37 – காற்றின் நுண்ணுறவு
அடுத்த நாள் காலை முதல் பிறைசூடன் வல்லகியின் உடல்நிலை, மனநிலை மற்றும் சில செயல்பாடுகள் என அனைத்தும் ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.
பாலாவும் வல்லகிக்கு முடிந்தவரை உதவிச் செய்தபடி அவளுடனேயே இருந்தாள்.
வல்லகி பாலாவின் மேல் ஒரு கண்ணை எப்போதும் வைத்திருந்தாள். அவளை அவர்கள் பனையக் கைதியாக உபயோகித்துவிடக் கூடாதென மிகவும் விழிப்புடன் இருந்தாள்.
ஏஞ்சல் அவளுக்கு டெக்னாலஜி அறிவை மேலும் மேலும் மெறுகேற்றி வளர்த்துக்கொண்டிருந்தாள்.
ஒரே நாளில் அவளின் செயல்திறமையைக் கண்ட ஏஞ்சல் அசந்து நின்றுவிட்டாள்.
ஏஞ்சலுக்கும் கேட்டிற்கும் பல ஆபரேஷன், பல ஹார்மோன் மாற்றங்கள், செயற்கை உத்வேக முறைகள் என பலவற்றை வருடக்கணக்காகச் செய்துப் பெற்ற அறிவும், நுணுக்கமும், இயற்கையாக வல்லகிக்கு வாய்த்திருப்பதை நினைத்து வியந்துப் போனாள்.
ஆனால் இந்த கூட்டத்தில் சிக்கியதைத் தான் அவளும் விரும்பவில்லை.
“வல்லகியோட பர்மாமென்ஸ் முன்ன விட ஒரு மடங்கு அதிகமாகி இருக்கு பெரியப்பா”, என பாலா உற்சாகமாகக் கூறினாள்.
பிறைசூடன் அதைக் கேட்டுச் சந்தோஷத்திற்கு மாறாக வருத்தமே அடைந்தார்.
“இதனால இப்ப பிரச்சினை அவளுக்கு அதிகம் தான் ஆகும் பாலா….”, என விரக்தியுடன் கூறினார்.
“நமக்கு இல்ல பெரியப்பா அவங்களுக்கு தான் பிரச்சினை”, பாலா அவரின் அருகில் அமர்ந்து பேசத் தொடங்கினாள்.
“என்னம்மா சொல்ற? நாச்சியாவ ஒரு பக்கம் இவங்களே தான் கடத்தி வச்சிருக்காங்க. அங்க நிலவரசி முடியாம இருக்கா… இங்க நாம இருக்கோம். எல்லா பக்கமும் நம்மல அடைச்சி வச்சிருக்காங்க…. எப்படி வல்லகியும் நீயும் இங்கிருந்து தப்பிப்பீங்க? எனக்கு பயமா இருக்குடா”, என உண்மையான வருத்தத்துடன் கூறினார்.
“இந்த திறமைய நாம ஏன் பயன்படுத்திக்ககூடாது பெரியப்பா…? வல்லகி திறமை அவங்களுக்கு மட்டுமில்ல நாமலும் நமக்கு உபயோகப்படுத்திக்கலாம்…. இங்க வந்ததும் ஒருத்தன பாத்தோம்”, என ஜேக்கிடம் உரையாடியதைக் கூறிவிட்டு, “அங்க அவனுங்கள சிக்கவச்சிட்டு நாம தப்பிக்கலாமே…. அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிங்க”, என பாலா அவருக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினாள்.
“அங்க போறதுக்கு தான் வல்லகிய ரெடி பண்ண சொல்றாங்களா? அந்த சுழல்ல வல்லகிக்கும் ஆபத்து தானே… கடல் சுழல்ல மாட்டினா தப்பிக்கறது ரொம்ப கஷ்டம் டா”
“அதுல தப்பிக்கற வழிய நாம யோசிக்கலாம். ஏஞ்சல வச்சி டெக்னாலஜி நாம யூஸ் பண்ணிக்கலாம்”
“உள்ள நம்மலையும் இழுத்துட்டு போயிட்டா என்ன பண்றது?”, எனக் கேட்டபடி ஏஞ்சல் அருகில் வந்து அமர்ந்தாள்.
“உனக்கு எப்படி காது கேட்டுச்சி?”, பாலா அதிர்வுடன் கேட்டாள்.
“எனக்கு காது ரொம்ப நல்லா கேக்கும்…. “
“சரி… நீ சொல்லு…. நாம தப்பிக்க ப்ளான் பண்ணலாம்”, பாலா.
“தப்பிக்கறப்ப இவனுங்க கைல சிக்கினா செத்தோம் . அதையும் நியாபகம் வச்சிக்க”, ஏஞ்சல்.
“அதுல்லாம் போட்ற ப்ளான்ல இருக்கு”, என மூவரும் அமர்ந்துப் பேசிக்கொண்டிருக்கும் போது வல்லகியும் வந்தாள்.
