32 – அகரநதி
வீட்டில் கால் வைக்கும் சமயம் ஸ்டெல்லா யாரையோ கெட்அவுட் என கத்தியது தான் அனைவரின் செவிகளிலும் விழுந்தது.
யாரிடம் அவள் இப்படிக் கத்திக்கொண்டு இருக்கிறாள் என்கிற யோசனையுடன் முதலில் சரண் தான் உள்ளே சென்றான்.
அவனைத் தொடர்ந்து அகரனும் சிதம்பரமும் உள்ளே வந்தனர். நதியாளும் சஞ்சயும் பரமசிவத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி மெல்ல உள்ளே வந்தனர்.
அங்கே சரிதா வினயின் பின்னே நின்றபடி ஸ்டெல்லாவை முறைத்துக்கொண்டு இருந்தாள்.
சக்ரதேவும் மீராவும் சங்கடமாக நெளிந்தபடி நின்றிருக்க, திலீப் ஸ்டெல்லாவை அமைதிப்படுத்திக்கொண்டு இருந்தான்.
“ஸ்டெல்…. கொஞ்சம் அமைதியா இரு. என்ன நடந்ததுன்னு கேக்காம இப்படி கத்திகிட்டு இருந்தா எதுவும் தெளிவாகாது”, திலீப்.
“அது எனக்கும் தெரியும் திலீப். ஆனா அவ பேசுற பேச்ச என்னால பொறுத்துக்க முடியாது. அவள மீரா கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கச்சொல்லு”, ஸ்டெல்லா கோபத்தில் கொதித்துக்கொண்டு இருந்தாள்.
“என்ன? அவள மாதிரி மானங்கெட்டவ கால்ல நான் விழணுமா? நெவர். ……..”, என்று கூறி வாய் மூடும் முன் அவளின் கன்னம் நெருப்பாய் எரிவதைச் சற்று நேரம் கழித்தே உணர்ந்தாள் சரிதா.
“எங்க வந்து யாரபத்தி தப்பா பேசற? நாக்க அறுத்துறுவேன். நீ யார்டி என் மீராவ பத்தி பேச? ஸ்டெல்லா இங்க என்ன நடக்குது?”, நதியாள் சரிதாவை அறைந்தபின் ஸ்டெல்லாவை நோக்கி கேட்டாள்.
“இந்த வெட்கம் கெட்டவ நம்ம மீராவ தப்பா பேசறா. அவ….அவ…. தேவ் சார்கூட…… சே…என்னால அந்த வார்த்தைய சொல்லக்கூட முடியல. அவ பேசற பேச்சுக்கு இவன் வந்து வக்காளத்து வாங்கறான். கேட்டா அவளுக்கு அண்ணணாம்…. சே…. என்ன ஜென்மங்களோ தெரியல…. இங்க நடந்த அத்தனைக்கும் காரணமே இவன் தான்”, என வினயைச் சுட்டிக்காட்டினாள் ஸ்டெல்லா.
“ஏய்….. யார அவன் இவன்ங்கிற… மரியாதையா பேசினா உனக்கு நல்லது. இல்ல பின்னாடி அனுபவிப்ப”, என வினய் கண்களில் வஞ்சம் பொங்கப் பேசினான்.
“வினய்….. என்ன நடந்தது இங்க?”, அகரன் கோபமாக அதே சமயம் அழுத்தமாகக் குரல் எழுப்பினான்.
“……..”
“பதில் சொல்லு வினய்…..”, சரணும் கேட்க , அப்பொழுதும் அமைதியாகவே நின்றான் அவன்.
“தேவ் என்ன நடந்தது?”, சிதம்பரம் கேட்டார்.
