39 – காற்றின் நுண்ணுறவு
தசாதிபனும் தர்மதீரனும் சென்னைத் திரும்பி வந்து அடுத்த இடத்திற்குப் புறப்படத் தயாராகினர்.
“தர்மா… நாம மடகாஸ்கர் போகணும்”, என தசாதிபன் கூறினார்.
“அங்கயா? அங்க எதுக்கு?”, தர்மதீரன்.
“அங்க தான் அவனுங்களும் வந்தாகணும்… நான் நாச்சியாவுக்கு அதை தான் எழுதி குடுத்தேன்”, எனக் கூறினார்.
“நிச்சயமா அவங்க வருவாங்கன்னு என்ன நிச்சயம் சார்”, முகுந்த் கேட்டான்.
“அவன் தேடற இடத்துக்கான வாசல் அங்க தான் இருக்கு”, எனத் தீர்க்கமான குரலில் கூறினார்.
தர்மனும், முகுந்தும் , சோழன் மற்றும் வழுதியுடன் கலந்தாலோசித்து மடகாஸ்கர் செல்ல ஏற்பாடுச் செய்தனர்.
அடுத்தநாள் தான் அவர்களுக்கு அதற்கு டிக்கெட் கிடைத்தது.
தர்மதீரன், சுதாகர், தசாதிபன் மூவரும் மடகாஸ்கர் நோக்கி புறப்பட்டனர்.
நாச்சியாவும், இனியனும் ம்ரிதுள்ளுடன் தனிவிமானத்தில் தோஹாவிற்குப் பறக்க ஆரம்பித்தனர்.
ம்ரிதுள்ளின் ஆளுமை இனியனை வியக்கவைத்தது.
நாச்சியா ம்ரிதுள்ளிடம் காட்டும் நிமிர்வு அவனை இரசிக்கவைத்தது.
“ம்ரிதுள்….”, இனியன் மெல்ல அழைத்தான்.
“ம்ம்….”
“தோஹா போய் எங்கள கொல்லப் போறியா?”
“இல்ல”
“வேற எங்க வச்சி எங்கள கொல்லப்போற?”
“தொனதொனன்னு பேசினா இங்க இருந்து உன்ன கீழ தள்ளிவிட்றுவேன்”, என நாச்சியாவை ஓரக்கண்ணால் பார்த்தபடிப் பதில் கொடுத்தான்.
“ஓஹ்ஹோ…. கதை அப்படி போகுதா? அப்பறம் எதுக்கு கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவ்வளவு டயலாக் பேசணும் ?”, எனக் கிண்டலடித்தான்.
“ஷட் அப் இனியன்”, என நாச்சியார் சத்தம் போட்டாள்.
“இப்ப நீங்க ஏன் நடுவுல பேசறீங்க மேம்? நான் அவன தானே கேட்டேன்…. நம்மல ப்ளேன்ல கூட்டிட்டு போறான். அங்க போய் என்ன பண்ணுவான்னு தெரிஞ்சிக்க வேணாமா? “, இனியன்.
“உன்ன கொல்ல நான் ஏன் தோஹா வரைக்கும் இழுத்துட்டு போகணும்? காட்டுலையே கொண்ணு பொதைச்சி இருப்பேன்…… நாச்சியா…. அன்னிக்கு நீ கேட்டதுக்கு பதில் இப்ப சொல்றேன்”, என அவள் பக்கம் பார்த்துப் பேச ஆரம்பித்தான் ம்ரிதுள்.
“அதித் ஒவிஸ்கர்… என் அண்ணன். என் அப்பாவோட முதல் மனைவியோட பையன்”
“ஆனா அவன பாத்தா அரேபியன் மாதிரி இருக்கான்”, நாச்சியா இடையில் தன் சந்தேகம் கேட்டான்.
“எங்கப்பா தமிழ்நாட்டுக்காரர் தான். என் அம்மாவும் தமிழ் பொண்ணு. எங்கப்பா கூலி வேலைக்கு தான் தோஹா போனாரு. அங்க எதிர்பாராத விதமா நடந்த ஒரு விஷயம் அவர அன்டர்க்ரவுண்ட் கிங் ஆ மாத்திரிச்சி. அதுக்கப்பறம் அதித்தோட அம்மாவ அவருக்கு கட்டிவச்சாங்க. அவங்க அரேபியன்..எல்லாம் ஒரு வகை ஆப்ளிகேஷன்னு சொல்லலாம்….. அதுக்கப்பறம் அரேப்ல டாப் கேங்க்ஸ்டர். நிறைய பிஸ்னஸ் இருக்கு. நிறைய கருப்பு பணத்த பிஸ்னஸ்ல போட்டு வெள்ளையாக்கிட்டு இருக்கோம். என் அம்மாவ என் அப்பா காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டாரு. என் அம்மாவும் தோஹால தான் இருந்தாங்க. அம்மாவுக்கு அப்பா தான் எல்லாமே. எட்டு வருஷத்துக்கு முன்ன அப்பா ஒரு ஆக்ஸிடெண்ட்ல இருந்துட்டாரு. எங்களோட இரண்டு அம்மாங்களும் தான். அதுக்கப்பறம் அதித் மென்டலி டிஸ்டர்ப் ஆகிட்டான்…. எதேதோ சொல்வான் , யார் யாரையோ தேடுன்னு ஆளுங்கள அனுப்புவான்….. அப்ப”, இடையில் மற்ற இருவரின் முகத்தைப் பார்த்துவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தான்.
“அவன் மென்டல் ஆகிட்டான் அதானே”, இனியன் நக்கலாகக் கேட்டான்.
