4 – மீள்நுழை நெஞ்சே
அன்றிரவு துவாரகா சற்று அமைதியாக உறங்கினாள்.
காலையில் இருந்து அலைந்து திரிந்த அலுப்போ, ஓர் உயிரை காப்பாற்றிய நிறைவோ… எதுவோ அவளை அமைதியாக அன்று உறங்க வைத்தது.
அடுத்த நாள் காலை எழுந்துத் தயாராகி, ஹோட்டல் சென்று சாப்பிட்டுவிட்டு மருத்துவமனை நோக்கிச் சென்றாள்.
“நர்ஸ்… அன்பரசி மேடம் இப்ப எப்படி இருக்காங்க?”, நேற்றிரவு அவருடன் தங்கியவர் வாயிலுக்கு வரும் போது கண்டவள் அருகில் சென்றுக் கேட்டாள்.
“அதுக்குள்ள வந்துட்டீங்க…. அவங்க நல்லா இருக்காங்க. இன்னிக்கே டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்… எனக்கு ட்யூட்டி முடிஞ்சது.. நான் வரேன்”, எனச் சிரித்த முகத்துடன் கூறிவிட்டுச் சென்றார்.
“ஹலோ மிஸ்…..”, என அங்கிருந்த கவுண்ட்டரில் நின்றிருந்த ஒருவர் அவளை அழைத்தார்.
“எஸ்…”, யாரிவன் என்ற யோசனையுடன் அவனைப் பார்த்தாள்.
“நான் அறிவழகன் … நீங்க தானே நேத்து ஆக்ஸிடெண்ட் ஆனவங்கள இங்க அட்மிட் பண்ணது?”
“ஆமா… நீங்க யாரு?”
“நான் இந்த ஏரியா எஸ்.ஐ … கேஸ் விஷயமா வந்திருக்கேன்…. டீடைல்ஸ் சொல்றீங்களா?”, எனக் கேட்டான்.
“கண்டிப்பா… கொஞ்சம் வையிட் பண்றீங்களா நான் அன்பரசி மேடம் அ பாத்துட்டு வந்துடறேன்”
“நானும் அவங்கள பாக்கணும்.. நானும் வரேன்…”, என உடன் நடந்தான்.
“நீங்க எந்த ஊரு…? ஊருக்கு புதுசுன்னு நர்ஸ் சொன்னாங்க….”, அவளைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தான்.
“நான் சிவகங்கை பக்கம் ஒரு கிராமம். வேலை விஷயமா சென்னை இரண்டு நாள் முன்ன தான் வந்தேன்”, எனப் பொதுவாகக் கூறிவிட்டு அறை வந்ததும் அவனைக் காத்திருக்கக் கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
“குட் மார்னிங் மேம்….. இப்ப எப்படி இருக்கீங்க?”, எனக் கேட்டபடி அவர் அருகில் சென்றாள்.
“குட் மார்னிங் துவாரகா…. மச் பெட்டர்….”, எனச் சிரித்தபடிக் கூறினார் அன்பரசி.
“மேம்…. கேஸ் விஷயமா எஸ்.ஐ வந்திருக்கார்… உள்ள கூப்பிடவா?”
“ம்ம்… நீ என்னை ஆண்ட்டினே கூப்பிடலாமே துவாரகா…”, எனச் சிரித்தபடிக் கூறினார்.
“சட்டுன்னு கூப்பிடறது கொஞ்சம் கஷ்டம். நான் முயற்சி பண்றேன் மேம்”, எனக் கூறிவிட்டு அறிவழகனை உள்ளே அழைத்தாள்.
“குட் மார்னிங் மேம்… அன்பரசி தானே உங்க பேரு?”, என உள்ளே வந்தவன் விபத்துப் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொண்டு இருவரின் அழைபேசி எண்ணும் குறித்துக்கொண்டுச் சென்றான்.
“சாப்டிங்களா ஆண்ட்டி? “, கதவடைத்துவிட்டு வந்து கேட்டாள்.
“இல்லம்மா… நீ?”
“நான் சாப்டு தான் வந்தேன். நான் டாக்டர்கிட்ட உங்களுக்கு என்ன சாப்பிட குடுக்கலாம்னு கேட்டுட்டு வரேன்”, என வெளியே சென்றாள்.
அன்பரசி முகத்தில் எந்த வித உணர்வுகளையும் காட்டாமல் செல்பவளையே யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
“டாக்டர்…. ரூம் நம்பர் 105ல இருக்கறவங்களுக்கு பிரச்சினை எதுவும் இல்லை தானே?”, எனக் கேட்டபடி டாக்டர் கைக்காட்டிய இருக்கையில் அமர்ந்தாள்.
