29 – அகரநதி
அகரன் வீட்டின் கதவை திறந்ததும், அந்த வீட்டை கண்டவள் அப்படியே ஒரு நொடி திகைத்து நின்று , ஊரில் இருக்கும் தன் அறைக்கு வந்து விட்டோமோ என்று தான் எண்ணினாள்.
அவள் அறைக்கும் இந்த வீட்டின் ஹாலிற்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை என்று தான் கூறவேண்டும். கூர்ந்து கவனித்தால் சிறிதாக ஒன்று இரண்டு பர்னிச்சர் மட்டுமே மாறுபட்டு இருப்பது தெரிந்தது. அத்தனை நேர்த்தியாக இருந்ததோடு, அவளின் அறை சுவற்களுக்கு பூசப்பட்டு இருக்கும் வர்ணம் கூட மாறவில்லை.
“அகன்….. எப்படி இந்த ஹால் என் ரூம் மாதிரியே இருக்கு? “, எனக் கேட்ட நதியாளின் கண்களில் ஆச்சரியம் மின்னியது.
“வீடு புல்லா பாரு”, அகரன்.
அகரன் கூற்றுப்படி அவ்வீட்டை முழுதாக சுற்றிப் பார்த்ததும் அவளுக்குள் அத்தனை சந்தோஷம் பொங்கியது.
“என்ன நதிமா வீடு எப்படி இருக்கு?”, அகரன் அவளை நோக்கி வந்து கேட்டான்.
“ரியலி ஐ காண்ட் பிலீவ் இட் அகன். அப்படியே ஊருல இருக்கற நம்ம இரண்டு வீடும் தான்னு நினைச்சேன். 80% அப்படியே இருக்கு. மோர் ஆர் லெஸ் இடம் கூட ஒரே அளவு தான் இங்கயும் அங்கயும். ஆமா நீ தானே அங்க நம்ம வீட்டையும் டிசைன் பண்ணி குடுத்த?”, நதியாள் அவனின் அருகில் வந்து அவன் கையை பிடித்தபடிக் கேட்டாள் சிறுகுழந்தையென மாறி.
“ஆமா. மாமா கேட்டதும் சரணும் நானும் தான் டிசைன் பண்ணோம். இந்த பிளாட் அந்த டைம்ல தான் வாங்கினோம். நீ சொன்னமாதிரி அந்த வீட்டு அளவுக்கு வெறும் டென் ட்வென்டி பீட்ஸ் தான் கம்மி. அதான் ஒரே டிசைன்ல பண்ணலாம்னு பழமை புதுமை இரண்டும் கலந்து பண்ணியாச்சி. ஊருல நம்ம இரண்டு வீடும் ரொம்பவே அழகா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான் அதுகூட கொஞ்சம் புதுமையும் ஏட் பண்ணி மிக்ஸிங்ல இப்படி பண்ணியாச்சி. நல்லா இருக்கா?”, அகரன் அவளின் தோளில் கைப்போட்டபடிக் கேட்டான்.
“சூப்பரா இருக்கு அகன். நீ செய்யற எல்லாமே எப்பவும் ஆவ்சம் தான்”, நதியாள் அவனின் தோளில் தன் கைகளை மாலையாக்கி அவனின் கழுத்தில் கோர்த்தபடிக் கூறினாள்.
இருவரும் பேச்சுவாக்கில் ஒருவரை ஒருவர் நெருங்கி நிற்க, இப்பொழுது இரு ஜோடி கண்கள் ஒன்றை இன்னொன்று காந்தமாக ஈர்த்தபடி நின்றன.
அவர்களுக்குள் இருக்கும் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறையத்தொடங்கியது.
“உனக்கு பிடிச்சி இருக்கா நதி பேபி”, அகரன் குரலில் அத்தனை மென்மை கூடி இருந்தது.
“ரொம்பவே… நீ செஞ்சது எப்ப எனக்கு பிடிக்காம இருந்து இருக்கு அகன்?”, நதியாளும் ஏதோ மாயத்தில் கட்டுண்டவள் போல அவனின் கண்களை விட்டு வேறெதுவும் உணரமுடியாமல் நின்றாள்.
“அப்ப நான் எது பண்ணாலும் உனக்கு பிடிக்குமா டார்லிங்?”, அகரனின் கண்கள் அவளின் கண்களில் இருந்து நகர்ந்து நெற்றி , கன்னம், நாசி வழியாக இதழில் மையம் கொண்டது.
“ம்ம்”, நதியாள் இன்னும் அதே நிலையில் நின்றபடி கூறினாள் அகரனின் பார்வை செல்லும் இடமறியாது.
