35 – மீள்நுழை நெஞ்சே
இவையனைத்தையும் வெளியே இருந்து வசந்தியும், பத்மினி தேவியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
வசந்தியை அனுப்பிவிட்டு சில நிமிடங்கள் கழிந்தபின் அவர் குரல் கொடுத்தபடி உள்ளே வந்தார்.
“அன்பு… அன்பு…..”
“இங்க இருக்கேன் க்கா… வாங்க….”
“இந்தா ராகிவடை… சூடா போட்டு எடுத்துட்டு வந்தேன். உடனே சாப்பிடு ஆறிட்டா கொஞ்சம் வசக் வசக்னு ஆகிடும்…. நீயும் எடுத்துக்கோ துவாரகா…. “, என அவளுக்கும் கொடுத்தார்.
துவாரகா ஒன்றை எடுத்து சாப்பிட்டதும், “எப்படி இருக்கு துவாரகா?”, எனக் கேட்டார்.
“நல்லா இருக்கு ஆண்ட்டி…”, எனக் கூறி இன்னொன்றை சாப்பிட்டுவிட்டு விகாஷை பார்க்க ஆரம்பித்தாள்.
“அன்பு…. இன்னிக்கு மருதமலை போலாம்னு இருக்கேன். உன்னால வரமுடியுமா? உடம்பு ஒத்துழைக்கும் தானே?”, எனக் கேட்டார்.
“இன்னிக்கா…. கொஞ்சம் சிரமம் தான் க்கா… லேசா ஆபரேஷன் செஞ்ச இடத்துல வலி இருக்கு…. நாளைக்கு இங்க இருக்க ஹாஸ்பிடல் போய் ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு வரணும். இரண்டு நாள் கழிச்சி போலாமா?”
“சரி சரி…. அத நான் மறந்துட்டேன் பாரு… துவாரகா நீ வாயேன்…. நாம போயிட்டு வரலாம்”, என அவளை அழைத்தார்.
“நானா?”, எனத் தயங்கினாள்.
“இன்னிக்கு வீட்டுக்கு தூரமில்லையே?”
“அதுலாம் இல்ல ஆண்ட்டி…. சரி போகலாம்… எத்தனை மணிக்கு கிளம்பணும் ஆண்ட்டி?”
“ஒரு மூனு மணி சுமார் கிளம்பலாம். அங்க போகவே ஒரு மணிநேரம் ஆகும். இன்னிக்கு நடுநாள் தான் கோவில்ல பெருசா கூட்டம் இருக்காது… நைட் சாப்பிட வீட்டுக்கு வந்துடலாம்….”, எனக் கூறினார்.
“சரிங்க ஆண்ட்டி… நான் வரேன்…. நாம மட்டுமா ? அங்கிள், மித்ரா எல்லாம்?”, என ஆரம்பித்து பாதியில் நிறுத்தினாள்.
“அவங்க ரெண்டு பேரும் நைட் தூங்க வீட்டுக்கு வந்தா பெருசு டா… அமுதன் நடுராத்தில தான் வீட்டுக்கு வருவான். கம்பெனி பிஸ்னஸ்னு தான் எப்பவும் அவனுக்கு….”, எனச் சலிப்பாகக் கூறினார்.
“………..”
பதிலேதும் கூறாமல் அவள் அமைதியாக இருப்பதை பத்மினி பார்த்தார். அவர் ஏன் அப்படி பார்க்கிறார் என்று இவள் அன்பரசியைப் பார்த்தாள். அவர் இருவரையும் பார்த்துவிட்டு சிரித்தார்.
“ஏன் சிரிக்கறீங்க ஆண்ட்டி?”, புரியாமல் கேட்டாள்.
