33 – மீள்நுழை நெஞ்சே
ஒரு வழியாக இருவரும் வீடு வந்து சேர்ந்தனர். வந்த வேகத்தில் அவளுக்கு சளியும், காய்ச்சலும் பிடித்தது. அவளிடம் அப்போது எந்த மாத்திரைகளும் இல்லாததால், மாமியார் கொடுத்த மாத்திரைகளை போட்டுக் கொண்டு உறங்கிவிட்டாள்.
அடுத்த நாள் வீட்டில் யாரும் இல்லாத நேரம் மாமியாரிடம் மெல்ல பேச்சு கொடுத்தாள்.
“ஊர்ல எல்லாம் நல்லா சுத்தி பாத்தீங்களா துவாரகா? அவன் நல்லபடியா நடந்துகிட்டானா?”, என அவரே ஆரம்பித்தார்.
“எங்க…. பயங்கரமா டென்ஷன் பண்ணிட்டார் அத்த… வீட்ல நீங்களே அளவு பாத்து போட்டு போட்டு அவருக்கு எவ்வளவு சாப்பிடணும்னு கூட தெரியல… சாப்டுட்டு சாப்டுட்டு வாந்தி தான் எல்லா எடத்துலையும். கம்மியா சாப்பிட சொன்னாலும் கேக்கவே இல்ல…..”, என மாமியாரின் முகத்தை ஆராய்ந்தபடிப் பேசினாள்.
“அச்சச்சோ… அப்படியா பண்ணான். நீ கூடவே இருந்து இது இவ்வளவு போதும்னு சொல்லணும்ல துவாரகா… அவனுக்கு அளவுன்னா என்னன்னே தெரியாது. கண்டத அளவில்லாம சாப்டுட்டு இப்படி தான் பண்ணுவான். கல்யாண பேச்சு ஆரம்பிச்ச அப்பறம் நானும், அவன் அப்பாவும் தான் பக்கத்துலையே உக்காந்திருந்து சாப்பிட வச்சி பழக்கினோம்…. ஊருக்கு போன இடத்துல என்ன பண்ணுவானோன்னு தான் எனக்கும் யோசனையாவே இருந்தது….”
“அது மட்டுமா…. சின்ன புள்ளை மாதிரி தண்ணிய பாத்ததும் அந்த குதி குதிக்கறாரு…. அன்னிக்கு அவர நான் புதுசா பாத்தேன் அத்த… “, வரவழைக்கப்பட்ட சிரிப்புடன் கூறினாள்.
“அப்படியா? அவனுக்கு நீச்சல் சரியா தெரியாதே … ஆழமான இடத்துக்கு போனானா?”
“இல்ல…. சின்ன குழந்தைங்க… பத்து வயசு பசங்க விளையாடற இடம் தான் அவருக்கு பிடிச்சிருக்காம். கடைசியாக அந்த மாதிரி இடத்துலே மட்டும் இரண்டு மணி நேரம் தனியா விளையாடிட்டு இருந்தாரு”
“இரண்டு மணி நேரமா? அவனுக்கு ரொம்ப நேரம் தண்ணில இருந்தா உடம்பு கெட்டுறுமே …. நீ சொல்ல மாட்டியா துவாரகா அவ்வளவு நேரம் தண்ணில விளையாட கூடாதுன்னு….”, அவளிடம் பாய்ந்தார்.
“நான் என்ன பண்றது அத்த… நான் எது சொன்னாலும் உங்கள போல நான் இல்லைன்னு என்கூட சண்டைக்கு வராரு. என்னை திட்டறாரு….”
“திட்டினானா அவன்? நான் எத்தனை தடவை சொல்லி அனுப்பினேன். ஃபோன்ல கூட சொன்னேன் சண்டை போடக்கூடாதுன்னு. அப்பயும் உன்கிட்ட சண்டை போட்டு இருக்கான்ல… வரட்டும் இன்னிக்கு தோசை கரண்டில சூடு வைக்கறேன்….”
