17 – ருத்ராதித்யன்
ஆருத்ரா சத்தம் கேட்டு பால்கனியில் வந்து எட்டிப் பார்த்தாள்..
பறவைகள் எல்லாம் மீண்டும் கூட்டில் அடங்கியது.
புதிதாக பிறந்த பைரவ் மட்டும் தட்டுத்தடுமாறி நடந்துக் கொண்டிருப்பது கண்டு கீழே சென்றாள்.
அவள் பால்கனியில் இருந்து கீழிறங்கி செல்ல, புதிதாக ஒரு தடத்தை ஏற்படுத்தி இருந்தனர். அந்த படிகட்டுகளின் வழியே கீழிறங்கி வந்தவள் சத்தம் செய்யாமல் நடந்து வந்தாள்.
அவள் கீழே வந்ததும் பஞ்சவர்ணக்கிளிகள் இரண்டும் பறந்து வந்தது.
“ஏய்….இன்னும் தூங்கலியா நீங்க? “, என இரண்டையும் தடவி கொடுத்தபடி கேட்டாள்.
“இல்ல… இல்ல”, என கீச் குரலில் பதில் கொடுத்தது.
“என்ன இந்த கேட் பூட்டாம இருக்கு.. கொம்பன் எங்க?”, என பார்வையை சுழற்றியபடி கேட்டாள்.
“தெர்ல… தெர்ல…”, மீண்டும் கீச்சுக்குரலில் கூறியது…
“போய் அவன கூட்டிட்டு வா… நான் தோப்புக்குள்ள போற குட்டி பைரவ தூக்கிட்டு வரேன்”, என அவைகளை அனுப்பிவிட்டு பைரவ் சென்ற வழியில் சென்றாள்.
பூனைகளும் பறவைகளும் மரத்தில் தூங்கும் அழகை இரசித்தபடி மெல்ல நடந்தாள் ஆருத்ரா.
ஆங்காங்கே படுத்திருந்த காவல் நாய்களும் அவள் செல்வதைக் கண்டு எழுந்தன.. பின் தொடரவேண்டாம் என கைக்காட்டவும் அப்படியே அமர்ந்து அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தன.
அந்த வீட்டைச் சுற்றி ஏறத்தாழ பதினைந்து நாய்கள் நடந்தபடியே காவல் காத்தன.
மற்ற நாய்கள் அரைகண்கள் மூடியபடி ஆங்காங்கே படுத்திருந்தன….
மொத்தம் முப்பது நாய்கள் அந்த வீட்டில் வாழ்ந்துக்கொண்டிருந்தன.
“பைரவ்…. ஹேய் பைரவ் … எங்கடா போன?”, என இருட்டில் அந்த குட்டிநாயை காணாமல் அழைத்தாள்.
பைரவ் வேலிக்கு வெளியே நின்ற கொம்பனை பார்த்தபடி வாலாட்டிக்கொண்டு நின்றது.
அந்த நேரம் பைரவக்காட்டில் இருந்து வந்த மற்ற நாய்கள், இந்த வீட்டில் இருந்த கொம்பனை அந்த வீட்டை விட்டு வெளியே இழுத்து வந்திருந்தன.
ஆருத்ரா வருவது கண்டு பைரவக்காட்டுக் கொம்பன் இருட்டில் பதுங்கியது.
வேலி அருகில் நின்ற பைரவைக் கண்டு,
“ஹேய் டார்க் சாக்லேட் இங்க என்ன பண்ற? உனக்கு தூக்கம் வரலியா? அம்மா இல்லாம தனியா இவ்ளோ தூரம் வரக்கூடாதுடா செல்லம்…. “, என அதனை கையில் தூக்கி கொஞ்சியபடி மரத்தில் சாய்ந்து நின்றாள்.
பைர.கா கொம்பன் வேலியை ஒரே தாவலில் தாண்டி இந்த பக்கம் வந்து ஆருத்ராவை பார்த்தபடி நின்றது.
அந்த சமயம் ஒருவன் துப்பாக்கியில் அவளை குறிபார்த்தபடி நின்றிருந்தான்.
அந்த வேலியைத் தாண்டி இருந்த ஆலமரக் கிளையில் அமர்ந்தபடி அவன் அவள் நெற்றிப்பொட்டை குறி வைத்தான்.
முதல் புல்லட் அவளை நெருங்கும் போது அவள் சட்டென குனியவும் அது மரத்தில் தைத்தது.
கொம்பன் சட்டென விரைத்து பார்வையை கூராக்கி அவள் அருகில் நின்றது.
“டேய் கொம்பா… இவ்ளோ நேரம் எங்கிருந்த? “, என அவள் பேசும் போதே மீண்டும் அவன் அவளை குறிப்பார்க்க , ஆருத்ரா எழும்போது கொம்பன் அவளை மறைத்து எழவிடாமல் செய்தது.
ஒரே நொடி புல்லட் கொம்பனின் உடலில் உரசி மரத்தில் தைத்தது.
புல்லட் உரசிச் சென்றதில் காயம் சற்று ஆழமாகவே ஆகியிருந்தது கொம்பனுக்கு.
