25 – அகரநதி
அகரன், நதியாள், சஞ்சய் மூவரும் அந்த ரெஸ்டாரெண்டின் உள்ளே நுழையும் சமயம் சக்ரதேவ்வும் , சரிதாவும் உள்ளிருந்து வெளியே வந்தனர்.
“ஹேய் அகர்…எப்படி டா இருக்க? ஹாய் நதியாள் எப்படி இருக்க?”, சக்ரதேவ்.
“நல்லா இருக்கேன் டா. நீ எப்படி இருக்க? ஹலோ சிஸ்டர்”, என அகரன் தேவ்விடம் பேசிவிட்டு சரிதாவிடம் நலம் விசாரித்தான்.
“சிஸ்டரா….. மிஸ்டர் நான் உங்களுக்கு சிஸ்டர் இல்லை. என்னை பேர் சொல்லி கூப்பிட்டா போதும்”, சரிதா அவசரமாகக் கூறினாள்.
“இப்ப என்ன தப்பா சொல்லிட்டாங்க. ஏன் இவ்வளவு பதட்டம் மிஸ்.சரிதா? ஹாய் தேவ். நான் நல்லா இருக்கேன். அத்தை மாமா பாட்டி எல்லாம் எப்படி இருக்காங்க?”, நதியாள்.
“முறை மாறி கூப்பிடக்கூடாது அதுக்காக சொன்னேன். நீ எங்கள விட சின்ன பொண்ணு தானே. பேர் சொல்லி கூப்பிடற… வீட்ல மரியாதை குடுக்க சொல்லித் தரலியா உனக்கு?”, சரிதா.
“யாருக்கு எப்ப தரணும்னு சொல்லி குடுத்து இருக்காங்க மிஸ்.சரிதா”, நதியாளின் குரலில் அழுத்தம் கூட்டிக் கூறினாள்.
சரிதா ஏதோ பேச வாயெடுக்கும் முன், ” சரிதா. அவ கேஸுவலா கூப்பிடறா. இத ஏன் பெரிசு பண்ற விடு. அகர் நம்ம க்ஷோரூம் ஓபனிங் வச்சி இருக்கேன். கண்டிப்பா நீங்க வரணும். நேர்ல வந்து கூப்பிடலாம்னு தான் வந்தேன். வீட்டுக்கு வரவா ஆபீஸுக்கு வரவா ?”, சக்ரதேவ்.
“ஆபீஸ் வாடா. நதியும் அங்க ஜாயின் பண்ணிட்டா ஒரே இடத்துல நீ இன்வைட் பண்ணிடலாம். டைம் இருந்தா வீட்டுக்கு வா ஒன்னும் பிரச்சினை இல்லை எங்களுக்கு”, அகரன்.
“அப்படியா. சரிதாக்கு இங்க பிரண்ட் வீட்டுக்கு போகணுமாம். அவள டிராப் பண்ணிட்டு நான் ஈவினிங் வரேன். அப்படியே வீட்டுக்கும் வரேன். நாளைக்கு தான் ரிட்டர்ன். சரிதா அவ பிரண்ட் வீட்ல தங்கிப்பா. நான் உங்ககூட தங்கிக்கவா?”, சக்ரதேவ்.
“கண்டிப்பா டா. சரி இப்ப எங்களுக்கு ஒரு மீட்டிங் இருக்கு. நீ சரணுக்கு கால் பண்ணு. நான் ஆபீஸ் வரதுக்கு எப்படியும் இன்னும் 3 ஹார்ஸ் ஆகிடும்”, அகரன்.
“சரிடா. நானும் இன்னும் கொஞ்சம் இன்வைட் பண்ணவேண்டியவங்கள பண்ணிட்டு அங்க வந்துடறேன். இப்ப கிளம்பறோம். பாய் டா”, என சக்ரதேவ் அகரனை அணைத்து விடைபெற்றான்.
“சரிடா. பாய்”,, என அகரனும் நதியாளும் பொதுவாக இருவருக்கும் விடைக் கொடுத்தனர்.
அவர்கள் சென்றதும் சஞ்சய் நதியாளிடம்,”யார் இவங்க? உன் திருவிழா போட்டோஸ்ல இருந்தாரே அவரா?”, என கேட்டான்.
