34 – அகரநதி
ஸ்வாமி சந்நிதியில் அதிர்ச்சியின் உச்சத்தில் அங்கிருந்த அனைவரும் நின்றிருக்க, அகரன் வினயை கொலைவெறியுடன் முறைத்துக் கொண்டு இருந்தான்.
அவனின் மனதில் வினயைக் கொன்றுவிடும் அளவிற்கு கோபம் கொதித்துக்கொண்டு இருந்தது.
மதுரனும் வினயைக் கொலைவெறியுடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.
சரியான தருணத்தில் மதுரன் வினயை தடுக்காமல் இருந்திருந்தால் இந்நேரம் எவராலும் அந்த சம்பவத்தை ஜீரணிக்க முடிந்திருக்காது.
வினய் கொண்டு வந்த தாலியை மதுரன் தடுக்க, ஸ்வாமி பாதத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட பொன்னாலான மாங்கல்யத்தை ஐயர் வெளியே கொண்டுவர, அதை அகரன் நொடியில் எடுத்து நதியாளின் கழுத்தில் அணிவித்திருந்தான்.
கணபொழுதிற்கும் குறுகிய நேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவம் அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்க, நதியாளை யாதென்றே அறியாத உணர்வில் உறைய வைத்து இருந்தது.
அகரன் நதியாளின் கழுத்தில் தாலி அணிவதை சரண், தேவ் , மதுரன் மட்டுமே பார்த்தனர். வினய் தாலி கட்டுவதை படம்பிடிப்பதற்காக நின்றிருந்த சரிதா அதைப் புகைப்படமாக எடுத்திருக்க, இன்னொரு பக்கம் திலீப்பும் அதைப் படம் பிடித்திருந்தான்.
பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் பயமும் பதட்டமும் ஒருசேர தங்களது பிள்ளைகளை நோக்கி விரைந்தனர்.
“தம்பி என்னாச்சி? என்ன இதுல்லாம்?”, மாந்தோப்பு தாத்தா தான் பேச ஆரம்பித்தார்.
“இவன் நதியாள் கழுத்துல தாலி கட்ட வந்தான் தாத்தா”, அகரன் பற்களை கோபத்தில் கடித்தபடிக் கூறினான்.
“தம்பி…. இது கொஞ்சம் கூட சரியில்லை…. இன்னொருத்தன் கூட நிச்சயம் பண்ண பொண்ண நீ திருட்டு தனமா கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறது ரொம்ப தப்பு…”, மாந்தோப்பு தாத்தா.
“மரகதம்….. என்னம்மா இது?”, சுந்தரம் தாத்தா மரகதம்மாளைக் கேட்டார்.
“எனக்கும் ஒன்னும் புரியலண்ணே …..”, நடுங்கும் குரலில் பதிலளித்தார் மரகதம்மாள். அவருக்குமே இன்னும் பதட்டம் குறையவில்லை.
“முதல்ல பிள்ளைங்கள ஆசுவாசப்படுத்த அனுப்புங்க… பஞ்சாயத்து கொஞ்ச நேரத்துல வச்சிக்கலாங்க சுந்தரம் ஐயா…. இந்த பையன பிடிச்சி கட்டி வைங்க…. எலே காளியப்பா…. காவலுக்கு நீ இருடா…. இந்த பையனோட குடும்பம் மொத்தமும் பஞ்சாயத்துல இருக்கணும். சந்திரா உன்ற தங்கச்சி புருஷன வரசொல்லு”, பஞ்சாயத்து தலைவர்.
“ஐயா… அவரு இறந்துட்டாருங்க. ரொம்ப நாள் முன்னவே. இப்ப நான் தான் இவங்க குடும்பத்த பாத்துக்கறேன். பஞ்சாயத்துக்கு வந்துடறேனுங்க”, சந்திரகாந்த சங்கடத்துடன் கூறினார்.
