19 – மீள்நுழை நெஞ்சே
துவாரகா அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் விமானம் விட்டு இறங்கினாள்.
அங்கே அவளுக்காக ஒரு இந்திய பெண்ணும், அந்நாட்டு ஆணும் காத்திருந்தனர்.
தனது பைகளை எடுத்துக்கொண்டு இம்மிகிரேஷன் முடிந்து வெளியே வந்தாள்.
“துவாரகா”, என்று எழுதப்பட்ட போர்ட் கண்டு அவர்கள் அருகில் சென்றுத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள்.
“ஹாய் காய்ஸ்… ஐ ம் துவாரகா”, என இருவரிடமும் கைக்குலுக்கினாள்.
“ஹாய்.. நான் இனியா… இவன் ரிச்சர்ட் … நம்ம டீம்”, என இனியா தமிழில் அறிமுகம் செய்துக் கொண்டாள்.
“அப்பாடா… தமிழ் கேக்க முடியாதோன்னு ரொம்ப ஏங்கிட்டு இருந்தேன்… நல்ல வரவேற்பு…. “, எனச் சிரித்தபடி மூவரும் முன்னே நடந்தனர்.
“ஹேய் கேர்ள்ஸ்…. ஐ ம் ஹியர். சோ டால்க் இன் இங்லிஷ் “, என ரிச்சர்ட் பேச்சில் கலந்துக் கொண்டான்.
“கவலபடாத ரிச்சர்ட்… உனக்கு தமிழ் சொல்லித்தரேன்”, எனக் கூறிவிட்டு, தங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துக்கொண்டபடி அலுவலகம் வந்துச் சேர்ந்தனர்.
“என்னப்பா நேரா இங்க கூட்டிட்டு வந்துட்டீங்க? ரெஸ்ட் எடுக்க வேணாமா நானு?”, எனத் துவாரகா அலுவலகம் உள்ளே வந்தபடிக் கேட்டாள்.
“கண்டிப்பா எடுக்கலாம். அதுக்கு முன்ன இங்க பார்மாலிட்டீஸ் முடிச்சிடலாம். வீடு இனிமே தான் தேடணும்ல்ல…”, என இனியா கூறினாள்.
“என்னப்பா இவங்க அதுலாம் அரேஞ்ச் பண்ணி தரமாட்டாங்களா?”, என அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“மே பீ நீ சீனியர் ஹெட் ஆர் சம் ஹையர் பொசிஷன்ல இருந்தா இவங்க கெஸ்ட் அவுஸ் குடுப்பாங்க… இப்ப வாய்ப்பு இல்ல மிஸ் துவாரகா…. “, எனக் கூறியபடி இனியா அவளை மேனேஜர் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“ஹலோ மிஸ். துவாரகா…. வெல்கம் டூ அவர் ப்ளேஸ்….”, என மேனேஜர் அவளை வரவேற்றார்.
“தேங்க்யூ மிஸ்டர் சார்லஸ்…. இட்ஸ் மை ப்ளஷர் டூ பி ஹியர் (Its my pleasure to be here)”, எனப் புன்னகையுடன் எதிரில் அமர்ந்தாள்.
(இனிமேல் உரையாடல் தமிழில் வரும்)
“இந்த இரண்டு வருஷத்துல உங்க முன்னேற்றம் பயங்கரம். உங்க ஸ்கில் சைட் பை சைட் நீங்க இம்ப்ரூவ் பண்ணது ரொம்ப பெரிய ப்ளஸ்-ஆ இந்த பிராஜெக்ட்ல அமைஞ்சிருக்கு…”
“நன்றி சார்லஸ். எப்பவும் நம்மை நாம அப்டேட் பண்ணிட்டே இருக்கணும் இல்லைன்னா இந்த உலகம் நம்மை மறந்துடும்… நான் எப்ப ஜாயின் பண்ணணும்?”
“ஹாஹா… ஐ லைக் இட்.. ஒன் வீக்.. நீங்க செட்டில் ஆகிட்டு டீம்ல ஜாயின் பண்ணிக்கலாம்… அதுவரை இந்த ஹோட்டல்ல நீங்க தங்கிக்கோங்க…. இங்க உங்களுக்கு தேவையான உதவி நாங்க செய்வோம்… “
“ரொம்ப நன்றி சார்லஸ். நான் கிளம்பறேன்… “, என அவர் கொடுத்த ஆவணங்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தாள்.