“ஆமா டா. நாலு பேமிலி சொன்னேன்ல அதுல இவங்க பேமிலியும் இருக்கு. அவங்க அப்பா ஆட்டோபார்ட்ஸ் பிஸினஸ் பண்றாரு. இவரு இப்ப கார் க்ஷோரூம் ஸ்டார்ட் பண்றாரு”, நதியாள்.
“ஓஓஓ…அந்த பொண்ணு யாரு?”, சஞ்சய்.
“அது அவரோட அத்தை பொண்ணு. எனக்கு பெருசா பழக்கம் இல்ல”, நதியாள்.
“ம்ம்…. பார்வையே சரியில்லை”, சஞ்சய்.
“யார் பார்வை?”, நதியாள்.
“அந்த பொண்ணு பார்வை தான். அகரன் சார் சிஸ்டர்னு கூப்பிட்டதும் அப்படி பதறுது. உன்னையும் மொறச்சி பாக்குது. ஊருல எதாவது அந்த பொண்ணுக்கும் உனக்கும் பிரச்சினையா?”, சஞ்சய்.
“இல்ல ஜெய். அப்படி ஒன்னும் இல்ல. பாத்தேன் ஒரு டைம் பேசினேன் அவ்வளவு தான். அந்த பொண்ணும் அவளோட பிரதரும் கொஞ்சம் ஒதுங்கியே தான் இருந்தாங்க திருவிழால அத மட்டும் கவனிச்சேன்”, நதியாள்.
“ம்ம்.. சரி பாத்துக்கலாம். எதுக்கும் அந்த பொண்ணுமேல ஒரு கண்ணு வை. அகரன் சார பாத்த பார்வையே சரியில்லை”, சஞ்சய்.
“யார் எப்படி பாத்தா என்ன ? என் அகன் யாரையும் பாக்கமாட்டான்”, நதியாள்.
“அது எப்படி அவ்வளவு ஸ்டாராங்கா சொல்ற?”, சஞ்சய் அழுத்தமாகக் கேட்டான்.
“அது அப்படி தான். வா அகன் போயிட்டான்”,எனக் கூறி நதியாள் வேகமாக நடையைப் போட்டாள்.
” மேடம் எத்தனை தூரம் ஓடுவீங்க. ஒரு நாள் உண்மைய சொல்லித்தானே ஆகணும் அப்ப பேசிக்கறேன்”, என சஞ்சயும் மனதில் நினைத்தபடிப் பின்தொடர்ந்தான் அவளை.
அந்த ரெஸ்டாரெண்டின் மேனேஜர் மற்றும் ஓனர் இருவரும் அகரனை வரவேற்று மீட்டிங் ஹாலுக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த ரெஸ்டாரெண்டில் சிறியதாக இரண்டு மீட்டிங் ஹாலும் இருந்தது. அதில் ஒன்றில் இவர்கள் உள்ளே நுழைந்து தங்களின் வேலைகளை ஆரம்பித்தனர்.
அந்த ரெஸ்டாரெண்டின் ஓனர் தன் ரெஸ்டாரெண்டில் எந்த எந்த மாதிரியான கட்டிட அமைப்புகள், வசதிகள் தேவைப்படும், எதை எல்லாம் குறிப்பாக மாற்றவேண்டும் எனக் கூறினார். மேனேஜரின் ஆலோசனைகளையும் அகரன் கேட்டுக்கொண்டு எப்படி மாற்றியமைக்கலாம், எந்த அளவிற்கு பழமையும் புதுமையும் கலந்தக் கலவையாக உருமாற்றலாம் என விவாதித்தனர்.
ஸ்வப்னாவின் வழிகாட்டுதல்படி நதியாளும் சஞ்சயும் அகரனுக்கு தேவையானதை எடுத்துக் கொடுத்து ஓரளவு உதவியாகவும் இருந்தனர். பின்னர் இவர்களின் ஆலோசனைகளும் கேட்கப்பட்டது.
குறிப்பிட்ட தொகைக்குள் சிறப்பாக வேலையை முடித்து தருவதாக அகரன் வாக்களித்தான்.
