25 -காற்றின் நுண்ணுறவு
“பெரியப்பா…. பெரியப்பா…. எங்க இருக்கீங்க?”, பாலாவும் வல்லகியும் பிறைசூடனைத் தேடியபடி அந்த ரிசர்ச் லேப்பில் நுழைந்தனர்.
அங்கே அவர் கணினியில் எதையோ பார்த்தபடி குறிப்பெடுத்துக்கொண்டிருந்தார்.
“இராத்திரி முழுக்க தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க பெரியப்பா? நேத்து நாங்க இங்கிருந்து போனப்ப உட்கார்ந்து இருக்கற பொசிஷன்லயே நீங்க இன்னும் இருக்கீங்க ……”, பாலா அங்கலாய்த்தபடி அவரின் அருகில் வந்து அவரைத் தங்கள் பக்கம் திருப்பினாள்.
“வேலைன்னு வந்தா நான் தமிழன்டா”, என கெத்தாக காலரைத் தூக்கி விட்டுக்கொண்டார்.
“அது வெள்ளைக்காரன்னு தானே சொல்லுவாங்க”, பாலா தன் சந்தேகத்தைக் கேட்டாள்.
“வெள்ளைக்காரன் என்னிக்கு உடம்பு வலஞ்சி வேலை செஞ்சி இருக்கான். டைம் ஆனா ஓடிறுவானுங்க… நம்ம தான் வேலைய கைல எடுத்தா கடைசி வரைக்கும் நின்னு செய்வோம்.. சரி தானே பெரியப்பா?”, வல்லகி சிரித்தபடி அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு பின்னர் டீ கொடுத்தாள்.
“சரிதான் டா…. அவங்களுக்கு எல்லாமே அவங்க பிக்ஸ் பண்ண நேரத்துல நடக்கணும். டைம் முடிஞ்சா ஓடிறுவாங்க…. வேலை முடிஞ்சாலும்… முடியலன்னாலும் “, எனக் கூறிவிட்டு சிறிது தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
“சரி சொல்லுங்க… இராத்திரி முழுக்க கண்முழிச்சி என்ன கண்டுபிடிச்சீங்க ?”, பாலா விஷயத்திற்கு வந்தாள்.
“கொஞ்சம் கொஞ்சமா…. கண்டுபிடிச்சிட்டு இருக்கேன் “, எனக் கூறிவிட்டு அவர் எடுத்த குறிப்புகளை இன்னொரு கணினியில் பதிவேற்றினார்.
அந்த கணினி அவர் கொடுத்த தகவல்களை ஆராய ஆரம்பித்து சில முடிவுகளை சில நொடிகளில் அவர்களுக்குக் காட்டியது.
வல்லகியின் உடல் அழுத்தங்கள், மூச்சுக்காற்றின் நிலைத்தன்மை , மூளையின் செயல்பாடுகள், என அனைத்தும் நேற்று காலையில் இருந்ததை விட இப்போது ஒரு மடங்கு அதிகரித்திருந்தது.
அவள் தசைகளும்,எலும்பும் முன்பைவிட பலம் பெற்று இருக்கிறது.
அவள் உடலின் இலகுத்தன்மை முன்பை விட இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதும் அவருக்கு ஆச்சரியப்படுத்தியது.
“வல்லகி…. இதே ஸ்பீட்ல போனா நீ தான் இந்த உலகத்தோட ஸ்டாங் அண்ட் ஹைலி ப்ளக்ஸிபுள் லேடியா இருப்ப…. நேத்து காலைல நாம பாத்த ரிசல்ட்டுக்கும் இன்னிக்குமே நிறைய வித்தியாசம் இருக்கு… எனக்கு இன்னொரு தடவை யோசிச்சி சொல்லு… நீ அடிபட்டு இருந்தப்ப என்ன நடந்தது? யாராவது ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் பண்ணாங்களா?”, என மீண்டும் கேட்டார்.
