21 – மீள்நுழை நெஞ்சே
“வில்ஸ்… உன் வீடு அழகா இருக்கு…. ரொம்ப சுத்தமாவும் இருக்கு…. எப்படி ஒரு பேட்சுலர் வீடு இவ்ளோ சுத்தமா இருக்கு?”, எனத் துவாரகா வியந்தபடிக் கேட்டாள்.
“அவனுக்கு சுத்தமா இல்லைன்னா அவ்வளவு தான். ஓசிடி இருக்கு…. சோ ரொம்பவே சுத்தம் பாப்பான்…”, இனியா சிரிப்புடன் கூறினாள்.
“அப்ப என் வீட்ட நீ தான் க்ளீன் பண்ணுவ வில்ஸ்”, எனத் துவாரகா சிரிப்புடன் கூறினாள்.
“நீ இப்படி கனவு காணு அவன் உன்னை பெண்ட் நிமித்திடுவான்…. வில்ஸ் காமன் ரெஸ்ட் ரூம் எங்க?”, என இனியா கேட்டாள்.
“அந்த பக்கம் இருக்கு…. அந்த ரூம்ல கூட நீங்க யூஸ் பண்ணிக்கலாம். என் தங்கச்சி ரூம் தான்…”, எனக் கூறிவிட்டு மூவருக்கும் குளிர்பானம் எடுக்க சமையலறைச் சென்றான்.
“வாவ்… கிட்சன் ஐலேண்ட்…. நல்லா இருக்கு வில்ஸ்…. “
“உன் வீட்லையும் தானே இருக்கு ராக்ஸ்… இன்னும் சொல்லப்போனா காம்பேக்ட்ஆ இருக்கு வீடு… இப்ப கொஞ்சம் எக்ஸ்டெண்ட் பண்ணி இருக்காங்க ….. “
“அப்படியா? சரி நமக்கு வசதியா இருந்தா சரி…. நாளைக்கு இருந்து கொஞ்சம் கொஞ்சமா திங்ஸ் இங்க கொண்டு வந்து வச்சிடறேன்…. வெஜ்ஜீஸ் மத்த திங்ஸ் எல்லாம் எங்க வாங்க போகணும்? அதுவும் சொன்னா ஓரளவு நான் மைண்ட்ல ப்ளான் பண்ணிப்பேன்”, துவாரகா அவனுக்கு டம்ளர் எடுத்து துணியால் துடைத்துவிட்டு கொடுத்தபடிக் கேட்டாள்.
“நான் கடைக்கு போறப்ப நீயும் வந்துடு ப்ராப்ளம் இல்ல… வீக்லி பர்சேஸ்க்கு வால்மார்ட் இருக்கு… ஏசியானால ஏசியன் ஐட்டம்ஸ் கிடைக்கும்…. வெஜ்ஜீஸ் எல்லாமே அங்க கிடைக்கும். பாலும் அங்க வாங்கி வச்சிக்கலாம். ஒரு வாரம் எக்ஸ்பைரி இருக்கு… மாச பொருள் வாங்கணும்னா காஸ்கோ போயிடலாம்… அங்க கொஞ்சம் பல்க்ஆ வாங்கறப்ப காஸ்ட் சேவ் ஆகும்…. உனக்கு எந்த மாதிரியான திங்ஸ் தேவைபடும்? அதுக்கு தகுந்த கடை இருக்கான்னும் நாம பாக்கலாம்…. “, இருவரும் மிகவும் சகஜமாக உரையாடியபடி வந்து ஹாலில் அமர்ந்தனர்.
“என்னப்பா ரெண்டு பேரும் நல்லா செட் ஆகிட்டீங்க போலவே…. என்னை டீல்ல விட்றாதீங்க “, இனியா இருவரும் அமர்ந்து நட்புடன் பேசுவதைப் பார்த்தபடிக் கூறினாள்.
“ஸ்வீட் இல்லாம இருக்க முடியுமா? சொல்லு ராக்ஸ் உனக்கு என்ன என்ன பிடிக்கும்? “, என வில்சன் கேட்டான்.
