்ஸ்ட் விருந்த கவனிப்போம். அப்பறம் கல்யாணத்த பத்தி யோசிக்கலாம்”, என நதி கூற , இருவரும் அகரனின் இல்லத்தில் நுழைந்தனர்.
“வாடா நதிமா….. வா சரண்…. கை கழுவிட்டு வாங்க டிபன் சாப்பிடலாம்”, திலகவதி.
“திலாத்தை டிபன் சாப்டுட்டா விருந்து சாப்பாடு கம்மியா தானே சாப்பிட முடியும். சோ இப்ப எனக்கு ஜூஸ் போதும். மதியம் புல் கட்டு கட்டணும்”, நதியாள்.
“யாள் குட்டி. இப்ப இரண்டு இட்லி சாப்பிட்டுட்டு மாந்தோப்புக்கு கிளம்புங்க. அங்க டைமுக்கு ஒவ்வொரு ஐட்டம் வரும் உன்னதேடி”, சிதம்பரம்.
“ஐ…. மாமா…என்ன என்ன ஐட்டம் இன்னிக்கு”, என அவரின் அருகில் சென்றுக் கேட்டாள் நதி.
“வந்து பாருங்க. வாங்க இப்ப அசைவம் தான் இந்த மாமாகூட உக்காருங்க”, சிதம்பரம் அவளைத் தன்னருகில் அமர்த்திக் கொண்டார்.
“கண்டிப்பா…என் செல்ல மாமா”, என அவரின் கன்னத்தைக் கிள்ளியபடி அருகில் அமர்ந்தாள்.
“அடியேய்…என் புள்ள கன்னத்தை கிள்ளுற நீ? இரு உன்ன அடி வெழுக்கறேன்”, என்று கூறியபடி மீனாட்சி பாட்டிக் கைகளில் சூப்புடன் வந்தார்.
“உன்னால முடியாது மீனு… என் சித்து மாமாவ நான் கிள்ளுவேன். உனக்கு என்ன? அப்படித்தானே மாமா?”, நதியாள்.
“ஹாஹா…. யாள் குட்டி. நீ இவ்வளவு நேரம் இல்லாம வீடே நல்லா இல்ல டா. இங்கயே இருந்துடேன்”, சிதம்பரம்.
“ஒவ்வொரு லீவ்லயும் கண்டிப்பா வந்துடறேன். டோன்ட் வர்ரி மாமா. இது என்ன சூப் மீனு?”,மீனாட்சி.
“நாட்டுக்கோழி சூப். இந்தா குடி. பூண்டு சின்ன வெங்காயம் தட்டி போட்டு நல்லெண்ணெய் ஊத்தி இருக்கேன். எலும்புக்கு வலு இதுதான். பட்டணத்துல என்னத்த சாப்பிட்டு என்ன சத்து இருக்கு? இரண்டு நாள் வேலை செஞ்சதுக்கே மயங்கிட்ட”,என மீனாட்சி பாட்டி இரண்டு பெரிய டம்பளில் இருந்தச் சூப்பை அவளுக்குக் கொடுத்தார்.
“இங்க பாரு மீனு. இப்பயெல்லாம் என்னை டேமேஜ் பண்ணக்கூடாது. நல்லா ஆக்கிபோட்டா நானா சாப்பிடமாட்டேன்னு சொல்றேன். அங்க உன் கைபக்குவம் யாருக்கும் இல்ல. பேசாம கிளம்பி என்னோட வந்துடு என்னை கவனிசிக்க”, சூப்பைக் குடித்துக்கொண்டே பேசினாள் நதி.
“நான் கிளம்பி வந்துட்டா என் புருஷன யாரு கவனிக்கறது? வேணும்னா உன் புருஷன உன்னை கவனிச்சிக்க சொல்றேன்”, மீனாட்சி.
“என் புருஷன எப்ப தேடி எப்ப சொல்லி கவனிக்கறது? அதுல்லாம் இப்பத்திக்கு ஆகாது நீ வா. சுந்தாவையும் கூட்டிட்டு போயிடலாம். கொஞ்ச நாள் திலாத்தையும் சித்து மாமாவும் ஜாலியா ரொமான்ஸ் பண்ணட்டும்”, நதியாள்.
“அப்படிங்கற? மீனு நானும் நீயும் பட்டணத்துல டூயட் பாடலாம் என் பையன் இங்க பாடட்டும். கிளம்பளாமா?”, எனக் கேட்டபடி சுந்தரம் தாத்தா வந்தார்.
