26 – அகரநதி
அகரன் நதியாளிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தைப் பார்த்துக் கதவருகில் நின்ற உருவம் அதிர்ச்சியில் உறைந்து நின்றது.
நதியாள் கதவை நோக்கித் திரும்பும் சமயம் தான், அந்த உருவத்தைக் கவனித்தாள். சட்டென்று அகரனை திரும்பிப் பார்க்க இன்னும் நதியாள் அப்படியே நிற்பதைக் கண்டு, அவனும் அவளை பார்த்துவிட்டு அவளின் பார்வைக் கதவருகில் நிற்பதைக் கண்டு, அவனும் பார்க்க அந்த உருவத்தைக் கண்டான்.
“தாத்தா….. எப்ப வந்தீங்க?”, அகரன் எழுந்து அவர் அருகில் சென்றான்.
அங்கே நின்றது வேரு யாரும் இல்லை நம் சுந்தரம் தாத்தா தான். வேறு ஒரு வேலையாக சென்னை வந்தவர், அகரனை கண்டுவிட்டு செல்லலாம் என அவனின் ஆபீஸிற்கு வந்தார். வந்த இடத்தில் அகரன் நதியாள் இடையில் நடந்தக் காட்சிகளைக் கண்டு ஆனந்த அதிர்ச்சியில் நின்றிருந்தார்.
“இப்பத்தான் வந்தேன். இங்க என்ன நடக்குது? அந்த புள்ளைய என்ன பண்ணிட்டு இருந்த நீ?”, சுந்தரம் .
“ஒன்னுமில்ல தாத்தா. சின்னதா ஒரு பைசல். உள்ள வாங்க. சரண் ஜூஸ் கொண்டு வர சொல்லு. நீங்க மட்டும் தான் வந்தீங்களா?”, அகரன்.
“நானும் உன்ற அப்பனும் பரமசிவமும் வந்து இருக்கோம். பரமசிவம் மில்லுக்கு புதுசா ஏதோ மிஷின் வாங்கணும்னு சொன்னான்.. சரி நாமலும் பாத்துட்டு தேவைப்பட்டா வாங்கலாம்னு வந்தோம்”, என அகரனிடம் கூறிவிட்டு,” என் இளவரசி எப்படி இருக்கீங்க? இங்க வேலை ரொம்ப வாங்கினா சொல்லு அடிச்சு தோல உரிச்சுடலாம் இவனுங்கள”, என நதியாளை தோளில் சாய்த்துக் கொண்டார்.
நதியாள் தான் திணறிக்கொண்டு இருந்தாள் எப்படி அவரிடம் பேசுவதென. ஆனால் அவரோ சர்வசாதரணமாகப் பேசி அவளை சகஜநிலைக்கு திருப்ப முயற்சிக்கிறார் என்பதை உணர்ந்து, சற்றே மூச்சை ஆசுவாசப்படுத்திக் கொண்டு நின்றாள்.
அவள் அப்படியே நிற்பதைக் கண்டு சுந்தரம் தாத்தா, ” என்னடா கண்ணு ஏன் ஒருமாதிரி இருக்க?”.
“இல்ல தாத்தா…. அது வந்து…. அகன்….”, என அவனை கண்டாள்.
“அவன் பண்ணத நானும் பாத்தேன் அதான நீ இப்படி இருக்க? தப்பு பண்ண அவனே எப்படி நிக்கறான் பாரு நீ ஏன்டா இப்படி தயங்கி நிக்கற?”, சுந்தரம்.
“அது… அகன்…. இப்படி பண்ணுவான்னு ….”, வார்த்தைகளைத் தேடிக்கொண்டு தடுமாறினாள் நதி.
“என் நதியாள் தானே இது? ஏன் இப்படி தயங்கற கண்ணு?அவன் பண்ணது தப்புன்னா இன்னேரம் நீயே அவன் கழுத்த திருப்பி இருப்ப. நீ அமைதியா இருக்கன்னா அதுக்கும் ஒரு காரணம் இருக்கும், அவன் மேல வச்சி இருக்கற அன்பு உன்னை யோசிக்க வைக்குது அதானே?”, சுந்தரம் .
“ஆமா தாத்தா. நான் எதிர்பாக்கல ஆனா அகன தப்பா நினைக்க என்னால முடியல. நீங்க நிக்கவும் எனக்கு என்ன பண்றது பேசறதுன்னு தெரியல”, ஒருவழியாக தடுமாற்றம் நீக்கி வார்த்தைகளைக் கோர்க்கத் துவங்கிவிட்டாள் நதி.
“சரி விடு. உன் பெரியப்பனும் மாமாவும் வந்து இருக்காங்க போய் பாரு. இன்னிக்கு நாம ஓரே வீட்ல இருக்கலாம் . சரியா?”, சுந்தரம்.
