24 – ருத்ராதித்யன்
அடிபட்டிருந்த கொம்பன் இப்போது பரிபூரணமாக குணமாகி இருந்தது.
பைரவ் அதை விட்டு கணநேரமும் விலகாமல் பின்னாலேயே சுற்றிக்கொண்டும், கொம்பன் படுத்திருக்கும் போது அதன் மேல் ஏறி படுத்தும், தொடர்ந்து குறும்பு செய்துக் கொண்டே இருந்தது.
“பைரவா…. என்னை தொந்தரவு செய்யாதே…. சொல்வதை கேட்டு அதன்படி செய்யப் பழகு”, என கொம்பன் பைரவைக் கண்டித்தது.
பைரவ் முடியாது என தலையாட்டிவிட்டு மீண்டும் அங்கே படுத்திருந்த பூனைகளிடமும், பறவைகளிடமும் விளையாட சென்றது.
பஞ்சவர்ணக் கிளிகள் இரண்டும், இரண்டு நாட்களாக அதிகம் கீழே இறங்கவில்லை. கூட்டிலேயே படுத்து மேலேயே பறந்து மீண்டும் கூட்டிற்குள் முடங்கின.
ஆருத்ரா இரண்டு நாட்களாக அதிகம் இவர்களோடு நேரம் செலவழிக்கவில்லையாதலால், அவளும் அதை கவனிக்கவில்லை.
கொம்பன் மட்டும் அவைகள் தன்னை கண்டு கொண்டனவோ என்று ஐயத்தோடு அவைகளை அவ்வப்பொழுது பார்த்துக்கொண்டு இருந்தது.
மிருகங்கள் தான் எத்தனை புத்திசாலிகள்… நிமிட நேரமும் தாய்மடியை விட்டுப் பிரியாமல் மண்ணிலேயே தங்களின் வாழ்வனைத்தும் வாழ்ந்து பிரபஞ்சத்தை உணர்கின்றன.
மனிதன், என்று பொருளின் பின்னால் செல்ல ஆரம்பித்தானோ அன்றே அவன் அவனது தொப்புள் கொடி உறவை அறுத்துவிட்டான்.
இங்கே தொப்புள் கொடி என்பது மண்ணுடன் நமக்கு இருக்கும் பந்தம்.
வெற்றுப்பாதமாக மண்ணில் கால் வைத்து நடந்தவரை பூமியின் அதிர்வுகள் முதல் பிரபஞ்சத்தினுடனான நுண்ணிய உணர்வலைகளை உணர்ந்துக் கொண்டிருந்தான்.
ஆடம்பரம் அவனுக்கு முதலில் மண்ணுடன் இருந்த உறவை முறித்தது. பின் பிரபஞ்ச உணர்வையும் புதைத்தது.
ஆறறிவு இருப்பதாக தம்பட்டம் அடித்துக் கொள்ளும் மனிதனுக்கு அருகில் இருப்பது அசலா நகலா என்று நொடியில் பிரித்தறிய முடிவதில்லை. ஆனால் மிருகங்களும், பறவையும் நம் ஆத்மாவை உணரக்கூடியவை.
ஒரே உடலில் பல ஆத்மாக்கள் குடியமர்ந்தாலும் அதை உணரக்கூடியவை. கிளி, நாய், பூனை, யானை, குதிரை, இவைகளுக்கு எல்லாம் இந்த அறிவு சற்றே அதிகமாகத்தான் இருக்கும் போல.
கொம்பனைப் போலவே தோற்றம் கொண்டிருந்தாலும் அது நம் கொம்பன் அல்ல என்று அவைகள் உணர்ந்துக் கொண்டன.
அதனால் தான் அருகில் வராமல் தூரமாகவே இருந்து கவனிக்கின்றன.
கிளிகள் மட்டுமல்ல மற்ற அனைத்து மிருகங்களும் அதை உணர்ந்துக் கொண்டன.
உணர்ந்தும் அவைகள் ஏன் அமைதியாக இருக்கின்றன என்று யோசித்தீர்களா?
அந்த கொம்பனுடன் அவர்களின் கொம்பன் அரூபமாக பிணைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அனைத்தும் குழம்பியபடி இருந்தன.
இந்த குட்டி இளவரசன் பைரவ் மட்டும் மிகவும் உற்சாகமாக விளையாடி அனைவரையும் நன்றாகவே இம்சித்துக் கொண்டிருந்தான்..
அந்த சிறிய சாக்லேட் உருவம் நடந்து வருவது நமக்கு உருண்டு வருவதுப் போலவே காட்சியின்பம் தருகிறது.
அதன் திராட்சை விழிகள், அதில் அதன் ஆத்மாவை காணலாம். அது நம் மீது வைத்திருக்கும் அன்பை முழுதாகவே உணரலாம்.