“என்ன குசுகுசுன்னு பேசிட்டு இருக்கீங்க?”
“சும்மா தான்…. அங்க பாரு அந்த வளந்து கெட்டவன் உன்னையவே பாத்துட்டு இருக்கான்”, என ஜேக்கைக் காட்டினாள்.
வல்லகி எழுந்து அவனிடம் சென்றாள்.
“ஹாய் ஜேக்… இங்க என்ன பண்ற?”, எனக் கேட்டாள்.
“நீ இங்க ப்ராக்டீஸ் பண்றதா கேள்விபட்டேன் அதான் என்ன பண்றன்னு பாக்க வந்தேன். அமேசிங் ….. நீ ஸ்பெஷலா எதாவது உன் உடம்புல செஞ்சிகிட்டியா….? இவ்வளவு வேகமும் நுணுக்கமும் ஆச்சரியமா இருக்கு”, என அவளை வியந்தபடிக் கூறினான்.
“நத்திங் …. வா… எங்களோட ஜாயின் பண்ணிக்கறியா?”, எனக் கேட்டாள்.
“கண்டிப்பா..”, என உடன் வந்தான்.
அன்றைய பொழுது அவர்களுக்கு அப்படியே கழிந்தது.
தர்மன் அடுத்த நாள் இரவில் தசாதிபன் சொன்னக் காட்டுப்பகுதிக்கு வந்திருந்தான்.
பகல் இரவு பார்க்காமல் ஓட்டிக் கொண்டு வந்தவன், மறைவான இடத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுற்றிலும் பார்த்தான்.
“தர்மா…. கொஞ்சம் தூங்கு… நாம மூனு மணிக்கு இங்க இருந்து கிளம்பினா போதும்”, எனக் கூறினார்.
“இங்க தூங்கறது சேப் இல்ல சார். வாங்க போற வழில பாத்துக்கலாம்”, என இறங்கி நடக்க ஆரம்பித்தனர்..
“இங்க மிருகங்கள் இருக்குமா சார்?”
“ம்ம்ம்…… இந்தபக்கம் யானை கூட்டம் தான் அதிகம் . நாச்சியா தான் அதுல்லாம் சரியா கவனிச்சு அதுக்கு தகுந்த ஏற்பாடு பண்ணுவா…. “, எனக் கூறியபடி உடன் நடந்தார்.
“என்ன பொருள் எடுக்க போறோம் சார்?”
“ஈட்டி…. கலவையான உலோகத்துல செஞ்சது அது”
“அது எதுக்கு? அத வச்சி என்ன பண்ணப்போறோம்?”
“நாம தப்பிக்க அது உதவியா இருக்கும்…..இங்க பரன் இருக்கு தங்கிக்கலாம். விடிகாலைல மூனு மணிக்கு தான் அந்த பாறை விலகும். அப்ப அதுக்குள்ள புகுந்து இருபது நிமிஷத்துல எடுத்துட்டு வந்துடணும்”, என தர்மனுக்கு விளக்கம் கொடுத்தார்.
“அதுக்கு மேல அந்த பாறை திறக்காதா சார்?”, மனதில் தோன்றிய சந்தேகத்தைக் கேட்டான்.
“திறக்காது…. “, எனக் கூறிவிட்டு அமைதியாகத் தியானத்தில் அமர்ந்தார்.
தர்மதீரனுக்கு வண்டி ஓட்டிய களைப்பு கண்களை சொருகவைத்தது. அவனறியாமல் அமர்ந்த நிலையிலேயே உறங்கினான்.
சிறிது நேரத்தில் கண்விழித்த தசாதிபன் அவனைப் படுக்கவைத்துவிட்டு, பரனிலிருந்து கீழிறங்கி உணவு சேகரித்து வரச் சென்றார்.
சரியாக மூன்று மணிக்கு அவனை எழுப்பினார்.
“தப்பி எழுந்திரி…. வாய் கொப்புளிச்சிட்டு வா… இத சாப்பிடு… “, எனச் சில பழங்களைக் கொடுத்தார்.
“இதுல்லாம் எங்க சார் பறிச்சீங்க? என்னை எழுப்பி இருக்கலாமே”, என அவரிடம் விசாரித்தபடி உட்கொண்டான்.
உண்ட சிறிது நேரத்தில் உடலில் நல்ல வலு ஏறியதாக உணர்ந்தான்.
“சார்… இது என்ன பழம்… ரொம்ப பிரஸ்ஸா இருக்கு… சாப்டதும் நல்லா பீல் ஆகுது ..”, எனக் கேட்டான்.
“நம்ம காடு அறிய பொக்கிஷம் தம்பி. அத நாம சரியா பாதுகாக்கற வரைக்கும் அது நம்மல பாதுகாக்கும்… நிறைய அதிசயங்கள் இதுல நிறைஞ்சி இருக்கு… வெறும் காகிதத்துக்காக அதை நாம விக்கறது தாய விக்கறத விட கேவலயான விஷயம்”, எனக் கூறியபடித் திசைமானியைக் கையில் எடுத்தார்.
