26 – மீள்நுழை நெஞ்சே
அன்றிரவு கண்விழித்த துவாரகா அருகில் அமர்ந்தபடி உறங்கிக்கொண்டிருந்த லில்லியை அழைத்தாள்.
“லில்லி…. “
தூக்க கலக்கத்தில் பாதி கண் திறந்த லில்லி துவாரகா முழித்திருப்பதுக் கண்டு,”வில்…. ராக்ஸ் வோக்டு அப் …. கம் ஹியர்”, என குரல் கொடுத்துவிட்டு துவாரகா அமர படுக்கையை ஒரு பக்கமாக உயர்த்தினாள்.
“எப்படி இருக்க ராக்ஸ்? வலிக்குதா?”, எனப் பரிவோடுச் சற்றுப் பயந்தபடி கேட்கும் லில்லியைக் கண்டு அவளுக்கு மெல்லிய சிரிப்பு வந்தது.
“ஆப்ரேஷன் செஞ்சா வலிக்குமே லில்லி… நீ ஏன் இங்கேயே உக்காந்து தூங்கற? பக்கத்துல தான் படுக்கை இருக்கே”, எனச் சாய்வாக அமர்ந்தபடிக் கேட்டாள்.
“உங்க வீட்ல இருந்து போன் மேல் போன்… நீ கண்ணு முழிக்காம இருக்கவும் ரொம்ப பயந்துட்டோம்…. “, துவாரகாவின் கையை மிருதுவாகப் பற்றிக்கொண்டு இன்னும் அருகில் அமர்ந்தாள்.
“எனக்கு ஒன்னும் இல்ல…. வில்ஸ் எங்க காணோம்?”,
“தெரியல… வெளியே தான் உக்காந்திருந்தான். இருங்க பாத்துட்டு நர்ஸ் கூட்டிட்டு வரேன்”, எனக் கூறிவிட்டு வெளியே சென்றாள்.
துவாரகா இடது பக்க கையை அசைக்க முயல வலி சுல்லென்று உச்சந்தலை வரை இழுத்தது.
“நோ நோ… கைய அசைக்காதீங்க…. பத்து நாள் அசையாம இருந்தா தான் உடனே சரியாகும்”, என நர்ஸ் வந்து அவளைப் பரிசோதித்து விட்டு இரண்டு ஊசியை செலுத்திவிட்டுச் சென்றார்.
“நர்ஸ்…”
“கவலைபடாதே வில்சன்…. அவங்க நல்லா இருக்காங்க. கைய மட்டும் அசைக்காம பாத்துக்கோங்க…. “, என வில்சனிடம் கூறிவிட்டுச் சென்றார்.
“பயங்கர ஆக்க்ஷன் ராணி தான் நீ ராக்ஸ்... எங்கள ரொம்ப பயமுறுத்திட்ட…. உன் வீட்ல இருந்து, கனிகிட்ட இருந்து இப்பவரை ஐம்பது கால் வந்துரிச்சி.. இதுக்கு மேல என்னால சமாளிக்க முடியாது… “, என அவளது போனை மேஜை மேல் வைத்தான்.
“என்ன சொல்லி சமாளிச்ச?”, எனச் சிரிப்புடன் கேட்டாள்.
“ஹை ஃபீவர்… ஹாஸ்பிடல்ல சேத்தி இருக்கேன்னு சொல்லிட்டேன்… “
“ஏன்டா…? தூங்கறேன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே?”, சலிப்புடன் கூறினாள்.
“கனி வீடியோ கால் பண்ணிட்டா… நான் கவனிக்காம பில் கவுன்டர்கிட்ட இருந்தப்ப அட்டன் பண்ணிட்டேன். அப்ப பாத்துட்டு கேள்வி மேல கேள்வி…. “, என அவன் கூறி முடிக்கும் முன் மீண்டும் அலைபேசி அலறியது.
“லில்லி… அந்த ஷால் மேல் போர்த்திவிடு… “, எனத் தோளில் உள்ள காயம் தெரியாத மாதிரி போர்வையைச் சுற்றிக்கொண்டு அழைப்பை எடுத்தாள் துவா.
