33 – அகரநதி
நடு இரவில் ஊருக்கு வந்த அகரனும் சரணும் நேராக அகரனின் இல்லத்திற்கு வந்தனர்.
திலகவதி கதவைத் திறந்துவிட்டு அவர்களுக்கு சாப்பிட தோசையும் பாலும் கொடுத்தார். பின் இருவரையும் சீக்கிரம் காலையில் எழுந்துக் கொள்ளச்சொல்லிவிட்டு சென்று உறங்கி விட்டார்.
“டேய்…. என்னடா நடக்குது இங்க? எதுக்கு இப்ப என்னை அவசரமா ஊருக்கு கூட்டிட்டு வந்த? அம்மாவும் ஒன்னும் சொல்லாம போறாங்க”, அகரன் சரணைக் கேட்டான்.
“பெருசா ஒன்னுமில்ல மச்சான். எல்லாம் காலைல பேசிக்கலாம். வா தூங்க போகலாம். இவ்வளவு தூரம் வண்டி ஓட்டிட்டு வந்தது எனக்கு டயர்டா இருக்கு”, என சரண் கூறி அகரனின் அறைக்குச் சென்று உடை மாற்றிப் படுத்துவிட்டான்.
“ஏதோ சரியில்லை. சரி காலைல தெரியத்தானே போகுது அப்ப பேசிக்கலாம்”, என அகரனும் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு உறங்கிவிட்டான்.
காலையில் இருந்து வீடே பரப்பரப்பாக இருந்தது. ஆனால் நம் அகரன் மட்டும் போர்வையை இழுத்துப் போர்த்தியபடி உறங்கிக்கொண்டு இருந்தான்.
வீட்டில் கீழே அலங்கார தோரணங்கள் எல்லாம் கட்டிக்கொண்டு இருந்தனர். முதல் நாள் பாதியில் விட்ட தோரணங்களை முழுதாக போட்டுவிட்டு கோவிலுக்கு கிளம்ப அனைத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு இருந்தார் மீனாட்சி பாட்டி.
சுந்தரம் தாத்தா ஒருபக்கம் அனைவரையும் விரட்டி விரட்டி வேலை வாங்கிக்கொண்டு இருந்தார்.
“ஏலேய் முத்து ….. தோப்புல இருந்து தென்னம்பூவ கொண்டு வாடா. அம்மனுக்கு குடுக்கணும். அப்பறம் நல்ல செவ்வெளனியா பாத்து வெட்டி கோவிலுக்கு குடுத்து விடு அபிஷேகத்துக்கு. ஏன்டா முருகேசா….. அங்க என்னடா இன்னும் மண்ண கொத்திகிட்டு இருக்க? வெரசா வந்து அங்க பொண்ணு வீட்ல குடுக்கறத எல்லாம் கோவில்ல கொண்டு வச்சிட்டு காவலுக்கு அங்கயே இருக்கணும் நாங்க வரவரைக்கும். எவனாவது கூட்டாளி கூப்பிடறான்னு போயிடாத டா. உன் பொண்டாட்டி புள்ளைங்கள காலை சாப்பாட்டுக்கு இங்க வரசொன்னியா ?”, சுந்தரம் தாத்தா வரிசையாக ஒவ்வொருவரிடமும் பேசிக்கொண்டே வேலைகளைக் கொடுத்தார்.
“ஏனுங்க …… இன்னும் இந்த சிதம்பரத்த காணோம். வயலுக்கு போயிட்டு வரேன்னு போனான். திலகா ஒத்த ஆளா எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டு இருக்கு. அவன் வந்தா தான் புடவை நகை எல்லாம் எடுத்து குடுக்க முடியும். நீங்க நம்ம பரம்பரை நகைய எடுத்து குடுங்க”, என மீனாட்சி பாட்டி அவரை இழுத்துச் சென்றார்.
“இந்த சரண் பையன் எங்க?”, சுந்தரம் தாத்தா.
“அவன் காலைலயே வீட்டுக்கு போயிட்டான். கோவிலுக்கு வந்துடறானாம்”, மீனாட்சி.
“அப்பறம் மாப்பிள்ளைய யார் தயார் படுத்துவா?”, சுந்தரம் தாத்தா.
“அதான் நான் இருக்கேனே தாத்தா…..”, எனக் கூறியபடி தேவ் வந்து நின்றான்.
“வாய்யா…. வா…. எங்க வீட்டுல எல்லாரும் வந்துட்டாங்களா?”, சுந்தரம் தாத்தா.