“அது வந்து மாமா….. நான் கீழ ரூம் லாக் ஆகி இருக்குன்னு மேல குளிக்க போனேன் கொஞ்சம் அவசரமா வெளியே போகணும்னு. அது மீரா ரூம் போல…….. நான் இருக்கறது தெரியாம உள்ள வந்துட்டாங்க. நான் மேல போனப்ப இவங்க யாரும் ஆபீஸ்ல இருந்து வரல. நான் குளிச்சிட்டு வரத பாத்துட்டு
அவங்க உடனே வெளியே போயிட்டாங்க. அவங்க வெளியே வந்தப்ப வினய் பாத்து இருக்கான். நான் வெளியே வரப்ப சரிதா பாத்திருக்கா. இரண்டு பேரும் ஒரே ரூம்ல இருந்து வரத பாத்துட்டு சரிதா மீராவ பத்தி தப்பா பேசவும் ஸ்டெல்லா திட்டிட்டு இருந்தாங்க. வினய் நடுவுல வர நான் பேச அவங்க பேசன்னு சரிதா அதிகம் வார்த்தைய விட்டுட்டா… சத்தியாம தப்பா எதுவும் நடக்கல மாமா”, தேவ் தர்மசங்கடமான நிலையில் கூறி முடித்தான்.
“தம்பி இது எதார்த்தமான விஷயம். இதுக்கு எதுக்கு இத்தனை பிரச்சினை?”, சிதம்பரம் கண்டிக்கும் குரலில் கேட்டார்.
“அது எப்படிங்க அப்படி விட முடியும். என் மாமா கூட ஒரே ரூம்ல அவளுக்கு என்ன வேலை? அவர வலச்சு போடணும்னு தான் அவ இப்படி பண்ணி இருக்கா….. கேள்விபட்டேன்… அவளுக்கு அப்பா இல்லையாமே…. அதான் வாட்டசாட்டமா என் மாமாவ பாத்ததும் சொத்தோட செட்டில் ஆகிடலாம்னு இப்படி பண்ணி இருக்கா… இத சொன்னா இவ ஓவரா அவள கண்ணகி ரேஞ்சுக்கு பேசறா”, சரிதா வாய்கூசாமல் வார்த்தைகளை தெறிக்கவிட்டாள்.
நதியாள் அவளை அடிக்க போக, வினய் அவளின் கைகளை தடுக்க, அகரன் அவனை இழுத்து தள்ளி நிறுத்திவிட்டு நதியாளை தன் கைவளைவில் கொண்டு வந்தான்.
“விடு அகன்… அவள இன்னிக்கு தோல உறிச்சி தொங்கவிடாம விட்றதில்ல. என்ன பேச்சு பேசறா….. “, நதியாள் அவனின் கைகளில் இருந்துத் திமிறியபடிக் கூறினாள்.
“இங்க பாரு பொண்ணே… மீரா எங்க வீட்டு பொண்ணு. அவ ஒன்னும் சாதாரணமான குடும்பத்துல இருந்து வரல. அவளே கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரி. இப்படியெல்லாம் பேசினா நாங்க சும்மா இருக்கமாட்டோம். நீ தங்கி இருக்கறது அவங்க இருக்கற வீட்ல. அந்த புள்ள ரூமுக்குள்ள அனுமதி இல்லாம போனது தேவ் பையளோட தப்பு. அதுக்கு அந்த புள்ளைய தப்பா பேசினா என்ன அர்த்தம்? தேவ் உன் அத்தை மகள மீராகிட்ட மன்னிப்பு கேக்க சொல்லு”, சுந்தரம் தாத்தா கோபமாகக் கூறினார்..
“சரிதா மன்னிப்பு கேளு”, தேவ் கண்கள் சிவக்க கூறினான்.
“என்னால முடியாது மாமா. அவ வேணும்னே தான் பண்ணா….”, சரிதா பிடிவாதம் பிடித்தாள்.
“வினய்…. உன் தங்கச்சிய மன்னிப்பு கேக்கச்சொல்லு. இல்ல இங்க நடக்கறதே வேற…”, தேவ் இழுத்துவைத்த பொறுமையுடன் கூறினான்.
“………………….”
