38 – ருத்ராதித்யன்
காசியின் நான்கடி வீதிகளில் நுழைந்து ரன்வீர் மானசரோவர் படித்துறைக்கு அருகில் வந்தான்.
அந்த குறுகலான சந்தில் இரண்டு சக்கர வாகனங்களின் நெரிசல் தான் பெரும் தலைவலியாக இருந்தது. இதிலும் வண்டியில் மூட்டைகளை கட்டிக்கொண்டு மக்கள் சென்று கொண்டிருந்தனர்.
நடப்பவர்களுக்கே எதிரெதிர் ஆட்கள் வந்தால் ஒருவர் நின்றால் தான் மற்றவர் செல்லமுடியும். இதிலும் வண்டியை ஓட்டுபவர்கள் திறமைசாலிகள் தான் அதுவும் காலை கீழே ஊன்றாமல்.
மானசரோவர் படித்துறையில் இறங்கி கங்கையின் பிரவாகத்தை கண்களில் நிறைத்துக்கொண்டான் ரன்வீர்.
முதல் நாள் பெய்த மழையினால் கங்கை பெரும் வேகத்துடன் ஓடிக்கொண்டிருந்தாள். செந்நிறமாக காட்சியளிக்கும் கங்கைநதியின் நடுவே ஒரு சொகுசு படகில் பத்துபேர் இருவரை பிடித்து அமரவைக்க போராடுவது ரன்வீரின் கண்களுக்கு தெளிவாகத் தெரிந்தது.
உடனே பைனாகுலர் வைத்து ஆட்களை கவனித்தான். ஆம்… அது கதிர் தான்… அவர் சர்வேஸ்வரன்…. கிடைத்துவிட்டார்கள்….
ரன்வீர் கைகள் அழைபேசியில் திலக்கை அழைக்க முற்படும்போது, பைனாகுலரில் திலக்கின் முகமும் தெரிந்தது. அவன் கதிரை அடித்துக் கொண்டிருந்தான்.
“அடப்பாவி…. இவன்தான் கருப்பாடா? இப்ப என்ன பண்றது? நந்தன் சாருக்கு கூப்பிடலாம் …”, என மனதில் நினைத்துக்கொண்டு நந்தனுக்கு அழைத்தான்.
“சார் சரக்கு கிடைச்சிரிச்சி… கருப்பாடும் கிடைச்சிரிச்சி… “
“குட்… சரக்கு உன் கைக்கு வந்துரிச்சா?”
“இல்ல சார்…. கருப்பாடு கைல இருக்கு… ஆனா என் கண் பார்வைல தான் வச்சிருக்கேன்”
“நல்லது… உன் கண்ல இருந்து தப்பிக்க கூடாது. நான் வந்துட்டு இருக்கேன். லொகேஷன் அனுப்பு… கருப்பாடும் சரக்கும் உயிரோட வேணும்..”, எனக் கூறிவிட்டு வாரணாசி ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பினான் நந்தன்.
ரன்வீர் பைனாகுலரில் அந்த சொகுசு படகை கவனித்தபடியே இன்னொரு படகை பிடித்து அதை தொடர்ந்து செல்ல தொடங்கினான்.
ரன்வீர் தன் உருவ அடையாளத்தை மாற்றும் விதமாக பரதேசிகள் போல காவி உடை தரித்து கழுத்தில் மணிமாலைகளும், முகம் முழுக்க விபூதியும் பூசிக்கொண்டு படகிலேயே தயாரானான். காசியில் இதுபோலான பரதேசி கோலத்தில் பலரும் உலாவுவதால் யாருக்கும் சந்தேகமும் ஏற்படாது, ஆனால் படகோட்டி அவனை கவனித்துக்கொண்டு இருந்தான், அவனுக்கான பதிலாக சில ஐநூறு ரூபாய் தாள்களை கொடுத்துவிட்டு அந்த சொகுசு படகை பின்தொடர கூறினான்.
திலக் கங்கையின் எதிர்கரையில் இறங்கினான். கதிரையும், சர்வேஸ்வரனையும் கயிறுகள் கொண்டு பினைத்தபடியே இழுத்துச் சென்று ஒரு வேனில் ஏற்றினான்.
ரன்வீர் அந்த வேனை பின்தொடர கரையில் நின்றிருந்த ஒரு பைக்கை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தான்.
இப்போது அவன் இருக்கும் இடத்தை நந்தனுக்கு தகவல் கொடுத்துவிட்டு, திலக் சென்ற அடுக்குமாடி குடியிருப்பின் பின்பக்கத்தில் இருந்த அந்த ஓட்டு வீட்டை கண்காணித்தபடி நந்தனுக்காக காத்திருந்தான்.
