38 – அகரநதி
சரண், திலீப், சஞ்சய் மூவரும் சண்டைப் போட்டபடி இருக்க ஒரு பெண் அவர்களை அதட்டவும் மூவரும் தலை நிமிர்ந்து பார்த்தனர்.
செந்தாமரை முகம், மைதீட்டிய விழிகள், அழகான நாசி, ஆரஞ்சு சுளைப் போன்ற அதரங்களில் லிப் க்ளாஸ் போட்டிருந்தாள், திருத்தப்பட்ட புருவம், புருவ மத்தியில் சிறிய கல்வைத்த பொட்டு, அதற்கு மேல் சிறு கீற்றாய் குங்குமம் ,முடியை லேயர் கட் செய்திருப்பாள் போல அடுக்கடுக்காக அலைபாய்ந்தபடி இருந்த கேசத்தை, கல் பதித்த சிறிய கிளிப் நடுவில் போட்டு கூந்தலை விரித்துவிட்டிருந்தாள். அளவான உயரம், சற்றே ஒல்லியான தேகத்தில் அவள் உடுத்தியிடுந்த ஊதா வண்ண புடவையில் மறுமுறை திரும்பி பார்க்கவைக்கும் தோற்றத்தோடு இருந்தாள் அப்பெண்.
“என்ன ஙே ன்னு முளிக்கறீங்க ? ஒழுங்கா சத்தம் போடாம இருங்க …… கோவிலுக்கு வந்தா கூட அமைதியா இருக்கறது இல்ல…. சென்ஸ்லெஸ் பெல்லோஸ்”, என வாய்க்குள் முணுமுணுத்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.
“சார்…. பாத்தீங்களா அந்த பொண்ணு எப்படி திட்டிட்டு போகுது? வாங்க சார் போய் ………”, திலீப்.
“போய் இன்னும் அசிங்கப்பட சொல்றியா ? இதெல்லாமே உன்னால தான்டா. வாயமூடிட்டு உட்காரு”, என சரண் திலீப்பை அடக்கிவிட்டு அந்த பெண்ணை பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தான்.
“யார் இது ? நம்ம ஊரு மாதிரி தெரியலியே….. பாத்தா சிட்டில வளர்ந்த பொண்ணு மாதிரி இருக்கு…… விசாரிப்போம்”, என சரண் தனக்குள் நினைத்துக்கொண்டு விஷேசத்தைக் கவனிக்க ஆரம்பித்தான்.
“எல்லாரும் நன்னா ஷேவிச்சிக்கோங்கோ….. சாமிக்கு திருமாங்கல்யம் ஏறப்போறது…..”, ஐயர் குரல் கொடுக்க அனைவரின் கவனமும் அங்கே சென்றது.
“கெட்டிமேளம் கெட்டிமேளம்…….”, இன்னிசை வாத்தியங்கள் முழங்க தெய்வங்களின் திருக்கல்யாணம் இனிதாக நடந்தேறியது.
திருக்கல்யாணம் நடந்ததும் சரண் அந்த பெண்ணைத் தேடத் துவங்கினான்.
“எங்க போனா? இங்க தானே இருந்தா?”, எனத் தனக்குள் பேசியபடி கோவில் மண்டபத்தில் அங்கும் இங்கும் ஓடி ஓடித் தேடினான் சரண்.
அவன் தீவிரமாக யாரையோ தேடுவது புரிய, அகரனும், மதுரனும் சஞ்சயை அழைத்து விசாரித்தனர்.
“சஞ்சய்…. சரண் யார தேடிட்டு இருக்கான்?”, அகரன்.
“சரண் சார ஒரு பொண்ணு திட்டிட்டா….. அதனால அந்த பொண்ண திருப்பி திட்ட தேடிட்டு இருக்காரு சார்”, திலீப் வந்து சரணைப் போட்டுக் கொடுத்தான்.
“எப்ப திட்டினா? எதுக்கு?”, மதுரன் திலீப்பை அருகில் அழைத்து, தோள் மேலே கைபோட்டபடி விஷயத்தைக் கறக்க முயன்றான்.
சஞ்சய் திலீப்பிற்கு கூறவேண்டாமென செய்கைச் செய்தான். அவன் இவனை பார்த்தால் தானே, மதுரன் அவன் தோள் மேல் கைப்போட்டதும் அனைத்தையும் மறந்து அவன் கேட்காமலே அனைத்து தகவல்களையும் கொடுத்துக்கொண்டு இருந்தான்.
“அது வந்து சார்..……… நானு, சஞ்சய், சரண் சார் மூனு பேரும் ஒன்னா தானே உட்கார்ந்துட்டு இருந்தோம்…. அப்ப நீங்களும் அகரன் சாரும் தேவ் சாரும் உங்க ஆளுங்கள பாத்து ஜொள்ளு விட்டுட்டு இருந்தீங்களா….அத பாத்து சரண் சார் காண்டாகி அவரும் ஒரு பொண்ண கரெக்ட் பண்றோம்னு சொல்ல நான் டவுட் கேட்க அவரும் சஞ்சயும் என்னை அடிக்க , நான் கத்த அப்ப அந்த பொண்ணு வந்து சரண் சார திட்ட….. அதுக்கப்பறம் சாமிக்கு தாலி கட்டப்போறதா பூசாரி சொன்னதும் அமைதியாகிட்டோம். கெட்டிமேளம் முடிஞ்சதும் சரண் சார் அந்த பொண்ண தேடி போறேன்னு சொன்னாரு…. நானும் வரேன்னு சொன்னதுக்கு விட்டுட்டு போயிட்டாரு சார். நீங்களே சொல்லுங்க இது நியாயமா?”, திலீப் வஞ்சனை இல்லாமல் அனைத்தும் கொட்டிவிட்டான்.