இருவரும் அமைதியாக நிற்க தேவிற்கு கோபம் எல்லை கடந்தது.
“தேவ்….. என் மீராவ பத்தி தப்பா பேசற யாருக்கும் இங்க இடம் கிடையாது. அவங்கள மீராகிட்ட மன்னிப்பு கேட்டதும் போகச்சொல்லுங்க”, நதியாள்.
“முடியாதுல்ல …… இனிமே நீங்க இரண்டு பேரும் என் கண்ணு முன்னால வந்துடாதீங்க. வினய் உன் தங்கச்சிய கூட்டிட்டு போயிடு”, தேவ் அடக்கப்பட்டக் கோவத்தில் கூறினான்.
“மச்சான்….. எவளோ ஒருத்திக்காக என் தங்கச்சிய நீங்க உதாசீனப்படுத்தறது நல்லா இல்ல”, வினய்.
“கிளம்புங்கன்னு சொன்னேன் வினய்”, தேவ் முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டு கூறினான்.
“மச்சான்……”, வினய்.
“போடா வெளியே……”, தேவ் கத்தவும் சரிதா தன் பையை எடுத்து வரச் சென்றாள். “இந்தா காசு… இனிமே என் முகத்துல முழிக்காதீங்க இரண்டு பேரும். என் வீட்ல நீங்க யாரும் இனி இருக்க கூடாது. நான் அங்க வரப்ப உங்க மூட்ட மடிச்ச கட்டிட்டு கிளம்பி இருக்கணும். இல்ல…”, தேவ் மிரட்லாக வார்த்தைகளை முன்வைத்தான்.
“நான் மன்னிப்பு கேட்டுக்கறேன் யாள். மீரா என்னை மன்னிச்சிடு. நான் வெளியே தங்கிக்கறேன். என்னால தான் எல்லாருக்கும் இவ்வளவு மனவருத்தம். நான் கிளம்பறேன் தாத்தா… மாமா…. அகர் சரண் அப்பறம் பாக்கலாம்”, என தன் பைகளை எடுக்க அறைக்குச் சென்றான் தேவ்.
“இருப்பா….. அவ பண்ணதுக்கு நீ ஏன் வெளியே போகணும். ஊருக்கு போறப்ப நீ போனா போதும். அதுவரை இங்க தான் இருக்கணும். என்ன நதிகுட்டி சரிதானே?”, சுந்தரம் தாத்தா.
நதியாள் தாத்தாவைப் பார்த்தபடி ,” ஆமா தேவ். நீங்க இங்க இருங்க. ஆனா அவங்க இரண்டு பேரும் இனி எங்க கண்ல படக்கூடாது. எல்லாரும் போய் பிரஸ் ஆகி வாங்க. பெரியப்பா நீங்க கீழ ரூம்ல இருந்துக்கோங்க. அகன் சரண் தேவ் மேல அவங்க தங்கி இருந்த ரூம்ல தங்கிக்கோங்க.. மீரா ஸ்டெல்லா வாங்க திங்க்ஸ் கீழ கொண்டு வரலாம். திலீப் டின்னர் வெளிய வாங்கிக்கலாமா? இன்னிக்கு சமையல் பண்றவங்க லீவ் தானே?”, நதியாள்.
“ஆமா யாள். நானும் ஜெய்யும் வாங்கிட்டு வந்துடறோம். இப்ப நான் டீ போடறேன். பிரஸ் ஆகி வாங்க”,திலீப்.
பரமசிவத்தை அகரன் துணைக்கொண்டு கீழ் அறையில் படுக்கவைத்து விட்டு, சரணையும் அழைத்துக்கொண்டு மேலே சென்றாள்.
“அகரா…. புள்ள கோவமா இருக்கு போல. எல்லாரையும் கூட்டிட்டு வெளியே போயிட்டு சாப்பிட்டு வந்துடுங்க. வரப்ப எங்களுக்கு வாங்கிட்டு வாங்க….. இங்கயே இருந்தா தேவ்வும் சங்கடம் படும் மீராக்கும் சங்கடமா இருக்கும்”, சிதம்பரமும் பரமசிவமும் கூறினர்.
