2 – காற்றின் நுண்ணுறவு
உயரத்தில் பறந்துக் கொண்டிருந்த ஹெலிகாப்டர் வடக்கு அட்லான்டிக் கடற்பகுதியில் இருந்து கினியா வளைகுடா இருக்கும் பக்கம் சென்றுக் கொண்டிருந்தது.
பைலட் இறங்கும் இடத்திற்கான அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைக் குறியீடுகளைக் கேட்டுக்கொண்டிருந்தார்.
“கிங்காங் ஆன் கினியா… ஐ ரிபீட் கிங்காங் ஆன் கினியா….. வேர் டூ லேண்ட்?”, பைலட்.
“காப்பீட்…. யூவர் மார்க் இஸ் latitude 0.700, longitude 0.954… “, எனக் கட்டளை வந்தது.
ஹெலிகாப்டர் அந்த குறியீட்டைக் காண அது கடற்பகுதியாக இருந்தது.
தற்காலிகமாக ஆப்பரிக்க கண்டத்தில் அக்ரா எனும் இடத்தில் கடற்கரை ஓரமாகத் தரையிறக்கினர்.
ஹெலிகாப்டரில் இருந்து இருவர் இறங்கி தங்களது மேலிடத்திற்குத் தொடர்புக் கொண்டனர்.
“பாஸ்….. இது கினியா வளைகுடா…. இங்கிருந்து 175 கி.மீ தூரத்துல தான் லொகேஷன் இருக்கு”, சார்லஸ்.
“……………….”
“ஓக்கே பாஸ்….. அதுக்கான ஆளுங்கள தேட ஆரம்பிக்கறேன்…. “, என அவன் கூறியதும் லைன் கட் ஆனது.
சார்லஸ் மற்றும் ஜேக் இருவரும் தான் அந்த ஹெலிகாப்டரில் வந்தது. பைலட்டிடம் இந்த இடம் தான் எனக் கூறி இருவரும் கடற்கடரை நோக்கிச் சென்றனர்.
“இங்க என்னடா இருக்கு ? இதுக்கு நம்மல இவ்ளோ அலையவிடறானுங்க ?”, ஜேக்.
“எனக்கும் விஷயம் தெரியாது ஜேக். அவங்க சொல்றத செஞ்சிட்டு போலாம். வா கடலோடறவங்கள பிடிக்கணும்”, என சார்லஸ் அந்த இடத்தை போட்டோ எடுத்துக் கொண்டு, அந்த லொகேஷனையும் தன் மேலிடத்திற்கு அனுப்பி வைத்தான்.
ஜேக் சுற்றும் முற்றும் கூர்மையானப் பார்வையைச் சுழற்றி, கடலை ஒரு முறை அழுத்தமாகப் பார்த்துவிட்டுச் சார்லஸைப் பின்தொடர்ந்தான்.
அதே நாளில் இன்னொரு ஹெலிகாப்டரில் இரண்டு பேர் இந்தியப் பெருங்கடலில் வட்டமடித்தபடி இருந்தனர்.
அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறியீடுகளும் கடலைக் காட்ட அருகில் இருக்கும் மாலத்தீவில் தரையிறங்கினர்.
“ஹேய் கேட்…. வாட்ஸ் ஹியர்? “, ஏஞ்சல் அருகில் நின்று கேட்டாள்.
“வீ நீட் டு டைவ் இன்டூ த ஓஷன் ஏஞ்சல் … லெட்ஸ் கெட் ரெடி”, என கேட் பதிலுரைத்துவிட்டு தங்கும் ஏற்பாடுகளோடு, கடலில் பயணிக்க தேவையானவைகளையும் கவனிக்கச் சென்றாள்.
தன் மேலிடத்தை தொடர்புகொண்டு அடுத்து செய்யவேண்டிய உத்திரவுகளையும் பெறத் தவறவில்லை இருவரும்.
அடுத்த நாள் சுடரெழில் நாச்சியார் தான் கிளம்பத் தேவையானவற்றை சேகரித்துக்கொண்டு எப்படியேனும் போலீஸிடம் சென்று தங்களைக் காத்துக்கொள்ள, என்ன செய்வதென தீவிரமாக யோசித்தபடி இருந்தாள்.
அவள் இருந்த கூடாரத்திற்கு வெளியே குயில் கூவும் சத்தம் கேட்க எழுந்து வெளியே சென்றாள்.
நெருக்கமான மரங்களின் இடைவெளியில் ஒரு உருவம் தெரிந்தது.
“என்னாச்சி? எதாவது முக்கியமான விஷயமா?”, என சைகையில் கேட்டாள்.
