37 – அர்ஜுன நந்தன்
அங்கிருந்த கிளம்பிய அர்ஜூனும் யாத்ராவும் நம்ம பழைய வீட்டுக்கு வந்தாங்க.
வாசல்லயே நந்துவும் செந்திலும் நின்னுட்டு இருந்தாங்க.
“ஹாய் சீனியர் என்ன வாசல்ல நிக்கறீங்க?”, யாத்ரா.
“உன்கூடலாம் இருந்தா நடுரோட்ல தான் நிக்கணும். இங்கயாவது நிக்கறனேன்னு சந்தோஷப்படு. என்ன காரியம் பண்ணிட்டு வந்து இருக்கீங்க ரெண்டு பேரும்?”, செந்தில்.
“காரியமும் பண்ணல கருமாதியும் பண்ணல”, யாத்ரா.
“அந்த ஜாக்சன எதுக்கு இப்ப இங்க தூக்கிட்டு வந்து இருக்கீங்க?”, செந்தில்.
“உள்ள போய் பேசிக்கலாம் வாங்க செந்தில்”, என யாத்ராவின் தோளணைத்து உள்ளே நடந்தான் அர்ஜுன்.
“அவள இவன் அடக்குவான்னு பாத்தா இவனும் கூட சேந்து எல்லாத்தையும் பண்ணிட்டு வந்து நிக்கறான்”, என நரேன் முனுமுனுத்தபடி வந்து அமர்ந்தான்.
“நீ போய் பிரஷ் ஆகிட்டு வா”, அர்ஜுன் யாத்ராவை ரூமிற்கு அனுப்பினான்.
“சீனியர் சாப்பிட எதாவது ரெடி பண்ணி வைங்க வந்துடறோம் . வா அர்ஜுன்”, என அவன் கையையும் இழுத்துக் கொண்டு தன்னறைக்குச் சென்றாள் யாத்ரா.
அந்த சமயம் மேலிருந்து வெளியே வந்த பாலாஜியிடம் ,”பாலாஜி நான் அன்னிக்கு அனுப்பின லிங்க்ல இருந்ததெல்லாம் பிரிண்ட் அவுட் எடுத்து வைங்க. இன்னொரு சிஸ்டம்ல வர்க் பண்ணணும் எல்லாம் ரெடி பண்ணி வைங்க”, யாத்ரா.
“ஓகே மேம். சார் அந்த ரூம் பிரீயா தான் இருக்கு”, என அர்ஜூனைப் பார்த்துக் கூறினான் பாலாஜி.
“பரவால்ல பாலாஜி. என் திங்கஸ்ம் யாத்ரா ரூம்ல தான் இருக்கு”, எனக் கூறி இருவரும் ஒரே அறையில் நுழைந்துக் கொண்டனர்.
அதை பார்த்துக் கொண்டே வந்த பாலாஜி நந்துவிடம் ,”சார் ரெண்டு பேருக்கும் பிக்அப் ஆகிரிச்சா?”, எனக் கேட்டான்.
பாலாஜியை முறைத்தபடி நந்து அவனை அருகில் அழைத்தான். அவன் அருகில் வந்ததும் அவனை குணிய வைத்து முதுகில் சரமாரியாக அடித்தபடி, “நானே ரெண்டும் சேந்து என்ன என்ன குளறுபடி செஞ்சி வச்சி இருக்குதுங்களோன்னு மண்டைய பிச்சிகிட்டு இருக்கேன். சென்னைல கோர்ட்-க்கு போற வழில ஒருத்தன மடக்கி கடத்திட்டு வந்து இருக்காங்க. இன்னும் பல வேலைய சத்தமில்லாம முடிச்சுட்டு இங்கயும் எதையோ பெருசா பிளான் பண்ணி இருக்காங்க. அவங்க பண்ற வேலைல யார் உயிர் எப்ப போகும்னு தெரியாது. இங்க இருந்து கிளம்பறப்ப நமக்கு வேலை இருக்குமான்னும் தெரியாது .உனக்கு அவங்க ரெண்டு பேருக்கும் பிக்அப் ஆச்சா இல்லியான்னு தான் டவுட்…..”.
