36 – மீள்நுழை நெஞ்சே
துவாரகா அமைதியாக தன் வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்க ஆரம்பித்தாள். தன்னை கொண்டாடியவர்கள் அனைவருக்கும் ஏதோவொரு தேவை இருந்தது. தன்னிடமோ, தன் தந்தையிடமோ தன்னைக் கொண்டாடுவதாகக் காட்டி பல காரியங்களைச் சாதித்தவர்கள் தான் அதிகம்.
தன் வாழ்க்கைப் பிரச்சினையான பொழுதில் தொலைபேசியில் கூட அழைத்து விசாரிக்காத உற்றங்களை நினைத்தாள். அவர்களின் தேவை முடிந்துவிட்டதோ ? அல்லது அவளது வாழ்க்கை இப்படியானதில் அவர்களின் பங்கும் இருந்ததோ? அது இறைவனுக்கு தான் வெளிச்சம். மொத்தத்தில் எதிர்பார்ப்பில்லாத அன்பினால் அவளை யாரும் அணுகவில்லை, உறவாடவும் இல்லை.
எல்லாமே அவர்களுக்கு ஏதோவொரு கைகூட வேண்டிய காரியங்களை முன்வைத்து, தங்களால் நற்பலன்களை மட்டுமே பெற நடந்த நாடகங்களாக இப்போது தோன்றியது.
மெல்ல விரக்தியாக மென்னகையும் மலர்ந்தது அவளது அதரங்களில்….
பிரச்சினையிலும் தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிட்டுமா என்று அருகில் வந்தவர்கள் தான் அதிகம். அதையும் நினைத்துப் பார்த்தாள்.
“நிஜம் தான் ஆண்ட்டி…. நிஜத்தை புரிஞ்சிக்காமலேயே இத்தனை வருஷம் இருந்துட்டேன்….”, என அவரின் முகம் பார்த்துக் கூறினாள்.
“மெத்தனம் நிஜத்தை பார்க்க விடாது துவாரகா…. அதனால தான் அகங்காரம், கர்வம், ஆணவம் எல்லாம் கண்ணை மறைக்கும்னு சொல்வாங்க….. அதுல முக்கியமான ஒன்னு அன்பு.. அன்பு நம்ம மேல செலுத்தறப்ப நமக்கு எதுவுமே தெரியாது. நம்மல மொத்தமா குருடனா, ஊமையா, பைத்தியமா மாத்திடும். அது குறைஞ்சா தான் கண்ணு தெளிவா தெரியும்…. பல விஷயங்களை புரிஞ்சிக்க முடியும்….”
“அன்பு அனைத்தும் செய்யும்னு சொல்வாங்களே ஆண்ட்டி. நீங்க இப்படி சொல்றீங்க….”
“உண்மை தான். அன்பு நல்லது மட்டும் இல்ல கெட்டதும் செய்யும். தெளிவு குடுக்காத அன்பு நிச்சயமா கெட்டது தான் செய்யும், கெட்ட வழியில தான் கூட்டிட்டு போகும்…. அறிவை ஆராயறது மட்டுமில்ல நம்ம மேல ஒருத்தர் காட்டுற அன்பை கூட ஆராயணும். நம்மலால எதாவது காரியம் ஆகவேண்டியது இருந்தா தான் நிறைய பேர் கிட்டவே வருவாங்க… “
“ம்ம்…. உண்மை தான் ஆண்ட்டி…. நிறைய விஷயங்கள் இப்பதான் புரிய ஆரம்பிக்குது”
“நீ அன்புகிட்ட சொன்ன எல்லாத்தையும் நானும் கேட்டேன் துவாரகா… “
துவாரகா அமைதியா அவரின் முகம் பார்த்தாள். எந்த பதிலும் கூறவில்லை. என்ன கூறுவதென்று அவளுக்கு தெரியவில்லை..
