21 – அகரநதி
அடுத்த நாளில் இருந்து அகரனும் சரணும் தங்களது அலுவலக பணியில் மும்முறமாகினர்.
நதியும் காலேஜ் ஹாஸ்டலில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற வேண்டிய ஏற்பாடுகள் செய்துக் கொண்டே பரிட்சைக்கு தயாராகிக் கொண்டு இருந்தாள்.
ஸ்டெல்லா ஹாஸ்டல் பணியை முடித்துக் கொண்டு பெற்றோர்களை, தாங்கள் தங்கி இருந்த வீட்டிற்கு அழைத்து வந்தாள்.
“ஸ்டெல்லா இவ்வளவு பெரிய வீட்லயா இருக்கப்போறீங்க?”, தாய் மேரி.
“ஆமாம்மா. இது ரிஸ் கட்டிக்க போறவரோட கெஸ்ட் ஹவுஸ்.. சும்மா தான் இருக்குன்னு அவங்க வீட்லயே எங்கள இங்க தங்க சொல்லிட்டாங்க. அடுத்த மாசத்துல இருந்து கம்பெனிக்கு போகணும் அதனால வெளியே தங்கினா தான் பரவால்லன்னு இங்க வந்துட்டோம்”, ஸ்டெல்லா.
“வாடகை ? சும்மா தங்க கூடாதுல்ல அவங்க சொன்னாலும்”, தந்தை ஜோசப்.
“வாடகை பணத்தை எனக்கு அனுப்பிடுங்க அப்பா”, எனக் கூறியபடி நதி வெளியே வந்து அவர்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றாள்.
“வாங்க அப்பா வாங்க அம்மா. குடிக்க ஜூஸ் கொண்டு வரேன்”, மீரா.
சஞ்சயும் திலீப்பும் அறையில் இருந்து வெளியே வந்து வரவேற்றனர்.
“உனக்கு எதுக்கு அனுப்ப சொன்ன பணத்தை?”, ஸ்டெல்லா நதியைப் பார்த்துக் கேட்டாள்.
“எதுக்கோ சொன்னேன். வரத ஏன் வேணாம்னு சொல்லணும்?”, நதியாள்.
“அப்பா அதுல்லாம் ஒன்னுமா வேணாம். ரிஸ் கோச்சிக்குவா அப்பறம்”, ஸ்டெல்லா.
“இல்லைம்மா. வீட்டு வேலைக்கு ஆட்களை எல்லாம் ஏற்பாடு செய்து குடுத்து இருக்காங்க. அவங்க வேணாம்னு சொன்னதால நாம அப்படியே விடக்கூடாது இல்லியா?”, ஜோசப்.
“அப்பா அதுல்லாம் வேணாம். நாங்க இந்த காலேஜ் சேர்ந்ததுல இருந்து ஒரே குடும்பமா பழகிட்டு இருக்கோம்.ரிஸ் மட்டும் இல்ல, ரிஸ்ஸோட ஹஸ்பண்ட்ம் கோச்சிப்பாங்க. பணம் எங்களுக்கு நடுவுல வரத நாங்க யாருமே விரும்பறது இல்ல”, சஞ்சய்.
“சரிப்பா. சங்கடம் வராமா இருந்துக்கோங்க. நீங்களும் இங்க தான் தங்கறீங்களா?”, ஜோசப்.
“ஆமாம்பா… நாங்க கீழ இரண்டு ரூம்ல இருக்கோம். இவங்க மூனு பேரும் மேல ரூம்ல தங்கிப்பாங்க. எந்த பயமும் இல்லை இங்க. வேலைக்கும் ஆட்கள் இருக்காங்க. சமையலுக்கு வேற மேல் செலவுக்கு தான் நாங்க பண்ணிக்கறோம். அதுவும் பிராஜெக்ட் பண்ண கம்பெனில சேர்ந்தா ஸ்டைபன் குடுக்க வாய்ப்பு இருக்கு. நீங்க சிரமம் படாதீங்க”, திலீப்.
“சரிப்பா. ஜாக்கிரதையா இருங்க. இந்த தெருவுல யாரும் வெளியே வரமாட்டாங்க போல. பொம்பள புள்ளைங்கள பத்திரமா பாத்துக்கோங்க. யாரும் தப்பா எதுவும் சொல்லிடக்கூடாது. சரியா?”, மேரி.
“சரிம்மா. நாங்க பாத்துக்கறோம். இப்ப யாளோட அண்ணனும் கஸினும் கூட இந்த ஊர்ல தான் இருக்காங்க அதனால தெரிஞ்ச ஆளுங்க இருக்காங்க பயம் இல்ல”, சஞ்சய்.
மீரா ஜூஸோடு வந்து அனைவருக்கும் கொடுத்தாள்.
“இன்னிக்கு தான்டா ஆம்பள பசங்கமாதிரி பொறுப்பா பேசி இருக்கீங்க”, ஸ்டெல்லா.
“ஏன் இத்தனை நாள் பேசலியா நடந்துக்கலியா?”, திலீப்.
“இல்லன்னு தானே சொல்றேன்”, ஸ்டெல்லா.
“உன்ன…”, திலீப் பல்லைக் கடித்தான்.