*(பழைய கொம்பன் – ப.கொ எனவும்,
புதிய கொம்பன் – கொம்பன் எனவும் குறிப்பிடப்படுகிறது)
பைரவை ஈன்ற தாய் நாய் மட்டும் குழப்பம் ஏதுமின்றி தன் வேலையை கவனித்தது.
அங்கிருந்த நாய்களில் கொம்பனுக்கு அடுத்ததாக வழிநடத்தும் வீரா எனும் நாய் கொம்பனிடம் வந்தது.
அவர்கள் பாஷையில் அவர்கள் பேசுவதை நம் பாஷையில் காணலாம்….
“யார் நீ? எங்கள் கொம்பனை என்ன செய்தாய்?”, வீரா.
“நான் கொம்பன். பைரவக்காட்டில் இருந்து வருகிறேன்”, என்று கூறியதும் மற்ற நாய்கள் அனைத்தும் கொம்பன் அருகில் நெருங்கி நின்றன..
“பைரவக்காடா? நிஜமாகவா?”, என மற்றொரு நாய் கேட்டது.
“ஆம்…. “, கொம்பன்.
“அப்படியென்றால் இன்னும் இவ்வுலகில் அழிந்ததாக கூறும் மிருகங்கள் அங்கே வாழ்கினறனவா?”
“ஆம்… அங்கே காவல் இருப்பவன் நான். முக்கியமான தெய்வப்பணிக்காக இவ்விடம் வந்தேன்”
“எங்களையும் அங்கே அழைத்து செல்வாயா?”, வீரா.
“இல்லை வீரா… நம் இனங்களுக்கு இந்த தகவலானது தலைமுறைகள் கடந்தும் கடத்தப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. நாம் காவல் வீரர்கள். காவலுக்காக உயிரை துறப்பவர்கள். அதே போல பைரவக்காட்டின் கட்டளையாக காவலுக்கு நம்மை அழைத்தால் தாமாக அவ்விடம் சென்று சேரவும் முடியும். அழைப்பு வந்தால் அன்றி யாரும் அந்த காட்டிற்கான பாதையை அறியமுடியாது”
“எதற்காக இங்கே வந்தாய்?”, ப.கொம்பன்.
“இவனுக்கு பயிற்சி கொடுக்க “, என பைரவை தலையால் முட்டி காட்டியது.
“சரி… எங்கள் கொம்பன் எப்போது பழைய நிலைக்கு வருவான்?”, வீரா.
“நான் இங்கிருந்து செல்லும் போது… வழக்கமான வேலைகளை நீங்கள் கவனியுங்கள். நான் என் வேலையை கவனிக்கிறேன்”, என தோரணையுடன் கூறியது கொம்பன்..
“உன்னால் இவ்வீட்டில் உள்ளவர்களுக்கு ஆபத்து வந்தால்…”, என வீரா முறைத்தபடி நிறுத்தியது.
“வராது வீரா… இவன் நம் தாயிற்காக உயிரை கொடுக்க துணிந்தவன். நானும் இங்கேயே தானே இருக்கிறேன்… வழக்கமான பணியை கவனியுங்கள்”, ப.கொம்பன் கூறியது.
இவர்களின் உரையாடல் முடிந்தபின் பஞ்சவர்ணகிளிகள் வீராவிடம் சென்றது.
அதுவும் விவரம் கூற பஞ்சவர்ணக்கிளிகள் வழக்கமான பணிகளில் இறங்கியது ஆனால் கண் எல்லாம் பைரவ் மேல் இருந்தது.
சாரதியும், பாரதியும் கொண்டு வந்திருந்த பொருட்களை ஆய்வு செய்தபடி பரத் நின்றிருந்தான்.
சந்தனபாண்டியனிடம் இருந்து எடுத்த பல கோடி ரூபாய்களில் சில கோடிகளை இவர்கள் செலவழித்து தங்களுக்கு தேவையான வசதிகளை செய்து வைத்திருந்தனர்.
அதில் தடயவியல் ஆய்வுக்கூடம். வெளியே உலக தொடர்புகளுடன் பகலில் இயங்கும், இரவில் இவர்களுக்காக இயங்கும்.
“என்ன இது?”, நெடுமாறன்.
“தெர்ல அண்ணா…. இது சேஃப் மாறி இருக்கு. இதுல எதாவது தேறுமான்னு பாப்போம்”, எனக் கூறியபடி இன்னொரு பெட்டியில் இருந்த சாம்பலை ஆய்வு செய்ய எடுத்துக்கொடுத்தான்.