“எப்படி டி இருக்க? ஹாஸ்பிடல்ல சேத்தற அளவுக்கு உடம்ப கவனிக்காம இருந்தியா? இப்ப காய்ச்சல் விட்டுரிச்சா?”, என வீடியோவில் தெரியும் துவாவின் முகத்தை ஆராய்ந்தபடிக் கேட்டாள் கனி.
“திடீர்ன்னு குளிர் அதிகமாகிரிச்சி கனி. நான் ஒரு ட்ரெஸ் ஒரு ஸ்வெட்டர் தான் போட்டு இருந்தேன். அதான் ஃபீவர் வந்துரிச்சி. இப்ப பரவால்ல… இரண்டு மூணு நாள் நல்லா தூங்கி எந்திரிக்கணும் அவ்வளவு தான்….”, வலியை முகத்தில் காட்டாமல் பேசினாள்.
“முகம் பாரு எப்படி வாடி போச்சி… நல்ல வேலை லில்லி கூட இருக்கா… ஆனாலும் சின்ன பொண்ணு வேற… நீ சமாளிச்சிக்குவ தானே?”, எனக் கவலையுடன் கேட்கும் தோழியைக் கண்டு கண்ணில் நீர் தேங்கியது.
“அதுலாம் ஒன்னுமில்ல கனி. நான் பாத்துக்கிறேன். அம்மா கூப்டு இருக்காங்க. அங்கயும் பேசிடறேன்… டயர்ட்ஆ இருக்கு. அப்பறம் கூப்பிடுறேன்”, எனக் கூறி வைத்துவிட்டாள்.
“ஏன் அழற ராக்ஸ்?”, வில்சன் பதறிக் கேட்டான்.
“இப்படி கேட்கவும் ஒரு குடுப்பினை இருக்கணும் வில்ஸ்… அவள விட்டு இவ்வளோ தூரம் தள்ளி இருந்தும், எனக்கு அந்த அன்பும் அரவணைப்பும் கெடைச்சி இருக்குன்னு சந்தோஷம் அவ்வளவு தான்….”, எனக் கூறியபடி தந்தைக்கு அழைத்தாள்.
முதல் ரிங்கிலேயே அழைப்பை ஏற்றவர், “அம்மாடி ராகா…. உடம்பு சுகமில்லையாமே… இப்ப எப்படி டா இருக்க? “, எனப் பரிதவிப்புடன் கேட்டார்.
“காய்ச்சல் தான்பா.. குளிர் அதிகமாகிரிச்சி. அதான் காய்ச்சல் வந்துரிச்சி… இப்ப நல்லா இருக்கேன். ரெண்டு மூனு நாள் தூங்கினா போதும் ப்பா.. நீங்க எப்படி இருக்கீங்க? ஏன் டல்லா இருக்கீங்க?”, எனத் தந்தையின் முகத்தைக் கவனித்தபடிக் கேட்டாள்.
“உனக்கு சுகமில்லன்னு சொன்னதும் டென்ஷன் ஆகிட்டேன் டா… வேற ஒன்னும் இல்ல…. உனக்கு இப்ப பரவால்ல தானே.. ஆஸ்பத்திரில பக்கத்துல இவ்வளோ ஒயர் தொங்குது… அவ்ளோ உடம்பு சரியில்லையா டா?”, என அவர் கேட்டதும் போனை சற்று அருகில் வைத்துவிட்டு, “எனக்கு இந்த ஊரு புதுசு இல்லலயாப்பா.. அதான் கண்காணிக்க இதுலாம் வச்சிருக்காங்க…. உடம்பு சூடு, ரத்த அழுத்தம் அப்படி… வேற ஒன்னும் இல்லைப்பா.. நீங்க கவலைபடாதீங்க… நான் நல்லா இருக்கேன்… கூட லில்லி இருக்கா வில்சனும் இருக்கான்…”, என அவருக்கு சமாதானம் கூறினாள்.
“என்னமோ டா… மனசே சரியில்லை எனக்கு… நாளைக்கு அம்மனுக்கு அபிஷேகம் சொல்லி இருக்கேன். நாளைக்கு உன் நட்சத்திரம் வரதால கூடிரிச்சி. உனக்கு பிரசாதம் கூட அனுப்ப முடியாது… இரு அம்மா கிட்ட தரேன்….”, என பவானியிடம் கொடுத்தார்.