குறைந்தது ஆறு முதல் எட்டு மாதங்கள் தேவைபடலாம் எனவும் அவர்களின் வழக்கப்படி நல்ல நாள் பார்த்து வேலையைத் தொடங்கலாம் எனவும் கூறினான் அகரன்.
டிசைன்கள் அனைத்தும் இன்னும் இரண்டு வாரங்களில் அவர்களிடம் காட்டி, ஒப்புதல் பெற்ற பின்பு வேலையை ஆரம்பிக்கலாம் எனக் கூறி அந்த மீட்டிங்கை முடித்துக்கொண்டனர்.
“ரொம்ப சந்தோஷம் சார். இந்த ரெஸ்டாரெண்ட் நான் இப்ப சார்ஜ் எடுத்து இருக்கேன். இதுல சிறப்பா நான் வியாபாரம் செஞ்சி தான் என்னை நிரூபிக்கணும். உங்களோட அணுகுமுறை எனக்கு ரொம்பவே திருப்தியா இருக்கு. நான் எதிர்பார்த்த மாதிரி செய்து குடுப்பீங்கன்னு நம்பறேன்”, ஓனர்.
“கண்டிப்பா சார். உங்களோட திருப்தியும் சந்தோஷமும் தான் எங்க வேலைக்கு கிடைக்கற வெகுமதி. கண்டிப்பா குடுப்போம். நாங்க கிளம்பறோம் சார்”, அகரன்.
“இருங்க சார். சாப்பிடற நேரத்துல சாப்பிடாம கிளம்பினா எப்படி? சாப்பிட்டுட்டு தான் போகணும். நீங்க எப்ப வேணா உங்க ஆளுங்கள அனுப்பி இங்க இடத்த பாக்க சொல்லலாம். வேற எதாவது தேவைன்னா மேனேஜர கான்டாக்ட் பண்ணிக்கோங்க”, ஓனர்.
“ஓகே சார். இல்ல வீட்டுக்கு கெஸ்ட் வராங்க. லன்ச் அங்க சொல்லிட்டேன். இன்னொரு நாள் கண்டிப்பா வந்து சாப்பிடறேன். நான் ரெகுலரா வரது இங்க தானே”, அகரன்.
“சரிங்க சார். தேங்க்யூ”,என ஓனர் கைக்குழுக்கி வழியனுப்பினார்.
நதியாளும் சஞ்சயும் விடைபெற்று அகரனின் பின்னால் ஓடினர்.
“ஏன் இப்படி ஓடறான்…? பசிக்குது . இங்க ஐட்டம்லாம் நல்லா இருக்கும் சாப்பிட்டுட்டு போனா என்னவாம்?”, நதியாள் முனகியபடி நடந்தாள்.
“சார்கிட்ட சொல்லவா?”, சஞ்சய்.
“ஒன்னும் சொல்லவேணாம். வா”, என எரிந்துவிழுந்தாள்.
“ஏன் யாள் இவ்வளவு டென்சன் ஆகற?”, சஞ்சய்.
“வேண்டுதல். கம்முன்னு வாடா”, நதியாளுக்கு பசியில் வெறி வர ஆரம்பித்திருந்தது.
“சீக்கிரம் வாங்க. எவ்வளவு நேரம் நடந்து வருவீங்க. ஸ்பீடா வரணும்”, அகரன்.
“சாரி சார்”, என சஞ்சய் ஓடி வந்து முன்னால் ஏறிக்கொண்டான்.
நதியாளும் முணுமுணுத்தபடி பின்னால் அமர்ந்து கார் கதவை அடித்து சாத்தியதில் தெரிந்தது அவளின் கோபம்.
அகரன் தனக்குள் புன்னகைத்துக்கொண்டுக் காரை எடுத்தான்.
கார் ஆபீஸ் செல்லும் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் செல்வதை கவனித்த சஞ்சய்,”சார் இப்ப எங்க போறோம்?”,எனக் கேட்டான்.
“போனதும் தெரியும் சஞ்சய். உங்க நதியாள் மேடம் ஏன் உம்முன்னு வராங்க?”, அகரன்.
“தெரியல சார். பசி எடுத்து இருக்கும்னு நினைக்கறேன்”, சஞ்சய் நதியாளைத் திரும்பிப் பார்த்தபடிக் கூறினான்.