“சார் சார்….. நான் தெரியாம கேட்டுட்டேன் சார். என்னைய விட்ருங்க. நரேன் சார் காப்பாத்துங்க சார்”, என பாலாஜி அலறினான்.
“விடு நந்து. அவன ஏன் அடிக்கற?”, நரேன் பாலாஜியை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கூறினான்.
“அண்ணா…. நாளைக்கு சிக்கினா என்ன ஆகும்னு தெரியும்ல? அவன் எவனா வேணா இருக்கட்டும். மாஜிஸ்திரேட் நான்பைலபுள் ஆர்டர் குடுத்தவன இவங்க கடத்திட்டு வந்து இருக்காங்க. இதுக்கு அந்த போலீஸ்காரன் வேற உதவி பண்ணி இருக்கான். அந்த யோகி இங்க வந்து இரண்டு நாள் ஆக போகுது. என்ன என்ன நடந்துட்டு இருக்குன்னு தெரியுமா?”, நந்து ஆவேசமாகக் கத்தினான்.
“ப்பாபா…. என்னா சவுண்ட் மிஸ்டர்.முகேஷ் நந்தன் …. சொல்லுங்க என்ன என்ன செஞ்சான் அந்த யோகி?”, எனக் கேட்டபடி யாத்ரா படிகளில் இறங்கி வந்தாள்.
நந்து சொல்ல வாயெடுக்கும் முன் ,” கொஞ்சம் வெயிட் பண்ணுங்க செழியனும் வந்துடட்டும். அப்பறம் நீங்க தான் ரிபீட் மோட்ல ஓட்டணும்”, எனச் சிரித்தபடிக் கூறினாள் யாத்ரா.
“யாத்ரா…..”, செந்தில்.
“செந்தில்….”, என்றபடி அர்ஜூனும் இறங்கிவந்தான்.
“பாத்தியா டா இங்க சத்தம் போட்டா அங்க பதில் சத்தம் வருது”, நரேன் நந்துவிடம் கூறினான்.
“இப்ப சொல்லுங்க”, யாத்ரா கேட்டபடி சோபாவில் அமர்ந்தாள்.
“சந்தனபாண்டியனும் சேரலாதனும் சேந்து அந்த குப்பத்த காலி பண்ண இன்னிக்கு பெரிய கலாட்டா பண்ணிட்டாங்க. நிறைய பேருக்கு பலமான காயம் . ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணவும் அங்க அலோவ் பண்ணல. அந்த கருப்பசாமி எங்க போனான்னு தெரியல”, நந்து.
“இடத்த ரெஜிஸ்டர் பண்ணிட்டாங்களா?”, அர்ஜுன்.
“இல்ல. இல்லீகலா இடத்த காலி பண்ண வைக்க பாக்கறாங்க. இல்லன்னா எல்லாரையும் கொல்றதா பிளான்”, நந்து.
“ஏன் இவ்வளவு அவசரம் இப்ப காட்றாங்க?”, அர்ஜுன்.
“தெரியல. நீங்க விஜயவாடால சொன்னதுக்கும் இப்ப இங்க நடக்கறதுக்கும் ரொம்ப வேறயா இருக்கு. ஒரு மாசத்துல ஆரம்பிக்க வேண்டிய வேலைன்னு சொல்லிட்டு இப்ப ஏன் இவ்வளவு அவசரம்னு தெரியல”, நந்து.
“அந்த அசிஸ்டண்ட் எங்க இருக்கான்?”, யாத்ரா.
“கீழ தான்”, நந்து.
நந்நுவை பார்த்து ,”நீங்க வாங்க செழியன் நீங்களும்”, என கீழே சென்றாள்.
“என்னடா பிளான்?”, என நந்து அர்ஜுன் காதை கடித்தான்.
