20 – காற்றின் நுண்ணுறவு
“சீனியர்…. எங்க போனீங்க? என்ன வேஷம் இது? ஆளே அடையாளம் தெரியல.. உங்க வாய்ஸ் வச்சி தான் உங்கள கண்டுபிடிச்சேன்”, என பாலா அவன் அருகில் வந்து விசாரித்தாள்.
“தேவைபடறப்ப வேஷம் போட்டு தான் ஆகணும்…. வல்லகி எப்படி இருக்க? உடம்பு பரவால்லயா?”, என அக்கறையுடன் விசாரித்தான்.
“நல்லா இருக்கேன் மிஸ்டர் தர்மதீரன். சுதாகர் சார் எப்படி இருக்காரு…. உங்கள வேலைய விட்டு தூக்கிட்டதா யாழினியன் சொன்னாரு… என்ன பண்றீங்க? இப்ப எங்க இருக்கீங்க?”, வல்லகி அவனை அமரச்சொல்லிவிட்டு கேள்வி கேட்டாள்.
“நான் ஆஸ்பத்திரில இருந்தப்ப தம்பி தான்மா அப்பாவுக்கு உதவியா இருந்தாரு …. போலீஸ் கம்ப்ளையண்ட் குடுக்க போனப்ப அவங்க எடுக்கமுடியாதுன்னு சொல்லிட்டாங்க… இவர் ரகளை பண்ணவும் இவர உள்ள வைக்க முயற்சி பண்ணப்ப, தம்பி தான் வந்து அதை தடுத்தாரு… அதுக்கப்பறம் நிறைய உதவி பண்ணிட்டு தான் இருக்காரு…. “, நிலவரசி தர்மதீரனை நன்றியுரைக்கும் பார்வைப் பார்த்து அனைத்தும் கூறினார்.
“இதுலாம் எங்க வேலைம்மா…. உங்களுக்கு உடம்பு பரவால்லயா?”, தர்மதீரன்.
“நல்லா இருக்கேன்ப்பா…. வல்லா… தம்பிக்கு டீ போட்டு கொண்டு வா”, என அவளை அனுப்பிவிட்டு பாலாவை மதிய உணவு பரிமாற ஏற்பாடு செய்யும்படி அனுப்பிவிட்டு தர்மதீரன் கைகளில் எதையோ கொடுத்தார்.
அதை அவனும் தன் கோட்டின் உள்ளே வைத்துக்கொண்டான்.
பிறைசூடன், “ஓவியா…. வல்லகிக்கு சரியான முறைல அவ உடம்புல, ஏதோ ரணசிகிச்சை இல்லைன்னா பதப்படுத்தப்படற சிகிச்சை நடந்திருக்கு… அதான் உடம்பு இந்தளவுக்கு முன்னேறி இருக்கு… அவளால காத்துல இருக்கற நினைவுகளை படிக்க முடியுது… இது சாதாரணமான விஷயம் இல்ல… இதுக்கான ஆரம்பகட்ட ஆராய்ச்சி பலமுறை தோற்றுப் போய் இருக்கு… இன்னமும் உலகம் முழுக்க முயற்சி செஞ்சிட்டு தான் இருக்காங்க…ஆனா வல்லகியால கொஞ்சம் கொஞ்சமா அதை படிக்க முடியுது… காட்சிகளுமே கண்ணுக்கு தெரியுதுன்னு சொல்றது தான் இதுல உச்சகட்ட பிரமிப்பு …. “
“இதனால வல்லகி வாழ்க்கை எதாவது?”, என கேட்கத் தயங்கி அமைதியானார் தமிழோவியன்.
“பயிற்சி எடுத்துகிட்டா அவளால சகஜமா இருக்க முடியும் ஓவியா…. தவிர இதனால அவ மூளை நரம்பு மண்டலம் எதுவும் குழம்பல… எல்லாமே சரியா தான் வேலை செய்யுது. அதுகூட ஒரு அப்டேஷன் நடந்திருக்கு அவ்வளவு தான்… அது யார் பண்ணான்னு தான் தெரியல… ஆனா….. சரி… அவள இன்னும் நிறைய டெஸ்ட் பண்ணணும்… அவளுக்கு அவளுக்குள்ள ஏற்பட்ற மாற்றங்களை கையாள பயிற்சி குடுத்து அவளை அவளே தடுமாற்றம் இல்லாம இயக்க வைக்கனும்… இது தான் நம்மலால இப்ப பண்ணமுடியும்…. “, எனக் கூறி நிறுத்தினார்.