சஞ்சய் தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டான்..அகரனும் தேவ்வும் சஞ்சயைப் பிடிக்க, மதுரன் திலீப்பை இழுத்து வந்து சஞ்சய் அருகில் அமர்த்தினான்.
“ஏன்டா நாங்க லவ் பண்றத பாத்து வயித்தெறிச்சல் பட்டதும் இல்லாம, சபதம் வேற எடுக்கறீங்களா? யாருடா அந்த பொண்ணு?”, மதுரனும் தேவ்வும் அவர்களை அடிக்க அகரனும் சிரித்தபடி நடக்கும் கூத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.
“சார் சார்…. இவனும், சரண் சாரும் தான் பேசினாங்க. நான் சைலண்டா வேடிக்கை மட்டும் தான் பாத்தேன். என்னை விட்றுங்க”, சஞ்சய் அடிவாங்கிக் கொண்டே கெஞ்சினான்.
“டேய் நீ தான்டா அந்த பொண்ணு அந்த பக்கம் போகுதுன்னு சரண் சார தூண் மண்டபத்துக்கு அனுப்பி விட்ட”, என மீண்டும் திலீப் சஞ்சயைப் போட்டுக் கொடுத்தான்.
“நீ சைலண்ட் கில்லர்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். யார் அந்த பொண்ணு சொல்லு”, அகரன்.
“அகன்……. “, என அழைத்தபடி நதியாள் அங்கே வந்தாள், உடன் ஸ்டெல்லாவும் மீராவும் பின்னால் வேறொரு பெண்ணுடன் பேசிக்கொண்டே வந்தனர்.
“என்ன நதிமா?”, அகரன் புன்னகை முகமாக கேட்டான்.
“இது யாருன்னு தெரியுதா பாரு?”, எனப் புதிதாக நின்றப் பெண்ணைக் காட்டிக் கேட்டாள்.
அகரனும் அந்தப் பெண்ணைப் பார்த்துவிட்டு இல்லையெனத் தலையசைத்தான்.
“நல்லா பாத்து சொல்லு. உனக்கு நியாபகம் இல்லையா இவள?”, நதியாள்.
“இல்ல நதிமா. யாரு இவங்க?”, அகரன்.
“டேய் அந்த பொண்ணுடா. யாள் கூட வருது. அவ பிரண்டோ?”, திலீப் சஞ்சயின் காதைக் கடிக்க, அது மதுரனின் காதிலும் தேவ்வின் காதிலும் நன்றாக விழுந்தது.
தேவ் அவர்கள் அருகில் வந்து,” இந்த பொண்ணு தானே?”, எனக் கேட்க இருவரும் திருதிருவென விழித்துவிட்டு ஆமெனத் தலையசைத்தனர்.
தேவ் மதுரனிடம் சைகை செய்ய, மதுரன் அகரனின் காதில் கிசுகிசுத்தான்.
அகரனின் முகம் நொடியில் பிரகாசமாகி பின் சாதாரணமாக வைத்துக்கொண்டு நதியாளிடம்,” இவங்க நம்ம ஊர் மாதிரி தெரியலியே நதி. எந்த ஊரு? நம்ம ரிலேட்டீவா?”, எனக் கேட்டான்.
“நம்ம ஸ்கூல் பிரின்ஸி மேடமோட பேத்தி அகன். என் கூட 5த் படிச்சா . அதுக்கப்பறம் வேற ஊருக்கு போயிட்டாங்க. அப்ப அப்ப பேசிப்போம். அப்ப நடந்த ஸ்போர்ட்ஸ் டேல இவ தான் எல்லாத்துலயும் பர்ஸ்ட் ப்ரைஸ் கூட வாங்கினா. உனக்கு நியாபகம் இல்லையா?”, நதியாள்.
“ரொம்ப வருஷம் ஆகுது யாள். அண்ணா மறந்து இருப்பாரு. ஹாய் அண்ணா நான் தாமிரா”, எனக் கைக்கொடுத்தாள் அந்த ஊதா வண்ணப்புடவைக்காரி.
“நைஸ் நேம். சாரி எனக்கு நிஜமா நியாபகம் இல்ல. மேடம் எப்படி இருக்காங்க?”, அகரன்.
“ஷி இஸ் பைன். அவங்களும் வந்து இருக்காங்க. அவங்க ரொம்பவே இரசிச்ச ஊரு இது. தன் வாழ்நாள்ள மிச்ச நாள் இங்க தான் இருக்கணும்னு சொல்லிட்டாங்க, அவங்கள தனியா விட மனசு இல்ல அதான் நானும் அதே ஸ்கூல்ல இப்ப டீச்சரா ஜாயின் பண்ணிட்டு இங்கயே வந்துட்டேன். பாட்டிம்மா உங்கள பத்தி அடிக்கடி சொல்வாங்க. அதுவும் உங்களோட பாண்டிங் சான்ஸ்லெஸ். நேத்து ஊருக்குள்ள வந்ததுல இருந்து உங்க கலாட்டா கல்யாண பேச்சு தான் போயிட்டு இருக்கு. பாட்டிம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. உங்களுக்கு வாழ்த்து சொல்லச் சொன்னாங்க”, எனக் கலகலப்பாகப் பேசினாள் தாமிரா.
“தேங்க்யூ மா. கண்டிப்பாக மேடம் பார்க்க நாங்க வரோம். இங்க வந்து இருக்காங்களா?”, அகரன்.