“அவங்க கோவிலுக்கு வந்துடுவாங்க தாத்தா. நான் அகரனை போய் கிளப்பறேன். இன்னும் அவனுக்கு சொல்லலியா?”, தேவ்.
“இல்ல ராசா. அவனுக்கு இன்ப அதிர்ச்சி குடுக்கணும்னு நதிகுட்டி சொல்லிட்டா, அதான் யாரும் இன்னும் சொல்லல. நீயும் கோவில்ல விஷேச பூஜைன்னு சொல்லி கிளப்பிட்டு வா”, சுந்தரம்.
“சரி தாத்தா. நீங்க சொல்ற படியே சொல்றேன்”, எனப் படியேறப் போகிறவனைத் தடுத்த திலகவதி, ” தம்பி …. இந்தாங்க இதுல பட்டு வேஷ்டி சட்டை இருக்கு இத போட்டுக்க சொல்லுங்க”, என ஒரு கவரைக் கொடுத்தார்.
“சரிங்க அத்தை. எனக்கு ஒரு காபி மட்டும் குடுத்துவிடுங்க”, தேவ் கவரை வாங்கியபடிக் கூறினான்.
“டிபனே ரெடி தம்பி அவன ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க கீழ”, திலகவதி.
“யூ ஆர் சோ ஸ்வீட் அத்தை. உங்களுக்கு பொண்ணு இல்லாம போச்சேன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு”, தேவ் பெருமூச்சு விட்டபடிக் கூறினான்.
“ஏன் தம்பி?”, திலகவதி.
“உங்கள மாதிரி அழகா ஸ்வீட்டா ஒரு பொண்ணு இருந்திருந்தா, நானே அவள கல்யாணம் பண்ணி இருப்பேன். எவ்வளவு அழகா இருக்கீங்க நீங்க”, என தேவ் அவரின் கன்னத்தை கிள்ளியபடிக் கூறினான்.
“போங்க தம்பி கிண்டல் பண்ணிகிட்டு. வெரசா அவன கூட்டிட்டு வாங்க நேரமாச்சி”, எனத் திலகவதி வெட்கப்பட்டுக்கொண்டே உள்ளே சென்றார்.
“யாருப்பா அது என் பொண்டாட்டிய கொஞ்சறது?”, என்று கேட்டபடி சிதம்பரம் உள்ளே வந்தார்.
“நான் தான் மாமா”, தேவ் சிரித்தபடிக் கூறினான்.
“எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பண்ணுவ?”, சிதம்பரம் மீசையை முறுக்கிக்கொண்டே முகத்தைக் கோபமாக வைத்தபடி அவன் அருகில் வந்தார்.
“என் அத்தை நான் கொஞ்சறேன். அப்படியே ஒரு பொண்ணையும் நீங்க பெத்து இருந்தா அவளையும் கொஞ்சி இருப்பேன். எங்க? அதுக்கு தான் வழி இல்லாம போச்சே”, என தேவ் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டே கண்ணைத் துடைத்தான்.
“எங்க நான் சொன்னேன்… என் பொண்டாட்டி தான் கேக்கல. பாரு மாப்பிள்ளை தயாரா இருக்காப்புல பொண்ணு இல்ல கட்டி குடுக்க… “, என அவரும் அலுத்துக்கொண்டே கூறினார்.
“போதும் போதும் வெசனம். வந்து சீக்கிரம் ரெடி ஆகுங்க. நேரமாச்சி. பொண்ணுக்கு எடுத்த புடவை நகையெல்லாம் எடுத்து குடுங்க”, என திலகவதி வந்து அவரை அழைத்துச் சென்றார்.
“கடைசியா நமக்கு பொண்ணு இல்லை… ஏன் தாத்தா உங்களுக்கு இவர் ஒரே பையன் தானா? வேற யாருக்காவது உங்க குடும்பத்துல பொண்ணு இருக்கா?”, தேவ்.
“முதல்ல பொண்ணு குடுக்கறேன்னு சொல்ற இடத்துக்கு போய் ஆகறத பாக்கலாம். உனக்கு நல்ல பொண்ணா நான் பாக்கறேன். நீ அகரன எழுப்பு”, என மீனாட்சி பாட்டி அவனை அனுப்பினார்.
“மொத்தத்துல நமக்கு பொண்ணு இல்லன்னு சொல்லிட்டு போறாங்க”, தேவ் புலம்பியபடி மேலே வந்தவன் அகரனை எழுப்பினான்.
“டேய் அகர்… எந்திரிடா. சீக்கிரம் ரெடி ஆகு கோவிலுக்கு போகணும்”, என அவனின் போர்வையை இழுத்தான் தேவ்.
“இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாம் பேபி. வா வந்து படு”, என தேவ்வின் கரம்பற்றி அருகில் அவனைக் கட்டிப்பிடித்து படுத்துக்கொண்டான் அகரன்.
“டேய் டேய்…… விடுடா…. நான் நல்ல பையன் டா. அய்யோ…. இப்படி கட்டிபிடிக்கறானே…. எழும்பு உடஞ்சிடும் போலவே….. விடுடா எரும மாடே…… அகரா…. டேய் அகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”, என தேவ் கத்த கத்த போர்வையில் அவனையும் போர்த்தியபடித் தூங்கினான் அகரன்.
“படு பேபி. நைட்லாம் தூங்கவே இல்ல. கனவுல வந்து நீ டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்க… இப்பவாது தூங்கவிடு கண்மணி”, அகரன் தூக்கத்தில் உலறினான்.
“அச்சோ……. ஆண்டவா…. இவன ……… டேய் எந்திரி டா. நேரமாச்சி. மிச்ச ரொமான்ஸ் அப்பறம் நீ கண்டினியூ பண்ணிக்க. முதல்ல என்னை விடுடா”, என தேவ் அவனை அடிக்க ஆரம்பித்தான்.
“அப்படியே ரைட் சைட் முதுகுல மஸாஜ் பண்ணு பேபி”, என அகரன் கவிழ்ந்துப் படுத்தான்.
“நீ என்ன ஸ்பா மஸாஜா வந்திருக்க. இவ்வளவு அடிக்கறேன். உறைக்குதா பாரு…. எப்படியோ விட்டானே நம்மல. ஏறி மிதிச்சா தான் இவன எழுப்ப முடியும் போல”, என தேவ் அகரனை உதைத்து கட்டிலில் இருந்து கீழே தள்ளிவிட்டான்.
“அம்மாஆஆஆஆஆ…..”, எனக் கத்தியபடி அகரன் கண்விழித்தான்.
“என்ன ராசா இந்த மஸாஜ் ஓகேவா?”, என தேவ் கிண்டலாகக் கேட்டான்.
“ஏன்டா தள்ளிவிட்ட? கம்முனு தானே படுத்துட்டு இருந்தேன்..எரும எரும”, என தேவ்வை மொத்தினான்.
“ஏது நீ கம்முனு படுத்துட்டு இருந்த? ஏன்டா உன்ன எழுப்பலாம்னு வந்தா என்னையும் இழுத்து பக்கத்துல படுக்க வச்சிப்பியா? நான் என்ன அவ்வளவு அழகாவா இருக்கேன்? இருந்தாலும் நான் நல்ல பையன் உன் எண்ணத்துக்கு சம்மதிக்கமாட்டேன்”, தேவ்.
“என்னடா உளர்ற?”, அகரன் எழுந்து கட்டிலில் அமர்ந்தபடிக் கேட்டான்.
“இவ்வளவு நேரம் நீ பண்ண அலப்பறைய சொன்னா…… என்னை நீ உளர்றன்னு சொல்வியா…. உன்கூட சரண் எப்படிடா இத்தனை வருஷம் குப்பை கொட்டினான்?”, தேவ்.
“நீயும் வந்து கொட்டு. அத அல்லறதுக்கு யாரையாவது கூப்டுக்கலாம். என்ன மாப்பிள்ளை கணக்கா ரெடி ஆகி வந்து இருக்க…. என்ன நடக்குது இங்க?”, அகரன்.
“கோவில்ல ஸ்பெஷல் பூஜையாம். அதான் நானும் பேமிலியோட வந்திருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு இந்த கவர்ல இருக்கறத போட்டுட்டு வந்து சேரு. நான் டிபன் சாப்பிட போறேன். உனக்கு முப்பது நிமிஷம் தான் டைம். முடிஞ்சா நீயும் என்ன மாதிரி மாப்பிள்ளை கணக்கா ரெடி ஆகி வா. கோவில்ல எதாவது பொண்ண புடிப்போம். எத்தனை காலத்துக்கு நாமலும் மொரட்டு சிங்கிள்னு பொய்ய சொல்லிட்டு வெளியே சிரிச்சிட்டு உள்ளாற அழுகறது….”, தேவ்.
“க்கும்ம்….. அதான் இருக்காளே உனக்கு ஒரு அத்தை மக… அவள கட்டிக்க வேண்டியது தானே?”, அகரன்.