“எல்லாமே வில்ஸ்…தேவைக்கு தகுந்த செலக்சன் இருக்கும் அவ்வளவு தான்… மத்தபடி என் டேஸ்ட் கொஞ்சம் போர் தான் “
“அது நாங்க சொல்லணும் துவா… அடுத்த வாரம் நம்ம வில்ஸ்க்கு பர்த்டே வருது.. ட்ரெஸ் நீ செலக்ட் பண்ணு…. அதுல தெரிஞ்சிக்கறோம் “, என இனியா கூறினாள்.
“ஹோ ஸ்வீட்… நீ ஏன் இப்படி பண்ற? நான் பர்த்டே கொண்டாட போறது இல்ல “, என பதற்றமாகக் கூறினான்.
“ஏன்?”, துவா.
“என் பர்த்டே ட்ரெஸ் நீ நல்லா செலக்ட் பண்ணலண்ணா அவ்வளவு தான் ராக்ஸ்…. நீ நல்லா செலக்ட் பண்ணுவியா ? “, எனக் கேட்டான்.
“இதுக்காகவே நான் உனக்கு எப்படி செலக்ட் பண்றேன் பாரு வில்ஸ்… சரி வாங்க போகலாம்….”, என மூவரும் வீட்டில் இருந்து நடந்தபடிப் பேசிக்கொண்டே பேருந்து நிறுத்தம் வந்துச் சேர்ந்தனர்.
மதிய வேலையாதலால் அத்தனை கூட்டம் இல்லை. அருகிலேயே ஒரு மிருகங்களுக்கான பார்க் இருந்தது, அதில் பலவகையான நாய்கள் விளையாடிக் கொண்டு இருந்தது, அவ்விடத்தை இன்னும் ரசிக்கும்படியானதாக மாற்றியிருந்தது.
பேருந்து வந்ததும் அதன் தன்மையில் துவாரகா தன் நாட்டு பேருந்தை ஒரு முறை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டாள்.
இந்த மேம்படுத்தப்பட்ட சுத்தமான பேருந்து நம்மூரில் எப்போது வரும் என்ற எண்ணம் தோன்றாமல் இல்லை.
சென்னையில் இரண்டு ஆண்டுகளாக வசித்து இருந்தாலும், இந்த அமெரிக்க வாழ்க்கை முறை அவளுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்து இருந்தது.
நமது ஊரில் இருக்கும் ஆரோக்கியமான உணவு இங்கே கிடைப்பது அரிது. காய்கறிகள் முதல் பால் வரை எல்லாமே பதப்படுத்தப்பட்டு தான் கிடைக்கும்.
கறந்த பாலில் தண்ணீர் விடாமல் நாட்டு சர்க்கரையும், பனங்கற்கண்டு போட்டு குடிக்கும்போது கிடைக்கும் ஆரோக்கியம், இங்கே விருந்து வைத்தாலும் நிச்சயம் கிடைக்காது என்பதை முதல் பாடமாகப் புரிந்துக் கொண்டாள்.
இரண்டாவது அநேக விஷயங்களில் இருக்கும் அரசாங்க உத்தரவுகள், கண்டிப்பாக கடைபிடித்தே ஆகவேண்டும் என்கிற கண்டிப்பை உணரமுடிந்தது.
நமது நாட்டில் அந்த அளவிற்கு எதுவும் இல்லை. குற்றங்கள் அதிகரித்தால் மட்டுமே சில கோட்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. நம் நாட்டிற்கும் இந்த நாட்டிற்கும் இருக்கும் வித்தியாசங்களை மனதில் குறித்தபடியே பீனிக்ஸ் வந்து சேர்ந்தனர். அந்த மாகாணத்தில் ஒரு முக்கியமான நகரம் என்று கூறலாம்.
ரயில் நிலையங்கள் முதல் காபி ஷாப் வரை அனைத்திலும் ஒரு வித தனித்துவமும், கலையும் தெரிந்தது.
நடைப்பாதையோர கடைகள் அத்தனை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருந்தது துவாரகாவைக் கவர்ந்தது.
இயந்திரத் தனமான வாழ்க்கையில் உயிர்ப்பை பெற அனைவரும் போராடுவது போன்றதொரு பிரமையும் தோன்றியது.
