27 – மீள்நுழை நெஞ்சே
துவாரகாவைத் தரையில் கால் ஊன்றவிடாமல் இருவரும் அவளுக்குத் தேவையானதை எல்லாம் செய்துக் கொடுத்தனர்.
லில்லி துவாரகாவிற்கு சுடுதண்ணீரில் உடம்பெல்லாம் துடைத்து விட்டாள்.
வில்சன் அவளுக்கு பிடித்த உணவுடன் அவனுக்கு தெரிந்த சில இந்திய உணவு வகைகளையும் செய்துக் கொடுத்தான்.
ராபர்ட் மற்றும் ஜெனி இருவரும் பெரிதாக எந்த பிரச்சனையும் இன்றி அவ்வழக்கில் இருந்து வெளியே வந்தனர்.
“தேங்க்யூ சோ மச் ராக்ஸ்…. நீ காயப்பட்டு எங்கள காப்பாத்திட்ட… உன் ப்ராஜெக்ட்ல எந்த ஹெல்ப்னாலும் சொல்லு நான் செய்றேன்”, என ஜெனி அவளுக்கு வாக்குறுதிக் கொடுத்தாள்.
“அப்ப அடுத்த ப்ராஜெக்ட்-க்கு இன்னொரு தடவை காப்பாத்தினா தான் ஹெல்ப் பண்ணுவியா ஜெனி?”, என முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டுக் கேட்டாள் துவாரகா.
“ஹாஹாஹா…. நீ சரியான குறும்புக்காரி ராக்ஸ்…. எப்பவும் எந்த ஹெல்ப்னாலும் கேளு. நான் செய்ய தயாரா இருக்கேன்”, என ஜெனி சிரித்தபடிக் கூறினாள்.
ஜெனியும் விடுமுறை நாட்களில் வந்து அவளுடன் தாக்குவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டாள்.
“வில்ஸ்…. நம்ம மேனேஜர் வீட்டுக்கு கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு போகணுமே…. “
“கண்டிப்பா போகணுமா ராக்ஸ்?”
“ஆமா… நான் இங்க வந்தப்பறம் என்னையும் மனுஷியா மதிச்சி கூப்பிட்டு இருக்காரு… கிஃப்ட் கூட வாங்கி வச்சிருக்கேன் அவர் பசங்களுக்கு… “, எனக் குழந்தைப் போல முகத்தை வைத்துக்கொண்டுக் கூறினாள்.
“நீ பார்ட்டி வியர் போட முடியாது ராக்ஸ். கை ரொம்ப ஸ்ட்ரெயின் ஆகும். இங்க பார்ட்டிக்கு அந்த ட்ரெஸ் கோட்ல தான் போகணும்”, வில்ஸ் அவளுக்கு இங்கிருக்கும் வழக்கத்தை எடுத்துரைத்தான்.
“சோறு போடறேன்னு கூப்டு இப்படி வேற ரூல்ஸ் வச்சா எப்படி டா? சரி விடு… நீங்களாவது போய் அந்த கிஃப்ட்ஸ் குடுத்துட்டு வந்துடுங்களேன்… “
“நாங்களா…? நாங்க போயிட்டா உன்ன யாரு பாத்துப்பாங்க?”, லில்லி கேட்டாள்.
“ஒரு வாரம் ஆச்சி லில்லி. எனக்கு வலியும் பெருசா இல்லை… கொஞ்ச நேரம் தானே.. நான் இருந்துக்குவேன். நீங்க போயிட்டு வாங்க…. வில்சன கூட இன்வைட் செஞ்சி இருக்காங்க…”
“அவன் போகட்டும்.. நான் உன் கூட இருக்கேன் ராக்ஸ்… உன்னை விட்டு நான் போக மாட்டேன்…”, எனக் கூறிவிட்டு அவள் அருகில் அமர்ந்துக் கொண்டாள் லில்லி.
“லில்லி…”, எனத் துவாரகா ஆரம்பிக்கும் முன் வில்சன், “அவ சொல்றது சரி தான் ராக்ஸ். நான் மட்டும் போயிட்டு சீக்கிரம் வரேன்… நீங்க இரண்டு பேரும் வீட்லயே இருங்க. உன்னை தனியா எல்லாம் விடமுடியாது”, என முடிவாகக் கூறிவிட்டான்.