“சரி எல்லாரும் இரண்டு மணி நேரம் கழிச்சி இங்கயே தூண் மண்பத்துக்கு வரணும். கண்ணா…. புள்ளை இன்னும் அப்படியே உறைஞ்சி நிக்கிறா. அவள சரி பண்ணுங்க. அகரா நீயும் நிதானமாகிட்டு வாப்பா….. பரமசிவம் சாமி கல்யாணத்துக்கு வச்ச தாலி புள்ளை கழுத்துல ஏறிடிச்சி….. அதனால வேற தாலி வாங்கிட்டு வந்து கொடுங்க. நாளைக்கு திருக்கல்யாண வைபவம் இருக்குல்ல… பஞ்சாயத்து கூட்ட ஆளுங்கள ஏற்பாடு பண்ணுங்கப்பா….. எல்லாரும் இங்க இருக்கணும். பெரிய வீட்டுக்காரங்க பஞ்சாயத்து அதனால அத்தனை பெரிய தலைகட்டு ஆளுங்களும் வரணும் “, பஞ்சாயத்துத் தலைவர் அடுக்கடுக்காக ஆணைகளைப் பிறப்பித்துவிட்டுச் சென்றார்.
சரண் அகரனின் தோள் பற்றியதும் அகரன் அவனைப் பார்த்தான்.
“யாள்அ கூட்டிட்டு வா…. “, எனக் கூறி கோவில் பின்பக்க மண்பத்திற்கு அழைத்துச் சென்றான் சரண்.
மதுரனும் தேவ்வும் பெரியவர்களிடம் மாப்பிள்ளை பெண்ணிற்கு குடிக்க தண்ணீர் வாங்கிக் கொண்டு சிறிது நேரம் கழித்து அவர்களை அங்கே வரச்சொல்லி சென்றனர்.
“சரிப்பா….. பாத்துக்கங்க…. நாங்க கொஞ்ச நேரத்துல வரோம்…. புள்ளை ஒறஞ்சி நின்னுட்டா.. பாத்து”, செல்லம்மா கூறி அனுப்பி வைத்தார்.
” ராதா…. அண்ணி….. “, என செல்லம்மா அவர்களின் அருகில் வந்தார்.
இருவரும் கண்களில் கண்ணீருடன் அமர்ந்திருந்தனர்.
“இப்ப எதுக்கு கண்ல தண்ணி வுட்டுட்டு இருக்கீங்க? நம்ம புள்ளைங்களுக்கு தானே கல்யாணம் நடந்திருக்கு…. “, செல்லம்மா.
“கூறு கெட்டவளே…. அகரனும் அந்த தம்பியும் சுதாரிச்சதால நம்ம புள்ளை தப்பிரிச்சி. இல்லைன்னா….. நினைச்சு பாக்கவே மனசு பதறுது….. பாவம் யாள் குட்டி இன்னும் கண்ணுமுழி அசையாமத்தான் போனா….. சே…. அந்த பயல வெட்டி போட்டாளும் மனசு ஆராது எனக்கு… என்ன வேலை செய்யப்பாத்துட்டான்…. “, பரமசிவம் கொதித்துக்கொண்டு இருந்தார்.
“எதுக்கு இந்த பய இப்படி பண்ண பார்த்தான் ? எனக்கு ஒன்னுமே புரியல அண்ணே”, கண்ணன்.
“அந்த பையனுக்கு நம்ம புள்ளை மேல ஒரு கண்ணு இருக்கு. அதான் இப்ப நிச்சயம் பண்ணவும் இப்படி செய்ய பாத்துட்டான். மனசே அமைதியாக மாட்டேங்குது. சிதம்பரம் நம்ம ஜோசியர வரச்சொல்லு”, சுந்தரம் தாத்தா.
“பஞ்சாயத்து முடிஞ்சி பாத்துக்கலாமாப்பா? இப்ப எதையும் கவனிக்கற மனநிலைல நாங்க யாருமே இல்ல. அந்த பையலுக்கு ஒரு முடிவு கட்டினாத்தான் அடுத்தது யோசிக்க முடியும்”, சிதம்பரம்.