“இங்க நாலு தியேட்டர் இருக்கு. இதுல இந்தியன் பிலிம்ஸ் ஷோ போடுவாங்க… அப்பறம் நாலு மாடிலையும் கடைங்க தான்… இரண்டாவது மாடி கடைசில கேம்ஸ் ஜோன் இருக்கு….”, வில்சன் தனக்குத் தெரிந்த விவரங்கள் கூறியபடி வந்தான்.
“கிட்ஸ்க்கு மட்டுமா?”
“நமக்கும் தான். ஆனா என்ட்ரி டிக்கெட் அப்பறம் ஒரு சில விளையாட்டுக்கு தனியா பணம் கட்டணும்….”
“வாங்களேன்… உள்ள போய் பாக்கலாம்….”, என சிறுகுழந்தைப் போல அழைத்தாள்.
“நம்ம ஆபீஸ் கார்ட் காமிச்சா இங்க ஃப்ரீ தான். ஒரு வாரம் கழிச்சி நீ எல்லாமே இங்க விளையாடலாம். இப்ப சும்மா ரவுண்ட்ஸ் வேணா போலாம்”, என வில்சன் கூறினான்.
“காய்ஸ்… நீங்க அங்க ரவுண்ட் அடிச்சிட்டு வாங்க… எனக்கு இங்க கொஞ்சம் பர்ச்சேஸ் இருக்கு… நான் அதை பாக்குறேன்… “, இனியா.
“சரி ஸ்வீட்டி நீ பாரு… ஒன்னா கிளம்பலாம் தானே… இல்ல நீ முன்னாடியே போகணுமா?”, துவாரகா.
“தெர்ல துவா…. “, என அசடு வழிந்தபடிக் கூறினாள்.
“இவ ஏன் இப்படி சிரிக்கிறா?”, துவா புரியாமல் கேட்டாள்.
“அவளோட லவ்வர் இங்க இருக்கான்… அவனோட அவ இப்ப போவா.. அதான் இந்த சிரிப்பு….”, வில்சனும் உதட்டிற்குள் புன்னகையை மறைத்தபடிக் கூறினான்.
“ஓஓஓ…. “, புருவங்களை உயர்த்தியபடி, “அதான் கிளம்பறதுக்கு முன்ன அவ்ளோ தடா போட்டியா? சாரி ஸ்வீட்டி இந்த விஷயத்துல நான் கொஞ்சம் மக்கு…. எனக்கு அப்ப புரியல.. இப்ப தான் புரியுது.. யூ கேரியான்…. “, என அவளை அணைத்துவிட்டு அனுப்பி வைத்தாள்.
இனியா இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு போனை காதில் வைத்தபடிச் சென்றாள்.
“அவ லவ்வர் யாரு? உனக்கு தெரியுமா? பாத்து இருக்கியா?”, என துவா வேகமாக நடந்து செல்லும் இனியாவைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“இல்ல…. அவளும் இன்ட்ரோ குடுத்தது இல்ல இப்ப வரை…. சரி வா நாம கேம்ஸ் ஜோன் போலாம்.. என்ன என்ன விளையாடுவ நீ?”, எனப் பேசியபடி இருவரும் அந்த பக்கம் சென்றனர்.
“பெருசா ஒன்னும் இல்ல வில்ஸ்… வீடியோ கேம்ஸ்ல ரேஸ், இல்லைன்னா டேபிள் டென்னிஸ், பேஸ்கட் பால், அப்பறம் நிறைய மினி கேம்ஸ் இருக்குமே அதுலாம் ட்ரை பண்ணலாம்”, எனக் கண்கள் விரிய கூறினாள்.
” உனக்கு கேம்ஸ் ரொம்ப பிடிக்குமா ராக்ஸ்?”
“பிடிக்கும் வில்ஸ்… இது மாதிரியான ஜோன்ல குட்டீஸ் க்கு நிறைய ஃபன் கேம்ஸ் வச்சிருப்பாங்க, அதுதான் ரொம்ப பிடிக்கும்”
“ஹாஹாஹா…. சில்லி லிட்டில் லேடி”, என வில்சன் சிரித்தபடி இரண்டாவது மாடிக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அந்த இடத்தை கண்டவள் சிறுகுழந்தையென அனைத்தையும் முயன்று பார்க்க வேண்டுமென்று அடம்பிடித்து, வில்சனையும் விளையாட வைத்து இரண்டு மணிநேரம் எப்படி போனது என்றே தெரியாத அளவிற்கு இருவரும் விளையாடிக் களைத்து வெளியே வந்தனர்.
