5 – மீள்நுழை நெஞ்சே
“அதனால என்ன ராகா? பிடிக்காத வாழ்க்கைய விட்டு வெளியே வர்றது நல்லது தான்…. நீ தெளிவான பொண்ணு…. சோ நீ சரியான முடிவு தான் எடுத்திருப்ப”
“உங்க பொண்ணும் இப்படி செஞ்சிட்டு வந்தா நீங்க இதையே சொல்வீங்களா ஆண்ட்டி?”
அன்பரசி அவளை ஏன் என்பது போல பார்க்கவும், “இல்ல நம்ம சொசைட்டில அடுத்தவங்களுக்குன்னா எல்லாத்தையும் சொல்றவங்க, தன் வீட்ல அப்படி நடக்கறப்ப, அதை ஏத்துக்க முடியாம பழைய முறைகள தான் கையில் எடுக்கறாங்க… அதான் அப்படி கேட்டேன்”, எனக் கூறிவிட்டு அவர் முகத்தைப் பார்த்தாள்.
“நீ சொல்றது சரி தான். அந்த அளவுக்கு யாருக்கும் மனமுதிர்ச்சி வரல ராகா…. ஆனா நீ டக்குன்னு இப்படி என்கிட்ட கேப்பன்னு நான் எதிர்பாக்கல… ஆனாலும் சொல்றேன்… என் பொண்ணு இப்ப டிவோர்ஸ் பண்ணிட்டு கைல குழந்தையோட தான் வந்துட்டு இருக்கா…. அவள நான் என் பொண்ணா தான் நடத்துவேன்… அவள வார்த்தையாலையோ செயலாலையோ காயப்படுத்தமாட்டேன்”, எனப் பெருமூச்சு விட்டபடிக் கூறினார்.
“சாரி ஆண்ட்டி…. ஒரு வேகத்துல கேட்டுட்டேன்… ஹர்ட் பண்ணி இருந்தா மன்னிச்சிடுங்க… நான் இத்தனை மாசமா கடந்து வந்த மனுஷங்க அப்படி தான் இருந்தாங்க… உங்கள போல யாரையும் நான் பாக்கல… என் அப்பா அம்மாவே ஒரு சூழ்நிலைல என்னை பாரமா நினைக்க ஆரம்பிச்சாங்க…. அதுவும் இயல்பு தானே…. ரொம்ப காலம் அவங்க தோள்ல நாம தொத்திகிட்டே இருக்க கூடாது…. இறங்கிடணும்”, என கூறியவள் சற்று நிறுத்தி, “நாம இறங்க நினைக்கறப்பவே அவங்களும் இறங்க விட்டா பிரச்சினை பெருசாகாது….”, எனக் கூறிவிட்டு அமைதியானாள்.
“அதுவும் உண்மை தான் ராகா…. அளவுக்கு மிஞ்சினா எல்லாமே நஞ்சு தான். அன்பும் அதுல அடக்கம்.. யாரோட அன்பா இருந்தாலும்”
“சரி ஆண்ட்டி டைம் ஆச்சி தூங்குங்க… நான் கொஞ்சம் வர்க் முடிச்சிட்டு தூங்கறேன்…. எக்ஸ்ட்ரா பெட் வந்துரிச்சி…. எதாவதுன்னா என்னை கூப்பிடுங்க.. நான் சோபால தான் உக்காந்திருப்பேன்”, என அவருக்கு மாத்திரை கொடுத்து, அவர் தூங்க உதவி செய்துவிட்டு சோபாவில் வந்து அமர்ந்தாள்.
“ராகா…. அடுத்து நீ என்ன பண்ணலாம்னு இருக்க?”, அன்பரசி படுத்தபடிக் கேட்டார்.
“எனக்குன்னு ஒரு அடையாளத்த ஏற்படுத்திக்கணும் ஆண்ட்டி… யாரையும் எதிர்பார்த்து இருக்க கூடாது… அதுக்கு தான் வேலை தேடறேன்….”
“அதுக்கப்பறம்?”
“அதுக்கப்பறம்….. எனக்கு தெரியல ஆண்ட்டி….. முதல்ல வேலை கிடைக்கட்டும். கொஞ்ச ஆசுவாசமா மூச்சு விடணும்னு நினைக்கறேன்”, எனக் கூறிவிட்டு தன் லேப்டாப் எடுத்து அடுத்த நாள் இன்டெர்வ்யூவிற்கு தேவையான விஷயங்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.
“ஹ்ம்ம்….. நடக்கறது எல்லாம் நல்லதுக்குன்னு நினைப்போம்…. “, என அன்பரசியும் தனக்குத் தானே கூறிக்கொண்டு உறங்கினார்.
மருந்தின் உதவியால் அவர் நல்ல உறக்கத்திற்கு சிறிது நேரத்தில் சென்றார்..