“எந்த பிளானும் இல்ல டா. நேரத்துக்கு தகுந்தாமாதிரி நடக்கணும் அவ்வளவு தான். ஏதோ பெருசா தப்பு நடக்குது அது என்னனு நாம தெரிஞ்சி ,அத நடக்க விடாம பண்ணணும்”, அர்ஜுன்.
“இந்த ஜாக்சன் விஷயம் தெரிஞ்சதுல இருந்து அந்த சேரலாதன் ஏதேதோ பண்ணிட்டு இருக்கான்”, நந்து.
“அவன் என்ன பண்றான்னு நாமலும் பாத்தரலாம் நந்தன். அவனுங்க ஏதோ விஷயத்துல நம்மகிட்ட லாக் ஆகிட்டாங்க அதனால தான் இப்ப இவ்வளவு அவசரம் படறாங்க. அது என்ன விஷயம்னு நாம கண்டுபிடிச்சிட்டா பிராப்ளம் சால்வ்டு”, யாத்ரா.
“எப்படி கண்டுபிடிக்கறது? இந்த சார்ட் பீரியட்ல நாம எதைன்னு கெஸ் பண்றது?”, நந்து.
“நாம ஏன் கெஸ் பண்ணிட்டு ? இதோ இவன் சொல்வான்”, என அந்த அசிஸ்டண்ட்ஐ காட்டினாள் யாத்ரா.
“இவனா?”, நந்து.
“ஆமா. உன் பேரு என்ன?”, யாத்ரா.
“சலீம்”, அசிஸ்டண்ட்.
“நான் கேட்டப்ப தேவ்ன்னு சொன்ன”, நந்து.
“மொஹமத் சலீம் யாஷ்தேவ்”, அர்ஜுன்.
ஆமாம் என அவன் தலையசைத்தான்.
“பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கு”, நந்து.
“என் அப்பா அம்மா லவ் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்க அதான் இப்படி பேர் வச்சாங்க. எனக்கு இரண்டு மதமும் ஒன்னு தான்”, சலீம்.
“எல்லா மதமும் சக மக்கள் மேலயும், உயிரினத்து மேலயும் அன்பு காட்ட தான் சொல்லுது சலீம். ஆனா நீ செஞ்ச வேலையால எவ்வளவு பிரச்சினை இப்ப நடக்குதுன்னு தெரியுமா?”, யாத்ரா.
“நான் என்னோட வேலைய தானே செஞ்சேன் தப்பா எதுவும் பண்ணலியே”, சலீம்.
“அப்பறம் ஏன் தலைமறைவா இருந்த? அதுவும் இந்த ஊரவிட்டு தூரமா போகாம இங்கயே ஏன் சுத்தி சுத்தி வந்த?”, அர்ஜுன்.
“அவன் எப்படி சொல்வான்? அதான் இன்னொரு சுரங்க பாதைய கண்டுபிடிச்சதுக்கு அந்த யோகி பலமான சன்மானம் குடுத்து இருக்கானே”, யாத்ரா.
“கண்டுபிடிச்சிட்டா மட்டும் போதுமா? பாதை சரியா இருந்தா தானே சரக்க கொண்டு போக வர வசதியா இருக்கும்”, யாத்ரா.
“அதுவும் தான் அந்த இருபது பசங்கள வச்சி பண்ணிட்டானே. அப்பறமும் ஏன் சந்தனபாண்டியன் இவன அடச்சி வைக்கணும்?”, அர்ஜுன்.
“அந்த குப்பத்த காலி பண்ணணும். அதுவும் இல்லாமா சிலபல இல்லீகல் வேலையெல்லாம் பண்ணணும்”, யாத்ரா.
“அந்த பாதைய புதுப்பிக்கறதே இல்லீகல் வேலைக்கு தானே. அப்பறம் என்ன இவனுக்கு தயக்கம்?”, அர்ஜுன்.
“அந்த வேலைகள்ல ஒன்னு இரண்டுல இவன் குடும்பத்துல இருக்கறவங்க பாதிக்கபட்டு இருக்கலாம். இல்லையா வருங்காலத்துல பாதிக்கப்படலாம்”, யாத்ரா.
