23 – மீள்நுழை நெஞ்சே
பஸ் விட்டு இறங்கும் சமயம் வில்சன் அவளுக்கு அழைத்தான்.
“ஹேய் ராக்ஸ்… எங்க இருக்க? ஆபீஸ் விட்டு கிளம்பிட்டியா?”, எனக் குரலில் சிறிது வருத்தத்துடன் கேட்டான்.
“நம்ம அபார்ட்மெண்ட் கிட்டயே வந்துட்டேன் வில்ஸ்…. நீ என்ன பண்ற? எல்லாரும் வந்துட்டாங்களா?”
“இல்ல ராக்ஸ்…. ஃப்ளைட் டிலே… லெதர் சரியில்லன்னு இரண்டு நாள் தள்ளிட்டாங்களாம்… அண்ணன் வரமுடியலன்னு சொல்லிட்டான்… அம்மா பாக்க போறானாம்….”, எனக் கூறியதில் வருத்தம் அதிகளவில் இருந்தது.
“தங்கச்சி இரண்டு நாள்ல வந்துடுவா தானே?”
“வந்துடுவான்னு தான் நெனைக்கிறேன்”, என்றவன் குரலில் சுரத்தே இல்லை.
“பனி தான் இப்படி கொட்டுதே ப்ளைட் பறக்கிறது கஷ்டம் தானே… விடு தங்கச்சி வந்துடுவா… நாம டின்னர் வெளிய போலாமா?”, அவன் மன வருத்தத்தை போக்கக் கேட்டாள்.
“இல்ல… நான் டின்னர் ரெடி பண்ணி இருக்கேன். நீ இங்க வந்துடு… “
“சரி…. ப்ரெஸ் ஆகிட்டு வரேன்.. நீ கவலபடாம இரு… “, எனக் கூறிவிட்டு தன் வீட்டை நோக்கி நடந்தாள்.
சற்று வேகமாக நடையை எட்டிப் போட்டு தனது வீட்டிற்குள் சென்றுக் குளித்து உடை மாற்றி, சாமி படத்தின் முன்னால் விளக்கேற்றி வைத்துவிட்டு, வில்சன் வீட்டிற்குச் சென்றாள்.
காலிங் பெல் அடிக்கும் முன் வில்சன் கதவைத் திறந்து விட்டான்.
“என்னடா வாசல்லயே தவம் இருக்க போல?”, எனச் சிரிப்புடன் கேட்டாள்.
“ஆமா… காலைல இருந்து தவம் தான் இருக்கேன் ராக்ஸ்… ஆனா என் தவத்துக்கு பலன் தான் இல்ல”, எனச் சலிப்புடன் கூறியபடிக் கதவைச் சாற்றி விட்டு உள்ளே நடந்தான்.
“என்னடா இவ்ளோ டல்லா பேசற… இப்ப என்னாச்சி… இரண்டு நாள் ஃப்ளைட் டிலே அவ்ளோ தானே… “, என அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
“அண்ணா சொன்னமாதிரி அவளும் வரலன்னு சொல்லிட்டா என்ன பண்றது? அவங்களுக்காக தான் இவ்ளோ கிஃப்ட்ஸ் வாங்கி வச்சிருக்கேன். இன்னும் சொல்லப்போனா இந்த வீட்ல அவங்களுக்காக தான் இருக்கேன்…. “, எனக் கூறிச் சோர்ந்து அமர்பவனைக் கண்டால் பரிதாபம் தான் எழுந்தது.
உறவுக்காக ஏங்கும் ஒரு வளர்ந்த குழந்தையாகத் தான் அவன் துவாரகாவின் கண்களுக்குத் தெரிந்தான்.
“ஹே வில்ஸ்…. என்ன இது குழந்தை மாதிரி… எழுந்திரி… போய் ஃப்ரெஷ் ஆகிட்டு வா… உனக்கு பிடிச்ச சிக்கன் ஃப்ரை செய்றேன்…”, என அவனை எழுப்பினாள்.
“இல்ல.. நானே எல்லாம் பண்ணிட்டேன்… நீ வா… சாப்டு. உனக்கு பசிக்கும்…”, என எழுந்து அவளுக்கு மட்டும் தட்டெடுத்து வைத்தான்.
“உனக்கும் எடுத்து வை… “
“இல்ல.. எனக்கு பசிக்கல...”
“பிச்சிடுவேன்… ஒழுங்கா உக்காந்து சாப்டு.. நீ சாப்ட்டா தான் நானும் சாப்டுவேன்”
“இல்ல…”
“வாய் மூடு…”, என அதட்டி விட்டு அவனுக்கும் எதிரில் தட்டு வைத்து அமரக் கூறினாள்.