“இதுல்லாம் சொல்றது நீ கிண்டல் பண்றதுக்கோ உங்க அனுதாபத்த வாங்கறதுக்கோ இல்ல இனியன். அதித் எதை தேடறான்னு எனக்கு தெரியல…. இந்த நாலு வருஷமா பல இடத்துல இருந்து பல பொருட்கள திருடிட்டு வந்து வச்சிருக்கோம்…. ஏன் எதுக்குன்னு சொல்லமாட்டேங்கறான்…. அவன் எதை தேடறான்னு எனக்கு தெரியணும் நாச்சியா”, என அவளைப் பார்த்தான்.
“எனக்கும் சரியா தெரியாது. ஏதோ ஒரு இடம். கடலுக்குள்ள இருக்கு. இதுவரை எனக்கு கிடைச்ச தடயங்கள், வாசகங்கள் வச்சி அவ்வளவு தான் தெரியும்…. “, நாச்சியார்.
“அப்பறம் மடகாஸ்கர் போகணும்னு எதுக்கு அவ்வளவு உறுதியா சொல்றீங்க மேம்”, இனியன் இடையில் தன் சந்தேகத்தைக் கேட்டான்.
“அங்க இருக்கற ஒரு பகுதிய தான் நான் தேடின வரை காட்டுது… அங்க போய் பாத்தா தான் அதுக்கு மேல என்னனு புரியும்”, நாச்சியார்.
“உன் ப்ரோபஸருக்கு அது என்னனு தெரியும் தானே?”, ம்ரிதுள் சந்தேகத்துடன் கேட்டான்.
“தெரியலாம்….. தெரியாமலும் இருந்திருக்கலாம். ஆனா அவர் தான் இப்ப இல்லையே”, என அவனை முறைத்தாள்.
“முறைக்காத…. அவன் தேட்ற இடத்தால அடுத்து வர போற பின்விளைவுகள் பத்தி அன்னிக்கு பேசினியே அதுக்கு என்ன அர்த்தம்?”, ம்ரிதுள்.
“போககூடாத இடத்த அவன் தேடறான்னு அர்த்தம். தெரிஞ்சிக்க கூடாத விஷயங்களை அவன் தெரிஞ்சிக்க நினைக்கறான்னு அர்த்தம். அது போல விஷயங்கள் வெளியே வந்தா அதனால இழப்புகள் மட்டும் தான் நடந்திருக்கு. அந்த சங்கிலி விளைவுகள யாராலையும் கட்டுப்படுத்த முடியாது….. நிறுத்தவும் விடாது…. அப்படி ஒரு விஷயத்தை தான் நாம தொட்டு இருக்கோம்”, என அவள் கூறி முடிக்கும்போது இறுக்கமானச் சூழ்நிலை உருவாகியது.
“இதுக்கு வல்லகிய எதுக்கு கடத்தணும்?”, இனியன்.
“அந்த பொண்ணுக்கு சூப்பர் பவர் இருக்கறதா சொல்றாங்க”, ம்ரிதுள் மதுபானத்தை உறிஞ்சியபடிக் கூறினான்.
“வாட்?”, நாச்சியார் புரியாமல் கேட்டாள்.
“ஏன் இனியன் நீ எதுவும் சொல்லலியா?”, என ம்ரிதுள் அவனை இழுத்தான்.
“அது வந்து மேம்… உங்க தங்கச்சி உடம்புல ஏதோ மாற்றங்கள் நடந்திருக்கு. அவங்களால காத்த படிக்க முடியுதுன்னு சொல்றாங்க”, இனியன் தயங்கித் தயங்கிக் கூறினான்.
“புரியல…. காத்த படிக்கறதா….என்ன உளர்ற நீ?”
“நான் அசிஸ்டண்ட் கமிஷனர்ங்க….. நிஜமா தான் சொல்றேன்…. என்ன நடந்துச்சின்னு எனக்கு சரியா தெரியாது ஆனா அவ நார்மலா இல்ல”, என ஆரம்பித்து வல்லகியை தர்மனுடன் தேடி அலைந்தது முதல், கடைசியாக பிறைசூடன் இல்லத்தில் இருந்து கடத்தப்பட்டது வரை அவனுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறினான்.
“அந்த ஜிதேஷ்அ தான் நீ டார்ச்சர் பண்ணியா?”, நாச்சியார் ம்ரிதுளைப் பார்த்துக் கேட்ட்ள்.
“ஆமா… அவன் எங்களுக்கு துரோகம் பண்ணிட்டான்…. நாங்க திருடின பொருள, எங்க கிட்ட இருந்து திருடப் பாத்தான்”, ம்ரிதுள்.
“பிச்சை எடுத்தானாம் பெருமாளு அதை புடுங்கி திண்ணாணாம் அனுமாருங்கற கதையா இருக்கு”, இனியன் டக்கென கலாய்க்கவும் துப்பாக்கியை அவன் தலையில் வைத்தான் ம்ரிதுள்.
இனியனும் துப்பாக்கியை மெல்லத் தள்ளிவிட்டு, “நான் எப்பவும் இப்படி சிரிச்சிட்டே இருக்க மாட்டேன் ம்ரிதுள். உன்கூட ஏன் கிளம்பி வர்றேன்னு உனக்கு தெரியும்.. நாச்சியாவுக்கும் தெரியும்…. இந்த சீன் எல்லாம் என்கிட்ட வேணாம்”, என சிரித்தபடி எச்சரித்துவிட்டு நாச்சியாவிடம் திரும்பினான்.
நாச்சியா ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள்.
“ஏங்க…. இங்க ஒருத்தன் என் தலைல துப்பாக்கி வைக்கறான். அதை கவனிக்காம நீங்க என்ன யோசனைல இருக்கீங்க ?”, இனியன்.
“நீ சாகலல… விடு…. எனக்கு நிறைய சந்தேகம் இருக்கு”, என ம்ரிதுள்ளைப் பார்த்தாள்.