நந்தனுடன் இன்னும் நான்கு பேர் துப்பாக்கியுடன் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.
நந்தன் சைகை செய்ததும் ரன்வீர் தன் வேஷத்தை கலைக்காமலேயே அந்த வீட்டின் உள்ளே சென்றான்.
“அரே… தம்பி…. நீங்க யாரு? இது என் வீடு… எப்படி இதுக்குள்ள வந்தீங்க?”, என கத்தத் தொடங்கினான்.
அந்த பரதேசியைக் கண்டதும் திலக் மற்றவர்களிடம் அவனை துரத்தும்படி கட்டளையிட்டு விட்டு அறைக்குள் நுழைந்துக்கொண்டான்.
“யார்ரா நீங்க? அந்த ரூம்ல என் மனைவி இருக்கா டா… “, என ஹிந்தியில் கத்தியபடி திலக் சென்ற அறையை திறந்துக்கொண்டு உள்ளே சென்றான்.
துப்பாக்கி முனையில் கதிரையும், சர்வேஸ்வரனையும் கண்ட ரன்வீர் டக்கென மறைத்து வைத்திருந்த கத்தியை வீசி இருவரையும் குனியச் சொன்னான்.
அவன் பின்னால் நந்தனும் வீட்டினில் நுழைந்து சத்தமெலுப்பாமல் முற்றத்தில் நின்றவர்களைச் சுட்டுவிட்டு அந்த அறைக்குள் வந்து திலக்கின் தலையில் துப்பாக்கியை வைத்தான்.
இந்த திடீர் தாக்குதலை எதிர்பார்த்திருந்ததைப் போல திலக் நந்தனின் காலில் சுட்டு விட்டு ஜன்னலை உடைத்துக் கொண்டு வெளிய குதித்தான்.
வெளியே இருந்தவர்கள் அவனை மயங்கச்செய்யும் ஊசியை செலுத்தி தூக்கிச் சென்று வண்டியில் கட்டிவைத்தனர்.
அதற்குள் அந்த பகுதியில் ஜனங்கள் கூடிவிட போலீஸ் துணையுடன் குண்டடிப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, நந்தனையும் மருத்துவமனையில் அனுமதித்தனர். கதிரும், சர்வேஸ்வரனும் கூட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காயங்களுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டனர்.
அங்கே அர்ஜுனும் யாத்ராவும் மீட்கப்பட்ட நேரத்தில் தான் கதிரும், சர்வேஸ்வரனும் தோராயமாக மீட்கப்பட்டனர்.
நந்தன் காலில் இருந்து புல்லட்டை எடுக்க ஆப்ரேஷன் நடந்துக்கொண்டிருந்தது. கதிர் தன்னை கடத்தியது முதல் தான் அறிந்துகொண்டது அனைத்தும் நரேனிடம் தனிபட கூறிக் கொண்டிருந்தான்.
சர்வேஸ்வரன் மயக்கத்தில் ஆழ்ந்திருந்தார். அவர் உடலில் பெரும் அசதியும், மனவழுத்தமும் அதிகமாகி இருந்ததால் இரத்த அழுத்தமும் அதிகமாகியிருந்தது.
“சார் … இது பெரிய நெட்வொர்க்…. ‘எவிக்ட் ரிசர்ச் லேப்’ உலகம் முழுக்க இருக்கு… ஆனா இது பப்ளிசிட்டி தேடிக்கல…. அரசாங்கம் தடைசெஞ்ச அத்தனை ஆராய்ச்சிகளும் உலகம் முழுக்க செஞ்சிட்டு தான் இருக்காங்க. ஒரு நாட்ல அனுமதிக்காத ஆராய்ச்சி வெளிப்படையா இன்னொரு நாட்ல பண்றாங்க. எங்கேயுமே அனுமதிக்காத ஆராய்ச்சிகள் இந்தியால இரகசியமா பல மாநிலங்கள்ல நடத்துறாங்க.. பெரிய பணபலம், ஆள் பலம், இதைவிட அரசியல் கட்சிகள் எல்லாத்துக்கும் இவங்க பணம் குடுக்கறதால யாரும் இவங்கள எதிர்த்து நிக்க மாட்டாங்க…. அண்டர் வேர்ல்ட்ல பெரிய புள்ளி… இதோட அபீசியில் ஓனர் ராஜ்கர்ணா… ஆனா இதோட ஆரம்பப்புள்ளி ரிஷித்”, எனக் கூறி நிறுத்தினான்.
மேலே சொல் என்பது போல நரேன் தலையசைக்க கதிர் நரேன் காதில் சில விஷயங்களை கூறினான்.
“சரி… நீ ரெஸ்ட் எடு… “, எனக் கூறிவிட்டு ரன்வீரை அழைத்தான்.