இருவரும் அமைதியாக தங்களுக்குப் பரிமாறிக் கொண்டுச் சாப்பிட ஆரம்பித்தனர்.
வில்சன் சாப்பிடாமல் தட்டில் அளந்து கொண்டிருப்பதுக் கண்டு துவாரகா அவனைப் பார்த்தாள்.
“வில்ஸ்……”
‘என்ன என்பது போல பார்த்தான்…’
“எங்க ஊர்ல ஒரு விஷயம் சொல்வாங்க… உனக்கு தெரியுமா?”
“உங்க ஊர்ல சொல்றது எனக்கு எப்படி தெரியும்?”, முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டுக் கேட்டான்.
“இங்க தான் எல்லாத்துக்கும் சப் டைட்டில் போட்டு பரப்பறாங்களே.. அதான் கேட்டேன்”, வெடுக்கென அவளும் பதில் கொடுத்தாள்.
“எந்த விஷயத்த சொல்ற நீ?”
“எப்பவும் யாரும் கூடவே இருக்கமாட்டாங்கன்னு சொல்ற விஷயம்”
“ஆனா உங்க ஊர்ல எல்லாரும் ஒன்னா தானே இருக்கீங்க…. அப்பா அம்மா அண்ணா அக்கான்னு… ஜாயின்ட் பேமிலி”
“உண்மை தான்… ஆனா அங்கயும் பிரிவினைகள் இருக்கு.. இன்னும் சொல்லப்போனா வயசு ஏற ஏற பிரிவு அதிகமாகும். அதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு…. “, எனக் கதைக் கூற ஆரம்பித்தாள்.
வில்சனும் சாப்பிட்டுக் கொண்டே அவள் கூறுவதைக் கவனிக்க ஆரம்பித்தான்.
“பத்து வயசு வரைக்கும் அப்பா அம்மா கூட ரொம்ப இணக்கமான உறவு இருக்கும். பருவ வயசு வந்ததும் அந்த இணக்கம் குறைஞ்சி இடைவெளி வர ஆரம்பிக்கும். பதினைஞ்சு வயசுல இளமை ஆரம்பிக்கிற ஹார்மோன் மாற்றம் நம்மல வேற உலகத்துக்கு கொண்டு போகும். அப்ப அம்மா அப்பா சொல்ற எதுவும் நம்ம காதுல விழாது…. நம்ம சந்தோஷத்துக்கு அவங்க குறுக்க நிக்கறாங்கன்னு தான் நெனைப்போம்… இருபது வயசுல சம்பாதிக்க தேவையான அறிவும் அனுபவமும் தேட வெளிய வருவோம். அப்ப இன்னும் இருக்க பிரிவு அதிகமாகும்… தட்டுத்தடுமாறி 25 வயசுல ஒரு வேலைல உக்காருவோம். அப்ப தெரியும் அம்மாவோட கைமணமும், அப்பாவோட சம்பாத்திய திறமையும்.. அப்பவும் மனசு ஏங்கும் ஆனா நாம தள்ளி தான் நிப்போம். இல்லைன்னா அப்பா அம்மா நம்மல தள்ளி நிறுத்துவாங்க. அப்ப தான் நாம கத்துக்க முடியும்ன்னு… இப்டியே போனா ஒரு நாள் வாழ்க்கைத்துணைன்னு ஒருத்தர் வருவாங்க… நம்ம கூட அதிக காலம் பயணிக்க போறது அவங்க தான்… அவங்க கூட குடும்பம் நடத்த ஆரம்பிச்சு குழந்தை வந்து முதல் இருபது வருஷம் இப்படி தான் போகும்.. பசங்க நம்மை விட்டு போன அப்பறம் தான் வயசான அப்பறம் கணவன் மனைவிக்கு வாழ்க்கை இருக்கு…. இணக்கம், அந்நியோன்யம், காதல் எல்லாம் நிஜமா இருபது வருஷத்துல வந்திருந்தா அந்த காலம் இனிக்கும். இல்லையா தனிமை தான்… இதுவே உடம்பு சரியில்லாம, விதி வசத்துல அவங்க நம்மை விட்டு ஒருநாள் போயிட்டா நாம தனியா தான் நிப்போம்… “
அவன் உண்ணாமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
“தனிமைங்கறது நாம பொறக்கறப்பவே வந்தது… அத நமக்கு நண்பனா பாக்கறதும் எதிரியா பாக்கறதும் நம்ம பார்வைல தான் இருக்கு…. உறவுகள் யாரும் நிரந்தரமா நம்மகூட இருக்க போறது இல்ல…. அவங்க வரப்ப சந்தோஷமா இருந்துக்கணும். இல்லாதப்ப இனிமையான நினைவுகள வச்சி வாழ்க்கைய ஆக்கபூர்வமானதா மாத்திக்கணும்… நம்ம எதிர்பார்ப்பு பொய்யானா வருத்தம் இருக்கும் தான். ஆனா அத ஒதுக்கி வச்சிட்டு வேற விஷயத்துல கவனத்த செலுத்த கத்துக்கணும்… அன்பு … நீ எல்லாருக்கும் குடு… அதுவும் திரும்ப எதிர்பாராத வகைல வந்து சேரும்… நீ எதிர்பாக்கறவங்க கிட்ட தான் வரணும்னு நினைக்க கூடாது”, எனக் கூறிவிட்டு ஆரஞ்சு ஜூஸை குடித்தாள்.
