2 – ருத்ராதித்யன்
அகன்று பரந்த வெட்டவெளியில் கோடானு கோடி விஷயங்கள் நிறைந்துள்ளது. அதே போல பூமியின் சில இடங்களில் சிற்சில தடயங்களும் விடப்பட்டு இருக்கிறது.
அதில் கோடியில் ஒரு பங்காக நம்மில் சிலர் அத்தடயங்களை அறிந்தவர்கள். அதிலும் சிலரே அதை புரிந்தவர்கள். இயற்கையை அழித்துவரும் மனிதமிருகங்களின் பிடியில் சிக்காமல் இன்றும் ஆங்காங்கே பல அற்புதங்களும், அதிசயங்களும் நடந்த வண்ணம் இருக்கிறது.
அந்த பலநூறில் ஒரு பங்கு செயற்கை கலக்காத பவித்திரமான இடமாக அவ்விடம் திகழ்ந்தது.
பைரவக்காடு……
தென்மேற்கு மலைத்தொடரில் ஒரு பகுதி பைரவக்காடு எனப்படும். பல அறியமிருகங்களும், அழிந்து போனதாக இவ்வுலகம் நினைத்துக்கொண்டிருக்கும் பல உயிரினங்களும் வாழ்ந்து வரும் பூமி.
பூமித்தாய் இன்னும் எத்தனை எத்தனை பொக்கிஷங்களை தன்னுள் புதைத்துக்கொண்டு இருக்கிறாள் என்று தோன்றும் அவ்விடம் கண்டால்……
காலங்கள் கடந்து இன்றும் எந்த மாசும் அண்டமுடியாத இடங்களில் இதுவும் ஒன்று.
நாம் இப்பூமியை தங்களின் கைக்குள் அடக்கிவிட்டதாய் கர்வம் கொண்டு அலைகிறோம்.
இயற்கை ஒரே முறை நம் கண் முன்னே விரல் சொடுக்கினால் போதும், நாம் பூமிக்கடியில் உரமாக மாறும் சுழற்சியில் விழுந்திருப்போம்.
எத்தனை கர்வம் ? எத்தனை ஆணவம்? சிறு சலனம் தரைதகட்டில் ஏற்பட்டாளும் நம் நெஞ்சுக்கூட்டினுள் அடைப்பட்டு துடிக்கும் இதயம் வெளியே விழுந்துவிடும் திடம் கொண்டு வாழ்கிறோம் இன்றைய உலகில்…..
இவர்களின் வாசமும், ஸ்வாசமும் அண்டவிடாது அக்காடு தனி உலகத்தை உருவாக்கி இயங்கி வருகிறது…..
அக்காட்டின் அமைப்பென்பது இயற்கையன்றி எவரும் அறியமுடியாது…..
எத்தனை எத்தனை விந்தை….. எத்தனை எத்தனை அழகு….
சில சமயம் நெஞ்சோரத்தில் பயமும் சூழும், இவ்விடத்தில் அத்துமீறி நுழைந்தால் அவர்களின் நிலை யாதென்று யாவரும் ஊகிக்கமுடியாது நிச்சயமாக…..
அழகென்றாலே ஆபத்து என்ற கூற்று நம்மோடு காலங்கள் கடந்தும் பயணித்து வருகிறது. அதில் மிகவும் நுண்ணிய விஷயமும் விடுபடாமல் ஏற்றுக்கொள்ள வேண்டிய இடம் அது.
ஆம்……
அதைக் காக்கவென்றே எட்டு திக்கிலும் அதி பயங்கரமான மிருகங்களும் பல அமானுஷ்யங்களும் எல்லை காத்து நிற்கின்றன.
பைரவக்காடு என்ற பெயரிலேயே நாம் அறிந்து கொள்ளலாம் பல நூறு பைரவர்கள் தான் காவல் காக்கிறார்கள்…. அவர்களை மீறி எவரும் உரிய அனுமதியின்றி எல்லைப் பக்கம் கூட வரமுடியாது.
அந்த காட்டின் வடகிழக்கில் நீர்வீழ்ச்சியைக் கடந்து மலை ஏறினால், உச்சியில் பாறைகளை அழகாய் செதுக்கி அதிலே கொடியோடிய அழகான அபூர்வமான பூக்களும் சேர்ந்து தெய்வீக மணம் பரப்பியபடி அக்குடைவரை குகைக்குள்ளே சென்றால் அங்கே ஓர் உருவமில்லாத உருவம் ஓங்காரத்தை விடாமல் ஜெபித்தபடி இருந்தது.