“ராசா…. கொஞ்சம் எல்லாரும் மனச அமைதி படுத்துங்க….. கெட்டதுல நல்லதா நம்ம அகரனே தாலியே கட்டிட்டான்…. அத நெனச்சி சந்தோஷப்பட்டுக்குவோம். புள்ளைங்களுக்கு குடிக்க சாப்பிட எதாவது ஏற்பாடு செஞ்சி கொண்டு போகலாம். இப்படி நாம உட்கார்ந்து இருந்தா புள்ளைங்க மனசு இன்னும் சங்கடப்படும்”,
சரோஜாதேவி பாட்டி.
“மனசு பதட்டம் குறைய மாட்டேங்குது அத்த…. நம்ம மகாராணியாட்டம் பாக்க நினைச்ச புள்ளைக்கு ,இப்படி அவளுக்கு தெரியாம கழுத்துல தாலி ஏறுனது ரொம்ப கஷ்டம். அவளுக்குன்னு இருக்கிறவன் கட்டினாலும் அவளோட சம்மதத்தோட கட்டலியே… இந்த அகரனும் அவசரத்துல தாலிய கட்டிட்டான். இருந்த நிலமைக்கு அவன ஒன்னும் சொல்லமுடியாது”, சிதம்பரம்.
“சரி கண்ணு. இப்ப நல்லது தான் நடந்து இருக்கு. அந்த சாமி கழுத்துல ஏறவேண்டிய தாலி இவ கழுத்துல ஏறி இருக்கு. அதுக்கு சந்தோஷப்பட்டுக்கலாம். வாங்க முதல்ல நாம எதாவது குடிச்சுட்டு புள்ளைங்கள பாக்க போகலாம். இந்த சிநேகித பசங்க எங்க?”, எனப் பேசிக்கொண்டே சரோஜா பாட்டி ஸ்டெல்லாவை கையசைத்து அழைத்தார்.
“சொல்லுங்க பாட்டி….”, ஸ்டெல்லா.
“குடிக்க தண்ணியும் காப்பி டீ கொண்டு வாம்மா. அன்னதான மண்டபத்துல ஆளுங்க இருக்காங்க போட்டு தரச்சொல்லு. அப்படியே வந்தவங்களுக்கும் குடிக்க வாங்கி வச்சத குடுத்துடுங்க. சாப்பாடு தயாராகட்டும்”, சரோஜாதேவி பாட்டி.
“சரிங்க பாட்டி….”, என ஸ்டெல்லா சென்று திலீப் சஞ்சயிடம் குடிபானங்களை அனைவருக்கும் கொடுக்கக் கூறிவிட்டு, மீராவை அழைத்துக்கொண்டு அன்னதான மண்டபம் சென்றாள்.
இங்கே கோவிலின் பின்னால் வந்த அகரன் நதியை அமரவைத்து தண்ணீர் கொடுத்தான்.
“நதிமா…… நதிமா….. கொஞ்சம் தண்ணி குடிடா…..”, அகரன்.
நதியாள் அவனின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
“ஒன்னும் ஆகல டா. தண்ணி குடி. எல்லாம் சரியாகிடும்….”, என அவளின் தலை வருடினான் அகரன்.
“என்ன ஆகணும் இனிமே? நீ மட்டும் சுதாரிக்காம இருந்திருந்தா இந்நேரம் ……. அத நினைக்கவே என்னால முடியல அகன்….. “, என அவன் சட்டையை இறுக்கிப் பிடித்தாள்.
“அதான் அப்படி ஒன்னும் நடக்கல ல. ஹேப்பி மேரீட் லைப் அகரன் அண்ட் நதியாள் “, என மதுரன் கைக்குழுக்கினான்.