இன்னும் சில நொடிகளில் அந்த இரு உள்ளங்களும் காதலின் முதல் பறிமாற்றத்தை நடத்த காத்திருந்தது. சரியான தருணம், சரியான இடம் அனைத்தும் அமைந்து வந்திருந்தது.
அகரன் தன் முதல் முத்ததை அவளின் நெற்றியில் கொடுத்தான். அவனின் ஆத்மார்த்தமான இதழ் ஒற்றல் நதியாளின் ஆத்மாவரையும் சென்றடைந்தது.
நதியாள் இமைமூடி அவனின் அன்பை பெற்றுக்கொண்டு இருந்தாள். அவனின் முன்நெற்றி முத்தம் அவளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.
அகரன் அவள் முகத்தை பார்க்க அவளின் முகம் அன்றலர்ந்த மலராய் விகசித்திருந்தது.
அத்தனை ஆனந்தம் அவள் முகத்தில், இலக்கியங்களில் ஏன் பெண்ணின் முகத்தை பூக்களை கொண்டே வர்ணிக்கின்றனர் என்கிற சந்தேகம் இன்று அகரனுக்கு நிவர்த்தியானது.
ஒரு பெண் தன் மனம் கொண்ட ஆண் அருகில் எத்தனை சந்தோஷம் கொண்டு மனமும் உடலும் பூத்து நிற்பாள் என்பதை தன் கண் கொண்டு அவன் கண்மணியைக் கண்டு உணர்ந்தான்.
“கண்மணி…”, அகரன் மிக மென்மையாக அழைத்தான்.
“……………….”
“கண்மணி”, என்று அழைத்து அவளின் மூடிய இமைகளில் லேசான முத்திரைப் பதித்தான்.
அவனைக் கண்டவள் நொடியிலும் குறைந்த வேலையில் அவனிடம் இருந்து விலகி, முதல்முறையாக வெட்கம் என்கிற உணர்வு பெற்று அவனை நேராகப் பார்க்க முடியாமல் தவித்துப் போனாள்.
“ச்சே… என்ன நதி இப்படி பண்ணிட்ட…. அச்சோ அகன் முகத்த ஏன் பாக்க கூச்சமா இருக்கு? என்ன இது ஆண்டவா… “, என மனதிற்குள் தவித்துக் கொண்டு இருந்தாள்.
அகரன் அவள் தன்னை விட்டு விலகி நின்றதும் அவளின் முகத்தில் அவளின் எண்ணங்களை படித்துவிட்டு அவளின் அருகில் வந்தான்.
“நதிமா …… “, அகரன்.
“………………….”
“கண்மணி”, அகரன்.
சடாரென தலை நிமிர்த்தி அகரனைக் கண்டாள்.
“ஹாஹா”, சிரிதாக சிரித்துவிட்டு அவளை தன்னருகில் இழுத்து அமர்த்திக் கொண்டான் அகரன்.
“கண்மணி… என்னாச்சி?”, அகரன் அவளை தோளோடு அணைத்தபடிக் கேட்டான்.
“இப்படி கட்டிபிடிச்சிட்டே கேட்டா எப்படி பதில் சொல்றது”, என தனக்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
“சொல்றத கொஞ்சம் சத்தமா சொல்லலாமே கண்மணி”, அகரன் அவளின் தலையை நிமிர்த்திக் கூறினான்.
அக்கண்களில் என்ன தெரிந்ததோ இருவரும் மீண்டும் தன்னிலை இழக்க ஆரம்பிக்க நதியாள் சுதாரித்து அகரனிடம் இருந்து தள்ளி அமர்ந்து வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.
“புதுசா இருக்கு கண்மணி”, அகரன் அவளை பார்த்தவாறு அமர்ந்தபடிக் கூறினான்.
“எது அகன்?”, நதியாள் அவன் முகம் பார்க்காமலே பதிலளித்தாள்.
“நீ என் முகம் பார்க்காம திரும்பி உக்காந்திருக்கறது தான்”, அகரன் தன் உடையை தளர்த்தியபடிக் கூறினான்
“நீயும் தான் என்னை கண்மணினு கூப்பிடறது புதுசா இருக்கு அகன்”, இம்முறை அவனை நேருக்கு நேர் பார்த்தபடி பதிலளித்தாள்.
“ம்ம்.. இது தான் என் நதியாள். நேருக்கு நேர் பாத்து பேசறது”, அகரன்.