தமிழோவியன் குழப்பமும் பயமும் கலக்கமும் கலந்த நிலையில் பிறைசூடனைப் பார்த்தார்.
“ஓவியா… அவ எனக்கும் பொண்ணு தான். அவள பத்தின தகவல் எதுவும் எப்பவும் வெளியே போகாது .. அவளோட வாழ்க்கைய அவ வாழ எந்த தடையும் வராம பாத்துக்கறது நம்ம பொறுப்பு …. அதுல என் பங்கு அதிகமாவே இருக்கும்…. அவ சோதனை எலியா இருக்க மாட்டா டா…. என்னை நம்பு”,என தைரியம் கூறினார்.
“உங்கள நம்பி தான்யா உங்கள கூப்பிட்டேன். ஆனா என் பொண்ணுங்க இரண்டு பேருமே சிறப்பானவங்களா இருக்கணும்னு நினைச்சி தான் ஒருசில விஷயங்களை நான் செய்துகிட்டேன். அவங்க வளர வளர அவங்கள கண்காணிச்சிகிட்டே தான் வரேன். ஆனா அவங்க ஆசையும் கனவுகளையும் நான் கலைக்க விரும்பல… மத்தவங்கள விட அவங்களோட செயல்பாடும், திறமையும் பத்து சதவீதம் கூட இருந்தா அவங்க பெருசா சாதிப்பாங்கன்னு நினைச்சேன். ஆனா அதனாலயே இவங்களுக்கு இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலைகள் வரும்னு நான் எதிர்பாக்கலய்யா…. அரசிக்கு எல்லாம் தெரிஞ்சும் அவ என்னை எதுவும் கேள்வி கேக்கல…அவ என்னை அவ்வளவு நம்புறா… நான் பொண்ணுங்களுக்கு கெட்டது பண்ணி இருக்க மாட்டேன்னு நினைக்கறா .. ஆனா எனக்கு உறுத்தல் இருந்துகிட்டே இருக்கு… “, மனதில் அழுத்திய பாரத்தைக் கண்ணீர் வழியாகவும், வார்த்தை வழியாகவும் சிறிது வெளியேற்றினார் தமிழோவியன்.
“ஓவியா…. வாழ்க்கைல நாம எது மேல பிடிப்பு அதிகமா வைக்கறமோ அதுல தான் சோதனையும் வரும். அது தான் நியதி… இந்த சோதனைல உன் பொண்ணுங்க ஜெயிச்சி வர நம்மலால முடிஞ்ச உதவிய பண்ணலாம். உன் மூத்த பொண்ணோட ரிப்போர்ட் எங்க?”, எனக் கேட்டார்.
வல்லகியின் இந்த மாற்றத்திற்கு முந்திய ரிப்போர்ட்டுடன் நாச்சியாவின் ரிப்போர்ட்டும் சிறிய அளவு வித்தியாசத்துடன் தான் இருந்தது.
நடுவில் வல்லகிக்கு கொடுத்த உடல்நிலை மாற்றம் நாச்சியாருக்கு நிகழாததால் அவளுக்கு எவ்வித மாற்றங்களும் ஏற்படவில்லை.
“ஓவியா…. நாம கெளம்பலாம் தானே… அந்த டிடெக்டீவ் சொல்றது போல நீங்க இங்க இருக்கணுமா?”, பிறைசூடன்.
“ஆமாங்க ஐயா.. நீங்க வல்லகிய கூட்டிட்டு கிளம்புங்க… நாச்சியா எதாவது எங்களுக்கு தகவல் கொடுக்க முயற்சி பண்ணா அவ எங்க இருக்கான்னு தெரிய வாய்ப்பிருக்குங்கய்யா….”, தந்தையின் தவிப்பும் பதற்றமும் நன்றாகப் புரிந்தது.
“சரி.. அந்த சின்ன வாலு பொண்ணையும் கூட்டிட்டு போறேன். அவங்க அப்பா அம்மாகிட்ட சொல்லிடு…. “,என எழுந்தார்.