“நான் தான் சொன்னேனே பெரியப்பா…. இவள ஹாஸ்பிடல்ல சேத்தின கொஞ்ச நேரத்துல கடத்திட்டு போயிட்டான் அந்த வீணாபோன ஜிதேஷ். அப்பறம் இனியன் சாரும், தர்மா சாரும் தான் தேடி கண்டுபிடிச்சி தூக்கிட்டு வந்தாங்க. அவங்க வந்தப்ப நிறைய வித விதமான செடிங்களை இவளோடவே தூக்கிட்டு வந்தாங்க. முன்னயே இவளுக்கு ஆக்ஸிஜன் மாஸ்ட் போட்டப்ப அது ஒத்துக்கல தான். அப்பவும் டாக்டர் செடிய தான் தூக்கி வச்சிருந்தாரு…. ஆனா இவள காட்டுக்குள்ள இருந்து கண்டுபிடிச்சி தூக்கி வந்ததா அவங்க சொன்னாங்க.. அங்க காட்டுவாசிங்க இவளுக்கு ஏதோ வைத்தியம் செஞ்சி இருக்காங்க.. இத நூத்திபத்தாவது தடவை நீங்க கேட்டு நானும் சொல்லிட்டேன்”, என கூறிவிட்டு அவருக்கு கொண்டு வந்திருந்த நீரை இவள் முழுதாக அருந்திவிட்டு அவர்களைப் பார்த்தாள் பாலா.
“அந்த செடியும் நாம இங்க கொண்டு வந்து நாலு நாள் ஆகுது…. அதையும் நீங்க பாத்துட்டீங்க… எனக்கு என்ன நடந்ததுன்னு தெரியல பெரியப்பா… இவளும் இனியன் சாரும் சொன்னத வச்சி தான் நான் அதுல்லாம் தெரிஞ்சிகிட்டேன்…. அந்த கார் இடிச்சப்பவே எனக்குள்ள ஏதோ மாற்றம் நடந்திருக்கணும்… அதோட தொடர்ச்சியா காட்டுக்குள்ள அவங்களுக்கு தெரிஞ்ச வைத்தியம் செஞ்சிருக்கலாம்… இதுக்கு மேல எனக்கும் எதுவும் தோணல… “, வல்லகியும் கூறிவிட்டு அவரின் எதிரில் நின்றாள்.
“எக்ஸாட்லி…. அந்த கார் உன்ன இடிச்சதுல உனக்குள்ள இருக்கற ஏதோ ஒரு ஸ்விச் ஆன் ஆகி இருக்கணும். தவிர இந்த மூலிகைல பாதி தான் நம்ம பாத்திருக்கோம். மீதி எல்லாம் ரொம்ப புதுசா இருக்கு…. இதுல எனக்கு தெரிஞ்ச மூலிகைகள் எல்லாமே உன்ன ஹீல் பண்ணி இருக்கு.. உனக்குள்ள ஏற்படுற தடைகளையும், சிரமத்தையும் விலக்க வழி செய்யுது… இந்த ஒரு மாசத்துல நீ கடந்து வந்த நாட்கள்ல நிறைய மாற்றங்கள் உனக்குள்ள ஏற்பட்டு இருக்கு. உனக்குள்ள இருந்த அழுத்தம் கொஞ்சம் குறைஞ்சதால உன் செயல்திறன் இப்ப ஓரளவுக்கு வெளிய தெரியுது…. இது எல்லாம் வச்சி பாக்கறப்ப… ஒரு சித்தர் பாடின பாட்டுபடி, உன்ன உயிரோட புதைச்சி எடுத்து செய்யக்கூடிய செய்முறை உனக்கு நடந்திருக்கணும். அதனால தான் உனக்கு இவ்வளவு மாற்றங்கள் நடந்துட்டு இருக்கு… ஆனா அந்த செய்முறை செய்ய எத்தனை நாள் ஆகும்னு எனக்கு தெரியல. நீ காணாம போன ரெண்டு நாள்ல அது நடந்திருக்குன்னா, அதுக்கும், உனக்கு ஆக்ஸிடண்ட் நடந்ததுக்கும் சம்பந்தம் இருக்கா? செத்து பொழச்சா ஏற்பட்ற மாற்றங்கள் உனக்குள்ள நடந்துட்டு இருந்தா , நீ செத்து மறுபடியும் பொழச்சி இருக்கணும் வல்லகி”, தன் மனதில் தோன்றியதை ஒவ்வொன்றாகக் கோர்த்தபடி வந்தார்.
“அப்ப இவ பேயா பெரியப்பா?”, பாலா சற்றுப் பயத்துடன் வல்லகியை விட்டுத் தள்ளி நின்றபடிக் கேட்டாள்.