“இல்லண்ணா…… நான் மட்டும் தான் வந்தேன். அவங்க வரல”, தாமிரா.
“ஓகே ஜாயின் வித் அஸ். இவன் தேவ், இவன் மதுரன், இவங்க இரண்டு பேரும் நதியாள் பிரண்ட்ஸ் சஞ்சய் அண்ட் திலீப்”, என அங்கிருந்தவர்களை அறிமுகப்படுத்தி வைத்தான் அகரன்.
அனைவருக்கும் பொதுவாக வணக்கம் கூறிவிட்டு சஞ்சயும் திலீப்பையும் பார்த்துவிட்டு,” இவங்க கூட இன்னொருத்தர் தொன தொனனு பேசிட்டே இருந்தாரே. அவங்க உங்க பிரண்ட் இல்லயா?”, தாமிரா.
“நான் இல்லாம என் நண்பன் இல்ல”, எனக் கூறியபடி அங்கு வந்து நின்றான் சரண்.
“இவன் சரண் என் பிரதர்”, என நதியாள் சரணை அறிமுகப்படுத்தினாள்.
“ஹேய் இவர தானே நீ எப்பவும் வம்பிலுத்துட்டே இருப்ப ஸ்கூல்ல? எல்லா ஸ்டாப்ஸ்கிட்டயும் திட்டுகூட வாங்குவாரே…. அவர் தான?”, தாமிரா உணர்ச்சி பெருக்கில் சத்தமாகக் கேட்கவும் அனைவரும் வாய்மூடிச் சிரித்தனர்.
“ஏன்மா? உனக்கு என்னை நினைச்சா வேற எதுவும் நினைப்பே வராதா? யார் நீ?”, சரண் சற்றே கோபமாக ஆரம்பித்து அவள் யாரென்று அறியும் நோக்கில் வினா தொடுத்தான்.
“நம்ம ஸ்கூல் பிரின்ஸி மேடமோட பேத்திடா சரணா. தாமிரா இவ பேர். என் பிரண்ட்”, நதியாள் கூறிவிட்டு அங்கிருந்த தூண் இடைவெளியில் அமர்ந்துக் கொண்டாள்.
அவளைத் தொடர்ந்து பெண்கள் மூவரும் வரிசையாய் அமர்ந்துப் பேசத் தொடங்க, ஆண்கள் நால்வரும் அவர்களுக்கு நேராக பின்னால் நின்றுக் கொண்டனர்.
அங்கிருந்த நான்கு ஜோடிகளும் , ஜோடி ஜோடியாக ஒரே நிறத்தில் உடையணிந்து நின்றனர்.
பார்ப்பவர்களுக்கு அவர்கள் அனைவரும் புதுமண தம்பதிகள் என்றே தோன்றும் விதத்தில் தான் அனைவரின் முகத்திலும் சிரிப்பும் சந்தோஷமும் குடிக்கொண்டிருந்தது.
அதைக் கண்ட திலீப் சஞ்சயிடம்,” டேய் மச்சி…. உனக்கு ஏன்டா தங்கச்சி இல்லாம போச்சி? பாரு நாலு பேரும் ஜோடியா நிக்கறாங்க……. நாம மட்டும் சிங்கிளா நிக்கறோம்”, என வருத்தமாகக் கூறினான்.
“முதல்ல டிகிரி முடிக்கற வழிய பாருடா. அவங்க எல்லாரும் செட்டில் ஆகிட்டாங்க …….. நாம? வந்துட்டான் வருத்தபடறதுக்கு….. வா போய் அங்கிள் சொன்ன வேலைய பாக்கலாம்”, என சஞ்சய் அவனை இழுத்துக்கொண்டு அங்கிருந்து பரமசிவம் இருக்கும் இடத்திற்கு சென்றான்.
அந்த நான்கு ஜோடிகளையும் வன்மம் பொங்க நான்கு கண்கள் பார்த்தபடி அவர்களைப் படம்பிடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றது.
“தம்பி அகரா….. புள்ளைய கூட்டிட்டு இங்க வாயா……. “, என மாந்தோப்பு தாத்தா சத்தம் கொடுக்க அனைவரும் அங்கிருந்து ஒன்றாக கிளம்பினர்.
“என்ன தாத்தா?”, அகரன்.
“போய் நீங்க இரண்டு பேரும் கை கால் அலம்பிட்டு பால் குடுச்சிட்டு வாங்க. பின்னாடி தூண் மண்டபத்துல ஹோமம் ஏற்பாடு பண்ணி இருக்கு. உட்கார்ந்தா மூனு மணிநேரம் ஆகும் முடிய. அதுவரை எந்திரிக்க கூடாது”, எனக் கூறி அவர்களை அனுப்பி வைத்தார்.
சந்திரகாந்த் முதல் அனைத்து பெரியவர்களும் அந்த நான்கு ஜோடிகளையும் தான் பார்த்துக் கொண்டிருந்தனர். தேவ்வின் முகத்தில் இருக்கும் சந்தோஷமும் மாற்றமும், நேற்றிலிருந்து கவனித்துக்கொண்டு இருக்கும் மதி தன் மகனின் பார்வை மீராவிடத்திலேயே வட்டமிடுவதைக் கண்டு மென்னகைப் புரிந்தார்.
ராதாவும் சரணின் பார்வை புதிதாக வந்த பெண் மீது படிவதை மனதிற்குள் குறித்துக் கொண்டார். அதை கண்ணணுக்கும் சுட்டிக் காட்டினார்.