“நீ வேணா அவள கட்டிக்க……நான் நதியாள கட்டிக்கலாம்னு இருக்கேன். நீயும் லவ்வ சொல்ற மாதிரி தெரியல அவளும் சொல்ற மாதிரி தெரியல. சோ இன்னிக்கு ப்ரோபோஸ் பண்ணலாம்னு இருக்கேன். அதப்பத்தி நீ என்ன நினைக்கற?”, தேவ்.
“இங்க வாயேன்…… இங்க வந்து அத மறுபடியும் சொல்லு தலைய திருப்பிடறேன்”, அகரன் தேவ் அருகில் வர , தேவ் ரூமைவிட்டு வெளியே ஓடினான்.
“இன்னிக்கு நீ சொல்லலன்னா நான் சொல்லிடுவேன். ஜாக்கிரதை… அப்பறம் அந்த பொண்ணு எனக்கு தான் நீ நடுவுல வரக்கூடாது”, எனக் கத்தியபடிக் கீழே வந்தான்.
அகரன் அவனை கொன்றுவிடுவேன் என கைக்காட்டி விட்டுக் குளிக்கச் சென்றான்.
மாப்பிள்ளை குளிக்க போயாச்சு நம்ம பொண்ணு வீட்டுக்கு ஒரு நட போயிட்டு வந்துடலாம் வாங்க சகோஸ்….
அடடா….. வீடு பாக்கறதுக்கு அவ்வளவு அம்சமா அலங்காரம் தோரணம்னு கட்டி சும்மா கலகலன்னு இருக்கு……
வாசல்ல நின்னு கண்ணனும் பரமசிவமும் யார்கிட்டயோ கத்திகிட்டு இருக்காங்க.அது யாருன்னு பாத்தா நம்ம சரண் தான்.
“டேய்…ஒழுங்கா மாவிலை தோரணம் போடு டா. எங்க எங்கயோ போயி படிச்ச ஒரு மாவிலை தோரணம் வாசப்படில கட்டத்தெரியல உனக்கு…. என்னத்தான் படிச்சியோ போ…. பாரு இந்த பக்கம் சொருகுன இலையெல்லாம் விழுகுது… சரியா கட்டு டா”, என பரமசிவம் சரணை வசைப்பாடிக்கொண்டு இருந்தார்.
“அண்ணா அவன் பண்ணிப்பான் நீங்க கோவிலுக்கு கிளம்புங்க. அங்க ஆக வேண்டிய ஏற்பாட பாருங்க முதல்ல….. மாமா வீட்ல இருந்து ஆள் அனுப்பிட்டாங்க”, கண்ணன் பரமசிவத்தை அங்கிருந்துக் கிளப்பினார்.
“என்ன சார்…. மாவிலை தோரணம் கூட கட்டத்தெரியலன்னு உங்கப்பா திட்டிட்டு போறாரு”, எனக் கேட்டபடி ஸ்டெல்லா வந்தாள்.
“எந்த காலேஜ்ல உனக்கு மாவிலை தோரணம் கட்ட சொல்லித்தராங்க? போம்மா. போய் கோட்டிங் போட்ற வேலைய பாரு”, சரண் அவர்களை வெரட்டிவிட்டான். பின், “யப்பா… சித்தப்பா…. நல்ல வேலை பண்ணிங்க. அவர் கத்தறதுலயே இலைய ஒழுங்கா சொருக முடியல…. “, என அவரிடம் கூறிவிட்டு இலைகளை அழகாக தோரணமாகக் கட்டினான் சரண்.
“ஹாஹா…. சரி நீ உன் சின்னம்மாவ போய் பாரு. யாள்குட்டி ரெடி ஆகிட்டாளான்னு கேட்டு சீக்கிரம் ரெடி ஆகச்சொல்லு”, கண்ணன்.
“அவ ரூம்ல அவளோட பிரண்ட்ஸ் எல்லாரும் அவளுக்கு அலங்காரம் பண்றேன்னு உள்ள போனாங்க. இன்னும் கதவை தொறக்கல…. சின்னம்மா புடவையும் நகையும் எடுத்து குடுக்க போய் இருக்காங்க சித்தப்பா…. கோவிலுக்கு நம்ம சார்பா பூஜைக்கு வேண்டிய ஜாமான்லாம் எடுத்து வச்சி இருக்காங்க. வந்து நீங்க பாத்துட்டா அப்பா போறப்ப ஒரு ஆள எடுத்துட்டு போகச்சொல்லிறலாம்”, சரண்.
“சரி வாப்பா. பாத்துடலாம். நானும் கோவிலுக்கு கிளம்பறேன். நீ இவங்கள கூட்டிட்டு நல்ல நேரத்துல கோவில் வந்துடு சரண்”, கண்ணன்.