“கூப்டா வருவாங்களா? கொஞ்சம் சந்தேகம் தான் ப்பா…. கூப்பிட்டு பாக்கறேன்…. “, அகரன்.
“நானும் வரேன். உன் அப்பா பரமசிவத்துக்கு துணையா இருக்கட்டும். எல்லாரும் போலாம். வெளியே போயிட்டு வந்தா மனசு சரியாகும் எல்லாருக்கும்”, சுந்தரம் தாத்தா உள்ளே வந்தபடிக் கூறினார்.
“சரி தாத்தா…உங்க பேத்திகிட்ட நீங்க தான் பேசணும். கூட்டிட்டு போக நான் ரெடி”, அகரன் கூறிவிட்டு தனக்கு ஒதுக்கபட்ட அறைக்குச் சென்றான்.
“என்ன மாமா இந்த பொண்ணு இப்படி பேசிரிச்சி? சே….. மரகதம்மா பேத்தியா இப்படி?”, பரமசிவம் வருத்தத்துடன் கூறினார்.
“அவ பேத்தியா இருக்கறதால தான் இப்படி. ஆனா அவ பேச்சுல இவ்வளவு கீழ்தரமான வார்த்தை இருக்காது. இந்த புள்ளைக்கு தாராளமா வருது. அவ அப்பன் இரத்தம் தான் ஓடுது. அந்த பையன் பார்வையும் சரியில்ல , பேச்சும் சரியில்ல”, சுந்தரம் தாத்தா யோசனையுடன் கூறினார்.
“என்னச்சிப்பா? ஏன் இப்படி சொல்றீங்க?”, சிதம்பரம்.
“அவன் நம்ம நதிய பாத்த பார்வையும் தொட வந்த இடமும் தப்பா இருக்கு. சரியா அகரன் அவன தள்ளிவிட்டுட்டு தன் பக்கம் நிறுத்திகிட்டான். இல்லைன்னா இந்நேரம் ஒரு கொலை தான் நடந்து இருக்கும் இங்க….. “, சுந்தரம்.
“இத மரகதம்மாகிட்ட சொல்லலாமா?”, பரமசிவம்.
“சொன்னா எந்த அளவுக்கு நம்ம பேச்ச நம்புவான்னு தெரியாது சிவம். ஆனா நம்ம புள்ளைங்களுக்கு சீக்கிரம் நிச்சயம் பண்ணிடணும். அவங்களுக்கு ஆபத்து இருக்குன்னு சொன்னதுல இருந்து எதாவது தப்பா நடந்துட்டே இருக்கு. பாரு சிவத்துக்கும் அடி பட்டுரிச்சி. ஊருக்கு போனதும் கருப்பசாமிகிட்ட வாக்கு கேக்கணும். ஜோசியர நல்ல நாள் பாக்கச்சொல்லணும் சிதம்பரம்”, சுந்தரம் தாத்தா கவலையுடன் கூறினார்.
“புள்ளைங்க விருப்பம் தெரியாம எப்படிப்பா?”, சிதம்பரம் தயக்கத்துடன் கூறினார்.
“இரண்டு பேரும் உருசுக்குசுறா விரும்பறாங்க டா. ஆனா வெளியே சொல்லிக்கல. நான் வந்ததுல இருந்து கவனிச்சிட்டு தான் இருக்கேன். சரணும் சொன்னான் இரண்டு பேருக்கு காதல்னு”, சுந்தரம்.
“அப்படியா? இப்பவே கூப்டுவச்சு கேட்டுக்கலாம்பா ….. நாளைக்கு வார்த்தை மாறக்கூடாதுல யாரும்”, சிதம்பரம்.