“நாம எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம் அகன்?”, நதியாள் நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“கல்யாணமா ? எதுக்கு?”, அகரன் புரியாதவன் போல கேட்டான்.
“உனக்கு தெரியாதா? “, நதியாள் கண்களில் கோபம் எட்டி பார்த்தது.
“தெரியல. ஏன் கல்யாணம் பண்ணணும்? அதுவும் நம்ம?”, அகரன்.
“சரி. நான் போய் ரெடி ஆகறேன். மீட்டிங் போக டைம் ஆச்சி”,என எழுந்தவள் அகரனின் மேல் விழுந்திருப்பாள் ஆனால் அகரன் அவள் கைப்பற்றியதும் சுதாரித்து சோபாவை பற்றிக் கொண்டாள்.
“ஓஓ…. மேடம் பலசாலி”, அகரன்.
“அப்படியும் வச்சிக்கலாம்”, நதியாள் பதிலில் அனல் தெறித்தது.
“எதுக்கு கோபம்னு தெரிஞ்சிக்கலாமா?”, அகரன்.
“கேட்டதுக்கு பதில் சொல்லாம இருக்கறதுக்கு”, நதியாள்.
“அப்ப நானும் கோபப்படலாம் தானே?”, அகரன்.
“பட்டுக்க… நான் ரெடி ஆகப்போறேன் விடு”, அவனின் கை உதறி எழுந்தாள்.
இம்முறை அகரன் அவளை தன் இருகைகளில் தூக்கிக் கொண்டு, தன்னறைக்கு வந்து அவளை இறக்கிவிட்டு கதவைச் சாற்றினான்.
அதைக் கண்டவள் தான் பாட்டிற்கு பாத்ரூம் சென்று முகம் கை கால் கழுவி பிரஸ் ஆகி வந்தாள்.
நீர் சொட்டும் முகத்துடன் அவளைக் காண சூரியன் மழையில் நனைந்ததோ என்ற எண்ணம் தோன்றியது.
அவளின் மஞ்சள் முகம் அத்தனை பிரகாசம் கொண்டு செஞ்சூரியனைத் தான் நினைவுறித்தியது.
சூரியன் கடலைப் பிரிந்து மேலெழும்பும் பொழுது வரும் கோபமும் , கடலோடு அணைக்கும் சமயம் வரும் சந்தோஷமும் வெட்கமும் செம்மையாக மாறி, அந்த சமயங்களை இரசனைகளின் முக்கிய தருணமாக ஆக்குகிறது.
அதே போல நதியாளும் அகரனுடனான முதல் ஊடலில் கடலைப் பிரியும் ஞாயிறாக கோபத்துடன் கூடிய செம்மைப் பெற்று நின்றாள்.
“என் நதிக்கு என்மேல் இன்னமும் கோபம் நெருப்பாய் கொதிக்கிறது…. இந்த கண்மணிக்கு என்மேல் இன்னமும் கோபம் என் பதிலை கேட்டபின்னும்”, என்று அகரன் பாட நதியாள் அவனை முறைத்தாள்.
“அப்பா….. நதிமா நீ என்னை பார்த்து இப்படி முறைக்கிறது இதுதான் முதல் தடவை அப்படியே இரு போட்டோ எடுத்துக்கறேன். இதுலாம் என் லைப் டைம் அசீவ்மெண்ட்”, என தன் மொபைலை எடுத்து அவளின் முகத்தை, அவள் நிற்கும் நிலையை என பல ஆங்கிளில் போட்டோ எடுத்துவன்,” பேபி ஒரு செல்பீ”, என்று அருகில் வந்தான்.
(தப்பு பண்ணிட்டியே ராசா…. )
அருகில் வந்தவன் அடுத்த நொடி கட்டிலில் இருந்து கீழே உருண்டிருந்தான்.
“ஏண்டா… எவ்வளவு கொழுப்பு இருந்தா என்னை காண்டாக்கி அத வேற போட்டோ எடுப்ப? அவ்வளவு ஆகிரிச்சில்ல உனக்கு? இங்க வாடா…. வா ன்னு சொன்னேன். என்னை பார்த்த எப்படி தெரியுது உனக்கு? மரியாதையா கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டா ஏன் எதுக்குன்னு கேப்பியா? எல்லா கேள்வியும் கேட்டுட்டு ரூமுக்கு தூக்கிட்டு வேற வருவியா நீ? என்னடா நினைச்சிட்டு இருக்க ? இதுல கண்மணி பொண்மணின்னு கொஞ்சல் வேற…. கிட்ட வந்துடு ஓடாத”, என அவனை கையில் கிடைத்ததை வைத்து துரத்தித் துரத்தி அடித்தாள் நதியாள்.