“நீங்க போறப்ப மத்த எல்லா சிண்டு சில்வண்டு எல்லாத்தையும் கூட்டிட்டு போயிடுங்க நான் யாள்குட்டிய கூட்டிட்டு வந்துடறேன்”, சரண்..
“அவள மட்டும் தனியாலாம் கூட்டிட்டு வரக்கூடாது சரணு. நான் யாள்குட்டி கூட இருக்கேன். ராதா …….புள்ளைக்கு போட நகை குடுத்துட்டியா? அவங்க சிநேகிதிங்க கிட்ட குடு அலங்காரம் பண்ணட்டும்”, செல்லம்மா கூறியபடி அருகில் வந்தார்.
“குடுத்துட்டேன் கா. நான் போனப்ப புடவை கட்டிட்டு இருந்தாங்களாம் உள்ளார விடல என்னைய. நீங்க இருந்து கூட்டிட்டு வாங்க. அழைப்புக்கு நாங்க முன்ன போறோம். நிச்சயத்துக்கு தேவையான எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டேன். அதையும் கையோட எடுத்துக்கவா நீங்க கொண்டு வரீங்களாக்கா?”, ராதா.
“நீயே கொண்டு போ ராதா. அப்பறம் மாப்பிள்ளைக்கு துணி நகையெல்லாம் எடுத்து வச்சிட்டியா?”, செல்லம்மா.
“அடடா… அத தனியா எடுத்து வச்சேன். இருங்க ஒரே பையில போட்டுட்டு வந்துடறேன். ஏங்க நாம கிளம்பலாம் தானே? பைய எடுத்துட்டு வரவா?”,ராதா.
“ம்ம்… நான் கோவிலுக்கு அனுப்பற ஜாமான பாத்துட்டு வரேன். மறக்காம எல்லாத்தையும் எடுத்து வை போலாம்”, எனக் கூறிவிட்டு சரணுடன் கோவில் பூஜை சாமான்களைப் பார்த்துவிட்டு திருப்தியாக தலையசைக்க, சரண் ஆட்களை அழைத்து அதை எடுத்து கோவிலுக்குக் கொடுத்தனுப்பினான்.
பரமசிவம் முன்னே செல்ல, கண்ணனும் ராதாவும் அவருக்குப் பின் சென்றனர்.
கோவிலில் இவர்கள் செல்வதற்கு முன் சிதம்பரமும், திலகவதியும் வாசலில் நின்று இருந்தனர்.
“வாங்க மச்சான்…. வா ராதா…. “, எனச் சிதம்பரம் அவர்களை வரவேற்றார்.
“அதுக்குள்ள வந்துட்டீங்க…. பெரிய மாமா அத்தை வந்துட்டாங்களா?”, கண்ணன்.
“இல்ல அகரன கூட்டிட்டு வரதா சொல்லிட்டாங்க. அதான் நாங்க முன்ன வந்தோம்”, சிதம்பரம்.
“சரி சரி. இருங்க இந்த பைய வச்சிட்டு வந்துடறோம்”, எனக் கூறி இருவரும் உள்ளே சென்று ஒரு அறையில் பையை வைத்து பூட்டிவிட்டு வாசலில் வரவேற்பிற்கு வந்து நின்றனர் கண்ணனும் ராதாவும்.
“புள்ள ரெடி ஆகிட்டாளா அண்ணி?”, திலகவதி.
“இல்லண்ணி …. ரெடி ஆகிட்டு இருக்கா. நேரமாச்சின்னு செல்லம்மா அக்காகிட்ட கூட்டிட்டு வர சொல்லிட்டு வந்துட்டோம்”, ராதா.
“நாங்களும் கிளம்பறப்ப தான் அகரன எழுப்பிவிட்டு தேவ் தம்பிகிட்ட துணிய குடுத்துவிட்டுட்டு வந்துட்டோம். நடு இராத்திரி ஆகிரிச்சி அவன் வாராப்பவே…”, திலகவதி.
“சரண் சொன்னான் அண்ணி. பாவம் இரண்டு நாள் முன்ன வரசொல்லாம்னா இவ விடல. கேட்டா இன்ப அதிர்ச்சி அது இதுன்னு நீங்களும் கூட்டு சேந்துட்டீங்க. இப்ப தம்பிக்கு தான் அலச்சல்….”, என ராதா சந்தோஷமாக சலித்துக்கொண்டார்.
“ஹாஹா…. புள்ள ஆசைபடறா அண்ணி. இதுல என்ன தப்பு? இதுல்லாம் சின்ன சின்ன சந்தோஷம்…… பின்னால நினைச்சி பாக்க நல்லா இருக்கும்ல”,என திலகவதி கூறினார்.