“திலக் எப்படி இருக்கான்?”
“இன்னும் வாய தொறக்கல சார்…. இன்னும் இரண்டு மணிநேரம் நம்ம அர்ஜுன் சார் ட்ரீட்மெண்ட் குடுத்தா உண்மைய கொட்டிடுவான்”, ரன்வீர்.
“இரண்டு மணி நேரத்துல அவன் தப்பிச்சி ஓடணும்…. ட்ரீட்மெண்ட் முடிச்சிட்டு தான் ஓடணும்..”, என சிரித்தபடி ரன்வீரிடம் கூறிவிட்டு பரிதியை சந்திக்க சென்றான்.
ரன்வீர் சிரித்தபடி திலக்கை கட்டிவைத்திருந்த இடத்திற்கு சென்றான்.
“அரே திலக்…. நீ இப்படி அடம்பிடிச்சா நான் என்ன பண்றது? உனக்கு நல்லாவே தெரியும் நம்ம அர்ஜுன் சாரோட ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட்…. பாலும் பிஸ்தாவும் சாப்டு வளர்ந்திருக்க… உன் உடம்பு அத தாங்குமா? சொல்லுடா…. அருணாச்சல்ல என்ன பண்ணீங்க? “, என கையில் இரும்பு கம்பியை அளவு பார்த்தபடி கேட்டான்.
“ஹாஹா… அர்ஜுன் சார் வந்தா தானே ரன்வீர்… அவர் வரமாட்டாரு… அவரோட லவ்வரும் தான்….”, என சிரித்தபடி கூறினான்.
“அடடா… உனக்கு தான் விஷயமே தெரியாதுல்ல… அவர காப்பாத்தியாச்சி டா…. அவர் லவ்வரையும் தான்… உன் ஒரிஜினல் பாஸ் பேர மட்டும் சொல்லு டா…. “, என காலில் கம்பியால் பலமாக அடித்தான்.
“ருதஜித் தான் எனக்கு பாஸ்…. “
“அவரோட பாஸ் யாரு?”
“எனக்கு தெரியாது”, வலியில் முனகியபடி கூறினான்.
“யாருன்னு தெரியாம தான் அருணாச்சல்ல கூடவே சுத்தினியா திலக்?”, என ஒரு போட்டோவை காட்டினான்.
அதைக் கண்டு அதிர்ந்த திலக் நொடியில் முகத்தை சீர் செய்து தெரிராதென சாதித்தான்.
“சரி… உனக்கு தெரியல விடு…. அருணாச்சல்ல என்ன எடுத்தீங்க?”, என முட்டியில் அடித்தான்.
“தெரியாது….”
“மறுபடியும் மறுபடியும் நான் சினிமா பாட்டு வேணா கேப்பேன் உன் பாட்ட கேக்கமாட்டேன்… அங்க என்ன எடுத்தீங்க? அந்த குகைல என்ன இருந்தது?”, தொடையில் முள்கம்பியை வைத்து அடித்தான்.
வலியில் திலக் அலறும் சத்தம் கொடூரமாக இருந்தது.
“ஏதோ … ஏதோ ஒரு குடுவை இருந்தது…. அத தேடி தான் அங்க போனோம்… வேற எதுவும் இல்ல….”
“என்ன குடுவை?”
“தெரியல… பல நூற்றாண்டுக்கு முன்ன செஞ்ச ஏதோவொரு திரவம் அது… அங்க பதப்படுத்தப்பட்டு இருந்தது…. “, என தனக்கு தெரிந்த வரையில் கூறினான்.
“அந்த குகையோட லொகேஷன் சொல்லு”, ரன்வீர் தீவிரமான முகபாவத்துடன் கேட்டான்.
திலக் கூறியதை குறித்துக்கொண்டே அவசரமாக நரேனைக் காண சென்றான். அவன் சென்ற சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்கள் அனைவரும் சாப்பிட கிளம்பிட ஒருவனை மட்டும் கதவிற்கு வெளியே நிற்க வைத்துவிட்டு சென்றனர்.
நரேனிடம் அந்த குகையின் சரியான லொக்கேஷன் டிகிரியை கொடுத்துவிட்டு ரன்வீர் திரும்பி வரும்போது திலக் அங்கே இல்லை….
வாசலில் நின்றவனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பித்திருந்தான்..
திலக் தப்பித்தது கண்டு ரன்வீர் உதட்டில் மர்மமான புன்னகை நொடி நேரம் உதித்து மறைந்தது…. மற்றவர்கள் நரேனிடம் திட்டு வாங்கப்போவதை நினைத்து பயந்துக்கொண்டிருந்தனர்.