24 – அர்ஜுன நந்தன்
குழந்தையுடன் லிப்டில் ஏறிய அர்ஜுன் தன் அறைக்கு வந்தான்.
யாத்ராவின் மேல் விழுந்ததை நினைத்து தனக்குத் தானே சிரித்துக் கொண்டு வந்தான்.
செந்தில் வேகமாக அர்ஜுனை நெருங்கி அறைக்குள் அழைத்துச் சென்று விசாரித்தான்.
“என்னாச்சி அர்ஜுன்? யாத்ரா அங்க தானு இருக்கா? பாத்தியா? பேசினியா?”, செந்தில்.
“ம்ம்ம். ..”, எங்கோ கனவுலகில் சஞ்சரித்தபடி ம்ம் கொட்டினான் அர்ஜுன்.
“எதாவது சொன்னாளா?”,செந்தில்.
“ம்ம்ம்…”, மென்னகை புரிந்தபடி இருந்தான்.
“இவன் ஏன் இப்படி இருக்கான்? யார் பெத்த புள்ளையோ இப்படி ஆகிரிச்சே?! என்ன நடந்து இருக்கும்? 5 நிமிஷம் கூட அங்க இல்ல அதுக்குள்ள இப்படி மந்திரிச்சிவிட்ட கோழி மாதிரி ஆகிட்டானே. பரிதிக்கு என்ன பதில் சொல்றது?”, தனக்கு தானே வாய்விட்டு புலம்பிக் கொண்டு இருந்தான் செந்தில்.
அதற்கும் ம்ம்ம் என சிரித்துக்கொண்டே இருந்தான் அர்ஜுன்.
ஹூஹும்.. இது வேலைக்கு ஆகாது . அர்ஜுனைப் பிடித்து உளுக்கினான் செந்தில்.
“டேய் அர்ஜுன்…. அர்ஜுன்… “, கன்னத்தில் தட்டினான் செந்தில்.
அப்பொழுதும் தன்னிலை வராது இருந்த அர்ஜுனை ஓங்கி அறைந்தான் செந்தில்.
அடித்ததில் உணர்வு பெற்றவன் ,”என்ன செந்தில் சொன்னீங்க?”,எனக் கன்னத்தை தடவினான்.
“என்னடா ஆச்சி உனக்கு? எவ்வளவு நேரமா உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்”, செந்தில்.
“இல்ல செந்தில் அங்க யாத்ரா இருந்த ப்ளோர்ல நடந்துட்டு இருந்தேனா, அப்ப ஒரு குழந்தை லிப்ட்ல இருந்து ஓடிச்சா, அந்த குழந்தையோட அம்மா என்கிட்ட உதவி கேட்டாங்களா, நானும் பின்னாடியே போனேனா… அப்போ…!!”, அர்ஜுன்.
“கேப் விடாத டா. சீக்கிரம் சொல்லு என்னாச்சி?”,செந்தில்.
“அந்த குழந்தை யாத்ரா இருந்த ரூம்குள்ள ஓடிச்சா நானும் பின்னாடியே போனேன். நான் குழந்தைய தேடி உள்ள போறப்ப யாத்ரா அந்த பக்கம் இருந்து வெளியே வந்தாளா …”,அர்ஜுன்.
“அப்பறம் என்னாச்சி டா சொல்லித்தொல “, செந்தில் டென்சனில் கத்தினான்.
“நான் யாத்ரா மேல மோதி அவமேலயே விழுந்துட்டேன்”, அர்ஜுன் முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூறினான்.
“ஸ்ஸ்ஸ்…. இதுக்காடா இவ்வளவு பில்டப் குடுத்த?”, செந்தில்.
“ஆமாம் செந்தில். நானும் அவளும் ஒருத்தரை ஒருத்தர் பாத்துட்டே இருந்தப்ப ஒருத்தன் வந்து எங்கள பிரிச்சிட்டான்”, எனக் கோபமாகக் கூறி முடித்தான் அர்ஜுன்.
“ஏன்டா புருசன் பொண்டாட்டிய பிரிச்ச மாறி சொல்ற?!”, செந்தில்.
“அவன் எப்படி செந்தில் அப்படி பிரிக்கலாம் எங்கள?”, சிறுபிள்ளைப் போல அர்ஜுன் பேசுவதைக் கேட்டு செந்திலுக்கு தலையைப் பீய்த்து கொள்ளலாம் போல இருந்தது.