“நல்ல வார்த்தை…. எல்லாம் என் நேரம்….”, என முனகியபடிச் சென்று வேறு இடத்தில் அமர்ந்துக்கொண்டான்.
“உன் சந்தேகத்துக்கான பதில் தோஹால கிடைக்கும். இனியன் உன் டீம்அ கான்டாக்ட்க் பண்ண ட்ரை பண்ணாத… எனக்கு அதித் முழுசா வேணும். அவன் மட்டும் தான் எனக்கு இப்ப சொந்தம்னு இருக்கான்”, தீவிரமானக் குரலில் கூறினான்.
“ஏன் உங்களால இறந்தவங்க குடும்பத்துக்கும், கடத்தப்பட்டவங்களுக்கும் குடும்பம் இல்லையா?”, இனியன் கோபமாகக் கேட்டான்.
“என் தலையீடுனால தான் இன்னிக்கு நாச்சியா டீம் உயிரோட இருக்கு … அவங்க குடும்ப ஆளுங்களும் உயிரோட இருக்காங்க”, கோபமாகவே பதிலைத் திருப்பிக் கொடுத்தான்.
“அப்பறம் ஏன் நீ ப்ரோபசர கொன்ன?”, நாச்சியார்.
“அவர் சாகல… பொழச்சிட்டாரு… அது உனக்கும் தெரியும்… “, எனக் கூறி, அவர்களுக்கு அதிர்ச்சிக் கொடுத்தான்.
இனியனும் நாச்சியாவும் ஒரு நொடி தங்களைப் பார்த்துக் கொண்டனர்.
“இவ்வளவு ப்ளான் போட்டு ஆளுங்கள வழிநடத்தற எனக்கு தெரியாதா அவர் உயிரோட இருக்காரா…. இல்லையான்னு? இப்பகூட தோஹா கிளம்ப போலி பாஸ்போர்ட் ரெடி பண்ணி இருக்காங்க…. எதையோ தேடி மிஸ்டர் தர்மதீரனோட மறுபடியும் காட்டுக்கு போயிருக்காரு… “, என அங்கு நடப்பதை இவர்களுக்குக் கூறினான்.
“இவ்வளவு தெரிஞ்சும் ஏன் எங்கள எதுவும் செய்யல ? ஏன் அதித் செய்ற வேலைக்கு நீ துணை போற?”, இனியன் புரியாமல் கேட்டான்.
“அவனை காப்பாத்திக்க தான் உங்கள இப்பவரை உயிரோட விட்டுவச்சிருக்கேன். டோன்ட் ட்ரை எனிதிங் நான்சென்ஸ்…. நாம லேண்ட் ஆகப் போறோம். ரெடியாகுங்க…”, எனக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
“இவன் நல்லவான கெட்டவனா?”, என இனியன் தனக்குத் தானே கேட்டுக்கொண்டான்.
“எதுவா இருந்தாலும் அவனுக்கு அவன் அண்ணன் முக்கியம். எனக்கு என் தங்கச்சி முக்கியம் மிஸ்டர் இனியன்.. தர்மா… தர்மதீரன்னு சொன்னீங்களே அது யாரு?”, எனக் கேட்டாள்.
இனியன் தர்மனைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், “அவர் எந்த காலேஜ்ல படிச்சாரு?”, எனக் கேட்டாள்.
“தெரியல.. ஏன்?”, இனியன் சிரித்தபடிக் கேட்டான்.
“என் காலேஜ்ல ஒருத்தர் இதே பேருல இருந்தாரு. அதான் அவரான்னு தெரிஞ்சிக்க கேட்டேன்”, நாச்சியா எந்த தடுமாற்றமும் இல்லாமல் பதிலளித்தாள்.
“இவங்க குடும்பத்தையே கொண்டு போய் ஆராய்ச்சி பண்ணணும். எந்த ரியாக்ஷனும் காட்டாம எப்படிதான் பேசறாங்களோ? ப்ரோ…. இங்க ஈரம் இருக்கும்னு பாத்தா பாறையா இருக்கு”, என மனதிற்குள் தர்மனிடம் பேசிக்கொண்டான் இனியன்.
பலமணிநேர பயணத்திற்கு பிறகு அதித் இருக்கும் இடம் வந்து சேர்ந்தனர் அனைவரும்.
இனியனை அவன் வேஷம் கலைக்கவேண்டாமென கூறியே அழைத்து வந்திருந்தான்.
விஜய் சௌந்தர் தான் ம்ரிதுள்ளை முதலில் வரவேற்க நின்றிருந்தார்.
“யோகேஷ் வரலியா ம்ரிதுள்?”, எனத் தன் மகனைப் பற்றிக் கேட்டார்.
“கொஞ்சம் வேலை குடுத்திருந்தேன் அங்கிள். வந்துடுவான். அதித் எங்க இருக்கான்? “, எனக் கேட்டான்.
“அவர் ரூம்ல தான் இருக்காரு … நிலைமை கொஞ்சம் மோசமா தான் இருக்கு… இராத்திரில இன்னும் கொடுமையா இருக்கு….டைஸி தான் சமாளிச்சிட்டு இருக்கா…. “, என வருத்தக் குரலில் கூறினார்.
“சரி வாங்க பாத்துக்கலாம். இவன் நம்பர் 50..… இந்த பொண்ண 24*7 வாட்ச் பண்ண சொல்லி போட்டிருக்கேன். இவங்களுக்கு ரூம் எங்க அரேஞ்ச் பண்ணி இருக்கீங்க?”, ம்ரிதுள்.
“இங்க தான்”, விஜய்சௌந்தர்.
“நான் வல்லிகியோட தான் தங்குவேன் மிஸ்டர் ம்ரிதுள்”, நாச்சியா கனீர் குரலில் கூறினாள்.
