23 – காற்றின் நுண்ணுறவு
வல்லகியும் பாலாவும் சாப்பிட அமர்ந்தனர். அரைமணிநேரத்தில் இத்தனை வகைகள் சமைக்க முடியுமா என்று இருவரும் யோசித்தனர்.
“என்னடா பாத்துட்டே இருக்கீங்க..? சாப்டுங்க?”, பிறைசூடன் இருவருக்கும் பரிமாறியபடிக் கூறினார்.
“எப்படி பெரியப்பா அரை மணிநேரத்துல இத்தனை டிஷ் செஞ்சீங்க?”, பாலா.
“காலைலையே எல்லாம் மேரினேட் பண்ணிட்டேன். மீதி எல்லாம் ரோபோ பாத்துட்டு இருந்தது. நான் வந்ததும் பூஸ்ட் அப் செஞ்சி ரெடி பண்ணிட்டேன் அவ்வளவு தான். இதுலாம் நம்ம உடம்புக்கு தினமும் தேவைபடுற சத்துக்கள் இருக்கற உணவு வகைகள்… “, என கிட்டதட்ட பதினைந்து வெரைட்டி வைத்தார்.
“இத்தனையும் சாப்டா ஒரே வாரத்துல நான் பூசணிக்காய் மாதிரி ஆகிடுவேன் பெரியப்பா….”, பாலா ஆதங்கத்துடன் கூறினாள்.
“எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா தான் வச்சிருக்கேன். தவிர கார்போஹைட்ரேட் ரொம்பவே கம்மியா தான் குடுப்பேன். நீ இப்ப இருக்கறத விட ஒரு வாரத்துல ஒரு கிலோ குறைவ… வையிட் செக் பண்ணிக்கோ… “, பிறைசூடன்.
வல்லகி அனைத்து உணவுகளின் மணத்தையும் நாசியில் நுகர்ந்துக் கொண்டிருந்தாள்.
“பெரியப்பா…. சிக்கன்ல உப்பு கம்மியா இருக்கு…. பொன்னாங்கன்னி கீரை செம…. அந்த பாவக்காய் ரோஸ்ட் மசாலா கொஞ்சம் அதிகம்…”, என கண்கள் மூடிக் கூறிக்கொண்டு வந்தாள்.
“இது மூக்கா என்னாதிது ? மோந்து பாத்தாலே வயிறு நிறைஞ்சிடுமாடி உனக்கு?”, பாலா.
“பசி நல்லா எடுக்கும்… எடுத்து வை…. எல்லாத்தையும் ஒரு கை பாக்கறேன்…. பெரியப்பா இதுலாம் எனக்கும் கத்துக்குடுங்க…..”, எனக் கூறிவிட்டு இரண்டு மடங்கு உணவு அதிகமாக எடுத்துக்கொண்டாள் வல்லகி.
வல்லகியின் உணவு அளவு முதல் அவளின் அசைவுகள், தூக்கம், உடல் புத்துணர்ச்சியின் கால அளவு, மனம் புத்துணர்வு பெறும் சூழ்நிலைகள் என உடல் மட்டுமின்றி உள்ளமும் கண்காணிப்புக்குள் வந்தது.
வல்லகிக்குப் பெரிதாக எந்த சிரமும் ஏற்படவில்லை. முன்பை விட அவளின் ஆற்றல் இரண்டு மடங்கு அதிகமாகி இருந்தது.
இங்கு வந்து நான்கு நாட்களில் அவளின் உடல் மெலிந்திருந்தது , ஆனால் எழும்புகள் வைரமாக மாறிக்கொண்டிருந்தது. முகத்தில் பொலிவு கூடியது, சுத்தமான காற்று அங்கே சுற்றிலும் இருந்ததால் மூச்சு திணறல் ஏற்படவே இல்லை.
அங்கே காற்றை சுத்தம் செய்யும் செடிகள் நிறைய நட்டு வைத்திருந்தார் பிறை.
வல்லகி இருவர் செய்யும் வேலையை ஒருத்தியாக பாதி நேரத்தில் செய்யமுடிந்தது. அவளுக்குக் கொடுக்கும் ஒவ்வொரு பணியும் அவளுக்கு இடும் தீனியாக மாறி, அவளை மெறுகேற்றிக்கொண்டிருந்தது.
தனக்கு தெரிந்த விஷயங்களை இப்போது நன்றாக நுணுக்கங்களுடன் கற்றுக்கொண்டாள். தனக்குத் தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளவும் ஆரம்பித்திருந்தாள்.