“அவங்க நல்லா இருக்காங்க.. இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்… சேத்து விட்டதோட போகாம மறுபடியும் விசாரிக்க வந்தது சந்தோஷம் மிஸ்….?!”, என இழுத்தார்.
“ஐ ம் துவாரகா டாக்டர்…. “, என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“நைஸ் நேம்…. பேஷண்ட் வில் பீ ஆல்ரைட் டூடே இட்செல்ப்… “
“தேங்க்யூ டாக்டர்.. அவங்களுக்கு சாப்பிட என்ன குடுக்கலாம்?”
“லைட் புட் குடுங்க… லைக் இட்லி… காரம் அதிகம் வேணாம் ஒரு நாலு நாளுக்கு அப்பறம் எப்பவும் போல அவங்க சாப்பிடலாம் … தையல் எடுக்க மட்டும் ஒன் வீக் கழிச்சி வந்தா போதும்….. பிரஸ்க்ரிப்ஷன் நர்ஸ் குடுப்பாங்க… “
“தேங்க்யூ டாக்டர்”, எனக் கூறிவிட்டு எழுந்து கேன்டீன் சென்று உணவு வாங்கிக் கொண்டு அன்பரசி இருக்கும் இடம் சென்றாள்.
“உனக்கு ஏன்மா இவ்ளோ சிரமம்? இங்க வார்ட் பாய்கிட்ட சொன்னா வாங்கிட்டு வருவாங்களே”, அன்பரசி கணிவுடன் கேட்டார்.
“இதுல என்ன இருக்கு ஆண்ட்டி? செய்யற வேலைய உருப்படியா செய்யணும்ன்னு என் வீட்ல அடிக்கடி சொல்வாங்க…. டாக்டர்கிட்ட கேக்கற நானே வாங்கிட்டு வந்தா எனக்கு ஒரு திருப்தி”, என கண்ணிற்கு எட்டாமல் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவர் எழுந்துச் சாப்பிட உதவினாள்.
“நீ என்ன பண்ற துவாரகா?”, சாப்பிட்டபடிக் கேட்டார்.
“வேலை தேடிட்டு இருக்கேன் ஆண்ட்டி…. “
“என்ன படிச்சிருக்க?”
“எம்.எஸ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் “
“எம்.எஸ் படிச்சிட்டு சென்னைல வேலை தேடிட்டு இருக்கியா?”, ஆச்சரியமாகக் கேட்டார்.
“ஆமா ஆண்ட்டி… நான் முன்ன பாத்த வேலைய விட்டுட்டேன். இப்ப மறுபடியும் வேலை தேவைபடுது.. தேடறேன்”
“நான் ஹெல்ப் பண்ணவா?”
“உதவிக்கு உதவியா ஆண்ட்டி? இன்டெர்வ்யூக்காக தான் வந்திருக்கேன் ஆண்ட்டி… வேலை கிடைச்சிடும்… கிடைச்சதும் பறந்துடுவேன்”, அமைதியாக ஆனாலும் அழுத்தமாகவே கூறினாள்.
“கான்பிடன்ஸ் …. ஐ லைக் இட்…. எப்ப இன்டெர்வ்யூ? “
“நாளைக்கு மதியம் ஸ்கைப்ல ஆண்ட்டி”
“ஹாஹா…. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு துவாரகா… உன் குணம் ரொம்ப பிடிச்சிருக்கு”, மனதில் தோன்றியதைக் கூறினார்.
அதற்கும் மெலிதாக முறுவல் கொண்டாள் .
மாலை அன்பரசி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, ஏற்கனவே தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் ரூமிற்கு அவரை அழைத்துச் சென்றாள் துவாரகா.
“உங்க பொண்ணு எப்ப வராங்க ஆண்ட்டி?”, அவரின் பொருட்களை இடம் சேர்த்தபடிக் கேட்டாள்.
“ப்ளைட் டிலேவாம் ராகா.. நாளைக்கு தான் வருவா”, என அலுப்புடன் கூறினார்.
“அப்ப உங்களுக்கு ஹெல்ப்புக்கு இன்னிக்கு நைட் ?”, என யோசித்தாள்.
“நீயே இரேன் ராகா… ஹாஸ்டலுக்கு கால் பண்ணி சொல்லிடு…. “
“ம்ம்… சரி ஆண்ட்டி…. நான் கால் பண்ணிடறேன்”, என வார்டனுக்கு கால் செய்து கூறிவிட்டு அன்பரசிக்கு இரவு உணவை ஆர்டர் செய்தாள்.
“ராகா…. நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டியே?”, அன்பரசி சற்றுக் குரலை தாழ்த்திக் கேட்டார்.