“நீ தான் அந்த பொண்ணா….. கேள்விபட்ட மாதிரி தான் இருக்க….”, என விஜய்சௌந்தர் அவளருகில் வந்து அவளைப் பார்த்துவிட்டு உள்ளே சென்றார்.
இனியன் அங்கு இறங்கியதும் வேஷத்திற்குத் தகுந்தாற்போல செயற்புரிய ஆரம்பித்தான்.
அவளின் நிமிர்வும், ஆளுமையான பார்வையும் அங்கிருப்பவர்களை இரண்டடித் தள்ளியே நிறுத்தியது.
அதித் இருக்கும் அறைக்கு முன்பு வந்ததும், அவன் அனுமதி பெற்று அனைவரும் உள்ளே சென்றனர்.
“ஹேய் ம்ரிதுள் …… வா வா… உன்ன நான் ரொம்பவும் மிஸ் பண்ணேன் டா”, என அவனை அணைத்துக்கொண்டான் அதித்.
“எப்படி இருக்க அதித்?”, ம்ரிதுள்.
“நல்லா இருக்கேன். உன்னால ஒரு மாசத்துல என் தேடல் முடிஞ்சிரிஞ்சி. நீ சொன்னத செஞ்சிட்ட டா…. “, என அவன் தோளில் தட்டிக்கொடுத்தான்.
“மிஸ்டர் அதித் ஒவிஸ்கர்”, நாச்சியார் அவனை அழைத்தாள்.
குரல் கேட்டு திரும்பியவன், அவளைப் பார்த்துவிட்டு ம்ரிதுள்ளைப் பார்த்தான், ” நாச்சியா”, என அவன் கூறியதும் அவளை வரவேற்றான்.
“வெல்கம் நாச்சியார்….. பேருக்கு தகுந்தமாதிரி ரொம்பவே கம்பீரமா இருக்க…. உன்ன ஏன் தசாதிபன் தேர்ந்தெடுத்தார்னு இப்ப தான் தெரியுது…. நான் நாலு வருஷமா தேட்ற விஷயத்த நீ ஒரு மாசத்துல பிடிச்சிட்ட…. க்ரேட் ஜாப்”, அதித் மனம் விட்டு பாராட்டிக் கைக்கொடுத்தான்.
அவள் அவன் கைகளைக் கண்டும் கைக்கொடுக்காமல், “வல்லகி எங்க?”, அவனிடம் கேட்டாள்.
“நல்ல மரியாதை…. ம்ரிதுள் நீ சொன்னது சரிதான்டா…. டைஸி டார்லிங் இவங்கள அங்க கூட்டிட்டு போ…. அந்த பொண்ண காட்டிட்டு கூட்டிட்டு வந்துடு”, எனக் கூறினான்.
“மிஸ்டர் அதித்…. நான் என் தங்கச்சியோட தான் இருப்பேன்…..உங்க வேலை இன்னும் முழுசா முடியலை. சோ… என்னை கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணவேணாம்…. நான் வல்லகியோட தான் தங்குவேன். அதுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லுங்க”, எனக் கூறிவிட்டு ம்ரிதுள்ளைப் பார்த்தாள்.
“ஏய்…. யார்கிட்ட திமிரா பேசுறன்னு தெரியுமா?”, என விஜய் சௌந்தர் முன்னே வந்தார்.
“திருடன்.. கடத்தல்காரன்…. கொள்ளைக்காரன்…. ஏன்… கொலைகாரனும் கூடன்னு நல்லாவே தெரியும் “, என அவரின் கண்பார்த்துப் பதில் கொடுத்தாள்.
“நாச்சியா”, என ம்ரிதுள் சத்தம் கொடுக்க, அதித் அவனை அமைதியாகும்படி சைகைகாட்டிவிட்டு , “உன் தைரியம் ரொம்பவே பிடிச்சிருக்கு…. உன் கண்ல என்னமோ இருக்கு… அதுவே மத்தவங்கள உனக்கு பணிஞ்சி போக வைக்குது… ஆனா நான் ஒவிஸ்கர் .. அதித் ஒவிஸ்கர்…. உனக்கு பணிஞ்சி போகமாட்டேன். நீ நான் சொல்றபடி செஞ்சா தான் உன் தங்கச்சி உயிரோட இருப்பா இல்லைன்னா ஒரே இன்ஜெக்ஷன்…. வேற உலகத்துக்கு போயிடுவா… இந்த மிரட்டல் என்கிட்ட வேணாம் பேபி”, என முன்னே வந்து அவளை நேருக்கு நேர் பார்த்துக் கூறினான்.
“உன்னால முடியாத விஷயத்த தான் நீ என்னை செய்ய சொல்லி இருக்க அதித். உனக்கு நான் அடங்கி போகணும்னு எதிர்பாக்காத… உனக்கு சரியான வழிய தான் நான் சொல்றேனா இல்லையான்னு நீ தெரிஞ்சிக்கும்போது உயிரோட இருக்கமாட்ட…. என் வேலைய நான் செய்யணும்னா என் இஷ்டப்படி விடு. இல்லன்னா இத்தனை நாள் நான் கண்டுபிடிச்ச விஷயங்கள உனக்கு கிடைக்காம செய்யமுடியும்”, நாச்சியார் சிறிதும் அசராமல் பதில் கொடுத்தாள்.
“ஏய் நீ….”, என விஜய் சௌந்தர் அவளை அதட்டினார்.
“அங்கிள்……”, என அவரை அமைதிப்படுத்தியவன் அவள் கேட்பதைக் கொடுக்கச் சொல்லி ஆணையிட்டான்.
ம்ரிதுள்ளும் , இனியனும் உள்ளுக்குள் அவளின் தைரியத்தை மெச்சினாலும் சிறிது பயம் கொண்டனர்.