பாலாவும் அவளுடன் சேர்ந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டதுடன், பிறைக்கு முழுநேர உதவியாளராக மாறி இருந்தாள். அவளின் ஆர்வம் கண்டு அவரும் அவளுக்கு ஆரம்ப பாடத்தில் இருந்து சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.
அந்த துறையை அவள் படிக்கவில்லை தான், ஆனால் அங்கிருக்கும் கணிணியில் வேலை செய்ய கற்றுக்கொண்டாள். அவளின் ஆர்வமும் விளையாட்டுத்தனமாக கேட்கும் விஷயங்களும், வல்லகியுடன் செய்யும் சேஷ்டைகளும் பிறைசூடனுக்கு மிகப்பெரும் ஆசுவாசமாக இருந்துப் புத்துணர்ச்சிக் கொடுத்தது.
காட்டில் டென்ட்டினை காலி செய்து அனைவரும் சிறு தொலைவு வரை வண்டியில் வந்தவர்கள் அதற்கு மேல் முன்னேற முடியாமல் அப்படியே நின்றனர்.
யோகேஷை தொடர்புக் கொண்டு சொல்லியும் எந்த முன்னேற்றமும் இன்றி இருந்தது. அங்கிருப்பவர்களைக் கண்காணித்து பத்திரமாக அழைத்து சென்று மற்றொரு இடத்தில் சேர்ப்பது என்பது மிகச் சிரமமாகவே தோன்றியது.
அதுவும் நடுகாட்டிற்குள் எந்த வித வசதியுமின்றி , அத்தனை பேருடன் அவர்கள் இதுநாள் வரைக் கண்டு பிடித்தது முதல் குறிப்பெடுத்த துண்டு காகிதம் கூட தவறக்கூடாதென ம்ரிதுள் கட்டளையிட்ட பின், அதை பாதுகாப்பதே பெரிதாக இருந்தது.
தவிர குழுவில் நான்கு பெண்கள், எட்டு ஆண்கள் என அனைவரும் எப்பொழுது தப்பிப்பதென தவித்துக்கொண்டிருப்பது நன்றாகவே புரிந்தது.
அந்த அடியாட்களின் தலைவன் ஜேம்ஸ், தனது உதவியாளனை அழைத்தான்.
“டேய் காசி…. அவனுங்க என்னதான் சொல்றானுங்க? இதுங்கள வச்சிட்டு நாம அத்தனையும் தூக்கிட்டு போறது சாத்தியமே இல்ல… எப்ப எவன் கம்பி நீட்டுவான்னு தெரியாது…. பொண்ணுங்க நாலும் எப்ப எத வச்சி நம்மல சொருவும்னு தெரியாது…. எதுக்கும் துணிஞ்சி நிக்கறாங்க அத்தனை பேரும். காட்டுக்குள்ளாறயே இவனுங்க எப்படி அந்த ஸ்டேட்க்கு கொண்டு போறது? ஆளுங்கள அனுப்ப சொன்னியா இல்லையா?”, காத்திருக்கும் எரிச்சலில் கேட்டான் ஜேம்ஸ்.
“சொல்லிட்டேன் … ஆளுங்கள அனுப்பறதா சொன்னாங்க. நடுவுல செக் போஸ்ட் தாண்டி தான் போயாகணுமாம்… அங்க தான் பிரச்சினைல நிக்கறாங்க…. ஊருக்குள்ள இதுங்கள கூட்டிட்டு போனா கண்டுபிடிக்கறது கஷ்டம். அத்தனையும் தப்பிச்சிடும்… “, காசி.
“ம்ம்…. நாலு நாளாச்சி காசி…. பொட்ட புள்ளைங்கள வச்சிகிட்டு கஷ்டமா இருக்குது… நேத்து நம்ம தடியன் பொண்ண தடவ போறான்… இவனுங்க மத்தில இதுங்கல எப்படி நாம பத்திரமா கொண்டு போவறது? அந்த மவராசன் பொண்ணுங்க மேல எவன் கையும் படக்கூடாதுன்னு சொல்லி இருக்கான். எவனாவது கைவச்சா நானே கொன்னாகணும் டா…. பசங்க கிட்ட சொல்லி வை. இன்னிக்கு வேட்டைக்கு யார் போயிருக்கா?”, அதிகபட்ச மன அழுத்தத்துடன் பேசினான் ஜேம்ஸ்.