“தங்கம் துவாரகா…. எப்படி கண்ணு இருக்க? இப்ப பரவால்லயா? காய்ச்சல் அதிகமாகிடிச்சாமே… வில்சன் பய சொன்னான்னு கனி சொன்னா…. இப்ப எப்படி இருக்கு கண்ணு?”
“நல்லா இருக்கேன் ம்மா… ரெண்டு மூனு நாள் தூங்கினா போதும். குளிர் அதிகமானதும் உடம்பு தாங்கல. அவ்வளவு தான் மா… நீங்க பயப்படாதீங்க…. எனக்கு ஒன்னுமில்ல… நல்லா இருக்கேன். தேவையில்லாம புலம்பி உங்க உடம்ப கெடுத்துக்காதீங்க…. “, தாயை சமாதானம் செய்தாள்.
“நாங்க யாரும் உடனே கிளம்பி வரமுடியாதா கண்ணு? இதுக்கு தான் வேணாம்னு சொன்னேன். கேட்டியா டி நீ? இப்ப பாரு மனசு கெடந்து தவிச்சிட்டே இருக்கும்… “, என அவளைத் திட்டினார்.
“ஏன்ம்மா நானா உன்ன வரவேணாம்னு சொன்னேன்? நீ தான் உன் மாமியார விட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்ட… விசா ரெடி பண்றேன் வரியா?”, என அவரைத் திசைத் திருப்பப் பேச ஆரம்பித்தாள்.
“எடுபட்ட சிறுக்கி… கொழுப்பு மட்டும் உனக்கு கொறையாதே? உன்கிட்ட சொன்னேனா டி அப்படி?”
“சரி சரி டென்ஷன் ஆவாத… விடு… நான் வீட்டுக்கு வந்ததும் தெனம் கறி மீனு ஆக்கி போடு. இப்ப உடம்பு கெட்டதுக்கு அப்ப வந்து நல்லா சாப்டுக்கறேன்… டீல்?”
“இந்த வாய்க்கு கொறச்சல் இல்ல உனக்கு… ஒழுங்கா மருந்து சாப்டு தூங்கி எந்திரி… நான் போன் வைக்கிறேன். நாளைக்கு நீ எந்திரிச்ச அப்பறம் கூப்பிடு… அதுவரை அந்த பயகிட்ட விசாரிச்சிக்கறோம்… “
“அம்மா… சும்மா போன் பண்ணி அவன பயமுறுத்தாதே…. நானே தூங்கி எந்திரிச்சி போன் பண்றேன். அதுவரை அமைதியா இருங்க. அப்பறம் அவனும் உங்க டார்ச்சர்ல ஓடிட்டா நான் தனியா தான் கஷ்டப்படணும்… “
“சரி… தொந்தரவு பண்ணல… நாளைக்கு அபிஷேகம் சமயத்துல வீடியோ கால் பண்றேன். அங்கிருந்தே பாரு… சரியா?”
“அது என்ன நேரம் இங்க வருமோ? நான் முழிச்சிருந்தா பாக்குறேன்… இப்ப தூக்கம் வருது. தூங்கறேன்… டாடா”, என வைத்துவிட்டாள்.
அவள் பேசுவதைக் கண்ணெடுக்காமல் வில்சனும், லில்லியும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
“இதான் எங்களுக்கு வேணும்னு ஆசைபடறோம் ராக்ஸ்…. உனக்கு அப்படி ஒரு குடும்பம் கெடச்சதுல எங்களுக்கு சந்தோஷம். உன்னால எங்களுக்கும் இப்ப அவங்க அன்பு கிடைக்குது…. “, என இருவரும் அவளின் இரண்டு பக்கமும் அணைத்துக் கொண்டனர்.
“சரி பாசமலர் படம் ஓட்டினது போதும்… பசிக்குது … எதாவது சாப்பிடலாமான்னு கேளு வில்ஸ்….”, என அவள் கூறவும் இருவரும் படபடவென அவள் சாப்பிட வேண்டிய உணவை டாக்டரிடம் கேட்டு, வாங்கிக் கொண்டு வந்து அவள் சாப்பிட உதவினர்.