சுந்தரம் தாத்தா மதுரனையும் ஸ்டெல்லாவையும் வந்ததில் இருந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
அகரன் நதியாளை மரகதம்மாள் கவனித்தபடி இருந்தார். அவர்கள் இருவருக்குள்ளிருக்கும் அன்னியோன்யமும், அன்பும், திருவிழாவில் இருந்தே கவனித்து வந்தவர் , அகரன் நேற்று தாலி கட்டியதைக் கூட நதியாள் மனதில் வருத்தம் இருந்தாலும் அவனைச் சங்கடப்படுத்தக்கூடாது என்று நடந்து கொண்டிருக்கும் விதம் புரிந்து , தன் பேரனுக்கு இது போல் ஒரு பெண் அமைய வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
தூரத்தில் இருந்தே மரகதம்மாளைக் கவனித்த நதியாள் அகரனோடு அவர் அருகில் வந்து,” என்ன பாட்டி ரொம்ப நேரமா எங்களையே பாத்துட்டு இருக்கீங்க?”, எனக் கேட்டாள்.
“தேவ்வுக்கும் உன்னமாதிரி ஒரு பொண்ணு கிடைக்கணும்னு நினைச்சேன் கண்ணு”, மரகதம்மாள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறினார்.
“என்னை மாதிரியா? ஹாஹா…. பாவம் பாட்டி தேவ். நான் வேணா தேவ்வுக்கு நல்ல பொண்ணா பாக்கவா?”, நதியாள் சிரித்தபடிக் கேட்டாள்.
“சரி பாத்து தான் சொல்லு. உன் தேர்வு எப்பவும் தப்பாகாதுன்னு நான் நம்பறேன்”, மரகதம்மாள்.
“நான் மட்டும் இல்ல…. அகன் கூட பார்க்க ரெடியா இருக்கான். ஆனா நீங்க மாமா அத்தை எல்லாம் ஒத்துப்பிங்களா?”, நதியாள் பூடகமாகக் கேட்டாள்.
“என்ன விஷயம் சொல்லு கண்ணு. நீங்க இரண்டு பேரும் சொன்னா அது சரியா தான் இருக்கும். நீங்க இரண்டு பேருமே எங்க தலைய தொங்கவிடாம காப்பாத்தின தங்கங்களாச்சே”, என நதியாள் அகரன் தலையை வருடிக் கொடுத்தார்.
“சரி. நாங்க சொல்ற பொண்ண உங்க பேரனுக்கு கட்டி தரேன்னு வாக்கு குடுங்க”, நதியாள்.
மரகதம்மாள் கூர்ந்து இருவரையும் கவனித்து விட்டு, தன் மகனையும் மருமகளையும் அருகில் அழைத்தார். “நான், என் மகன், மருமக மூனு பேரும் வாக்கு தரோம் நீங்க சொல்ற பொண்ண தேவ்வுக்கு கட்டி வைப்போம்னு”, எனக் கூற மதியின் முகத்தில் கலவரம் தோன்றியது.
தன் மகனின் முகத்தில் சற்று முன்வரைத் தான் கண்ட சந்தோஷம் அவனுக்கு நிலைக்குமோ இல்லையோவென தாயுள்ளம் பதறியது.
“என்ன அத்தை முகத்துல கலவரம் தெரியுது? ஏன் நாங்க நல்ல பொண்ண பாக்க மாட்டோமா?”, நதியாள் மென்னகைப் புரிந்தபடிக் கேட்டாள்.
“அப்படி இல்ல யாள்குட்டி. கட்டிக்கப்போறவன் சம்மதம் இருக்கணும்ல அதான் யோசிச்சேன்”, மதி கலக்கத்தை மறைத்துச் சமாளித்தார்.
“அதுவும் சரிதான். அகன் தேவ் அ கூப்பிடு அவன்கிட்டயே கேட்டுடலாம்”, நதியாள் கூற அகரன் தேவ்வை அழைத்தான்.
“என்ன யாள்? எதுக்கு கூப்ட? “, தேவ்.
“எனக்கு ஒரு ப்ராமிஸ் பண்ணுவியா?”, நதியாள்.
“ப்ராமிஸ் தானே…..என்னன்னு சொல்லு?”, தேவ்.
“பர்ஸ்ட் பண்ணு அப்பறம் சொல்றேன்”, என நதியாள் கைநீட்டினாள்.
தேவ் சிரித்துக்கொண்டே,” சரி ப்ராமிஸ் …. என்ன விஷயம் சொல்லு”, எனக் கேட்டான்.
“நானும் அகனும் சொல்ற பொண்ண தான் நீ கல்யாணம் பண்ணிப்பன்னு இப்ப நீ ப்ராமிஸ் பண்ணி இருக்க….. சோ நான் கைகாட்ற பொண்ணு தான் உனக்கு லைப் பார்டர். ஓகே?”, என இடியை அவன் தலையில் இறக்கினாள் நதி.
தேவ் மிரண்டு அகரனைப் பார்த்துவிட்டு நதியாளைப் பார்த்தான்.
“என்ன தேவ் ஷாக் ஆகி நிக்கற? கவலைப்படாத உனக்கு ஏத்த பொண்ணா தான் நாங்க பார்ப்போம். பாட்டியே அந்த பொறுப்ப குடுத்து இருக்காங்க எங்களுக்கு. அத சிறப்பா செய்வோம். டோன்ட் பீல் மேன்”, என அகரன் அவனை சகஜமாக்க முயன்றான்.
நதியாள் தேவ்வை பார்த்து தனக்குள் சிரித்துவிட்டு,” அகன் நாம கோவிலுக்கு வரப்ப எதிர்ல ஒரு பொண்ணு போச்சே அது கூட நல்லா இருந்தது. அந்த பொண்ண பத்தி விசாரிக்க சொல்லலாம் வா. டைம் ஆச்சி… நான் காளியண்ணா கிட்ட சொல்லி அனுப்பறேன். நம்ம விருந்துக்குள்ள பொண்ண தேடணும்”, எனக் கூறியபடி இருவரும் அங்கிருந்து நகர்ந்தனர்.