வலியில் கம்பன் கத்தவும் மற்ற நாய்கள் அனைத்தும் குரைத்தபடி பின்பக்க வேலிக்கு ஓடின.
நாய்களின் சத்தம் தொடர்ந்து கேட்பது கண்டு வேலையாட்களும் எழுந்து வர, ஆருத்ரா கொம்பனை தூக்கி வருவது கண்டு பதற்றமாகி அவளுக்கு உதவ ஓடினர்.
“கொம்பா… கொம்பா…. இங்க பாரு”, என அவள் குரல் கொடுத்தபடி தூக்கி வந்தாள்.
இரத்தப்போக்கு சற்று அதிகமாகவே இருந்தது. அந்த நேரத்தில் மருத்துவருக்கு அழைக்க அவர் வருவதற்கு ஒரு மணிநேரம் ஆகும் என்றதால் முதலுதவி கொடுத்தபடி விரைவில் டாக்டரை அழைத்து வர உத்திரவிட்டாள்.
முப்பது நிமிடத்தில் டாக்டர் அழைத்துக்கொண்டு வரப்பட்டார்..
“மேடம் இந்த காயம் எப்படி ஆச்சி?”, டாக்டர் அந்த காயத்தை ஆராய்ந்தபடிக் கேட்டார்.
“கன் ஷாட் டாக்டர்… ஆனா புல்லட் உரசிட்டு தான் போச்சி…. நீங்க ட்ரீட்மெண்ட் பண்ணுங்க.. வரேன்”, என அவள் நகரும் போது அவளது தொலைபேசி அவளிடம் கொடுக்கப்பட்டது.
டாக்டர் ஒரு நொடி அதிர்ந்து கொம்பனை சோதித்து காயத்திற்கு மருந்திட்டுக் கட்டுபோட்டார்.
பின் வேலையாட்களிடம் அதற்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகளை கூறிவிட்டு மருந்து சீட்டை எழுதிக் கொடுத்தார்.
“இந்த மருந்தெல்லாம் நாளைக்கு க்ளீனிக் வந்து வாங்கிக்கோங்க… ஒரு வாரம் நடக்க சிரமமா இருக்கும்…அதிகமா நடக்கவோ ஓடவோ விடாதீங்க”, எனக் கூறிவிட்டு ஆருத்ராவை கேட்டார்.
“தப்பிச்சிட்ட போல”, என ஒரு குரல் நக்கலாகவும், வன்மத்துடனும் ஒலித்தது.
“பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மிஸ்டர் அதிபன்”, என அவளும் நக்கலாக மறுமொழி கொடுத்துவிட்டு சக்தியை அழைத்தாள்.
“மேம்…. வரேன்…. “, என அழைப்பு வந்ததும் நடுஇரவில் எழுந்து ஓடி வந்தான் ஆருத்ராவின் இல்லத்திற்கு.
“மேடம்… ஒன்னும் பிரச்சினை இல்லை… பதினைஞ்சு நாள்ல காயம் முழுசா ஆறிடும். மருந்து குடுத்திருக்கேன்… இரண்டு நாளைக்கு ஒரு முறை ட்ரெஸ்ஸிங் பண்ணா போதும்… நீங்க கேர்புல்லா இருங்க மேம்… வரேன்”, எனக் கூறி டாக்டர் விடைபெற்றார்..
“என்னாச்சி மேம்?”, சக்தி மூச்சு வாங்கியபடி கேட்டான்.
“அந்த அதிபன் அடுத்த அட்டெம்ட் பண்ணிட்டான்”, ஆருத்ரா நடந்துவந்து யோசனையுடன் கொம்பனைத் தடவிக்கொடுத்தபடிக் கூறினாள்.
“அச்சச்சோ…. கொம்பனுக்கு அடிபட்ருச்சா?”, சக்தி பதறி கொம்பன் அருகில் சென்று தடவி கொடுத்தான்.
“அவன் தான் காப்பாத்தினான்…. இருட்டுல அவ்வளவு நேரம் இருந்த இடம் தெரியல ஆனா முதல் ஷாட் வந்து இரண்டாவது ஷாட் அப்ப என்னை மறைச்சி ஏறி நின்னான்….. “, கொம்பன் மயக்கத்தில் அவள் முகத்தையே பார்த்தபடி இருந்தது, ஆருத்ராவும் அதன் கண்களில் தன்னை மறந்து பார்த்துக்கொண்டிருந்தாள். பின்,
“கருப்பைய்யா….. கொம்பன ஜாக்கிரதையா பாத்துக்கோங்க… அந்த குட்டி எங்க?”, என கேட்டாள்.
“அது படி ஏற முயற்சி பண்ணிட்டு இருக்கும்மா…..தூக்க விடமாட்டேங்குது”, என அறைக்கு வெளியே காட்டினார்.
அதைக் கண்டதும் முறுவல் பூக்க அதன் அருகில் சென்று தூக்கினாள்.
அவள் கைகளில் இருந்து வழுக்கி கீழே செல்லவே அது பிரயத்தனப்பட்டது.