இப்படியாக பெண்கள் இருவரும் பேசிக்கெண்டே வந்தவர்களை வரவேற்றனர்.
“அகர்…. ரெடியா? வா சாப்பிடு நேரமாச்சி”, என தேவ் அகரனின் அறைக் கதவை தட்டிக்கொண்டு இருந்தான்.
“வரேன் டா….. ஒரு மனுசன நிம்மதியா குளிச்சி ரெடி ஆக விடறீங்களா? இப்ப என்ன எனக்கு கல்யாணமா நடக்க போகுது இப்படி அவசரம் படுத்தறீங்க?”, அகரன் கோபமாக பேசிக்கொண்டே கதவைத் திறந்தான்.
கதவருகில் நின்றனவனைக் கண்டு தேவ் மனதில் மெச்சிக் கொண்டான்.
ஆறடி உயரம், அகன்ற தோள்கள், அலைபாயும் கேசம், அளவான அடர்த்தியான மீசை, நேர் நாசி, கவர்ந்திழுக்கும் கண்கள், வசீகரமான சிரிப்பு என ஆண்மையின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக தன் எதிரில் நின்றவனைப் பார்த்துவிட்டு இவனும் கள்ளத்தனமானச் சிரிப்பை உதிர்த்தான்.
“நிஜமாவே கல்யாண மாப்பிள்ளை மாதிரி தான் இருக்க அகர். இரு பாட்டிகிட்ட திருஷ்டி சுத்திபோடச்சொல்றேன்”, என அவனை படிகளில் இழுத்துக்கொண்டு கீழே வந்தான் தேவ்.
முன்வாசலில் நின்றிருந்தவர்களை, “பாட்டி …..தாத்தா….. இங்க பாருங்க”, என அழைத்தான் தேவ்.
“அடியாத்தி….. என் கண்ணே பட்டுறும் போலவே.. எம்புட்டு ஜோரா இருக்க…. இரு மொளகா எடுத்துட்டு வரேன்”, என மீனாட்சி பாட்டி உள்ளே சென்றார்.
“ம்ம்…. என் பேரனா….. கொக்கா….. சும்மா ஜம்முன்னு மாப்பிள்ளை மாதிரி இருக்க ராசா…. “, என சுந்தரம் தாத்தா அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார்.
“நகருங்க… புள்ளை சட்டைய கசக்காதீங்க…”, என தாத்தாவை தள்ளி நிற்க சொல்லிவிட்டு திருஷ்டி கழித்தார் மீனாட்சி பாட்டி. பின் “பவளம்… இந்தா இத விறகடுப்புல போடு”, என அங்கிருத்த வேலையாளிடம் கொடுத்தார்.
“சாப்பிடலாமா? எனக்கு பசிக்குது…..”, அகரன்.
“வா ராசா… எல்லாம் ரெடி. சாப்புட்டு கோவில் போலாம்”, என அவனை அமரவைத்து உணவு பரிமாறினார் மீனாட்சி பாட்டி.
அவன் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போதே மாந்தோப்பு தாத்தா உள்ளே வந்தார்.
“எலே சுந்தரம் மச்சான்… இன்னும் கிளம்பலியா? நல்ல நேரத்துல கோவில் போகணும்ல?”, கத்திக்கொண்டே வந்தார் மாந்தோப்பு தாத்தா.
“சாப்பிட்டதும் கிளம்பறது தான் மச்சான். வாங்க சாப்பிடலாம்…..”, சுந்தரம்.
“நான் சாப்புட்டு தான் வந்தேன். தேவ் தம்பி உங்க வீட்ல எல்லாரும் கோவிலுக்கு வந்துடுவாங்களா?”, மாந்தோப்பு தாத்தா.
“ஆமா தாத்தா. பாட்டி எங்க?”, தேவ்.
“கோவிலுக்கு வந்துடுவா. அகரா…. நெத்தி வெறுமனே இருக்கு. விபூதியோ ,சந்தனமோ வைக்கலாம் ல…… “, மாந்தோப்பு தாத்தா.
“புள்ளைக்கு ஆசிர்வாதம் பண்ணி நீங்களே வச்சி விடுங்கண்ணே”, என மீனாட்சி விபூதிக் கொண்டு வந்துக் கொடுத்தார்.
பின் அனைவரும் தயாராகிக் கோவிலுக்கு கிளம்பினர்.