தேவ் முழிபிதுங்க விழித்தபடி தன் தாயைக் கண்டான். மதியும் அவனையே கலக்கத்தோடுப் பார்த்திருந்தார்.
“மதி…. நதியாள் சொல்ற பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு வரணும்னு நினைச்சி தான் வாக்கு குடுத்தேன். உங்க இரண்டு பேருக்கும் ஆட்சேபனை இல்ல தானே?”, மரகதம்மாள்.
“எந்த ஆட்சேபனையும் இல்லம்மா. அவங்க இரண்டு பேருமே நல்ல பொண்ணா தேடுவாங்க. நமக்கு வேலை மிச்சம் மதி. வா போய் சாமி கும்பிட்டு வரலாம்”, என சந்திகாந்த் பதிலளித்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அங்கிருந்துச் சென்றுவிட்டார்.
“தேவ்…. உனக்கு?”, மரகதம்மாள்.
“எனக்கு அவங்க இரண்டு பேர் மேல நம்பிக்கை இருக்கு பாட்டி. நீங்க கவலைபடாதீங்க”, தேவ் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றான்.
தேவ் மீராவை பார்வையால் அவளை குறுகுறுத்தபடி அவஸ்தையுடன் நின்றான்.
தன் மனதில் தோன்றிய காதல் நேற்று தான் தனக்கே உறுதிபட்டது. அதை மீராவிடம் சொல்லும் முன் இப்படி ஒரு சூழ்நிலை, அதுவும் நதியாளின் மூலம் உருவாகும் என்று அவன் சற்றும் நினைக்கவில்லை.
வாக்கு கொடுத்துவிட்டால் செத்தாலும் அதை நிறைவேற்றவேண்டும் என்கிற கட்டுப்பாடு அவன் குடும்பத்தில் உண்டு. பாட்டியுடன் அனைவரும் அவளுக்கு வாக்கு கொடுத்துவிட்டோம். அடுத்து என்ன நடக்கும் என்று எண்ணியபடி மதுரன் அருகில் அமர்ந்தான்.
“என்னடா அகரன் கூப்டான்னு போன…. எதுக்கு கூப்டான்?”, மதுரன்.
“ஒன்னுமில்ல டா பாட்டி கூப்டாங்கன்னு கூப்டான்”, எனக் கூறி அமைதியாகிவிட்டான்.
தேவ் அங்கு சென்று வந்ததில் இருந்து எண்ணம் படிந்த முகத்துடனும், காலையில் இருந்த உற்சாகம் வற்றி போய் இருப்பதை உணர்ந்த மதுரன் அகரனிடம் விசாரித்துக் கொள்ளலாம் என தன் வேலையை கவனித்தான். ( அதான் சைட் அடிக்கறது)
பின் சிறிது நேரத்தில் ஜோசியர் கூறியது போல குறித்த நேரத்தில் ஹோமம் ஆரம்பிக்க நதியாளும், அகரனும் தம்பதி சமேதராக வந்து அமர்ந்தனர்.
இருவரின் ஜோடிப் பொருத்தமும் பெரியவர்களின் நெஞ்சை நிறைக்க, அனைவரும் அவர்களின் வாழ்வு நிறைவாக, சந்தோஷமாக அமைய வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொண்டனர்.
இது இவர்கள் தனியே ஏற்பாடு செய்த ஹோமம் என்பதால் அவ்விடத்தில் அவ்வளவாக கூட்டம் இருக்கவில்லை.
சரண் கைகளில் கேமரா வைத்துக்கொண்டு அங்கிருப்பவர்களை போட்டோ எடுப்பதாக பேர் பண்ணிக் கொண்டு தாமிராவைப் படம்பிடித்துக் கொண்டு இருந்தான்.
மதுரனும் தேவ்வும் கூட எதேச்சையாக அங்கே நிற்பது போல தங்கள் ஜோடிகளுடன் படம்பிடித்துக் கொண்டனர்.
சஞ்சயும் திலீப்பையும் மாந்தோப்பு தாத்தா ஊர் அன்னதான மடத்திற்கு அனுப்பிவிட்டு, மற்ற வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.
சிதம்பரம், கண்ணன், பரமசிவம் மூவரும் அவ்வப்பொழுது இங்கும் அங்கும் எட்டி பார்த்தபடியும், பணிகளை மேற்பார்வை செய்தபடியும் சுற்றிக்கொண்டு இருந்தனர்.
செல்லம்மாள், ராதா, திலகவதி, மதி, மரகதம்மாள், மீனாட்சி, சரோஜாதேவி என பெண்கள் ஒருபக்கம் அமர்ந்து இருந்தனர். சந்திரகாந்த் அங்கே ஊர்காரர் ஒருவருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
மீரா, ஸ்டெல்லா, தாமிரா மூவரும் கதைப் பேசியபடி அங்கு நடப்பதை கவனித்துக்கொண்டு இருந்தனர். ஆனால் மூவரும் தப்பி தவறிக் கூட ஆண்கள் இருக்கும் பக்கம் திரும்பவில்லை.
அதிலேயே புரிந்தது ஆடவர்களுக்கு அவர்களின் மனதில் நம் மேல் சஞ்சலம் இருக்கிறது என……
மனதில் ஏதும் இல்லாதிருந்தால் ஆடவர்களைப் பார்க்க ஏதும் தடுக்காது. மனதில் விருப்பம் என்ற ஒன்று வந்தபின் இல்லாத காரணங்களும், தயக்கமும் வந்து காலங்காலமாய் திடீரென ஒட்டிக் கொள்வது தான் புரியாத புதிர்…..