“பசி வந்தா மேடம் உம்முன்னு ஆகிடுவாங்களா?”,அகரன்.
“ஆமா சார். பசி தாங்கமாட்டா”, சஞ்சய்.
“அப்படின்னு நான் எப்பவாது சொன்னேனா ஜெய்? நீங்களா ஒரு முடிவுக்கு வரக்கூடாது. எதுவா இருந்தாலும் பேசி க்ளியர் பண்ணிக்கணும்”, நதியாள் அகரனை ஓரக்கண்ணால் பார்த்தபடிக் கூறினாள்.
“அப்படி என்ன இருக்கு க்ளியர் பண்ணிக்கறதுக்குன்னு கேளுங்க சஞ்சய்?”, அகரனும் அவளிடம் வம்பிலுத்தான்.
“நேரடியா கேட்டா தான் சொல்லமுடியும்னு சொல்லு ஜெய்”, நதியாள்.
“அத நேரடியா சொன்னா தான் கேள்வியும் வரும்னு உங்க மேடமுக்கு ஏன் புரியல சஞ்சய்?”, அகரன்.
“பேசறப்ப வேணாம்னு சொல்லிட்டு இப்ப மட்டும் வாய் கிழிய கேள்வி கேக்கறது நியாயமான்னு கேளு ஜெய்?”, நதியாள்.
இவர்கள் இருவருக்கும் நடுவில் சஞ்சய் தான் மாட்டிக்கொண்டு முழித்துக்கொண்டு இருந்தான்.
“இன்னிக்கு இப்படி சிக்கிட்டனே…. அவளுக்கு ஆப்போஸிட்டா பேசினா அடிச்சே நம்மல காலி பண்ணிடுவா. இவருக்கு ஆப்போஸிட்டா பேசினா என்ன பண்ணுவாருன்னு தெர்லயே”, என மனதினில் தன் நிலைமை இன்று என்ன ஆகும் என அவனுக்கு அவனே பட்டிமன்றம் நடத்திக்கொண்டு இருந்தான்.
“என்ன சஞ்சய் தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க?”, அகரன்.
“ஒன்னுமில்ல சார். திலீப் காலைல ஸ்டைபன் பத்தி பேசிட்டு இருந்தான்ல அதைபத்தி யோசிச்சிட்டு இருத்தேன்”, சஞ்சய் சமாளித்தான்.
“ஹோ… அது வேற இருக்கா? உங்க மேடம் எவ்வளவு எதிர்பாக்கறாங்க ?”, அகரன்.
“அது சாரோட கம்பெனி ஜெய் அவர் தான் முடிவு பண்ணணும். நாம எவ்வளவு கேட்டாளும் குடுப்பாரா என்ன?”, நதியாள்.
“சுத்தம். டாபிக்க மாத்தினாலும் இரண்டு பேரும் டைவர்ட் ஆக மாட்டேங்கறாங்களே….ஆண்டவா என்னை எப்படியாவது இவங்க கிட்ட இருந்து காப்பாத்திரு”, சஞ்சய் மனதில் வேண்டுதல் வைத்துக்கொண்டான் திருதிருவென விழித்தபடியே.
“சார் ப்ளீஸ் …. உங்களுக்குள்ள என்ன சண்டைன்னு எனக்கு தெரியாது. என்னை இதுல பலி குடுத்துறாதீங்க. வீட்டுக்கு ஒரே பையன் நான். எதாவது ஏடாகூடமா நடந்தா எனக்கு தான் வீட்டுக்கு போனதும் பூஜை நடக்கும்”, என அகரனின் காதில் கிசுகிசுத்தான் சஞ்சய்.
“ஹாஹா…. அவ்வளவு பயமா மேடம் மேல? அப்படி என்ன பண்ணுவாங்க அவங்க கோவம் வந்தா?”, அகரன் ஆர்வமுடன் கேட்டான்.
“சார்.மெல்ல பேசுங்க. அவளுக்கு கோவம் வந்தா என்ன பண்ணுவான்னு நாம நினைச்சிக்கூட பாக்கமுடியாது அப்படி எதாவது பண்ணிடுவா. அப்பறம் கஷ்டம் நம்மளுக்கு தான். ஒன்னு அவளே அடிப்பா இல்லையா அடிவாங்க வச்சிருவா. மொத்தத்துல அடி மட்டும் கன்பார்ம்”, சஞ்சய் மெல்லமாகக் கூறினான்.
