18 – மீள்நுழை நெஞ்சே
வைரத்தின் கண்ணீர் கண்ட அருணாச்சலம் மனதினுள் மௌனமாக வருந்திக்கொண்டிருந்தார்.
குட்டிச் சுவற்றில் அமர்ந்துப் பீடி குடித்த அன்றே அருணாச்சலம் அக்காவிடம் கூறினார் அவனைக் கண்டிக்கும் படி, ஆனால் வயது கோளாறு அது இது என்று சாக்குக் கூறி, அவனை அப்போதிருந்து அக்காவும், தன் தாயும் தாங்கியதால் வந்த வினை என்று உணர்ந்தார்.
அதற்கு பின் அவன் சென்ற இடங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு தவறைச் செய்து இன்றுவரை மாமன்களின் மானத்தை வாங்கிக்கொண்டு இருக்கிறான்.
இந்த நிலையில் மாமன் மகளை கட்டலாம் என்கிற பேராசையும் அவனுக்கும், அவனது தாயிற்கும் இருப்பது தான்… இதை என்னவென்று சொல்ல?
தந்தையின் முகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த துவாரகா அவர் அருகில் சென்றுக் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“ஒன்னுமில்ல ராகா… அந்த சண்முகத்த வரசொல்லு”, என அவர் கூறியதும் அவள் முதலியாரை பார்க்க அவர் மற்றொருவனிடம் கூறினார்.
நேற்றிரவு மனோஜைத் தூக்கிச் சென்ற சண்முகம் நேராக அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்றுவிட்டார்.
அங்கு வைத்தே அவனுக்கும் சில சோதனைகள் செய்து, மைனாவின் கருவிற்கு அவன் தான் காரணம் என்பதையும் ஆதாரபூர்வமாகக் கண்டுப்பிடித்தனர்.
சற்று நேரத்தில் சண்முகம் மனோஜைத் தூக்கிக்கொண்டு, அந்த பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு வந்துச் சேர்ந்தார்.
மனோஜ் அரைமயக்கத்தில் இருப்பதுக் கண்டு வைரமும், அவன் நண்பர்களும் அவனைச் சூழ்ந்துக்கொண்டனர்.
“அய்யோ… என் புள்ள… மனோ… எந்திரி டா… என்னாச்சி டா உனக்கு?”, என வைரம் மகனை மடியில் போட்டுக்கொண்டுக் கதறி அழுதார்.
“அவனுக்கு மயக்கமருந்து குடுத்திருக்காங்க. ஆஸ்பத்திரில இருந்து தான் இவன இப்ப கொண்டு வந்திருக்கோம். நேத்து ராத்திரி மைனாவ கடந்த வந்தவன நானும் பஞ்சாயத்து ஆட்களும் சேந்து தான் இவன ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வச்சோம்.. இதுக்கு சாட்சி என் அப்பா, சித்தப்பா, சண்முகம் அண்ணே, முதலியார் மாமா அப்பறம் நம்ம கோமுட்டி தாத்தா…. “, என துவாரகா கூறியதும் மற்றவர்கள் திகைத்துப்போய் பார்த்தார்கள்.
“நீ தான் இவன கடத்தினியா?”, என மனோவின் நண்பர்களில் ஒருவன் துவாரகாவிடம் எகிறினான்.
“உன்ன மாதிரி அவன் கடத்திட்டு வர பொண்ண விக்க ஏற்பாடு பண்றவளா நானு? கூட இருக்கறவனுக்கு ஒரு நல்ல புத்தி சொல்ல முடியாதவன் எல்லாம் இங்க வாய் தொறக்க கூடாது….. “, என துவாரகாவும் குரல் உயர்த்தினாள்.
“எலேய் ராமசாமி மவனே… வாய் மூடு…. உங்கப்பன் செத்த இரண்டு வருஷத்துல உங்க ஆத்தாவையும் கொண்ணுட்டு ஜெயிலுக்கு போனவன் தானே நீ? அங்க போயும் திருந்தலயா நீ இன்னும் ?”, என முதலியார் அதட்டினார்.