அகரன் கோவிலை பார்த்தபடியே வந்தான். வழக்கத்திற்கு மாறாக அலங்காரம் அதிகமாக இருப்பதாகத் தோன்றியது. அனைவரும் பட்டு உடுத்தி வந்திருந்தனர். அகரன் அனைத்தையும் சந்தேகமாக பார்த்தபடியே வந்தான்.
ஒருபக்கம் அனைவரும் சந்தோஷமாக இருக்க, இன்னோர் பக்கம் சரிதாவும் வினயும் வஞ்சத்துடன் எதற்கோ காத்திருந்தனர்.
அகரன் உள்ளே சென்று ஸ்வாமியை தரிசிக்க சென்றிருந்தான்.
“சரண் எங்கடா காணோம்?”, அகரன்.
“வருவான் டா. வா நாம சாமி கும்பிடலாம்”, என தேவ் அவனை இழுத்துச் சென்றான்.
அவன் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் நதியாள் சர்வ அலங்காரத்தில் கோவிலில் வந்திறங்கினாள். தங்கம் வைரம் நவரத்திரம் கொண்டு அவளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருக்க, முகத்தில் மந்தகாச சிரிப்பொன்றை உதிர்த்தபடி தலை நிமிர்ந்து நின்று இயற்கையான அழகிற்கு முன் இத்தனை ஆபரணங்கள் என்னை அழகியாக்காது என்பதைப் போன்று, சிருங்கார நடையுடன் அங்கிருந்த அனைவரையும் புன்முறுவல் சிந்தி வரவேற்று தோழியர்களுடன் உள்ளே வந்தாள். வாசலுக்கு வந்த பெரியவர்கள் அவளைக் கண்டு அகமும் புறமும் பூரித்து அவளை உள்ளே அழைத்துச் சென்று ஒரு அறையில் உட்கார வைத்தனர்.
பின் அகரனை சபைக்கு வரக் கூற தேவ்வும் சரணும் இருபக்கத்தில் அவனை கைப்பிடித்து அழைத்து வந்தனர். நடக்கும் ஏற்பாட்டில் ஓரளவு நடக்கவிருப்பதை கணித்தவன் ஒருபக்கம் சந்தோஷமும் மற்றொரு பக்கம் குழப்பமுமாக வந்தான்.
பின் நதியாளும் சபைக்கு வர அவளைக் கண்ட அகரன் சுற்றம் மொத்தமும் மறந்து அவளையே கண் இமைக்காது பார்த்திருந்தான்.
இளம்பச்சை நிற பட்டு உடுத்தி, கொடி போல ஜரிகை சீலையெங்கும் ஓட, சிறிய பூக்கள் ஆங்காங்கே பதித்திருக்க அத்தனை பாங்காய் அவளுடலில் பொருந்தி இருந்தது. அடர்த்தியான கூந்தலில் முன்உச்சி வகிடெடுத்து, நீண்டு தொங்கிய பின்னல், நெற்றிச் சுட்டி, வைர ஜிமிக்கியுடன் மாட்டல் பின்னால் பின்னலில் சேர்ந்திருக்க, ஜடைபில்லையில் முடி நுழைத்து முன்வகிட்டில் இருந்து சிறிய பகுதி முடியை பிரித்து, சிறு பின்னலிட்டு பின்னால் சேர்த்திருந்தனர்.
அது அவளின் முக அமைப்பிற்கு அவளுக்கு இயற்கை க்ரீடம் அமைத்தாற் போல இருக்க, முகத்தில் புருவ மத்தியில் இட்டிருக்கும் குங்குமப்பொட்டும், மயக்கும் கண்களில் அஞ்சனம் தீட்டியிருக்க, சிவந்த இதழ்களில் புன்னகை பூசி, பெண்ணவள் பெண்மையின் மொத்தமும் கம்பீரத்தின் சாயலில் நளினமும் சேர சபைக்கு வணக்கம் கூறி அவளுக்கென போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்தாள்.
வழக்கமான சம்பிரதாயங்கள் முடித்து இருவருக்கும் சம்பந்தி வீட்டார் உடை கொடுத்து மாற்றி வரக் கூறினர்.
அவன் வெண்பட்டு வேஷ்டி சட்டையணிந்து வர, அவள் மாம்பழ நிற பட்டில் ஆளை அசரடிக்கும் தங்கச்சிலையென வந்து நின்றாள். மீண்டும் அவளின் வதனத்தில் தன்னை தொலைத்த அகரன் அருகில் இருந்தவர்கள் உசுப்பலில் தன்னிலைப் பெற்றான். பின் இருவருக்கும் மாற்றிக் கொள்ள மோதிரம் கொடுக்கப்பட்டது.