“ஏன் அத்த அவரு சின்ன குழந்தை மாதிரி நடந்துக்கறாரு?”, எனக் கேட்டாள்.
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அந்தம்மா பேச ஆரம்பித்தது.
“நான் சொல்றத யார்கிட்டயும் சொல்லாத…. அவன் சென்னைல படிச்சிட்டு இருந்தப்ப திடீர்ன்னு ஒரு நாள் ஃபோன் வந்தது. உடம்பு சரியில்லாம இருக்கான்னு. நானும் அவரும் பயந்து போய் பார்த்தோம். ஆளே வேறமாதிரி இருந்தான். மெண்டல் மாதிரி…. இல்ல… இல்ல… டிப்ரஸன்ல அப்படி ஆகிட்டான். அங்க வச்சி பாத்துக்க முடியாம, இங்க கூட்டிட்டு வந்து வீட்லயே நாலு வருஷம் ட்ரீட்மெண்ட் பண்ணோம்…. டாக்டர்கிட்ட கேட்டுட்டு தான் கல்யாண பேச்சே எடுத்தோம்… பொண்ணு பாக்க ஆரம்பிச்சி கொஞ்ச நாள்லயே உன் ஜாதகம் வந்துச்சி செட் ஆகிரிச்சி….”, என ஒருவித மெல்லிய சிரிப்புடன் அந்தம்மா கூறும்போது துவாரகா அதிர்ச்சியில் உறைந்திருந்தாள்.
“இந்த வீட்ல வச்சா ட்ரீட்மெண்ட் பண்ணீங்க?”
“இல்ல… பழைய வீட்ல அன்னிக்கு கூட நாம் கோவிலுக்கு போனப்ப ஒரு தெரு காட்டினேன்ல அங்க தான் இருந்தோம். இந்த வீடு கட்டி இப்ப தான் இரண்டு வருஷம் ஆகுது. இன்னும் லோன் கூட முடியல… என் பேர்ல தான் லோன் எடுத்தாங்க….”
“முழுசா குணமாகிடிச்சா அத்த அவருக்கு?”
“இல்ல…. நாம கூடவே இருந்து எல்லாத்தையும் சொல்லிட்டே இருக்கணும். அப்பதான் செய்வான். அதனால தான் அதிகம் வெளியே அவன அனுப்பறது இல்ல. நீ கூட அதிகம் அவன வெளியே போகணும்னு கூப்பிடாத… எதுவா இருந்தாலும் நானும் நீயும் போலாம்…. சரியா?”, எனக் கூறிவிட்டு அந்தம்மாவும் மாத்திரை மயக்கத்தில் உறங்கிவிட்டது.
கார் ட்ரைவிங்கில் இருந்து சாப்பிடுவது வரையும் கூடவே ஒருவர் இருந்து சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
அன்று காரில் செல்லும்போது, மாமியார் அவனிடம் மெல்ல செல், கியர் மாற்று, ஹார்ன் அடி என்று முணுமுணுத்தபடி வந்தது முதல், பணியாரம் சுட்டபோது முறுகலான பகுதியை மட்டும் சாப்பிட்டுவிட்டு மிச்சத்தை அவள் தட்டில் கொட்டி அவன் சென்றது வரை படமாக மனக்கண்ணில் ஓடியது.
பெண்களை பற்றிய விஷயத்தில் அவன் அளவிற்கதிமான கவனம் எடுப்பதும் மனதில் வந்து யோசிக்க வைத்தது.
“பொண்ணுங்க சேலை கட்டினா இடுப்பு தெரியாம கட்டணும். அங்க பாரு இடுப்பு தெரியுது….”, என அவள் புடவையை இழுத்துக் காண்பிப்பான்.
