18 – வலுசாறு இடையினில்
“டேய் வட்டி .. எங்க இருக்க?”, நீலா ஆச்சி போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
“இங்க நம்ம கடைல தான் ஆச்சி.. இன்னும் பத்து நாலு தானே இருக்கு திறப்பு விழாவுக்கு..”
“இன்னும் அஞ்சி நிமிஷத்துல நீ இங்க வரல .. “
“எதுக்கு நீ இவ்ளோ டென்ஷன் ஆகற? இரு வந்துடறேன் ..”, எனக் கூறி வட்டி ஆச்சியைப் பார்க்கப் புறப்பட்டான்.
“எங்க டா போற? வேலை பாதில நிக்குது ..”, வர்மன் அவசரமாகச் செல்பவனை நிறுத்திக் கேட்டான்.
“உன் அப்பத்தா தான் உடனே வரசொல்லுது .. நான் போய் என்னனு பாத்துட்டு வரேன் மச்சான் “
“வேலை இருக்க சமயத்துல தான் கூப்பிடுமா? “ , என வர்மன் எரிந்து விழுந்தான்.
“என்னய கேட்டா? போகலன்னா எத கொண்டு அடிக்கும்ன்னு தெரியாது மச்சான்.. போயிட்டு உடனே வந்துடறேன் ..”
“இரு நானும் வரேன்.. என் அம்மா நகைய எடுத்து கொடுக்க சொல்லு ..”, என அவன் வண்டியை முறுக்கினான்.
“இன்னிக்கி ஒலக்கையா அம்மி கல்லா தெரியல .. மொத்ததுல மத்தளம் தான் நானு”, என வட்டி புலம்பியபடி வர்மன் பின்னால் அமர்ந்தான்.
மார்க்கெட் வீதி விட்டு ஊருக்குள் செல்லும் பாதையில் ராஜன் அவர்களை வழி மறித்தான்.
“என்ன டா லிப்ட் வேணுமா?”, என வர்மன் கேட்டான்.
“உன்கிட்ட யாரு லிப்ட் கேக்கறா?”, என ராஜன் திமிராகப் பதில் கூறினான்.
“அப்பறம் என்ன ***துக்கு வண்டிய நிறுத்தற டா என் ஆசை மாப்ள ?”, வர்மன் நக்கலாகச் சிரித்தபடிக் கேட்டான்.
“என்ன பண்ணாலும் நீ எங்க வீட்டு மாப்ள ஆகமுடியாது .. அவளுக்கு தேவராயன் மாமா கூட கல்யாணம் பேசி முடிச்சாச்சி தெரியும் ல”, ராஜனது பேச்சில் திமிரும், எள்ளலும் அளவிற்கு அதிகமாக இருந்தது.
“வண்டிய விட்டு வந்தேன் வை வாய்ல ஒரு பள்ளு இருக்காது.. உங்கப்பன் கிட்ட போய் சொல்லு அவருக்கு நான் தான் மாப்ள. உன் அக்காகாரிகிட்டயும் போய் சொல்லு சவால் ல நான் தான் ஜெயிப்பேன்.. மேலூர்காரன்னா நாங்க பயந்துருவோமா? தேவராயன்-ன்னு சொன்னியே .. போய் அவன மொத பாரு. நான் ஒடச்சி விட்ட காலு இன்னும் கூடல.. மறுபடியும் நீங்க அவன் மூக்க உடைக்க போறீங்க .. ஒதுங்கி நில்லு .. உனக்கு என் எதிர்ல நிக்க இன்னும் வயசு வரணும் .. “
“வயசுக்கு வந்து உன்கூட ஜோடி போடவா நான் நிக்கறேன்? நீ நினைக்கற எதுவும் நடக்காது. நீங்க எந்த திட்டம் போட்டாலும் அடுத்த பத்து நிமிஷத்துல எங்க காதுக்கு வந்துடும்.. எப்டி எப்டி ? என் அக்காவ கடத்திட்டு போய் தாலி கட்டுவியா ? ஹாஹாஹா .. எப்டி கடத்தி எங்க வச்சி தாலி கட்டுவன்னு நானும் பாக்கறேன்.. அந்த பொட்டச்சியும் சரி, நீயும் சரி நிம்மதியா வாழ முடியாத மாதிரி செய்யாம விடமாட்டேன்..”, எனச் சொல்லி முடிக்கும்முன் ராஜன் கன்னம் தீ பற்றியது போல எரியத் தொடங்கியது.