அகரன் தன்னையே பார்த்தபடி நின்றிருக்கும் தன்னவளைப் பார்த்தபடி அவளின் விரலில் மோதிரம் போட, நதியாள் அவனைப் பார்த்து மர்மமாக சிரித்தபடி மோதிரம் போட்டுவிட்டு அவனின் தலையை தன்பக்கம் இழுத்து அவனின் காதில்,” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் மனம் கவர்ந்த மன்னவனுக்கு என் அகம் புரிந்த அகனுக்கு”,எனக் கூறி அவனின் வாயில் இனிப்பைத் திணித்தாள்.
அன்று அவனின் பிறந்தநாள் என்பதே அப்பொழுது தான் நியாபகம் வந்தது. அவள் வாழ்த்து கூறியதும் சுற்றியிருந்த அனைவரும் அவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி கத்த அவனுக்கு கண்களில் நீர் துளிர்த்துவிட்டது.
ஒரே நொடியில் தன் உலகை அற்புதமாக மாற்றிய தன் தேவதையை இடம் பொருள் பார்க்காமல் இழுத்துக் கட்டிக் கொண்டான்.
“மச்சான்… இன்னிக்கு நிச்சயம் தான்டா….. கல்யாணம் ஒரு வருஷம் கழிச்சி தான். கொஞ்சம் என் தங்கச்சிய விட்டா பரவால்ல. பல்லு போன அத்தனை கிழமும் நீ கட்டிபிடிச்சத பாத்துட்டு பே ன்னு பாத்துட்டு இருக்கு. அதுல எதாவது அப்படியே டிக்கட் வாங்கிடப் போகுது. கொஞ்சம் மூச்சு விட கேப் விடு டா”, என சரண் அவனை இழுக்க, அவன் வந்தால் தானே…
அத்தனை இறுக்கமாக அவளை தனக்குள் புதைத்துக்கொண்டு இருந்தான் அகரன். அந்த நொடி அவனின் உணர்வுகள் யாதென அவனே புரிந்துக் கொள்ள முடியாதபடி இருந்தது.
நதியாள் சிரமப்பட்டு அவனை விலக்கி நிறுத்தினாள்.
“போதும் இது கோவில். அப்பறம் பேசிக்கலாம்”, என அவனுக்கு மட்டும் கேட்கும்படிக் கூறினாள் நதி.
பின் அனைத்து பெரியவர்களின் காலிலும் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர்.
“கண்ணுங்களா… அப்படியே சாமிய தரிசனம் பண்ணிட்டு வாங்க. புள்ளைங்களா இரண்டு பேரையும் எல்லா சந்நதிக்கும் கூட்டிட்டு போயிட்டு வாங்க”, என சரோஜா பாட்டி இருவருக்கும் நெட்டி முறித்து அனுப்பினார்.
வினயும் சரிதாவும் வன்மம் பொங்க தங்களுக்கான சமயத்திற்காகக் காத்திருந்தனர்.
அகரனும் நதியாளும் கண் மூடி கடவுளிடம் வேண்டிக்கொண்டு இருக்க வினய் கையில் தாலியுடன் நதியாள் இருந்த இடம் நோக்கி நடந்தான். அவனுக்கு பின்னே இன்னொருவனும் நதியாளை நோக்கி வந்துக்கொண்டு இருந்தான். சரிதா குழப்பத்துடன் அவனைப் பார்த்திருந்தாள்.
அனைவரும் கண்மூடி பிரார்த்தனை செய்து கொண்டிருக்க வினய் அருகில் வந்ததை யாரும் கவனிக்கவில்லை, அவனுக்கு பின்னே இன்னொருவன் வந்ததை அவனும் கவனிக்கவில்லை.
சரணும் தேவ்வும் கண் திறக்கும் சமயம் வினய் அவர்களுக்கு மிக அருகில் தாலியுடன் வந்து நின்று நதியாளை நோக்கினான்.
கண்மூடி திறக்கும் முன்னே நதியாளின் கழுத்தில் தாலி ஏறி இருந்தது. அவளெதிரில் வினய், அருகில் அகரன், மற்றொரு பக்கம் மதுரன் மூவரும் நின்றிருந்தனர்.
நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் நடந்ததை அங்கிருந்த யாராலும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை.
நதியாளின் முகத்தில் அப்பட்டமான அதிர்ச்சியும் குழப்பமும் குடிக் கொண்டிருந்தது.
யார் அவளின் கழுத்தில் தாலி கட்டியது என்பது தான் அங்கிருந்தவர்களின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது……..