34 – மீள்நுழை நெஞ்சே
மனோகர் வாசலிலேயே இறக்கி விட்டு சென்றதால் உள்ளே நடந்த எதுவும் கண்ணால் காணவில்லை.
அவளின் தொலைபேசியை காரில் விட்டு விட்டதால் அதைக் கொடுக்க உள்ள வந்த சமயம் துவாரகா அவளது கணவனை அறைந்திருந்தாள்.
“மனுஷங்களா நீங்க எல்லாம்? என்னை கொல்றதுக்கு நானே வேற கையெழுத்து போட்டு தரணுமா டா? நீயெல்லாம் என்னயா பெரிய மனுஷன்? நீயும் ஒரு பொம்பளை…. நீயெல்லாம் எதுக்கு டா கல்யாணம் பண்ணிகிட்ட?”, என ஆவேசமாகக் கத்தினாள்.
“அம்மாடி துவா… என்னடா ஆச்சு?”, மனோகர் ஒன்றும் புரியாமல் கேட்டார்.
“இத பாருங்க சித்தப்பா… இதுல நான் கையெழுத்து போடணுமாம்”, என அந்த பத்திரத்தைக் கொடுத்தாள்.
அதைக் கண்ட மனோகர் அவர்களை அடித்தே விட்டார். துவாரகா கஷ்டப்பட்டு அவரை இழுத்து அமர வைத்தாள்.
“அம்மாடி… போய் உன் பொருள் எல்லாத்தையும் எடுத்துட்டு வா… இவனுங்கள இனி ஒரு வழி பண்ணாம விடக்கூடாது…. “, எனக் கூறினார்.
“நகையெல்லாம் அவங்க லாக்கர்ல இருக்கு சித்தப்பா…. மத்தது எடுத்துக்கலாம். நகை நாளைக்கு எடுத்துக்கலாம்….”, என அவளுக்கு சீர்வரிசையாகக் கொடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தூக்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அவள் வாழ்க்கை பிரச்சனையாகிவிட்டது என்று அறிந்த நொடியில் இருந்து அப்பத்தா கிழவியும், அவளது அத்தை வைரமும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இருவரும் குசுகுசுவென பேசுவதும் சிரிப்பதுமாக இருந்தனர்.
“என் மருமவள இப்படி பண்ணிட்டாங்களே… நாசமா போனவங்க…. அவள இனிமே இங்கேயே வச்சிக்க அருணாச்சலம்…. நாலு கவளை சோறு திண்பா.. அத நாமலே போட்டுட்டு போலாம்… “, என ஊருக்கு முன் வேஷம் போட்டுவிட்டார் வைரம்.
அவள் மேல் பொறாமை உண்டென தெரியும் ஆனால் இத்தனை வக்கிரம் உள்ளே இருக்கிறதென அவளுக்கு அந்த நொடி தான் தெரிந்தது.
அவளுமே முழுதாக உடைந்து போனாள். இந்த திருமணத்தில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும் இல்லை தான். ஆனால் திருமணத்தில் தோற்று நிற்கிறாள். காதலில் தோற்றால் அவ்வலி சில நாட்கள் தான். அது பெரிதாக யாருக்கும் தெரியாது, தெரிந்தாலும் சமூக வாழ்க்கையில் அதனால் எந்த மாற்றமும் பெரிதாக ஏற்படாது.
ஆனால் திருமணத்தில் தோற்று விட்டால், மொத்த வாழ்க்கையிலும் தோற்றதாக தான் இந்த சமூகம் கூறுகிறது.
ஒரு ஆண் திருமணத்தில் தோற்றால் அடுத்த மாதத்தில் மறுமணம் செய்து வாழ ஆரம்பித்துவிடுகிறான். அவன் வாழ்கிறானோ இல்லையோ அவனை விவாகரத்து பெற்றவனாக இந்த சமூகம் பார்ப்பதே இல்லை.
அவனுக்கு சலுகைகள் அப்போதும் நிறைய உண்டு. அவன் நினைப்பதற்கேற்ப பெண் பார்க்கப்படுவாள். அவனது விருப்பங்கள் தான் அப்போதும் சபையேறும். அவனை சபையில் யாரும் ஒதுக்குவதில்லை.
எந்த நல்ல காரியத்திலும் அவனை ஒதுக்கி கீழே இறக்குவதில்லை. ஏனோ அவனது வாழ்க்கை சற்று சறுக்கி விட்டது…. இப்படி தான் கூறுகிறது இச்சமூகம்.
ஆனால் ஒரு பெண் திருமணத்தில் தோற்றுவிட்டால்….