“என்ன டா ? என்ன சொன்ன? பொட்டச்சியா? உனக்கு அவ அக்கா.. எனக்கு பொண்டாட்டி.. அவள இன்னொரு தடவ மரியாதை இல்லாம பேசி பாரு கழுத்த திருகி கைல குடுக்கறேன்.. சின்ன பையன்னு பாத்தா ரொம்ப வாய் பேசுற நீ.. இன்னொரு முற இப்டி வந்து நின்னா அடிச்சி தூக்கி போட்டுட்டு போயிட்டே இருப்பேன்.. தள்ளுடா ..” , எனச் சொல்லியபடி இன்னும் சில அடிகளை வழங்கி விட்டே வர்மன் அங்கிருந்துச் சென்றான்.
அடி வாங்காமல் இதுவரை வளர்ந்தவன் நடுரோட்டில் வர்மனிடம் அடி வாங்கியதும் வன்மம் தான் நெஞ்சில் தங்கியது. அளவுக்கு மீறிய கண்டிப்பில்லாத அன்பினால், வயதிற்கு மீறிய பேச்சும், செயலும் கொண்டு தவறானப் பாதையில் அடிவைக்கத் தொடங்கினான்.
முதல் கண்டிப்பு அவனைத் தவறான ஆறுதலை தேட வைத்தது. அதன் விளைவு தனது பள்ளி வளாகத்தை ஒட்டிய கடையில் போதை மருந்தை வாங்கி உபயோகப் படுத்த ஆரம்பித்தான்.
முதல் போதை அவனை வேறு உலகிற்கு அழைத்துச் சென்றது. ஊருக்கு ஒதுக்கு புறமான இடத்தில் அலங்கோலமாகக் கிடந்தான் ஏகாம்பரத்தின் தவ புதல்வன் ராஜன்.
அவன் அணிந்து இருந்த தங்க நகைகள் எல்லாம் அன்றைய திருடனுக்குப் பெரும் அதிர்ஷ்டமாகக் கிடைத்தது.
“டேய் வர்மா .. உன்ன விடமாட்டேன்.. என்ன இதுவர யாருமே அடிச்சது இல்ல .. நீ.. நீ என்ன அடிச்சிட்ட ல .. உன்ன.. உன்ன .. அவள . அவள .. விடமாட்டேன் .. அப்பா .. அப்பா .. அவள அடிங்க.. அவள .. வர்மன .. “, என ஏதேதோ உளரியபடி தரையில் கிடந்தான்.
“இவனுக்கு எவ்ளோ கொழுப்பு பாத்தியா மச்சான் ? அந்த ஏகாம்பரத்த எடுத்து முழுங்கிடுவான் போல..”, வட்டி ராஜனது பேச்சைப் பற்றிப் பேச ஆரம்பித்தான்.
“எல்லாம் அந்த ஆளு பேசற லட்சணம் அப்புடி .. வயசுக்கு மீறின பேச்சு.. கண்டிப்பு சுத்தமா இல்ல .. அந்த புள்ளைய அந்த அடி அடிச்சி வளத்தறாங்க இவன ஒரு அடி கூட அடிக்க மாட்டாங்க போல மாப்ள .. பொட்டச்சியாம்ல .. வந்த கோவத்துக்கு வாய ஒடச்சி விட்டு இருக்கணும்.. நாளைக்கு மாமனுக்கு கால் கழுவனுமே ன்னு விட்டுட்டு வந்தேன்”, திருமணத்தில் பெண்ணின் சகோதரன் மாப்பிள்ளை கால் கழுவும் நிகழ்வை மனதில் வைத்துப் பேசினான் வர்மன்.
“ஆசை தான் மச்சான் உனக்கு.. கல்யாணம் மொத எங்க எப்டி நடத்தபோறோம்ன்னு தெரியல இதுல உங்களுக்கு மாப்ள மரியாதை செய்ய அவன் வாய ஒடைக்காம வரதா வேற சொல்றீங்க..”
“நம்ம திட்டம் போல தான் மாப்ள .. அதுல உனக்கு என்ன சந்தேகம் ?”