“கொள்ளு பேரன் எடுக்கற வயசுல டூயட்டூ பாடணுமோ? கம்முன்னு இருங்க. சாப்பிட்டுட்டு கிளம்புங்க.. மதியம் பந்தி பண்ணிரெண்டு மணிக்கு ஆரம்பிச்சிடணும்”, எனத் தட்டில் இட்லியை வைத்தார் மீனாட்சி.
“திலகா ..நாம டூயட் பாடலாமா?”, சிதம்பரம் .
“உங்களுக்கு மட்டும் வயசு குறையுதா? பேரன் பேத்தி எடுக்கற வயசுல ஆசை தான். வேகமா சாப்பிட்டுட்டு கிளம்புங்க. புள்ளைங்களுக்கு நேரா நேரத்துக்கு சாப்பிட எதாவது பாத்து அனுப்பி விடுங்க”, எனத் திலகவதியும் இட்லி பரிமாறிவிட்டு சமையற்கட்டிற்குள் சென்றார்.
“என்னடா மகனே உன் பொண்டாட்டியும் ஒத்துக்கமாட்டேங்குறா… என் பொண்டாட்டியும் ஒத்துக்க மாட்டேங்குறா?”,சுந்தரம் சிதம்பரத்தின் காதில் கிசுகிசுத்தார்.
“பேசாம சாப்பிடுங்க அப்பறம் இட்லியும் குடுக்கமாட்டாங்க இரண்டு பேரும்”, எனக் கூறி வேகமாக உண்டு முடித்தார் சிதம்பரம்.
“ம்ம் …ஒரே வீட்ல பொண்ணு எடுத்து தப்பு பண்ணிட்டோம் டா மகனே”, சுந்தரம்.
“இத்தனை வருஷம் கழிச்சி வெசனப்பட்டு என்ன ஆகப்போகுது? என்ன கொற வச்சிட்டோம் நாங்க உங்களுக்கு? சீக்கிரம் சாப்பிடுங்க”, மீனாட்சி அதட்டினார்.
“ஹாஹா….மீனு நீ எல்லாரையும் ரொம்ப தான் மெரட்டுற”,நதியாள்.
“நீ வந்து மெரட்டித்தான் பாரு”, மீனாட்சி.
“மெரட்டிட்டா போச்சி… ஆமா அகன் எங்க வந்ததுல இருந்து காணோம்?”, சாப்பிட்டுக்கொண்டே கேட்டாள்.
“ஏதோ வேலை இருக்காம். இன்னும் கீழ சாப்பிடக்கூட வரல . நீ சாப்பிட்டு போய் பாருத்தா… எனக்கு இங்க கொஞ்சம் வேலை இருக்கு. அம்மாடி திலகா…. சீக்கிரம் நீயும் சாப்பிட்டுட்டு தோப்புக்கு கிளம்பு. செல்லம்மா போய் நேரமாச்சி அங்க ஆளுங்கள வெரட்டினா தான் வேலை சுத்தமா நடக்கும்”, மீனாட்சி.
“சரிங்கத்தை. நீங்க சாப்பிடுங்க வாங்க”,திலகவதி.
“திலாத்தை.. சரண் எங்க?”, நதியாள்.
“அவனும் அகரன் ரூமுக்கு தான் போனான் நதிமா. இன்னும் இரண்டு இட்லி வச்சிக்க”, திலகவதி.
“வேணாம் திலாத்தை போதும். நீங்க சாப்பிடுங்க. நான் அவங்கள சாப்பிட கூப்பிட்டுட்டு வரேன்”, எனத் தட்டை எடுத்துக்கொண்டு சமையற்கட்டிற்குள் நுழைந்தாள்.
“அவங்க கீழ வரலன்னா மேலயே கொண்டு போயி பரிமாறிடு டா”, திலகவதி.
“சரி திலாத்தை…”,எனப் படிகட்டுகளில் மேலே ஓடினாள்.
“அகன்….அகன்…. சரணா….”, என அழைத்தபடி அறையினுள் நுழைந்தாள்.
உள்ளே இருவரும் தீவிரமாக எதையோ பேசிக்கெண்டு இருந்தனர்.
“என்ன டிஸ்கஸன் போயிட்டு இருக்கு?” நதியாள் அகரனின் அருகில் அமர்ந்தாள்.