அவள் சாப்பிட்டதும் அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு, அவளுக்குத் தரவேண்டிய இரவு மருந்தைக் கொடுத்து உறங்க ஏதுவாக படுக்கையைச் சரிசெய்தனர்.
“ஜெனி ராபர்ட் எப்படி இருக்காங்க வில்ஸ்?”, உறங்கும் முன் கேட்டாள்.
“நாளைக்கு கண் முழிப்பாங்கன்னு சொல்லி இருக்காங்க… நீ இப்ப தூங்கு. அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல….”, எனக் கூறி போர்வையை நன்றாக போர்த்திவிட்டு வெளியே சென்று உறங்க ஆரம்பித்தான்.
லில்லி அந்த அறையிலேயே அருகில் இருக்கும் படுக்கையில் படுத்துறங்கினாள்.
அடுத்தநாள் மாலை அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் கூறினர்.
தோள் பட்டை எலும்பில் குண்டடி பட்டதால் வலி அதிகமாகவே இருந்தது. அவளால் எதையும் இடது கையில் எடுத்து கையாளமுடியவில்லை.
அடுத்தநாள் வீட்டிற்கு வரும்முன் வீட்டிற்கு பேசிவிட்டு, வீட்டிற்கு வந்ததும் எங்கு தங்குவது என்ற வாக்குவாதம் ஆரம்பமானது.
“உனக்கு அடிபட்டிருக்கு ராக்ஸ்… இங்கயே இரு. நாங்க உன்னை பாத்துக்கறோம். நைட் தனியா நீ என்ன பண்ணுவ? இங்கேயே தான் இருக்கணும்”, என லில்லியும் வில்சனும் அவளைக் கட்டாயப்படுத்தினர்.
“அவ்ளோ பெரிய அடியெல்லாம் இல்லடா… ஏன்டா நோயாளி மாதிரி ட்ரீட் பண்றீங்க? நான் நல்லா தான் இருக்கேன். எதுனாலும் உனக்கு கால் பண்றேன்… வீட்டு சாவியை குடு டா”, என துவாரகா கெஞ்சினாள்.
“முடியாது… இங்க தான் இருக்கணும்… உனக்கு என்ன வசதி வேணும் சொல்லு நாங்க செஞ்சி தரோம்… இங்க தான் இருக்கணும்”, லில்லி.
“சொன்னா கேளுங்கடா ரெண்டு பேரும் “
“மாட்டோம். இங்க தான் இருக்கணும்… “, என அவர்கள் ஒரே முடிவாக அவளின் வீட்டு சாவியை கொடுக்க மறுத்து அங்கேயே தங்க வைத்துக் கொண்டனர்.
“இரண்டு நாள் தான்”
“நீ பழையபடி கம்பு சுத்தற வரைக்கும் இங்க தான் இருக்கணும்”
“வில்ஸ் அதுலாம் டூ மச் டா… இரண்டு மாசம் என்னை இங்கேயே இருக்க சொல்றியா நீ? என் வீட்டுக்கு வேற தனியா வாடகை தரணுமா?”
“அப்ப அத காலி பண்ணிட்டு இங்க வந்துடு… மூனு பேரும் இங்கேயே ஜாலியா இருக்கலாம்”, லில்லி ஆர்வத்துடன் கூறினாள்.
“அண்ணனும் தங்கச்சியும் ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல… இங்க பாருங்க அதிக பட்சம் பத்து நாள். இந்த கட்டு பிரிச்சதும் என் வீட்டு சாவிய குடுத்துடணும். புரியுதா?”
“சரி.. டீல்.. கட்டு பிரிக்கறவரை இங்க தான் இருக்கணும்”, எனக் கோரஸாகக் கூறிவிட்டு இருவரும் அவள் தங்க அறையைத் தயார் செய்யச் சென்றனர்.
“என்ன ரெண்டும் கோரஸ் பாடுதுங்க… நானே வாய குடுத்து எதாவது மாட்டிகிட்டேனா?”, எனத் தனக்குத் தானே பேசியபடி அவர்கள் செய்வதை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.