“அந்த சில்வண்டு மொத என்ன சொன்னான்னு யோசிங்க ?”
“என்ன சொன்னான்?”
“நம்ம அவன் அக்காவ கடத்தி கொண்டு போய் கல்யாணம் பண்ண திட்டம் போட்டு இருக்கோம்ன்னு சொன்னான்..”
“அன்னிக்கி போட்ட திட்டம் தான் அப்போவே அந்த இம்சை புடிச்ச செங்கல் பொண்ணு வந்து மைக் வச்சி கேட்டுட்டு போயிட்டாளே ..”, வர்மன் வீட்டிற்குச் செல்லும் பாதையில் வண்டி ஓட்டியபடிக் கூறினான்.
“அப்போ அது உங்களுக்கு முன்னயே தெரியுமா ? அப்பறம் ஏன் அன்னிக்கி அவளோ வெவரமா பேசினீங்க ?”
“அப்போ தான் மாப்ள வாழ்க்கைல ஒரு த்ரில் இருக்கும்.. இப்போ நம்ம பேசினது வச்சி அவன் நாலு நாள்ல கல்யாணம் வச்சது நமக்கு தானே வசதி பண்ணி இருக்கு “, என வர்மன் கேட்டதும், வட்டி அவனைப் பின்னால் இருந்துக் கட்டிப் பிடித்துக் கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.
“டேய் .. சீ .. எரும மாடே .. என் கன்னத்த ஏண்டா எச்சி பண்ற ?”, என வர்மன் அவனைப் பின்னால் தள்ளினான்.
“மச்சான் வண்டிய ஆட்டாத .. அப்பறம் கீழ விழுந்தா சேதாரம் அதிகமா போயிடும்..”, என வட்டி வர்மனின் இடுப்பைப் பிடித்துக் கொண்டான்.
“டேய் கருமம் பிடிச்சவனே .. கூசுது டா.. கைய எட்றா மொத .. “, என வர்மன் வண்டியை நிறுத்தியபடிக் கத்தினான்.
இருவரும் சிரித்துச் சண்டைப் போட்டுக் கொண்டு வருவதைப் பார்த்த நீலா ஆச்சி, வாசலில் கிடந்தக் கூடையை வட்டியின் மேல் எறிந்தார்.
அதை லாவகமாக பிடித்தபடி, “என்ன ஆச்சி ? எதுக்கு உடனே வர சொன்ன?”, வட்டி வீட்டிற்கு உள்ளே வந்துக் கேட்டான்.
“அந்த எடுபட்டபய என்னடா பண்றான்? பெருசா சவால் விட்டு கிழிக்கறமாதிரி மீசைய முறுக்கிகிட்டு திரிஞ்சா போதுமா? அந்த புள்ளைய எப்ப இவன் கட்டுவானாம்?”, என வர்மனைப் பார்த்துவிட்டுக் கேட்டார்.
“எனக்குன்னு யாரு இருக்காங்கலாம் பொண்ணு கேக்க சொல்ல.. இருக்கறவன் போய் கேக்கறான்.. நான் என்ன பண்றதாம் ?”, வர்மன் ஒன்றும் தெரியாதப் பிள்ளைப் போல முகத்தை வைத்துக்கொண்டுப் பேச ஆரம்பித்தான்.
“எடு செருப்ப நாயே.. குத்துக்கல்லாட்டம் நான் இருக்கறது துரைக்கு தெரியலியா? இல்ல நான் செத்து போயிட்டனா ?”, என ஆச்சி கேட்டதும் வர்மன் வந்து ஆச்சியை அணைத்துக் கொண்டான்.
“நீயும் என்னைய விட்டு போகலாம்னு பாக்கறியா ? அப்பறம் என் புள்ளைங்கள யாரு வளப்பா ? பேச்சுக்கு கூட இனிமே இந்த வார்த்தைய சொல்லாத அப்பத்தா”, என இறுக்கமாகக் கட்டிக் கொண்டே பேசினான்.
“டேய் எடுபட்ட பயலே .. விட்றா என்னய.. இறுக்கியே கொன்றுவான் போல .. மூச்சே வரல ..அப்புடியே தாத்தன் கொணம்.. ”, என வர்மனை விலக்கிவிட்டு முணுமுணுத்தபடி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
“ஏன் ஆச்சி தாத்தா அப்புடியா இறுக்கி கட்டுவாரு ?”, வட்டி சிரிப்புடன் வம்பு பேசினான்.