ஒரு மணிநேரம் கழித்து துவாரகா வந்து அன்பரசியைப் பார்த்துவிட்டு, எக்ஸ்ட்ரா பெட்டை சத்தம் வராமல் இழுத்து சோபா அருகில் போட்டுக்கொண்டு படுத்தாள்.
நேற்று வந்த உறக்கம் இன்று வருவேனா என்று அடம்பிடித்தது.
பால்கனி சென்று சிறிது நேரம் அமரலாம் என எழுந்து அங்கே சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்தாள்.
அப்படியே உறங்கியும் போனாள்.
ஆறு மணியளவில் கண்விழித்த அன்பரசி அருகில் துவாரகாவைக் காணாமல் தேடினார்.
பால்கனி கதவு திறந்திருப்பதுக் கண்டு, “என்ன ராகா சீக்கிரமே முழிச்சிட்டியா ?”, எனக் கேட்டபடி வந்தவர், கைகளை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கால்களை டேபிலில் நீட்டி அமர்ந்த நிலையில் உறங்குபவளைக் கண்டார்.
இராத்திரி முழுக்க அவள் தூங்கியது இப்படி தானா என்று அவர் மனம் கலங்கியது.
தன் மகளை விட வயதில் சிறியவள். ஆனால் தெளிவாக அனைத்தையும் செய்கிறாள். வாழ்க்கை துணை விஷயத்தில் மட்டும் இந்த விதி சறுக்கிவிட்டது போல… இன்றைய யுவதியாக என்னதான் தைரியமாக இருப்பதாக பேசினாலும்.. வலி… அதை அவள் முழுதாக சுமப்பது நன்றாகவே அவருக்குப் புரிந்தது.
கணவனை இழந்தவர்களை விட, பிரிந்தவர்கள் இந்த சமூதாயத்தில் நடத்தப்படும் விதம் நன்கு அறிந்தவர் அன்பரசி.
கணவனைப் பிரிந்துவிட்டால் பெண் என்ற அகராதிக்கே இழுக்கு ஏற்படுத்த பிறந்ததாகத்தான் இன்றளவும் நினைக்கின்றனர். அதுவும் ஊர் பக்கங்களில் சொல்லவும் தேவையில்லை.
கெட்ட சகுணமாகவே அவளை முத்திரைக் குத்தி விடுகின்றனர்.
பணமும், அதிகாரமும் இருந்தாலும், இல்லையென்றாலும் இந்த சமூகத்தில் அவள் அனுதினமும் அவலாக அரைபடத் தான் வேண்டும்.
“ராகா…. ராகா…. எழுந்திரி மா … “, என அவளை எழுப்பிவிட்டார்.
ஒரு நொடி யோசித்து சுற்றம் உணர்ந்தாள்.
“உன்ன நான் தான் நேத்திருந்து கடத்தி வச்சிருக்கேன் ராகா… உள்ள வா…. இராத்திரி முழுக்க வெளியே தான் தூங்கினியா? ஒரு ஷால் எடுத்து போர்த்திட்டு இருந்திருக்கலாம்ல?”, என அன்பாக கண்டித்தார்.
“கொஞ்ச நேரம் உக்காரலாம்னு வந்தேன்… எப்டி தூங்கினேன்னு தெரியல ஆண்ட்டி…. நீங்க எப்ப எந்திரிச்சீங்க? “, எனக் கேட்டபடி உடலை முறுக்கி கொண்டு எழுந்தாள்.
“இப்பதான் எழுந்தேன்… நான் ப்ரஸ் ஆகிட்டு வரேன். காப்பி சொல்லிக்கலாம்”
“நான் சொல்லிடறேன் ஆண்ட்டி….”, என ஒரு காபி ஒரு டீ கொண்டு வர கூறிவிட்டு, முகம் கழுவி காலை கடன்களை முடித்துவிட்டு வந்து சூரிய நமஸ்காரம் செய்தாள்.
“இந்த பழக்கமெல்லாம் இருக்கா ராகா?”, என அவள் சூர்ய நமஸ்காரம் செய்வதைப் பார்த்தபடிக் கேட்டார்.
“ஸ்கூல் டைம்ல பண்ணது.. அதுக்கப்பறம் இப்ப நாலு மாசமா பண்றேன் ஆண்ட்டி… மனசுக்கும் உடம்புக்கும் நல்ல ரிலாக்ஸேஷன் கிடைக்குது… முக்கியமா மூளை சுறுசுறுப்பா வச்சிக்க ஹெல்ப் பண்ணுது…. வேற ஆசனங்களும் பண்ணுவேன்.. வாரத்துல ஐஞ்சு நாளாவது செஞ்சா தான் நல்லா இருக்கு”, என மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியிட்டு விட்டுக் கூறினாள்.
“குட்…. உனக்கு டீ ஆ?”