“எங்கக்கா அவங்க மனசுல உள்ளத எல்லாம் உன்கிட்ட சொல்றாங்க நீ எந்த ரியாக்ஷனும் காட்டலன்னு உன் மூஞ்ச பார்த்தாங்க… அவங்க ஏன் அப்படி பாக்கறாங்கன்னு நீ என்னை பாக்கற… நீ அப்படி பாத்ததும் எனக்கு சிரிப்பு வந்துரிச்சி ராகா… சாரி….”, எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.
“ஓஓ… சாரி பத்மினி ஆண்ட்டி… நான் என்ன சொல்றதுன்னு தெரியாம தான் அமைதியா இருந்தேன். தப்பா எடுத்துக்காதீங்க”, என உணர்ந்து மன்னிப்புக் கேட்டாள்.
“அட விடு மா…. நீ ஏன் இவ்வளவு இறுக்கமா இருக்க? வாழ்க்கைல கஷ்டம் வரது சகஜம்… அதுக்காக நமக்குள்ள நாம இறுகிகிட்டே போனா மனுஷனா வாழ முடியாது மா…. “
“வாழ்க்கைல கஷ்டம் வரலாம் ஆண்ட்டி… வாழ்க்கையே காணாம போனதுக்கு அப்பறம் என்ன பண்றதுன்னு தான் தெரியல”, என விரக்தி சிரிப்புடன் கூறினாள்.
“உன் வாழ்க்கை காணாம போயிரிச்சின்னு யாரு சொன்னா? உன் வாழ்க்கை எப்பவும் உன் கையில தான் இருக்கு. ஒரு தடவை கல்யாண விஷயத்துல சறுக்கிட்ட அவ்வளவு தான்… மறுபடியும் எந்திரிச்சு நிக்க முடியும்… நீ நிக்கணும்னு முடிவு பண்ணினா போதும் இந்த பிரபஞ்சம் அதுக்குண்டான எல்லா உதவியும் உனக்கு பண்ணும்… வலிய எப்பவும் வலிமையா மாத்த பழகிக்கணும்… உடைஞ்சு போனாலும் மறுபடியும் நம்மல நாம முன்ன விட பலமா உருவாக்கிக்கணும் துவாரகா…. “
“சரிங்க ஆண்ட்டி… இதோ வந்துடறேன்”, என போனை கையில் எடுத்துக்கொண்டு ஆயாசத்துடன் கூறிவிட்டு எழுந்துச் சென்றாள்.
“என்னக்கா அவளையே யோசனையா பாக்கற?”, அன்பரசி பத்மினியிடம் கேட்டார்.
“அவ மனசு தொறந்து பேசணும் அன்பு… அவ கஷ்டத்த, அவ மனநிலையை யாரும் கவனிக்காம விட்டுட்டாங்க… இங்கிருந்து போறதுக்குள்ள அந்த பொண்ணோட மனசுல இருக்க பாரமாவது இறங்கிடணும்”, எனக் கூறிவிட்டு வேறு விஷயத்தைப் பேச ஆரம்பித்தார்.
சிறிது நேரத்தில் குளித்துவிட்டு ஜீன்ஸ் குர்தியில் தயாராகி கீழே வந்தாள் துவாரகா.
“வா ராகா… சாப்பிடலாம்”, என அன்பரசி அழைத்தார்.
வருகிறேன் என தலையசைத்துவிட்டு வசந்தியுடன் உதவியாக சமையலறைக்குள் இருந்து பாத்திரங்கள் எடுத்து வந்து மேஜையில் வைத்தாள்.
“இதுலாம் நீ ஏன் பண்ற? உக்காரு”, என பத்மினி அவளை கைப்பற்றி அமர வைத்தார்.
“இதுல என்ன ஆண்ட்டி இருக்கு…. சும்மா தானே இருக்கேன்… “
“நீ சும்மா இருக்க இங்க வரல … நாளைக்கே ஆபீஸ்ல ஜாயின் பண்றியாம்… அன்பு சொன்னா…. அவ்வளவு அவசரமா இங்க இருந்து பறக்கணும்னு நினைக்கறல்ல…. எங்களை எல்லாம் உனக்கு பிடிக்கலியா என்ன?”, என சற்று முறைப்புடன் கேட்டார்.