“அந்த ஆளுக்கு ஏது புத்தி ? பொறுமைங்கறது எள்ளு அளவுக்கு கூட இருக்காது..”
“நான் எவ்ளோ பொறுமையா இருக்கேன் .. என்னையும் தாத்தா கூட சேர்த்து வச்சி தான் நீ திட்ற அப்பத்தா ..”, வர்மன் சிறு குழந்தைப் போல ஆச்சியின் மடியில் சென்றுப் படுத்துக் கொண்டான்.
“அப்பாடா .. ஒரு வழியா உங்க சண்டை முடிஞ்சது.. ஆனாலும் ஆச்சி நீ பயங்கரமான ஆளு தான். கடைசில என் மச்சான் தான் எறங்கி வந்து இருக்கான். நீ புடிச்ச புடியில தான் நிக்கற.. எதுக்கு உனக்கு இவ்ளோ பிடிவாதம்?”, என வட்டி கேட்டதும் நீலா ஆச்சி அவனை அடித்தார்.
“என் பேச்ச மீறி போனவன் கிட்ட நான் எதுக்கு டா பேசணும்? வாழ வேண்டிய வயசுல ஜெயிலுக்கு அப்டி போகணும்னு என்ன இருக்கு? அடுத்த நாள் தானா சாவரவன இவன் போய் கொல்லனுமா ? அறிவு வேணும் .. மொரட்டு தனத்த வச்சிக்கிட்டு ஒரு ஆணியும் புடுங்க முடியாது “, என ஆச்சி கூறியதுக் கேட்டு வட்டியும், வர்மனும் குழப்பமாகப் பார்த்தனர்.
“என்ன பாக்கறீங்க? அடுத்த நாள் லாரில அடிபட்டு சாக வேண்டியவன தான் இவன் கொன்னது.. ஓரு வருஷம் ஜெயில் வாழ்க்கை வேற.. அந்த வயசுல ஒழுங்கா படிக்காம இப்போ சண்டியர் கணக்கா சுத்திக்கிட்டு திரியறது .. உருபடுவியா நீ?”, என வர்மனை நேரடியாகத் திட்டினார்.
“ஆச்சி அப்படின்னா?”, என வட்டி எதையோ யோசித்துக் கேட்டான்.
“அதே தான்.. அத விடு இப்போ விஷயத்துக்கு வரலாம்.. அந்த செங்கல்வராயன் மேலூர் ராஜதுரை பையன அந்த பொண்ணுக்கு பேசிட்டான். இன்னும் நாலு நாள்-ல கல்யாணம்.. நீ என்ன பண்ண போற சிம்மா?”, என ஆச்சி கேட்டதும் வர்மன் கண்களில் நீர் சுரந்தது.
இந்த அழைப்பிற்காக தானே இத்தனை ஆண்டுகளாக காத்து இருந்தான். முழுதாக ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன. தாயும் தந்தையும் இறந்த பின்னர் முழுதாக அப்பத்தாவின் மடி தான் அவனுக்கு அணைத்துமாக மாறியது.
வர்மனுக்கு மூன்று வயதாக இருக்கும் போது, ஒரு விபத்தில் தாய் தந்தையை இழந்தான். விதி வசத்தால் இவனுக்கு அடி பெரிதாக எதுவும் படவில்லை. தாயும் தந்தையும் அவனைப் பாதுகாப்பாக நடுவில் வைத்துக் கொண்டதில் விபத்து நடந்தும் அவனுக்கு பெரிய காயம் ஏற்படவில்லை.
விஷயம் அறிந்து நீலா ஆச்சியும், அவரது கணவரும் மருத்துவமனை செல்லும் போது பேரனை மட்டுமே முழுதாகப் பார்க்க முடிந்தது. மகனும், மருமகளும் உயிரற்ற ஜடமாகவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஊர்களுக்கு நடுவே இருந்த பிரச்சனை அப்போது பெரிதாக இருந்தது. யார் பெரியவன் என்கிற போட்டியும், தொழில் சந்தையில் யார் அதிகமாக வணிகம் செய்வது என்கிற போட்டியும் அளவிற்கு அதிகமாக இருந்தது . அதனால் வயல் வெளிகளைக் கொளுத்துவதும், பயிர்களை நாசம் செய்வதும் வழக்கமாக அந்த மூன்று ஊர்காரர்களும் செய்துக் கொண்டு இருந்தனர்.