“இல்லடா…. நாம கம்ப்யூட்டர் அப்டேட் பண்றதுக்கு ஆப் ஆகி, ஆன் ஆகற மாதிரி வல்லகிக்கு நடந்திருக்கணும்”, என பிறைசூடன் தனது யூகத்தைக் கூறினார்.
“இருக்கலாம் டாக்டர் பிறைசூடன்…. ஆனா இதுக்கு மேல இந்த ஆராய்ச்சிய நான் பாத்துக்கறேன். நீங்க விலகிடுங்க… வயசாயிடிச்சில்லயா… சோ ரெஸ்ட் எடுத்துக்கோங்க…. பாய்ஸ்….. அந்த சப்ஜெட்ட எடுத்துட்டு வாங்க”, என்றபடி மாமல்லன் அவ்விடம் வந்தான்.
“ஹலோ… யார் மிஸ்டர் நீங்க? உங்கள யார் உள்ள விட்டது?”, பிறைசூடன் வல்லகியை தன் பின்னால் மறைத்தபடி முன்னால் வந்தார்.
“நான் டாக்டர் மாமல்லன். நீங்க என்னை பத்தி கேள்வி பட்டிருப்பீங்களே டாக்டர் பிறைசூடன்”, என கைக்குலுக்க முன்னே வந்து நீட்டினான்.
“வணக்கம்….. நீங்க என்னை பார்க்க எந்த அப்பாயிண்ட்மெண்ட்டும் வாங்கலியே…. தவிர செக்யூரிட்டி மீறி நீங்க என் லேப் வரைக்கும் வந்தது எனக்கு சுத்தமா பிடிக்கல…. நீங்க போயிட்டு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டு வாங்க”, என வாசல் பக்கம் கைநீட்டினார்.
“வெறும் நாலு ரோபோவும், இன்ட்ரா கனெக்டெட் சர்வைலன்ஸ் லாக்கிங் சிஸ்டம் வச்சிட்டு இருக்கறது ரொம்பவே தப்புன்னு உங்கள பாத்து நான் புரிஞ்சிகிட்டேன் டாக்டர். நான் இனி மனுசங்களையும் காவலுக்கு வைக்கணும் தான் போல… சரி அது என் பிரச்சினை. நீங்க அந்த சப்ஜெட்ட எடுத்துட்டு போக விட்டா நான் அமைதியா போயிடறேன்”, என வல்லகியைக் கைக்காட்டிக் கூறினான்.
“ஏது சப்ஜெட்டா…. மிஸ்டர்… அவ என் பிரண்ட்…நோட் புக் இல்ல…. ஒரு உயிருக்கு மதிப்பும் மரியாதை குடுக்க தெரியல யார் நீ? வெளியே போ… ஆளுங்கள கூட்டிட்டு வந்தா நீ பெரிய இவனா? பெரியப்பா போலீஸுக்கு கால் பண்ணுங்க”, பாலா கோபத்துடன் பேசினாள்.
“நீ வேஸ்ட் ஆப்ஜெட்…. வாய் மூடு…பாய்ஸ்…. கெட் த சப்ஜெட்”, என தன் அடியாட்களுக்கு உத்திரவிட்டான்.
வல்லகி சிரித்தபடி முன்னே வந்து நின்று,”மிஸ்டர்… டாக்டர் நிரல்யன் எங்க?”, எனக் கேட்டாள்.
“ஷார்ப் சப்ஜெட்… அவன் இன்னொரு சப்ஜெட்டா என் லேப்ல தான் இருக்கான். நீயும் வந்தா என் ஆராய்ச்சி கம்ப்ளீட் ஆகிடும்”, மாமல்லன்.
“உயிரோட மதிப்பு தெரியாத ஆள் நீ…. நீயெல்லாம்”, என வாயிற்குள் எதோ முனகிவிட்டு, “முதல்ல வெளியே போ…. என் பெரியப்பாவ டென்ஷன் பண்ணாத”, என வெளியேற உத்திரவிட்டாள்.
அவள் கூறிமுடிக்கும் முன் மைக்ரோ இன்ஜெக்ஷனை ஓங்கிய படி ஒருவன் அவள் அருகே வந்தான்.
அவளின் கழுத்தை குறிவைத்து வந்தவன், பக்கவாட்டில் கழுத்து திரும்பியபடி கீழே விழுந்தான்.
“ஒரே அடில விழுந்துட்டான்… இன்னும் கொஞ்சம் ஸ்ட்ராங் பாய்ஸ் அ நீ கூட்டிட்டு வந்திருக்கணும் மாமல்லன்”, எனக் கூறியபடி அவனைத் தாண்டி முன்னே வந்தாள்.