“நீங்க நான் இருக்கற வீட்டுக்கு வந்துடுங்க தாத்தா. என் பிரண்ட்ஸ் ம் இருக்காங்க நல்லா ஜாலியா இருக்கும். அகனையும் சரணையும் வரசொல்லிடலாம். ஓக்கே வா?”, நதியாள்.
“சரி டா. இங்க இரண்டு நாள் வேலை இருக்கும். நான் உங்க கூட இருக்கேன்”, சுந்தரம்.
“ஐ…ஜாலி…. சூப்பர் சுந்தா… நான் மாமாவையும் பெரியப்பாவையும் பாத்துட்டு வரேன் “, என வெளியே ஓடினாள்.
அவள் குதித்தபடி ஓடுவதைக் கண்டு அகரன் மென்னகைப் புரிந்தான். அவனைக் கண்ட சுந்தரம் தாத்தா,” டேய்… என்னடா உன் பார்வை செயல் எதுவுமே சரி இல்லை. என்ன விஷயம்?”.
“நான் நதிய விரும்பறேன் தாத்தா. அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைபடறேன்”, அகரன் பட்டென உடைத்துக் காட்டினான் அவன் மனதை.
“அடேய் என்னடா பெரியவங்கன்ற மரியாதை பயம் எதுவுமே உனக்கு இல்லையா? இப்படி சொல்ற… உன் அப்பனுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு தெரியுமா?”, சுந்தரம் தாத்தா முகத்தை கோவமாக வைத்துக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசினார்.
“தெரிஞ்சா என்ன? உடனே கல்யாண ஏற்பாடு நடக்கும் . அதனால இப்போதிக்கு தெரியவேணாம். நதி அவ ஆசைபட்ட மாதிரி ஒரு நிலமைக்கு வந்தப்பறம் தான் கல்யாணம் எல்லாம். அதுவரைக்கும் ஜாலியா நாங்க லவ் பண்ணப்போறோம்”, அகரன் முகம் முழுக்க சிரிப்புடன் கூறினான்.
“நதியும் உன்னை காதலிக்கறாளா அகரா?”, சுந்தரம் தாத்தா ஆவலுடன் கேட்டார்.
“காதலிக்கறான்னு தான் நினைக்கறேன் தாத்தா. ஆனா இன்னும் முழுசா தெரியல”, அகரன் தோளைக் குலுக்கியபடிக் கூறினான்.
“அப்பறம் என்னடா கல்யாணம் வரைக்கும் காதலிக்கபோறோம்னு சொல்ற? அந்த புள்ளைக்கு உன்னை பிடிக்கணும், விரும்பனும், இன்னும் எவ்வளவு இருக்கு”, சுந்தரம் தாத்தா.
“அது என் பாடு. நான் சொல்றப்ப கல்யாண வேலைய ஆரம்பிங்க போதும்”, அகரன் கூறினான்.
“யாருக்கு கல்யாண ஏற்பாடு பண்ணணும்?”, என்று கேட்டபடி பரமசிவமும் சிதம்பரமும் உள்ளே வந்தனர்.
“வாங்க மாமா. வாங்கப்பா”, என அகரன் அவர்களை வரவேற்று அமரவைத்தான்.
சரணும் நதியாளும் அவர்களுக்குக் குடிக்க ஜூஸூம், ஸ்நாக்ஸ்ம் கொண்டு வந்துக் கொடுத்தனர்.
“என்ன யாள் குட்டி அகரன் ஆபீஸ்ல வேலை எப்படி போகுது?”, சிதம்பரம்.
“இன்னிக்கு தான் சேர்ந்தேன் மாமா. நல்லா இருக்கு. அதுவும் அகன் சரண் கூட இருக்கறது ரொம்பவே ஹேப்பி”, என நதியாள் கூறினாள்.
“நல்லது. வேலைய கத்துகிட்டு அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை தேடி தரணும். உன் பெரியப்பா தான் அதிகமா கொண்டாடுவாரு நீ பெருசா வந்துட்டன்னா… “, சிதம்பரம்.
“கண்டிப்பா மாமா. அகனும் சரணும் என்கூட இருக்கறப்ப எனக்கு என்ன கவலை? “, நதியாள்.
சரணும் அகரனும் ஒரு நிமிடம் மலைத்து தான் போயினர், அவளுக்கு அவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையைப் பார்த்து.
“யாள் எல்லாரையும் கூட்டிட்டு வீட்டுக்கு போகலாம்”, எனக் கூறியபடி ஸ்டெல்லா உள்ளே வந்தாள்.