மீரா ஓரக்கண்ணால் தேவ்வை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க, ஸ்டெல்லா திரும்பாமலே மதுரன் தன்னை தான் பார்க்கிறான் என்று உணர்ந்தாள்.
மதுரனின் பார்வை மாற்றத்தைக் காலையில் கண்டதில் இருந்து ஸ்டெல்லா அவனை முதலில் சந்தித்த பொழுதுகள் முதல் காலைய பார்வை மற்றும் பேச்சின் மாற்றம் உணர்ந்து அமைதி காத்தாள்.
தாமிரா சரண் தன்னிடம் அதிகமாக பேச முயற்சித்தது சற்று முன் தான் என்பதால் அவன் இருந்த பக்கம் திரும்பவே இல்லை.
இப்படியாக அனைவரும் அவரவர் வேலையில் கவனமாக இருக்க, நம் நாயனும் நாயகியும் கர்மசிரத்தையாக ஐயர் கூறுவதைச் செய்துக் கொண்டே இருவரும் ஒருவர் அறியாமல் ஒருவரை இரசித்தபடி இருந்தனர்.
நதியாள் அகரனைக் காலையில் கண்ட நொடியில் அப்படியே விழி எடுக்க முடியாமல் அவனை இரசித்தபடி நின்றுவிட்டாள்.
அவனின் காதல் வழியும் கண்களைக் கண்டு இவள் அகம் குளிர்ந்து நின்றிருக்க, காளையவன் கண்சிமிட்டலில் பெண்ணவள் உள்ளம் பதறிச் சிதறி தடுமாறச் செய்தது.
அவள் மனதை சமன் செய்துக்கொள்ளத்தான், அதற்கு பின் அவனை ஏறிடாமலே கோவில் வந்து இத்தனை நேரமும் கடத்திக்கொண்டு இருந்தாள்.
ஆனாலும் காதல் கொண்ட மனம் தன்னவனை காணச்சொல்லி கட்டளையிட ,மூளை இருக்குமிடம் கருதி அவளை அமைதியாக இருக்கச் சொல்ல என பட்டிமன்றம் நடத்தி , இப்பொழுது கடைக்கண் பார்வையில் தன்னவனைப் பருகிக் கொண்டு இருக்கிறாள் கோதை.
3 மணி நேரம் போனதே தெரியாமல் இருவரும் கால்முட்டிகள் உரச அமர்ந்திருந்தனர்..
வேள்வியின் முன் இருவரும் காதல் தவம் இயற்றிக் கொண்டிருந்தனர். ஹோம பூஜை முடிந்து அனைவருக்கும் ஆரத்தி காட்டி ,பின் ஸ்வாமியை தரிசிக்க அனுப்பி வைக்கப்பட்டனர் இருவரும்.
அகரன் நதியாளின் கைகளைப் பிடித்தபடி அனைத்து சந்நிதானங்களுக்கும் சென்றான்.
“அகன்…. கைய விடேன்…கூட தானே நடந்து வரேன்”, நதியாள் கையை இழுத்தாள்.
“ம்ஹூம்…. விடமாட்டேன் நதிமா. இப்பவும், எப்பவும்……… “, அகரன் தீவிரமான குரலில் கூறினான்.
“நான் எங்க போகப்போறேன்? எல்லாரும் பாக்கறாங்க பாரு. விடு”, நதியாள்.
“பயமா இருக்கு நதிமா…. உன்னை இழந்திடுவேனோன்னு”, அகரன்.
“அகன்….ஏன் இப்படி பேசற? அதான் உனக்கே உனக்குன்னு லைசன்ஸ் நீயாவே போட்டுட்டியே”, நதியாள்.
“…………………..”, அகரன் நதியாளின் கண்களைப் பார்த்தபடி நின்றுவிட்டான்.
அவனின் முகம் குழப்பத்தில் இருப்பதைக் கண்ட நதி அங்கே அவனை உட்கார வைத்து, அவன் முகம் உயர்த்தி,” என்னாச்சி? ஏன் இப்படி பேசற அகன்?”, எனக் கேட்டாள்.
“பயமா இருக்கு நதிமா….. நீ என்னை விட்டு எங்கயும் போகமாட்டன்னு சத்தியம் பண்ணு”, அகரன்.
“ஏய் … என்ன இது சின்னபுள்ள மாதிரி பேசற. இந்த நதி உன்னை விட்டு எங்கயும் போகமாட்டா. விடாது கருப்புங்கற மாதிரி உன்னை துறத்தி வந்துட்டே தான் இருப்பேன். ஏன் இவ்வளவு அப்செட்டா பேசற? என்ன நடந்தது?”, நதியாள் அவனின் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.
“ஒன்னும்மில்ல…..”, என அவளின் வயிற்றில் தலைவைத்து அவளைக் கட்டிக்கொண்டான்.
அவனின் செயலில் கூச்சமும் குழப்பமும் அடைந்தவள், அவனைப் பேசி பேசி தன்னை விடுவித்துக்கொண்டு, ஸ்வாமி தரிசனம் முடித்து வீட்டில் சிறிது நேரம் ஓய்வெடுப்பதாகக் கூறி அவனையும் அழைத்துச் சென்றாள்.
“இங்க வா கண்ணு….”, என மீனாட்சி பாட்டியும் சரோஜா பாட்டியும் அவளை அருகில் அழைத்தனர்.