“ஆம்”, என அந்த உருவம் தலையசைத்ததும் சத்தம் எழுப்பாமல் அந்த உருவத்தைத் தன்னைப் பின்தொடரும்படி செய்கைச் செய்துவிட்டு அடர்ந்தக் காட்டுப்பகுதிக்குள் நுழைந்தாள்.
கூடாரம் கண்ணை விட்டு மறையும் தூரம் வந்த பிறகு அங்கிருந்த பாறைக்குப் பின்னால் சென்றாள்.
“என்ன விஷயம் நாக்?”.
“எப்ப கிளம்பற நாச்சியா?”.
“நாளைக்கு இராத்திரி கூட்டிட்டு போக கூடாரத்துக்கே ஆள் வராங்க “, உணர்ச்சிகள் காட்டாத முகத்துடன் கூறினாள்.
“இந்தா… தேவைபடறப்ப யூஸ் பண்ணிக்க”, என ஒரு கையளவு அதிநவீன துப்பாக்கி ஒன்றை அவளிடம் கொடுத்தான்.
“இது ஏது?”, என கேள்வியாக அவள் புருவம் உயர்ந்தது.
“போனவாரம் கடத்தல் பொருள்ல இது வந்தது. உனக்கு உபயோகப்படும்னு வில்சன்கிட்ட பணம் குடுத்து தான் வாங்கினேன்”, என அந்த ‘தான்’ல் அழுத்தம் கூட்டிக் கூறினான்.
அமைதியாக அதை மடித்து தன் ஜெர்கின் உள்ளே வைத்துவிட்டு புல்லட்ஸ் எனக் கேட்டாள்.
“நீ சரின்னு சொன்னா இரண்டு பேக் கொண்டு வந்திருக்கேன். குடுத்துட்டு போறேன். அதுல எல்லாமே லேட்டஸ்ட் வெபன்ஸ் இருக்கு”.
“மத்த ஆளுங்களுக்கு தெரிஞ்சா கஷ்டம்… சந்தேகம் வரும்”.
“வேணும்கிறத இப்ப எடுத்துட்டு போயிட்டு மத்தத இங்க வச்சிடு. ஒரு வாரத்துல இங்க வந்துடுவ தானே?”, அவன் கேட்ட கேள்வியில் என்ன இருந்தது என்பதை அவனாலேயே அறியமுடியவில்லை.
“தெரியல…. இன்னும் சொல்லிக்கற அளவுக்கு எதுவும் கிடைக்கல. திரும்ப என்னை இங்க அனுப்புவானா? மேல அனுப்புவானான்னு தெரியாது.. நீ ஜாக்கிரதையா இரு. நான் இங்க வந்தப்பறம் உனக்கு தகவல் குடுக்கறேன்”.
“சரி………….. அந்த பைய்ய குடுக்கவா?”.
“ம்ம்…. கொஞ்ச நேரம் இரு. வரேன்”, என கூடாரம் நோக்கிச் சென்றவள் இளவெலிழி மற்றும் ரிஷியை அழைத்து வந்தாள்.
“இளா ரிஷி ஜாக்கிரதை. யார் கண்ணுலயும் படக்கூடாது… நான் திரும்பி வந்தப்பறம் இதப்பத்தி பேசிக்கலாம். வினோத் அண்ட் ராகவிக்கு இதபத்தி எதுவும் தெரியக்கூடாது”, கட்டளையாக வந்தது வார்த்தைகள் நாச்சியிடமிருந்து.
“ம்ம்”, என தலையை மட்டும் அசைத்துவிட்டு இருவரும் நாக்-ஐ பார்த்தும் தலையசைத்துவிட்டு ஆளுக்கொரு பையை எடுத்துக்கொண்டுக் கிளம்பினர்.
“வேற என்ன சொல்லணும் நாக்?”, நாச்சியார்.
“அந்த பக்கத்து கிராமத்து ஆளுங்கள பழக்கமாக்கி வைக்கவா?”, நாக்.
“அவங்களுக்கு ஆபத்து வந்துடக்கூடாது நாக். மருத்துவ வசதி இருக்கான்னு பாரு. நான் வரவரைக்கும் இங்கயே இரு… சார் நான் வரவரைக்கும் இருக்கமாட்டேன்னு சொல்றாரு. அவர் குடுக்கறத பத்திரப்படுத்தணும்”, நெஞ்சில் பாரம் அழுத்துவதைப் போல உணரவும் தலையைச் சிலுப்பிவிட்டு நடக்க ஆரம்பித்தாள்.