நதியாளின் அடிகளில் தப்பிப்பது சற்றே சிரமமாக தான் இருந்தது அகரனுக்கு. அவளின் கையால் விழும் அடியை விட மற்றதைக் கொண்டு அடிப்பதில் அதிக வலி இல்லையென்று தான் அகரன் கூறுவான். கிரிக்கெட் பேட்டிலிருந்து கடப்பாரை வரை எடுத்து வேலை செய்து பழக்கப் பட்டவள் கை சற்று வலு கூடித் தான் இருக்கும்.
“அய்யோ… அம்மா……. காப்பாத்துங்க….. “, என கதறியபடி அந்த அறை விட்டு வீடு முழுக்க ஓடினான் அகரன்.
20 நிமிடமாக அடி வாங்கியும் வாங்காமல் ஓடியவனைக் காக்க ஆபத்பாந்தவனாய் வந்தான் சரண்.
வீட்டுக் கதவை திறந்தவன் இவர்கள் ஓடிப்பிடித்து விளையாடுவதாக நினைத்து உள்ளே புகுந்து நதியாளை நிறுத்தப் பார்த்தான்.
“ஏய்… நில்லு…. உங்கள மீட்டிங் போகச் சொன்னா இப்படி விளையாடிட்டு இருக்கீங்க?”, சரண் அவள் கைபிடித்து தன்னை அவளிடம் ஒப்படைத்தான்.
ஒரு கையால் சரணை பிடித்தவள், இன்னொரு கையால் கீழே எதையோ எடுத்தாள்.
அவள் என்ன எடுக்கிறாள் என்று எட்டிப் பார்த்த சரண், “அடியாத்தி கத்தி ……. தப்பான நேரத்துல சரியா வந்து சிக்கிட்டேன் போலவே. இந்த மகராசன் என்ன சில்மிஷம் பண்ணாணோ இவ கத்திய வேற எடுக்கறாளே….யாராவது வந்து என்னை காப்பாத்துனா பரவால்லயே… வந்தவனையும் திருப்பி அனுப்பிட்டேனே. என்ன செய்யறது?”, என மனதிற்குள் நினைத்தபடி அகரனையும் நதியாளையும் மாறி மாறி பார்த்தான்.
“என்னாச்சி யாள் குட்டி? அவன் எதாவது பண்ணிட்டானா?”, சரண் எச்சிலை விழுங்கியபடிக் கேட்டான்.
நதியாள் பதில் பேசாமல் இருவரையும் முறைத்துப் பார்த்தாள்.
“அய்யய்யோ…. ஏதோ பெருசா இந்த பாவி செஞ்சி இருக்கான். அதான் இப்படி பாக்கறா…”, என மனதிற்குள் நினைத்தபடி அகரனை பார்க்க , அவன் நதியாளை இரசித்துக்கொண்டு இருந்தான்.
” என்ன இவன் இப்பவும் சைட் அடிச்சிட்டு இருக்கான். இவ கத்திய கைல வச்சிட்டு நிக்கறாளே. கோவத்துல என்னை போட்டுட்டா என்ன பண்ண? இப்ப பேசலாமா வேணாமா?”, என மனதிற்குள் நினைத்தபடி சரண் மீண்டும் இருவரையும் பார்த்தான்.
“யாள் குட்டி என்னாச்சிடா? எதாவது பேசு. அண்ணன் கைய விடுடா”, என தன் கையை உருவ முயன்றான் சரண்.
“சரண்… வீட்டுல சொல்லி அகரனுக்கும் எனக்கும் நிச்சயம் ஏற்பாடு பண்ண சொல்லு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்”, எனக் கூறிவிட்டு தன் பை இருக்கும் அறை நோக்கிச் சென்றுக் கதவைச் சாற்றினாள்.
“டேய்… மீட்டிங் கிளம்ப சொன்னா நீ என்னடா பண்ணிட்டு இருக்க? என்னடா நடந்தது? ஏன் இப்படி சொல்லிட்டு போறா? கத்திய வேற வச்சிட்டு இருக்கா….. என்னடா நடந்துச்சி?”, சரண் அகரனைக் கேட்டான்.
“அது உன் தங்கச்சிக்கு குடும்பம் நடத்தறது எப்படின்னு நான் பாடம் எடுக்க……..”, என அகரன் கூறி முடிப்பதற்குள் சரணின் முதுகில் பிளவர் வாஷ் சுளீரென விழுந்தது.