“ஸ்டெல்லா கம்முன்னு இரு. திலீப் அவ சொல்றத காதுல வாங்காத. ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களாப்பா?”, நதியாள்.
“எல்லாம் நல்லா இருக்காங்க மா. அப்பா எப்ப வராங்க இங்க?”, ஜோசப்.
“நாளைக்கு இல்லைன்னா நாளை மறுநாள் வந்துடுவாங்கப்பா”, நதியாள்.
“சரி. கம்பெனி பாத்துட்டீங்களா பிராஜெக்ட் பண்ண?”, ஜோசப்.
“என் அண்ணா கம்பெனில கேட்டு இருக்கேன்பா. இன்னும் எங்க சைட் பேப்பர் அனுப்பினப்பறம் தான். அவங்க யோசிச்சி சொல்றதா சொல்லி இருக்காங்க”, நதியாள்.
“சரி எல்லாரும் படிக்கறத நல்லபடியா செஞ்சி முன்னுக்கு வாங்க. படிச்ச படிப்பு வீணா போகக்கூடாது. நாம கிளம்பலாமாங்க?”, மேரி ஜோசபை கேட்டார்.
“ம்ம்… கிளம்பலாம். தினம் போன் பண்ணுங்க. சஞ்சய் திலீப் ஜாக்கிரதை. நதியாள் மீரா பத்திரமா இருங்க. அவள கடிவாளம் போட்டு உங்க கைல வச்சிகோங்க. ஊர் வம்பு இழுக்கக்கூடாது ஸ்டெல்லா”, ஜோசப்.
“டேய் நதியாள் கிட்ட கடிவாளம் குடுத்தா இரண்டும் ஊர வித்துட்டு தானே வரும்”, திலீப்.
“வாயமூடு. அப்பறம் உன்ன காலி பண்ணிடுவாங்க இரண்டு பேரும். நீ ஒளிய கூட முடியாது இங்க”, சஞ்சய் திலீப் காதைக் கடித்தான்.
“ஆமா. இதுக்கு தான் ஒரே வீடு வேணாம் சொன்னேன். கேட்டியா நீ? நாம மைக்கேல் வீட்டு மாடி ரூம் போய் இருக்காலாம்”, திலீப்.
“அம்மா அப்பா கிளம்பறாங்க அங்க பாரு”, சஞ்சய்.
“சரி நாங்க வரோம். எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க”, என ஜோசபும் மேரியும் வீட்டை விட்டு வெளியே வந்து, வாட்ச்மேன் மற்றும் அங்கு வேலை செய்பவர்களிடம் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும்படிச் சொல்லிக்கொண்டுச் சென்றனர்.
வீட்ல வேலை செய்யறவங்க கூட நம்ம வானரப்படை நல்லா பழகவும், அவங்களுக்கு இவங்க மேல பாசம் வந்துடிச்சி. அதனால வீடு எப்பவும் கலகலப்பா இருந்தது.
“மீரா…. மீரா….”, நதியாள்.
“என்னடி… ஏன் கத்தற?”, மீரா கேட்டுக்கொண்டே அவள் அறைக்கு வந்தாள்.
“என் பிளாக் சர்ட் எங்க?”,நதியாள்.
“நீ தான்டி ஊருக்கு கொண்டு போன. என்னை கேட்டா?”, மீரா.
“ஓ ஷிட்… ராதா….. இந்த சட்டையும் போச்சு”, எனத் தலையில் கைவைத்து அமர்ந்தாள் நதி.
ராதாவிற்கு முழு கருப்பு கலர் ஆடை அணிவது பிடிக்காது, குடும்பத்தில் பழக்கம் இல்லையென கூறி எடுக்கவிடமாட்டார். நதியாள் மீறி எடுத்தாலும் அதை அணிய விடாமல் அந்த ஆடையை தன்னிடம் எடுத்து வைத்துக் கொள்வார். இந்த முறையும் அதே நடந்தது.
“ஹாஹா…. அம்மாவுக்கும் உனக்கும் இந்த சண்டை முடியாது எப்பவும்”, மீரா சிரித்தபடிக் கூறி அமர்ந்தாள்.
“போடி. ஆசையா எடுத்தேன். ஊருக்கு வரப்ப போட்டுட்டு வரலாம்னு”, நதியாள்.
“விடு. நீயும் சொல் பேச்சு கேக்கறது இல்ல. கருப்பு வேணாம் சொன்னா விடறியா?”, மீரா.
“தாயே மீராதேவி நீ உன் சொற்பொழிவ ஆரம்பிக்காத. நான் கண்டிப்பா பிளாக் சர்ட் எடுத்தே தீருவேன். சரண் இருக்க பயமேன்”, எனச் சிரித்தபடி கூறினாள் நதி.
“சரண் அண்ணா மட்டும் பிளாக் கலர் எடுத்து குடுப்பாரா?”, மீரா.
“எடுத்து குடுத்து தான் ஆகணும். நான் கேக்கறப்ப எல்லாம், கேக்கறது எல்லாம்”, எனக் கண்ணைச் சிமிட்டிக் கூறினாள் நதி.
“யார் உன்கிட்ட மாட்டினது ?”, எனக் கேட்டபடி ஸ்டெல்லா வந்தாள்.