“தாத்தா மாமா பெரியப்பா இது ஸ்டெல்லா என் பிரண்ட். நீங்க எங்க கூட தான் தங்கப்போறீங்க. இவங்க இரண்டு பேரும் பின்னாடி வந்துடுவாங்க. போலாமா?”, நதியாள்.
“அது இல்லடா. நாங்க வந்தா சிரமமா இருக்க போகுது. பசங்களா இருக்கீங்க இடம் பத்துமா …..”, பரமசிவம்.
“பெரியப்பா உங்க இளவரசி எப்பவும் அரண்மனைல தான் இருப்பா. வாங்க போகலாம். எதுவும் பேசக்கூடாது”, என சுந்தரம் தாத்தாவை எழுப்பிக்கொண்டு முன்னே நடந்தாள் நதி.
“தம்பி. அங்க எப்படி நாம?”, சிதம்பரம் அகரனிடம் கேட்டார்.
“முன்னாடி போய் பாருங்கப்பா. இடம் பத்தி பிரச்சினையும் இல்ல, சாப்பாடு பத்தின பிரச்சினையும் இல்ல. அப்படியே இருந்தாலும் அவ விடமாட்டா”, எனச் சிரித்தபடி கூறி, அவர்களை முன்னே அனுப்பிவைத்தான் அகரன்.
நதியாள் தன் சகாக்களை முன்னே அனுப்பிவிட்டு பெரியவர்களுடன் காரில் பின்னால் தொடர்ந்தாள்.
“ஏன்டா கண்ணு நீங்க அத்தனை பேரும் ஒரே வீட்லயா இருக்கீங்க?”, பரமசிவம்.
“ஆமா பெரியப்பா. அது என் பிரண்டோட கெஸ்ட் அவுஸ் தான். நாங்க பிராஜெக்ட் பண்ண வெளிய போய் வர காலேஜ் ஹாஸ்டல் வசதி படாதுன்னு சொன்னோம் , உடனே அவ அவளோட வீட்டுகாரர் கிட்ட சொல்லி இந்த வீட்ட ஏற்பாடு பண்ணிட்டா. நாங்களும் தெரிஞ்ச இடமா இருந்தா பரவால்லன்னு வந்துட்டோம்”, நதியாள்.
“ஆம்பள பசங்களும் அங்கயா இருக்காங்க?”, பரமசிவம்.
“ஆமா பெரியப்பா”, நதியாள்.
“அது எப்படி டா ? ஊர்ல இருக்கறவங்க எதாவது சொல்லப்போறாங்க?”, பரமசிவம் சுந்தரம் தாத்தாவையும், சிதம்பரத்தையும் அவஸ்தையுடன் பார்த்தபடிக் கூறினார்.
“பெரியப்பா பெரியப்பா…. காலேஜ் ஹாஸ்டல்ல பாதுகாப்பு பத்தி பிரச்சினை இல்லை. தனியா வீடு எடுத்து தங்கறப்ப பாதுகாப்பு பிரச்சினை இருக்கு. தங்கற ஏரியா ,வீடு பக்கத்துல இருக்கறவங்கன்னு நிறைய உங்களுக்கே தெரியும். எங்க கூட படிக்கற பசங்க இருக்கறப்ப எங்களுக்கு அந்த பிரச்சினையே இல்ல. நாங்க படிக்கற இத்தனை வருஷத்துலயும் எங்க கூட படிக்கற பசங்கள தான் நம்பறோம். அவங்க எங்களுக்கு எந்த கெடுதலும் செய்யமாட்டாங்க. கூட படிக்கறவங்க மேல வராத நம்பிக்கை வேற யார் மேலயும் அவ்வளவு சீக்கிரம் வராது பெரியப்பா. எங்களுக்கு பாதுகாப்பு எங்க கூட படிக்கற பசங்க தான். நீங்க எப்படி வீட்ல இருக்கறப்ப எங்கள பாதுகாக்கறீங்களோ அப்படி தான் அவங்களும் எங்கள பாதுகாப்பாங்க”, நதியாள் கூறிச் சிரித்தாள்.
“புள்ள சொல்றது சரிதான். கூட படிக்கற பசங்கள நம்பாம யாரோ தெரியாதவன நம்ப முடியாது. நம்ம புள்ளைங்க பாத்து தான் பழகும் சிவம். நீ குழப்பிக்காத”, சுந்தரம் தாத்தா பரமசிவத்திற்கு ஆறுதல் கூறினார்.
“மாமா நீங்க என்ன நினைக்கறீங்கன்னு எங்களுக்கு புரியுது. நம்ம வளரப்பு எப்பவும் தப்பாகாது. விடுங்க. இதுல எந்த வீடு டா?”, சிதம்பரம் நதியாளிடம் கேட்டார்.