அவள் முதலில் சுத்தமான ஒழுக்கமான பெண்ணே இல்லை என்று ஆரம்பிக்கும் அவளின் மீதான விமர்சனம்.
அதன்பின் எந்த நல்ல காரியத்திற்கும் அவள் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறாள். பிள்ளை பிறந்த செய்தி கூறுவது முதல் மற்றொரு திருமண பத்திரிக்கை வைக்க வீட்டிற்கு வரும் சுற்றத்தாருக்கு அவளொரு கெட்ட சகுனம்.
“நல்ல விஷயத்துக்கு கூப்பிட வரப்ப இவள தான் மொத பாக்கணுமா? இந்த வீட்ல இருக்கிறவங்களுக்கு அதுலாம் தெரியாதா?”, என ஆரம்பிக்கும்.
அடுத்ததாக அவள் வீட்டிற்குள்ளேயே அடைந்து கொண்டால், அவளை சீண்டி பார்க்கவெனவே சிலர் அவளை அழைத்து விஷேசத்திற்கு வந்துவிடு என வாய் அழைக்கும் ஆனால் உடல்மொழி நீயெல்லாம் இன்னும் உயிருடன் இருக்கிறாயா என்று கேட்கும்….
ஒரு கோவில், கடைத்தெரு, நண்பர்கள் இல்லம், ஏதேனும் படிக்க வெளியே சென்று வந்தாலும் அவளை அவலாக மென்றுத் தள்ளிவிடும்.
ரோட்டில் போகும் ஒருவன் அவளிடம் வழி கேட்டால் கூட அவனுடன் இவள் ஓடி போனதாக, ஓடி போகப்போவதாக அழகாக கதை கூறுவார்கள்.
அவளுக்கென தனியே மானம், ரோசம், மரியாதை எதுவும் இருக்கவே கூடாது. பொதுவாகவே அவையெதுவும் இருக்க கூடாதென்று தான் பெண் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். இப்படி ஏதாவது ஆகிவிட்டால் அவை எதுவும் இம்மியளவு கூட இருக்கவே கூடாது.
அவள் முதல் வாழ்வை கடந்து வர பெரும்பாடு படுவாள். அதை கடந்துவிடக் கூடாதென சுற்றியுள்ள உற்றமே அவளை மென்மேலும் அதைக் கொண்டு வதைக்கும்.
பெற்றோர் உடன்பிறந்தோருக்கு கூட ஒரு கட்டத்தில் தேவையற்ற பாரமாக, அவமான சின்னமாக பார்க்கப்பட்டு விடுவாள்.
அத்தனை அவமானங்களையும் விழுங்கினால் தான், அந்த வீட்டில் அவள் உணவை விழுங்க முடியும் என்கிற சூழ்நிலை அதி விரைவில் அவளைச் சுற்றி கட்டப்பட்டுவிடும்.
அவளைப் பற்றிய வதந்திகளுக்கு பஞ்சம் இருக்காது. அவளை தலைத்தூக்கவே விடக்கூடாது என்று திட்டமிட்டு வதந்திகளை பரப்புபவர்களும் இருப்பர்.
பொழுதுபோக்கிற்காக பேசுபவர்கள் நாளை வேறொரு பெண்ணின் வாழ்க்கை பிரச்சினை கிடைத்துவிட்டால் மறந்துவிடுவர்.
இத்தனையும் கடந்து தான் துவாரகா இதற்கு மேலும் முடியாது என்று எண்ணி வீட்டைவிட்டு வெளியேறி வந்தாள்.
அவளது நகைகளை அங்கிருந்து வாங்குவதற்குள் பெரும் போராட்டமே நடந்தது. அவள் அனைத்தையும் எடுத்து சென்றுவிட்டாள் என்று கூறிவிட்டனர்.
இவள் தான் செய்து வைத்திருந்த வாய்ஸ் ரெக்கார்ட் காட்டி போலீஸ் வரை சென்று பேசி கேஸ் கொடுத்து, நியூஸ் பேப்பர் வரை கொண்டு செல்வோம் என்று மிரட்டியதால் அவளது உடைமைகள் முழுதாக அவளிடம் வந்து சேர்ந்தது.
ரோட்டரி வக்கீல் மூலமாக தற்காலிக விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடும் முன், அவளுக்கு கட்டப்பட்ட மாங்கல்யத்தை முன்னால் வைத்துவிட்டு தான் கையெழுத்திட்டாள்.
பிரச்சினை ஆரம்பித்து சில நாட்களில் அவளே தாலியை அறுத்து தனியே எடுத்து வைத்துவிட்டாள்.
அதே பூஜையறையில் தான் சில தினங்களுக்கு முன் மறுவீடு வந்த போது ஒன்றாக நின்று கும்பிட்டுட்டனர்.