“சரணா தான்”, நதியாள்.
“ஏன் மிஸ்டர் அகரன் எடுத்து குடுக்கமாட்டாரா?”, ஸ்டெல்லா நதியாளிடம் அகரனைப் பற்றிய மனநிலை அறியக் கேட்டாள்.
“என் அகன் கிட்ட கேட்கவே வேணாம் கண் காட்டினா போதும் உடனே வாங்கி குடுப்பான். நாங்க ஸ்கூல் படிக்கறப்ப தினம் எதாவது வாங்கி குடுப்பான். பிரியாணி பரோட்டாலாம் அவங்க சாயந்திரம் வாங்கி சாப்பிடறப்ப, எனக்கு ஊட்டாம சாப்பிடமாட்டான். ஹீ இஸ் சோ ஸ்வீட்”, பழைய நினைவுகளில் கண்கள் மின்ன நதியாள் கூறினாள்.
“இன்னும் அதே மாதிரியா இருக்காங்க?”, ஸ்டெல்லா.
“ஆமா ஸ்டெல். திருவிழால கோவில்ல செய்யவேண்டிய வேலை எல்லாம் நானும் அகனும் தான் செஞ்சோம். ஸ்டில் ஹீ ஸ் சோ ஸ்வீட் அண்ட் கேரிங். பழைய நாட்களுக்கு போயிட்டு வந்த பீல் எனக்கு அகன் கூட. எதிர்பார்க்கவே இல்லை ஒன்னா இருக்க இப்படி ஒரு சந்தர்ப்பம் அமையும்னு “,நதியாள்.
“இன்னும் அவங்க அதே அன்போட தான் இருக்காங்களா யாள்?”, ஸ்டெல்லா.
இந்த கேள்வியில் மீரா ஸ்டெல்லாவைப் பார்த்தாள். ஸ்டெல்லா கண்களால் அமைதியாகக் கவனிக்கும்படி கூறி நதியாளைக் கண்டாள்.
“ஆமா ஸ்டெல். அந்த அன்பு குறையவே இல்லை. சரணும் அகனும் அலங்காரம் பண்ணி விட்டாங்க. ஹால்ல தூங்கின என்னை அகன் தூக்கிட்டு போய் அவன் ரூமில் படுக்க வைத்து போர்வை எல்லாம் போர்த்திவிட்டான். சரண் தேவ் கூட வேலை செய்யறப்போ எல்லாம் போயிட்டான். நானும் அகனும் தான் ஒன்னாவே இருந்தோம் திருவிழா முழுக்க”, நதியாளின் குரலில் அத்தனை உற்சாகம், அவனைப்பற்றி பேசப்பேச கண்கள் மின்னியது.
ஸ்டெல்லாவிற்கு ஒருவாராக விளங்க ஆரம்பித்தது. அந்த நேரம் சஞ்சையும் திலீப்பும் மேலே வர அனைவரும் மொட்டைமாடிக்கு சென்றனர்.
“யாள் அங்க எடுத்த போட்டோஸ் காமி”, ஸ்டெல்லா.
“இந்தா இந்த போல்டர் புல்லா அங்க எடுத்த போட்டோஸ் தான். நான் கீழ போய் சாப்பிட எதாவது எடுத்துட்டு வரேன்”, என மொபைலைக் கொடுத்துவிட்டுக் கீழேச் சென்றாள்.
“என்ன ஸ்டெல்? ஏன் அகரன் அண்ணாபத்தி விசாரிக்கற?”, மீரா.
“அவர் கண்ணு இங்க இருந்து கிளம்பற வரை யாள் மேல மட்டுமே இருந்தது மீரா. கள்ளத்தனம் இல்லை தான் ஆனாலும் எப்படி நடந்துக்கறாங்கன்னு தெரிஞ்சிக்கத்தான் கேட்டேன். இங்க பாரு இந்த போட்டோஸ் எல்லாம்”, என ஸ்டெல்லா சரண் அகன் நதி மூவரும் மாடியில் எடுத்த போட்டோஸைக் காட்டினாள்.
மீரா சஞ்சய் திலீப் மூவரும் அகரனின் பார்வை நதியை விட்டு விலகாமல் இருந்ததையும், அவன் கண்களில் காதல் வழிவதையும் கண்டனர்.
“ஸ்டெல்… அகன் அண்ணா”, மீரா.
“நதியாள லவ் பண்றாங்க ஆனா இன்னும் நதிகிட்ட சொல்லல போல. நானும் கவனிச்சேன் இங்க இருந்தப்ப “, சஞ்சய்.
“வாவ்… இரண்டு பேரும் நல்ல ஜோடி தான். அகரன் அண்ணா நதியாள கல்யாணம் பண்ணிகிட்டா நல்லா தான் இருக்கும்”, மீரா.
“ம்ம்…நதியாளுக்கு அந்த எண்ணம் இருக்கற மாதிரி தெரியலியே”, ஸ்டெல்லா.
“அகரன் சார் ப்ரபோஸ் பண்ணா நதியாளுக்கு அந்த எண்ணம் வரலாம்”, சஞ்சய்.