“சச் எ அட்டிட்டயூட் கேர்ள் ம்ரிதுள்…..இவள ஆளணும்டா”, என நடந்து செல்பவளைப் பார்த்தபடிக் கூறினான்.
ம்ரிதுள் கண்காட்ட இனியன் அவள் பின்னால் சென்றான்.
“அது இப்ப நடக்காது அதித். நம்ம வேலைய முதல்ல பாக்கலாம்…. நீ சொன்னபடி நான் செஞ்சிட்டேன். நான் சொல்றத நீ இனி கேக்கணும்”,என அவனைத் தன்பக்கம் திருப்பினான் ம்ரிதுள்.
“அந்த இடத்துக்கு போயிட்டு வந்தப்பறம் நீ சொல்றபடி நான் நடந்துக்கறேன் ம்ரிதுள். சத்தியம் பண்ணிட்டேன்ல…. வா ரெஸ்ட் எடு… மத்த டீம் மெம்பர்ஸ் ரிலீஸ் பண்ணிட்ட போல…. யோகேஷ் எப்ப வரான்?”, என ம்ரிதுள் தோள்மீது கைபோட்டபடி நடந்தான்.
டைஸி நாச்சியாரைப் பார்த்தபடிப் படகில் வந்தாள்.
“நீ அந்த பொண்ணோட அக்கா தானே?”, எனக் கேட்டாள்.
ஆம் என தலையசைத்தாள்.
“போத் சோ டிபரண்ட் ப்ரம் அதர்ஸ்…. அந்த பொண்ணும் தைரியமா இருக்கு ஆனா உன்ன மாதிரி அதிகாரம் பண்ணல…. நீ இப்படி இருந்தா, இங்க இருந்து உயிரோட போகமுடியாது”, என டைஸி சிகரெட்டைப் பற்றவைத்தபடி எச்சரித்தாள்.
நாச்சியா ஒரு இளக்காரமான இளநகையைப் பதிலாகக் கொடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டாள்.
“உன் தங்கச்சி அந்த பில்டிங்ல இருக்கா…. ஹேய் 50…. அவமேல எப்பவும் கண் இருக்கட்டும்…. உனக்கு மத்த செக்யூரிட்டி திங்ஸ் அண்ட் டீடைல்ஸ் குடுக்க சொல்றேன்..”, எனக் கூறிவிட்டு மீண்டும் போட்டில் திரும்பிச் சென்றாள்.
“மேம்…. என்ன மேம் நீங்க இப்படி இருக்கீங்க?”, இனியன் சுற்றிலும் ஒருமுறைப் பார்த்துவிட்டு மெதுவாகக் கேட்டான்.
“எப்படி இருக்கேன்?”
“இவ்வளவு அசால்டா அவன எதிர்த்து பேசறீங்க… பொட்டுன்னு துப்பாக்கில போட்டு இருந்தா என்னாகறது? பயமே இல்லையா உங்களுக்கு?”, இனியன்..
“பயப்படறதால என்ன ஆகப்போகுது இனியன்.. நம்மலால தான் அவனுக்கு வேலை ஆகணும். அவனால நமக்கு ஆகறது ஒன்னும் இல்ல… தவிர நிறைய தடவை நாங்க காட்டுல இருந்து தப்பிக்க முயற்சி பண்ணியும் எங்கள கொல்லல.. அவனுக்கு நாம ரொம்பவே முக்கியம். நம்மல கொன்னா அவனுக்கு தான் நஷ்டம். சோ இப்ப சொல்லுங்க பயம் யாருக்கு இருக்கணும்?”, நாச்சியார் அவனைத் திருப்பிக் கேட்டாள்.
“அவனுக்கு தான்”, இனியன்.
“கரெக்ட். வாங்க போலாம்”, என முன்னே நடந்தாள்.
அவளை அழைத்துக்கொண்டு வந்தவன் வாசலில் நின்று, அவர்களை உள்ளே செல்லக் கூறினான்.
நாச்சியார் சுற்றிலும் பார்த்தபடி அந்த ரூமைத் தாண்டிப் பின்பக்கம் சென்றாள்.
பிறைசூடன் வல்லகியின் மூச்சடைக்கும் திறனைப் பரிசோதித்துக்கொண்டிருந்தார். நீச்சல் குளத்தில் வல்லகி மூச்சடக்கி உள்நீச்சல் அடித்துக்கொண்டிருந்தாள்.
பாலா தான் முதலில் நாச்சியாரைப் பார்த்தாள்.
“அக்கா….”, என ஓடிச்சென்று அவளைக் கட்டிக்கொண்டாள்.
“ஹேய் வதனி…. எப்படி இருக்க? “,எனச் சிரிப்புடன் விசாரித்தாள்.
“அப்பாடா சிரிக்கறாங்க”, என இனியன், நாச்சியார் பாலாவைப் பார்த்துச் சிரிப்பதைக் கண்டுக் கூறினான்.
“ஏன் அவங்க சிரிப்புக்கு என்ன ஏசிபி சார்?”, எனச் சத்தமாகக் கேட்கவும் அவன் அவள் வாயை மூடினான்.
“ஸ்ஸ்ஸ்… நான் யாருன்னு இங்க யாருக்கும் தெரியாது… நீ கத்தாத”, எனக் கூறினான்.
“ஒரு மீசையும் மருவும் வச்சா மாறுவேஷமா? மாறுவேஷத்துக்குண்டான மரியாதை போச்சே உங்களால…”, என பாலா அவனை வாரினாள்.
“உங்க ஊருல எல்லாருமே இப்படி தானா? கடத்திட்டு வந்து வச்சிருக்க பயம் இல்லாம, இப்படி சிரிச்சி வாயடிச்சிட்டு இருக்கீங்க?”, என இனியன் கடிந்துக்கொண்டான்.