சில துகள்கள் எடுத்து ஆய்வு செய்ததில் திடுக்கிட்ட ஆய்வாளர்கள், “சார்… இங்க வாங்க….”, என அழைத்தனர்.
“என்னாச்சி ?”, நெடுமாறன்..
“இது தேளோட சாம்பல் சார்”
“அதுக்கா இவ்வளவு அவசரமா கூப்டிங்க?”, நெடுமாறன் முறைத்தபடி கேட்டான்.
“இந்த தேள் பல ஆயிரம் வருஷத்துக்கு முன்னவே அழிஞ்சிரிச்சி சார்… அதோட சாம்பல் இதுல புதுசா இருக்கு… அது தான் புரியல…. லேப் எரியறதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன தான் இதை எரிச்சி இருக்காங்க”, எனக் கூறியதும் பரத் நெடுமாறனைப் பார்க்க, “எல்லா சாம்பலும் துகளும் டெஸ்ட் பண்ணுங்க… எதுவும் மிஸ் ஆகக்கூடாது”, என உத்திரவிட்டு யாத்ராவிற்கு அழைத்தான்.
“யாத்ராகுட்டி…. நாம தேடினது கிடைச்சிரிச்சி.. அந்த கண்மயா சொன்னது எல்லாம் நிஜம் தான்… இப்ப நம்பறேன்… அடுத்து என்ன பண்றது?”
“ரொம்ப சீக்கிரம் நம்பிட்ட டா…. நான் அவ சொன்னத வச்சி தான் நிறைய வேலைய முடிச்சிட்டு இருக்கேன். இவன் இப்பதான் நம்பவே ஆரம்பிக்கறான். இப்படி இருந்தா வெளங்கிடும்”, யாத்ரா அவனை வறுத்தெடுத்தாள்.
“அதுக்காக யார் என்ன சொன்னாலும் நம்பனும்னு சொல்றியா என்னை?”, இவனும் கோபமாக கேட்டான்.
“உண்மையா பொய்யானு உணரக்கூட முடியாதான்னு தான் கேக்கறேன்… “
“நான் கண்ல பாக்காம நம்பமாட்டேன்”
“நீ எப்படியோ போய் தொல.. நான் சொல்றத ஒழுங்கா செஞ்சி முடி… அந்த பரத் ஆ அருணாச்சல் அனுப்பு… நந்துகிட்ட பேசிக்க சொல்லு… நீ இதே மாதிரி இன்னும் எத்தனை லேப் இருக்குன்னு கண்டுபிடி… என் கெஸ் சரிண்ணா இங்க தேனில கூட ஒன்னு இருக்கலாம்…. ஆளுங்கள அனுப்பி சீக்கிரம் விசாரிச்சு அதை கன்பார்ம் பண்ணிக்க… நான் டெல்லி போறேன்.. வந்து பேசறேன்”, எனக் கூறி வைத்துவிட்டாள்.
நெடுமாறன் யோசனையுடன் ஆட்களை அழைத்து விவரங்களை கூறி தமிழ்நாடு முழுக்க தேட அனுப்பினான்.
பின் தன் நெருங்கிய வட்டார ஆட்களை வைத்து எங்கெங்கு இதுபோல அதி நவீன ஆய்வுக்கூடங்கள் இயங்குகிறது என்றும் விசாரிக்க ஆரம்பித்தான்.
ஆதித்யனிடம் கெஞ்சி கொஞ்சி ஒரு வழியாக டெல்லிக்கு செல்ல ப்ளைட் ஏற மதுரை வந்தாள்.
அங்கிருந்து கிளம்பும் போது பரிதிக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு சுற்றிலும் பார்வையைச் செலுத்தினாள்.
அவள் செல்லும் விமான அறிவிப்பு வந்தவுடன் எழுந்து நடந்தவள் ஏதோ நெருட சுற்றிலும் பார்த்துக்கொண்டே வந்தாள்.
எதுவும் அவள் கண்களுக்கு தட்டுப்படவில்லை. டெல்லி செல்லும் அவசரத்தில் அவளும் நிற்காமல் தன் இருக்கையில் அமர்ந்துக்கொண்டாள்.
ஒரு ஜோடி கண்கள் அவளை தொடர்ந்தபடியே இருந்தது.
டெல்லியில் இறங்கியதும் செந்தில் அவளை தன்னுடன் அழைத்துச் சென்றார். அவள் தன் பார்வையில் இருந்து தப்பித்ததை எண்ணி அந்த கண்கள் சிவப்பேறின.
“சீனியர்… அண்ணி எப்டி இருக்காங்க? குட்டிபாஸ் எப்படி இருக்காரு?”
“ரொம்ப சீக்கிரம் பாக்க வந்துட்ட அவங்கள… நீயே அடி வாங்கு போ அவகிட்ட…. “, செந்தில் சிரிப்புடன் கூறினான்..