“வேணாம். இப்ப கேட்டா சரிவராது. சிவம் நீ கண்ணணுக்கு போன் போட்டு நிச்சயம் உடனே பண்ணணும்னு சொல்லி நதியாள்கிட்ட பேசச்சொல்லு. அவ சரின்னு சொல்லுவா. நான் அகரன் கிட்ட பேசிக்கறேன். நிச்சயம் முடிஞ்ச கையோட ஜோசியர் சொன்ன பரிகாரமும் பண்ணிடனும்”, சுந்தரம் தாத்தா.
“சரிங்க மாமா. நான் நைட் பேசிடறேன் கண்ணன் கிட்ட. நீங்க ஏற்பாட ஆரம்பிங்க”, பரமசிவம்.
“சரி. நான் கோவில்ல நாளைக்கு அபிஷேகம் பண்ண சொல்றேன் மீனாட்சிகிட்ட அவ பாத்துக்குவா. ஊருக்கு எப்ப போலாம்?”, சுந்தரம்.
“நான் நாளைக்கு போலாம்னு சொன்னேன். யாள் விடமாட்டேன்னு சொல்றா…. மறுபடியும் டாக்டர்கிட்ட காட்டிட்டு தான் போகணும்னு சொல்றா”, பரமசிவம்.
“அதுவும் பரவால்ல தான். நீ அடிபட்டு போனா அங்க எல்லாருக்கும் பதறும். அந்த மிஷின மில்லுல பூட்றதுக்கு முன்ன கருப்பசாமிக்கு ஒரு பலி பூசை போட்டுறு சிவம். இப்பவே இரத்த காவு வாங்கிரிச்சி”, சுந்தரம் தாத்தா.
“சரிங்க மாமா.இப்ப செல்லம்மாகிட்ட சொன்னா பதறுவா. நான் ஊருக்கு போனதும் பண்ணிடறேன்”, பரமசிவம்.
பின் ஒருவாறாக அனைவரையும் பேசி சரிகட்டி சுந்தரம் தாத்தாவும், அகரனும் வெளியே அழைத்துச் சென்றனர்.
மூன்று கார்களில் ஏறி அனைவரும் பயணப்பட்டனர். தேவ் காரில் சஞ்சயும் சரணும், திலீப் காரில் ஸ்டெல்லாவும் மீராவும், அகரனின் காரில் சுந்தரம் தாத்தாவும் நதியாளும் ஏறி இருந்தனர்.
“8 சீட்டரா இருந்தா எல்லாரும் ஒரே கார்ல போலாம்ல…. இப்ப தனி தனியா போறது நல்லாவே இல்ல”, நதியாள்.
“நீ இந்த பிராஜெக்ட் சக்சஸ்புல்லா டிசைன் பண்ணு நானே உனக்கு வாங்கித்தரேன்”, அகரன்.
“எங்க போனாலும் நீ அங்கயே நில்லு. பாருங்க தாத்தா அகன….. கொஞ்ச நேரம் கூட வேலைய பத்தி பேசாம இருக்க மாட்டேங்கறான்”, எனச் சிறுகுழந்தைப் போல சிணுங்கினாள் நதி.
“இரண்டு நாள்ல டிசைன்ஸ் மாடிபை பண்ணி தந்துடனும் நதிமா. நீ குடுத்த பர்ஸ்ட் வேர்ட் இது பிஸ்னஸ்ல…. சோ மஸ்ட் புல்பில் இட்”, அகரன்.
“சரி சரி… நல்ல ரெஸ்டாரெண்ட் ஆ போ அகன். பசிக்குது சீக்கிரம்”, நதியாள்.
“அவ்வளவு பசியா கண்ணு? ஏன் சாயந்திரம் சாப்பிடல?”, சுந்தரம்.
“சாப்டேன் ஆனா இப்ப பசிக்குது தாத்தா….. “, நதியாள்.
“வந்தாச்சி. இறங்கு”, அகரன்.