“உங்களோட இம்சை டா…. என் தனிமை காதலனோட இருக்கவே விடமாட்டேங்கறீங்க “, என முகத்தை சுருக்கி அவள் கூறிய விதத்தில் டக்கென லில்லி துவாரகாவின் கன்னத்தில் முத்தம் வைத்தாள்.
“உன் லவ்வர்ஸ் நாங்க தான் இங்க இருக்கற வரைக்கும். நான் தான் பர்ஸ்ட்.. வில்ஸ்க்கு கூட அந்த இடத்தை நான் விட்டு தரமாட்டேன் ராக்ஸ்”, என லில்லி கூறி அவளை அணைத்துக்கொண்டாள்.
“உங்கள போல லொட லொட இம்சை காதலர்கள் எனக்கு வேண்டவே வேணாம் போங்க….”
“நாங்க லொட லொடவா?”, என வில்சன் இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டுக் கேட்டான்.
“ஆமா டா…. என் வீட்டுக்கும் விடமாட்டேங்கறீங்க…. சாவியும் தரமாட்டேங்கறீங்க…. ஐ ஹேட் யூ போத்”, எனக் கூறிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“அங்க என்னடி சும்மா அவங்கள திட்டிகிட்டு இருக்க? உன்னை நல்லா பாத்துகிட்டா அதுப்பா இருக்கோ? நாங்களே அந்த புள்ளைங்க இருக்கறதால தான் இங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கோம். இதுல தனிமை காதலன் வெங்காய காதலன் வசனம் பேசறியா?”, என பவானியின் குரல் கேட்டதும் கண்கள் திறந்தாள்.
“சத்தம் மட்டும் வருது… ஸ்க்ரீன் எங்கடா?”, எனக் கேட்கவும் டீவியில் தாயின் முகம் தெரிந்தது.
“அந்த புள்ளைங்க எவ்வளவு கவனமா உன்ன பாத்துக்கறாங்க… உனக்கு எதுக்கு இப்ப தனியா இருக்கணும் சொல்லு டி?”, மீண்டும் கேட்டார்.
“அதுக்காக நிமிஷத்துக்கு பத்து தடவை நல்லா இருக்கியான்னு கேட்டா எப்படி இருக்கிறது? உன் இம்சை தாங்காம அங்க இருந்து இங்கு வந்தா இங்க ஒன்னுக்கு ரெண்டா இருக்குங்க… “, தாயிடம் வம்பிலுத்தாள்.
கையில் இருந்த கட்டு தெரியாத வண்ணம் லில்லி முன்பே போர்வையை சுற்றி விட்டிருந்ததால் கொஞ்சம் நிம்மதியாக பேசினாள்.
“எப்ப டா கால் கனெக்ட் பண்ணீங்க? பேண்ட் பாக்கலையே?”, என மெதுவாக லில்லியிடம் கேட்டாள்.
“இல்ல… போர்வை போர்த்திட்டு தான் கால் பண்ணேன்….”, லில்லி காதருகில் கூறிவிட்டு அவளது முடியை சரி செய்வது போல் ஹேர்பேண்ட் போட்டுவிட்டாள்.
“சாப்டியா? உடம்பு பரவால்லயா இப்ப? ஒரு வாரமா காய்ச்சல் விடாம எப்படி ஆகிட்ட பாரு? மூஞ்ச பாக்க முடியல…”
“அப்பறம் ஏன் ம்மா வீடியோ கால் போடற… சும்மா பேசினா போதாதா? வில்ஸ் சுடுதண்ணி வேணும்”, என அவனுக்கு அடுத்த வேலையைக் கொடுத்தாள்.
“கொலுப்பு கூடிப்போச்சி டி உனக்கு…”
“ஆமா..இங்க எல்லாத்துலையும் வெண்ணெய் சேக்கறாங்களா அதான் ம்மா…. நீ நல்லா ஒரு செட்டிநாடு பெப்பர் சிக்கன் ப்ரை செஞ்சி குடும்மா…. “
“வேலைய விட்டுட்டு வரியா?”