“அப்படி இல்ல ஆண்ட்டி…. வேலை சீக்கிரம் முடியற மாதிரி இருக்கு. உங்கள எல்லாம் பிடிக்காம இல்லை. யாரோவான என்னை நீங்க இந்தளவுக்கு கவனிக்கறீங்க… எனக்கு அதுவே சந்தோஷம் தான் “
“அப்பாடா…. நீ நீளமான பேசின்ன முதல் வாக்கியம் இதான் போ… என்ன அன்பு நான் சொன்னது சரியா?”, என மென்னகைப் புரிந்தபடிக் கேட்டார்.
“அவ இன்னமும் நீளமா பேசுவாக்கா… பேச வைங்க…. “, எனச் சிரிப்புடன் கூறிவிட்டு அனைவருக்கும் தண்ணீர் நிரப்பி வைத்துவிட்டு அமர்ந்தார்.
“ஆண்ட்டி….”, என துவாரகா அன்பரசியைப் பார்த்தாள்.
“ஒட்டாமலேயே இருக்காத ராகா…. சொல்லு உன் அண்ணன் கல்யாணத்துக்கு எப்ப போகலாம்னு இருக்க?”
“அதுக்கு இன்னும் ஒரு மாசம் இருக்கே ஆண்ட்டி… அதுவரை நான் இந்தியால இருந்தா பாக்கலாம்…. “
“சரிதான்… நம்மகிட்ட தான் ஒட்டமாட்டேங்கறான்னு பாத்தா சொந்த வீட்லையுமா? “, என பத்மினி சலித்துக்கொண்டார்.
“சூழ்நிலை அப்படி மாறிடிச்சி ஆண்ட்டி…. யாருக்கும் பாரமா இருக்க கூடாதுன்னு நினைக்கறேன்”
“நீ பாரம்னு உன் வீட்ல சொன்னாங்களா?”
“அத சொல்லவேண்டிய அவசியம் இல்ல ஆண்ட்டி…. நீங்களும் பல கஷ்டங்கள கடந்து வந்தவங்கன்னு அன்பு ஆண்ட்டி சொன்னாங்க… சோ உங்களுக்கே தெரியும். கல்யாணமான எல்லாரும் அதை கண்டிப்பா அனுபவிச்சி இருப்பாங்க… என் வயசுலையே நான் சொல்றப்ப உங்க வயசுக்கு நீங்க நிறைய அனுபவப்பட்டு இருப்பீங்க….”
“உண்மை தான். நிறைய அனுபவப்பட்டதால தான் உனக்கு இப்ப சொல்றேன். மனசுல இருக்க இறுக்கத்த தளர்த்து…. உனக்கான வாழ்க்கை உன்கிட்ட தான் இருக்கு… முதல்ல கஷ்டமா தான் இருக்கும். போக போக அத கையாள கத்துப்ப…. “, எனக் கூறிவிட்டு உணவு பரிமாற ஆரம்பித்தார்.
அதன்பின் பத்மினி அவளிடம் எந்த உபதேசமும் கூறவில்லை. பொதுவான விஷயங்களை மட்டும் பேசினர்.
உணவுண்ட பின் பத்மினி தயாராகி வரவும் இருவரும் கோவிலுக்கு கிளம்பினர்.
“நீங்க கார் ஓட்டுவீங்களா ஆண்ட்டி….”, என அவர் ஓட்டுனர் இருக்கையில் அமர்வது கண்டு கேட்டாள்.
