24 – மீள்நுழை நெஞ்சே
ஓயாமல் அடிக்கும் கைப்பேசியை எடுத்து காதில் வைத்ததும் கனிமொழி சரமாரியாக அவளை வசைப்பாடத் தொடங்கினாள்.
“எங்க டி போய் தொலைஞ்சு? எத்தனை மணி நேரமா உனக்கு போன் பண்றேன்… என்ன கிழிச்சிட்டு இருந்த இவ்ளோ நேரம்? பேயே …பிசாசே…. எருமையே…. “, இப்படி அவள் அங்கே கத்திக்கொண்டிருக்க இவள் போனை கையில் ஆட்டியபடி ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் பொருட்களை எல்லாம் எடுத்து வைத்து ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்தாள்.
பத்து நிமிடம் முடிந்த பின் காதில் போனை வைக்கவும் கனிமொழி சற்று கோபம் மட்டுப்பட்டு பொறுமையாக பேச ஆரம்பித்தாள்.
“எங்க போன?”
“நான் தான் வில்ஸ் வீட்டுக்கு விருந்துக்கு போறேன்னு சொன்னேன்ல…. “
“போன எடுத்துட்டு போய் தொலைய வேண்டியது தானே?”
“தொலைஞ்சி போறதுக்கு போன எதுக்கு எடுத்துட்டு போகணும்?”
“புத்திசாலின்னு நெனைப்போ உனக்கு? “
“இல்லாமயா எனக்கு அமெரிக்காவுல வேல குடுத்து அனுப்பி வச்சாங்க என் கம்பெனில….”
“இந்த பந்தாவுக்கு குறைச்சல் இல்ல.… உங்கம்மா பயந்து போய் இங்க வந்து உக்காந்து இருக்காங்க… இரு அவங்ககிட்ட தரேன்”, என துவாரகாவின் அம்மாவிடம் போனை நீட்டினாள்.
“கண்ணு…. துவாரகா… எங்க டி போன?”, எனப் படபடப்புடன் கேட்டார்.
“அம்மா… நான் தான் அப்பவே வில்ஸ் வீட்டுக்கு விருந்துக்கு போறேன்னு சொன்னேன்ல… போறதுக்கு முன்ன உன்கிட்ட பேசிட்டு தானே போனேன்.. அதுக்குள்ள என்னாச்சு உனக்கு? எதுக்கு இத்தன தடவ போன் போட்டு இருக்கீங்க?”, என விவரத்தைக் கேட்டாள்.
“உங்க அப்பா உனக்கு போன் பண்ணி நீ எடுக்கலன்னு சொல்லவும் எனக்கு பயமா போச்சி டி… நாங்க யார் செஞ்சும் நீ எடுக்கவே இல்லைன்னு தான் கனிகிட்ட கேக்க வந்தேன்…”
“வில்ஸ் நம்பருக்கு அடிக்க வேண்டியது தானே?”
“அவன் போனுக்கு ரிங்கே போல… அதான் பயந்துட்டேன்”
“அவன் அவ தங்கச்சி இன்னும் வரலன்னு கவலைல போன சார்ஜ் போடாம விட்டிருப்பான்… நீ எதுக்கு தேவயில்லாம இப்படி பயப்படற? உன்னால எனக்கு எவ்ளோ திட்டு பாரு…. “, எனத் தாயிடம் வம்பிலுத்தாள்.
“ஏன்டி பேசமாட்ட…. உன்ன அவ்ளோ தூரம் அனுப்பிட்டு தெனம் தெனம் நான் படற அவஸ்தை உங்களுக்கு தெரியுமா? நீ உன் போன கொண்டு போயிருக்க வேண்டியது தானே?”, என பவானி அவளைத் திட்டினார்.
“என் போன்ல சார்ஜ் இல்லைன்னு போட்டு விட்டுட்டு போனேன்… அங்க கொஞ்சம் லேட் ஆகிரிச்சி…. இப்ப உடனே என்கிட்ட பேசியாகணும்னு என்ன இருக்கு? அது மொத சொல்லு”, என அவளும் தாயை அதட்டினாள்.
“ஒண்ணுமில்ல….”, என பவானி இழுத்தார்.
“ஒண்ணுமில்லாததுக்கா நீ இவ்ளோ பண்ண?”
“சொல்ல விடுடி….”
“நீ முழுசா சொல்லு மா”
“உனக்கு ஒரு பையன அப்பா பாத்திருக்காரு.. அது விஷயமா பேச தான்…. ” என முழுதாக முடிக்காமல் பேச்சை நிறுத்தினார்.