அவரின் எதிரே ஓர் லிங்கம் சுயம்புவாய் எழுந்திருந்தது. அதை நோக்கி அமர்ந்தே அந்த அருவம் தவம் இயற்றுகிறதோ?
வாசலில் ஓர் உறுமல் சத்தம் கேட்க அருவம் வெளியே வந்து வணங்கியது.
“வா கார்மேகா…. அப்பனிடமிருந்து செய்தி வந்ததா?”, அருவம்.
“ஆம் ….. அப்பன் பயணப்பட்டுவிட்டார் …. அம்மை எப்போது தன்னை வெளிகொணர்வார்?”, கார்மேகன்.
“விரைவில் அம்மையை வெளிக்கொணர வேண்டியவன் அறியப்படுவான்”, அருவம்.
“என் கடமை நிறைவேற்றக் காத்திருக்கறேன். மீண்டும் சந்திப்போம்”, என கார்மேகன் அங்கிருந்து சென்றான்.
அருவம், செல்லும் கார்மேகனை சற்றே பெருமைப் பொங்க பார்த்ததோ?
“சதாசிவா…… உன் அடியன்றி ஏதும் அறியோம். எம்மை உன்னுள் புதைக்கும் நாள் எத்தொலைவிலோ?”, அருவம் மனமுருக வேண்டியது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் இருபதிற்கும் அதிகமானோர் காட்டுப்பகுதியில் பதுங்கி பதுங்கி சென்றுக் கொண்டிருந்தனர்.
ஓர் இடத்தை தேர்ந்தெடுத்து தங்களுக்கான மறைவிடமாக மாற்றிக்கொண்டு விட்டிருந்தனர் அந்திசாயும் நேரத்திற்குள்….
அக்கூட்டத்தை வழிநடத்துபவனும், மற்றொருவனும் சுற்றி காவலுக்கு ஆட்களை நியமித்துவிட்டு காட்டிற்குள் செல்ல ஆயத்தமாயினர்.
அவர்கள் கைகளில் வேட்டையாட பயன்படுத்தும் அத்தனை ஆயுதங்களுடன் மயக்கமருந்தும் சேர்ந்தே பயணப்பட்டது.
அவ்வாயுதுங்களில் மொழுகி இருந்த துடைக்காத இரத்தக்கறைகள் பல உயிர்வதையை பறைசாற்றியது.
அவர்களின் முப்பது நிமிட நடையில் ஓர் ஓனாய் கூட்டம் அவர்கள் கண்ணில் பட அத்தனை ஓனாய்களையும் சுற்றிவளைத்து வேட்டையாடியது இம்மனிதமற்ற கூட்டம்.
அங்கேயே அவற்றின் தோளை உரித்து தங்கள் பைகளில் திணித்துக்கொண்டு, அவ்வுடல்களைத் திசைக்கொரு பக்கமாக வீசினர்.
“சார்…. இன்னிக்கு நல்ல வேட்டை. நல்ல நேரத்துல தான் கிளம்பி இருக்கோம் போல…..”, அக்கூட்டத்தில் ஒருவன்.
“இது பத்தாது. பார்ட்டி புலி தோல் கேட்டு இருக்காங்க…. பாதி பேர் டென்ட் போங்க மீதி பேர் என்கூட வாங்க”, வழிநடத்துபவன்.
“ஹேய்…. மிட்டல்….. நீ தோள பதபடுத்தி வை. நாலு பேர கூட்டிட்டு போ. சோனல் நீங்க ஆறு பேரும் வாங்க”, கிஷான் என்றழைக்கப்படுபவன் ஆட்களை பிரித்து அனுப்பினான்.
“ஆயுஸ்…. புலி இங்க வேட்டையாடினா பிரச்சினை அதிகமாகும்…. வேற பக்கம் பாக்கலாமே….”, கிஷான்.
“இங்க இருக்கற புலி தான் வேணும். இதே புலி”, என ஒரு புகைப்படத்தைக் காட்டினான் ஆயுஸ்.
“இதுவா? இது அந்த பச்சைக் கண் இருக்கற புலில…. அதுக்கு பாதுகாப்பு அதிகமா இருக்குமே”, கிஷான்.