மற்ற நால்வரும் ஒரே சமயத்தில் அவளை நோக்கி வர,”நீங்க இந்த டெக்னிக் மாத்தமாட்டீங்களே”,என சிரித்தபடி அங்கிருந்து புல்வெளிக்கு ஓடினாள்.
“பெரியப்பா இப்ப நிஜமா அடிக்க போறேன். இப்ப ஒரு மைக்ரோசெகண்ட் கூட விடாதீங்க… கேப்சர் பண்ணிடுங்க”, எனக் கூறிவிட்டு கையை மடக்கி முகத்திற்கும், உடலிற்கும் அரணாக வைத்துக் கொண்டாள்.
அவர்கள் அனைவரும் அவளை மயங்க வைக்கும் மைக்ரோ இன்ஜெக்ஷனுடனே அவளைத் தாக்க வந்தனர்.
மாமல்லன் அவளைக் கூர்ந்துக் கவனித்தான்.
திடமாக கால்களை ஊன்றி, கைகளை மடக்கி, முகத்தில் சிரிப்பு மாறாமல் நின்று அந்த அடியாட்களை எதிர்கொண்டாள்.
நால்வரும் நான்கு பக்கமும் அவளைத் தாக்கத் தொடங்க, வல்லகி முதலில் சாதாரண தற்காப்பு வித்தைகளை மட்டும் பயன்படுத்தி வந்தாள்.
குனிந்து, தாவி, நகர்ந்து என அசால்ட்டாக அவள் அவர்களின் தாக்குதலில் தப்பித்துக் கொண்டிருப்பதுக் கண்டு பிறைசூடனே உள்ளுக்குள் உறைந்து தான் போனார்.
பாலா அவளை வைத்தகண் வாங்காமல் கைத்தட்டி விசிலடித்து, அவளை உற்சாகப்படுத்தியபடி இருந்தாள்.
“சூப்பர் வகி…. அதோ அந்த பக்கம் வரான் பாரு….இந்த பக்கம் உன் கால பிடிக்க வரான் அவன மிதி….அவனுங்க இரண்டு பேரும் உன்ன பின் பக்கமாக அடிக்கவரானுங்க பாரு”, பாலா கூறக் கூற வல்லகி நான்கு பக்கமும் நின்று நிதானமாக அவர்களின் தாக்குதலில் இருந்து தப்பித்து அவர்களைக் காயப்படுத்திக்கொண்டிருந்தாள்.
கிட்டதட்ட முக்கால் மணி நேரமாக அவளை மயக்கமடைச் செய்ய அவர்கள் ஐவரும் போராடிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் கை அவள் உடையைக் கூட தொட முடியாதபடி அசுர வேகத்தில் அவள் தன்னைத் தற்காத்துக்கொண்ட விதம், மாமல்லனை மட்டுமின்றி பிறைசூடனையும் வியப்புற வைத்தது. நொடிக்கு நான்கு அடிகளை அடியாள்கள் ஐவரும் பெற்றனர்.
அவளுக்கு எதுவும் ஆகக்கூடாது என்பதால் அத்தனை நேரம் நிதானமாக தாக்கியவர்கள், அவள் சிரிப்புடனே சிறுகுழந்தையிடம் விளையாட்டுக் காட்டுவதுப் போலவே தாக்கியது அவர்களைக் கோபப்படுத்தியது.
ஊசியை எறிந்துவிட்டு கத்தியை எடுத்துக்கொண்டனர்.
“சப்ஜெட்க்கு எதுவும் ஆகக்கூடாது பாய்ஸ்…. “, மீண்டும் மாமல்லன் குரல் கொடுத்தான்.
“அவனுங்களுக்கு எதுவும் ஆகக்கூடாதுன்னு நீ வேண்டிக்க டா முட்டைகோஸ் மண்டையா”, பாலா சிரித்தபடி வல்லகியின் அடுத்த ஆட்டத்தைக் காண ஆவலாக இருந்தாள்.
“பாலா கம்ப தூக்கிபோடு”
பாலாவும் ஓடிச்சென்று கம்பை எடுத்துவந்து தூக்கிப்போட்டாள்.
“வகி… இப்ப டி.ஆர் பாட்டு பாடினா செமயா இருக்கும்ல?”.