“சாப்பிட்டு போலாங்கய்யா… எல்லாம் தயாரா தான் இருக்கு”, என தமிழோவியன் சாப்பிட ஏற்பாடு செய்யக் கிளம்பினார்.
பிறைசூடன் எதையோ நினைத்து நீண்ட மூச்சொன்றை வெளியேற்றிவிட்டு வெளியே வந்தார்.
வல்லகியும் பாலாவும் எல்லாருக்கும் பரிமாறிக்கொண்டு இருந்தனர்.
அப்போது நிரல்யன் தமிழோவியனின் அலைபேசிக்கு அழைத்தான்.
“ஹலோ… நான் டாக்டர் நிரல்யன் பேசறேன்… இப்ப உங்ககிட்ட பேசலாமா?”.
“ஹலோ டாக்டர்… நான் வல்லகி பேசறேன். அப்பா சாப்டுட்டு இருக்காரு… கொஞ்சம் வையிட் பண்ணுங்க அவர் வந்ததும் கூப்பிட சொல்றேன்…”
“பரவால்ல…. பொறுமையா வரட்டும்… உங்களுக்கு உடம்பு எப்படி இருக்கு வல்லகி? மூச்சு திணறல் மறுபடியும் வந்ததா?”, எனக் கேட்டான்.
“மூச்சு திணறல் வரல டாக்டர் ஆனா தலையெல்லாம் வலிக்க ஆரம்பிச்சது. தலை சுத்திச்சி… எமோஷன்ஸ் கன்ட்ரோல் பண்ண முடியல… டேப்லெட் போட்டதும் கொஞ்சம் அமைதி ஆனேன்… “.
“நீங்க எப்ப சென்னை வரீங்க… உங்கள இன்னொருத்தர் கிட்ட செக் பண்ணணும். அவர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிடவா? “, நிரல்யன்.
“யார பாக்கணும் டாக்டர்?”
“அவர் ஈ.என்.டில ரிசர்ச் பண்ணிட்டு இருக்காரு. காத்த நம்மலால படிக்க முடியுமா முடியாதாங்கற தலைப்புல, அவருக்கு நல்ல விஸ்டம் இருக்கு…. உங்க மத்த ரிப்போர்ட்ஸ் மதியம் தான் வந்தது… மொத்த ரிப்போர்ட்ஸ்ஸோட ஒரு காப்பி அவருக்கு அனுப்ப போறேன்”.
“அவர் பேரு….?”.
“மாமல்லன்”.
“ஒரு நிமிஷம் அப்பா வந்துட்டாரு “, என வல்லகி அலைபேசியை கொடுத்துவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.
“சொல்லுங்க நிரல்யன்… இப்ப ப்ரீ ஆகிட்டீங்களா?”, தமிழோவியன்.
“ப்ரீ தான் சார்…. மாமல்லன் கிட்ட உங்க பொண்ணோட ரிசல்ட்ஸ் காட்டப் போறேன். அவரு இதுல நிறைய ஆர்டிகள் எழுதி இருக்காரு. இப்ப ரிசர்ச்சும் பண்ணிட்டு இருக்காரு… அவர்கிட்ட காட்டினா நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும்ன்னு தோணுது”, நிரல்யன்.
“டாக்டர் நிரல்யன். என் பொண்ணு லேப் சப்ஜெட் இல்ல.. அவ அவளோட வாழ்க்கைய வாழணும்… அவள வச்சி ஆராய்ச்சி பண்றதுக்கு நான் எப்பவும் சம்மதிக்க மாட்டேன். இவள பத்தின எந்த தகவலும் அவர் வெளியே விடமாட்டாருங்கற உறுதி எனக்கு குடுத்தா தான் என் பொண்ண கூட்டிட்டு வருவேன்”, என கண்டிப்பானக் குரலில் கூறினார்.
“சரிங்க சார். அவர்கிட்ட முதல்ல இப்படி ஒரு கேஸ்ன்னு மட்டும் டிஸ்கஸ் பண்றேன். அப்பறம் நேர்ல பாக்கலாம். மத்த ரிப்போர்ட் உங்களுக்கு மெயில் பண்ணவா?”, நிரல்யன்.