நதியாள் அவனை தீப்பார்வை பார்த்தாள். சரணையும் தேவ்வையும் பார்த்துவிட்டு மீண்டும் மதுரனை முறைத்தாள்.
“என்னம்மா முறைக்கற? நான் தான் உனக்கு முதல் கல்யாண வாழ்த்து சொல்லி இருக்கேன். அதனால உன்னோட முதல் குழந்தைக்கு என் பேர் தான் வைக்கணும். டீலா நோ டீலா?”, மதுரன் நிலைமையை சகஜமாக்க முயற்சித்தான்.
“இங்க வா…. “, என அருகில் அழைத்து அவனை தோளில் முதுகில் என, அடி அடியென அடித்து பின்னிவிட்டாள் நதி. அப்படியே மற்ற மூவருக்கும் அடிகள் விழுந்தது.
“அடேய்…. கல்யாணம் ஆனா புருஷன் உன்ன அடிக்கறதுல நியாயம் இருக்கு இப்பவும் எங்கள அடிக்கறாடா…. இதுல என்ன டா நியாயம்?”, மதுரன் அடி வாங்கிக்கொண்டே கேட்டான்.
“வாயமூடு டா நீ…. கம்முனு சைலண்ட் மோட்ல இருந்தவள வைலண்ட் மோட்ல மாத்திவிட்டுட்ட…. வாங்கு நல்லா….. “, என சரண் கூறினான்.
“உன் தங்கச்சிய பிடிடா…… அடேய் அகரா… உன் பொண்டாட்டிய பிடிடா….. அய்யோ அம்மா…… அடி சுலீர் சுலீர்ன்னு விழுதுடா….”, மதுரன் வலி தாங்காமல் கத்தத் தொடங்கினான்.
“நதி… நதி…. கண்மணி….இங்க பாரு… நீ பயப் படற மாதிரி ஒன்னும் நடக்கல. நான் தான் தாலி கட்டினேன் உன் கழுத்துல…. ரிலாக்ஸ் பேபி…..”, என அவளைக் கட்டி அணைத்தான்.
அவனைக் கட்டிக் கொண்டு அழுதாள். சிறிது நேரமானாலும் மன அழுத்தம் அவளை உச்சநிலைக்கு கொண்டு சென்றுவிட்டது. கண்மூடி திறக்கும் முன் நாம் சிறிதும் யோசிக்காத சம்பவங்கள் நடந்தேறும் பொழுது அதை நம் மனமும் புத்தியும் உணர்ந்து கொள்ள நேரம் எடுத்துக்கொள்ளும். ஒரு சிலருக்கு சில நிமிடங்கள்…… ஒரு சிலருக்கு சில நாட்கள்…… சில மாதங்கள்….. சில வருடங்கள்……. இப்படி அந்த சம்பவத்தின் தாக்கம் அந்த நேரத்தை நிர்ணயக்கிறது. இங்கே அதிர்ச்சியுடன் ஆரம்பித்தாலும் சந்தோஷமும் நிம்மதியும் இறுதியில் வந்ததால் சட்டென மன அழுத்தம் விடுபட்டு இப்படி ஏதேனும் செயலிலோ வார்த்தையாடல் வழியாகவோ வரும்…..
“ரிலாக்ஸ் பேபி….. என்னோட பிறந்தநாளுக்கு நீ எனக்கு குடுத்த சாக்கிங் சர்ப்ரைஸ விட, கடவுள் நம்ம எல்லாருக்கும் பெருசா குடுத்துட்டாரு பாத்தியா….”, என அகரன் நதியாளின் கன்னத்தை நீவியபடி அவளை தன் மடியில் அமரவைத்துக் கொஞ்சினான்.
“மிஸ்டர் அகரன்…. கல்யாணம் ஆகாத கன்னி பசங்க மூனு பேர் இங்க இருக்கோம்….. கொஞ்சம் அத மனசுல வச்சிட்டு இரண்டு பேரும் தள்ளி உட்கார்ந்து பேசுங்க”, மதுரன் வம்பிலுத்தான்.