டீம் இருக்குமிடம் சென்றுத் தன்னை அனைவரிடமும் அறிமுகம் செய்துக் கொண்டாள்.
இனியா அவளுடன் உதவிக்கு வந்தாள்.
“வீடு இங்க எங்க கிடைக்கும்?”, என துவாரகா பேச்சை ஆரம்பித்தாள்.
“இங்க வீடு கிடைக்கறது ரொம்ப கஷ்டம் எல்லாம் இல்ல துவா…. நான் இருக்க அபார்ட்மெண்ட்ல சொல்லி இருக்கேன். வாடகை தகுந்த மாதிரி இடம் இருக்கு… உனக்கு இங்க தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா…?”, என ட்ரைவ் செய்தபடிக் கேட்டாள்.
“தெரியல…. இருக்கலாம்.. இல்லாமலும் போகலாம்….உன் அபார்ட்மெண்ட்ல எப்படி ரெண்ட்? “
“நான் ஆல்ரெடி மூனு பேரு கூட ஷேரிங்ல இருக்கேன்… சோ காஸ்ட் சேவ் ஆகுது… அதான் உனக்கு தெரிஞ்சவங்க இருந்தா உனக்கும் பெட்டரா இருக்கும்னு கேட்டேன்… “
“தெரியல இனியா.. தேடணும்… பட் அது இப்ப நடக்காது… சோ நாம வீட்ட தேடலாம்… நாளைக்கு என்னை பிக்கப் பண்ணிக்கறியா? நானும் கொஞ்சம் இந்த ஏரியால ஆன்லைன்ல பாத்து வைக்கிறேன்”
“கண்டிப்பா… இது ரிச்சர்ட் நம்பர். அவன் தான் எனக்கும் இங்க வந்தப்ப ஹெல்ப் பண்ணான்… சோ அவனும் உனக்கு ஹெல்ப் பண்ண ரெடியா தான் இருக்கான்”, எனச் சிரித்தபடிக் கூறினாள்.
“ஏன் சிரிக்கற ?”, அவள் வித்தியாசமாகச் சிரிப்பதுக் கண்டுக் கேட்டாள்.
“அவனுக்கு உன்ன பாத்ததும் பிடிச்சி போச்சாம். அதனால் டேட் கூப்பிடலாம்னு ஃப்ளான் பண்ணிட்டு இருக்கான்”
“அடடா…. அதுக்கு எல்லாம் நான் சரிபட்டு வரமாட்டேனே”, என துவாரகாவும் சிரிப்புடன் கூறினாள்.
“நிஜமாவா? உனக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்காங்களா?”
“ச்ச ச்ச …”
“அப்பறம் என்ன தயக்கம்? சும்மா ஜாலியா ஊர் சுத்தி பாக்கலாம்.…”
“ஊர் சுத்த வேணா போலாம் ஆனா டேட்னு எல்லாம் சொல்ல முடியாது…. விடு பாத்துக்கலாம்… சாப்டு தூங்கணும். நம்ம ஊர் சாப்பாடு இங்க கிடைக்குமா?”
“ஹாஹா… அந்த ஹோட்டல்ல இல்ல… அங்க இருந்து ரெண்டு தெரு தள்ளி ஒரு இந்திய ரெஸ்டாரன்ட் இருக்கு… இப்போவே அங்க போகலாமா?”
“எஸ் ப்ளீஸ்… ப்ளைட்ல ப்ரெட் தான் சாப்டேன்.. அதுவே ஒரு மாதிரி இருக்கு… இரண்டு வருஷம் இங்க எப்படி ஓட்டப்போறேனோ தெரியல ஸ்வீட்டி”, எனப் பேசியபடி ரெஸ்டாரெண்ட் உள்ளே சென்றனர் இருவரும்.
நம் ஊரில் இருக்கும் அளவிற்கு இல்லையென்றாலும் ஓரளவு நன்றாக இருந்தது.