“எதுக்கு? உன்கிட்ட அங்க வந்து திட்டு வாங்கவா? நான் வேலைல இருக்குறதால தான் நாலு பேரு மதிக்கறாங்க… அதுவும் இல்லைன்னா அவ்வளவு தான். நீயே கூட என்னை வெளிய போன்னு சொல்லுவ எதாவது நான் சொல்லிட்டா….”
“இந்த பேச்சுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல….கண்ணு லில்லி நல்லா இருக்கியா? அவ ரொம்ப பேசினா தூக்கமாத்தர போட்டு தூங்க வச்சிட்டு”, என பவானி லில்லியிடம் பேசினார்.
“நீ சொல்றது அவளுக்கு புரியணும்னா நான் தான் சொல்லியாகணும் பவானி அவர்களே….”, சிரித்தபடிக் கூறினாள்.
“அதான் நான் இருக்கேனே மேடம்…. நான் மொழி பெயர்த்துக்கறேன்…. “, எனக் கனி போனை தன் பக்கமாகத் திருப்பினாள்.
“ஹேய் … நீ எப்ப வந்த? “, எனத் துவாரகா ஆச்சரியமாகக் கேட்டாள்.
“லில்லி உனக்கு போர்வைய போத்தறப்பவே வந்துட்டேன்”, எனக் கனி கூறியதும் ஒரு விநாடி துவாரகா வில்சனைப் பார்த்துவிட்டுக் கனியைப் பார்த்தாள்.
“இது யார் போன்? “
“என்னது தான். உன் வீட்ல தான் இருக்கேன். உடம்ப பாத்துக்க… நான் வீட்டுக்கு போய் பேசறேன்”, எனக் கூறி வைத்துவிட்டாள் கனி.
“போச்சி… பாத்துட்டா போல…. இன்னிக்கு ஒரு சம்பவம் இருக்கு லில்லி. டேய் வில்சன்.. ஏன்டா? ஏன்? “, என அவனை முறைத்தாள்.
“மறைக்கறது தப்பு ராக்ஸ்…”
“நான் ஒன்னும் சென்னைல இல்ல டா. உடனே வீட்ல இருக்கிறவங்க என்னை பார்க்கணும்னு சொன்னா இங்க வரமுடியுமா? யார்கிட்ட என்ன சொன்ன?”, எனக் கூர்மையாக அவன் முகத்தைப் பார்த்தபடிக் கேட்டாள்.
“கனிகிட்ட தான்…. நான் எதுவும் சொல்லல… உன் பேண்டேஜ் பாத்திருப்பா. இனிமே தான் கூப்பிடுவா….”, என அவன் கூறி முடிக்கும் முன் கனி தன் வீட்டிற்கு வந்து தனது அறையில் இருந்து அழைத்தாள்.
“சமாளிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா டா? அதுவும் இவள சமாளிக்கறது ரொம்பபபபபபபபப கஷ்டம் டா… ஒழுங்கா வந்து உண்மைய சொல்லுங்க இரண்டு பேரும்…”, என இருவரையும் அருகில் அமரவைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றாள் துவா.
“என்னாச்சி? எதுக்கு அந்த பேண்டேஜ்?”, எடுத்ததும் நேராக விஷயத்தைத் தான் கனி கேட்டாள்.
“உண்மைய சொல்ல ஆரம்பிச்சவனே மொத்தமா சொல்வான் … சொல்லுங்க வில்சன் சார்”, எனப் பல்லைக் கடித்தபடிக் கூறினாள்.
“கனி… இது எதிர்பாராத விதமா ஏற்பட்ட விபத்து…. “, என ஆரம்பித்து இவர்கள் ஷாப்பிங் சென்றது முதல் மருத்துவமனையில் துவாரகா கண் விழிக்கும் வரை நடந்த அனைத்தையும் நிகழ்வுகள் மாறாமல் அப்படியே ஒப்புவித்தான் வில்சன்.