“நீ போடா அந்த பக்கம்….. யாரும் இந்த பக்கம் வராமா மூனு பேரும் பாத்துக்கோங்க”, அகரன்.
“சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் அப்பாவ பாத்துட்டு வரேன்”, என தேவ் நகர்ந்தான்.
“இரு தேவ். நாங்களும் வரோம். மாமா தலைகுணிஞ்சு நிக்கறது எனக்கு பிடிக்கல. அந்த வினயும் சரிதாவும் எங்க? அவங்களையும் பாக்கணும்”, நதியாள்.
“இல்ல…..”, தேவ் இழுத்தான்.
“நீ கம்முன்னு வா. அங்கயே பஞ்சாய்த்து தலைவர் பேசறப்ப மாமா ரொம்ப சங்கடமா பேசினாரு. நாங்க வரோம். இதுல அவர் மேல எந்த தப்பும் இல்ல. உன் அத்தைய விசாரிச்சிட்டு அவங்க இரண்டு பேரையும் தான் பிடிக்கணும்”, சரண்.
“சரி வாங்க…..”, என தேவ் கூற அனைவரும் கிளம்பி கோவிலின் பிரகாரத்திற்கு வந்தனர்.
“ஹேய் யாள்…. ஹேப்பி மேரீட லைப்….. நிச்சயம் னு சொல்லி கூப்பிட்டு இப்ப கல்யாணம் பண்ணிட்ட. சோ டபுள் ட்ரீட் தரணும்”, ஸ்டெல்லா.
“ஏன்மா….அவங்களே இன்னும் அத அக்சப்ட் பண்ணிக்க முடியாம திணறிட்டு இருக்காங்க. இங்க இருக்கற எல்லாரும் அடுத்து என்ன நடக்குமோன்னு பதறிட்டு இருக்காங்க. உனக்கு ட்ரீட் ரொம்ப முக்கியமா இப்ப?”, மதுரன்.
“மிஸ்டர் மதுரன்…… அடுத்து எது நடந்தாலும் நடக்கலன்னாலும் இவங்களுக்கு கல்யாணம் ஆனது நிஜம் தானே….. சோ நான் ட்ரீட் கேக்கறதுல தப்பே இல்ல. வேணும்னா நீங்களும் ஜாயின் பண்ணிக்கோங்க. கண்டிப்பா அகரன் சார் பெருசா தான் தருவாரு”, ஸ்டெல்லா.
“சரி தான். ஏன்மா நதியாள்…. உன்கூட இருக்கற எல்லாமே இப்படி தானா? உன் காலேஜ் பாவம்”, மதுரன் என தலையில் கைவைத்தான்.
“ரொம்ப பீல் பண்ணாதீங்க… அது உங்க காலேஜ் தான்….”, என ஸ்டெல்லா கூறிவிட்டு நதியாளின் அருகில் சென்றாள்.
“பங்கம்…… அதான் காலேஜ்ல மூனு வருஷமா அட்மிஷனே அவ்வளவு வரல போல…. முதல்ல உங்க கேங்க வெளிய தொரத்துனா காலேஜ் உருப்படும்”, மதுரன்.
“நீங்க தொறத்த வேண்டியது அந்த சொட்டைமண்டை பிரின்ஸியும் ஒரு நாலு டிபார்ட்மெண்ட் ஹெச்ஓடியும் தான். அவங்களால தான் காலேஜ் இப்படி மோசமா இருக்கு”, ஸ்டெல்லா.
“வாய் … வாய்….. கொஞ்சமாது அடங்குதா பாரு. எல்லாம் வந்து வாச்சிருக்கு பாரு….. அந்த பொண்ணு மீரா எவ்வளவு அமைதியா வருது. நீ மட்டும் ஏன் இப்படி வாயடிக்கற?”, மதுரன்.