“நான் தான் இங்க இருந்து வர இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கே.. அதுக்குள்ள என்ன அவசரம் இப்ப?”
“நீ வந்து இறங்குனதும் மாப்ள வந்து நிப்பானா? இப்ப இருந்து பாத்தா தானே அமையும்”
“அதுக்கு இப்ப என்ன ?”
“பையன் போட்டோ அனுப்பி வைக்கறேன்.. பாத்துட்டு சொல்றியா?”, என ஆர்வமுடன் கேட்டார்.
“அம்மா…. நான் இந்தியா வரதுக்கு ஆறு மாசம் முன்ன பாருங்க போதும்.. இப்ப இருந்து என்னை நீ இம்சை பண்ணாத.. அப்பறம் நான் இந்தியா பக்கமே வரமாட்டேன். இங்கேயே ஒருத்தன கட்டிகிட்டு செட்டில் ஆயிடுவேன்”
“ஆவ டி ஆவ…. அம்மில வச்சி இணுங்கி புடுவேன் பாத்துக்க…. சரி நான் வீட்டுக்கு போய் போன் போடறேன்… இரு கனிகிட்ட தரேன்”, எனக் கொடுத்துவிட்டு அவளிடம் விடைபெற்றுக் கொண்டுச் சென்றார்.
“என்ன வாத்தியாரம்மா என் மேல இருக்க காண்ட எல்லாம் காட்ட இன்னிக்கு ஒரு வாய்ப்பு எங்கம்மா குடுத்ததுல சந்தோஷமா இருக்கீங்க போலவே?”, கனியை வம்பிலுத்தாள்.
“நான் காண்டு ஆகற அளவுக்கு நீ ஒன்னும் அவ்ளோ பெரிய அப்பாடக்கர் இல்ல டி…. விருந்து பலமா?”
“அதுலாம்…. வில்ஸ் தான் அழுதுட்டே இருந்தான். சமாதானம் செய்ய டைம் ஆகிரிச்சி”, எனக் கூறியபடிப் படுக்கையறையில் வாசனை மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு பால்கனியில் அமர்ந்தாள்.
“அழுவறானா?”
“ஆமா… இன்னும் அழுதுட்டு தான் இருப்பான்…. அவங்கண்ணன் இங்க வரலன்னு சொல்லிட்டானாம்… அவன் தங்கச்சிக்கு ஃப்ளைட் போஸ்ட்போன் ஆகிரிச்சி… பாவம் இன்னிக்கு லீவ் போட்டுட்டு வீடெல்லாம் பயங்கரமா டெக்கரேட் செஞ்சி கிஃப்ட் எல்லாம் வச்சிட்டு இருந்திருக்கான். கடைசில இரண்டு பேரும் இன்னிக்கு வரலன்னதும் ரொம்ப அப்செட் ஆகிட்டான்”
“அடடா…. “, என கனியும் அவளின் வருத்தத்தை குரலில் காண்பித்தாள்.
“ம்ம்.… சரி நீ என்ன பண்ற? சாப்டியா? அத்த எங்க? உனக்கு இன்னிக்கு ஸ்கூல் இல்லையா?”, வழக்கமாக கேட்கும் கேள்விகளுக்கு வந்தாள்.
“ஹால்ப்-யியர்லி லீவ் விட்டாச்சு இங்க… அங்க கிரிஸ்த்துமஸ்-க்கு உனக்கு ஆபீஸ் லீவ் தானே..?”
“ஆமா… பத்து நாள்… “
“என்ன ப்ளான் பண்ணி இருக்க?”
“இதுவரைக்கும் எதுவும் இல்லை…. பாப்போம்… சரி எங்கப்பா கூப்பிடறாரு நான் பேசிட்டு உனக்கு கூப்பிடுறேன்”, என அவளின் அழைப்பைத் துண்டித்து விட்டு தந்தையின் அழைப்பை ஏற்றாள்.
“அம்மாடி ராகா …எங்கடா போன?”, என தந்தையும் அதே கேள்வியைக் கேட்க, அவருக்கும் உரிய பதில் கொடுத்து சமாதானம் செய்தபின், அடுத்தக் கட்ட பேச்சாக அவளின் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார்.