“நீ ஏன் இப்படி இருக்க? உனக்கு என்ன நடந்தது? இதானே ஆண்ட்டி?”, நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“உன் விருப்பம் தான் ராகா…. “, என அவர் கூறும் போது அவள் தோழி கனிமொழி போனில் அழைத்தாள்.
“சொல்லு கனி….”
“சாப்டியா துவா? என்ன பண்ற?”
“இனிமே தான் சாப்டணும்… நீ? வீட்ல எல்லாம் என்ன பண்றாங்க? எப்படி இருக்காங்க?”
“பரவால்ல.. அம்மா தான் அழுதிட்டே இருக்காங்க….”
“இரண்டு நாள்ல சரியாகிடுவாங்க… மறக்காம மருந்து எடுத்துக்க சொல்லு…. “
“ம்ம்….. வேலை என்னாச்சி?”
“நாளைக்கு தான் இன்டெர்வ்யூ… முடிச்சிட்டு சொல்றேன்”
“ஏன்டி இப்டி ஒட்டமாயே பேசற… கொஞ்சம் தாராளமா தான் பேசேன்”, கனிமொழி மனதில் தோன்றிய வருதத்துடன் கூறினாள்.
“நீ கேக்கறதுக்கு நான் பதில் சொல்றேன். வேற என்ன பண்ணணும்…? அப்ப அப்ப வந்து வீட்ல இருக்கறவங்கள பாத்துக்க…. எவனாவது பொண்ணு பாக்க வந்தா எதுவும் தீர விசாரிக்காம மண்டைய ஆட்டாத… விசாரிச்சிட்டு சொல்லலாம்.. எனக்கும் டீடைல்ஸ் அனுப்பு… யாரையும் கண்மூடிதனமா நம்பறது தப்பு… நீயும் அதே தப்ப பண்ணாத”, இவள் பேசுவது அனைத்தும் அன்பரசியும் கேட்டுக் கொண்டிருந்தார்.
அவள் ஏன் அப்படி இருக்கிறாள் என்பதும் ஓரளவு புரிய ஆரம்பித்திருந்தது.
“நீ இங்க வராம நான் கல்யாணமே பண்ணிக்க போறது இல்ல துவா… சீக்கிரம் நீ வந்துடு”
“நான் வந்தா தான் பண்ணிப்பன்னா நீ மீராவா தான் இருக்கணும்… நல்லவனா பாரு… பைத்தியம் மாதிரி பேசாத… இன்னிக்கு ஸ்பீக்கர் போடலியா?”
“இல்ல… நான் என் ரூம்ல இருந்து பேசறேன்”
“சரி உடம்ப பாத்துக்க… நான் இன்டெர்வ்யூ முடிச்சிட்டு கால் பண்றேன்…”, எனக் கூறி வைத்துவிட்டாள்.
ஒரு நொடி மூச்சை ஆழ்ந்து எடுத்து விட்டவள் அன்பரசி அருகில் வந்தாள்.
“என்ன ஆண்ட்டி ஏன்னு புரிஞ்சதா?”, டின்னர் எடுத்து வைத்தபடி கேட்டாள்.
“கொஞ்சம்… ஆனா முழுசா புரியல ராகா….”
“சாப்டுங்க… நீங்க தூங்கற வரைக்கும் கதை சொல்றேன் “, என மெலிதாக முறுவலித்துவிட்டு அவளும் சாப்பிட அமர்ந்தாள்.
“சரி ஹாஸ்பிடல் பில் நீ பே பண்ணிட்டியே அதாவது வாங்கிப்பியா?”
“கண்டிப்பா வாங்கிப்பேன் ஆண்ட்டி… நான் அன்பானி பார்ட்னர் இல்லையே”
“சரி என் ஊருக்கு வரியா?”, அவளை அர்த்தமாகக் கேட்டார்.
“வேலை கிடைக்கட்டும் ஆண்ட்டி… அப்பறம் சொல்றேன்”, சாப்பிட்டு முடித்து அனைத்தும் எடுத்து வைத்து சர்வீஸ் செய்பவரை அழைத்து இடத்தைச் சுத்தம் செய்யக் கூறினாள்.
“எல்லாத்துக்கும் கத்திரி பதில் குடுக்கற… கொஞ்சம் நீளமா பேசலாமே ராகா?”
“பேசியே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு ஆண்ட்டி.. இப்ப இவ்ளோ பேசறேன்னு நானே ஆச்சரியத்துல இருக்கேன்”
“என்னாச்சி ராகா?”
“நான் டிவோர்ஸீ ஆண்ட்டி”