“அத நீயே பாடு”
“வாடா என் மச்சி வாழக்கா பஜ்ஜி… உன்னுடம்ப பிச்சி …. போடப் போறேன் பஜ்ஜி”, என பாலா சொடக்கு போட்டு பாடியபடி சுவாரஸ்யமாக நின்றிருந்தாள்.
வல்லகி கம்பை வைத்து சுழற்றி தன் உடலை அதற்கு தகுந்தாற்போல இலகுபடுத்திக்கொண்டு, பாலா பாடும் பாட்டிற்கு ஏற்றபடி ஆடிக்கொண்டிருந்தாள்.
“இன்னும் என்ன தயக்கம்? வாங்க நான் ரெடி”, என வல்லகி மந்தகாசச் சிரிப்புடன் கூறினாள்.
நால்வரும் ஒரே பக்கமாக அவளைக் கத்தியால் குத்த வர, கம்பை வைத்து நால்வரையும் தடுத்து காலால் எட்டி உதைத்தாள்.
சிறு பெண் எத்தனை நேரம் தாக்குபிடிப்பாள் என தப்பாகக் கணக்கிட்டு, அவர்கள் மீண்டும் மாறி மாறித் தாக்க வல்லகியின் அருகில் கூட நெருங்க முடியாமல் அடிபட்டுக் கீழே விழுந்தனர்.
வலது பக்கம் ஒருவன் அவள் தோளைக் குறி வைத்துப் பாய, பின்பக்கம் அவளது முதுகை குறிவைத்து ஒருவன் பாய்ந்தான். இருவரையும் சமாளிக்கும் நேரத்தில் அவளின் மறுபுறத்தில் கத்தி பறந்து வந்தது.
நொடிக்கும் குறைவான நேரத்தில் அவர்கள் இருவரையும் எட்டி உதைத்துவிட்டு அந்த கத்தியைப் பிடித்து வந்த திக்கலேயே எறிந்தாள்.
கத்தியை வீசிய மாமல்லன் அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்துக் கொண்டான்.
அவளது உடல் அசைவுகள், வேகம், விவேகம் என அனைத்தும் நேரில் கண்டதும் அவளை எப்படியாகினும் தூக்கிச் செல்ல வேண்டுமென்ற வெறி அதிகமாகியது.
அரைமணிநேரத்தில் அவன் அடியாட்கள் அனைவரும் இரத்தம் வழிய கீழே சரிந்தனர்.
“பாலா போலீஸ்க்கு கால் பண்ணியா?”
“பண்ணிட்டேன் வல்லகி”, பின்னிருந்து பிறைசூடன் பதில் கொடுத்தார்.
“இவன் லேப்ல இருக்கற டாக்டர காப்பாத்தணும்… ரோபோ மாஸ்….. அரெஸ்ட் ஹிம் … போலீஸ் வர்ற வரைக்கும் அவன் நகர கூடாது…. “,எனக் கட்டளையிட்டுவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தாள்.
“கிங்காங்… வந்து இவனுங்கள கட்டிப்போடு”, என பாலா அடியாட்களைக் கட்டிப்போட மற்றொரு ரோபோவுக்கு கட்டளையிட்டாள்.
“ரொம்ப தப்பு பண்ற நீ…. “, மாமல்லன்.
“உன்னவிட இல்ல”
“நான் ஆராய்ச்சி பண்ற டாக்டர்”
“நீ டாக்டர்-ன்னு சொல்லவே தகுதி இல்லாதவன்… ஒரு உயிர மதிக்கவும் தெரியல, அதோட வேல்யூவும் தெரியல…. “, வல்லகி வெறுப்புடன் ஒரு பார்வைப் பார்த்துக் கூறினாள்.
“ஒரு விஷயம் கண்டுப்பிடிக்கணும்னா இதுல்லாம் சகஜம்…. பிறைசூடன் பண்ணாத தப்பையா நான் பண்ணிட்டேன்”, மாமல்லன் பிறைசூடனை இழுத்தான்.
“அவரு இங்க மனுஷங்கள சோதிக்க அனுமதி குடுக்கலன்னு தான் வெளிநாடு போனாரு… உன்னமாதிரி எலியாட்டம் மனுஷங்கள அடச்சி வைக்கல… கடத்தவும் செய்யல”, பாலா.