“புது பிராஜெக்ட் பத்தி தான். எக்டீரியர் இன்டீரியர் டிசைன் எல்லாம் செலக்ட் பண்ணணும்”, அகரன்.
“சரி பர்ஸ்ட் சாப்பிட வாங்க இரண்டு பேரும். சாப்பிட்டு தோப்புக்கு போகணுமாம்”, என எழுந்தாள்.
“ம்ம்…. நதிமா… நீ எப்ப ஊருக்கு கிளம்பற?”, அகரன்.
“நாளைக்கு காலைல கிளம்பினா தான் மதியம் போய் சேர முடியும்”, நதியாள்.
“சரி நாங்களும் காலைல கிளம்பறோம். எங்க கூட வந்துடு நதிமா. நாங்க உன்ன டிராப் பண்ணிடறோம்”, அகரன்.
“ஓகே அகன்”, என முன்னே நடந்தாள்.
பின் அவர்கள் இருவரும் சாப்பிட அமர நதியாள் பரிமாறினாள். மூவரும் அங்கிருந்து விருந்து நடக்கும் தோப்பிற்குச் சென்றனர்.
அங்குக் கிட்டதட்ட நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் சமையல் செய்துக் கொண்டிருந்தனர்.
ஊருக்கே சமைக்கணும்னா சும்மாவா? வாங்க என்ன என்ன சமைக்கறாங்கன்னு பாக்கலாம்…..
ஒரு பக்கம் நம்மூரு பாய் கையால மட்டன் பிரியாணி ரெடி ஆகிட்டு இருக்கு, இன்னொரு பக்கம் நாட்டுக்கோழில வறுவல் பண்ணிட்டு இருக்காங்க. அந்த பக்கம் ஆத்துல பிடிச்ச மீன குழம்பு வச்சிட்டு பாதிய பொறிக்க மசாலா தடவி காயவச்சி இருக்காங்க. அடடே இந்த பக்கம் மட்டன்ல நல்லி எலும்பு தனியா செஞ்சிட்டு இருக்காங்க. எத்தனை கெடா வெட்டுனாங்கன்னு தெரியலயே….
இங்க நாட்டுக்கோழி முட்டை வேகுது. அதுக்கு பக்கம் நெல்லுச்சோறு வேகுது. அடடா இது என்ன களி தானே? களிகூட மட்டன் கொழம்பு பிரட்டி சாப்பிட்டா டேஸ்ட் அப்படி இருக்கும்….
இது என்ன சிக்கன்ல ஏதோ பச்சையா எண்ணெய்ல பொறிக்க ஊறவச்சு இருக்காங்க. சைவத்துல முருங்ககாய், முள்ளங்கில இருந்து இன்னும் நாலு வகை காய் போட்டு சாம்பார் வச்சிட்டாங்க. மிளகு ரசம் கூடவே கூட்டு பொறியல்னு சைவக்காரங்களுக்கு ரெடியாகிட்டு இருக்கு. நமக்கு இந்த பக்கம் வேலை இல்ல நாம அந்த பக்கமா போவோம்…
தலைகறி, கொடல்கறி, ஆட்டுக்கால் சூப்னு தாறுமாரா எல்லாம் தயாராகிட்டு இருக்கு ஊர் விருந்துக்காக. வாங்க எல்லாரும் ஒரு பிடி பிடிக்கலாம். புரட்டாசி மாசமெல்லாம் பாத்தா கெடாவிருந்து நிக்காதுப்பா…..
வாங்க முதல் பந்தில உக்காந்துக்கலாம். எல்லாம் செட்டிநாட்டு மசாலாவுல இருந்து எல்லா ஊரு வகை சமையலும் ஒவ்வொன்னுல செய்யறாங்கப்பா…
நம்ம அப்பா, பெரியப்பா, மாமாங்க, சித்தப்பாங்க, பங்காளிங்கன்னு எல்லாம் ஆளுக்கொரு அடுப்புகிட்ட நின்னுட்டு டேஸ்ட் பாக்கறேன்னு இப்பவே சாப்பிட கேக்கவும், அத பாத்த மகளிர் அணி சமைக்கறவங்கள அதட்றாப்புல சாமிக்கு படையல் வச்சிட்டு தான் யாருக்கா இருந்தாலும் குடுக்கணும்னு சத்தம் போட்டுகிட்டு இருக்காங்க.