“என் மெயில் ஐடி தரேன் … பண்ணிடுங்க டாக்டர். தேங்கஸ் பார் யூவர் கன்சர்ன்”, எனக் கூறி வைத்தார்.
“என்ன ஓவியா?”, பிறைசூடன் யோசனையாய் அமர்ந்திருந்தவரைப் பார்த்துக் கேட்டார்.
“மாமல்லன் கிட்ட போலாம்னு டாக்டர் சொல்றாரு”,எனக் கூறி திருப்தியின்மையுடன் பார்த்தார்.
“யாரு…. மாமல்லன்…..”,என யோசித்தவர் சட்டென நினைவு வந்து ,”அவனா…. அவன் மனுஷங்கள உயிராவே மதிக்கமாட்டான்னு கேள்வி பட்டிருக்கேன் ஓவியா… வேணாம்… நாமலே பாத்துக்கலாம்… அவனுக்கு ரிப்போர்ட் கூட அனுப்பவேணாம்… அப்பறம் விபரீதம் ஆகிடப்போகுது”, என அவசரமாகக் கூறினார்.
“இருங்க டாக்டருக்கு கால் பண்றேன்”, என அலைபேசியில் அழைக்க, பிஸி என்றே வந்தது.
இவருக்கு மெயில் வந்து பத்து நிமிடத்தில் நிரல்யன் தமிழோவியனை அழைத்து,” சார்…. மாமல்லன் நேர்ல பாக்கணும்னு சொல்றாரு… எப்ப வரீங்க?”, எனக் கேட்டான்.
“சாரி நிரல்யன்… மாமல்லன நாங்க பாக்கறதா இல்ல…. அவர் உயிராவே யாரையும் மதிக்கமாட்டருன்னு இப்பதான் கேள்விபட்டேன். என் பொண்ண நான் கஷ்டப்பட விடமாட்டேன். இதுக்கு மேல என் பொண்ண பத்தி யார்கிட்டயும் பேசாதீங்க … “, எனக் கூறி தமிழோவியன் வைத்துவிட்டார்.
நிரல்யன் இந்த பதிலை சற்றும் எதிர்பார்க்காததால் அதிர்ந்து அமர்ந்திருந்தான்.
“அண்ணா….. இந்தாங்க ஐஸ்க்ரீம்…. உங்க ட்ரீம் டாக்டர் கிட்ட பேசிட்டீங்களா? அவரு உங்கள பாக்க ஓக்கே சொல்லிட்டாரா? எப்ப பாக்க போறீங்க? அந்த பேஷண்ட் எப்ப வராங்க?”, என சாக்க்ஷி வரிசையாக கேள்விகள் தொடுத்தாள்.
“தெர்லம்மா….. அவங்க ஏதோ சொல்றாங்க… ஆனா நான் நாளைக்கு அவர பாக்க போறேன்…. “, என யோசனையுடன் மறுமொழி உரைத்துவிட்டு ஐஸ்கிரீம் சாப்பிட ஆரம்பித்தான்.
“என்ன சொல்றாங்கண்ணா?”
“ஒண்ணுமில்லடா… நீ சாப்பிட்டு போய் படி… எனக்கு கொஞ்ஞம் வேலை இருக்கு”, என எழுந்து தன் அறைக்குச் சென்றுவிட்டான்.
மாமல்லன் லேப்….
“ரித்விக்.. அந்த ஈ.என்.டி டாக்டர் பத்தி விசாரி… அந்த பேஷண்ட் பத்தின ஃபுல் டீடைல்ஸ் எனக்கு இரண்டு மணிநேரத்துல வேணும்… அந்த சப்ஜெட் ரொம்ப முக்கியம்… அதுக்கு எதுவும் ஆகாம பாத்துக்க ஆளுங்கள போடு… வேற யாருக்கும் அந்த சப்ஜெட் பத்தி தெரியவே கூடாது.. அந்த டாக்டர கூட போட்டு தள்ளிடு… இதுல நான் மட்டும் தான் பேர் புகழ் வாங்கணும். எவனும் வரக்கூடாது… புரியுதா?”, வல்லகியின் ரிப்போர்ட்களை கையில் வைத்தபடிக் கட்டளையிட்டது மாமல்லன் அன்றி வேறு யாராக இருக்க முடியும்…???