“ஆமா… அதை நாம உயிரோட கொடுத்தா 5 கோடி கிடைக்கும். மயக்கமருந்து மட்டும் தான் உபயோகிக்கணும் சொல்லிடு”, ஆயுஸ் கூறி முன்னேறிச் சென்றுவிட்டான்.
“ஹேய் யாரும் ஆயுதம் பயன்படுத்த கூடாது. மயக்கமருந்து எல்லாரும் எடுத்துக்கோங்க. உயிரோட பிடிக்கணும… சம்ஜே”, என ஹிந்தியில் கூறினான் கிஷோர்.
பொதுவாக புலிகள் நீர்நிலைக்கு அருகிலேயே வசிக்கும் தன்மை உடையது.
இவர்கள் பிடிக்க செல்லும் புலிக்கு ஓர் தனித்தன்மை உண்டு. அது இரவில் தண்ணீரில் சில மணி நேரங்கள் நீந்தியும் மிதந்தும் விளையாடிவிட்டு விடிகாலை வேலையில் உறங்கச்செல்லும்.
அந்த வேலையில் தான் இவர்கள் அப்புலியை பிடிக்க ஏற்பாடு செய்தபடி புதரில் மறைந்திருந்தனர்.
தன் வழக்கமான குளியல் விளையாட்டை முடித்துவிட்டு வெளியே வந்த மகதன் எனும் புலி தன் குகைக்குச் சென்று படுத்தது.
புலி உள்ளே சென்று முப்பது நிமிடம் கழித்து ஆயுஸின் கூட்டம் அப்புலியை மயங்கச்செய்து தூக்கிச் சென்றனர்.
அப்புலியின் மயக்கம் தெளியவிடாமல் மயக்கமருந்து கொடுத்தபடியே வாகனத்தில் அடிதட்டில் படுக்கவைத்து, மேலே வேட்டையாடிய பொருட்களோடு ஆட்கள் அமர்ந்து அக்காட்டை விட்டு வெளியேறினர்.
அப்புலி வேறொரு வாகனத்தில் மாற்றப்பட்டு கர்நாடகாவில் ஓர் பண்ணைவீட்டில் அடைக்கப்பட்டது.
இது ஒருபுறம் நடந்தேற அதே நேரத்தில் மேகமலையில் சிரஞ்சீவ் நெடுமாறன் எதிரில் நன்முகை இதழி புன்சிரிப்பு மிளிர அவனின் திட்டல்களை வாங்கிக்கொண்டு இருந்தாள்.
“நான் உன்ன திட்டிட்டு இருக்கேன் முகை. நீ சிரிச்சிட்டு இருக்க… என்னை பார்த்தா எப்படி தெரியுது? “, சிவி.
“ம்ம்….. உங்க முதுகுல உப்பு மூட்டை ஏறி உலகத்தையே சுத்தி வரணும்னு தோணுது. செய்வீங்களா சஞ்சு”, சிவி அவளுக்கு மட்டும் சஞ்சு ஆகி போனான்.
“நீ ஒழுங்கா குழந்தைய பெத்து எடு வேர்ல்ட் டிரிப் போயிட்டு வரலாம் “, சிவி.
“சஞ்சு…. உங்க முதுகுல உப்புமூட்டை ஏத்திட்டு சுத்தணும். பிளேன்ல இல்ல… “, நன்முகை சிரிப்புடன் கூறினாள்.
“அப்படி சுத்தினா அவர் முதுகு என்ன ஆகறது டி? உனக்கு எல்லாரும் செல்லம் அதிகமா குடுத்து கெடுத்து வச்சிருக்காங்க…. மாப்ள நீங்களும் இப்படி பண்ணா எப்படி? “, என நன்முகையைத் திட்டியபடி அங்கயற்கன்னி அவளுக்கு பழச்சாறு கொடுத்தார்.
“என் பொண்ண ஏன் திட்டற கயல்? அவ சொன்னா மாப்ள செய்யாம போயிருவாறா ? இல்ல அவ அண்ணனுங்க தான் விட்றுவாங்களா?”, எனக் கூறியபடி தமிழன்பன் வந்து மகளின் அருகில் அமர்ந்தார்.