கையில் வைத்த மருதாணி சாயம் கூட இன்னும் போக வில்லை அவளது திருமண வாழ்வானது முடிந்துவிட்டது.
அந்த மாங்கல்யத்தை கழட்டும் சமயம் உள்ளம் இறுக தொடங்கியது.
அதன்பின் சில மாதங்களுக்கு நீதிமன்றத்திற்கு நடந்தாள். அவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுக்க முடியாமல் போனதில் அவளுக்கு பெரும் வருத்தம் இன்று வரையிலும் உண்டு.
“நான் ஏன் சார் விருப்பமில்லாம கல்யாணம் பண்ணிகிட்டேன்னு சொல்லணும்? நடந்தது என்னவோ அதை சொல்லலாமே?”, வக்கீலிடம் வாதிட்டாள்.
“துவாரகா… உனக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… அப்படி நீ கேஸ் போட்டா இன்னும் பத்து பதினைந்து வருஷமானாலும் கேஸ் முடியாது. உனக்கு டிவோர்ஸ்ம் கிடைக்காது…. உங்கம்மா ஏற்கனவே ஹார்ட் அட்டாக் வந்து படுத்திருக்காங்க…. உங்கப்பாவ பாரு… குடும்பத்துல உள்ளவங்கள கொஞ்சம் யோசிச்சி செய்”, என அறிவுரைக் கூறினார்.
“அப்ப அவங்களுக்கு தண்டனை கிடைக்காதா சார்? எதுக்கு சார் இந்த சட்டம்?”, என இறுகிய குரலில் கேட்டாள்.
“சட்டத்துக்கு ஆதாரம் வேணும். அது உன்னால இங்க நிரூபணம் செய்யவே முடியாது. நீ அவன் மனநிலை சரியில்லாதவன்னு கேஸ் போட்டா, அவன் உன்ன ஒழுக்கம் கெட்டவ-ன்னு கேஸ் போட்டு அவன பரிசோதிக்க விடாம என்ன என்ன பண்ண முடியுமோ அத்தனையும் பண்ணுவான்…. இவங்ககிட்ட மோதி உன் வாழ்க்கைய இதுக்கு மேலையும் நீ வீண் பண்ணிக்கணுமா?”
அவள் தந்தையை பார்த்தாள், வீட்டில் முடியாமல் படுத்துக் கிடக்கும் தாயையும் பார்த்தாள். அண்ணன் அவனது வேலையை விட்டு தன்னுடன் சுற்றிக்கொண்டிருக்கிறான். அவள் ஒருத்திக்காக இத்தனை பேர் இன்னும் பத்து வருடங்களுக்கு அல்லல் படவேண்டும்.
அருகில் இருப்பவர்கள் நன்மைக்காகவும், அவளது மன அமைதிக்காகவும் வக்கீல் கூறிய வாக்கியங்களுக்கு உட்பட்டு கோர்ட்டிலும் அதையே கூறினாள்.
“இறைவா…. நீயே அவங்களுக்கு தண்டனை குடு… உன் கைல தான் எல்லாமே இருக்கு…. என் வாழ்க்கையும்…..”, என மனதிற்குள் நினைத்துக் கொண்டு விவாகரத்துப் பெற்றாள்.
மறுமண பேச்சும் ஆரம்பித்தது. நாற்பது வயதை கடந்தவர்களை திருமணம் செய்து கொடுக்கச் சொல்லி உற்றமே முன்வந்து நின்றது.
“இரண்டாவதுக்கு எல்லாம் சின்ன பசங்க கிடைக்கமாட்டாங்க அருணாச்சலம். அப்படி இப்படி தான் வரும். ஏதாவதொன்னு கட்டிகுடுத்துடு… அவளுக்கு மூத்தவன் இருக்கான்… சின்னதுங்க வரிசையா இருக்குல்ல….”, என உபதேசம் செய்தனர்.
“அதுக்குன்னு இந்த அளவுக்கு வயசு வித்தியாசம் எல்லாம் குடுக்க முடியாது மாமா…. அவ வயசு அதுக்கு இரண்டு மூனு கூட இருந்தா தான் பாக்க முடியும். போன தடவை தப்பு நடந்துபோச்சி…. இன்னொரு தடவை நடக்கக்கூடாது”
“எத்தனை நாளைக்கு டா அவளையே பாத்துட்டு இருப்ப… என் பேரனுக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ண வேண்டாமா?”, என அப்பத்தா கிழவி ஆரம்பித்தது.