“ஸ்டாப்… நம்ம சண்டைய அப்பறம் வச்சிக்கலாம் மிஸ்டர் மதுரன். பெரியவங்க முன்னாடி சில்லியா பிகேவ் பண்ணாதீங்க”, எனக் கூறிவிட்டு நதியாளை அழைத்துக்கொண்டு ராதாவிடம் சென்றாள்.
“டேய் … நானா சில்லியா பிகேவ் பண்ணேன்? “, மதுரன் சரணிடம் கேட்க , சரண் முறைக்கவும் வாயை மூடிக்கொண்டு நின்றான் மதுரன்.
“அம்மா…..”, நதியாள்.
“என் ராசாத்தி…… என்னென்னமோ நடக்கவிருந்து யார் செஞ்ச புண்ணியமோ நீ தப்பிச்சிட்ட ஆத்தா….. உனக்கு ஒன்னும் கவலையில்ல தானே”, ராதா.
“எனக்கு பெரிய கவலை தான் ராதா. உனக்கு ஒரே செலவா எல்லாம் முடிஞ்சி போச்சி. நான் கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு உனக்கு வைக்கணும்னு பிளான் பண்ணி இருந்தேன் எல்லாம் போச்சி…”, என நதியாள் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டுச் சொன்னாள்.
“அடிக்கழுத….. இங்க வா”, என ராதா அவளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். பெத்த மனம் பதறியது அவருக்குத்தானே தெரியும். அதுவும் அவள் அசைவில்லாமல் இருந்தது, அவரின் மனதை நெருஞ்சி முள்ளாக குத்திய வலி…. சிறிது நேரத்தில் இப்போது நதியாள் அதே துடுக்குத்தனமான பேச்சுடன் வந்து நிற்பது அவருக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.
“நதிகுட்டி ….. இங்க வாடா…..”, திலகவதி அழைத்தார்.
“திலாத்தை…. எதுக்கு அழறீங்க? இப்பவே உங்க மருமகளா நான் வந்து கொடுமை படுத்துவேன்னு பயந்துட்டீங்களா? என்ன செய்ய எல்லாம் கடவுள் விடற வழி தானே…..கவலை படாதீங்க அவ்வளவுலாம் உங்கள மருமகக்கொடுமை படுத்தமாட்டேன்”, என அவரைக் கட்டிக்கொண்டாள் நதி.
“என் தங்கம்….. நீ எது பண்ணாலும் எனக்கு அது கொடுமையா தெரியாது டா. என் இளவரசி டா நீ”, என அவளின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார் திலகவதி.
“இளவரசி இல்ல திலகா….. இப்ப மகாராணி ஆகிட்டா….. இங்க வாடி என் கட்டித்தங்கமே”, என மீனாட்சி பாட்டி அருகில் வந்தார்.
“மீனு….. நீயும் அழுகறியா?”, என அவரின் கண் துடைத்தாள் நதி.
“இல்லடா…. சந்தோஷக்கண்ணீர்….. நம்ம வீட்டு குலசாமிடா நீ….. உன்ன நாங்க இழந்துடாம அந்த கடவுள் காப்பாத்திட்டாரு…… இந்தா…. நீ கேட்பியே நம்ம பரம்பரை காப்பு”, என அவளின் சுந்தரம் தாத்தாவிடம் இருந்து வாங்கி கைகளில் போட்டுவிட்டார் மீனாட்சி பாட்டி.
“அகனுக்கு?”, நதியாள்.
“இந்த காப்பு அவனுக்கு நீயே போட்டுவிடு. அகரா இத நதியாளுக்கு போடு”, என மரகதமும் வைரமும் பதித்த வளையலைக் கொடுத்தார் மீனாட்சி பாட்டி.
“வாவ்…. அழகா இருக்கு…. பாட்டி உங்களுக்கு ஒரு பேரன் தானா? “, ஸ்டெல்லா.
“ஆமா…. ஏன்டி?”, மீனாட்சி.