“அதோ கடைசில இருந்து மூனாவது வீடு மாமா”, நதியாள் வீட்டை அடையாளம் காட்டினாள்.
“இந்த பக்கமெல்லாம் பங்களா வீடா இருக்கு. வாடகை எவ்வளவு கண்ணு?”, சுந்தரம்.
“தாத்தா…. இத என் பிரண்ட் கேட்டா என்னை கொலை பண்ணிடுவா. அதுல்லாம் வாங்கமாட்டேன் சொல்லிட்டா. வீட்டு செலவு மட்டும் நாங்க பாத்துக்கறோம்”, நதியாள்.
வீட்டிற்குள் கார் வந்ததும் நம் வானரங்கள் அவர்களின் பைகளை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளே அழைத்து விருந்துபச்சாரம் செய்தனர்.
“ஏலே தம்பி இங்க வா”, என சுந்தரம் தாத்தா சஞ்சயை அழைத்தார்.
“சொல்லுங்க தாத்தா. எதாவது வேணுமா?”, எனக் கேட்டபடி அருகில் வந்தான் சஞ்சய்.
“எனக்கு கீழ அறைல ஒன்னு குடுங்க. அவங்களுக்கு மாடில குடுத்துடுங்க. நான் இப்ப கொஞ்ச நேரம் சாயணும்”, சுந்தரம்.
“அதுல்லாம் கவலையே படாதீங்க தாத்தா. யாள் எங்க கிட்ட முன்னயே சொல்லி அனுப்பிட்டா. எல்லாம் ரெடி பண்ணிட்டோம். வாங்க ரெஸ்ட் எடுங்க. கொஞ்ச நேரம் கழிச்சி பீச் போலாம்”, சஞ்சய் தாத்தாவை அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையில் கொண்டு விட்டு, வேண்டிய சவுகரியங்களைச் செய்துக் கொடுத்துவிட்டு வந்தான்.
“மச்சான். புள்ளைக்கு இந்த வீட்டுகாரங்க நல்லா தான் வசதி செஞ்சி குடுத்து இருக்காங்க. நான் கூட புள்ள தனியா கஷ்டப்படுதோன்னு நினைச்சி சரண திட்டினேன் உங்க கூட தங்க வச்சிக்க மாட்டியான்னு”, பரமசிவம்.
“நம்ம புள்ள மட்டும்னா பரவால்ல மாமா. இத்தனை புள்ளைங்க இருக்கறப்ப அவங்கவங்க வீட்ல யோசிப்பாங்கல்ல. இங்கயும் பிரச்சினை ஒன்னும் இல்லையே. வேலைக்கும் ஆள் வச்சி குடுத்து இருக்காங்க ,பாதுகாப்புக்கும் காவலுக்கு ஆள் இருக்காங்க. இதுக்கு மேல என்ன வேணும்? நாளைக்கு இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்றப்ப அவங்களுக்கு பிடிச்சாப்புல அவங்களே வீட்ட கட்டிகிட்டும்”, எனக் கூறி சிரித்தார் சிதம்பரம்.
“அதுவும் சரிதான். கொஞ்ச நேரத்துல கடலுக்கு போகலாம்னு சொல்லி இருக்காங்க புள்ளைங்க. கொஞ்சம் சாயலாம் இப்ப. அகரனும் சரணும் எப்ப வராங்க ?”, பரமசிவம்.
“வேலை முடிச்சிட்டு மாத்து துணி எடுத்துட்டு வரேன்னு சொன்னாங்க மாமா. வந்துடுவாங்க”, சிதம்பரம்.
இருவரும் சிறிது நேரம் கண்ணயர்ந்தனர். நம் வானரப்படை இரவிற்குத் தடபுடலாக விருந்தைத் தயாரித்துக்கொண்டு இருந்தனர்.
“தாத்தா… தாத்தா…. எந்திரிங்க. கடலுக்கு போகலாம். சீக்கிரம் பிரஸ் ஆகி வாங்க”, என நதியாள் சுந்தரம் தாத்தாவை எழுப்பினாள்.
“நான் எதுக்கு டா? நீங்க போயிட்டு வாங்க. நான் வீட்லயே இருக்கேன்”, சுந்தரம் தாத்தா.
“அதுல்லாம் முடியாது. எங்க கூடவே இருக்கேன்னு சொல்லி இருக்கீங்க. சோ நீங்க வந்து தான் ஆகணும். இங்க பக்கத்துலயே இருக்கு நம்ம வீட்ல இருந்து தென்னந்தோப்பு தூரம் கூட இல்ல. நல்லா இருக்கும் வாங்க தாத்தா. என் செல்ல சுந்தா ல்ல”,எனக் கொஞ்சி அவரைக் கிளப்பிவிட்டு இன்னும் இரண்டு பெரியவர்களை எழுப்பச் சென்றாள்.