“நாங்களா அவன கடத்த சொன்னோம். அவனா கடத்தினான்..அவன் தானே அனுபவிக்கணும்…. நீங்க கம்முன்னு இருங்க… நாச்சிக்கா…. உங்கள நாங்க எவ்ளோ மிஸ் பண்ணோம் தெரியுமா ?”, என அவளை மீண்டும் கட்டிக்கொண்டாள்.
இனியன் பாலாவை முறைத்தபடி நின்றிருந்தான்.
“நானும் தான்டா வதனி… நீங்க இரண்டு பேரும் எப்படி இருக்கீங்க? நீ எப்படி டா இருக்க? வல்லா எங்க?”, எனக் கேட்டாள்..
“நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க? ரொம்ப கருத்துட்டீங்க… வகி அங்க தான் இருக்கா வாங்க”, என அவளை இழுத்துக்கொண்டு ஓடி வந்தாள்.
“ஏய் வகி நாச்சியாக்கா வந்துட்டாங்க டி”, எனக் கத்தினாள்.
நீருக்கு அடியில் மூச்சடிக்கிக்கொண்டு இருந்தவளுக்கு இவள் சொன்னது காதில் விழவில்லை.
பத்து நிமிடம் ஆகியும் அவள் மேலே வராததுக் கண்டுப் பதறிய நாச்சியா, “என்னாச்சி இன்னும் காணோம்?”, எனக் கேட்டாள்.
“ப்ராக்டீஸ் பண்றாக்கா…. இருங்க வருவா…. போன தடவை பதினைஞ்சு நிமிஷம் இருந்தா… இப்ப அத விட ஒரு நிமிஷம் அதிகமா இருந்தா தான் பெட்டர் ஆகறாளான்னு தெரியும்”, எனக் கூறி காத்திருக்கச் செய்தாள்.
முழுதாக பதினெட்டு நிமிடம் கழித்து மேலே வந்தவள் முன்பு நாச்சியா நின்றிருந்தாள்.
“ஹேய் நாச்சி”, என வல்லகி நீரில் இருந்து கண்சிமிட்டும் நேரத்தில் மேலே வந்து அவளைக் கட்டிக்கொண்டாள்.
“என்னடி இது ? என்ன நடக்குது இங்க?”, என அவள் தலையைத் துவட்டியபடிக் கேட்டாள்.
பாலாவும் வல்லகியும் மாறி மாறி இதுவரை தங்களது வாழ்வில் நடந்ததை விவரித்தனர். இனியன் கூறியதைக் கேட்டிருந்ததால் உன்னிப்பாக வல்லகியின் மாற்றத்தைப் பற்றி அவளே கூறுவதை நன்கு கவனித்தாள்.
தசாதிபன் எழுதிக் கொடுத்தக் கடைசி வரிகளின் அர்த்தம் இப்போது புரிந்தது.
அனைத்தையும் கேட்ட நாச்சியார், “வல்லா…. உன்ன நார்மல் பண்ண முடியாதா?”, எனக் கேட்டாள்.
“முடியாது நாச்சியா”, எனக் கூறியபடி பிறைசூடன் அங்கே வந்தார்.
“நீங்க?”
“பிறைசூடன்”
“நீங்களா…. நல்லாவே வேஷம் போட்டு இவங்கள இங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க போல”, என முறைத்தபடிக் கூறினாள்.
“இல்ல நாச்சியா….”, என அவர் தொடங்கும்முன், “நாச்சியாக்கா… அவர் வேணும்னு எதுவும் பண்ணல….. எல்லாமே சூழ்நிலை அப்படி அமைஞ்சிருச்சு…. அவர் தான் இப்பவும் எங்களை பத்திரமா பாத்துக்கறார்”, என பாலா அவருக்காகப் பேசினாள்.
“ஆமா நாச்சியா…. அவர் மேல முழு தப்பு இல்ல… எல்லாமே சூழ்நிலை… நீ எப்படி இங்க?”, என வல்லகி கேட்டாள்.
பின் பிறைசூடனை ஏஞ்சல் அழைக்க, அவர்களைப் பின்னர் சந்திப்பதாகக் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் அந்த பக்கம் சென்றதும் வல்லகி இனியன் அருகில் வந்து,”என்ன ஏசிபி சார்…. மாறுவேஷமெல்லாம் பயங்கரமா இருக்கு… ஆனா மனசுல ரொம்ப உதறல் எடுக்குது போலவே”, எனக் கிண்டலாகக் கேட்டாள்.
“உங்க யாருக்கும் என்மேல பயம் இல்லாம போச்சி… ஊருக்கு போய் வச்சிக்கறேன் உங்கள… “, இனியன் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான்.
“சரி சரி… டென்ஷன் ஆகாதீங்க… வாங்க உங்களுக்கு ஒருத்தன இன்ட்ரோ பண்றேன்… நமக்கு யூஸ் ஆகலாம்….அவனும் நம்மல மாதிரி தான் “, எனக் கூறிவிட்டு ஜேக்கை அழைத்தாள்.
ஜேக் அங்கு வந்ததும் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்துவிட்டு, பின்னர் பேசிக்கொள்ளலாம் என அனுப்பியும் வைத்துவிட்டாள்.
“எல்லார்கிட்டயும் பேசி முடிச்சிட்டியா ? இப்ப நான் பதில் சொல்லட்டுமா?”, என நாச்சியா எரிச்சலுடன் கேட்க, “வா ரூம்க்கு போலாம்… வாங்க சார் போலாம்”, எனத் தாங்கள் தங்கி இருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
நாச்சியாவும் அவள் கடத்தப்பட்டது முதல் இங்கு வந்தது வரை அவர்களுக்குத் தேவையானதை மட்டும் கூறினாள்.