“இன்னொரு பேரன் இருந்தா எனக்கும் இப்படி ஒரு வளையல் குடுப்பீங்கல்ல அதான் கேட்டேன்”, சிரித்தப்படிக் கேட்டாள் ஸ்டெல்லா.
“நான் ரெடி ஸ்டெல் டார்லிங்”, சுந்தரம் தாத்தா இடைபுகுந்தார்.
“எனக்கு டபுல் ஓக்கே டார்லிங்”, என ஸ்டெல்லா அவரின் அருகில் சென்று தோள் மேல் கைப்போட, மீனாட்சி பாட்டி அவளைத் துரத்தினார்.
“ஹாஹாஹஹாஹாஹஹா…….”, என அனைவரும் சிரிக்க அந்த இடமே கலகலப்பானது.
“இது…… இப்படி சிரிக்கறத விட்டுட்டு ஆளாளுக்கு மூஞ்ச தொங்கபோட்டுட்டு இருந்தா நல்லாவா இருக்கு? வாங்க சாப்பிட போகலாம்”, ஸ்டெல்லா அனைவரையும் கிளப்பினாள்.
மீராவும் மதுரனும் மூத்தவர்களை கைப்பிடித்து எழுப்பிவிட, திலீப் வந்து பரமசிவம் கண்ணன் சிதம்பரம் மூவரையும் கிளப்பிக்கொண்டு நடந்தான்.
நதியாளும் ஸ்டெல்லாவும் பேசிக்கொண்டே மற்ற பெண்களை அழைத்துக்கொண்டு அன்னதான மண்டபம் வந்தனர்.
“முன்ன போங்க …..நாங்க வந்துடறோம்….”,எனக் கூறி அவர்களை முன்னே அனுப்பிவிட்டு அகரன் நதியாள் சரண் தேவ் நால்வரும் சந்திரகாந்த் இருக்கும் இடம் நோக்கிச் சென்றனர்.
“மாமா…. சாப்பிடலயா?”, நதியாள்.
“இல்லடா பசிக்கல….”, சந்திரகாந்த்.
“பாட்டி….. அத்தை…. இப்ப எதுக்கு இப்படி சோகமா இருக்கீங்க? என் கல்யாணம் நடந்து இருக்கு….. எல்லாரும் இப்படி இருத்தா எப்படி? யாருக்கும் என் கல்யாணம் நடந்தது பிடிக்கலியா? “, நதியாள் சோகமாக முகத்தை வைத்துக்கொண்டுக் கேட்டாள்.
“அப்படி இல்லடா தங்கம்… எல்லாரும் சந்தோஷமா இருந்த சமயத்துல இப்படி இந்த பையன் நடந்து…. பஞ்சாயத்து வரைக்கும் வந்துரிச்சேன்னு தான்…. அவன் பண்ணது தப்பு தான் ….ஆனா ஏன் இப்படின்னு தான் புரியல…”, மதி வருத்தத்துடன் கூறினார்.
“அம்மாடி நதியாள். அவன மன்னிச்சிடு மா. அவன் தான் அவனோட அம்மாவையும் தங்கச்சியையும் காப்பாத்தணும்…”, மரகதம்மாள்.
“பாட்டி…. அவனுக்கு குடுக்கற தண்டனைய அவன் அனுபவிச்சி தான் ஆகணும். இவங்க இரண்டு பேரும் சென்னைல பிரச்சினை பண்ணதுக்கே நான் ஒரே அடியா இவங்கள ஒதுக்கி இருக்கணும். இப்ப எவ்வளவு பெரிய விஷயத்தை பண்ணி இருக்காங்க பாருங்க. நதியாள் வாழ்க்கையையே வீண் பண்ண பாத்துட்டான். இவளும் அதுக்கு உடந்தை தான். வாய தொறந்து சொல்லு சரிதா”, தேவ் கோபத்தில் வார்த்தைகளைத் கடித்துத்துப்பினான்.