“என்ன பாட்டி?”, நதியாள்.
“இரண்டு பேரும் தனி தனியா தான் இருக்கோணும். நீங்க தனியா போகாம சிநேகித புள்ளைங்களையும் கூட்டிட்டு போ…. கொஞ்ச நேரத்துல நாங்களும் வந்துடறோம். அவன் முகமே சரியில்லை. நான் வந்து பேசிக்கறேன். நீ தனியா அவன் ரூமுக்கு போகாத. சரியா?”, மீனாட்சி.
“மீனு மீனு….. அத உன் பேரன்கிட்ட சொல்லு. நானா வம்படியா எல்லாத்தையும் பண்ணேன்? நான் தூங்கப் போறேன். ஆறுமாசம் உன் பேரன நீயே பிடிச்சி வச்சிக்க. நான் நாளைக்கு சென்னை கிளம்பறேன். போய் பேக் பண்ணணும். புதன்கிழமை வந்திடறேன். ஓக்கேவா?”, நதியாள் மீனாட்சி பாட்டியின் கன்னத்தைக் கிள்ளியபடிக் கூறினாள்.
“ஊருக்கா? எதுக்கு? அது நான் வீட்ல வந்து பேசிக்கறேன். இப்ப கூட்டாளிப் புள்ளைங்கள கூட்டிட்டு போ…..”, மீனாட்சி பாட்டி.
“ஊருக்கு போகாம நான் எப்படி பரிட்சை எழுதறதாம்? டிகிரி வாங்கணும்ல…..வீட்ல நீ எனக்கு சப்போர்ட் பண்ணணும் இல்லைன்னா அவ்வளவு தான் பாத்துக்க மீனு”, என விளையாட்டாக மிரட்டிவிட்டு தன் தோழிகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள் நதி.
அவர்களிடமும் மீனாட்சி பாட்டி கூறி அனுப்ப , அகரன் காதில் அதை ஏற்றிக்கொண்டால் தானே.?
வீடு வந்ததும் நதியாளை இழுத்துக்கொண்டு தன் அறைக்குச் சென்று தாள் போட்டுக் கொண்டான்.
“டேய் அகர்….. கதவை தொறடா….. அவள வெளிய விடு. பாட்டி தாத்தா வந்தா திட்டுவாங்க டா”, மதுரன் கதவைத் தட்டினான்.
“என் பொண்டாட்டி கூட என் ரூம்ல இருக்கேன். யாரும் டிஸ்டர்ப் பண்ணாதீங்க…. “, உள்ளிருந்து கத்தினான்.
“டேய் அகரா…… என்னாச்சி? முதல்ல கதவ தொற….”, தேவ்.
கதவை திறந்து, “தேவ்…. ஒன்னும்மில்ல….. அகன் என்கூட பேசணும்னு தான் கூட்டிட்டு வந்து இருக்கான். நான் பாத்துக்கறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க. வந்துடறோம்”, என நதியாள் பதில் கூறி அனுப்பி வைத்தாள்.
நதிக்கு பின்னால் நின்ற அகரனின் முக குழப்பம் பார்த்து தேவ்வும் மதுரனும் அங்கிருந்துச் சென்றனர்.
கதவை மூடியதும் அகரன் நதியாளைப் பின்னிருந்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான்.
அவன் அணைப்பின் இறுக்கம் உடல் வலி கொண்டாலும் அவனின் கலக்கம் தீர்க்கும் மார்க்கம் அறிய முற்பட்டாள் நதி.
“என்னாச்சி அகன்? ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க? என்கிட்ட சொல்லு”, நதியாள் மென்மையாகக் கேட்டபடி மெல்லத் திரும்பினாள் அவன் முகம் நோக்கி.
அகரன் அமைதியாக இருக்க அவன் அணைப்பின் இறுக்கம் மட்டும் தளரவில்லை.
அவளை முழுதாக தன்னுள் புதைத்துக்கொள்ள நினைத்து அத்தனை இறுக்கம் காட்டினானோ ஏனோ?
தாயைப் பிரிந்த குழந்தை பலநாள் தவித்தபின் மீண்டும் தாயைக் கண்டால் கட்டிக்கொள்ளும் தவிப்பு தான் அதில் அவள் உணர்ந்தாள்.
பத்து நிமிடமாக அவனை விலக்கமுயன்று முடியாமல் திணறினாள் நதி.
“அகன்….. வலிக்குது டா. ப்ளீஸ்…. கொஞ்சம் உட்காரு பேசலாம். நான் எங்கயும் போகல…. “, எனக் கஷ்டப்பட்டுத் தன்னை விடுவித்துக்கொண்டு, அவனை சோபாவில் அமரவைத்து தானும் அவன் அருகில் அமர முயல, அவன் அவளை இழுத்ததும் அவனின் மடியில் அமர்ந்திருந்தாள்.
அவளின் இடைசுற்றித் தனக்கு நெருக்கமாக அமரவைத்துக்கொண்டு, அவள் தோள்களில் தலைவைத்து அவளின் வாசனையை உணர்ந்தபடிக் கண்மூடி அமர்ந்துவிட்டான்.
அகரனின் செயல் அவளுக்கு குழப்பத்தையும் கேள்விகளையும் வரிசைப்படுத்த , இவன் பேசும் நிலையிலேயே இல்லையே எப்படி அறிவது என்ற யோசனையில் , அவன் தலைக் கோதி தோள் அணைத்துத் தட்டிக்கொடுத்தாள் தாயாக மாறி.