“எல்லாரும் இப்படியே அவள செல்லம் கொஞ்சிட்டு இருந்தா எப்படி? இதழ் வா வந்து பின்னாடி பக்கம் கூட்டு. கொஞ்சம் கொஞ்சம் வேலை செஞ்சா தான் குழந்தை தெம்பா இருக்கும், உனக்கும் தெம்பு வரும்”, என அவளை கையோடு அழைத்துச் சென்றார் கயல்.
“அம்மா…. இதழிய ஏன் வேலை வாங்கறீங்க? வேலை செய்ய தான் நிறைய பேரு இருக்காங்களே”, எனக் கூறியபடி அர்ஜுன் அவ்விடம் வந்து அமர்ந்தான்.
“அப்படி கேளு அண்ணா…. இவர பாரு அமைதியா உட்கார்ந்துட்டு இருக்காரு. என்மேல பாசமே இல்ல”, என நன்முகை சிவியை முறைத்துவிட்டு அர்ஜுனின் தோள் சாய்ந்து கொண்டாள்.
“அம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும்…. நீ வேலை செஞ்சிட்டு வா உனக்கு கால் பிடிச்சிவிடறேன். உன் ஹெல்த், பேபி ஹெல்த் ரொம்ப முக்கியம் எனக்கு. சோ அம்மா சொல்ற எல்லாத்தையும் செய்”, எனக் கூறிவிட்டு சிவி பேப்பர் எடுத்து படிக்க ஆரம்பித்தான்.
“இருங்க என் ஆதி அண்ணா வரட்டும். அப்ப தான் உங்களுக்கு பயம் வரும்”, என முகை உதட்டை சுழித்து காட்டிவிட்டு கயல் கூறிய வேலையைச் செய்யச் சென்றாள்.
“இளா….. யாத்ரா அப்பா அம்மா எப்ப வராங்க?”, தமிழன்பன்.
“அவ ஒரு கேஸ்ல கொஞ்சம் பிஸியா இருக்காப்பா. அதனால அவ வரமாட்டாப்பா…. இன்னிக்கு நைட் பிளைட்ல மதுரை வந்து நாளைக்கு காலைல வந்துடுவாங்க”, அர்ஜுன்.
“இளா…. இந்த வேலை நமக்கு அவசியமாப்பா? விட்டுட்டு நம்ம தொழில் பாருங்களேன் ரெண்டு பேரும்”, கயல் மீண்டும் தயக்கமாக கூறினார்.
“அம்மா….. நாம நிம்மதியா இருக்க காரணம் இவங்க எல்லாம் நம்ம நாட்ட பாதுகாக்கறதால தான். அவங்களே விடறேன்னு சொன்னாலும் நான் ஒத்துக்கமாட்டேன். இளாவும் யாத்ராவும் அந்த வேலைக்கு தான் போகணும்”, என கட்டளைபோல் கூறியபடி நம் ஆதித்ய கரிகாலன் உள்ளே வந்தான்.
“அப்பாடி…..”, என இளாவும், “அய்யய்யோ “,என கயலும் மனதில் நினைத்தனர்.
“இல்லப்பா…. நம்ம வீட்டுக்கு வர பொண்ணுக்கு எதுக்கு அந்த வேலை?”, கயல் மீண்டும் தன் பல்லவியை ஆரம்பித்தார்.
“யாத்ராவ சாதாரண பொண்ணா பாக்க நாங்க யாருமே விரும்ப மாட்டோம். அவ செய்யற வேலைய விட்டாலும் அதையே சம்பளம் இல்லாம புருஷனும், பொண்டாட்டியும் இங்க பண்ணுவாங்க…. அவங்க விருப்பம் போல விட்றுங்கம்மா… மருமகளா வர பொண்ணு நாட்டுக்கு வேலை செய்யறது பெருமையான விஷயம். அந்த பெருமை உங்களுக்கு கிடைச்சிருக்குன்னு சந்தோஷம் படுங்க. இதுக்கு மேல இதப்பத்தி பேசாதீங்க. இளா மதுரைல எங்க தங்கப்போறாங்க. இப்பவே கார் அனுப்பிடலாம்ல”, என அர்ஜுனை அழைத்துக்கொண்டு சென்றான் ஆதித்யா.
“என்னங்க இவனே இப்படி சொல்லிட்டு போறான்.. நீங்களாவது சொல்லுங்களேன். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வேலை நம்ம பசங்களுக்கு எதுக்கு?”, கயல் தமிழன்பன் அருகில் அமர்ந்து புலம்ப ஆரம்பித்தார்.