“கூட்டிட்டு போயிடலாம்ண்ணா… நான் பசங்க கிட்ட சொல்றேன். அந்த விக்டர் குரூப் என்னாச்சின்னு தெர்ல ண்ணா…. நாம தான் அவங்கள கைகாட்டி விட்டோம். நம்மல இங்க உக்கார வச்சிட்டு அந்த விக்டர எங்க உக்கார வச்சிருக்காங்களோ தெர்ல… இவங்களுக்கெல்லாம் எப்படிண்ணா இவ்ளோ காசு வருது.. அச்சடிக்கற மிஷின திருடி வச்சிருப்பாங்களா? “, காசி அவர்களுக்கு மட்டுமே இப்போது செலவு செய்ய கொடுத்தப் பணத்தை வைத்துக் கேட்டான்.
“நம்ம வீட்ல அடுப்பு எரியுது. அதுவரைக்கும் நாம பாத்தா போதும். வேட்டைக்கு யார்டா போய் இருக்கா?”, மீண்டும் கேட்டான்.
“நம்ம பசங்க நாலு பேரோட அந்த பசங்கள்ல இரண்டு பேர இழுத்துட்டு போயிருக்காங்க. . தூக்கிட்டு வர ஆளு வேணும்னு”, காசி.
“ஏன்டா நம்ம ஆளுங்க இல்லையா…? எதுக்கு அந்த பசங்கள இழுத்துட்டு போவணும்?”, ஜேம்ஸ் கோபத்துடன் கேட்டான்.
“அண்ணா … நேத்தே நம்ம ஆளுங்க மூனு பேருக்கு அடிபட்றுச்சி… இங்க காவலுக்கு ஆள் பத்தாதுன்னு நான் தான் இழுத்துட்டு போவ சொன்னேன். கலகம் பண்றவன அனுப்பல… வாய் பேசாத பூச்சி இரண்டு இந்த கூட்டத்துல இருக்கு அதுங்கள தான் அனுப்பி இருக்கேன்”, காசி சமாதானம் கூறிவிட்டு காவல் காப்பவர்களை கண்காணிக்க நடக்க ஆரம்பித்தான்.
தூரத்தில் ஒலி ஒன்று வித்தியாசமாக கேட்டது. இளவெழிலி அதைக் கேட்டதும் இயற்கை அழைப்புக்கு ஒதுங்க வேண்டும் எனக் கூறி எழுந்தாள்.
அவளுடன் இன்னொரு பெண்ணும் எழுந்தாள். ஜேம்ஸ் காசிக்கு குரல் கொடுத்து முதலில் இடம் பார்த்துவிட்டு, பிறகு அவர்களை அனுப்பக் கூறினான்.
அதே போல காசி அந்த இடத்தை ஒரு முறை பார்த்துவிட்டுச் சற்று தூரத்தில் இருக்கும் பாறைக்கு அந்த பக்கம் ஒருவனை நிற்கவைத்துவிட்டுப் பெண்களை அனுப்பினான்.
இரண்டு இரண்டு பேராக தான் செல்ல வேண்டும் என முன்பே விதிகள் விதிக்கப்பட்டிருந்தது.
நாக் மரத்துடன் மரமாக யாருக்கும் தெரியாத படி கேமிப்ளேக் உடையணிந்து மரக்கிளைகளில் மறைந்து அமர்ந்திருந்தான்.
“நாக்…. நாக்….”, மெல்ல அழைத்தாள்.
“இளவெலிழி… இந்த பக்கம் வா… அங்கிருந்து பாத்தா நான் உன்கிட்ட பேசறது தெரியும்”, என அவளை மரத்தைச் சுற்றி சென்று நிற்கச் சொன்னான் .
“என்ன நாக்…? நாச்சியா எங்க இருக்கான்னு தெரிஞ்சதா?”, இளவெலிழி.
“இல்ல… ஆனா இவங்க போற வழில யாரோ இருக்காங்கன்னு பேசறத கேட்டேன். போலீஸ் இருக்க வாய்ப்பு அதிகம். இன்னும் கொஞ்ச தூரத்துல ஒரு செக் போஸ்ட் வரும். அத தாண்டி தான் போயாகணும். அங்க என்னமோ நடந்திருக்கு போல”, நாக் தனது சந்தேகத்தைக் கூறினான்.
“அப்ப நீ அவங்கள இங்க கூட்டிட்டு வரலாம்ல”
“அது யாருன்னு தெரியாம நான் எப்படி போய் பேசறது. இவன் ஆளுங்களா இருந்துட்டா இன்னும் கஷ்டம்”
“அதுவும் சரிதான். இன்னும் எத்தன நாளைக்கு இங்க இருக்கறது?”