“இருக்கலாம். யாள் அவங்க இரண்டு பேர் கிட்டயும் நிறைய அன்பு வச்சி இருக்கா. அகரன் அண்ணா எப்ப ப்ரபோஸ் பண்ணுவாங்க பாக்கலாம் , அதுக்கப்பறம் தான் யாளோட மனசுல என்ன இருக்குன்னு தெரியும்”, மீரா.
“சரி நாம பிராஜெக்ட் பண்ண அங்க தானே போறோம். அங்க பாத்துக்கலாம்”, திலீப்.
“ம்ம்… அதுவரை நடக்கறதை கவனிக்கலாம்”, ஸ்டெல்லா.
“என்ன கவனிக்க போறீங்க எல்லாரும்?”, எனக் கேட்டபடி நதியாள் ஜூஸ் மற்றும் ஸ்நாக்ஸ் கொண்டு வந்தாள்.
“பிராஜெக்ட் பண்றதுல தான் கவனிச்சு பண்ணணும்னு சொல்லிட்டு இருந்தா. நாம எப்ப நம்ம பேப்பர்ஸ் டிசைன்ஸ் உங்க அண்ணாக்கு அனுப்பனும்?”, சஞ்சய்.
“ஆமா. இன்னிக்கு நாம ரெடி பண்ணிட்டு அகன் கிட்ட கேக்கலாம். அனுப்ப சொன்னா உடனே அனுப்பலாம் இல்லைன்னா நேர்ல போய் குடுத்துட்டு வரலாம்”, நதியாள்.
“சரி கேளு யாள். அவங்க ஆபீஸ்ஸ நாமலும் பாத்தமாதிரி இருக்கும்”, ஸ்டெல்லா.
“ஓகே. மொபைல் குடு”, நதியாள்.
“இந்தா”,என மீரா தன் மொபைல் கொடுத்தாள்.
நதியாள் வாங்கி அகனின் நம்பர் அழுத்தி அழைத்தாள்.
“அகரன் அண்ணா நம்பர் மொபைல் பாக்காம தெரியுமா யாள்?”, மீரா.
“ம்ம்…. ஒரு டைம் பாத்ததும் மனசுல பதிஞ்சிரிச்சு மீரா”, நதியாள்.
“எங்க நம்பர் பாக்காம சொல்லு”, திலீப்.
“அது…. இரு”, என தன் மொபைல் வாங்க முயற்சி செய்தாள் நதி.
“ஹேய்…பாக்காம சொல்லு..”, திலீப்.
“போடா நியாபகம் இல்ல”, என அகரனுடன் பேசச் சென்றுவிட்டாள்.
“ஹலோ அகன்…. பிஸியா இருக்கியா?”, நதியாள்.
“இல்ல நதிமா…. சொல்லு. வீடு எல்லாம் செட் ஆகிடிச்சா?”, அகரன்.
“ம்ம்…வீடு சூப்பர். ரொம்ப பிடிச்சி இருக்கு. நாங்க பிராஜெக்ட் பண்றதுக்கு பர்மிசன் லெட்டர் மத்த டிசைன் பேப்பர்லாம் எப்ப அனுப்பறது?”, நதியாள்.
“இந்த வீக் நாங்க கொஞ்சம் பிஸிடா. நீங்க அனுப்புங்க நானும் சரணும் ஒன் வீக்ல சொல்றோம்”, அகரன்.
“சரி. உன் ஆபீஸ் அட்ரஸ் அனுப்பு அகன். நேர்லயே குடுக்க வரேன்”, நதியாள்.
“சரண் உனக்கு குடுக்கலியா டா?”, அகரன்.
“இல்ல அகன்.ஏரியா நேம் மட்டும் சொன்னான்”, நதியாள்.
“சரி நான் அனுப்பறேன். நாளைக்கு வாங்க . இன்னிக்கு சைட் பாக்க வெளியே போறோம்”, அகரன்.
“ஓகே அகன். நாங்க ஆறு பேர் தான். சோ உன் கம்பெனினா ஒன்னா கத்துப்போம் , இருப்போம்”, நதியாள்.
“நம்ம கம்பெனி நதிமா. ஆறு பேர் தான் பைனல் அகைன் இன்னும் ஒருத்தர் இரண்டு பேருன்னு கேக்கக்கூடாது. சரியா?”, அகரன்.
“ஓகே. இது பைனல்”, நதியாள்.
“சரி நாளைக்கு மீட் பண்ணலாம் நதிமா. டேக் கேர். இப்ப மீட்டிங் இருக்கு. அப்பறம் பேசறேன்”,அகரன் கூறி வைத்துவிட்டான்.
அகரனுக்கு மனதிற்குள் சந்தோஷம் பொங்க ஆரம்பித்தது. நதியாளின் நினைவில் இருந்தவன் அவளே அழைத்து இப்பொழுது பேசவும் உற்சாகம் ஊற்றாய் பெருகியது.
“அகர்… டேய் அகர்…”, என சரண் பின்னிருந்து அழைத்தான்.
அகரன் அமைதியாக இருக்கவும் அருகில் வந்து முதுகில் தட்டி அழைத்தான்.
“டேய்… கூப்டுகிட்டே இருக்கேன் எங்கடா இருக்கு உன் நினைப்பு ?”, சரண்.