சரியாக வடகிழக்குத் திசையைப் பார்த்து, அந்த திக்கில் அரைமணிநேரம் நடந்தனர்.
பாறைகள் கூட்டமாக இருக்கும் பகுதி வந்தது.
“இங்கயே நில்லு தம்பி…. நாலு மணி ஆக எவ்வளவு நேரமிருக்கு சொல்லு”, எனப் பாறைக்கூட்டத்தின் தொடக்கத்திலேயே நிறுத்தினார்.
“இன்னும் பத்து நிமிஷம் இருக்கு சார்”, என மணியைப் பார்த்துக் கூறினான்.
“நல்லா கேட்டுக்க… இதுல ஒரு பாறை இடம்மாறும். அந்த பாறை நகந்ததும் ஒரு வழி தெரியும். அதுக்குள்ள நீ போய் உள்ள இருக்கற ஈட்டியை எடுத்துட்டு உடனே வெளியே வந்திடணும். ஒரு நொடி தாமதிச்சாலும் பாறை நகர ஆரம்பிச்சி வழிய அடைச்சிடும்…. “,என மீண்டும் அவனுக்கு அனைத்தும் எடுத்துக் கூறினார்.
“சரி சார். இருபது நிமிஷம் தானே டைம்”, என தன் வாட்சில் டைமரை பதினைந்து நிமிடத்திற்கு செட் செய்தான்.
“ஆமா…”, எனக் கூறிவிட்டு அவன் நேரக்கணக்கிடல் பார்த்து உள்ளுக்குள் சிரித்தார்.
மணி நான்கை நெருங்கும் சமயம் பாறைகள் உராயும் சத்தம் மெல்ல கேட்க ஆரம்பித்தது.
அவன் நின்றதற்கு இடதுபக்கம் சிறு பாறைக்கூட்டம் இருந்தது. அதில் இடதுபக்க மூலையில் இருந்த பாறை தான் நகர்ந்தது.
இங்கிருந்து அவன் அவ்விடம் செல்லவே பத்து நிமிடம் ஆகும் போல, அத்தனைத் தூரத்தில் இருந்தது அது.
தர்மன் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டுவிட்டு பாறைக்குப் பாறை, தாவித் தாவி ஓடினான். ஐந்து நிமிடத்தில் அந்தப் பாறையை அடைந்தவன் உள்ளே நுழைந்து ஈட்டியைத் தேடினான்.
அந்த பாறைக்குள்ளே ஐம்பது அடி தூரம் நடந்தபின் ஒரு கல் தூண் நட்டநடுவில் இருந்தது.
அதைக் கண்டதும் திறக்கும் மார்க்கத்தை யோசித்தவன், தன் பேண்ட் பாக்கெட்டில் இருந்த சாவியை எடுத்து, மேலே தெரிந்த துவாரத்தில் நுழைத்துத் திருப்பினான்.
மூன்று முறை வலது பக்கமும், இரண்டு முறை இடது பக்கமும் , மீண்டும் ஒரு முறை வலது பக்கமும் திருப்பியதும் , அந்த தூண் தாமரை இதழ்கள் போல கீழே விரிந்தது.
நடுவில் ஒரு உறையுடன் தெரிந்த பொருளைத் தூக்கிக்கொண்டு திரும்பி நடந்தான். இரண்டு நிமிடம் வேகமாக நடந்தும் வாசலை அடையமுடியவில்லை.
நேரம் குறைந்து கொண்டே வந்தது. “சீக்கிரம் வா தர்மா”, என தசாதிபன் வெளியே இருந்துக் கத்தினார்.
“சார் எவ்வளவு நடந்தாலும் தூரம் குறையல….”, என உள்ளிருந்து இவன் கத்தினான்.
“அந்த ஈட்டிய விரி தர்மா…. உறைய அங்கயே போட்று”, எனக் கூறினார்.
உறையை எந்த பக்கம் கழட்டுவதென அவன் ஆராயும் நேரத்தில் பாறை மீண்டும் மூடத் தொடங்கியது.
“சீக்கிரம் தர்மா… பாறை நகருது”, என எச்சரித்தார்.
இரண்டு கையும் உறைக்கு மேலும் கீழும் வைத்து ஒரே நேரத்தில் எதிர் எதிர் பக்கம் திருப்பவும் உறை திறந்தது. ஈட்டியை கையில் பிடித்துக்கொண்டு உறையை வாசல் நோக்கி வீசி, பாறைக்கு நடுவில் குத்திவிட்டு அங்கிருந்து வெளியே ஓடிவந்தான்.
அந்த ஈட்டி உறையை, பாறை தனக்குள் இழுத்துக்கொண்டது.
அதைக் கண்ட தர்மன் பிரமிப்புடன் தசாதிபனைப் பார்க்க அவர் முன்னே நடந்துக்கொண்டிருந்தார்.