“அப்படியா…. டாக்டர்… பிறைசூடன்… உங்களோட மறுபக்கம் இவங்களுக்கு தெரியாது போலவே”, மாமல்லன் ஒருமாதிரி சிரித்தபடிக் கூறினான்.
“ஷட்சப்…. வல்லகி பாலா…. போலீஸ் வந்துட்டாங்க…. இனி அவங்க பாத்துப்பாங்க .. நீங்க உள்ள போங்க….”, ஆத்திரத்துடன் அவனைப் பார்த்துக் கத்திவிட்டு, இவர்களிடம் அமைதியாகக் கூறினார்.
“இல்ல பெரியப்பா… டாக்டர் நிரல்யன காப்பாத்தணும்.. நாங்க போய் அவர பாத்துட்டு வரோம்… நீங்க அதுவரைக்கும் ரெஸ்ட் எடுங்க”, எனக் கூறிவிட்டு வல்லகி போலீஸாரிடம் விஷயத்தைக் கூறி தானும் உடன் சென்றாள்.
மாமல்லன் பிறைசூடனைப் பார்த்துச் சிரித்தபடி அருகில் வந்து, “நல்லாவே நடிக்கறீங்க …. சீக்கிரம் பாக்கலாம்”, எனக் கூறிவிட்டு போலீஸாருடன் சென்றான்.
மாமல்லனின் லேப்பில் சுயநினைவின்றி கிடந்த நிரல்யனை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, அவன் தங்கைக்குத் தகவல் கொடுத்து அவள் வந்தபின் அங்கிருந்துக் கிளம்பினர்.
மேலும் அந்த லேப்பில் பல உயிரற்ற சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. உயிரோடு பலரை அவன் ஆராய்ச்சிக்காக பலியாக்கியது ஆதாரங்களுடன் கிடைத்தது.
வல்லகியும் பாலாவும் அவையனைத்தையும் பார்த்துவிட்டு,” சே… ஆராய்ச்சிக்காக என்ன என்ன பண்றாங்க…. எத்தன பேர இவனே கொன்னிருக்கான்…. எப்படி துடிதுடிச்சிருப்பாங்க அவங்க எல்லாம்…….”, பாலா அடங்காதக் கோபத்துடன் பேசினாள்.
“பாலா… நீ ஊருக்கு கிளம்பு”, வல்லகி யோசனையுடன் கூறினாள்.
“ஏன் வகி? நீ மட்டும் தனியா என்ன பண்ணுவ? உனக்கு ஹெல்ப் பண்ண தானே நானும் வந்தேன்”, பாலா ஏதும் புரியாமல் கேட்டாள்.
“இத விட பல மடங்கு ஆட்கள பிறைசூடன் ஆராய்ச்சி பண்ண கொன்னிருக்காரு…. அங்கிருந்து வெளியே வர சந்தர்ப்பம் பாத்துட்டு இருந்தேன். இப்ப கெடச்சிருக்கு. நீ இப்டியே கிளம்பு…. “, வல்லகி உணர்ச்சியற்றக் குரலில் கூறினாள்.
“என்ன சொல்ற வகி? நம்ம பெரியப்பாவா? எப்படி உனக்கு தெரியும்?”, பாலா அதிர்ச்சியுடன் கேட்டாள்.
“நாம வந்த அடுத்த நாள் சிஸ்டம் நோண்டினேன்ல .. அப்பவே பாத்தேன். தனியா அந்த பைல்ஸ் சேவ் பண்ணி நைட் பாத்தேன். அதிர்ச்சியா தான் இருந்தது. அவரோட நோக்கம் இப்ப எப்படி இருக்குன்னு தெரிஞ்சிக்க தான் அவருக்கு தீனி போட்றமாதிரி எனக்குள்ள இருக்கற மாற்றங்கள ஓரளவு சொன்னேன்”, வல்லகி ஒரு நொடி நிதானித்து, “நாளைக்கு என்னை அராப் கண்ட்ரிக்கு கடத்திட்டு போகப் போறாரு…. நீ அப்பா அம்மா கூட இரு”, எனக் கூறினாள்.
“மாட்டேன்… உன்ன தனியா விடமாட்டேன்னு அப்பாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன்… யாரை நம்பறது யார நம்பக்கூடாதுன்னு தெரியாத சூழ்நிலைல உன்ன தனியா நான் எப்பவும் விட்டுட்டு போகமாட்டேன் வகி”, என அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டாள் பாலா.