“எந்நேரமும் பின் குத்திட்டு இருந்தா சேலை கிழிஞ்சிடும்…. வீட்ல தானே இருக்கேன்…. நீங்க தானே இருக்கீங்க….”, எனக் கூறினாள்.
“நானா இருந்தா மட்டும்…. அதுலாம் தெரியகூடாது… நல்லா கட்டு…. அப்பறம் வகிடு நேரா எடுக்காம சைட்ல எடுக்காத…. “
“ஏன்?”
“எங்கம்மா இந்த பக்கம் எடுப்பாங்க. அது நல்லா இருக்கும். நீ இந்த பக்கம் எடுக்கற….”
“எனக்கு எது வருதோ அது எடுக்கறேன். அதுல என்ன பிரச்சினை?”
“இல்ல.. பிரச்சனை எல்லாம் இல்ல…. சும்மா சொன்னேன்… வகிடுல குங்குமம் வச்சா நல்லா இருக்கு… ஆனா சில லேடிஸ் வைக்கவே மாட்டாங்க… ஒரு சிலர் ரொம்ப சின்னதா வைப்பாங்க…. அதுலாம் நல்லாவே இருக்காது எங்கம்மா வைக்கவே மாட்டாங்க… அவங்களுக்கு அலர்ஜி ஆகுது…. இல்லைன்னா அவங்களும் வைப்பாங்க….”, என ஏதேதோ கூறிவிட்டு சென்றுவிடுவான்.
இருவரும் தனியாக அமர்ந்து பேசும்படியான சூழ்நிலை வந்தால் திடீர் திடீரென அவளுக்கு தெரியாத, அறிமுகம் இல்லாத துறைகளில் இருந்து ஏதேனும் கேட்பான். தெரியவில்லை என்று கூறினால் தேடி அறிந்துகொள் எனக் கூறிவிட்டு, “இது கூட தெரியல நீயெல்லாம் என்ன படிச்ச?”, என அவளை மட்டம் தட்டிப் பேசி சென்றுவிடுவான்.
திருமணம் நிச்சயம் ஆனதில் இருந்து இன்று வரை நடந்த அனைத்தும் அவள் மனதில் ஓடியது. திட்டமிடப்பட்டு தன்னை இங்கே திருமணம் செய்ய வைத்திருக்கிறார்கள். தந்தையும் எங்கோ ஏமாந்திருக்கிறார் என்று புரிந்தது.
அடுத்து அவளுக்கு என்ன செய்வதென புரியவில்லை. இத்தனை நேரம் பதிவாகியிருந்த ரெக்கார்டரை அணைத்து கனிமொழிக்கு அனுப்பிவிட்டு, பத்திரப்படுத்தி வைக்கும்படி தகவல் அனுப்பினாள். அந்த பதிவை இவளது தொலைபேசியில் பாதுகாப்பாக சேமித்து வைத்தாள்.
அன்றிரவு அவள் கணவன் உறங்காமல் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளுக்கு லேசாக உறக்கம் கலைந்து பார்க்க திக்கென்று ஆனது.
“தூங்கலையா?”
“உன் போன் லாக் என்ன?”
“எதுக்கு?”
“நீ யார் யாருக்கு மெஸேஜ் பண்றேன்னு பாக்க தான்”
“உங்களுக்கு எதுக்கு அது?”
“சரி விடு. நீ தூங்கு”, எனக் கூறிப் படுத்துவிட்டான்.
சிறிது நேரம் கழித்து அவள் தூங்கிவிட்டாள் என நினைத்து அவளது ரேகை வைத்து அவளது போனை நோண்டினான்.
அதிலிருந்து அவனுக்கு சிலதை அனுப்பிக் கொண்டு வைத்துவிட்டு அவனும் உறங்கிவிட்டான்.