“என் புருஷனும் புள்ளையும் வண்டியோட்ட வரணும்னா நான் சமாதிக்கு கூட நேரத்துக்கு போக முடியாது…. என்னெல்லாம் கத்துக்க முடியுமோ அது எல்லாத்தையும் கத்துக்கணும். அதுவும் ஒரு மனுஷனுக்கு வண்டியோட்டறது அடிப்படை தகுதி இன்னிக்கு நிலவரப்படி. நீ பக்கத்துல உக்காரு…”, என அவளை அருகில் அமர வைத்துக்கொண்டு வண்டியைக் கிளப்பினார்.
அவர் லாவகமாக வண்டியோட்டுவது கண்டு துவாரகா ஆச்சரியமாக பார்த்துவிட்டு வெளியே வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“துவாரகா….”
“சொல்லுங்க ஆண்ட்டி….”
“நீ இதுக்கு முன்ன கோயம்புத்தூர் வந்திருக்கியா?”, எனக் கேட்டார்.
“இல்ல ஆண்ட்டி.. இதான் முதல் தடவை…. “
“இங்க முன்ன இன்னும் ஜில்லுன்னு இருக்கும். ஊட்டி மலை இருக்கறதால எப்பவும் வெயில் சூடே தெரியாது. இப்ப ரோடு போடறேன் பாலம் போடறேன்னு முக்கால்வாசி மரத்த வெட்டிட்டானுங்க… இங்கயே இப்ப வெயில் கொளுத்துது… நாம ஒரு தடவை ஊட்டி போலாம்… குன்னூர்ல நம்ம எஸ்டேட் இருக்கு… அங்க இப்ப அமுதன் இயற்கை முறை விவசாயம் செய்ய ஆரம்பிச்சி இருக்கான்… உங்க ஊர்ல விவசாயம் தானே அதிகம்?”
“ஆமா ஆண்ட்டி… ஆனா அப்பாவும் சித்தப்பாவும் ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வச்சி இருக்காங்க. ஊர்ல நிலத்துல விவசாயமும் பாத்துட்டு இருக்காங்க….”
“நீயும் உன் அண்ணன் மட்டும் தானா?”
“ஆமா ஆண்ட்டி…. “
“சித்தப்பா பசங்க என்ன படிக்கறாங்க?”
“அவங்க ஸ்கூல் தான் படிக்கறாங்க… இரண்டு பொண்ணுங்க ஒரு பையன் அவருக்கு…”
“வீட்டுக்கு மூத்த பொண்ணு நீ தான்னு சொல்லு”, எனச் சிரித்தபடி கேட்டார்.
“ஆமா ஆண்ட்டி… “, எனக் கூறிவிட்டு முகம் வாட வெளியே திரும்பிக் கொண்டாள்.
“என்னாச்சி துவாரகா? ஏன் முகம் வாடி போச்சி ?”
“ஒரு வீட்ல வீட்டுக்கு மூத்த பொண்ணா பொறக்கறது எவ்வளவு முக்கியமான ஸ்தானமோ அதே அளவு அவங்க வாழ்க்கையும் நல்ல படியாக அமைஞ்சா தானே அந்த பொண்ணுக்கு அங்க மரியாதை இருக்கு…. “
“வாழ்க்கை எல்லாருக்கும் ஒரே மாதிரி இருக்காது துவாரகா… ஆனா என்ன கஷ்டம் வந்தாலும் அத சமாளிச்சி, இழந்தத விட அதிகமான மரியாதையும், அன்பும் சேர்க்கிறது தான் உனக்கான பரிட்சையே…. “
துவாரகா புரியாமல் அவரைப் பார்த்தாள்.
“ஆமா துவாரகா…. வாழ்க்கை எப்பவும் நமக்கு பரிட்சை வச்சிகிட்டே இருக்கும். எதுல நாம சிறந்தவங்கன்னு நினைக்கிறோமோ அப்ப அதுல ஒரு கடுமையான பரிட்சை வைக்கும். அதுல தேறி நாம வரப்ப நமக்கு அந்த விஷயத்தை பத்தின வேறொரு கோணம் புரிய வரும். நம்மலோட மன தைரியமும், தன்னம்பிக்கையும் எந்தளவு இருக்குன்னு தெரியும்…. இது போலான கஷ்டங்கள் எல்லாமே ஒரு வகையான சுயபரிசோதனை தான்…..”