“நான் எதுக்கு அடி வாங்கறேன். நீங்க தான் என்னை பாக்க வரவிடலைன்னு சொல்லுவேன்…. “, கண்ணடித்து கூறியவளை செந்தில் முறைத்தான்..
“பொய்.. பொய்… வாய் தொறந்தா பொய்…. போயிட்டு நாலு நாள்ல வந்துட்ட… வேலை என்னாச்சி?”, செந்தில்.
“அதுல்லாம் சூப்பரா போயிட்டு இருக்கு சீனியர்… ஒரு டவுட் அதான் டார்லிங்கிட்ட கன்பார்ம் பண்ணிக்கலாம்னு வந்தேன்… அப்படியே செழியனையும் பாக்கணும்.. அவர் டெல்லி வந்துட்டாரா?”, எனக் கேட்டாள்.
“வந்திருப்பாங்க… நீயே கூப்டு பாரு”, என போனை கொடுத்தான்..
முதல் அழைப்பிலேயே அர்ஜுன் போனை எடுத்தான். “செந்தில் எப்ப வரட்டும்?”, எனத் தீவிரமாகக் கேட்டான்.
“இப்பவே கூட வாங்க… “, என யாத்ரா பதில் கொடுத்ததும் அர்ஜுன் இதழில் மென்னகை பூத்தது.
அடடா…. என்ன சிரிப்பு… மென்னகையே இப்படியா அர்ஜுன்… இத யாத்ரா பாத்திருந்தா ஒரு கவிதையே சொல்லுவா டா…
“ஹேய் ரது டார்லிங்… நீ எப்ப டெல்லி வந்த?”, என கிறக்கமாக கேட்டான்.
அருகில் நின்றிருந்த நந்து இவன் பேசுவதுக் கண்டு தலையில் அடித்துக்கொண்டு வேறு பக்கம் சென்றான்..
“இப்ப தான் செழியன்.. நீங்க எங்க இருக்கீங்க?”, அவளும் இவனை காணும் ஆவலை குரலில் காட்டி பேசினாள்.
“இங்க தான் பேபி…. உன்ன பாத்து எவ்வளவு நாள் ஆகுது …. வா பாக்கலாம்”, என ஏக்கமாக அவன் பேசவது கண்டு, “இரண்டு நாள் தான் ஆகுது… வேலைய பாருங்க முதல்ல”, என நந்து அந்த பக்கம் பேசவும் யாத்ரா கடுப்பாகி, “அவன்கிட்ட போன் குடுங்க செழியன்”, எனக் கூறினாள்.
“மாட்டேன்…. நீ இங்க வா… முதல்ல உன்னை நான் பாக்கணும்… அப்பறம் அவன நீ என்ன வேணா பண்ணு…”
“நான் பரிதி டார்லிங் அ பாக்கணும் செழியன்…”
“நானும் தான்… வந்தா சேந்தே பாக்கலாம்ல”, என கொஞ்சினான்.
“சரி… எங்க இருக்கீங்க?”
“…….. ல இருக்கேன். பத்து நிமிஷத்துல ******** ஹோட்டல் வந்துடுவேன். ரூம் நம்பர் 205 வந்துடு”, எனக் கூறி வைத்தான்.
நந்துவை இழுத்துக் கொண்டு ஹோட்டலுக்குச் சென்றான்.
அவன் அங்கு சென்று இருபது நிமிடத்தில் யாத்ராவும் அங்கே சென்றாள். செந்தில் அவளை இறக்கி விட்டுவிட்டு சென்றான்..
“இப்ப எதுக்கு டா இங்க வந்தோம்? அங்க இன்னும் வேலை இருக்கு டா”, நந்து கேட்டான்.
“இருந்தா நீ போய் பாரு டா.. நான் என் ரது செல்லத்த பாக்கணும்…”, அர்ஜுன் வாசலைப் பார்த்தபடி கூறினான்.
“ஏன்டா அறிவுகெட்டவனே.. அப்பறம் என்னை ஏன்டா உன்கூட இழுத்துட்டு வந்த?”, நந்து ஆத்திரமாக கேட்டான்
“வண்டி ஓட்றதுக்கு தான்”, அலட்சியமாக பதில் கொடுத்தான்..
“உன்ன எல்லாம்….. “, என அவன் திட்டும் முன் யாத்ரா அறையை நெருங்கினாள்.
அவள் கதவு திறக்கும் சமயம் எதிர் அறையில் இருந்த உருவம் அவளை தன்னறைக்குள் இழுத்துக் கொண்டது.
அந்த உருவத்தைக் கண்டவள்…..