இரவு உணவு ஸ்டெல்லாவும், மீராவும் சமையல் செய்பவர்களை வைத்து என்ன என்ன ஐட்டம் என மெனு கூறி தயார் செய்துவிட்டு முகம் கழுவி உடை மாற்றச் சென்றனர்.
அனைவரும் கடற்கரைக்கு கிளம்பும் வரையிலும் அகரனும் சரணும் வரவில்லை. நதியாள் மனதில் ஏக்கமும் எதிர்பாப்பும் இருந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் நடமாடிக்கொண்டு இருந்தாள்.
நேரம் ஆவதை உணர்ந்து இவர்கள் கடற்கரைக்குச் சென்றனர். அங்கு சிறியவர்கள் பெரியவர்களுடன் கலகலப்பாக உரையாடிக்கொண்டும், அலைகளில் கால் நனைத்துக்கொண்டும் மகிழ்ந்தனர். அந்த சந்தியாவேலை அனைவருக்கும் இனிமையாகவே கழிந்தது. அகரன் அருகில் இருந்திருந்தால் நதியாளுக்கும் மிக ரம்மியமாகக் கழிந்திருக்கும்.
சுந்தரம் தாத்தா நதியாளைக் கவனித்தபடியே இருந்தார். அவள் முகத்தில் இருக்கும் எதிர்பார்ப்பு, ஏக்கம் , ஏமாற்றம் என அனைத்தும் கவனித்தவர் மனதில் சந்தோஷம் பொங்கவே செய்தது. அகரனுக்கும் நதியாளுக்கும் முடிந்தவரை சீக்கிரமே நிச்சயம் செய்து விட அவர் உள்ளம் துடித்தது. திருமணம் ஒரு வருடத்திற்கு மேல் தான் என கூறியதால் குறைந்தது நிச்சயம் முடிந்துவிட்டால் அகரனின் முழு பொறுப்பில் நதியாள் வந்து விடுவாள். அகரனுக்கும் அதே பொருந்தும்.
இன்னும் சிறிது நாட்களில் கண்டம் இருக்கிறதென்று ஜோதிடர் கூறியது, ஒருபக்கம் அவர் மனதை அரித்துக்கொண்டு தான் இருந்தது. நிச்சயம் முடிந்துவிட்டால் அந்தக் கண்டத்தில் இருந்து தப்பிக்கலாம் எனவும் கூறியதை நினைத்தே அவரின் மனம் துடித்தது.
“ஆண்டவா…. எல்லாம் நல்லபடியா நடக்கணும். நீ தான் துணை”, என மனதில் இறைவனைப் பிராத்தித்துவிட்டு சிறியவர்களின் உற்சாகத்தையும், விளையாட்டையும் கவனித்தார் சுந்தரம் தாத்தா.
கடற்கரையில் இருள் மங்கும் வரையிலும் ஆடிப்பாடிக் களைத்தவர்கள் பெரியவர்களுடன் வீட்டிற்கு வந்தனர்.
அங்கு அகரனின் காரைக் கண்ட நதியாள் உற்சாகத்துடன் உள்ளே சென்றவள், அகரனின் மேல் வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்த சரிதாவை தான் முதலில் கண்டாள்.
காலையில் சஞ்சய் கூறியது நியாபகம் வர, கோபத்தை மீறிய ஒன்று நதியாளின் மனதில் தோன்றியது. அவள் எப்படி அகரனை அப்படி பார்க்கலாம்? காதலுக்கே உரிய பொறாமை நதியாளின் மனதில் முழுதாய் கொழுந்துவிட்டு எரிந்தது.
“ஹாய் தேவ்… வா சரண்… “, என இருவரை மட்டும் அழைத்துவிட்டு அகரனை முறைத்தவள் சரிதாவை எரிக்கும் பார்வைப் பார்த்தாள் நதி.
“ஹாய் ஆல்…… வாவ்…. பிரண்ட்ஸ் கூட இருக்கன்னு அகர் சொன்னான், இத்தனை பேரும் ஒரே வீட்ல செம ஜாலி தான். ஐ மிஸ் மை காலேஜ் டேஸ் பேட்லி உங்கள பாக்கறப்ப”, தேவ்.
“நீயும் எங்க கூட ஜாயின் ஆகிக்க நோ பிராப்ளம் தேவ். டின்னர் சாப்பிட்டு தான் போகணும்”, நதியாள்.