இந்த நொடி…….. இந்த தருணம்…….. அப்படியே நின்றிருந்தால் எத்தனை இன்பமாக இருக்கும் என்று அகரனும் நதியாளும் நினைத்து இருவரும் ஒருவரை ஒருவர் கண்களால் தழுவியபடி சுயநிலை இழந்து பார்த்தபடி இருந்தனர்.
மனதின் ஓட்டத்தில் இன்ப பெருக்கு ஊற்றாய் பெருக அகரன் அவளின் வதனம் ஏந்தி அவளை அணுஅணுவாக இரசித்துக்கொண்டு இருந்தான்.
வட்ட முகம், சற்றே அகன்ற நெற்றி, அதில் முத்தாய்ப்பாக நடுவகிட்டில் அவள் வைத்திருந்த குங்குமம், வில்லென வளைந்த புருவங்களின் மத்தியில் வட்ட வடிவ பொட்டிட்டு அதற்கு கீழும் குங்குமம் மேலே திருநீற்று கீற்றிட்டிருந்தாள், கூரான நாசி, பட்டுபோன்ற கன்னம், ஈரமான இதழ்கள் என அவனின் கண்கள் ஊர்வலம் நடத்தியது.
இறுதியில் அவளின் இதழில் மையம் கொண்டு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவளிதழில் தன்னிதழ் பொறுத்தி விட்டான்.
நதியாள் அதிர்ந்து அவனை விலக்க முயன்று தோற்று பின் அவன் அன்பில் கரையத் தொடங்கி இருந்தாள்.
எத்தனை நொடிகள்………
எத்தனை நிமிடம் நீடித்ததோ தெரியவில்லை …. அகரன் சற்றே தன் தாகம் தணிந்ததாக உணர்ந்தபின் அவளை விடுவித்தான்.
அவள் அவனையே அன்பொழுக பார்த்திருக்க, அவன் அவளின் முன்நெற்றியில் முத்தம் கொடுத்து அவளை மென்மையாக அணைத்தபடி பேசத் தொடங்கினான்.
“நான் இன்னிக்கு ஜோசியரும், தாத்தாவும் பேசினத கேட்டேன் நதிமா….. நமக்கு ஏதோ கண்டம் இருக்காம். அதுவும் உனக்கு தான் பெருசா நடக்க வாய்ப்பு அதிகமாம், நான் உனக்கு தாலி கட்டினதால. அப்பறம் ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க. அது கேட்டதுல இருந்து என் மனசே சரியில்லை…. அதான் இப்படி நடந்துட்டேன்….. சாரி டா”, அகரன்.
அகரனின் தலைக் கோதியபடி நதி,” அகன்….. என்ன நடக்கனும்னு இருக்கோ அது தான் நடக்கும். நான் உன்கூட நூறு வருஷம் வாழ்வேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. கண்டிப்பா நாம வாழ்வோம். அந்த கண்டம் போறதுக்கு தான் இன்னிக்கு ஹோமம் நடத்தினாங்க. இது எனக்கு போன வாரமே தெரியும். இதுக்கு ஏன் இவ்வளவு பயந்த? நீ என்ன சின்ன குழந்தையா?”, நதியாள் பொறுமையாக விளக்கம் கூறினாள்.
“உன் விஷயத்துல நான் இப்படி தான் நதிமா. உன்னை எக்காரணம் கொண்டும் இழக்க நான் தயாரா இல்லை. ஐ லவ் யூ”, அகரன் அவளை மீண்டும் இறுக்கி அணைத்துக்கொண்டான்.
“எனக்கு ஒன்னும் ஆகாது டா. விடு…. நீ இப்படியே என்னை பேசி பேசி ஒரு வழி பண்ணிடுவ போல. எல்லாரும் வரதுக்கு முன்ன நான் கீழ போறேன். மீனு வந்து பார்த்தா திட்டும்”, என அவனிடம் இருந்து எழ முயன்றாள்.
“நதி இங்கயே இரேன் இன்னும் கொஞ்ச நேரம் “, அகரன் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான்.
“இங்க தான்டா இருக்கேன். இப்ப விடு. நான் ட்ரஸ் சேன்ஞ் பண்ணிட்டு வரேன் மாடிக்கு போலாம் எல்லாரும். குட் பாய்ல விடு டா”, நதியாள் சிறுகுழந்தையை கொஞ்சுவது போல கொஞ்சினாள்.
“நதி ….. ஐ லவ் யூ”, அகரன்.
“சரி. இப்ப என்னை விடு. நான் சீக்கிரம் வரேன்”, நதியாள்.
“நதி……..”, அகரன் ஏக்கமாக அழைத்தான்.
“அகன்…… “, நதியாள் குரலில் கடுமையை வரவழைத்துக்கொண்டு முறைத்தாள்.
“சரி போ…”, அகரன் முகத்தைத் திருப்பிக்கொண்டு கோபமாக இருப்பதைப் போலக் காட்டினான்.
“சரி போறேன்… டாடா”, எனக் கூறி நதியாள் கதவை திறந்துக் கொண்டு கீழே ஓடிவிட்டாள்.
அகரன் அவளைப் பிடிக்க வந்து அவள் செல்வதை சிரிப்புடனும், காதலுடனும் பார்த்துக் கொண்டே அவளை நோக்கி பறக்கும் முத்தத்தை கொடுக்க, நதியாளும் ஓர் முத்தத்தை பறக்கவிட, அதைக் கண்ட மதுரன் மற்றும் தேவ்வின் காதில் புகை வர… அதைக் கண்டு ஸ்டெல்லாவும் மீராவும் சிரிக்க….
அவர்களின் காதல் அற்புதமான சூழ்நிலையை உருவாக்கியது…..
காதல் என்றாலே அற்புதம் தானே?