சில நாள் இரவில் அவளருகில் உறங்குபவன் விடிந்து பார்த்தால் தாயின் அறையில் படுத்திருப்பான். ஒரு முறை அவள் எழுந்து பார்க்கும் போது நடுஇரவு இரண்டு மணிக்கு தாயும், மகனும் பேசிக்கொண்டிருந்தனர். மாமனார் தனியறையில் தான் உறங்குவார். மாமியார் தனியறையில் உறங்குவார்.
யோசித்து பார்த்தால் தாயும் மகனும் ஒரே அறையில் இருந்திருக்கின்றனர் என புரிந்தது.
அவனைப் பற்றி அறிந்த பின் துவாரகா அவனை அருகில் விடுவதில்லை. ஆனாலும் அவன் விரல்கள் அவளது உடலில் மேயும். அது அவளுக்கு எரிச்சலை வரவைக்கும், கையை தட்டிவிட்டு விட்டு படுக்க கூறி திரும்பி விடுவாள். அவன் உடனே அறை விட்டு வெளியே சென்றுவிடுவான்.
அன்று அவள் உறக்கத்தில் இருக்கும் சமயம் அவன் அவள் உடலுடன் உறவாடவும் அவளால் அவனை தடுக்க முடியவில்லை. அவனது கையாலாகாதனத்தை அவளுடலில் காட்டினான். அன்றே துவாரகா ஒரு முடிவுக்கு வந்தாள்.
“அத்த… உங்க பையனோட மெடிக்கல் ரிப்போர்ட்ஸ் குடுங்க….”
“எதுக்கு?”
“அவர முழுசா குணப்படுத்த முடியுமான்னு பாக்கலாம்…. “
“அவனுக்கு நல்லா ஆகிரிச்சி துவாரகா….”
“அவரு எப்படி இருக்காருன்னு எனக்கு நல்லா தெரியும். நீங்க சொன்னதும் எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு…. “
“அன்னிக்கு நான் என்ன சொன்னேன் .. ஒன்னுமே சொல்லல…. “, எனத் திணறினார்.
“சாயந்தரம் எனக்கு ரிப்போர்ட் வேணும்… எதுன்னாலும் பெரிய மாமாகிட்ட பேசி யோசிச்சி சொல்லுங்க”, எனக் கூறிவிட்டு அறைக்குள் அடைந்துக் கொண்டாள்.
அன்று மாலை, “துவாரகா… உங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு உனக்கு கல்யாணம் செஞ்சிருக்காங்க… இத அவங்ககிட்ட சொல்லாத…நான் உன்னை நல்லா பாத்துக்குவேன்…. வெளியே தெரிஞ்சா நமக்கு தான் அசிங்கம்”, என நைச்சியமாக பேச ஆரம்பித்தார்.
“அவரு மொத ஆம்பளையா இல்லையான்னு தெரியணும். உங்க பையனுக்கு மனசு மட்டுமில்ல உடம்புலையும் சரியான வளர்ச்சி இல்ல … அவரோட பேச்சு நடவடிக்கை எல்லாமே வித்தியாசமா இருக்கு… நாம நல்ல டாக்டரா ஒருத்தர பாத்து கன்சல்ட் பண்ணலாம். சரி பண்ண முடியும்னு தான் நினைக்கறேன்”
“என்ன டி இப்படி பேசுற? உனக்கு டிப்ரஷன் வந்துரிச்சா? ஸ்ட்ரெஸ் ஆ இருக்கியா? வேணும்னா ரெண்டு நாள் உன் அப்பா வீட்டுக்கு போயிட்டு வா….”, எனக் கூறினார்.
“நான் என்ன பேசறேன் நீங்க என்ன பேசறீங்க? “, என் அவள் கோபமாகக் கேட்டாள்.
“பாரு பாரு…. நீ ஸ்ட்ரெஸ்ல இருக்க… அதான் இப்படி நடந்துக்கற…. நாம நாளைக்கு டாக்டர்கிட்ட போலாம்…..”, எனப் பேச்சைத் திசைத் திருப்பினார்.