“அப்படி பாத்தா அதுல முதல்ல பாதிக்கப்பட்ட ஆள் நம்ம சலீம் தம்பி யூசப் ஆனந்த் தான?”, அர்ஜுன்.
“ஆமா. போதை பழக்கத்துக்கு அடிமை ஆகி இப்ப வெளியவும் வரமுடியாம உள்ளவும் போகமுடியாம தன்னை தானே காயபடுத்திட்டு ரணமாகிட்டுல்ல இருக்கான்”, யாத்ரா.
“அப்ப வருங்காலத்துல பாதிக்கப்படப்போற ஆளு யாரு?”, அர்ஜுன்.
“நம்ம சயீதா சத்யபாமா தான். 18 வயசு. கடத்திட்டாங்க. எங்க இருக்கான்னு தெரியல. போலீஸ்கிட்டயும் போக முடியல. முழுசா பத்திரமா இருக்காளா இல்லையா ? பத்திரமா வருவாளா இல்லையான்னு, பல கேள்விகள் ஓடிட்டு இருக்கும். அப்படி தானே சலீம்?”, யாத்ரா.
இவர்கள் பேச்சில் கதறி அழுதவன் ,” என் தங்கச்சிய காப்பாத்தி குடுங்க பிலீஸ்”, எனக் கூறினான்.
“அவனுங்க பிளான் என்னனு உனக்கு நல்லா தெரியும். நீயே சொல்லு நீ கேக்கறது கிடைக்கும்”, யாத்ரா.
அமைதியாக இருந்தவனை பார்த்துவிட்டு ,” இது வேலைக்கு ஆகாது போல வாங்க நாம குப்பத்து ஆளுங்கள பாக்க போலாம். குப்பத்த அவனுங்க காலி பண்ணிட்டானுங்க அடுத்து என்ன நடக்குமோ? எல்லைல ஒரு கப்பல் நிக்குதுன்னு வேற சொல்றாங்க. கப்பல்ல சரக்க அனுப்பிட்டா திரும்ப கிடைக்கவே கிடைக்காது. எந்த நாட்ல எங்க எப்படி சயீதா இருப்பான்னு யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. அவனுக்கே அக்கறை இல்லை நமக்கு என்ன?”, எனக் கூறி நகர்ந்தாள் யாத்ரா.
“நில்லுங்க நில்லுங்க. ப்ளீஸ் என் தங்கச்சிய காப்பாத்துங்க”, சலீம்.
“அப்ப மத்த பொண்ணுங்கள அனுப்பி வச்சிறலாமா?”, அர்ஜுன் கண்கள் சிவக்க கேட்டான்.
அமைதியாக இருந்தவன், “பணத்துக்கு ஆசைபட்டு இப்படி பண்ணிட்டேன். நான் ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல அவங்க திட்டம் என்னனு சொல்லிடறேன்”, சலீம்.
“அதெப்படி டா உங்க வீட்டு பொண்ணுக்கு பிரச்சனைனா மட்டும் உடனே பல்டி அடிச்சி திருந்தறீங்க, மத்த வீட்டு பொண்ணுங்கன்னா உங்களுக்கு பொம்மையா?”, யாத்ரா கேட்டபடி அவனை ஓங்கி அறைந்தாள்.