பாலா சாப்பிட எதாவதுக் கொண்டு வருவதாகக் கூறி இனியனை உடன் அழைத்துக்கொண்டுக் கிளம்பினாள்.
“என்ன விஷயம் நாச்சியா? ஏன் டல்லா இருக்க?”, வல்லகி கேட்டாள்.
“உன்ன இதுல இழுக்க எனக்கு விருப்பம் இல்ல வல்லா….”
“ஆனா காலம் அப்படி தான் கொண்டு போகுது நாச்சியா….”, எனக் கூறி ஒரு நொடி அமைதிகாத்து, “என்னால காத்த படிக்க முடியுது நாச்சியா…. அதுல பதிவாகி இருக்கறது என் கண்ணுக்கு தெரியுது…. அதுல இருக்க வலி, சந்தோஷம், ஏக்கம், களிப்பு இப்படி எல்லாமே என்னால உணரமுடியுது…. ஏதோ ஒரு காரணத்துக்காக என்னையும் உன்னையும் ஒன்னா வேலை செய்ய வைக்குது இந்த காலம். இப்ப விட்டா நாம ஒன்னா எதுவும் செய்யமாட்டோம்…. நீயும் நானும் எதிரும் புதிருமா தான் இருப்போம்”, வல்லகி பேச்சில் நிதானமும் பக்குவமும் நன்றாகத் தெரிந்தது.
“இனிமே இருக்கமாட்டோம். உன்கிட்ட நிறைய மாற்றங்கள் தெரியுது வல்லா…. பக்குவம் நிதானம் எல்லாம் வந்துருக்கு…. பாப்போம்…. நீ ஜாக்கிரதை. பாலாவ நல்லபடியா பாத்துக்க. நாளைக்கு நாம கிளம்ப வேண்டியதா இருக்கலாம்”, எனக் கூறி எழுந்தாள்.
“எங்க போற?”, வல்லகி.
“எனக்கு ரூம் எதுன்னு தெரியல கேக்க தான்”, எனக் கூறினாள்.
“இந்த பில்டிங்ல நம்மல யாரும் எதுவும் கேக்கமாட்டாங்க…. எதிர்ல ஒரு ரூம் இருக்கு. அங்கயே இரு… நான் ஏஞ்சல் கிட்ட சொல்லி ஏற்பாடு பண்றேன்”, என அவளை அமரவைத்துவிட்டு உடை மாற்றச் சென்றாள்.
” பிறைசூடன கூப்பிட வந்த பொண்ணு யாரு? “
“அவ தான் ஏஞ்சல். நல்ல பொண்ணு… பிறைசூடன் இத்தனை வருஷம் செஞ்ச ஆராய்ச்சியோட ஐம்பது சதவீத வெற்றிப்பலன்”, வல்லகி.
“மீதி ஐம்பது?”
“அந்த பொண்ண காணோம்…. நாம நிறைய விஷயங்களை பகிர்ந்துக்க வேண்டி இருக்கு நாச்சியா….”, எனக் கூறிவிட்டுக் கடலைப் பார்த்து நின்றாள்.
பாலாவும் இனியனும் உணவைக் கொண்டு வரக் கூறிவிட்டு மெல்ல நடந்துக்கொண்டிருந்தனர்.
“எப்படி இருக்க பாலா?”, இனியன் மென்மையான குரலில் கேட்டான்.
“நல்லா இருக்கேன். எங்க வாழ்க்கை தான் நல்லா இல்ல”, வருத்தமாகக் கூறினாள்.
“எல்லாம் சரியாகும் பாலா… “
“வகி… என் வகி … அவள நார்மல் பண்ண முடியாது. நாச்சியாக்கா வாழ்க்கை இனி எப்படி போகும்னு தெரியாது… நடுவுல நாலு வருஷம் தான் நான் அவங்கள பிரிஞ்சி இருந்தேன் …. அவங்க என்னை அவங்க கூட பொறந்தவளா தான் பாக்கறாங்க .. பத்திரமா பாத்துக்கறாங்க… ஆனா என்னால அவங்களுக்கு எந்த உதவியும் பண்ண முடியல… “
“நீ எதுவும் செய்யணும்னு அவசியம் இல்ல பாலா… நீ எங்க இருந்தாலும் அங்க சந்தோஷம் இருக்கும். வா வேகமா போலாம்… பிறைசூடன் உங்கள கஷ்டப்படுத்தலியே?”, எனச் சந்தேகமாகக் கேட்டான்.
“இல்ல… ஒரு அப்பா மாதிரி தான் பாத்துக்கறாரு….. அவரும் இக்கட்டான சூழ்நிலைல தான் இருக்காரு….”, என ஏஞ்சல் மற்றும் கேட் பற்றிக் கூறிக்கொண்டே அறைக்கு வந்திருந்தாள்.
“பாலா ஏஞ்சல் எங்க?”, என அவள் வந்ததும் கேட்டாள்.
“தெர்ல வகி. லேப்ல இருக்கலாம்… ஏன்?”
“நாச்சியா தங்க எதிர்ல இருக்கற ரூம் ரெடி பண்ண சொல்லணும்”
“சரி சொல்லிடறேன்….”, எனத் திரும்பியவளை வல்லகி தானும் வருவதாக உடன் சென்றாள்.
“மேம்….”, இனியன்.
“சொல்லுங்க இனியன்…”, நாச்சியா கடலை வெறித்தபடிக் கூறினாள்.
“ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க?”
“கத்தில நிக்கறோம் இனியன். நான் வளத்த இரண்டு பேரும் அதுல நிக்கறாங்க….எப்படி இவங்களுக்கு எதுவும் ஆகாம வீட்டுக்கு கொண்டு போய் சேர்ப்பேன்னு தான் யோசனை பண்ணிட்டு இருக்கேன்”, நாச்சியா பாரமான மனதுடன் கூறினாள்.