“நதி கிட்ட டா”, அகரன்.
“ஸ்ஸ்சப்பபாஆஆஆஆ…. முடியல டா உன்ன வச்சிட்டு. சீக்கிரம் கல்யாணம் பண்ணிகிட்டு இரண்டு பேரும் என்னமோ பண்ணுங்க. இப்ப வேலைய பாக்கலாம் வா”,சரண்.
“டேய்… நதிக்கு நிறைய கனவு இருக்கு. அதுல முக்கியமானது சுயமா நிக்கணும்ங்கிறது. அத அவ பண்ணப்பறம் தான் கல்யாணம் அதுவரை அந்த பேச்சு எடுக்க கூடாது. காதல் காலம் முழுக்க பண்ணுவேன். இப்ப தான்டா நான் உணர்ந்து அந்த பீல்ல என்ஜாய் பண்ணிட்டு இருக்கேன். அவள நினைச்சிட்டு இருந்தப்ப அவ கால் பண்ணதும் ரொம்ப ஹேப்பி ஆகிட்டேன். அதான் நீ கூப்டத கவனிக்கல”, அகரன்.
“பார்ரா…இந்த அளவுக்கு நல்லவனா நீ? இப்ப மீட்டிங்கு டைம் ஆச்சி கிளம்பு”, சரண்.
“நதிய நாளைக்கு ஆபீஸ் வர சொல்லி இருக்கேன். அவங்க கேங் ஆறு பேர் மட்டும் பிராஜெக்ட் பண்றாங்க இங்க. அவங்களுக்கு எல்லாம் வர்க் பிரிச்சி குடுத்து வேலை வாங்கணும். அவங்க இங்கிருந்து போறப்ப ஓரளவு கத்துகிட்டு தான் வெளியே போகணும்”, அகரன்.
“சரி ஸ்வப்னா கிட்ட சொல்லிடறேன். இன்டீரியர் அவங்கள ட்ரையல் டிசைன் பண்ண சொல்லலாம்ல அந்த ஹோட்டலுக்கு?”, சரண்.
“அது கொஞ்சம் ரிஸ்க் தான். பட் டிரையல் குடுக்கலாம். அவங்க மேஜர்ல ட்ரை பண்ண சான்ஸ் குடுத்தா நல்லது தான்”, அகரன்.
“சரி. வா. கிளைண்ட் வந்துட்டாங்க”, சரணும் அகரனும் மீட்டிங் அறைக்குச் சென்றனர்.
இங்கே நதியாள் அகரனிடம் பேசிவிட்டு தன் நண்பர்களிடமும் தோழிகளிடமும் நாளை அகரன் அலுவலகம் செல்ல வேண்டும் எனக் கூறி அதற்கான பேப்பர், டிபார்ட்மெண்டில் கொடுக்க வேண்டிய பேப்பர் எல்லாம் தயார் செய்தனர்.
தாங்கள் ஏற்கனவே செய்த டிசைன்ஸ், கிளாஸ் ஆக்டீவிட்டீஸ் ல் வரைந்த அனைத்தும் எடுத்து வைத்தனர்.
“ஹே யாள்… அகரன் சார் ஓகே சொல்லிட்டாரா?”, சஞ்சய்.
“ம்ம்…ஆறு பேர் தான் அதுக்கு மேல முடியாதுன்னு சொல்லிட்டான். நானும் சரின்னு சொல்லிட்டேன். நம்ம ஆறு பேரும் ஒரே கம்பெனில. பிராஜெக்ட் டைட்டில் மட்டும் அவங்க தான் பைனலைஸ் பண்ணுவாங்க. நாம நாலஞ்சு டைட்டில் பிக் பண்ணி வச்சிக்கணும்”, நதியாள்.
“சரி. அப்படின்னா எக்ஸாம் முடிஞ்சதும் ஜாயின் பண்ணிக்கலாம். ஸ்டைபன் குடுப்பாங்க தானே?”, திலீப்.
“தெரியல திலீப். பேசிக்கலாம். குடுப்பாங்கன்னு தான் நினைக்கறேன்”, நதியாள் யோசனையுடன் கூறினாள்.
“சரி . அப்பா நாளைக்கு தானே வராங்க?”, மீரா.
“ஆமா. அப்பா கார்ல தான் வருவாங்க அவர் கூடவே போயிடலாம் அவரும் ஆபீஸ்ஸ பாத்தமாதிரி இருக்கும்”, நதியாள்.
“சரி. வாங்க கீழ போலாம். இன்னும் நாலு நாள்ல எக்ஸாம். வச்சி இருக்கற அரியர் எல்லாம் இந்த தடவை க்ளியர் பண்ணிடணும்”, ஸ்டெல்லா.
“நீ பேப்பர் குடுத்தா நாங்க பாஸ் ஆகிடுவோம். எல்லாரும் ஒரே ஹால் தானே வருவோம்?”, திலீப்.
“இந்த வருஷம் பர்ஸ்ட் இயர்ஸ் வந்துடுவாங்க நமக்கு நடுவுல. பாக்கலாம். பட் க்ளியர் பண்ணா தான் பிராஜெக்ட் மார்க் வரும்”, நதியாள்.