“ஹாஆஆஆஆஆ…… செம வாசனை…. அகன் சரணா…. உங்களுக்கு பசிக்குது தானே?”, நதியாள் அங்குத் தயாராகிக் கொண்டு இருந்தவற்றைப் பார்த்தவாறே கேட்டாள்.
“இப்பத்தானே சாப்டோம் நதிமா”, அகரன்.
“எனக்கு செம பசி யாள் வா அப்படியே போய் டேஸ்ட் பாக்கலாம்”,எனச் சரண் அவளை இழுத்துக்கொண்டுச் சென்றான்.
“டேய்…. விருந்த பாத்ததும் என்ன கழட்டி விடறீங்களே உங்களுக்கே அநியாயமா இல்ல?”,அகரன் கேட்டுக்கொண்டே அவர்களுக்கு பின்னால் சென்றான்.
“பசிக்கலன்னு சொல்லிட்டல்ல…”, சரண்.
“மச்சான்…. “, அகரன் அழைத்து முறைக்கவும்.
“சரி சரி வா”, சரண்.
“எலேய் யாள் குட்டி….”, மாந்தோப்பு தாத்தா.
“என்ன தாத்தா?”, நதி.
“அந்த பக்கம் உன் பாட்டி இருக்கா அங்க போங்க”, மாந்தோப்பு தாத்தா.
“சரி தாத்தா”,நதி.
இந்த பக்கம் நம் வீட்டு மகளிர் அணி அனைத்தும் ஆளுக்கொரு ஐட்டம் செய்துக் கொண்டிருந்தனர்.
“இங்க என்ன தனி விருந்து ரெடி ஆகுது?”, சரண்.
“தெர்ல. வா கேட்போம்”, நதி.
“தேவி….சரோஜா ….” , என அழைத்து ஓடிச்சென்று அவரைக் கட்டிக்கொண்டாள் நதி.
“வாடா தங்கம். இன்னிக்கு புடவை கட்டலியா?”, சரோஜாதேவி.
“இல்ல பாட்டி. இது தான் எனக்கு வசதி”, நதி.
“சரி இங்கயே மூனு பேரும் உக்காருங்க. முதல் படையல் போட்டுட்டு சூடா எல்லாத்தையும் போட்டுத்தர சொல்றேன்”, சரோஜாதேவி.
“இது என்ன தனி விருந்து பாட்டி?”, சரண்.
“இது சாமிக்கு படைக்கறதுக்காக தனியா சமைப்போம்யா. ஊரு விருந்துல எல்லா வகையும் செஞ்சி போட முடியாது அதனால இங்க காடை கவுதாரில இருந்து இருபது வகை அசைவம் சமைச்சி போடுவோம். அங்க சமைக்கிறது போக இங்க சமைக்கிறது தனி. இங்க அளவு கம்மியா தான் செய்வோம். செய்ய செய்ய படையலுக்கு குடுத்தனுப்பிடுவோம் “,சரோஜாதேவி.
“ஓ….”, நதி.
“இந்தாங்க இந்த ஆட்டுக்கால் சூப்ப குடிங்க. படையலுக்கு அனுப்பியாச்சி”,என மூவருக்கும் கொடுத்தார் சரோஜாதேவி.
“ஹாய் சரண்”, என அழைத்தபடிதேவ் அங்கு வந்தான்.
“வா தேவ். இந்தா சூப் குடி”, என சரண் ஒரு கப்பை எடுத்து அவனுக்குக் கொடுத்தான்.
“இப்பதான் வீட்ல சாப்பிட்டுட்டு வந்தேன்.கொஞ்ச நேரம் போகட்டும். ஹாய் அகர் நதி”, தேவ்.
“குடிய்யா… படையலுக்கு குடுத்தது போக கொஞ்சம் தான் இருக்கு. இந்த இரண்டு நாள்ல எத்தனை வேலை செஞ்சீங்க உடம்புல தெம்பு ஏறனும்ல”, சரோஜாதேவி.
“சரி பாட்டி”, தேவ்.
“உங்க பாட்டி எங்க இன்னும் வீட்ட விட்டு கிளம்பலியா?”, சரோஜாதேவி.
“கிளம்பிட்டு இருக்காங்க. அப்பா முன்னமே வந்துட்டாரு. நான் அம்மாவ அழைச்சிட்டு வந்தேன் பாட்டி”,தேவ்.