“புரியல ஆண்ட்டி….”
“இப்ப நீ பண்ணற வேலைல உனக்கு பலமான பகுதி இதுன்னு நீ நினைச்சிட்டு இருப்ப. நீ பண்ற வேலைல அந்த பகுதில மட்டும் ஒரு பெரிய பிரச்சினை வருதுன்னு வச்சிக்கோ… அப்ப நீ என்ன பண்ணுவ?”
“எனக்கு நல்லா தெரிஞ்ச பகுதியா இருக்கறதால அதுல இருக்க எல்லா வழியையும் பிரச்சினைய தீர்க்க முயற்சி பண்ணுவேன்”
“ஆனா நீ உனக்கு தெரிஞ்ச வழிகள்ல மட்டும் முயற்சி பண்ணா அந்த பிரச்சினை தீருமா?”
“அந்த பகுதி நமக்கு நல்லா தெரிஞ்சதா இருக்கறப்ப பிரச்சினை முடிவுக்கு வந்துடுமே….”
“நீ ஒரு இடத்துல பலமா இருக்கன்னு உணர ஆரம்பிக்கறப்போ உனக்கான பரிச்சை தயாராக ஆரம்பிக்கும். நீ எந்த அளவுக்கு அதுல பலசாலின்னு நினைக்கறியோ அந்த அளவுக்கு அந்த பரிட்சையோட கடினத்தன்மை கூடும்…. நீ பலசாலிங்கற எண்ணம் உனக்கு ஒரு மெத்தனம் குடுத்துடும். உனக்கு தெரியாத அளவுக்கு அங்க ஒன்னுமே இருக்காதுன்ற எண்ணமே பிரச்சினையோட கருவ பாக்க விடாது…. சின்ன எழுத்து உன் ப்ரோக்ராம்ல தப்பா இருக்கும் ஆனா அது உன் கண்ணுக்கு தெரியாம உன் மெத்தனம் மறைச்சிடும். அந்த மெத்தனம் இருக்கிறது கூட நீ உன் எல்லா முயற்சிகளும் தோத்து போறப்ப தான் உணர ஆரம்பிப்ப… அந்த மெத்தனத்த நீ உணர்ந்து அதை விலக்கவும் உன் பிரச்சினைக்கான தீர்வு கிடைச்சிடும்… “
“ம்ம்…..”, என யோசித்தாள் தன் வாழ்க்கைத் துணை பற்றிய மெத்தன எண்ணத்தை நினைத்துப் பார்த்தாள்.
“முக்கால்வாசி பிரச்சினை நம்மகிட்ட தான் இருக்கு… நம்மால தான் ஆரம்பிக்குது… நாம நம்மல சரி பண்ண முயற்சி செய்யறப்ப வழிமுறைகள் வரிசைக்கட்டி வரும். அத நாம செயல்படுத்த ஆரம்பிச்சதும் நம்ம பிரச்சினையும் முடிஞ்சிடும்……”
“இப்ப என்ன சொல்ல வரீங்க ஆண்ட்டி?”
“நீ உன் அண்ணன் கல்யாணத்துக்கு போகணும்…. அங்க உன் ஸ்தானத்த யாருக்கும் எதுக்காகவும் விட்டுக் குடுக்க கூடாது…. உன் அப்பா குடும்பத்தை எதிர்கொள்ளணும்… உன் சுயத்தை ஸ்திரமா காட்டணும்”
“ஆனா… நான் அந்த இடத்துல ஒரு அபசகுணமா தான் பார்க்கப்படுவேன் ஆண்ட்டி…. என்னை காயப்படுத்தவும், இருக்க காயத்தை கிளறவும் தான் செய்வாங்க”
“காயப்படுத்த வந்தா தற்காத்துக்க... ஏற்கனவே ஆன காயம் ஆறி இருக்கும்…. அத மறந்துடு….”
