24 – காற்றின் நுண்ணுறவு
தர்மதீரன் தன் வேலையை விட்டு வந்ததில் இருந்து நாச்சியார் கடத்தப்பட்ட இடம், நேரம், அவளை தூக்கிச் சென்ற வாகனம், சென்ற வழி என அத்தனையும் கொஞ்சம் கொஞ்சமாகத் துப்பறிந்துக் கொண்டிருந்தான்.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் தான் அவர்களைக் கொண்டுச் சென்று இருக்க வேண்டும் என்ற யூகத்துடன், ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து ஆட்களை வைத்து இனியனும், தர்மனும் தேடிக் கொண்டு இருக்கின்றனர்.
இதற்கு சோழனும், மாவழுதியும் பெரும் தூண்களாக மறைந்திருந்தே வழிகாட்டி வருகின்றனர்.
சோழன் பல சிக்கலான வழக்குகளை தீர்க்க உதவியதால் அவருடன் பணிபுரிந்த போலீஸ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளும் யாரும் அறியாமல் கூட்டுச் சேர்ந்து, இந்தப் பணியை நடத்தி வருகின்றனர். அவ்வவ்பொழுது தர்மனுக்குத் தேவையான பணம், பொருள், ஆட்கள் என அனைத்தும் நுணுக்கமாக அனுமானித்து வழுதியும் சோழனும், அவன் கேட்கும் முன்பே தயாராக வைத்திருப்பது தர்மனுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இது தவிர மற்ற டீம் ஆட்கள் கடத்தப்பட்ட இடத்திற்கு இனியன் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து அதையும் ஆராய்ந்துக் கொண்டிருந்தனர்.
கடத்தப்பட்ட ஒவ்வொருவரும் கொண்டு சென்று சேர்த்த இடம் ஒரே காட்டுப்பகுதி தான். நீலகிரி மலையில் அனைவரையும் ஒன்றாய் சேர்த்து, ப்ரோபஸர் தசாதிபனையும் அவ்விடத்தில் சேர்த்து அவர்கள் தேடும் இடத்திற்கான பொருட்கள், தடையங்களைச் சேகரிக்கக் கட்டளையிடப்பட்டிருக்க வேண்டும்.
அதித் ஒவிஸ்கரின் எண்ணம், ம்ரிதுள்ளின் துள்ளியமான கணக்கீடுகளினால், ஆட்களின் செயல்பாடுகளால் உருவம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
குடும்ப உறுப்பினர்களை முன்வைத்து மிரட்டியும், உடன் இருப்பவர்களைத் துன்புறுத்தியும், இத்தனை நாட்களாக அவர்களின் காரியங்களைச் சாதித்து வந்தனர்.
இவர்கள் செல்லும் இடமெல்லாம் எப்போதும் இருபது பேர் கொண்டக் குழு பின்தொடர்ந்துக் கொண்டே இருக்கும். அவர்களும் குறிப்பிட்ட நேர அளவு மட்டுமே இவர்களைப் பின்தொடரவேண்டும் என்ற கட்டளையும் இருந்தது.
அதனால் யாருக்கும் முழு விவரம் என்பது தெரியவில்லை.
இப்படியாக மேற்கு தொடர்ச்சி மலையின், ஒரு இடத்தில் தான் நாம் முதலில் இவர்களைக் கண்டது. அதன் பிறகு அங்கிருந்து அவர்கள் நகர்ந்து இப்போது மீண்டும் நீலகிரிக்கு அருகில் இருக்கும் மலைத்தொடரில் தான் தங்கியுள்ளனர்.
ஆங்காங்கே அவர்கள் கண்டெடுத்த பொருட்கள், சேகரித்த தகவல்கள் என அனைத்தையும் ம்ரிதுள் பாதுகாப்பாகக் கொண்டு வரவேண்டும் எனக் கட்டளையிட்டுள்ளான்.
தாய் தந்தையை இழந்தத் துக்கத்தில் தன்னிலை இழந்து நின்று இருந்தவனிடம் ஒரு பெட்டியும், உள்ளே சில பொருட்களுடன் பழங்கால எழுத்துக்களால் எழுதிய குறிப்பேடுகள், அவன் மூழ்கி இருந்த இருள் அவன் கைகளில் திணித்து விட்டுச் சென்றது.
அதில் இருந்த இடத்தைக் கண்டறியவும், அதைத் திறக்கவும் சில வருடங்களாக அதித் முயற்சித்து வருகிறான். அவனுக்குத் துணையாக ம்ரிதுள் களத்தில் தன்னை யாரென்று காட்டிக்கொள்ளாமலே வேலைப் பார்த்து வருகிறான்.
கடலுக்கடியில் அவனுக்கு கிடைக்கப்போவது என்ன? இந்த கேள்வி தான் பல நாட்களாக நாச்சியாரின் தலையிலும், ம்ரிதுள்ளின் தலையிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.
“பேபி…. நாம எப்படி இங்க இருந்து தப்பிக்கறது?”, ராகவி சுற்றிலும் பயந்தபடிப் பார்த்துக்கொண்டே கேட்டாள்.