“இவனுக்கு புக் குடுத்தாலும் பையில் தான் ஆவான் யாள். அகரன் சார் கிட்ட சொல்லி அவங்க ஆபீஸ்ல ப்யூன் வேலை வாங்கி குடுத்துடு அதாவது வருமானம் வரும்”, ஸ்டெல்லா.
“ஹேய்… ஓவரா பேசற ஸ்டெல். வாய் இருக்காது அப்பறம்”, திலீப்.
“உண்மைய சொன்னா கோவம் வருதா? போன செம்ல என் பேப்பர் குடுத்தேன்ல பாத்து தானே எழுதின எப்படி அரியர் வந்துச்சி?”, ஸ்டெல்லா.
“அது நான் தூங்கிட்டேன். லாஸ்டா தான் உன்கிட்ட பேப்பர் வாங்கி எழுத எழுத டைம் முடிஞ்சி போச்சி”, திலீப்.
“நீ இப்படி பண்ணா அவ அப்படி தான் திட்டுவா”, சஞ்சய்.
“பிட் கொண்டு போய் மாட்டிக்காதீங்க டா பர்ஸ்ட் இயர்ஸ் முன்னாடி மானம் போயிறும்”, மீரா.
“அதுல்லாம் கொண்டு போக மாட்டேன் மீரா. நீ தானே எனக்கு அப்பறம் வருவ. நீ இந்த தடவை என்னை தூங்கவிடாம எக்ஸாம் எழுத வச்சிடு போதும்”, திலீப்.
“மூஞ்சிலயே குத்துவேன் உன்ன. இவன் தூங்காம எக்ஸாம் எழுத நான் உனக்கு எழுப்பிவிட்டுட்டு பேப்பர் வேற குடுக்கணுமா? நான் எப்ப எழுதறது? நான் பாட்டுக்கு எழுதுவேன் நீ முழிச்சிட்டு இருந்தா பேப்பர் வாங்கி எழுது இல்லையா ப்யூன் வேலைக்கு நான் கூட அகரன் அண்ணா கிட்ட சிபாரிசு பண்றேன்”, மீரா.
“மீரா…இந்த கேங்லயே நீதான் அமைதியான பொண்ணுன்னு நினைச்சேன். நீயுமா இப்படி?”, திலீப் சிவாஜி போல எக்ஸ்பிரஸன் கொடுத்து அழுவதைப் போல முகத்தை வைத்தான்.
“சகிக்கல. வாங்க கீழ போலாம்”, நதியாள்.
பின் அனைவரும் கீழே வந்து அவரவர் வேலையைக் கவனித்தனர்.
அடுத்த நாள் காலை கண்ணன் நதியாளை போனில் அழைத்தார்.
“நதிக்குட்டி. நான் வந்துட்டேன். நீ எங்க இருக்க?”, கண்ணன்.
“அப்பா நானும் காலேஜ் வந்துட்டு இருக்கேன் பத்து நிமிஷம் வையிட் பண்ணுங்க நானும் மீராவும் வந்துடறோம்”, நதியாள்.
“சரி பாத்து வாங்க டா”,எனக் கூறி அழைப்பை முடித்தார்.
சிறிது நேரத்தில் காலேஜின் உள்ளே வந்த நதியும் மீராவும் கண்ணன் அருகில் சென்றனர்.
“அப்பா….”, என நதியாள் அவரைக் கட்டிக்கொண்டாள்.
“வாடா. வா மீரா. எப்படி இருக்க?”, கண்ணன்.
“நான் நல்லா இருக்கேன் பா. நீங்க எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க?”, மீரா.
“நல்லா இருக்கேன் டா. அம்மா தான் உன்மேல கோவமா இருக்காங்க திருவிழாக்கு வரலன்னு. ஏன்டா வரல நீ?”,கண்ணன்.
“இங்க படிக்கற வேலை இருந்ததுப்பா. அங்க வந்தா ஊருக்கு போயிட்டு தான் காலேஜ் கிளம்ப முடியும் அப்பறம் பரிட்சை வந்துடும். அடுத்த திருவிழால பாத்துக்கலாம் பா”, மீரா.
“சரி. வாங்க இப்ப முதல் எங்க போகணும்?”, கண்ணன்.
“ஹாஸ்டல்ல நீங்க சைன் பண்ணணும் பா. அப்பறம் நாங்க பிரின்ஸி கிட்ட சைன் வாங்கிட்டு ஹாஸ்டல் வந்து கொஞ்சம் திங்ஸ் தான் இருக்கு அத எடுத்துட்டு நாங்க தங்கி இருக்கற வீட்டுக்கு போலாம் பா. அப்பறம் நாங்க பிராஜெக்ட் அகன் சரண் நடத்தர கம்பெனில தான் பண்ணப்போறோம். சாயந்திரம் அங்க போய் அவங்கள பாத்துட்டு தான் நீங்க ஊருக்கு கிளம்பணும்”, நதியாள்.
“சரி டா”, கண்ணன்.
பின் நதியும் மீராவும் மலமலவென்று தங்கள் வேலைகளை முடித்தனர்.
கண்ணன் அனைத்து தாள்களிலும் கையெழுத்திட்டதும் பொருட்களை எடுத்துக்கொண்டு, அவர்கள் தங்கி இருந்த இல்லத்திற்கு அழைத்து வந்தார்.