“ஆண்ட்டி.…..”
“நம்மள, நம்ம மனச, நம்ம புத்திய சரியா கையாள கத்துகிட்டா எந்த இடத்துலையும் நீ உன்னை தற்காத்துக்கலாம் துவாரகா…. உன் கடந்தகாலத்த விட்டு வெளியே வரணும்னு தான் நிறைய பேர் நினைச்சிட்டு இருப்பாங்க அங்க… உன்னை காயப்படுத்த ரொம்ப சிலர் தான் இருப்பாங்க.. நீ நிமிர்ந்து நின்னாலே போதும் யாரும் உன்கிட்ட வர பயப்படுவாங்க…. எங்க அம்மா ஊரு பக்கம் ஒன்னு சொல்வாங்க….”
‘என்ன என்பது போல பார்த்தாள்…’
“நேரடியா அரியணை ஏறினவன விட, தனக்கான அரியணைய உருவாக்கி ஏறினவன யாரும் அசைச்சிக்க முடியாதும்பாங்க…..”
“நீங்க நேரடியாவே சொல்லிடுங்க ஆண்ட்டி… எனக்கு இப்படி சொன்னா புரியாது”
“நீ உங்கப்பா பாத்து கட்டி வச்சவன் கூட எந்த பிரச்சனையும் இல்லாம வாழ்ந்தா உனக்கான தனி அடையாளமும், மரியாதையும் எப்படி உருவாகும் துவாரகா? நீ இப்ப அடிபட்டு கீழே விழுந்திருக்க ஒருத்தி…. நீயா உன் கை ஊணி எந்திரிச்சி நின்னா தானே உன் சுயம் தெரியும்…?”
“அப்ப இவ்வளவு நாளா சுயம் இல்லைன்னு சொல்றீங்களா?”
“நீயே யோசிச்சி பாரு துவாரகா… உனக்கு இத்தனை நாளா உன் குடும்பம் நண்பர்கள் கூட்டம் எல்லாம் குடுத்த மரியாதை உன்னை பார்த்து மட்டும், உன் அறிவோ திறமையோ குணமோ மட்டும் பாத்து குடுத்திருந்தா, நீ கீழ விழுந்ததும் உன்னைவிட்டு ஓடி இருப்பாங்களா?”
“………………..”
“எல்லாமே உன் அப்பானாலையும், உன் அம்மாவாலையும்…. உன் குடும்பத்து மேல இருந்த மரியாதையால குடுத்தது தான். உன்னை மட்டுமே பார்த்த யாரும் நீ கீழ விழுந்ததும் உன்னை விலக்கி வைக்க மாட்டாங்க…. நீ எழுந்து நில்லுன்னு தான் கூட நிப்பாங்க…..”
“உண்மை தான் ஆண்ட்டி….. நான் இதுவரைக்கும் அந்த ஊர்லையும், குடும்பத்துலையும் கொண்டாடப்பட்டேன்… அது எனக்கானது இல்லன்னு இப்ப தான் புரியுது…..”
“இது உனக்கு மட்டுமில்ல துவாரகா… நம்ம குடும்பங்கள் தெளிவு பண்றதே இல்ல… ஆணோ பெண்ணே அவங்கவங்களுக்கான சுயம் அவங்கவங்க தான் உருவாக்கி வாழணும்… நிறைய பெரியவங்க சுயநலமா யோசிச்சு குழந்தைங்கள சுயமே இல்லாம தான் இப்ப வளத்துட்டு இருக்காங்க. அதுவும் பொண்ணுங்கள திருமண பொருளா மட்டுமே தான் வளக்கறாங்க… இத்தனை குடும்ப அரசியலுக்கு மத்தில இதுலாம் புரிஞ்சிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்….”, எனச் சிரித்தபடிக் கூறினார்.