“கயல்….. நம்ம பசங்களுக்கு ஒன்னும் ஆகாது. வீட்டுக்கு ஒருத்தர நாட்ட காக்க அனுப்பணும். நாம சொல்லாமலே நம்ம பையன் போனான். நம்ம மருமக பொண்ணும் காக்கற வேலை தான் பாக்கறா. இரண்டு பேரும் நல்ல நிலைல இருக்காங்க அவங்கள அவங்க போக்குல விடு. இது நம்ம கடமைம்மா…. நீ போய் மாப்பிள்ளைக்கு சாப்பாடு ரெடி பண்ணு போ”, என சமாதானம் செய்து அனுப்பினார் தமிழன்பன்.
அர்ஜுனின் வேலைப் பற்றி தெரிந்ததில் இருந்து ஆரம்பித்த புலம்பல் இன்னும் முடியவில்லை. சராசரி தாயாக அவரின் மனம் பயந்தது பிள்ளைகளுக்கு வரும் ஆபத்தை நினைத்து…
அன்று மாலையே ஆதி காரை அனுப்பி யாத்ராவின் தாய் தந்தையை வரவேற்று மதுரையில் தங்கவைத்து, அடுத்த நாள் காலை வீட்டிற்கு அழைத்து வரவேண்டும் என டிரைவரிடம் கூறி அனுப்பிவிட்டான்.
அம்புவி புறப்பட்ட தனஜ்ஜெயரும், ஆருத்ராவும் ஊர் எல்லை வந்ததும் இறங்கி காவல் தெய்வமான கருப்பசாமியை வணங்கினர்.
ஆருத்ராவின் பாதம் மண்ணில் பட்டதும் பலமான இடியுடன் கூடிய மின்னலும் வந்து மழை பெய்ய ஆரம்பித்தது.
பலநூற்றாண்டுகள் எம்பெருமானை ஊருக்குள் அழைத்து வந்ததால் இயற்கையின் வரவேற்பாக எண்ண வைத்தது தர்மகர்த்தாவிற்கும் தனஜ்ஜெயருக்கும்.
ஆருத்ரா மட்டும் எதையும் சட்டை செய்யாமல் கருப்பசாமி வணங்கிவிட்டு அருகில் தெரிந்த குளத்தின் அருகில் சென்று, நின்று பெய்யும் மழை அங்கிருக்கும் நீரில் ஒன்றாக கலப்பதை ஒருவித இரசனையுடன் பார்த்துகொண்டு இருந்தாள்.
குடையுடன் வந்தவர்களை பார்வையாலேயே தூரம் நிறுத்திவிட்டு, மழை வலுக்கத்தொடங்கவும் காரில் அமர்ந்துக் கொண்டு ஜன்னல் வழியாக மண் வாசனையுடன், ஜவ்வாது கலந்த விபூதி வாசனையும் அவள் நாசியில் தெரிந்தது.
ஆழ்ந்த மூச்செடுத்துவிட்டு, “தனுப்பா நாம இங்க கடைசியா எப்ப வந்தோம்?”, எனக் கேட்டாள்.
“நீ பத்து வயசு குழந்தைம்மா இங்கிருந்து நாம போறப்ப”, என கண்களில் வேதனை மறைத்துக் கூறினார் ரணதேவ்.
“பதினைஞ்சு வருஷத்துல இந்த ஊரு மாறின மாதிரி தெரியலயே தனுப்பா…..”, இன்னும் பசுமையான வயல்வெளிகளும் தோப்பும் தொரவுமாக இருபக்கமும் செழிப்போடு இருப்பதைப் பார்த்தபடிக் கேட்டாள் ஆருத்ரா.
“மாறாதும்மா ….. எத்தனை வருஷம் ஆனாலும் இந்த ஊரு இப்படியே தான் இருக்கும்…. அது இந்த ஊருக்கு கிடைச்ச வரம்”, ரணதேவ்.
“வரமா? சாபமா? “, என ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டு இதழ் விரியாத மென்னகையில் மென்சோகமும் சேர்ந்தே விரிந்ததோ என எண்ணும்படி இருந்தது அவளின் முகபாவனை.
ரணதேவ் ஏதும் கூறாமல் அவளை ஒருமுறை பார்த்து அதே போல சிரித்துவிட்டு திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.