“ரொம்ப ஜாக்கிதையா இருக்கணுமோ?”, அகரன் யோசனையுடன் கேட்டுக்கொண்டே ஒரு பீச் ரெஸ்டாரெண்டில் நுழைந்தான்.
“ஆமா சார். சார் இங்க எதுக்கு வந்து இருக்கோம்?”, சஞ்சய்.
“பசி வந்தா தான் உங்க மேடம் அவங்களா இருக்கமாட்டாங்களே.. அதான் சாப்பிட கூட்டிட்டு வந்தேன்”, எனக் காரைவிட்டு இறங்கினான்.
அந்த ரெஸ்டாரெண்ட் ஊரை தாண்டி அமைதியான இடத்தில் கண்ணிற்கு ரம்மியமாக அமைத்து இருந்தனர்.
கடல் அலைகளை இரசித்தபடி அமர்ந்து சாப்பிட வாகாக டேபிள்களைப் போட்டிருந்தனர்.
அகரன் அவர்களுக்காக ஸ்பெஷலாக ஒரு டேபிளை புக் செய்து இருந்தான். நேற்று அவளை அடித்ததில் இராத்திரி எல்லாம் சரணிடம் புலம்பித் தள்ளிவிட்டான்.
இரவில் தூங்காமல் உருண்டுப் பிரண்டு சரணிடம் நான்கு அடிகளை வாங்கிய பின்னே, அவனை உறங்கவிட்டான். நாளை அவளிடம் மன்னிப்பு கேட்டுவிட வேண்டும் என்று தான் இந்த பீச் ரெஸ்டாரெண்டில் டேபிள் புக் செய்தான்.
அதன்படி அவளை அழைத்தும் வந்து விட்டான்.
“என்ன சஞ்சய் உங்க மேடமுக்கு இந்த இடம் பிடிச்சி இருக்கா?”,அகரன்.
இந்த இடைப்பேச்சு போதுமென நதியாள் சஞ்சயை அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லும்படி கண்களால் செய்கை செய்ய, அவனும் இதோ வருகிறேன் என அகரனிடம் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்துச் சென்றான்.
“என்ன கேக்கணும் அகன் உனக்கு?”, நதியாள் நேரடியாகக் கேட்டாள்.
“அவன ஏன் தூரமா அனுப்பின?”, அகரன் எதிர்கேள்வி கேட்டான்.
“நம்ம பிரச்சினை அவனுக்கு தெரியனும்னு அவசியம் இல்ல. என் பிரண்ட் தான் இருந்தாலும் அவனுக்கு தெரியறது எனக்கு இஷ்டம் இல்ல”, நதியாள்.
“ஏன்?”,அகரன்.
“ஏன்னா என்ன சொல்றது நம்ம இரண்டு பேருக்கு நடுவுல யார் வரதும் எனக்கு பிடிக்கல”, நதியாள்.
“அதான் ஏன்? நேத்து சரண் கிட்டயும் இதயே தானே சொன்ன?”, அகரன்.
“ஆமா. உனக்கு பதிலா அவன் மன்னிப்பு கேட்டான் அதான் சொன்னேன்”, நதியாள்.
“அவன் உன் அண்ணன். எனக்கு க்ளோஸ் பிரண்ட். ஸ்கூல்ல இருந்து ஒன்னா இருக்கோம். என் சார்பா அவன் கேட்டதுல என்ன தப்பு?”, அகரன்.
“நான் தப்பு சரிங்கற பேச்சுக்கு வரல அகன். நமக்கு நடுவுல யாரும் வரக்கூடாது. எதுவா இருந்தாலும் நாமதான் நேரடியா பேசிக்கணும். அவ்வளவு தான்”, நதியாள்.
“இதே சரண்கிட்டயோ இல்ல உன் பிரண்ட்ஸ் கிட்டயோ சண்டை வந்து அவங்களுக்கு பதில் நீ சமாதானம் பண்றதோ அபாலஜி கேக்கறதோ செஞ்சி இருக்கியா?”, அகரன்.
“ம்ம்… செஞ்சி இருக்கேன்”, நதியாள்.