“சரி. அப்படியே காலார ஆத்து பக்கம் நடந்துட்டு வாங்க இன்னும் நாலு ஐட்டம் தயாராகிடும் சுட சுட குடுக்கறேன் சாப்பிடுங்க”, சரோஜாதேவி கூறிவிட்டு, அந்தப் பக்கம் ஆட்களை ஏவிக் கொண்டிருந்தார்.
செல்லம்மாளும், ராதாவும் படையலுக்கு அனுப்புவதைப் பார்த்துப் பார்த்து எடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தனர்.
திலகவதியும், மதியும் சமைப்பவர்களிடம் பேசிக்கொண்டே வேலை வாங்கிக்கொண்டு இருந்தனர்.
ஐயனாருக்கு சமைக்கறதுன்னா சும்மாவா? எல்லாத்தையும் ரெடி பண்ணி படையல் போட எல்லாரும் கோவிலுக்கு போயிட்டு சாராயம்ல இருந்து சமைச்ச அத்தனை அசைவ வகையும் பெரிய தலைவாழை இலைல போட்டு பூஜைய பண்ணாங்க.
அதுக்கப்பறம் ஊரு மக்கள எல்லாம் விருந்துக்கு அழைச்சிட்டு வந்து தோப்புல டேபிள் சேர் போட்டு இலைல எல்லாம் பறிமாற ஆரம்பிச்சாங்க.
நம்ம நதி அகன் சரண் தேவ் நாலு பேரும் சூடா சில பல ஐட்டங்கள வாயில தள்ளிகிட்டே பறிமாரிட்டு இருக்காங்க. படையல் வச்சது போக மீதி இருந்தத இவங்களுக்கு பெரியவங்க பறிமார திருப்தியா எல்லாத்தையும் சாப்பிட்டாங்க.
இலைல இடமே இல்ல அந்த அளவுக்கு ஐட்டம். ஆட்டுக்கால் பாயா, இடியாப்பம்,வஞ்சரமீன் ரோஸ்ட், நெத்திலி மீன் வறுவல், ஆரா மீன தோச கல்லுல மசாலா தடவி சுட்டது, சிக்கன்ல நாலு வைரைட்டி, கொத்துக்கறி, வயல் நண்டு வறுவல், நண்டு பொறிச்சது, இன்னொரு பக்கம் இறால் வறுவல், ரோஸ்ட், காடை ரோஸ்ட், வான்கோழி பிரைனு சாப்பிட சாப்பிட விருந்து முடிவேனாங்குது……
சாப்பிட்டு முடிச்சதும் எல்லாருக்கும் வெத்தலை பாக்கு ஒரு பக்கம் குடுக்கறாங்க. கிழவிங்க எல்லாம் ஆளுக்கொரு கௌளி வாங்கிட்டு போகுதுங்க… சாப்பிட்டது ஜீரணம் ஆகணும்ல நாமலும் நல்லதா நாலு வெத்தலைய போடலாம்….
யப்பா…..
கண்ணுல தண்ணியா வருது….
பெப்பர் தூக்கலா போட்டு சிக்கன பிரை பண்ணிட்டாங்க….
சூப்பர் விருந்துப்பா….. திருவிழால இராப்பகலா கண்ணுமுழிச்சி வேலை செஞ்சவங்களுக்கு வயிராற சாப்பாடு போடுறத தவிர வேற என்ன திருப்தி வந்துட போகுது நமக்கும் அவங்களுக்கும்…. இப்படி விருந்து போட்டா மூனு மாசத்துக்கு ஒரு தடவை திருவிழா வச்சாலும் வேலை செய்வோமே….
விருந்து எல்லாம் நல்ல படியா முடிஞ்சி நம்ம வானர கூட்டம் எல்லாம் பிரியா விடை குடுத்து தேவ் அ வழியனுப்பி வச்சாச்சி….
அடுத்த நாள் காலைல எழுந்து ஊருக்கு போக மனசே இல்லாம நதி ரெடியாகி கீழ வந்து அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு ஊருக்கு கிளம்பிட்டா.
அகரனும் சரணும் நதிய பிக்அப் பண்ணிட்டு மறக்காம சரோஜாதேவி பாட்டி செஞ்ச கருவாட்டு குழம்ப வாங்கிட்டு பட்டணத்துக்கு புறப்பட்டுட்டாங்க….