“நாங்க இருக்கோம் மேம். உங்க ப்ரோபஸரும், தர்மா ப்ரோவும் வந்துடுவாங்க… தவிர மத்த ஏற்பாடும் பண்ணிட்டு தான் இருக்கோம்… உங்க மூனு பேருக்கும் எதுவும் ஆகாம பாத்துக்கறது என் பொறுப்பு”, என இனியன் வாக்குக் கொடுத்தான்.
“நல்லா தான் வாக்கு குடுக்கற இனியன். ஆனா அது நடக்குமான்னு யோசிச்சியா?”, எனக் கேட்டபடி ம்ரிதுள் அங்கே வந்தான்.
“ஏன் முடியாதுங்கறியா?”, இனியன் முறைத்தபடிக் கேட்டான்.
“முடியலாம்…. முடியாமையும் போகலாம்…. நாச்சியா முகத்துல கவலைய இன்னிக்கு தான் பாக்கறேன்.. கூட பொறந்தவ இங்க இருக்கான்னு இவ்வளவு வருத்தப்படற.. அதுவும் வெளிப்படையா அது முகத்துல தெரியற அளவுக்கு… நீயும் பொண்ணு தான்னு இப்ப ஒத்துக்கறேன்”, என ம்ரிதுள் அவளைச் சீண்டினான்.
“என்ன விஷயமா வந்த?”, நாச்சியா நேரடியாகக் கேட்டாள்.
“உங்க ப்ரோபஸர் மடகாஸ்கர் போக போலி பாஸ்போர்ட் வீசா எல்லாம் ரெடி பண்ணி இருக்காரு. இதுல அழகு என்னன்னா… நேர்மையான தர்மதீரன், இதுல பொறுமையா நின்னு எல்லாத்தையும் செய்றான். நல்ல திறமைசாலி தான் ஆனா இன்னும் டிபார்ட்மெண்ட்ல வேலை கிடைக்கல.. இனி கிடைக்குமா இனியன்?…. “, என அந்த அறையைச் சுற்றி வந்தபடிக் கேட்டான்.
“நீ இன்னும் விஷயத்துக்கு வரல ம்ரிதுள்”
“இது.. இதுதான் உன்கிட்ட எங்களுக்கு பிடிச்சிருக்கு நாச்சியா….”, என அவள் அருகில் வந்து அவளை நேருக்கு நேர் பார்த்துவிட்டு, “நீ எனக்கு ஒரு விஷயத்தை க்ளியர் பண்ணணும்”, எனக் கூறினான்.
“என்ன?”
“அதித் தேட்ற விஷயத்தை நீ எனக்கு தான் முதல்ல சொல்லணும். அவன் உயிருக்கு எதுவும் ஆகாதுன்னு உத்திரவாதம் குடுக்கணும். அப்படி குடுத்தா, இனியன் குடுத்த வாக்குறுதிய நானும் உனக்கு குடுக்கறேன்”, எனக் கூறிவிட்டு அவள் முகத்தைப் பார்த்தான்.
“இதுக்கு பதில் நான் ப்ளைட்லயே சொல்லிட்டேன் … இந்த உலகத்துல மனுஷங்க தெரிஞ்சிக்ககூடாத விஷயங்கள் நிறைய இருக்கு. அப்படி ஒரு விஷயம் தான் இதுவும். அவ்வளவு தான் எனக்கு தெரியும். உள்ள என்ன இருக்குன்னு எனக்கு தெரியாது”, உறுதியாகக் கூறினாள்.
“உன் ப்ரோபஸர இங்க கொண்டு வந்தா அவர் சொல்வாறா?”, ம்ரிதுள்.
“அதுக்கு நாமலே அங்க போகலாம்”, இனியன்.
“நாளைக்கு போய் தானே ஆகணும் இனியன்…. ம்ரிதுள்.. நீங்க கொள்ளை அடிச்ச பல பொருட்கள் தேவைபடும். அதுல்லாம் நீ அனுப்பி வை நான் அதுல நாளைக்கு எது எது தேவைன்னு தேடணும்”, எனக் கூறினாள்.
“நாச்சியா”, என ம்ரிதுள் அடக்கப்பட்டக் கோபத்தில் அழைத்தான்.
“மிஸ்டர் ம்ரிதுள்…. அவளுக்கு இப்படி பேசினா பிடிக்காது…. உங்களுக்குத் தேவையான பதில் அந்த இடத்துக்கு போனா மட்டும் தான் தெரியும்… இவகிட்ட இப்படி பேசினா வேலையாகும்னு நினைக்கறீங்களா?”, எனக் கேட்டபடி வல்லகி உள்ளே வந்தாள்.
“சிஸ்டர்ஸ் ஆப் சேம் ப்ளட்….. ம்ம்…. கொஞ்சம் தான் இரண்டு பேருக்கும் வித்தியாசம்… நைஸ் மீட்டிங் யூ யங் லேடி”,எனக் கைக்கொடுத்தான்.
“வணக்கம்… நீங்க தமிழ் பையன் தானே “, எனக் கைக்கூப்பி வணக்கம் கூறினாள்.
“உங்க இரண்டு பேருக்கும் திமிர் அதிகம் தான்”, என ம்ரிதுள் கைக்கூப்பியபடிக் கூறினான்.
“ஆனா அதை நீங்க வெறுக்கலையே மிஸ்டர். ம்ரிதுள்”, என ஒரு புருவம் உயர்த்திக் கேட்டாள்.
“மனச படிக்கறியா காத்த படிக்கறியா?”, ம்ரிதுள் அவளை ஆழமாகப் பார்த்தபடிக் கேட்டான்.