“அவனுக்கு ஒன்னும் இப்ப அவசரம் இல்லை…. துவாரகாவுக்கு முடிச்சிட்டு தான் அவனுக்கு பாக்கணும்”
“அவனுக்கு எதுக்கு வெளிய பாக்கணும். அதான் ஏற்கனவே உங்கத்த பேத்திய பேசி தானே வச்சிருக்கு….”
“அதுலாம் சரிபட்டு வராது”
“ஏன் வராது..? நானும் உங்கப்பாவும் வாக்கு குடுத்திருக்கோம். அவ தான் இந்த வீட்டு மருமக-ன்னு ….. நான் உசுரோட இருக்கறப்பவே கல்யாணம் நடக்கணும்….”, என வீட்டில் பிரச்சினை ஆரம்பமானது.
“அப்பா…. நான் வேலைக்கு போறேன்…. “, என அன்றிரவு தந்தையின் முன்னால் வந்து நின்றாள்.
“வேணாம் ராகா….. “
“எனக்கு ஒரு மாற்றம் வேணும் ப்பா…. நான் வேலைக்கு போறேன்… பழைய கம்பெனில வேலை காலி இருக்காம்….”
“சொன்னா கேளு ராகா…. ஏற்கனவே ஊருக்குள்ள உன்னபத்தி ஏகப்பட்ட வதந்தி சுத்துது… என்னை மேல மேல கஷ்டப்படுத்தாம ஒரு கல்யாணம் பண்ணிட்டு எங்கன்னாலும் போ “, எனக் கூறிவிட்டு சென்றார்.
அன்றிரவு தான் அவள் வீட்டை விட்டு வெளியேறியதும்.
அனைத்தும் கூறிவிட்டு அன்பரசியின் முகத்தைப் பார்த்தாள்.
அவர் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது.
“என்ன ஆண்ட்டி இது சின்னபுள்ள மாதிரி அழுதுட்டு….”, என அவர் கண்களைத் துடைத்துவிட்டாள்.
“இத்தனையும் உள்ள வச்சிகிட்டு எப்படி டா அமைதியா இருக்க?”
“என்ன பண்றது ஆண்ட்டி… இது படமோ கதையோ இல்லையே…. நினைச்சா அவங்கள கொல்றதுக்கும், இந்த சமூகத்த திருத்தறதுக்கும்…. இது தான் நிஜம். அது வலி குடுக்கும். அந்த வலிய நான் ஏத்துக்கணும். அப்ப தான் இங்க நான் வாழ முடியும். மனுஷங்க மேல இருந்த நம்பிக்கை போயிரிச்சி ஆண்ட்டி. அதான் யார்கிட்டயும் பேசறதும் இல்ல…. பழகறதும் இல்ல…. சொல்லப்போனா… எப்படி சகஜமா பேசி பழகறதுன்னு நான் மறந்துட்டேன்….”, எனத் தொண்டை அடைக்க அவள் கூறும்போது அவளது மனதின் ரணமும், அதை தாங்கிக்கொள்ளப்படும் சிரமமும் நன்றாகப் புரிந்தது.
“அழுதிடு ராகா….”
“எதுக்கு அழணும் ஆண்ட்டி? நிறைய அழுதாச்சி…. அப்பறம் அதுவும் செய்ய முடியல…. யாராவது ஏதாவது பேசினாலோ, அவமான படுத்தினாலோ அப்ப எல்லாம் அழுகை வந்தது. அவங்க முன்னாடி அழமாட்டேன். நான் அழறத யாரும் பார்க்க கூடாது. அவங்களுக்கு தேவை என் அழுகை அதை நான் குடுக்க முடியாது. அதனால அடக்கிக்குவேன். அப்பறம் தனியா இருக்கறப்ப
அழ முயற்சி செய்வேன். அழுகை வராது… தொண்டை அடைச்சிக்கும். கண்ல மட்டும் கொஞ்சம் தண்ணி வரும்…. அப்பறம் எதையாவது வெறிச்சி பாத்திட்டு இருப்பேன். இப்படியே இருந்தா பைத்தியம் ஆகிடுவேன்னு தான் வேலைக்கு சேரலாம்னு வந்துட்டேன்…. நான் வீட்ட விட்டு வந்தது தப்பு தான். ஆனா எனக்கு கொஞ்சம் வெளி இடம் தேவைபடுது. அங்கயே இருந்தா மூச்சே விடமுடியாத மாதிரி ரொம்ப கஷ்டமா இருக்கு… அதான் சொல்லாம கிளம்பி வந்துட்டேன்”, எனக் கூறிவிட்டு தண்ணீர் குடித்தாள்.
அன்பரசி அவளை அருகே அழைத்து நெஞ்சோடு அணைத்துக்கொண்டார்.