“அப்பா…. பசிக்குதே….”, என அவள் வயிற்றைச் பிடித்ததும் வில்சன் பயந்து, “என்னாச்சி ராக்ஸ் வலிக்குதா? அடிபட்டுரிச்சா?”, என அக்கறையுடன் கேட்டான்.
“இல்ல இல்ல…. ஸ்டார்விங்(பசி) …. இங்க எதாவது சாப்பிட கிடைக்குமா? “
“அதுலாம் இருக்கு ஆனா ரேட் தான் அதிகமாக இருக்கும்…. மால் விட்டு வெளியே போனா எதிர்ல ஃபுல்லா சாப்பிடற ஐட்டம்ஸ் இருக்க கடைங்க தான்.. எங்க சாப்பிடலாம் உன் விருப்பம் தான்”, என கூறினான்.
“நீ இங்க வந்தா எங்க சாப்பிடுவ வில்ஸ்?”, என அவனைச் சந்தேகமாகப் பார்த்தபடிக் கேட்டாள்.
“நான் கைல காசு இருந்தா கே.எப்.சி போவேன் இல்லைன்னா வெளியே ரோட்டு கடைல சாப்டுவேன்….”, அவனும் அவள் முகபாவனைகளைப் பார்த்தபடிக் கூறினான்.
“ஓக்கே… வா ரோட்டு கடைக்கே போகலாம்… சம்பளம் வாங்கிட்டு கே.எப்.சி வரலாம்”, என இருவரும் பேசிச் சிரித்தபடி வெளியே வந்து வில்சன் வழக்கமாக சாப்பிடும் இடத்தில் சாப்பிட்டு விட்டு நடக்க ஆரம்பித்தனர்.
“உன் கூட டைம் போறதே தெரியல ராக்ஸ்… யூ ஆர் சச் எ டைம் கில்லிங் க்ரியேச்சர்(you are such a time killing creature) “, என அவளைப் பார்த்துக் கூறினான்.
“அடப்பாவி… நான் மனுஷி டா”
“நிச்சயமா நீ மனுஷி இல்ல…. உனக்கு எந்த கேட்டகிரியும் இப்பவரை கண்டுபிடிக்கல… எவ்ளோ பேசற… எவ்ளோ ஃபன்னியா இருக்க… ஆனாலும் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்க…. ஐ லைக் இட்”
“தேங்க்யூ டியர் வில்ஸ்… உனக்கு என் ஃபேமிலிய இன்ட்ரோ பண்ணவா?”
“இப்பவா?”
“ஆமா…”
“நான் ரெடியே ஆகல… அவங்கள பாக்கறப்ப நான் நீட்டா ரெடியாகி இருக்கணும். இப்ப வேணாம்… நீ வீட்டுக்கு வந்த அப்பறம் வீடியோ கால்ல பேசறேன். நீட்டா ட்ரெஸ் பண்ணி பக்கவா ரெடியாகிட்டு…”, எனத் தனது உடையைப் பார்த்தபடிக் கூறினான்.
“உன்ன என்ன மாப்ளயா பாக்க போறாங்க.. இதோ போட்டுட்டேன். வாடா”, என அவனை அருகில் அழைத்து அங்கிருந்த பெஞ்சில் அமரவைத்தாள்.
“அம்மாடி ராகா… எப்படி டா இருக்க? சாப்டியா? எங்க இருக்க? வீடு பாத்தியா?”, என அருணாச்சலம் கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
“வீடு பாத்துட்டேன் ப்பா… எனக்கு பிடிச்சிருக்கு அதனால அக்ரிமெண்ட்ல சைன் பண்ணிட்டேன். போட்டோ அனுப்பி இருந்தேனே பாத்தீங்களா?”
“பாத்தேன் டா…ரொம்ப சின்ன வீடா இருக்கு… அதுவே போதுமா?”