“கவலையே படாத யாள்குட்டி அவன் இங்க தங்கிட்டு தான் ஊருக்கு போவான். நீயே கிளம்ப சொன்னாலும் கிளம்பமாட்டான்”, சரண் கூடுதல் தகவல் கொடுத்து, நதியாளின் பொறாமையில் எண்ணெய் ஊற்றினான்.
“ஓஓ…. இவங்களும் இங்க தான் தங்கப்போறாங்களா சரண்?”, என சரிதாவை காட்டிக் கேட்டாள் நதி.
“ஆமா யாள். அவளோட பிரண்ட் ஊர்ல இல்லை. சரிதா அங்க ஸ்டே பண்றமாதிரி தான் இருந்தது பட் அவங்க எமர்ஜென்ஸி வர்க் ஆ வெளியூர் போயிட்டாங்களாம். அதான் இங்கயே கூட்டிட்டு வந்துட்டேன். உங்களுக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லையே?”, தேவ்.
“நோ பிராப்ளம் தேவ். ஸ்டெல்லா இவங்களுக்கு ரூம் குடுத்துடு. சரண் அகன் தேவ் உங்களுக்கு கீழ ரூம் சஞ்சய் காட்டுவான். பிரஸ் ஆகிட்டு வாங்க எல்லாரும் சாப்பிடலாம்”, எனக் கூறிவிட்டு தன்னறைக்குச் சென்று விட்டாள் நதி.
“என்னடா என் தங்கச்சி அமைதியா போறா…. உன்னையும் கண்டுகிட்டமாதிரி தெரியல”, சரண் அகரனின் காதைக் கடித்தான்.
“அவளோட கவனிப்பு எனக்கு எப்பவும் ஸ்பெஷலா தான் இருக்கும் மச்சான். அவ கண்ல இன்னிக்கு பொறாமைய பாத்தேன். அத வச்சே அவள வழிக்கு கொண்டு வந்துடுவேன். உன் தங்கச்சிய பக்கத்துல வச்சிட்டு நல்லவனா நடிக்கறது ரொம்பவே கஷ்டமா இருக்குடா. சீக்கிரம் லவ் ஓகே பண்ணி வீட்லயும் சொல்லிடனும்”, அகரன்.
“டேய் நான் பொண்ணுக்கு அண்ணன் டா. என்கிட்டயே இப்படி பேசற. சாயந்திரம் உன் ரூம்ல என்ன நடந்ததது? தாத்தா கூட நான் வந்தப்ப கதவை தொறந்ததும் சாக்காகி என்னை உள்ள வரவிடாம அனுப்பிட்டாரு. என்னடா பண்ண?”,சரண்.
“நதி கிட்ட சாரி கேட்டுட்டு இருந்தேன் அத பாத்துட்டு உன்ன அனுப்பி இருப்பாரு”, அகரன்.
“சாரி கேட்டதுக்கு என்னை ஏன் அனுப்பனும்? ஏதோ நடந்து இருக்கு பயபுள்ள மறைக்கிறான். பாத்துக்கறேன்”, என மனதில் கூறியபடி திலீப்பின் தோள் மேல் கைபோட்டபடி அறைக்குச் சென்றான்.
“ஹாய் நான் ஸ்டெல்லா…. நீங்க?”, சரிதாவிடம் அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“அதான் அவ சொன்னாளே அப்பவே. நான் குளிக்கணும் ஹாட்வாட்டர் வருமா? பாத் டப் இருக்கா?”, சரிதா இளக்காரமாக அவளைப் பார்த்துக் கேட்டாள்.
“வரும் வரும் நல்லா வெந்து போறளவுக்கு ஹாட்டா இருக்கும். நீங்க குளிச்சிட்டு வாங்க”, என ஸ்டெல்லாவும் நக்கலாக பதிலளித்துவிட்டு மீராவின் அறைக்கு வந்தாள்.
“ஏய்…. யாருடி அவ? ஓவரா பண்றா?”, ஸ்டெல்லா.
“யாரு? இப்ப ஒரு பொண்ணு வந்திருக்கே அதுவா?”, மீரா.
“அவ தான். ஓவரா பேசறா. இவ இங்க தங்கப்போறான்னு சொன்னதும் யாள் முகமே சரியில்லை “, ஸ்டெல்லா.
“தெரியல ஸ்டெல். அப்பறம் யாள கேட்டுக்கலாம். நீ வந்து பிரஸ் ஆகு. நாம பர்ஸ்ட் ரெடி ஆகி போய் எடுத்து வைக்கணும். அவனுங்கள ஸ்வீட் வாங்கிட்டு வர சொன்னேன் போனாங்களா இல்லையா?”, மீரா.