“அப்பா நான் இன்னும் ஒன்றரை வருஷம் இங்க வேலை பாக்கணும். அதனால இப்ப இருந்து எனக்கு போட்டோ அனுப்பாதீங்க.. நான் அங்க வந்த அப்பறம் பாருங்க….”, தாயிடம் கூறியதையே அவரிடமும் சற்றுப் பொறுமையாகக் கூறினாள்.
இந்த பெண் பிள்ளைகளுக்கு தந்தை என்றால் மட்டும் அத்தனை அன்பும், பரிவும் எங்கிருந்து தான் வருமோ? அதே இணக்கம் தான் இப்போது அவர்களுக்கு நடுவிலேயும் வேலை செய்தது.
“சரிடா ராகா… நீ இங்க வரதுக்கு ஆறு மாசத்துக்கு முன்ன இருந்தே பாக்கறேன். உன்னை தொந்தரவு பண்ணல… சாப்டியா? அந்த பய வில்சன் இனியா புள்ள எல்லாம் எப்படி இருக்காங்க?”, என மகளின் தந்தையாக முழுதாக மாறிக் கேட்டார்.
“அவன் அழுதுட்டு இருக்கான் ப்பா.. சமாதானம் பண்ணிட்டு வந்தேன்…”
“ஏன்டா?”, என்று அவர் கேட்டதும் அவனின் அன்பிற்கான ஏக்கத்தை அவரிடம் கூறினாள்.
“பாவம்… நீ வரப்ப அவனையும் இங்க கூட்டிட்டு வா ராகா…. அன்புக்கு ஒரு உசுரு இப்படி ஏங்கிட்டு இருக்கறது பாத்தா கொடுமையா தான் இருக்கு… வேற ஒன்னும் பிரச்சினை இல்லையே டா அங்க உனக்கு?”, தந்தையின் பாசத்தோடு வினவினார்.
“வேற ஒரு பிரச்சனையும் எனக்கு இங்க இல்லப்பா… வேலைக்கு போறேன், வரேன்… லீவ் விட்டா வீட்ட சுத்தம் பண்றேன் சாப்பிடறேன்… இப்படி தான் இங்க எனக்கு போகுது ப்பா”, அவளது குரலில் சிறிது சலிப்புத் தெரிந்ததோ என்ற ஐயம் எழத்தான் செய்தது.
“என்னடா சலிப்பா பேசற… “
“பத்து நாள் லீவ் வருதுப்பா… அதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்”
“எங்கயாவது பக்கத்துல டூர் போலாம்ல ராகா?”
“அதான் யோசிக்கிறேன் ப்பா… வில்ஸ் இருந்தா பிரச்சினை இல்ல… அவன் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வந்துடுவான். இனியா ஏற்கனவே கனடா போயிட்டா … அவளும் இல்ல… ஆபீஸ்ல மத்த எல்லாரும் அவங்கவங்க குடும்பத்த பாக்க கிளம்பிட்டாங்க… வேற யாராவது தனியா இருந்தா பாக்கணும். இல்லன்னா நானே தனியா எங்கயாவது போயிட்டு வரலாம்ன்னு இருக்கேன்”, எனத் தனது எண்ணத்தைக் கூறினாள்.
“தெரியாத ஊருடா… துணைக்கு யாராவது அந்த ஊரபத்தி தெரிஞ்சவங்கள கூட்டிட்டு போ மா”
“அப்பா.. நானும் இங்க வந்து ஆறுமாசம் ஆகிரிச்சி… தனியா போறது எல்லாம் பயமே இல்ல…. இடத்த தேடணும் அவ்வளவு தான்”
“எதுவாக இருந்தாலும் சரி ஜாக்கிரதையா இரு… இரு சித்தப்பா கிட்ட தரேன்”, என தம்பியிடம் கொடுத்தார் அருணாச்சலம்.
“சித்தப்பா…. என்ன ஜாலியா இருக்கீங்க போல சித்தி இல்லாம…. “, என வழவழக்க ஆரம்பித்து ஒரு மணிநேரம் கழித்து அழைப்பைத் துண்டித்து விட்டு அறையின் உள்ளே வந்ததும் ரோஜா மணம் அவளது நாசியை மட்டுமின்றி உள்ளத்தையும் இதமாகத் தாக்கியது.
கீற்றாய் ஒளிர்ந்த மென்னகையுடன் விளக்கை எல்லாம் அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள்.
அடுத்த நாள் அலுவலகத்திற்குச் சென்று தனது வேலையை முடித்துவிட்டுக் கிளம்பும் போது அவளது மேனேஜர் சார்லஸ் அழைத்தார்.