“நாச்சியா….. அவசரப்பட்டுறாத….பொறுத்திருந்து தலையை அறுக்கணும்”, அவன் உதிர்த்த வார்த்தைகளில் இருந்த உஷ்ணமும் வீரியமும் சுடரெழில் விழிகளில் வெறியை ஏற்றியது.
“நிச்சயம் தலையை அறுக்காம விடமாட்டேன் நாக்”, என உறுமலாக வார்த்தைகளை உதிர்த்துவிட்டுச் சென்றுவிட்டாள்.
அழகான அந்திமாலை நேரத்தில் கடற்கரையில் கால்களை நனைத்தபடி வெள்ளைச் சுடிதாரில் ஓர் பூஞ்சோலை நின்றிருந்தது.
“வகி… வகி….. “
எத்தனை முறை தோற்றாலும் மீண்டும் மீண்டும் கரையை உடைக்க வரும் அலைகளில் தன்னைத் தொலைத்து நின்றிருந்தாள் அவள்.
“ஏய்…. வகி….. “, சற்று தூரத்தில் மற்றொரு பெண் அவளை அழைக்க அவள் கவனம் இன்னும் அலைகளிலேயே ஆடிக்கொண்டு இருந்தது.
அருகில் நின்றிருந்த பெரியவர் ஒரு பெண் அழைப்பதைக் கேட்டு திரும்பி பார்த்துவிட்டு அருகில் இருந்தவளை அழைத்தார்.
“அம்மா…. உங்கள தான் யாரோ கூப்பிடறாங்க”,பெரியவர்.
அவர் அழைத்தும் திரும்பாதவளை அவர் கையை பிடித்ததும் தன்னிலைப் திரும்பி அவரைப் பார்த்தாள்.
தெய்வீகமான சிரிப்புடன் நின்றிருந்த பெரியவர் அவள் பெயரைக் கேட்டார்.
“ரொம்ப நேரமா உங்க தோழி வகி ன்னு கூப்பிட்டுட்டு இருக்காங்க. உங்க பேர் என்னம்மா?”, மென்சிரிப்புடன் கேட்டார்.
“வல்லகி தாத்தா….. “.
“அருமையான பேர்ம்மா… அவங்க ஏதோ சுமையை பகிர்ந்துக்க கூப்பிடறாங்க போல. வாங்க போய் உதவி செய்யலாம்”, என அவள் கையைப் பிடித்தபடி நடந்தார்.
“வல்லகி உங்க பேருக்கு அர்த்தம் தெரியுமா ?”,பெரியவர் சிரிப்புடன் கேட்டார்.
“தளிர்னு கேள்விபட்டேன் தாத்தா”.
“இன்னொரு அர்த்தமும் இருக்கும்மா… வீணை…. வீணையின் சிறப்ப சொல்லி முடியாதுல்லம்மா…. “.
“ஆமாம் தாத்தா… ஆனா நான் வீணை இல்லை மனுசி”.
“ஒவ்வொரு மனுசனுக்குள்ளயும் காத்து போயிட்டு வருதும்மா… அந்த காத்து தான் இசையையும் குடுக்குது. வீணை தன் நரம்பின் இடையில் இருக்கற காத்த லேசா மீட்டி இசையா மாத்துது. அப்படி பாத்தா ஒவ்வொரு மனுசனும் ஏதோ ஒரு இசைக்கருவி தானே”, மர்மமாக சிரித்தபடிக் கேட்டார்.
புரியாதப் பாவணையில் அவரைப் பார்த்து நின்றாள்.
“ஒவ்வொரு பிறப்புக்கும் ஒரு அர்த்தம் இருக்கும்மா… “, எனக் கூறிவிட்டு அவள் தோழி கையில் இருந்த சுமையை தன் கையில் பாதி வாங்கிக்கொண்டு தார்சாலைக்கு வந்தனர்.
“தேங்க்ஸ் தாத்தா…. இவள எவ்ளோ நேரமா கூப்பிடறேன் ஜடம் மாதிரி நிக்கறா…. “, தோழி பாலவதனி நன்றியுரைத்தாள்.
“இருக்கட்டும்மா…. நீ தெளிவா இருந்தா சரிதான். நான் வரேன்…. “, எனப் பொதுவாக இருவரிடமும் சிரிப்புடன் விடைப்பெற்றுக் கிளம்பினார் பெரியவர்.
“பாலா…. இவர எங்கயோ பாத்தமாதிரி இருக்கு….”, வல்லகி யோசனையுடன் கூறினாள்.