“சரண்… போய் ரெடியாகி நீயும் மீட்டிங் வர்ற… மணி 5 …. போய் சீக்கிரம் ரெடி ஆகு”, என நதியாள் கூறிவிட்டு அறையைச் சாற்றிக்கொண்டாள்.
சரண் முதுகை தேய்த்துக்கொண்டே,” இங்க இருந்தா என் உயிருக்கு ஆபத்து. என் ரூமுக்கு வா”, என அவனை இழுத்துச் சென்றான்.
அறைக் கதவை சாற்றிவிட்டு ,” என்னடா நடந்தது? ஏன் அவ இவ்வளவு கோவமா இருக்கா?”, சரண்.
“ஒன்னும் இல்லடா. நீ ரெடி ஆகு. நான் அவகிட்ட பேசிக்கறேன்”, அகரன் கூலாக கூறிவிட்டு விசிலடித்தபடி வாஷ்ரூம் சென்றான்.
“டேய்…..என்னன்னு சொல்லு டா… அவ கத்தியோட வேற நிக்கிறா… எதாவது கோவத்துல பண்ணிடப் போறா”, சரண்.
“மச்சான் உன் தங்கச்சி அவ்வளவு கோழை இல்லடா…..”, அகரன்.
“அவ கோழைன்னு யார் சொன்னா? அவ யாரையாவது எதாவது பண்ணிடப்போறான்னு சொன்னேன்”, சரண்.
“ஹாஹாஹா…என் பொண்டாட்டி என்னை எதுவும் பண்ணமாட்டா டா”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“புருசனும்,பொண்டாட்டியும் எங்கள கொல்லாம விடக்கூடாதுன்னு முடிவோட இருக்கீங்க …… அப்படித்தானே?”, சரண் முறைத்தபடிக் கேட்டான்.
“மச்சான்….. இதுக்கு பதில் என் பொண்டாட்டி சொன்னா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?”, அகரன் சரணின் தோளில் கைப்போட்டபடிக் கேட்டான்.
“நான் ஒரு ******* நினைக்கல. என்னை கொலை பண்ண நீ ஐடியா பண்ணாத. கிளம்பு. டிரஸ் சேஞ்ச் பண்ணு போ”, சரண் அவனைத் தள்ளிவிட்டு விட்டு ரெடியாகச் சென்றான்.
“சில்லி பெலோ…..”, என அகரன் சரணைப் பார்த்து கூறிவிட்டு தன்னறை நோக்கிச் சென்றான்.
அங்கே நதியாள் தயாராகி ஹாலில் காத்திருந்தாள். அவளின் ப்ரீ ஹேர் , பேஸ் லைட் மேக்அப், லிப் க்ளாஸ், காஜல், கிரே கலர் பிளேசர், பிளாக் சர்ட், கிரே பேண்ட் அவளை மிக மிடுக்காக, தொழில் சக்கரவர்த்தினியின் தோற்றத்தைக் கொடுத்தது.
தன் லேப்டாப்பில் எதையோ தீவிரமாக செய்துக் கொண்டு இருந்தாள். அகரனும் அவளின் உடை நிறத்திலேயே உடை அணிந்து தயாராகி வெளியே வந்தான். சரணும் தயாராகி வர மூவரும் ******* ஹோட்டல் நோக்கிப் புறப்பட்டனர்.
அந்த பயணம் அகரனுக்கு மிகவும் இரசனையுடன் இருக்க, நதியாள் அகரனின் மேல் கோபத்துடன் இருக்க, சரண் இருதலைக்கொல்லி எறும்பாக நடுவில் சிக்கிக்கொண்டு இருந்தான்.
அங்கே மைராவுடன் ஒரு ஆணும் அமர்ந்திருக்க அது யாரென தூரத்தில் இருந்து பார்த்தபடி அகரனும் , சரணும் நடக்க, நதியாள் அவர்களைக் கடந்து மைராவின் டேபிளுக்கு அருகில் வந்து பின்னால் திரும்பிப் பார்த்தாள்.
அவள் வருவதை தன் முன் இருந்த கண்ணாடியில் பார்த்தபடி இருந்தவன், அவள் நின்றதும் அவளைக் காண திரும்பிப் பார்த்தான் அவன்.
அகரனும் சரணும் முன்னே வந்ததும் பின்னால் அவர்களைத் தொடர்ந்து மைராவின் டேபிளுக்கு வந்தாள்.
அவனும் அவர்களை வரவேற்று அவளிடம் கை நீட்டினான்.
ஹாய் கார்ஜியஸ் …. ஐ ம் மதுரன்……….