“மைனா பொண்ணுக்கு இன்னிக்கு வந்த இந்த நெலம யாருக்கும் இனிமே வரக்கூடாது…. அதனால் வைரத்தையும் அவங்க குடும்பத்தையும் கடுமையா எச்சரிக்கறேன். அருணாச்சலம் என்னதான் சொன்னாலும் மனசுல வருத்தம் இருக்கும். அந்த மனுஷனுக்காக இந்த தடவையும், இந்த மைனா பொண்ணு விருப்பப்படி அமைதியா விடறோம். எந்த கோவில் விஷேசம், பொது விஷேசங்களுக்கும் இவங்க மூனு பேரும் வரக்கூடாது…. அவன் பண்ண தப்புக்கு போலீஸுக்கு தகவல் சொல்லி வரச்சொல்லி இருக்கு…. அவங்க அவன பிடிச்சிட்டு போவாங்க.. யாரும் இத தடுக்கக்கூடாது… அந்த காலமா இருந்திருந்தா இதுக்கு குடுக்குற தண்டனையே வேற…. வைரம் இனிமே நீ உன் வீட்ட தவிர எங்கையும் போகவே கூடாது… இது தான் தீர்ப்பு… மைனா இனி அருணாச்சலம் பொறுப்புன்னு அவர் சொல்லிட்டாரு…. அந்த பொண்ணு இனிமேலாவது நல்லா இருக்கட்டும்… உப்பு போட்டு சாப்பிடறவன் எவனும் அவங்களுக்கு வரிஞ்சி கட்டிட்டு வராதீங்க…”, என ஒரே முடிவாக கூறிவிட்டு எழுந்துக் கொண்டார் பஞ்சாயத்துத் தலைவர்.
வைரம் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார். அவன் நண்பர்களும் செய்வதறியாது நின்றிருந்தனர்.
துவாரகா தந்தையின் முகத்தை பார்க்க, “அந்த வீடியோ ஆதாரம் போலீஸுக்கு குடுத்துட்டேன் ராகா… அந்த புள்ள இப்ப நம்மல நம்பி இருக்கு. முழுசா நியாயம் பண்ணிடணும் … பாதி பண்ணிட்டு விடக்கூடாது…”, எனக் கூறியவர் மகளுடன் முன்னே நடந்தார்.
கனியும் மரகதமும் மைனாவுடன் பின்னே நடந்தனர்.
மனோகர் மரகதம் இல்லத்தில் நின்றுக் காத்திருந்தார்.
அண்ணன் முகத்தை அத்தனை வருத்தமாகப் பார்த்ததில்லை இத்தனை ஆண்டுகளில்…
இன்று ஒரு அபலைப் பெண்ணிற்கு முறையான நியாயம் கிடைக்கவேண்டும் என்று அவர் நடந்துக்கொண்டது, அவரின் மேல் மதிப்பும் மரியாதையும் கூட வைத்தது.
போலீஸார் வந்து மனோஜைத் கைது செய்துத் தூக்கிச் சென்றனர்.
வைரமும் அவன் நண்பர்களும் அவனை வெளியில் எடுக்க வக்கீலைத் தேடி ஓடினர்.
டவுனில் எந்த வக்கீலும் இந்த வழக்கை எடுக்க வரவில்லை. காரணம் அவன் மைனாவின் தாயை வண்டியில் இடித்து, அவர் கல்லில் விழுந்து, அவர் இறந்து விட்டார் என்று தெரிந்ததும், அவன் நடந்துகொண்ட அனைத்தும் வீடியோ ஆதாரமாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. அதற்கு சாட்சியாக கனியும் இருந்ததால் அவனுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனைக் கொடுக்கப்பட்டது.
இது அனைத்தும் துவாரகா ஊரில் இருந்த பதினைந்து நாட்களில் நடந்து முடிந்திருந்தது. அப்பத்தாவிற்கு துவாரகாவின் மேல் வன்மம் பலமடங்குக் கூடியிருந்தது. வைரமும் மனதில் வஞ்சம் வைத்துக் காத்திருந்தார்.
இவையெல்லாம் முடிந்த கையோடு சென்னை சென்று வெளிநாடு செல்ல வேண்டிய ஏற்பாடுகளைக் கவனித்தாள்.
“துவா…. ஜாக்கிரதையா இருக்கணும்… அதிகம் யார்கிட்டயும் வாய் பேசாத.. எந்த பிரச்சனையும் இழுத்துவிட்டுக்காத… போன வேலைய மட்டும் பாரு..”, என தாய் பவானி அறிவுரைகள் கூறிக்கொண்டு இருந்தார்.
“அம்மா… இதோட ஆயிரம் தடவை சொல்லிட்ட… போதும் நிறுத்து…. நீ ஊர்ல ஜாக்கிரதையா இரு அது போதும்… தேவையில்லாம உன் மாமியார் கிட்ட வாய் குடுக்காத”
“இனி எங்க குடுக்க ? சும்மாவே ஆடுவாங்க இப்ப நீ நாலு வரிசைக்கு சலங்க கட்டிட்டு வந்திருக்க…. இனி நீ வீட்டுக்கு வர வரைக்கும் ஆடிகிட்டே தான் இருப்பாங்க… அந்த மைனா பொண்ண எங்க தங்கவச்சிருக்க?”, என சித்தி மாதவி கேட்டார்.
“கனி தான் அவ வேலை பாக்குற ஸ்கூல்ல சேத்திவிட்டிருக்கா சித்தி.. கூடவே கரஸ்ல படிக்கவும் சொல்லி ஏற்பாடு பண்ணிட்டோம்… படிச்சி அவ சொந்த கால்ல நின்னா போதும்…”, எனக் கூறியபடி பேக்கிங் செய்யப் பொருட்களைச் சரிப்பார்த்துக் கொண்டிருந்தாள்.