அவளையே பார்த்துக்கொண்டு இருந்த வில்சனைப் பார்த்து, “என்னடா எதாவது புரிஞ்சுதா?”, எனக் கேட்டாள்.
“கம்முன்னு பீர் அடிச்சிட்டு தூங்கி இருக்கணும். உன்னை கூப்பிட்டேன்ல… என்னை சொல்லணும்…. ஒரு மனுஷன் வேதனைல இருந்தா ஆறுதல் சொல்லாம பிலாஷபி பேசற நீ…. இனிமே உனக்கு சிக்கன் க்ரில் செஞ்சே தரமாட்டேன் ராக்ஸ்… ஐ ப்ராமிஸ்”, எனப் படபடவென பொறிந்து விட்டு வேக வேகமாகச் சாப்பிட ஆரம்பித்தான்.
“ஏன்டா நிஜத்த தானேடா சொன்னேன்… அதுக்குன்னு நீ இவ்ளோ பெரிய முடிவு எடுப்பியா? யார கேட்டு நீ ப்ராமிஸ் பண்ற? ஒழுங்கா ப்ராமிஸ கேன்சல் பண்ணு”, என அவளும் வேகமாகச் சாப்பிட்டபடிச் சண்டையிட்டாள்.
“மாட்டேன்… “
“அப்ப நானும் உனக்கு கம்பு சுத்த இனிமே சொல்லி தரமாட்டேன்”, என அவள் கூறியதும் வில்சன் டக்கென அவளைப் பார்த்து அசடு வழிந்தபடி, “ஹே ராக்ஸ்.. நான் சும்மா சொன்னேன்… சத்தியம் எல்லாம் சும்மா… அது எல்லாம் செல்லாது…. நாம் நாளைக்கு மூணு மணிநேரம் ப்ராக்டிஸ் பண்ணலாம்னு நீ போன வாரமே சொன்ன…. சோ காலைல இங்க வந்துடு… இங்கேயே பண்ணிக்கலாம்”, என ஒரேயடியாக பல்டியடித்தான்.
“உனக்கு தான் தேவை… நீ மாடிக்கு வா…. உன்னை நாளைக்கு ஒரு கை பாக்குறேன்”, என அவளும் கூறிவிட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு எழுந்தாள்.
அவள் முறைத்தபடி சோஃபாவில் அமர, அவன் அவளுக்கு லைம் சோடா கொண்டு வந்துக் கொடுத்தான்.
இருவரும் அமர்ந்து ஒரு அட்வென்சர் படம் பார்த்துவிட்டு எழுந்தனர்.
“ராக்ஸ்…. தேங்க்ஸ்….”, என வில்சன் கனிவுடன் கூறினான்.
“லூசு…. இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் சொல்ற…. நான் தூங்க போறேன்… குட் நைட்… எதுவும் யோசிக்காம தூங்கு”, எனக் கூறிவிட்டு வெளியே வந்தாள்.
“ராக்ஸ்…. உன்னை ஒரு தடவை ஹக் பண்ணிக்கவா?”
துவாரகா கையை விரித்ததும் வில்சன் அவளை அணைத்துக் கொண்டான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் அவள் தோளில் வழிவதை உணர முடிந்தது.
அவன் முதுகை தடவிக் கொடுத்தபடி அவள் நிற்கவும், ஐந்து நிமிடம் கழித்து அவளை விடுவித்தான்.
“என் ரியல் ஃப்ரெண்ட் நீ தான்… உன்னை எப்பவும் நான் மிஸ் பண்ணிட கூடாதுன்னு தான் இந்த வருஷம் ப்ரே பண்ணிக்க போறேன்”, எனக் கூறி அவளை அனுப்பி வைத்தான்.
துவாரகா உதட்டில் அமைதியான புன்னகையுடன் தனது வீட்டிற்கு வந்து கதவைத் திறந்தாள்.
அவளது கைப்பேசி அங்கே அலறிக்கொண்டிருந்தது….