அவள் அடித்ததில் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது, “இல்ல மேடம் சத்தியமா இந்த கடத்தல் வேலைக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல. சுரங்கபாதை கண்டுபிடிச்சி பொக்கிஷம் இருந்தா எடுக்கலாம்னு தான் நான் வந்தேன். பொக்கிஷம் இருக்கற பாதைய எங்களால கண்டுபிடிக்க முடியல. ஒரு பாதை கடற்கரை போகுதுன்னு தெரிஞ்சது அதை சீரமைக்க சொன்னாங்க. நானும் பணத்துக்கு ஆசைபட்டு என் ஹெட்அ மிரட்டி செய்யவச்சேன். அதுக்கப்பறம் அந்த ஆளு மாட்டின உடனே நான் தப்பிச்சிட்டேன். அதுக்கப்பறம் தான் அவனுங்க பண்ண போற பிஸ்னஸ் பத்தி எனக்கு தெரிய வந்தது. நான் அவங்கள கேக்க போறப்ப என் தங்கச்சிய தூக்கிட்டாங்க. என் தம்பியும் போதை பழக்கத்துக்கு அடிமை ஆகி இருக்கான்னு தெரிஞ்சது. என்ன பண்றதுனு தெரியாம தான் இங்கயே சுத்திட்டு இருந்தேன்”, சலீம்.
“அடேய் ரெண்டு நாளா நான் உனக்கு சோறு போட்டு விசாரிச்சேனே இதுல்லாம் என்கிட்ட ஏன்டா சொல்லல?”, நந்து.
“உங்கமேல எனக்கு நம்பிக்கை வரல சார். அவனுங்க ஆளுங்களோன்னு நினைச்சிட்டேன்”, சலீம்.
“இப்ப மட்டும் எப்படி சொல்ற?”, நந்து.
“நான் சந்தனபாண்டியன் குடோன்ல இருந்தப்ப இந்த மேடம் போட்டோவ வச்சி சந்தனபாண்டியனும் சேரலாதனும் இவங்கள கடத்தி யோகிகிட்ட அனுப்பறதா பேசினாங்க. அத வச்சு தான் இவங்க போலீஸ் இல்லைனா சி.பி.ஐ ஆ இருக்கணும்னு கெஸ் பண்ணேன்”, சலீம்.
“நல்ல கெஸ்ஸிங். இப்பவும் உனக்கு என்மேல நம்பிக்கை வரல அப்படிதானே?”, நந்து.
“இப்ப நம்பறேன் சார்”, சலீம்.
“சரி அந்த பொண்ணுங்கள எங்க வச்சி இருக்காங்க?”, அர்ஜுன்.
“சந்தனபாண்டியன் குடோன்ல வச்சி இருந்தான். இப்ப எங்க இருக்காங்கன்னு தெரியல சார்”, சலீம்.
“ம்ம்…”, அர்ஜுன் திரும்பி நடக்கத் தொடங்கினான்.
“சார் என் தங்கச்சி பத்திரமா கிடைச்சிருவால்ல?”, சலீம்.
“உன்ன….”, என யாத்ரா அவனை மிதிக்க வந்தாள், அவளை தடுத்த அர்ஜுன் ,” எந்த ஒரு தப்பான விஷயத்துக்கு துணை போனாலும் தண்டனை கண்டிப்பா இருக்கு சலீம். அத நீ உணராம தப்பு பண்ணிட்டு இப்ப கலங்கறதால பிரயோஜனம் இல்ல.பணம் அவசியம் தான் அதுவே வாழ்க்கை இல்லை. எல்லா பொண்ணுங்களையும் காப்பாத்த சொல்லி இப்பக்கூட நீ கேக்கல”, எனக் கூறி இருவரையும் அழைத்துக் கொண்டு மேலே வந்தான்.
சலீம் தன் தவறை முழுதாய் உணர்ந்து மனம் நொந்தான். தன் தங்கையைப் போலத் தானே மற்ற பெண்களும். தன் வீட்டு பெண் பாதிக்கபட்டால் தான் ரோசம் வருகிறது. மற்ற வீட்டு பெண்களுக்கு என்ன ஆனால் என்ன? என்ற மனப்பான்மை தான் ஆபத்தின் ஆணிவேர்.
யாத்ரா ஆத்திரத்தில் முன்னே நடந்து மேலே தன்னறைக்கு சென்று அங்கிருந்த பாக்ஸிங் பிராக்டீஸ் பேக்கை குத்திக் கொண்டு இருந்தாள்.
நந்துவை மற்றவர்களுக்கு விளக்கம் தர கூறிவிட்டு யாத்ரா இருக்கும் அறைக்கு சென்றான் அர்ஜுன்.