“ஆரம்பிச்சிட்டியா…. முதல்ல நம்ம ரூம் போலாம் வா…. போய் இனிமே தான் சமைக்கணும்… உன்ன வச்சிட்டு வெளிய எங்கயும் போகமுடிய மாட்டேங்குது”, என அவள் பாட்டுக்கு பேசியபடியே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
வல்லகி அந்த பெரியவரின் முகத்தை மீண்டும் மீண்டும் தன் நினைவடுக்குகளில் தேடிக் கொண்டிருந்தாள்.
யார் அவர்?
ஃபோர்ட் ஜேம்ஸ்…. (Fort James)
மிகவும் பழமையான துறைமுகம். அதன் பக்கத்தில் இருக்கும் அக்ரா பாயிண்ட் நிலப்பகுதியின் ஓர் கூர்முனை முடிவு. அதன்பிறகு கடல் தான் பரந்து விரிந்திருந்தது.
அங்கிருந்து பக்கவாட்டில் சற்று தூரத்தில் ஹார்பரும் இருந்தது. சிறு சிறு படகுகள் கடலோடும் மையமும் அக்ரா பாயிண்ட் அருகில் இருந்தது.
“ஜேக்….. நான் கடல்ல போக போட் கிடைக்குமான்னு பாத்துட்டு வரேன். நீ நாம தங்க ரெசார்ட் பக்கத்துல பாரு”, எனக் கூறிவிட்டுச் சென்றான் சார்லஸ்.
செல்லும் சார்லஸை அழுத்தமாகப் பார்த்துவிட்டு அருகில் இருக்கும் தங்கும் விடுதிகளைத் தேடிச் சென்றான் ஜேக்.
சார்லஸ் அடுத்தநாள் விடியற்காலையில் கடலோட, ஆட்களைப் பிடித்துப் பேசி முன்பணம் கொடுத்துவிட்டு அக்ரா பாயிண்ட் வந்தான்.
ஹெலிகாப்டரை பழுதுபார்க்க பைலட் ஊருக்குள் சென்று பேசி ஒரு இடத்தை ஏற்பாடுச் செய்துவிட்டு வந்திருந்தார்.
அவரை அந்த இடத்திற்கு அருகிலேயே தங்கியிருக்கும்படி உரைத்துவிட்டு இவர்கள் இருவரும் கடலோரமாக இருந்த ஒரு ரிசார்ட்டில் தங்கினர்.
சார்லஸ் தன் மேலிடத்திற்கு அனுப்ப வேண்டிய தகவல்களை அனுப்பிவிட்டு மது குடிக்க ஆரம்பித்தான்.
“ஹேய் ஜேக்….. நீ ஏன் எப்பவும் உம்முன்னே இருக்க? பீல் ப்ரீயா….”, போதையில் பேச ஆரம்பித்தான்.
சன்னமாகத் தலையசைத்துவிட்டு அவனும் ஒரு க்ளாஸை எடுத்தான்.
“இங்க பாரு இந்த இரண்டு வருஷமா நானும் உன்ன பாக்கறேன். நீ செய்ற வேலை எல்லாமே சூப்பரா இருக்கு. ஆனா எங்க கூட மிங்கிள் ஆகவே மாட்டேங்கற ….. ஏன்? சொல்லு?”.
“நத்திங் டூ சே”.
“நான் இந்த தடவை உன்ன ஏன் அவ்ளோ பேசி உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன்னு தெரியுமா? சொல்லு ஜேக்…. உனக்கு தெரியுமா?”.
இல்லை என ஜேக் தலையசைத்ததும், “நம்ம பெரிய பாஸ்அ பார்க்க ஒரு சந்தர்ப்பம் இதுல கிடைக்க வாய்ப்பு இருக்கு… ஆமா… நாம பாத்துட்டா டைரக்டா நாம இனி டிவிஷனல் ஹெட் ஆகிடலாம். அவருக்கு டேலன்டட் பர்சன்ஸ்அ ரொம்ப பிடிக்குமாம். அன்னிக்கு யோகேஷ் சொன்னான்….. அதான் நான் உன்ன கூட்டிட்டு வந்தேன்”.
“எப்ப பாக்கலாம்?”, கண்கள் கத்தியாக மின்னக் கேட்டான்.
“தெரியாது.. ஆனா இது பெரிய பாஸ் டைரக்ட் விஷன்ல நடக்கற மிஷன்”, போதையில் உளறிக்கொண்டே தூங்கியிருந்தான்.
ஜேக் தாங்கள் இருந்த அறையில் இருந்து கடலை வெறித்தபடி நின்று தன்னை நிலைப்படுத்தப் போராடினான்.
சிவந்திருந்த கண்களுக்கு காரணம் குடிபோதையா ? அவன் உள்ளத்தின் வேதனையா ?