“நீ எடுத்த முடிவு ரொம்ப சரி…. உன் மனசுல அவங்களுக்கு தண்டனை வாங்கி குடுக்க முடியலங்கற வருத்தம் இருக்கு… அதை கர்மா கிட்ட விட்டுடு…. அவங்க செஞ்ச அநீதிக்கு அந்த கர்மாவே அவங்கள தண்டிக்கும். நீ பாக்கற பாக்கியம் இருந்தா பார்ப்ப. அதை கடந்து வந்துடு…. நீ இனி முன்ன இருக்க பாதையை பாரு…. கல்யாணம் மட்டுமே ஒரு பொண்ணுக்கு வாழ்க்கை இல்லை. உனக்கான வாழ்க்கை எதுன்னு நீ தான் கண்டுபிடிக்கணும். எதுல உனக்கு ஆத்மநிறைவு கிடைக்குதோ அதை செய்… அது தான் உன் பாதை”, எனக் கூறிவிட்டு கோவில் பார்க்கிங் உள்ளே சென்றார்.
“ஆண்ட்டி…. அன்பு ஆண்ட்டி சொன்ன மாதிரி நீங்க ரொம்பவும் திடமானவங்க, வித்தியாசமானவங்களும் கூட…. “
“வாழ்க்கையோட உயிர்நாடியை உணர்ந்தவங்க எப்பவும் யாரையும் இதுதான் செய்யணும்னு கட்டாயம் செய்ய மாட்டாங்க மா…. அவங்களுக்கான வாழ்க்கைய அவங்க தான் அமைச்சிக்கணும். இந்த பிரபஞ்சத்துல எல்லாருக்கும் எல்லா உரிமையும் இருக்கு… எதை நீ தேர்ந்தெடுக்கறியோ அது தான் முக்கியம். அது தான் வாழ்க்கையை அமைச்சு கொடுக்கும்….. வா இங்க முருகன் ரொம்ப விஷேசம். பாம்பாட்டி சித்தர் குகை இருக்கு…. வந்து முருகன கும்பிடு அவன் மனசு தெளிய வைப்பான்”, என இருவரும் பூமாலை வாங்கிக்கொண்டு கோவில் படிகளில் ஏற ஆரம்பித்தனர்.
அடுத்த நாள் முதல் துவாரகா அலுவலகம் செல்ல ஆரம்பித்தாள். இத்தனை மாதங்களாக மனிதர்களைக் கண்டாலே ஒதுங்கி இருந்ததால் இப்போது பழக அதிகம் சிரமம் ஏற்பட்டது.
“மிஸ்டர் மதியூரன்…. இந்த டெஸ்டிங் நாளைக்கு மதியத்துக்குள்ள நடக்கணும்…. நீங்க தேவையில்லாம நாளை கடத்திட்டு இருக்கீங்க…. உங்களோட ஷெட்யூல் முதல்ல போட்ட மாதிரியே இனியும் தொடரணும்னு சொல்றது எல்லாம் ப்ராக்டிகலா இனிமேலும் ஒத்து வராது…..”, என அவன் முன் நின்று முகம் பார்த்துக் கூறினாள்.
“மிஸ் துவாரகா…. நான் என்ன பண்ணணும்? எப்ப பண்ணணும்னு நீங்க எதுவும் சொல்ல வேணாம்… என் ப்ரொஜெக்ட் எப்படி கம்ப்ளீட் பண்ணணும்னு எனக்கு தெரியும்…. நீங்க உங்க லிமிட்ல இருந்து பேசினா நல்லது…”, எனப் பல்லைக் கடித்துக்கொண்டுக் கூறினான்.
“மிஸ்டர் மதி… இங்க நான் வந்திருக்கறதே இந்த ப்ரொஜெக்ட் சரியா முடிச்சி கையோட கொண்டு போக தான். நான் என்ன செய்யணும் செய்யக்கூடாதுன்னு நீங்க எனக்கு ஆர்டர் போடக்கூடாது. அபீஸ்யலி நான் தான் உங்க ப்ராஜெக்ட் ஹெட் இப்ப.. சோ டூ வாட் ஐ சே (so do what i say) ….. நீங்க இப்ப போகலாம்”, என அவனை போகச் சொல்லிவிட்டு தனது வேலையில் மூழ்கினாள்.
அவள் அலுவலகம் வந்த ஒரு மாதத்தில் அதுவரை ப்ராஜெக்ட்டில் நடந்த அத்தனை கொளறுபடிகளும் வெளி வந்துவிட்டன. இந்த ப்ராஜெக்ட் டெட்லைன் முடிந்து ஆறு மாதம் ஆன போதும் இன்னும் வேலையை முடிக்காமல் இழுத்துக் கொண்டிருந்தனர்.