“நாம இனிமே தப்பிக்க முடியாது ரா… அவன் நம்ம டீம் மெம்பர்ஸ்அ இங்க கொண்டு வர சொல்லி இருக்கான். இங்க இருந்து மறுபடியும் நம்மல எதையோ தேட வைக்க போறான்”, நாச்சி தன் கையில் இருக்கும் புத்தகத்தைப் பார்த்தபடியே பதில் கூறினாள்.
“அப்ப நாம போலீஸ் கிட்ட போக முடியாதா?”
“போனாலும் ப்ரயோஜனமில்ல ரா…. நாம நேத்திருந்து அந்த ரூம்ல பார்த்த அத்தனையும் உலகம் முழுக்க இருக்க பெரிய ம்யூசியம்ல இருந்தும் பல நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சி துறை, அகழ்வாராய்ச்சித்துறைன்னு அத்தனைல இருந்தும் கொண்டு வந்திருக்காங்க… அவங்க பலம் உலகம் முழுக்க விரவியிருக்குன்னு அதுல இருந்து புரிஞ்சது ரா”, நாச்சியார் பெருமூச்சு எடுத்தபடிப் புத்தக்கத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு ராகவியைப் பார்த்தாள்.
“அப்ப நாம அடுத்து என்ன பண்ணப்போறோம் பேபி?”, ராகவி கண்கள் குளம் கட்டியது.
“தெரியல ரா…. ஆனா நம்மல இன்னொரு பக்கம் யாரோ தேடிட்டு இருக்காங்க”, நாச்சியார்.
“யாரு பேபி? போலீஸ்… சிபிஐ?”, ஆர்வமாக கேட்டாள் ராகவி.
“தெர்ல… நம்ம டீம் மெம்பர்ஸ் இங்க கொண்டு வர்ற லேட் ஆகுதுன்னு அவன் கத்திகிட்டு இருந்தான். அடுத்து என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது ரா…. நாம எதுக்கும் தயாரா இருக்கணும் அவ்வளவு தான். அவன க்ளோஸ் ஆ வாச்ட் பண்ணலாம் அது ஒன்னு தான் நம்மனால பண்ணமுடியும் “, நாச்சியார் உள்ளுக்குள் திடமாகவே கூறினாள்.
“இப்படியே போனா எப்படி பேபி…. ஒரு முடிவு வேணாமா? நம்ம வீட்ல இருக்கறவங்க எப்படி இருக்காங்களோ? உங்கம்மாவ வேற சுட்டுட்டாங்கன்னு நீ சொன்ன… இப்ப அவங்க எப்படி இருக்காங்களோ? ஒரு மாசம் மேல ஆச்சி… நம்மல கடத்திட்டு வந்து…. “, ராகவி உள்ளுக்குள் உடைந்துபோனாள்.
“அம்மா …. அம்மாவ வல்லா பாத்துப்பா…. அவ எதாவது பண்ணுவா… ஆனா சின்னபொண்ணு…. உலகம் இன்னும் புரியாத வயசு…. அப்பா…. அப்பா பாத்துப்பார் தான்… “, ஒரு நொடி உள்ளுக்குள் கலங்கினாலும் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, ” எப்படி இருந்தாலும் வாழ்க்கை நம்மல இழுத்துட்டு போயிட்டு தான் இருக்கும்….. அதோட போக்குலயே போவோம். சீக்கிரமே இதுக்கு முடிவு வரும்னு தான் தோணுது ரா…..நீ பயப்படாம தூங்கு”, என அவளை ஆசுவாசப்படுத்தி உறங்கவைத்துவிட்டு, இவள் பால்கனியில் அமர்ந்து அடர்ந்த காட்டின் மேல் பார்வையைப் பதியவைத்தாள்.
அந்த கும்மிருட்டில் அவளது மனதும் மூழ்கியது. மூளைக்குள் நடக்கும் போராட்டம் கனவாக மாறி அவளது கனவுத்திரையில் ஒளிபரப்பானது.
“வல்லா … வேணாம்…. நீ வந்துடு…. போகாத…..”, என நாச்சியார் கதறித் துடித்துக்கொண்டிருக்கிறாள்.
எங்கோ ஓர் இடத்தில் வல்லகியை மட்டும் தனியே ஆபத்து என்று அறிந்தபின் உள்ளே அனுப்புகிறான் அவன். அவள் பின்னே யாரும் வரவேண்டாமென அவளும் உரைத்துவிட்டு இறுதியாக நாச்சியாரைப் பார்த்து , “அம்மா அப்பாவ பாத்துக்க நாச்சி”, எனக் கூறி உள்ளே செல்கிறாள்.
நாச்சியாவின் கதறல் மெல்ல மெல்ல குறைந்தது. அவளது குரல் தேய்ந்து எங்கோ மறைந்து போனது. அந்தகாரமானது அவளை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே இழுத்துக்கொண்டிருக்கிறது.
அவளைச் சுற்றியுள்ளவர்களையும் தனக்குள் இழுக்கிறது. அவர்களைச் சுற்றி இருக்கும் அனைத்தும் மெல்ல மெல்ல அந்தகாரத்தில் மூழ்கி அடி ஆழம் செல்கிறது….. செல்கிறது….. சென்றுக் கொண்டே இருக்கிறது….
யாரோ தலையில் கைவைக்க திடுக்கென கண்விழித்து எழுந்து அமர்ந்தாள்.
கண் எதிரே அவர்கள் இருவரும் நின்றிருந்தனர்.