“சரி… ஆனாலும் நல்ல விஷயம் செஞ்சிருக்க கண்ணு நீ… ஒரு பொண்ணோட சாபம் எப்பவும் அந்த குடும்பத்த நிம்மதியா வாழ விடாது. அந்த வகைல இது நல்லது தான். அவனுக்கும் இந்த தண்டனை தேவை தான்….”
“நான் கூட கொஞ்சம் சுயநலமா யோசிச்சேன் சித்தி. அப்பா தான் போலீஸ் வரைக்கும் போனது எல்லாம்… அந்த நேர்மையும், தைரியமும் தான் நான் கத்துக்கணும்”, எனச் சற்று முகம் வாடி அமர்ந்தாள்.
“இருக்கற தைரியம் போதும் டி… எடுத்து வை… எல்லாத்தையும் எடை போட்டுட்டோம்… “, என தாய் பவானி அவளை உசுப்பினார்.
மலமலவென அனைத்தையும் எடுத்து அடுக்கியவள், டிக்கெட் சகிதம் தேவையான ஆவணங்களைச் சரிப் பார்த்தாள்.
இன்று சென்றால் இரண்டு வருடம் கழித்தே வருவாள். அதனாலேயே தாய்மார்கள் இருவரும் அவளைத் தங்கள் கண்களில் அமைதியாக நிறைத்துக்கொண்டிருந்தனர்.
அடுத்த இரண்டு நாட்களில் அலுவலகத்தில் உள்ளவர்களிடமும், மற்ற நண்பர்களிடமும் விடைபெறுவதில் நாட்கள் ஓடின. தம்பி தங்கைகளையும் சென்னை வரும்முன் சந்தித்துவிட்டே வந்துவிட்டாள். அண்ணனும் இங்கே தான் வேலையில் இருக்கிறான் நேரடியாக விமானநிலையம் வந்துவிடும்படிக் கூறிவிட்டாள்.
அன்று காலை 7 மணிக்கு விமானத்தில் செல்ல வேண்டும். அனைவரும் 5 மணிக்கே விமான நிலையத்திற்கு வந்துச் சேர்ந்தனர்.
“ராகா…. ஜாக்கிரதையா இருக்கணும் டா… வேலையெல்லாம் நல்லா சுறுசுறுப்பா கத்துகிட்டு செய்யணும்… எப்பவும் உங்கப்பன பெருமை பட வைக்கிற மாதிரி நடந்துக்கணும்… தினம் போன் பண்ணு…. அங்க போய் சேர்ந்ததும் போன் பண்ணு”, என அவளை கட்டிக்கொண்டுப் பிரியாவிடைக் கொடுத்துக்கொண்டிருந்தார் அருணாச்சலம்.
“அண்ணே… நாங்களும் புள்ள கிட்ட பேச காத்துகிட்டு இருக்கோம்… “, என மனோகர் கூறியதும் கண்களைத் துடைத்துக்கொண்டு நகர்ந்தார்.
அம்மா, சித்தி, சித்தப்பா , அண்ணன் என அனைவரிடமும் வம்புப் பேசிச் சிரிக்க வைத்து அனைவரிடமும் சிரித்தமுகத்துடன் விடைபெற்றுக்கொண்டு செக்கிங் உள்ளே சென்றாள்.
துவாரகா அனைவரிடமும் பிரியாவிடைப் பெற்றுக்கொண்டு இந்திய மண்ணை விட்டு கிளம்பினாள் தனது வாழ்க்கையின் அடுத்த படியினைக் கடக்க…..
ஊரில் அப்பத்தா கிழவி பாக்குடன் துவாரகாவிற்கு வாய் ஓயாமல் சாபம் கொடுத்துக்கொண்டே அமர்ந்திருந்தது.
“இன்னிக்கு போறவ முழுசா திரும்பி வருவாளான்னு நானும் பாக்கறேன்… என் பேரன ஜெயில்ல போட்டுட்டு இவ நல்லா இருந்துடுவாளா? இல்லவே இல்லை… அந்த கருப்பன் பாத்துட்டு தான் இருக்கான்… எல்லாருக்கும் ஒரு நாள் பாடம் எடுப்பான்.. என் மக இங்க மனசொடிஞ்சி வீட்டு படிய தாண்டாம இருக்கமாதிரி இவளும் ஒரு நாள் உக்காருவா.. அன்னிக்கு தெரியும் எல்லாருக்கும்…. வெளிநாடு போறாளாம் வெளிநாட்டுக்கு…. எடுபட்ட சிறுக்கி…. எப்படி வாழ்ந்துடுவான்னு நானும் பார்க்கிறேன்”, என நஞ்சாக வார்த்தைகளை உருவேற்றிக்கொண்டிருந்தார் துவாரகாவின் அப்பத்தா….