மதியூரன் கையில் அடுத்த ப்ராஜெக்ட் வந்தால் தான் இதை முடிப்பேன் என்ற மனகணக்கு போட்டு தான் வேண்டுமென்றே வேலையை இழுத்துக்கொண்டிருந்தான். முடியும் தருவாயில் உள்ள ப்ராஜெக்டை கைவிட முடியாது என்பதால் துவாரகாவை நேரடியாக அங்கே இருந்து வேலையை முடித்துக்கொண்டு வா என்று கூறிவிட்டனர்.
அவளுக்கு நடுவில் சில மாதங்கள் ஏற்பட்ட பிரச்சனைகளினால் முதல் இரண்டு வாரம் அவளுக்கு அங்கு நடப்பதை கிரகிக்கவே நேரம் எடுத்தது.
“Once you lays on a track.. there is no more distraction and disables” என்று கூற்றுக்கு இணங்க அவள் கண் முன்னே அத்தனை செயல்பாடுகளும் வரிசைக்கட்டி வந்து நின்றன.
மதியூரன் ஏதோவொன்றை மனதில் வைத்துக்கொண்டு தான் வேண்டுமென்றே வேலையை தாமதம் செய்கிறான் என்று மூன்றாவது வாரமே உணர்ந்துக் கொண்டாள்.
அதே வாரத்தில் அதுவரை முடிந்திருந்த ப்ராஜெக்ட்டை முழுதாக தன் மேற்பார்வைக்கு கொண்டு வந்து அவளுக்கு கீழ் அந்த டீமை இயங்க வைத்தாள்.
மதியூரன் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று தான் கூறவேண்டும்.
“நீங்க எப்படி இப்படி பண்ணலாம் துவாரகா.. நான் தான் லீட் பண்ணிட்டு இருக்கேனே….”, என்று கேள்வி எழுப்பினான்.
“உங்க கம்பெனி ஆளுங்க தான் இப்பவும் வேலை செய்யறாங்க மிஸ்டர் மதியூரன். எங்களுக்கு வேலை சரியான நேரத்துல முடியணும்…. ஏற்கனவே நீங்க ஆறு மாசம் டிலே பண்ணிட்டீங்க.. இதுக்கு மேல உங்களுக்கு டைம் குடுக்க முடியாது”
“யூ ஆர் ஜஸ்ட் எ கெஸ்ட் ஆஃப் ப்ராஜெக்ட்…. உங்களுக்கு இதபத்தி என்ன தெரியும்? நான் ஒரு வருஷமா இதை கைட் பண்ணி லீட் பண்ணிட்டு இருக்கேன்…. என் வேலைல குறுக்க வராதீங்க….”
“மிஸ்டர் மதியூரன். ஐ ம் நாட் எ கெஸ்ட்…. என் அத்தாரிட்டி என்னனு உங்க மெயிலுக்கு வந்திருக்கும். போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க. இனிமே என் வேலைல நீங்க தலையிட கூடாது. அப்படி செஞ்சா ப்ராஜெக்ட் டிலே வேணும்னே தான் செஞ்சீங்கன்னு சொல்லி கேஸ் போட வேண்டியது வரும்…. நாப்பது நாள்… இந்த ப்ராஜெக்ட் முடிஞ்சி இருக்கணும்….. நோ மோர் டைம் பார் யூ (no more time for you)”, எனக் கறாராகப் பேசியவளைக் கண்டு மதியூரன் தலைகால் புரியாத அளவிற்கு கோபம் கொண்டான்.
அவள் ப்ராஜெக்டை கையில் எடுத்ததும் வேலையும் முன்பு இருந்ததை விட மும்மடங்கு வேகம் எடுத்தது. அடுத்த வாரத்திலேயே டெஸ்டிங் வரை வந்து நின்றது.
அது இன்னுமே பெரிய அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் தான் அங்கிருந்த அனைவருக்கும்.