“சமையல்காரக்காவே செஞ்சிட்டாங்களாம். அவனுங்க கிட்ட வேணாம்னு சொல்லிட்டேன் “, ஸ்டெல்லா கூறிவிட்டு முகம் கழுவி இரவு உடைக்கு மாறினாள்.
அனைவரும் பிரஸ் ஆகி இரவு உடைக்கு மாறி இருந்தனர்.
சுந்தரம் தாத்தா, சிதம்பரம், பரமசிவம் அமரவைத்து மூவருக்கும் முதலில் பரிமாறினர். அகரனும் சரணும் தேவ்வும் இவர்களுடன் அமர்வதாகக் கூறியதால், பெரியவர்களுக்கு முதலில் கொடுத்து அவர்களை ஆசுவாசமாக இருக்கக் கூறினர்.
பின் சிறியவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தத் தொடங்கினர். அகரனின் பார்வை நதியாளைத் தொடர்வதைக் கண்டு சரிதா வெறுப்புடன் அங்கிருந்து சரியாக உண்ணாமல் அங்கிருந்து எழுந்துவிட,” ஏன் சரிதா எந்திரிச்சிட்டீங்க?”, சரண் கேட்டான்.
“இல்ல. எனக்கு போதும். டயர்டா இருக்கு நான் தூங்கப்போறேன்”, எனக் கூறி அங்கு நிற்காமல் தன்னறைக்கு வந்து சேர்ந்தாள்.
அரட்டை அடித்தபடியே உணவுண்டு அனைவரும் அளவுக்கு அதிகமாகவே உண்டிருந்தனர். இத்தனை அரட்டையிலும் நதியாள் அகரனிடம் நேரடியாக உரையாடவோ, அவனை நோக்கவோ இல்லை. கண்ணாமூச்சி ஆடியபடி தான் இருந்தாள்.
அகரனும் அவளின் செய்கையை உள்ளுக்குள் இரசித்தபடி, முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது மற்றவர்களுடன் பேசிக்கொண்டு இருந்தான்.
“யப்பா…. எவ்வளவு நாள் ஆச்சி இப்படி ஜாலியா பேசிட்டே சாப்பிட்டது…. யாள் உனக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்”, தேவ்.
“பிரண்ட்ஸ்குள்ள தேங்க்ஸ் சொல்லக்கூடாது தேவ். நீ என்னை பிரண்டா நினைச்சா சொல்லமாட்ட” , நதியாள்.
“கண்டிப்பா நீ என் பிரண்ட் தான். தேங்க்ஸ் அ வாபஸ் வாங்கிக்கறேன்”, தேவ் கையை மேல் தூக்கிச் சரணடைந்தான்.
“ஹாஹா…. இப்படியாடா சரண்டர் ஆவ?”, சரண்.
“பின்ன….. இதுக்குலாம் கவுரவம் பாத்தா வாழமுடியாது. நதியாள் பிரண்ட்ஷிப் கிடைக்கறதுன்னா சும்மாவா சரண்?”, தேவ்.
“பாஸ் இது வஞ்சப்புகழ்ச்சி அணி மாதிரி இருக்கு”, திலீப்.
“அப்படின்னா?”, தேவ்.
“நீங்க தமிழ் இலக்கணம் படிச்சது இல்லையா?”, சஞ்சய்.
“இல்ல. நான் படிச்சது சென்ட்ரல் போர்ட்ல, சோ தமிழ் படிக்கத்தெரியும் பேசத்தெரியும் அவ்வளவு தான் கிராம்மர் லாம் தெரியாது”, தேவ்.
“அப்ப உங்களுக்கு மீராவ கிளாஸ் எடுக்கவிட்றலாம் போலவே”, திலீப்.
“அவங்க தமிழ் கிளாஸ் எடுக்கறாங்களா அடிசனல்லா?”, தேவ்.
“இல்லை. எங்கள்ள அவளுக்கு தான் ஓரளவு தமிழ் தெரியும். எங்களுக்கு எக்ஸாம் வந்தா அவகிட்ட கதை கேட்டு தான் பாஸ் பண்ணுவோம். என்னை பாஸ் பண்ண வச்ச குலசாமி பாஸ் அவ”, என திலீப் மீராவை நோக்கி முகபாவனையுடன் கூற, மீரா அவனை அங்கிருந்து தலையனைத் தூக்கி எறிந்தாள்.
“அப்படியெல்லாம் இல்லை சார். அவன் கலாய்க்கறான்”, மீரா.
“கால் மீ பை நேம். நோ சார்”, தேவ்.
“தேவ் தானா பாஸ் உங்க புல் நேம்?”,சஞ்சய்.
“சக்ரதேவ்”, தேவ்.
“நைஸ் நேம்”, திலீப்.
“சரி நீங்க எல்லாரும் என்னோட ஷோரூம் ஓபனிங்க்கு திருச்சி வரணும்”, தேவ்.