“ஐஐஐ….. பீச் ரெஸ்டாரெண்ட்…. சூப்பர் அகன்…. தேங்க்யூ”, என அவனின் கன்னத்தை கிள்ளிவிட்டு கீழே இறங்கி கடலை நோக்கி ஓடினாள்.
“ஹேய் யாள் இரு நாங்களும் வரோம்….”, என ஸ்டெல்லா மீராவை இழுத்துக்கொண்டு ஓடினாள்.
காரில் இருந்து இறங்கியவள் நேராக அலைகளிடத்தில் தன் காலை நனைத்தபடி நின்றாள். மனதின் கோபத்தை அலைகள் கொண்டு ஆற்ற நினைக்கிறாளோ?
“ஹேய்… சாப்பிடலியா?”, ஸ்டெல்லா.
“நான் ஏற்கனவே சாப்டேன் ஸ்டெல். நீங்க சாப்பிட்டு வாங்க நான் இங்கயே இருக்கேன்”, நதியாள் கடலைப் பார்த்தபடிக் கூறினாள்.
“சரி….”, என ஸ்டெல்லா திரும்ப, ” மீரா…. மனசுல புழுங்காத…. வெளியே தள்ளிடு….”, நதியாள் கடலைப் பார்த்தபடிக் கூறினாள்.
மீரா அவளைக் கட்டிக்கொண்டுக் கண்ணீர் வடித்தாள். அத்தனைப் பிரச்சினை நடந்தும் வீட்டில் இருந்தவரை மீரா கண் கலங்கவே இல்லை. அனைத்து உணர்ச்சிகளையும் தனக்குள் அடக்கியபடி நடமாடிக்கொண்டு இருந்தாள். இதற்கு மேலும் அவள் மனழுத்தம் கூடக் கூடாது என்பதால் நதியாள் பேச்சை ஆரம்பித்தாள் , கண்ணீராக மீராவின் மனபாரம் குறையத் தொடங்கியது.
கண்ணீர் ….. பெண்களின் பலவீனம் அல்ல… அது பலம்…. மனதின் பாரங்களை கண்வழி நீராக வெளியேற்றிவிட்டு மனதைச் சுத்தமாக வைத்துக்கொள்ள சிறந்த வழி. எத்தனை பாரம் இருந்தாலும் கண்ணீர் குறைக்கும். அதுவும் தனக்காக சிந்திக்கும் உள்ளத்திடம் முழுதாக ஒரே மூச்சில் இறக்கி வைத்துவிடும்….
இப்போது மீராவின் பாரம் நதியாளின் தோள்களில் நீராகக் கரைந்துக் கொண்டு இருந்தது. இதைக் கண்ட ஸ்டெல்லா தனக்கும் இப்படியொரு இணைபிரியா தோழி இல்லை என ஒரு நிமிடம் ஏங்கினாலும், இவர்கள் இருவரும் எப்போதும் தன்னை தனித்து விடமாட்டார்கள் என்பதை அறிந்ததால் அவர்களைக் கட்டிக்கொண்டு சமாதானம் கூறினாள்.
இதை தூரமாக அகரனும், தேவ்வும், சரணும் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
“என்னால தான் இதுல்லாம்”, தேவ் வருத்தமாக கூறினான்.
“உன்னால தான் இவங்க நட்ப இன்னிக்கு நாம பார்க்க முடிஞ்சது தேவ். மூனு பேரும் எப்பவும் இப்படியே இருக்கணும்”, சரண்.
“அதுக்கு மூனு பேரையும் பிரண்ட்ஸ் ஆ இருக்கிற மூனு பேர் தான் கட்டிக்கணும்”, அகரன்.