“நாளைக்கு இருந்து மழை பெய்ய ஆரம்பிச்சிடும். நடுவுல ஐஞ்சு இடத்துல ஆறு போகுது… மழை வந்தா வெள்ளம் ஓடும்.… இன்னிக்கு இராத்திக்குள்ள நீங்க இங்கிருந்து போனா தான். ஆனா இதுக்கு மேல சமதளம் இல்ல… நாளைக்கு இராத்திக்குள்ள இங்க இருந்து கிளம்பலன்னா நீங்க எல்லாரும் தப்பிச்சிடுங்க…”, நாக்.
“வினோத் சம்மதிக்கமாட்டான்”, இளவெழிலி
“இப்ப தப்பிக்கலன்னா போற வழில இன்னும் கஷ்டப்படுவீங்க… உயிரோட போறதே பெருசு. நடுவுல கரடி, யானை, புலி, நடமாடுற இடம் எல்லாமே இனி வரும். இந்த காட்ல பாம்பும் அதிகம்”, இருக்கும் ஆபத்துக்களை வரிசையாக கூறினான்.
“நீ தைரியமா இருக்க எதாவது சொல்லுவன்னு பாத்தா இப்படி பயமுறுத்தற…. “, இளவெழிலி திட்டினாள்.
“இருக்கறத தானே நான் சொல்றேன்…. இன்னிக்கு உங்ககிட்ட இருக்கற ஆயுதத்த வச்சி தப்பிச்சி கிழக்கு பக்கம் தப்பிச்சி போயிடுங்க. அதுக்கப்பறம் பிரச்சினை இருக்காது”, நாக்.
“எங்கள பேசவே விடமாட்டேகறானுங்க இவனுங்க… பேசினா தானே ஒரு முடிவுக்கு வரமுடியும்”, தவிப்புடன் கூறினாள்.
“எதாவது செஞ்சி சீக்கிரம் பேசுங்க…. நீங்க விட்டுட்டு வந்த இரண்டு பையும் நான் எடுத்துட்டு வந்துட்டேன்… அத வச்சி இவங்கள சமாளிச்சிக்கலாம்”, நாக்.
“ஏய்…. இன்னும் என்ன பண்ற…. சீக்கிரம் வா”, என காசி குரல் கொடுத்தான்.
இளவெழிலி ஓடையில் கைகால்களை கழுவிக்கொண்டு வந்தாள். உடன் வந்த பெண்ணும் அமைதியாக வந்து தனித்தனியாக அமர்ந்திருந்த இடத்தில் அமர்ந்ததும் கயிறுக் கொண்டுக் கட்டப்பட்டார்கள்.
ஆம்…. அனைவரையும் தனித்தனியாக இடம்விட்டு ஒருவரை ஒருவர் பார்க்கமுடியாத மாதிரிக் கட்டப்பட்டு இருந்தனர்.
சிறு சத்தம் இவர்களுக்குள் எழுந்தாலும் அடி விழுகிறது. ஆதலால் ஏதும் செய்ய வழியின்றி அனைவரும் தவித்துக்கொண்டிருந்தனர்.
இனியனும், தர்மதீரனும் இவர்களைத் தான் தேடிக்கொண்டு இருக்கின்றனர்.
நாச்சியா இருந்த போது நாக்கிடம் இரண்டு பொருட்களைக் கொடுத்து வீட்டிற்கு ஒன்றும், மற்றொரு இடத்திற்கு ஒன்றும் அனுப்பிவிட்டு அவ்வப்போது வீட்டு நிலவரங்களைக் கண்டுக்கொண்டிருந்தாள்.
அவளை அழைத்துச் செல்ல வந்தவர்கள் காவலுக்கு இவர்களை நிற்கவைத்து சென்றதும் அதிகமாக நாக்கிடம் இளவெலிழியால் உரையாட முடியவில்லை. ரிஷியும் கோபத்தில் உள்ளுக்குள் கொத்துக்கொண்டிருந்தான்.
சுழற்சி முறையில் ஆட்கள் இடம்மாற்றப்படுவதும், காவல் முறையும் மாறுவதும் கண்டு இவர்களை ஆட்டுவிப்பவன் எத்தகையவன் என்று ஓரளவு ஊகிக்க முடிந்தது.
இளவெலிழி ரிஷியிடம் எப்படியாவது பேசிவிட வேண்டும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டிருந்தாள்.
அதற்கான சந்தர்ப்பம் அமையுமா?
Next episode yepo varum?
Interesting …..