“நான் நல்லா தான் இருக்கேன். நீங்க மாத்தி மாத்தி பேசாதீங்க…. இரண்டு நாள் நான் எங்கப்பா வீட்டுக்கு போயிட்டு வரேன். அதுக்குள்ள நீங்களும் உங்க வீட்டுகாரரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்து வைங்க”, எனக் கூறிவிட்டு தந்தை வீட்டிற்கு சென்றாள்.
அவள் வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் தாயும் தந்தையும் எங்கோ கிளம்பிச் சென்றனர்.
அவர்கள் திரும்பி வந்ததும் முகமே அவர்களது மனகலக்கத்தைள் காட்டிக் கொடுத்தது.
“என்னாச்சி ப்பா? ஏன் முகம் ஒருமாதிரி இருக்கு?”
“ஒண்ணுமில்ல டா… நீ எப்ப மாப்ள வீட்டுக்கு போற?”
“நாளைக்கு காலைல ப்பா”, எனக் கூறினாள்.
“சரி டா… ஜாக்கிரதையா போயிட்டு வா… அப்பாவுக்கு நாளைக்கு கடைல முக்கியமான வேலை இருக்கு. என்னால உன்ன விட வரமுடியாது…”, எனச் சோர்ந்துப் போன குரலில் கூறினார்.
“பரவால்ல ப்பா… மனோ சித்தப்பா வரேன்னு சொல்லிட்டாரு…. நீங்க வேலைய கவனிங்க”, எனக் கூறிவிட்டு தன்னறைக்கு வந்து தன் வாழ்வைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்.
சித்த மருத்துவ முறையில் நிச்சயம் குணப்படுத்தி விடலாமென நினைத்து, அதற்கான தகவல்களை சேகரிக்க ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் காலை அவள் அங்கு சென்ற போது அவளது மாமனார் மற்றும் அவளது கணவன் இருவரும் அவளிடம் ஒரு பத்திரத்தைக் கொடுத்து கையெழுத்திடக் கூறினர்.
அது அவள் கொடுக்கும் சுய வாக்குமூலம்…
அதில் இருந்த விஷயங்கள்,
அந்த வீட்டில் அவள் இறந்துவிட்டால் அதற்கு அவளது கணவன், மாமனார், மாமியார் யாரும் காரணமில்லை.
இந்து திருமண சட்டத்தின் படி எந்த பிரிவின் கீழும் அவளது இறப்பினால் அவர்களுக்கு தண்டனை வழங்கக்கூடாது.
அந்த வீட்டில் அவள் இருக்கும் காலத்தில், அவர்கள் மூவருக்கும் எதுவும் ஆனால் அவளே முழுப்பொறுப்பு.
அதற்கான தண்டனையை எந்த மறுப்பும் இன்றி அவள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அவள் இறந்தபின் அவள் அணிந்து வந்த நகை, கொண்டு வந்த பணம் அனைத்தும் அவர்களுக்கே சொந்தம்.
அவளது அன்னை தந்தை சகோதரன் என யாரும் அவளைக் காண வரக்கூடாது.
யாரிடமும் அவள் அலைபேசியில் பேசக்கூடாது.
எந்த ஆண்களிடமும் அவள் பேசக்கூடாது.
அவளது சொந்த பந்தங்கள் யாரும் இந்த வீட்டிற்கு வரக்கூடாது.
இப்படியாக சுமார் நான்கு பக்கங்களுக்கு நிபந்தனைகள் மற்றும் சுய சாசனங்கள் அதில் அடங்கியிருந்தன.
அதைக் கண்ட துவாரகா அந்நொடி விதிர்விதிர்த்து நின்றாள்.
“இதுல கையெழுத்து போட்டுட்டு உள்ள போ துவாரகா….”, என அவன் கூறினாலும் அதை செய்ய வைப்பது அவனது தாயும், தந்தையும் தான் என்பது நன்றாக விளங்கியது.