அவளின் ஆக்ரோசமான அடியில் அந்த பேக் உடையும் அளவுக்கு போய் வந்தது , அவளின் முகம் தீஜ்ஜுவாலை என மின்னியது. பார்வையிலேயே சாம்பலாக்கி விடும் உக்கிரம் தென்பட்டது.
மெல்ல அருகில் சென்ற அர்ஜுன், ” நில்லுங்க செழியன்”.
“யாத்ரா”, அர்ஜுன்.
“கொஞ்ச நேரம் என்னை தனியா விடுங்க. நீங்க கீழ போய் பேசிட்டு இருங்க வந்துடறேன்”, அவன் முகம் பார்க்காமல் கூறினாள் யாத்ரா.
“கோவப்பட இது நேரம் இல்ல”, அர்ஜுன்.
“என்னோட குமுறல் இது. அவனுங்கள பாக்கற நொடி நான் கொல்லாம, பல விஷயங்கள விசாரிக்கற வரைக்குமாது அவனுங்க உயிரோட இருக்கணும். அதுக்கு நான் கொஞ்ச நேரம் இப்படி எதாவது செஞ்சா தான் என்னை கட்டுபடுத்திக்க முடியும்”, யாத்ரா.
“சரி சீக்கிரம் கீழ வா”, என அர்ஜுன் கீழேச் சென்றான்.
“என்னாச்சி அர்ஜுன்?”, செந்தில்.
“கோவத்த அந்த பாக்சிங் பேக்ல காட்டிட்டு இருக்கா”, அர்ஜுன்.
“அவளே வருவா. இல்லன்னா பாக்கற செகண்ட் அவனுங்கள கொண்ணுடுவா”,செந்தில்.
“இதே தான் அவளும் சொன்னா. எத்தனை வருஷமா யாத்ரா கூட இருக்கீங்க செந்தில்?”, அர்ஜுன்.
“6 வருஷமா அவள தெரியும். அவ வர்க் பண்றது 3 மூனு வருஷமா தான்”, செந்தில்.
அர்ஜுன்,” உங்க கிட்ட நிறைய கேக்கணும் போலவே “, என மென்னகைப் புரிந்தான்.
“ம்ம்… சரி அடுத்த மூவ் என்ன?”, நரேன்.
“பாலாஜி அந்த சிஸ்டம் ரெடியா ?”,எனக் கேட்டபடி யாத்ரா சிஸ்டம் இருக்கும் அறை நோக்கிச் சென்றாள்.
“எஸ் மேடம்”,,என பாலாஜியும் பின்னாலேயே ஓடினான்.
சிஸ்டத்தை ஆன் செய்தவள் பல பைல்களை டவுன்லோட் செய்தாள்.
“சீனியர் பரத் எங்க?”யாத்ரா.
“பரிதி ஏதோ வேலை குடுத்தா அத செய்ய போய் இருக்கான்”, செந்தில்.
“சரி. நீங்க காவ்யா ஜுவல்லர்ஸ்ல வச்ச டிவைஸ் ஐ.எம்.இ.ஐ சொல்லுங்க”, யாத்ரா.
செந்தில் தன் பேக்கட்டில் இருந்த கவரை எடுத்து அதில் இருந்த நம்பரைக் கூறினான்.
“பாலாஜி இது அந்த கடையோட சிசி லைவ். இது இப்படியே இருக்கணும். சந்தேகப்படறமாதிரி எதாவது இருந்தா உடனே எங்களுக்கு சொல்லு. அந்த பிரிண்ட் அவுட் பேப்பர்ஸ் எடு”, யாத்ரா.
அதை ஒரு முறை படித்தவள் கண்கள் சிவப்பு ஏற கோபத்தை அடக்கியபடி
பைல் செய்தவள் அர்ஜுனிடம் வந்து,” ஆர்யனை பாத்துட்டு வரேன்”.
“ஜாக்கிரதை”, அர்ஜுன்.