மதியம் ரிஸ்வானாவும் ஸ்டெல்லாவும் அங்குச் சாப்பாட்டைத் தயார் செய்திருந்தனர்.
சஞ்சயும் திலீப்பும் கண்ணனை தங்கள் அறைக்கு அழைத்து சென்று சற்று நேரம் ஓய்வெடுக்கக் கூறி பிரஸ் ஆக கூறினர்.
சிறிது நேர ஓய்விற்கு பின் கண்ணன் எழுந்து சாப்பிட வந்தார்.
இதற்கு நடுவில் மீராவும், நதியும் தங்களது பொருட்களை அறைகளில் வைத்து அனைத்தும் சரியாக இருக்கிறதா என ஒருமுறை சரிபார்த்துக் கொண்டனர். அனைத்து பொருட்களும் இருக்க நிம்மதியாக உணவருந்த வந்தனர்.
“என்னடா இவ்வளவு ஐட்டம்? கம்முன்னு ஹோட்டல்ல வாங்கி இருக்கலாம். எவ்வளவு சிரமம்?”, கண்ணன் ஸ்டெல்லாவையும் ரிஸ்வானாவையும் பார்த்துக் கேட்டார்.
“அதுல்லாம் ஒன்னும் சிரமம் இல்லப்பா. சமைக்கற அம்மா கூட வச்சிட்டு தானே செஞ்சோம். நான் பர்ஸ்ட் டைம் சமைச்சி இருக்கேன் சாப்பிட்டு பாத்து எப்படி இருக்குன்னு சொல்லுங்கப்பா”, ஸ்டெல்லா.
“அச்சோ அப்பா வேணாம். நாம ஹோட்டலே போய் சாப்டுக்கலாம். இத சாப்டு உடம்பு கெட்டா கஷ்டம்”, திலீப் அலறினான்.
“வாய மூடு. அப்பறம் உனக்கு தனியா ஸ்பெஷல் ஐட்டம் சாப்பிட வச்சிடுவேன். ரிஸ் நல்லா சமைப்பாப்பா. நான் இந்த ஒரு ஐட்டம் தான் செஞ்சேன். அவன் சொல்றத கேக்காதீங்க”, ஸ்டெல்லா.
“கம்முன்னு இருங்க இரண்டு பேரும் எப்ப பாரு சண்டை போட்டுகிட்டு. நீங்க சாப்பிடுங்கப்பா. போன தடவை பிரியாணி கேட்டீங்க. இன்னிக்கு செஞ்சி இருக்கேன். சாப்பிடுங்கப்பா”, ரிஸ்வானா.
“அவங்க சண்டை கடல் அலை மாதிரி ரிஸ் எப்பவும் ஓயாது”, எனக் கூறியபடி நதியும் அவளின் பின் மீராவும் வந்தனர்.
“ஆமா. பேசினா நமக்கு தான் எனர்ஜி வேஸ்ட். ரிஸ் வாசம் ஆள இழுக்குது. அண்ணாவ வர சொல்லு அவரும் உன் சமையல இன்னிக்கு டேஸ்ட் பண்ணுவாருல்ல”, மீரா.
“அவர் ஊர்ல இல்ல மீரா. நாளைக்கு தான் வருவாரு”, ரிஸ்.
“சரி வாங்க எல்லாரும் உக்காந்துக்கலாம். ஸ்டெல் சமையலம்மா மத்த ஆளுங்க எல்லாருக்கும் சாப்பாடு தனியா எடுத்து குடுத்துட்டியா?”, நதியாள்.
“எடுத்து வச்சிட்டேன் யாள்.அவங்க நாம சாப்பிட்ட அப்பறம் சாப்பிடறோம்னு சொல்லிட்டாங்க. தோட்ட வேலை செய்யற அண்ணா எங்கயோ வெளிய போய் இருக்காங்கலாம். அவங்க வந்தப்பறம் சேர்ந்து சாப்பிட்டுக்கறாங்களாம்”, ஸ்டெல்லா.
“சரி. உக்காரு. ரிஸ் இங்க உக்காரு. எல்லாரும் அப்படியே பரிமாறிக்கலாம்”,நதியாள்.
“என்னடா எல்லாருக்கும் பத்துமா இந்த ஐட்டம் எல்லாம்?”, கண்ணன்.
“எல்லாருக்கும் சேர்த்து தான் எடுப்போம் அப்பா. அவங்க ஐஞ்சு பேர் இருக்காங்க. அவங்கள விட்டுட்டு நாங்க மட்டும் சாப்பிட எங்களுக்கு இஷ்டம் இல்ல அதான் எடுக்கறத சேர்த்து எடுத்து செஞ்சிடுவோம். மிச்சம் ஆனாலும் அவங்க வீட்டுக்கு எடுத்துட்டு போக சொல்லிடுவோம்”, நதியாள்.
“அது தான் நல்ல பழக்கம் நதிக்குட்டி. நம்மகிட்ட வேலை செய்யறவங்களும் மனுசங்க தான்ங்கிற நினைப்பு இருந்தா போதும். இது ரிஸ்ஸோட வுட்பீ வீடு தானே?”, கண்ணன்.