“அப்ப நம்ம இரண்டு பேருக்கு நடுவுல மட்டும் உன் அண்ணனும் வரக்கூடாது, உன் பிரண்ட்ஸும் வரக்கூடாதுன்னு ஏன் சொல்ற?”, அகரன்.
“எனக்கு பிடிக்கல”, நதியாள்.
“இப்படி சொன்னா அத என்னால ஒத்துக்க முடியாது நதி”, அகரன் விடாப்பிடியாக அவனது கேள்வியில் நின்றான்.
“இப்ப ஏன் இதுல இவ்வளவு பிடிவாதமா கேக்கற அகன்? எனக்கு புரியல”, நதியாள் குழப்பத்துடன் கேட்டாள்.
“சரி நதி. நேரடியா கேக்கறேன். உன் மனசுல எனக்கான இடம் என்ன?”, அகரன் அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.
(என்ன இப்படி கேட்டுட்டான்? அந்த புள்ள என்ன சொல்லுமோ தெர்லயே)
“இந்த கேள்வியை திருவிழாவில் கேட்டு இருந்தால், நிச்சயமாக யோசிக்காமல் பதிலளித்திருப்பாள் என் தோழன், நலம்விரும்பி இப்படி …. ஆனால் இப்பொழுது….. அவனின் மேல் ஏற்பட்டு இருக்கும் ஈர்ப்பு….. இப்பொழுது தான் அதைப் புதிதாக உணர்ந்திருக்கிறாள். அவனை ஆண்மகனாக இரசிக்க ஆரம்பித்து இருக்கிறாள். அவனின் கண்கள், சிரிப்பு, நடை, கம்பீரம், நிர்வாகத்திறன் இப்படி அவனின் அத்தனையும் அவளைக் கவர்ந்திழுத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கான விடை இன்னும் அவளுக்குமே தெரியவில்லை. இப்பொழுது என்ன பதில் அவனுக்கு கூறுவது???”, என மனதிற்குள் குழம்பியபடி அவனைப் பார்த்தாள்.
அவனும் அவளின் முகபாவங்களைக் கண் இமைக்காமல் கூர்ந்து கவனித்தபடிப் பார்த்துக்கொண்டு தான் இருந்தான். அவளின் மனம் அவளுக்கே இன்னும் புரியவில்லை என்று நன்கு அவன் உணர்ந்தபின் தானே இப்படி ஒரு கேள்வியைக் கேட்டான். இந்த கேள்வி அவளை யோசிக்க வைக்கும். அவளுக்கு அவளின் மனம் தெளிய வைக்கும். பார்க்கலாம் எப்பொழுது தெளிகிறதென…..
“நீ என் அகன். இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல”, நதியாள்.
“ஹ்ம்ம்….. உனக்கு இன்னும் புரியல நதி. சரி விடு. பொறுமையா யோசிச்சி பதில் சொல்லு. சஞ்சய கூப்பிடறேன் சாப்பிட்டு கிளம்பலாம்”, எனக் கூறிவிட்டு சஞ்சயை அழைத்து அவர்களுக்கு வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு, அந்த ரெஸ்டாரெண்டில் என்ன என்ன மாற்றங்கள் கொண்டு வரலாம் எனப் பேச ஆரம்பித்துவிட்டனர் அவர்கள் இருவரும்.
நதியாள் அவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல், தன்னைத் தானே கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தாள். அகரன் யார் நமக்கு? அவனுக்கான இடம் என் மனதில் என்ன? ஏன் யாரும் எங்களுக்கு நடுவில் வரக்கூடாது? இப்படி பல கேள்விகள் அவள் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி ஆபீஸ் வந்து சேர்ந்தனர். அகரனின் அறையிலேயே நதியாளுக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. சஞ்சய்க்கு சரணின் அறையில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. மீரா,ரிஸ் ஸ்வப்னாவுடனே அழைந்தபடி இருக்க, ஸ்டெல்லாவும் திலீப்பும் சண்டை பிடித்தபடி சரண் கூறிய டிசைன்ஸ் வரைந்தபடி இருந்தனர்.