அவன் சொல்வதையே வாயை பிளந்தபடி பார்த்துக்கொண்டிருந்த துவாரகா, “ஹேய் வில்ஸ் எப்படி டா? லெவன்த் கெமிஸ்ட்ரில வர்ற பீரியாடிக் டேபில்ஸ் அ மனப்பாடம் பண்ணி சொல்ற மாதிரி சொல்ற?”, எனத் துவாரகா கூறியதும் கனி லில்லி இருவரும் கலகலவென சிரித்தனர்.
வில்சன் துவாரகாவின் கழுத்தை நெறிக்க அருகில் வந்து முறைத்து விட்டு விலகினான்.
“அப்பாடா கனி சிரிச்சிட்டா… இனி கவலையில்லை….”, எனத் துவாரகாக் கூறியபடித் தனது போர்வையை எடுத்துவிட்டு தனது தோள்பட்டையைக் காட்டினாள்.
“வில்ஸ் … கொஞ்ச நேரம் நீ உள்ள இரு… நான் அவ காயத்த முழுசா பாக்கணும்”, என கனி அவனிடம் கேட்டதும் வெளியே சென்றான்.
லில்லி கதவடைத்துவிட்டு உள்ளே வந்ததும் ஒரு பக்க உடையை கழட்டி கனிக்குக் காயத்தை காட்டினர்.
பேண்டேஜ் சிறிதாக தான் இருந்தது. ஆனால் சரியாக தோள்பட்டையில் குண்டுப்பட்டிருக்கிறது. வலியும் எப்படி இருக்குமென்று அவளால் யூகிக்க முடிந்தது.
“இவ்வளவு வலிய வச்சிட்டு தான் அன்னிக்கு அப்படி மூஞ்ச சமாளிச்சியா? “, எனக் கனி கேட்டதும், “நீங்க அங்க தவிச்சிட்டு இருந்தா நான் எப்படி இங்க ரெஸ்ட் எடுக்கறது? அதான் சொல்ல வேணாம்னு சொன்னேன். முழுசா மறைக்கமுடியாது.. ஆனா ஊருக்கு வந்து சொல்லிக்கலாம்னு இருந்தேன்… “, எனக் கூறி உடையை சரி செய்துக் கொண்டு வில்சனை உள்ளே அழைக்கச்சொல்லி லில்லியிடம் கூறினாள்.
“காயம் எப்ப முழுசா குணமாகும்?”, கனி கண்களில் பெருகும் நீரை உள்ளிழுத்தபடிக் கேட்டாள்.
“எப்படியும் ஒரு மாசம் ஆகும். இப்ப தான் ஒரு வாரம் ஆகுது… இன்னும் நாலு நாள்ல பேண்ட்டேஜ் எடுத்துடலாம்”
“சரி. ஜாக்கிரதையா இரு. நீ கண்டம் விட்டு கண்டம் போனாலும் அடிதடி உன்ன விடாம தொறத்துது…. நான் எதுவும் வீட்ல சொல்லமாட்டேன்… நீயா வந்து சொல்லு…. “
“சரி… என்ன பண்ற? சாப்டியா? “, சகஜமாக உரையாடியபடி, அவர்கள் உரையாடலில் லில்லியையும் பேச்சில் கலந்துக் கொள்ள வைத்தனர்.
இரண்டு மணி நேரமாக அவர்கள் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தனர்.
வீட்டில் பேச்சொலி கேட்பதுக் கண்டு வில்சன் தான் மிகவும் சந்தோஷமாக இருந்தான். அவர்களுடன் பேச்சில் கலந்துக் கொள்ளவில்லை தான், ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட குரல்கள் அவன் வீட்டில் ஒலிக்கிறது.
தனிமையில் எப்போதும் அமர்ந்திருப்பவன் இப்போதெல்லாம் தனிமையை உணர்வதே இல்லை. துவாரகாவின் வரவால் அவனின் தனிமை அவனை விட்டுச் சென்றிருந்தது.
மென்மையானப் புன்னகையுடன் துவாரகா பேசிக் கொண்டிருப்பதை இரசித்துக் கொண்டிருந்தான்.