“சீனியர் பைக் கீ”, யாத்ரா.
பைக் சாவி பெற்றுக் கொண்டு அங்கிருந்து கிளம்பினாள். போகும் வழியிலேயே நெடுமாறனை அழைத்து ஆர்யனை தனியறையில் இருத்த உத்திரவிட்டாள்.
பத்து நிமிடத்தில் சென்றவள் ஆர்யனின் முகத்தில் அந்த பேப்பர்கள் அடங்கிய பைலை வீசினாள்.
“என்ன பியூட்டி இது?”, முகத்தில் புன்னகை மாறாமல் கேட்டான் ஆர்யன்.
“படிச்சி பாரு. உனக்கு கீழே எவ்வளவு கேவலமான வேலை நடக்குதுன்னு”, யாத்ரா வார்த்தைகளை கடித்து துப்பினாள்.
அதை எடுத்துப் படித்த ஆர்யனின் கண்கள் இரத்தச் சிவப்பைப் பூசிக்கொண்டது.
“நான் என்ன பண்ணணும்?”, ஆர்யன் கோபத்தை அடக்கிய குரலில் கேட்டான்.
“உன் இஷ்டம். உன் அப்பனுக்கு கொள்ளி போட நீ தயாரா இரு”, எனக் கூறி வெளியேறிச் சென்றாள்.
நெடுமாறனை அழைத்து ஜாக்சனை கவனமாக கண்காணிக்க கூறிவிட்டு காதில் இரகசியமாக கிசுகிசுத்தாள்.
பின் அவளின் முகத்தில் கோபம் குறையாத்தைக் கண்டு நெடுமாறன் ,” என்னாச்சி யாத்ரா கோபமா இருக்க?”.
“ஒன்னும் இல்ல. பல பேர பொதைக்க வேண்டி இருக்கும் தயாரா இரு”,எனக் கூறி அங்கிருந்து கிளம்பினாள்.
மீண்டும் இல்லம் திரும்பியவள்,” சீனியர் சாப்பாடு இருக்கா?”, எனக் கேட்டபடி டைனிங் டேபிளில் அமர்ந்தாள்.
“அதானே பாத்தேன் இன்னும் கேக்கலன்னு . எவ்வளவு நடந்தாலும் சாப்பாடு முக்கியம் நமக்கு”, நரேன் .
“கண்டிப்பா மிஸ்டர் நரேன். நாளைக்கு நீங்க ஒரு இடத்துக்கு போகணும் தயாரா இருங்க காலை 4 மணிக்கு”, யாத்ரா.
“எங்க?”, நரேன்.
“சொன்னா கிளம்பணும் கேள்வி கேக்க கூடாது. செழியன் எல்லாருக்கும் வேலைய சொல்லிட்டீங்க தானே?”,யாத்ரா.
“இனிமே தான் சொல்லணும்”, அர்ஜுன்.
“சீக்கிரம் சொல்லிட்டு வந்து படுங்க. மூனு மணி நேரம் தான் தூக்கம் அதுக்கப்பறம் நினைச்சாலும் முடியாது”, என சாப்பிட்டு முடித்து தன்னறைக்குச் சென்றுவிட்டாள் யாத்ரா.
அர்ஜூனும் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்தவர்களுக்கு திட்டத்தை விவரித்துவிட்டுத் தூங்கச் சென்றான்.
அவன் கூறியதை கேட்ட நரேனும் நந்துவும் அப்படியே உறைந்து நின்றனர்.
“டேய்… இதுங்க இரண்டும் ஏன்டா நம்மல பலி குடுக்க பாக்குதுங்க?”, நரேன்.
“உங்களுக்கு கீழ வேலைக்கு சேந்தேன் பாருங்க எல்லாம் என் தலைஎழுத்து. போய் படுங்க நாளைக்கு தூங்கறப்ப உசுரு இருக்குமா தெரியாது”, என நந்துவும் அங்கிருந்து நகர்ந்தான்.
அப்படி என்ன தான் அர்ஜுன் சொன்னான்?