நதியாள் அகரனின் அறையில் யோசனையுடனே அமர்ந்து ஏனோ தானோவென வேலைகளைச் செய்துக் கொண்டு இருந்தாள். அவளை அவ்வப்பொழுதுக் கவனித்த அகரன், இப்படியே இருந்தாள் அவள் ஒரு வேலையும் செய்யமாட்டாள் என அவளை அழைத்து அவன் கூறும் அனைத்துப் பணிகளையும் செய்யவைத்தான்.
அவன் கொடுத்த வேலையில் நதியாள் சற்றே சிந்தனையில் இருந்து வெளியே வந்திருந்தாள்.
அந்த ஆபீஸில் முதல் நாள் அனைவருக்கும் நன்றாகவே கழிந்தது. நதியாள் செல்லும்போது அவளை அழைத்தான் அகரன்.
“நதிமா…. இங்க வா”, அகரன்.
“சொல்லுங்க சார்”, நதியாள்.
“ஆபீஸ் டைம் முடிஞ்சது நதிமா. எப்பவும் போல கூப்பிடு”, அகரன்.
“இல்ல பரவால்ல சார். ஆபீஸ்ல இந்த ரெஸ்பெக்ட் மஸ்ட். வெளிய பாக்கறப்ப எப்பவும் போல பேசிக்கலாம்”, நதியாள்.
“ம்ம். மேடம் கொஞ்சம் ஸ்ரிக்ட் தான் போல”, என மனதிற்குள் நினைத்துவிட்டு,”சரி. இங்க வா பக்கத்துல”,என அருகில் அழைத்தான்.
அவள் அருகில் வந்ததும் அவளது முகத்தை கைகளில் ஏந்தி கன்னத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான்.
“என்ன பாக்கறீங்க?”, நதியாள்.
“இல்ல. நேத்து அடிச்சதுல கன்னம் சிவந்து போச்சின்னு சரண் சொன்னான் அதான் இன்னும் சிவந்திருக்கான்னு பாத்தேன்”, அகரன்.
அவனின் கைகளை தட்டிவிட்டு,” அடிச்சதுக்கு இன்னும் சாரி கேக்கணும்னு தோணல இதுல என்ன அக்கறை?”, நதியாள்.
“ப்பா…. அவ்வளவு கோவமா நதிமா?”, அகரன்.
“ஆமா…”, நதியாள் திரும்பி நின்றுக் கொண்டாள்.
“இந்த பக்கம் திரும்பு. இங்க பாரு”, என அவளைத் தன் பக்கம் திருப்பினான் அகரன்.
அவளும் அமைதியாக மேலே வேறெங்கோ பார்த்தபடி நின்றாள்.
“சாரி கேக்கணுமா?”,அகரன் ஒருமாதிரி மென்மையானக் குரலில் கேட்டான்.
“ஆமா”, வெடுக்கென்று பதில் வந்தது நதியாளிடம்.
“சரி”, எனக் கூறி அவளின் முகத்தை அருகில் இழுத்துக் கன்னத்தில் இதழ் பதித்தான். சாரி எனக் கூறிவிட்டு இன்னொரு கன்னத்திலும் இதழ் பதித்தான்.
நதியாள் அப்படியே சிலையாக நின்றுவிட்டாள் அவனின் இதழ் ஸ்பரிசத்தில். இது முதல் முறை அல்ல தான்….. ஆனாலும் மனதில் தோன்றிய ஈர்ப்பிற்கு பின் கிடைத்த முதல் இதழ் ஒற்றல். வயதிற்கு உரிய மின்சார பரிமாற்றம் உடலில் ஓடிக்கொண்டிருக்க, அவளின் மனநிலை தான் என்னவென்று புரியவில்லை.
“என் சாரி அக்சப்ட் பண்ணிட்டியா பேபி?”, அகரன்.
நதியாள் அவனை இமைக்க மறந்து விழி விரித்துப் பார்த்தபடி நின்றுத் தலையசைத்தாள்.
“சரி. நாளைக்கு பாக்கலாம் பாய் நதிமா. பத்திரமா போங்க”, என தன் இடத்திற்குச் சென்று அமர்ந்துகொண்டான் அகரன்.
இவையனைத்தையும் கண்ட இன்னொரு ஜீவன் கதவின் அருகிலேயே அதிர்ச்சியில் சிலையாக நின்றது……..