“ஒருத்திக்கு அது போதும் ப்பா…. இதோ இவன் தான் வில்சன்.. என் ப்ரெண்ட் அண்ட் கொலீக்… ஹாய் சொல்லு வில்ஸ்”, என வில்சன் முகம் தெரியும்படிப் போனைப் பிடித்தாள்.
“வணக்கம் அங்கிள்”, எனக் கிள்ளைத் தமிழில் ஆரம்பித்தான் வில்சன்.
“வணக்கம் தம்பி… நல்லா இருக்கீங்களா?”, என அருணாச்சலம் கேட்டதும் துவாரகா அவனுக்கு மொழிப் பெயர்த்தாள்.
இருவரும் சிறிது நேரம் துவாரகாவின் உதவியுடன் பேசினர்.
“போதும் ப்பா இதுக்கு மேல என்னால சப் டைட்டில் போட முடியாது. அம்மா எங்க?”, எனக் கேட்டாள்.
“அந்த பயலுக்கு தமிழ் சொல்லி குடு ராகா… அம்மா சித்திய பாக்க போனா இன்னும் வரல… எங்க ஊர் சுத்திட்டு இருக்கீங்க? அந்த புள்ள இனியா எங்க?”, எனக் கேட்டார்.
“அவளோட லவ்வர் கூப்பிட்டாருன்னு அவ கிளம்பிட்டா ப்பா.. நாங்க மூனு பேரும் ஒன்னா தான் வந்தோம். இங்க ஃபீனிக்ஸ்-ன்னு ஒரு ஊரு.. நாங்க இருக்க இடத்துக்கு பக்கத்துல தான் இருக்கு. இன்னிக்கு லீவு அதான் சுத்தி பாக்கலாம்னு வந்தோம். ஊர பத்தி நானும் கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் ல… “
“அதுவும் சரிதான். ஊர பத்தி நல்லா விவரம் பண்ணிக்க ராகா… அந்த வில்சன் வீடு உன் வீட்டுக்கு பக்கமா?”
“அவன் இருக்க அபார்ட்மெண்ட் தான் ப்பா… அவன் இரண்டாவது மாடி நான் மூனாவது மாடி… ஆபீஸும் அவன் கார்ல போயிடலாம்… ஒன்னும் பிரச்சன இல்ல….”
“சரி பாத்தா நல்ல பயலா தான் தெரியுது. சூதானமா இரு டா ம்மா… அடுத்து எங்க போறீங்க… “
“எதுவும் இன்னும் ஐடியா இல்லப்பா… பக்கத்துல எதாவது இடம் இருந்தா பாத்துட்டு கிளம்பிடுவோம். நான் ரூம் போயிட்டு கால் பண்றேன்… “
“சரிடா ராகா… பாத்து பத்திரமா பயணம் பண்ணுங்க…. நான் வச்சிடறேன்”, எனப் போனை வைத்தார்.
“போன உடனே வெள்ளக்காரன பிடிச்சிட்டாளா அவ? உனக்கு அறிமுகம் பண்ற அளவுக்கு விட்டு வச்சிருக்க அருணாச்சலம் “, எனக் கிழவி இடிக்க ஆரம்பித்தது.
“அம்மா….. அவ மனசுல கள்ளம் இல்ல.. அதான் எல்லாத்தையும் என்கிட்ட சொல்றா…. என்கிட்ட அறிமுகம் பண்ணதுல என்ன தப்பு? தனியா இருக்க புள்ள கூட இருக்கறவங்கள தெரிஞ்சிக்கறது சாதாரண விஷயம். எம்பொண்ணு நான் கவலைப்படக் கூடாதுன்னு எல்லா விவரமும் சொல்லி தான் பண்றா…. என் பொண்ண பத்தி இன்னொரு தடவ தப்பா பேசின நான் மனுஷனா இருக்க மாட்டேன் பாத்துக்க…. “, என தாயிடம் கத்திவிட்டு வெளியே சென்றார்.
“பாக்குறேன் பாக்குறேன் …. எந்த அளவுக்கு விவரம் சொல்லி எந்த நிலைக்கு அவ போவான்னு நானும் பாக்கத்தான்டா போறேன்…. என் பொண்ண அழ வச்சவ எப்படி நல்லா இருப்பான்னு பாக்கறேன்”, என வெத்தலையை இடித்தபடிக் கறுவியது கிழவி.