யாரையும் கசக்கி பிழியவில்லை ஆனால் வேலை மட்டும் அதிகமாக நடந்தது. அவள் அனைவரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்கிய நேர்த்திக் கண்டு, அவளுக்கு கீழ் வேலை செய்த குழு நபர்கள் எல்லோரும் உற்சாகமாக வேலையைச் செய்தனர். தெரியாதவற்றை எல்லாம் சின்ன சின்ன யுக்திகள் மூலம் அவர்களுக்கு புரியவைத்து வேலையைச் செய்ய வைத்தாள்.
டெஸ்டிங் முடிந்துவிட்டால் அடுத்த ஒன்றிரண்டு வாரத்தில் மொத்த ப்ராஜெக்டும் முடிந்துவிடும். அப்படி முடிந்துவிட்டால் அவன் கைக்கு வரவேண்டிய வேறொரு ப்ராஜெக்ட் வராமல் போகும் வாய்ப்பு அதிகமாக இருந்தது. அதனால் டெஸ்டிங்கை இரண்டு வாரம் ஒத்தி வைத்தான்.
அன்று மாலை வரையிலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் போக, சிறிது யோசித்து தன் மேலிடத்தில் தொடர்புக் கொண்டாள். அங்கு கலந்து பேசிவிட்டு மதியூரனுக்கு ஒரு மெயில் அனுப்பிவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டாள் முக்கிய ஆவணங்களோடு.
“நாளைக்கு மதியம் நீங்க செய்யலன்னா நான் மொத்தமா வேற இடத்துக்கு அனுப்பி செஞ்சிக்க வேண்டியது இருக்கும் மதியூரன். யோசிச்சி சொல்லுங்க”, என அச்செய்தி தாங்கி இருந்தது.
“ஷிட் ஷிட்…. இந்த துவாரகா ரொம்ப ஓவரா போறா…. இவள எப்படி தான் தடுத்து நிறுத்தறதுன்னு தெரியல… இந்த ப்ராஜெக்ட் கையில இருந்தா தான் அவன் அந்த ப்ராஜெக்ட் குடுப்பான். இவனோடது இப்ப முடிச்சிட்டா அடுத்து நமக்கு எப்ப கிடைக்கும்னு தெரியாது…. நூறு கோடி ரூபா ப்ராஜெக்ட்… அதுக்காக இத கையில இழுத்து வச்சிட்டு இருக்கேன். அந்த துவாரகா அவளோட சொந்த கம்பெனி மாதிரி இண்டு இடுக்குல இருக்க எல்லா எரர்ஸ்ம் கண்டுபிடிச்சி க்ளீன் பண்ணிட்டா… டெஸ்டிங் போட்டா 90% ரன் ஆக வாய்ப்பு இருக்கு…. அப்படி ஆகிட்டா அடுத்து ஒரே வாரம் தான் முடிச்சிடுவா…. “, என அதிதியிடம் கத்திக் கொண்டிருந்தான்.
“நாம இந்தளவுக்கு டிலே பண்றப்ப அங்க இருந்து யாரும் வருவாங்கன்னு நினைக்கல மதி. இப்ப ஒருத்திய அவங்களே ரெக்ரூட் செஞ்சி அனுப்பிட்டாங்க… அவ வேலைய அவ செய்யறா… அத நாம தடுக்க முடியாது….”
“இடியட்…. அத தடுத்தா தான் நமக்கு பெரிய ப்ராஜெக்ட் கைக்கு வரும்….. அத யோசி….”, என சிகரெட்டை வேக வேகமாக இழுத்துவிட்டு வெறித்தனமாக நடந்தான்.
“மதி… கொஞ்சம் அமைதியா யோசி… வீணா டென்ஷன் ஆகறதால ஒன்னும் ஆகாது…. அல்மோஸ்ட் ப்ராஜெக்ட் முடிஞ்சி போச்சி இதுக்கு மேல இன்னும் ஒரு மாசம் ஹோல்ட் பண்றதுக்கு வாய்ப்பே இல்ல…. வேற எதாவது வழி தேடலாம்….”, அதிதி அவனுக்கு சமாதானம் கூறிக்கொண்டிருந்தாள்.
‘வேற வழி…. வேற வழி…..’ என மனதிற்குள் உருப்போட்டவன் கண்களில் மின்னல் வெட்டியது, உதடும் ஏளனமாக வளைந்தது.