வடக்கூர், கிழக்குபுரி, மேலூர் மூன்று ஊரின் பெரிய மனிதர்களுக்குள் தான் அத்தனை போட்டியும், பொறாமையும் இருந்தது. மற்ற ஊர்களை போல இதில் சாதாரண ஆட்கள் பலியாகக் கூடாது என்கிற பஞ்சாயத்து முடிவினால், பெரிய தலைகள் நேரடியாக இது போன்ற விபத்து ஏற்பாடுகள், வயல்களை நாசம் செய்வது, வணிகம் செய்ய கொண்டு போகும் லாரிகளைப் பிடித்துக் கொள்வது, போன்ற பல கீழ்தரமான வேலைகளைச் செய்துக் கொண்டு இருந்தனர்.
கிழக்குபுரியில் நீலாயதாட்சி ஆச்சி வந்ததும் அந்த ஊரில் நிறைய கட்டுப்பாடுகளை விதித்து, அடிமட்ட கூலிகளின் பிழைப்பு கெடாத வண்ணம் அனைத்து வேலைகளையும் செய்ய வைத்தார். அவர் வந்த பின் தான் கூட்டம் சேர்த்துக் கொண்டு எந்த தனிமனிதனின் பகைக்காகவும், மற்ற ஊர் ஆட்கள் வரக்கூடாது என்று மூன்று ஊர் பஞ்சாயத்து ஆட்களிடம் பேசி தீர்மானம் கொண்டு வர வைத்தார்.
கிழக்குபுரியில் வர்மனின் தாத்தா சிங்காரவேலன் தனது காதல் மனைவியின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அனைத்தும் நிறைவேற்றினார்.
இந்த பெரிய மனிதர்களின் சண்டையில் பொறுக்கி தின்னும் கூட்டம் இதனால் வறுமைக்குத் தள்ளப்பட்டது. அதில் இந்த செங்கல்வராயன் குடும்பமும் ஒன்று.
பெரிய தலைமுறை ஆட்கள் சற்று விலகி அடுத்த தலைமுறைக்குப் பொறுப்பை ஒப்படைத்ததும், இந்த நரி கூட்டம் மீண்டும் பழைய பகைகளைப் புகைப் போட்டுப் பற்ற வைத்துப் பல குடும்பங்களை அநாதை ஆக்கினர்.
நீலாயதாட்சியின் மகன் தாயின் சொல் தட்டாமல் அவரை விட இரண்டு மடங்கு அதிகமாக சட்ட ரீதியாக அணுகி, தனி குடும்ப பிரச்சனைகளில் கூலி ஆட்களை ஏவ கூடாது என்னும் கட்டுப்பாட்டைத் தீவிரமாக நிறைவேற்றப் பாடுபட்டார்.
அந்த போராட்டத்தில் தான் உயிரும் விட்டார் என்று கூட கூறலாம். இன்று வரை அந்த விபத்து யாரால் நடந்தது என்று யாராலும் அறிய முடியவில்லை.
அதற்கு பின் சிங்காரவேலன் மற்ற ஊர் பெரிய மனிதர்களிடம் பல விதங்களில் பேசி, இனி யாரும் யாரின் வழியிலும் குறுக்கிட கூடாது என்று ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர்.
இப்படியாக முழுதாக ஆச்சியின் மடியில் வளர்ந்தவன் கோபத்தில் தன்னிலை மறந்து, புத்திக் கெட்டு சரியான நேரத்தில் வாழ்வைக் கெடுத்துக் கொண்டதில் ஆச்சி கோபம் கொள்வது தவறல்லவே ..
அந்த கோபத்தை எல்லாம் விட்டு நங்கைக்காக ஆச்சி பேசியது அவனுக்கு ஒருபக்கம் மகிழ்ச்சி என்றாலும், தன்னிடம் தனக்காக பேசவில்லை என்கிற நினைப்பும் உடன் எழுந்தது.