“டாக்டர்…. ஒரு சந்தேகம்….”, ரித்வித்.
“என்ன?”
“இந்த ரிப்போர்ட் மட்டும் வச்சி எப்படி நீங்க உங்க தீதிஸ் ப்ரூவ் ஆகும்னு நினைக்கறீங்க? அது இல்யூஷனா இருக்க கூட வாய்ப்பிருக்கே”, ரித்விக்.
“அந்த டாக்டர் நேர்ல அதை பாத்திருக்கான் கேட்டிருக்கான்”.
“அவன் ரொம்ப நாளா உங்கள பார்க்க ட்ரை பண்ணிட்டு இருக்கான். அவன் பொய் கூட சொல்லி இருக்கலாம்…. அந்த சப்ஜெட்அ அவனையே கூட்டிட்டு வர சொன்னதுக்கு இன்னும் அவன்கிட்ட இருந்து பதில் வரல…. “,ரித்வித் தயக்கத்துடன் கூறினான்.
“சரி.. நாளைக்கு அவன் சப்ஜெட்டோட வரலன்னா இங்கயே அவன போட ஏற்பாடு பண்ணு….. இல்ல இல்ல… இப்ப இருக்கற சப்ஜெட் எப்ப வேணா டெட் ஆகும். சோ அவன அடுத்த சப்ஜெட் ஆக்கிடலாம்… அதுக்கு ஏற்பாடு பண்ணிடு”, எனக் கூறிவிட்டு உள்ளறையில் சாய்ந்தவாக்கில் இருக்கும் இருக்கையில் அமர்ந்திருந்த வாலிபன் ஒருவனுக்கு எதோ மருந்து செலுத்திவிட்டு அடுத்தக் கட்ட சோதனைக்கு தயாராக ஆரம்பித்தான் அவன்.
ரித்வித் ஓர் வெறுப்பு பொங்கும் பார்வையைப் பார்த்துவிட்டு அங்கிருந்து வெளியேறி நிரல்யனுக்கு அழைத்தான்.
நிரல்யன் வருவதாக மட்டும் கூறி வைத்துவிட்டான்.
மாலை பிறைசூடனுடன், வல்லகியும் பாலாவும் கிளம்பினர்.
தர்மதீரன் அவர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் கவனித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
கிளம்பும் முன் வல்லகியிடம் வந்தவன்,” வல்லகி…. ஹாஸ்பிடல்ல உன்கிட்ட ஒரு பொருள் ஒருத்தன் வந்து குடுத்தான்ல அது எங்க?”, எனக் கேட்டான்.
“எந்த பொருள்?”, வல்லகி முகத்தில் எதுவும் காட்டாமல் கேட்டாள்.
“உன் அக்கா குடுத்துவிட்ட பொருள்… அது உன்கிட்ட தான் இருக்குன்னு எனக்கும் தெரியும்”, அழுத்தமாகக் கூறினான்.
“கீதன் அண்ணாவ பாத்தீங்களா?அக்கா எங்க இருக்காளாம்? “, என ஒருவித பரிதவிப்புடன் கேட்டாள்.
“இடம் மாத்திட்டாங்களாம்…. இப்ப எங்கன்னு தெரியல… ஆனா கூடிய சீக்கிரமே தெரியும்…. அது உன்கிட்டயே பத்திரமா இருக்கட்டும்… உன் உடம்ப பாத்துக்க… நான் கிளம்பறேன்… உங்க பாதுகாப்புக்கு கன் தரவா?”, தர்மதீரன்.
“என் வகிக்கு கன் எதுக்கு சீனியர்? அவ கைவச்சால அத்தனை பேரும் சுருண்டு விழுந்துடுவானுங்க”, பாலா சிரித்தபடி அருகில் வந்து நின்றாள்.
“எல்லாரும் வந்து இந்தான்னு கைல கால குடுக்கமாட்டாங்க… உங்களுக்கு ஏற்பாடு பண்றேன். சுட கத்துக்கோங்க… சார்கிட்ட சொல்லிட்டு போறேன்”, என பிறைசூடன் அருகில் சென்று இருவருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி அளிக்குமாறு கூறிவிட்டு, அனைவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.