“விட்றா அவன தனியா கவனிச்சிக்கலாம். யாத்ரா எதாவது சொன்னாளா?”, செந்தில்.
“இல்ல செந்தில். அதுக்குள்ள குழந்தையோட அம்மா வந்துட்டாங்கன்னு நானும் குழந்தைய தூக்கிட்டு வந்துட்டேன்”, எனப் பாவமாகக் கூறி முடித்தான்.
இதை கேட்ட செந்தில் அர்ஜுனை குனிய வைத்து கும்மி எடுத்துவிட்டான். அத்தனை அடிக்கும் அர்ஜுன் அசராமல் சிரித்துக்கொண்டே வாங்கியபடி இருந்தான்.
“ஏன்டா எதாவது சொல்லிட்டு வருவ இல்ல சிக்னல் காட்டிட்டு வருவன்னு பாத்தா சைட் அடிச்சிட்டு கட்டிபிடிச்சி உருண்டுட்டு வந்து இருக்க நீ”, கூறிக்கொண்டே அடித்தான்.
“உருளல செந்தில் விழுந்தேன் அவ்வளவு தான்”,அர்ஜுன்.
“இதுல உனக்கு ரோலிங் ஆகலன்னு வருத்தமோ? எரும எரும”, செந்தில்.
“ஏன் செந்தில் இன்னேரம் யாத்ராவும் என்ன நினைச்சிட்டு இருப்பா தானே?”, அர்ஜுன்.
“போச்சி… முத்திரிச்சி. எதுக்கு வந்தோம் நாம? என்ன பண்ணிட்டு இருக்க நீ அர்ஜுன்?” செந்தில்.
“ஐ லவ் யாத்ரா”,அர்ஜுன் கண்கள் மின்னக் கூறினான்.
“என்னடா சொல்ற?”, செந்திலுக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது என்றாலும் அர்ஜுன் இத்தனை சீக்கிரம் தன் மனதில் உள்ளதைப் போட்டு உடைப்பான் என எதிர்பார்க்கவில்லை.
“ஆமா செந்தில். யாத்ரா என்னைய திருடிட்டா”, சிரித்துக் கொண்டே சொன்னான் அர்ஜுன்.
(டேய் இது கிரைம் டா. நீ லவ்ஸ் விட்டா இது காதல் கதையா மாறிடும். ஒழுங்கா உனக்கு குடுத்த பில்டப்அ மெயின்டெயின் பண்ணு. ஏற்கனவே இத படிக்கறவங்க காதல் கதைன்னு தான் சொல்றாங்க நீ கன்பார்ம் பண்ணிடாத)
“என்னடா இப்படி சொல்ற. இத அவ கேட்டான்னு வையி அவ்வளவு தான் நீ”, செந்தில்.
“முதல்ல யாத்ராவ இங்க இருந்து தூக்கிட்டு போலாம். அப்பறம் அவள நான் சமாளிச்சிக்கறேன்”, அர்ஜுன்.
“என்னமோ நீ சொல்ற. முதல்ல கேஸ்அ முடிப்போம்”, செந்தில்.
“இப்ப நீங்க என்ன பண்றீங்க… நாளைக்கு யாத்ராவுக்கு குடுக்க ஒரு செல்போன் எடுத்துக்கோங்க. அவ டின்னர்ல நாமளும் கலந்துக்கறோம். ஓகே?”, அர்ஜுன்.
“ஏன்டா ஆர்யன் உன்ன கூப்பிட்டமாதிரி சொல்ற. எந்த கெட்அப்ல நாம போறது?”, செந்தில்.
“அவன் கூப்பிட்டா என்ன? கூப்பிடலன்னா என்ன? நாம போறோம் யாத்ராவ மீட் பண்றோம்”, அர்ஜுன்.
இங்கே இவர்கள் பேசிக்கொண்டு இருந்த சமயம் ஜான் யாத்ராவிடம் கெஞ்சிக் கொண்டு இருந்தான் இங்கிருந்து சென்றுவிடும்படி.
“நீ வான்னா வரதுக்கும் போன்னா போறதுக்கும் நான் நாய்குட்டி இல்ல ஜான்”, யாத்ரா @ பூவழகி.