சக்தி வேலையாட்களை ஜாக்கிரதையாக இருக்க கூறிவிட்டு காவலுக்கு ஆட்களை நியமித்துவிட்டு ஆருத்ரா சென்ற திக்கில் நடந்தான்.
அவன் நடக்கும் இடமெல்லாமே நாய் ,பூனை, முயல், கிளி, புறா, என பல்வேறு வகையான பறவை மற்றும் சிறிய மிருகங்கள் ஆங்காங்கே நடந்தபடியும், ஓடியும், பறந்தும் கொண்டிருந்தன.
சட்டென ஒரு வனத்தில் நுழைந்தால் எழும் உணர்வு அவன் மனதில் எழுந்ததும் மெல்லிய சிரிப்பை உதட்டில் பரவவிட்டு பஞ்சவர்ணக்கிளியை அழைத்தான். அதுவும் பறந்து வந்து அவன் தோள்களில் அமர்ந்து, “கொம்பா கொம்பா…”, என கூறியது.
“அவனுக்கு ஒன்னும் இல்ல… பதினைஞ்சு நாள்ல சரி ஆகிடும். அவனை எல்லாரும் பாத்துக்கோங்க…. இப்ப போய் தூங்குங்க போங்க”, என அதனிடம் கூறியதும் அது பறந்து மற்ற பறவைகளிடம் சென்றது.
அவைகளுக்குள் நடக்கும் சம்பாஷணையும், புரிதலும் கண்டு சக்தி வியந்தபடியே ஆருத்ரா நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தான்.
“இருடா டார்க் சாக்லேட்…. இன்னும் கொஞ்ச நாள்ல தனியா நடந்து வருவியாம்…. இப்பவே என்ன அவசரம்?”, என அவள் பைரவ்வை கொஞ்சியபடி அதே வேலிக்கு அருகில் வந்தாள்.
“இந்த இடமா மேம்?”, என சக்தி அவளை பின்தொடர்ந்து வந்து கேட்டான்.
“ம்ம்…. காம்பவுண்ட் போட எனக்கு இஷ்டமில்லை.. வேற ஏற்பாடு பண்ணு…. “, என தீவிரமாக பைரவ்வை கொஞ்சியபடி கூறினாள்.
“மேம் கம்ப்ளைண்ட் குடுத்துட்டு பாடிகார்ட் ஏற்பாடு பண்ணலாமே”, என தயங்கியபடிக் கேட்டான்.
“என் சுதந்திரம் ரொம்ப முக்கியம் சக்தி…. கம்ப்ளைண்ட் மட்டும் பைல் பண்ணி வை…. வந்து ஒரு ட்ராமா போட்டுட்டு போகட்டும்.. அந்த கான்ட்ராக்ட் நமக்கு தான் வரணும்.. அதுக்கு வழி பாரு”
“நாளைக்கு காலைல நமக்கு அது கன்பார்ம் ஆகிடும் மேம்….. “, எனச் சொல்லி தயங்கியபடி, “இது தாத்தாவுக்கு?”, என இழுத்தான்.
“இந்நேரம் தகவல் போய் இருக்கும் சக்தி… நாளைக்கு இங்க இருப்பாரு.. இன்னிக்கு இங்கயே தூங்கு”,எனக் கூறிவிட்டு மரத்தை சுற்றி நடந்தபடி வேறு பக்கமாகச் சென்றாள்.
ஆருத்ராவின் உலகமே தனி தான். அவளை மனிதர்கள் உடன் சிரித்து பார்ப்பது மிகவும் அரிது. மற்ற அறிவு உயிரினங்கள் தான் அவளின் முதன்மை எப்பொழுதும்.
சக்தி அங்கிருந்து நேர் எதிரே தெரிந்த ஆலமரத்தைப் பார்த்தான். அந்த ஆலமரம் அவளின் அறை பால்கனியும் குறிவைக்க ஏதுவாகவே அமைந்திருந்தது.
ஆருத்ரா கீழே வரவில்லை என்றாலும் தாக்குதல் நடந்திருக்கும். சக்தி யோசனையுடன் திரும்பி நடந்தான்.
“இடியட்…. ஒருத்திய உன்னால கொல்ல முடியல….இனி நீ கன் தொடவே கூடாது. தொட்டா நானே உன்ன கொன்னுடுவேன்”, என அதிபனின் தம்பி போனில் கத்திக்கொண்டிருந்தான்.
“விடு விது….. அவள தொட்றது ஈஸி இல்ல…. அந்த ப்ராஜெக்ட் நம்ம கைக்கு தான் வரணும். அதை பாரு முதல்ல”, என அதிபன் சுருட்டை ஆழமாக இழுத்துப் புகையை வெளியேற்றினான்.
“அவள சும்மா மட்டும் விடவே கூடாது டா…. ரொம்ப தொந்தரவு பண்றா…. “, என அதிபனிடம் கூறிவிட்டு வெளியேறினான்..
“ஆருத்ரா…. உன்னை ……. பொறுமைய சோதிக்கற டி…. உன்னை அடக்காம விடமாட்டேன்”, என மனதிற்குள்ளும், வெளியேயும் புகையுடன் உறுதி எடுத்தான்.