“ஆமாப்பா. இது அவங்க கெஸ்ட் அவுஸ். வாடகை தான் வாங்கவே மாட்டேன்னு அந்த அண்ணா சொல்லிட்டாங்க. அதே மாதிரி இங்க வேலை செய்யறவங்க சம்பளம்ல ஒரு பகுதி அப்பறம் மத்த மேல் செலவு நாங்க பண்ணிக்கறோம்”, நதியாள்.
“பணம் தேவைபட்டா உடனே போன் பண்ணு டா அக்கவுண்ட்ல போட்டுவிடறேன். எப்படியும் செலவு அதிகம் ஆகும் இங்க”, கண்ணன்.
“சரிப்பா. எல்லாரும் ஷேர் பண்ணி தான் போட்டுக்கறோம். அதிகமா தேவைபட்டா கேக்கறேன் மத்தபடி எப்பவும் போல போடுங்க போதும்”, நதியாள்.
“சரி டா. எத்தனை மணிக்கு சரண் ஆபீஸ் போகணும்?”, கண்ணன்.
“நான் அகன்கிட்ட கேட்டு சொல்றேன் பா. அப்பா… நம்ம வீடு அகன் தானே அல்டர் பண்ணதா சொன்னீங்க?”, நதியாள்.
“ஆமாடா. அகரனும் சரணும் தான் பண்ணாங்க. சரண வச்சே நான் அப்ப முடிச்சிட்டேன். அகரன் ஒன்னு இரண்டு தடவை வந்ததோட சரி. நான் அவங்க ஆபீஸ் வந்தது இல்ல”, கண்ணன்.
“சரிப்பா. அங்க தான் பிராஜெக்ட் செய்யலாம்னு இருக்கோம். ஓகே தானே பா?”, நதியாள்.
“டபுல் ஓகே நதிகுட்டி. அகரனும் சரணும் நல்ல உழைப்பாளிங்க. நல்ல வித்தை தெரிஞ்சு வச்சி இருக்காங்க. அவங்க கிட்ட நீங்களும் நிறைய கத்துக்கலாம்”, கண்ணன்.
“சரிப்பா”,நதியாள்.
பின் அனைவரும் உண்டபின் நதியாள் அகரனைத் தொடர்புக் கொண்ட , பிறகு நான்கு மணி அளவில் அகரனின் ஆபீஸ் நோக்கிப் பயணித்தனர்.
“ஹலோ. நான் நதியாள். இந்த கம்பெனில பிராஜெக்ட் பண்ண பர்மிஷன் வாங்க வந்து இருக்கோம். மிஸ்டர் அகரன் அண்ட் சரண் சார மீட் பண்ணணும்”, நதியாள்.
“வையிட் பண்ணுங்க. நான் கூப்பிடறேன்”, ரிசப்ஷனிஸ்ட்.
அந்த பிரம்மாண்ட கட்டிடத்தில் நான்காவது தளத்தில் அகரனின் அலுவலகம் அமைந்து இருந்தது. அந்த தளத்தை அழகாக வடிவமைத்து இருந்தனர். தனித்தன்மையும், அழகும், கலைநயமும், புதுமையும் கலந்தக் கலவையாகக் காட்சியளித்தது.
அகரனும் சரணும் ஸ்வப்னாவிடம் எதையோ கூறிக்கொண்டே அறையில் இருந்து வெளியே வந்தனர்.
ஸ்டெல்லாவும், மீராவும், நதியை அழைத்துக் காட்ட அங்கே அகரனைக் கண்ட நதியாளுக்கு மனதில் ஏதோ தடம் மாறியது. இதுநாள் வரை சிறுபிள்ளையென தனக்கு நிகராக தன்னுடன் பேசி விளையாடி, தன் சேட்டைகளை சகித்தவன், இங்கே பெரும் ஆளுமையுடனும், கண்களில் கண்டிப்பும், நடையில் கம்பீரமும் என முழுதாக வேறு ஒருவனாகத் தெரிந்தான்.
வெள்ளை சர்ட் நேவி புளூ கோர்ட் அதே நிறத்தில் பேண்ட் என ஆறடியில் ஆண்மகனாக இன்றே அவனை உணர்ந்துக் காண்கிறாள்.
ஊரில் திருவிழா சமையத்தில் வேஷ்டி சட்டையில் அவனுக்கு இருந்த கம்பீரம், அந்த சமயம் நதியின் மனதில் வந்து சென்றது.
இரண்டிலும் சிறிதும் கம்பீரமும், அழகும் ,வலிமையும் குறையவில்லை அகரனுக்கு. இத்தனை நாள் நாம் தான் சரியாக அவனைக் கவனிக்கவில்லையோ என்ற எண்ணம் வந்தது.
அகரன் ஆணழகன் தான். நதியாளுக்கு மனதில் இனம்புரியாத இன்பமும் இதமும் பரவியதைக் கட்டுபடுத்தமுடியவில்லை. இதுவரை எந்த ஆண்மகன் மீதும் வராத உணர்வு அவளின் அகன் மேல் வந்துவிட்டது…
அவளின் அகன் ….
அவள் அகம் கண்டுகொள்வானா?
தன் அகத்தை வெளிபடுத்துவானா?