“அய்யோ அந்த ஸ்டெல்லாவ என்கிட்ட கோர்த்துவிடாத டா…. அந்த சரிதாவ என்னா வாங்கு வாங்கினானு தேவ் சொன்னதே கேட்டே எனக்கு ஒதறல் எடுத்துரிச்சி. உனக்கு புண்ணியமா போகும் அமைதியான பொண்ணா எனக்கு காட்டுங்க… என் தங்கச்சி கிட்ட அடி வாங்கவே எனக்கு நேரம் சரியா இருக்கு. இதுல பொண்டாட்டியும் அப்படி வாய்ச்சா நான் தாங்கமாட்டேன் டா”, என சரண் ஏற்ற இறக்கங்களுடன் கூற இருவரும் வாய்விட்டுச் சிரித்தனர்.
“பட் அகர் சொன்னது நல்ல ஐடியா சரண்…”, தேவ்.
“டேய் ஒரு பஞ்சாயத்து இப்ப தான் முடிஞ்சது … நீ அடுத்தத உடனே ஆரம்பிக்காத வா சாப்பிடலாம்….”, என சரண் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
பின் மீராவை ஸ்டெல்லாவுடன் அனுப்பிவிட்டு நதியாள் கடலைப் பார்த்தபடி மணலில் அமர்ந்துவிட்டாள்.
அகரன் அவளுக்காக ஐஸ்கிரீம் வாங்கி வந்து அவளருகில் அமர்ந்துக் கொடுத்தான். அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு மீண்டும் கடலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள் நதி.
“அங்க என்ன தெரியுது நதிமா?”, அகரன்.
“தெரியல அகன். ஆனா இந்த பூமில நாம புரிஞ்சிக்க முடியாத விஷயம் கடல் தான். அது காந்தம் மாதிரி. ஒரு தடவை பிடிச்சிட்டா நம்மள ஈர்த்துட்டே இருக்கும்”, நதியாள் ஏதோ உலகத்தில் சஞ்சரித்தபடிப் பேசினாள்.
“ஆமா… எல்லா நதியும் இதுல தானே வந்து கலக்குது”, அகரன்.
“ஆமா …”, நதியாள்.
“அப்ப…….”, அகரன்.
நதியாளின் போன் அடிக்க அவளின் தந்தை அழைத்திருந்தார். அவரிடமும் தாயிடமும் பேசியவள் அகரனை ஒருமுறை பார்த்துவிட்டு போனை வைத்தாள்.
“அப்ப? என்ன அகன்?”, நதியாள்.
“அப்ப நதியாள்?”, அகரன்.
“இந்த நதியாள் கிட்ட தான் எல்லாம் சேரும். அகன் போல”, எனக் கூறிவிட்டு ஓடினாள் தாத்தாவை நோக்கி.
அகரன் புரியாத பாவனையுடன் தன் காரை நோக்கி நடந்தான்.
வீடு திரும்பும் போது நதியாள் தன் தோழிகளுடன் சேர்ந்து கொள்ள, அகரனும் தாத்தாவும் மட்டும் வந்தனர்.
பின் இரண்டு நாட்களில் பரமசிவம் சிதம்பரம் சுந்தரம் தாத்தா அனைவரும் ஊருக்கு கிளம்பினர்.
மதுரன் கேட்டபடி ஸ்டெல்லா, திலீப், நதியாள் மூவரும் டிசைன்களில் மாடிபை செய்து, அவனுக்கு திருப்தியுறும் வகையில் முடித்துக் கொடுத்தனர்.
ஒரு வாரம் கழித்து நதியாள் ஊருக்குச் செல்ல வேண்டும் எனக் கேட்க, அகரனுக்கு முன் சரண் அவளுக்கு அனுமதிக் கொடுத்து ஊருக்குப் பத்திரமாக அனுப்பி வைத்தான்.
அகரன் அவனிடம் கேட்காமல் நதியாளை அனுப்பியதற்கு சரணை வறுத்துக்கொண்டு இருந்தான்.
அடுத்த ஒரு வாரத்தில் சரணுக்கு அவசர அழைப்பு வர அகரனை அழைத்துக் கொண்டு ஊருக்குக் கிளம்பினான். ஸ்வப்னாவிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அன்று நடு இரவில் வீடு சென்று சேர்ந்தனர்.