“எப்ப பாஸ்? “, சஞ்சய்.
“வந்தா ஆளுக்கு ஒரு கார் ஆபர்ல ப்ரீயா தருவீங்களா பாஸ்?”, திலீப்.
“அவர் இப்ப தான் ஓபன் பண்ண கூப்பிடறாரு அதுக்குள்ள நீ மூடறதுக்கு வழி சொல்ற”, ஸ்டெல்லா.
“குடுக்கலாம் திலீப் பட் நீங்க மன்த்லி டார்கெட்ட விட இரண்டு அதிகம் சேல் பண்ணி ஒரு பத்து மாசம் காட்டினா நான் ப்ரீயா உங்களுக்கு ஒரு கார் தரேன். வந்து ஜாயின் பண்ணிக்கறீங்களா?”, தேவ் சிரித்தபடிக் கேட்டான்.
“பத்து மாசமா? என்னை பிரசவம் பண்ண கூப்பிடறிங்களா பாஸ்? இந்த டார்கெட்ல எனக்கு செட் ஆகாது பாஸ். நான் அகரன் சார், சரண் சார் கிட்டயே என் காலத்த கழிக்கலாம்னு இருக்கேன்”, திலீப்.
“நாங்க மட்டும் உன்னை வச்சி சோறு போடுவோமா தம்பி? வேலை பாத்தா தான் உனக்கு டிகிரி செர்டிபிகேட் வரும். நியாபகம் வச்சிக்க. ஓபி அடிக்கற எண்ணெமெல்லாம் இருந்தா ஆபீஸ் பக்கம் வந்துடாத”, சரண்.
“சார்… நாம அப்படியா பழகறோம்? இப்படி சொல்லிட்டீங்களே சார்”, திலீப் கண்ணைக் கசக்கித் துடைத்தான்.
“போதும் டா உன் நடிப்பு”, நதியாள்.
“சரி வாங்க தூங்கப்போகலாம். டைம் ஆச்சி”, சஞ்சய்.
“பொறுப்பான புள்ள டா இவன் உங்க கேங்ல. எப்படி இவன் மட்டும் இப்படி இருக்கான்?”, சரண்.
“அது வியாதி சார். எவ்வளவோ நான் மாத்த பாத்தேன் முடியல. அதான் விட்டுட்டேன்”, திலீப்.
“தம்பி திலீப்.. உனக்கு இந்த வியாதி இல்லைன்னா ரொம்ப கஷ்டம், அப்பறம் ப்யூன் வேலை கூட கிடைக்காது”, அகரன்.
“தெய்வமே உங்களையும் நதியாளையும் நம்பி தான் என் எதிர்காலமே இருக்கு. வீட்ல வேலை கெடச்சிரிச்சினு சொல்லிட்டேன். அப்ப தான் என் அப்பா சொத்த எனக்கு குடுப்பாரு”, திலீப் அகரனின் கைகளைப் பிடித்துக்கொண்டுக் கூறினான்.
“கூடவே அத்தை பொண்ணு மாமா பொண்ணுன்னு எதாவது இருக்காடா ?”, சரண்.
“இருக்கு சார் ஆனா எல்லாமே இப்பதான் எல்கேஜி படிக்குது”, திலீப் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டுக் கூறினான்.
அனைவரும் சிரித்தபடி குட்நைட் கூறிவிட்டு, அங்கிருந்து எழுந்து அவரவர் அறைக்குச் சென்றனர்.
நதியாள் மொட்டை மாடிக்குச் செல்வதைக் கண்ட அகரன் சத்தமில்லாமல் அவளின் பின்னால் சென்றான்.
மாடியில் இருந்த பூச்சாடிகளுக்கு மத்தியில் நதியாள் வளர்பிறை நிலவைப் பார்த்தபடி நின்றிருந்தாள்.
“ஹார் டியர்…. தூக்கம் வரலியா?”, அகரன்.
“ஹான்ன்…. இல்ல “, நதியாள் அவனைப் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி நின்றுக்கொண்டாள்.
“என்னாச்சு நதி?”, அகரன் மெதுவாக அவளின் அருகில் வந்து நின்றான்.
நதியாள் அமைதியாக நின்றிருந்தாள்.
“சொல்லு பேபி”, அகரன்.
“………”, அதே அமைதி நதியாளிடம்.
“நதிமா…..”, அகரன் அவளின் தோள் பற்றி திருப்பினான்.
நதியாள் அவனை நோக்கி ஒரு கேள்வியை கேட்டாள்.
அகரன் அவளின் கேள்வியில் திகைத்து நின்றான்…
நதி அப்படி என்ன கேட்டா ???