“ஆமா… நாங்க தான் பிளான் பண்ணோம். வினய் இவள விரும்புறான்… ஆனா இவ அவன கண்டுக்கவே இல்ல. அதான் இப்படி செஞ்சா அவன் லவ் சக்சஸ் ஆகும்னு பிளான் போட்டோம். கடைசில அந்த புதுசா வந்தவனால எல்லாம் சொதப்பிரிச்சி”, என சரிதா கூறவும் மரகதம்மாள் அவளை அடித்திருந்தார்.
“எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா எங்க முன்னாடியே இப்படி பேசுவ? உன் அம்மா இப்படி பாதி செத்ததுக்கு காரணமே நீ தான்டி…. இரண்டு பேருக்கும் உங்கப்பன் புத்தி தான் வந்து இருக்கு. நான் தான் இத்தனை வருஷம் உங்க இரண்டு பேரையும் நம்பி ஏமாந்துட்டேன்… இனிமே பஞ்சாயத்துல மன்னிச்சாலும் நான் உங்கள மன்னிக்கமாட்டேன். எதாவது ஒரு நல்ல இடமா பாத்து கட்டிக்குடுக்கறேன் அப்படியே போயிடுங்க இரண்டு பேரும்”, மரகதம்மாள் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றார்.
“ஏன் சரிதா இப்படி பண்றீங்க? உங்களயும் எங்க புள்ளைங்களா தானே நாங்க பாத்தோம் வளர்த்தோம்…… “, மதி.
“…………………”
“அவகிட்ட பேசறதுல ப்ரயோஜனம் இல்ல மதி. வா போலாம்…. இவளையும் அவங்க அண்ணன் கூட இருக்க வைக்கச் சொல்லு தேவ்”, சந்திரகாந்த்.
“வேணாம் மாமா. பஞ்சாயத்துல அவ நின்னா அவ எதிர்காலம் கேள்விக்குறி ஆகிடும். அவன் மட்டும் நிக்கட்டும் இவள நீங்களே பக்கத்துல வச்சி இருங்க”, நதியாள் சரிதாவைப் பார்த்துக்கொண்டே கூறினாள்.
சரிதா நதியையும் அகரனையும் அவள் கழுத்தில் தொங்கும் தாலியையும் பார்த்துவிட்டு கண்களில் வன்மம் பெருக முறைத்தாள்.
“சரிம்மா… “, சந்திரகாந்த்.
“வாங்க எல்லாரும் சாப்பிட போகலாம்”, சரண்.
“இல்லப்பா …. நாங்க வரல… பசிக்கல”, சந்திரகாந்த்.
“மாமா…. நான் கூப்பிடறேன். வாங்க சாப்பிடலாம். நீங்க வரலன்னா நாங்களும் சாப்பிடமாட்டோம்”, என அடம்பிடித்து நதியாள் அவர்களைச் சாப்பிட அழைத்துச் சென்றாள்.
அங்கே சுந்தரம் தாத்தா முதல் அனைவரும் சன்னமாக புன்னகைத்து அவர்களை சாப்பிட அமர வைத்தனர்.
இன்றும் அகரன், நதியாள், தேவ், சரண் பரிமாற ஆரம்பிக்க , ஸ்டெல்லா, மீரா, மதுரன், திலீப் ,சஞ்சய் அனைவரும் சேர்ந்து விருந்து பரிமாறி அனைவரும் சாப்பிட்ட பின்னரே இவர்கள் உணவுண்டனர்.
அகரனையும் நதியாளையும் ஒன்றாய் அமரவைத்து கலாட்டா செய்தபடி இளையவர்கள் சாப்பிட்டு முடித்து பஞ்சாயத்திற்குத் தயாராகி வந்தனர்.
அங்கே ஊர் பஞ்சாயத்து தலைவர் முதல் தலைகட்டு ஆட்கள் அனைவரும் வந்துக் கொண்டு இருந்தனர்.