வயிறு நிறைய உண்டுவிட்டு அந்த கடையில் டெலிவரி நம்பர் வாங்கிக்கொண்டு இருவரும் கிளம்பினர்.
“நான் பே பண்றதுக்கு முன்ன நீ ஏன் பண்ற துவா?”
“என் ட்ரீட் ஸ்வீட்டி. நெக்ஸ்ட் டைம் நீ குடு”, என இருவரும் இயல்பாக ஒன்றத்தொடங்கினர்.
அதன்பின் அறைக்கு உள்ளே வந்து சிறிது நேரம் இனியாவிடம் பேசி அனுப்பி வைத்தாள்.
வீட்டிற்கு அழைக்க நேரம் பார்த்தாள். அங்கே காலை எட்டு மணி இருக்கும் என்று அழைத்தாள்.
முழுதாக ஒரு அழைப்பு முடிந்து அடுத்த அழைப்பில் தான் அருணாச்சலம் போனை எடுத்தார்.
“எங்கப்பா போனீங்க போன் எடுக்காம?”
“இங்க தான்டா… சாமி கும்பிட்டுட்டு இருந்தேன் வந்து எடுக்கறதுக்குள்ள கட் ஆகிடிச்சி. நீ பத்திரமா அங்க போய் இறங்கிட்டியா? இப்பதான் அங்க போய் சேர்ந்தியா? இவ்ளோ நேரமா ஆகுது அங்க போக? சாப்டியா டா ராகா? பிரயாணம் சௌரியமா இருந்ததா? ரொம்ப குளிருதா ?”, என வரிசையாகக் கேள்வி மேல் கேள்விக் கேட்டுக் கொண்டே இருந்தார்.
“அப்பா… போதும் கொஞ்சம் மூச்சு விடுங்க… நான் இங்க வந்து மூனு மணிநேரம் ஆச்சி… ஆபீஸ் போயிட்டு சாப்டுட்டு இப்ப தான் ரூம் வந்தேன்… நீங்க சாப்டீங்களா? அம்மா சித்தி சித்தப்பா எல்லாம் என்ன பண்றாங்க?”, எனக் கேட்டாள்.
“வீடியோ கால் வாடா… எல்லாரும் இங்க தான் இருக்காங்க”
“இதோ வரேன்ப்பா”, என வீடியோ காலில் வந்தாள்.
“என்ன டி ஒரே நாள்ல இளைச்சி போயிட்ட? இப்படி கண்ணு சுத்தி கருவளையம் வந்துடிச்சி…”, என பவானி அவளை ஆராய்ந்தபடியே பேசினார்.
“ஏன்ம்மா? தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்… நீங்க எப்ப ஊருக்கு வந்தீங்க? ஹாய் சித்தப்பா… ஹாய் சித்தி….”
“ஹாய் குட்டி…. நாங்க நேத்து சாயந்தரமே வந்துட்டோம் டா…. அங்க ஊரு எப்படி இருக்கு? சினிமால காட்டற மாதிரி இருக்கா? வேற மாதிரி இருக்கா?”, என மனோகர் கேட்டார்.
“இங்க வாங்க சித்தப்பா… பாத்துட்டு நீங்களே சொல்லுங்க…. சித்தி உங்க காடை ஃப்ரை ரொம்ப மிஸ் பண்றேன்… நீங்களாவது என் கூடவே வந்திருக்கலாம்…. “, எனக் கூறினாள்.
“உனக்கு காடை செய்ய அவ அங்க வரணுமா டி? வீடு குடுத்திருக்காங்களா? எங்க தங்க போற?”
“பெத்த தாய் உனக்கு தான் அக்கற இல்ல. என் சித்திக்கு இருக்கு அதான் கூப்பிடுறேன்.. என்ன சித்தி கரெக்ட் தானே?”
“இந்த வெளாட்டுக்கு நான் வரல சாமி…. சரி சொல்லு தங்கறது எல்லாம் அங்க போனா தான் தெரியும்-ன்னு சொன்ன… எங்க தங்க போற?”
“வீடு தேடணும் சித்தி… ஒரு வாரம் ஹோட்டல்ல ரூம் குடுத்து இருக்காங்க… இந்த வாரத்துல வீடு பாத்துட்டு அங்க போயிக்கணும்… “, என வந்தது முதல் நடந்தவற்றை அனைவரிடமும் பகிர்ந்துக் கொண்டாள்.