“நான் சொல்றத புரிஞ்சிக்க பூவழகி. நீ இந்த ரெண்டு நாள்ல தப்பிச்சி போனா தான். அதுக்கப்பறம் ஆர்யன் சாரோட அப்பா வந்துட்டா, என்ன செய்வாங்கன்னு யாருக்குமே தெரியாது. இப்பவே இங்க இருந்து போயிடு”, ஜான்.
“ஓஓஓஓ… அந்த ஆள் அவ்வளோ பெரிய அப்பாடக்கரா? அப்ப கண்டிப்பா பாத்தே ஆகணும்”, எனக் கூறிச் சிரித்தாள்.
“ஏன் பூவழகி இப்படி பண்ற. இது விளையாடுற நேரம் இல்ல. ப்ளீஸ் கிளம்பு”, ஜான் கைகூப்பினான்.
பூவழகி அவன் கையை கீழே இறக்கி விட்டு ,” ஏன் ஜான் என்ன காப்பாத்த இவ்வளவு துடிக்கற? என்ன திடீர் கருணை?”.
“அது.. அது வந்து….. உன்ன பாத்தா பாவமா இருக்கு அதான்”, ஜான் மென்று விழுங்கியபடி பதிலளித்தான்.
“ஓஹோ…. அப்ப ரெண்டு நாளைக்கு முன்ன என்னைய கொன்னு தூக்கி போட ஆர்யன் கிட்ட அனுமதி கேட்ட ஜான் எங்கே?”, பூவழகி.
“ரெண்டும் நான் தான். உன்மேல என்னமோ பாசம் வந்துரிச்சி. அதான் காப்பாத்த நினைக்கறேன். தயவு செஞ்சு கிளம்பற வழிய பாரு”, ஜான்.
“பார்ரா… கல்லுக்குள் ஈரமா? சரி நீ சொல்றமாதிரி நான் தப்பிச்சாலும் எங்க போறது? தஞ்சாவூர் போனா சேரலாதன் மறுபடியும் என்ன இங்க அனுப்பிடுவான் இல்லையா மேல அனுப்பிடுவான். அதுக்கு நான் போற வரைக்கும் இங்கயே நல்லா சாப்டுட்டு ஜாலியா இருப்பேன்”, பூவழகி.
பூவழகி சொல்வதிலும் நியாயம் இருக்கிறது. இங்கிருந்து தப்பித்து எங்கு சென்றாலும் ஆர்யன் கண்டுபிடித்து விடுவான். அவள் ஊருக்குச் சென்றால் சேரலாதன். இவளை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டுமே.
ஒரு யோசனை தோன்ற அவளிடம் திரும்பினான் ,”நீ வெளிநாட்டுக்கு போயிடறியா? அங்க எனக்கு தெரிஞ்ச குடும்பம் ஒன்னு இருக்கு. அங்க யாருக்கும் உன்ன தெரியாது, ஆபத்தும் இல்ல” .
“என்னால ஓடி ஒளிய முடியாது ஜான். எனக்கு அது பழக்கமும் இல்ல. தப்பு செஞ்சாலும் அந்த தப்ப ஒத்துகிட்டு குடுக்கற தண்டனைய ஏத்துக்கறவ நானு. என்ன இந்த நாட்டவிட்டு அனுப்பமுடியாது”, பூவழகி கோபத்தை அடக்கிய குரலில் கூறினாள்.
“உன்ன எப்படியாவது காப்பாத்தனும்னு நினைக்கிறேன். அதுக்கு ஒரு வழிய சொல்லு. இவனுங்க கைல நீ சாக கூடாது அவ்வளவு தான்”, ஜான்.
பூவழகி ஜானை ஒருமுறை தீர்க்கமாகப் பார்த்தாள். பின் ஜானை அருகில் அழைத்து ,” நான் தப்பிக்றப்ப நீயும் என் கூட வருவியா?”.
“இரண்டு பேரும் ஒரே நேரத்துல காணாம போனா ஈஸியா நம்மள கண்டுபிடிச்சிருவாங்க. நான் வரல”, ஜான்.
“அப்ப நானும் போகமாட்டேன்”, பூவழகி.