“சரி அந்த இனியா புள்ள நம்பரும் அந்த பய நம்பரும் எங்களுக்கு அனுப்பி விடு.. உன்ன அவசரத்துக்கு கூப்பிட ஆகும்”, பவானி.
“அனுப்பிட்டேன்… அப்பா சித்தப்பா ரெண்டு பேருக்கும் அத்தனையும் வந்துடும். உன் போனுக்கும் அனுப்பவா?”
“அவங்க ரெண்டு பேருக்கு தெரிஞ்சா போதும்… சரி நீ போய் தூங்கு…. அப்பறம் கூப்புடு”
நால்வரும் அவளிடம் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அப்பத்தா கிழவி, “போனவ போன மாதிரி வராளா இல்ல எப்படி வரா-ன்னு நானும் பாக்கறேன்…. எவ்ளோ திமிரு இருந்தா என் பேரன ஜெயிலுக்கு அனுப்புவா…. எப்படி வாழ்ந்துடுவான்னு நானும் பார்க்கிறேன் டி…”, என வெத்தலையை இடித்தபடிக் கூறியது.
“அம்மா… அவ எங்க பொண்ணு… எங்க எல்லாரையும் பெருமைபட வைக்கிற மாதிரி தான் வாழுவா… சும்மா நீ அந்த கொலகார பயலுக்கு வக்காளத்து வாங்காத.. உன்னாலையும் தான் அவன் இப்ப ஜெயிலுக்கு போனதே…. தேவையில்லாம அந்த புள்ளைய பேசிக்கிட்டு இருக்காத.. அப்பறம் அவ்வளவு தான்….”, என மனோகர் தாயை எச்சரித்துவிட்டுக் கடைக்குச் சென்றார்.
வீட்டில் பேசி முடித்ததும் கனிமொழிக்கு அழைத்தாள் துவாரகா.
“என்னடி டாம் க்ரூஸ் பாத்துட்டியா?”, என எடுத்ததும் வம்பிலுத்தாள் கனிமொழி.
“க்ரிஸ்ஹெம் என்னய டேட்க்கு கூப்பிட்டு இருக்கான் டி.. நாளைக்கு போலாம்னு இருக்கேன்”, என துவாரகா கூறியதும் இருவரும் கலகலவெனச் சிரித்தனர்.
“சரி சொல்லு.. எப்ப ரீச் ஆன? எங்க இருக்க?”
துவாரகா கனியிடம் விமானம் விட்டு இறங்கியது முதல் ஹோட்டல் அறைக்கு வந்தது வரைக் கூறிவிட்டுத் தண்ணீர் குடித்தாள்.
“சரி. ஜாக்கிரதையா இரு… வீடு எங்கன்னு தேடறது? அவங்க அரேஞ்ச் பண்ணணும்ல… “
“இங்க தேடிக்கலாம் கனி ஒன்னும் பிரச்சனை இல்லை…. ஒரளவு இந்தியன்ஸ் இருக்க ஏரியா தான் இது… சோ பாத்துக்கலாம்… க்ஷேரிங் தான் ஒத்துவருமான்னு பாக்குறேன்”
“உனக்கு குடுக்குற சம்பளத்த வீட்டு வாடகைக்கு மட்டும் குடுக்கலாம்னு இருக்கியா என்ன?”
“சின்ன வீடு பாத்துக்கலாம் கனி… அதான் நமக்கு பரவால்ல”
“அங்க நம்ம புள்ளைங்க யாராவது இருக்காங்களான்னு விசாரிக்கறேன். தெரிஞ்சு வச்சிக்கறது நல்லது… சரி நீ தூங்கு.. நான் சாயந்தரம் வந்து வீடியோ கால் பண்றேன்…”
“சரி …டாடா… குட் ஃபைட்”, எனக் கூறி அழைப்பை வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள்.
சுடுநீரில் அரைமணிநேரம் நன்றாகக் குளித்தவள் இரவு உடை அணிந்துக் கொண்டு அறைக்கதவைப் பூட்டிக்கொண்டு உறங்கத் தொடங்கினாள்.