“ஏன் இப்படி பண்ற? எனக்குன்னு யாரும் இல்ல. உன்ன தங்கிச்சியா பாத்துட்டேன் அதான் உன்ன காப்பாத்த நினைக்கிறேன். தயவு செய்து தப்பிச்சி போயிடு”, ஜான் கண்களில் நீர் வழிய மன்றாடினான்.
“சரி நான் சொல்றத எல்லாம் நீ செஞ்சா நான் தப்பிச்சி போறேன்”, பூவழகி.
“என்ன பண்ணணும் சொல்லு?”, ஜான்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்ன ஒருத்தன் இங்க வந்தான்ல அவன் ரூம் நம்பர் விசாரிச்சிட்டு வா”, பூவழகி.
“அவன் யாருன்னு உனக்கு தெரியுமா?”, ஜான்.
“இப்ப வரைக்கும் தெரியாது . இனிமே தெரிஞ்சிக்கனும்”,பூவழகி.
“அவன் ரூம் தெரிஞ்சதும் பாத்துட்டு வந்துடு. மத்தத அப்பறம் சொல்றேன்”, பூவழகி.
“சரி”, ஏதோ யோசனையுடன் அங்கிருந்து வெளியே வந்த ஜான் அங்கிருந்த ஆட்களிடம் தோளில் தட்டிவிட்டு நடக்கத் தொடங்கினான்.
ஜான் சென்றதும் அங்கிருந்தவர்கள் அந்த அறையின் வாயிலில் இரண்டு பேர் நின்றுகொண்டு மற்றவர்கள் அந்த தளத்தில் நடக்கத் தொடங்கினர்.
ஜான் ரிசப்சன் சென்று சகஜமாக உரையாடிக் கொண்டே இன்று வந்தவர்கள் எந்த அறைகளில் உள்ளனர் என்று பாத்து கொண்டு இருந்தான். இது இவன் வழக்கமாக செய்வது தான் என்பதால் யாரும் சந்தேகம் கொண்டு பார்க்கவில்லை.
அந்த சமயம் ரிசப்சன் மேனேஜர் ,” ஜான் சார். கெஸ்ட் எல்லாரும் அவன்ஜர்ஸ் செட்ல இன்வைட் இருக்கான்னு கேக்கறாங்க டின்னர்க்கு. என்ன பண்றது?” .
“அப்படியா. சரி நான் சார்கிட்ட பேசிட்டு சொல்றேன்”, அறை புக் செய்தவர்கள் புகைபடங்களை பார்த்துக் கொண்டு அர்ஜுன் இருந்த அறைக்கு சென்றான்.
காலிங் பெல் சத்தம் கேட்டதும் செந்தில் கதவை திறந்தான். பூவழகி கூறியது போல செந்திலை அவனுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்தவன் ,”அர்ஜுன் சார் பாக்கணும்”, என ஆங்கிலத்தில் வினவினான்.
ஒரு நிமிஷம் என்று கூறி அர்ஜுனை அழைத்தான் செந்தில்.
“எஸ். வாட் யூ வான்ட்?”,அர்ஜுன் ஜானை பார்த்து வினவினான்.
அர்ஜுனுக்கு கை குடுத்து விட்டு அங்கிருந்து ஜான் சென்றுவிட்டான்.
“அர்ஜுன் இவன உனக்கு தெரியுமா?”, செந்தில்.
“தெரியாது. ஆனா இவன் தான் எங்கள பிரிச்சிவிட்டான்”, அர்ஜுன்.
“யாத்ரா இவன் பாதுகாப்புல தான் இருக்கா”, செந்தில்.
அர்ஜுன் செந்திலை பார்க்க லிப்டில் தான் கேட்டதைக் கூறினான்.
“சரி அந்த பேப்பர்ல என்ன இருக்கு பாரு” செந்தில்.
அந்த லெட்டரில் இருந்த செய்தியை கண்டவர்கள் சற்று திகைத்து பின் புன்னகையை பூசிக்கொண்டனர் இதழ்களில்.
நள்ளிரவு நேரம் அவர்கள் அறையின் பால்கனியில் இருந்து ஒரு உருவம் உள்ளே குதித்தது. பூனைப் போல சத்தமின்றி வந்த உருவம் அங்கு படுத்திருந்தவர்களை நோக்கி மெல்ல முன்னேறியது.