“ஆமா ஆண்ட்டி… பத்து நிமிஷம் வரேன்”, என வழக்கமாக செய்யும் யோகாசனத்தில் சிலதை மட்டும் செய்து, உடலுக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்திக்கொண்டு வந்தாள்.
“நிறைய கெட்ட பழக்கம் உன்கிட்ட இருக்கும் போலவே…. எனக்கும் கத்து தரியா ராகா ?”, காபியை உறிஞ்சியபடிக் கேட்டார்.
“நான் இதுல பிகின்னர் ஆண்ட்டி… நீங்க எது எது பண்ணலாம்னு முறையா ஒரு ப்ரோபஷனல்கிட்ட கத்துக்கோங்க”
“எல்லாத்துக்கும் கத்திரி பதில் தான் வருது…. ஆனா நேத்துக்கு இன்னிக்கு பரவால்ல… எனக்கு பழகிடிச்சி போல”, எனச் சிரித்தபடிக் கூறினார்.
“சாரி ஆண்ட்டி…. எனக்கு என்ன பேசறதுன்னு தெரியல …. அதான் பட்டுன்னு சொல்லிடறேன்”, என்று கூறிவிட்டு டீயை பருகினாள்.
“யூ நோ ஒன் திங்… யூ ஆர் சச் அ அட்மைரிங் கேர்ள்….. உன்னோட அட்டிட்யூட், உன் மேன்னரிஸம்ஸ் எல்லாமே ரொம்ப அட்ராக்டீவ்வா இருக்கு… இதுக்காகவே ஒருத்தன் உன் பின்னாடி விடாம சுத்த போறான்”, என்று அவர் கூறியதும் துவாரகாவிற்கு புரை ஏறியது.
“ஆண்ட்டி … உங்களுக்கு ஏன் இந்த கொலை வெறி… உங்கள காப்பாத்தினதுக்காக எனக்கு இவ்ளோ பெரிய தண்டனைய குடுக்க நினைக்கறீங்களே…. “, எனப் பரிதாபமாகக் கேட்டாள்.
“அடி வாலு…. உன்னோட நிஜம் இது தான்…. ஆனா நீ மறந்துட்ட… உன்னை நீ வெளியே கொண்டு வா…. உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை பண்ணு ராகா…. “, என அவர் பேசும் போதே போன் வந்தது.
“சொல்லு மித்ரா…. வந்துட்டியா… சரி ஹோட்டலுக்கு வந்துடு… ரூம் நம்பர் ****…. “, எனக் கூறி வைத்துவிட்டு துவாரகாவைப் பார்த்தார்.
“உங்க பொண்ணு பேரு மித்ராவா ஆண்ட்டி? வந்துட்டாங்களா ? “
“ஆமாம்மா…. கொஞ்ச நேரத்துல வந்துடுவா…. “
“அப்ப நான் கிளம்பற நேரம் வந்துடிச்சி…. எல்லாத்தையும் எடுத்து வைக்கறேன் ஆண்ட்டி… அப்ப தான் இன்டெர்வ்யூ டைம்க்கு அட்டென் பண்ண ஈஸியா இருக்கும்….”
“ராகா…. கண்டிப்பா நீ போகணுமா ?”
“கண்டிப்பா ஆண்ட்டி…. உங்க கார்ட் குடுத்து இருக்கீங்களே… சோ கண்டிப்பா ஒரு நாள் மறுபடியும் நாம மீட் பண்ணலாம்…. நீங்க உடம்ப பாத்துக்கோங்க… “
“ஒரு பேச்சுக்கு கூட உங்ககூட வரேன்னு சொல்லமாட்டேங்கறியே ராகா…..”, என முகத்தைச் சுருக்கிக் கொண்டுப் பேசினார்.
“பொய் சொல்ல விரும்பல ஆண்ட்டி…. “, என அவர் முகத்தைப் பார்த்து மென்னகையோடு கூறினாள்.
“சரி…. உனக்கு இன்டெர்வ்யூ முடிஞ்சதும் எனக்கு கால் பண்ணணும்….”
“கண்டிப்பா ஆண்ட்டி”, எனக் கூறி தன் பொருட்களை எடுத்து வைத்தாள்.
“இன்னும் முழுசா நீ என்ன நடந்ததுன்னு சொல்லவே இல்லயே ராகா?”
“இன்னிக்கு வேணாம் ஆண்ட்டி… நான் இன்டெர்வ்யூ முடிச்சிட்டு வேணா வரேன்… அப்ப பேசிக்கலாம்… “
“சரி மா.. நீ இன்டெர்வ்யூ நல்லா பண்ணு”, என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே மித்ரா வந்தாள் கையில் இரண்டு வயது குழந்தை விகாஷுடன்.
“ரொம்ப தேங்க்ஸ் துவாரகா…. நீங்க மட்டும் இல்லைன்னா நான் அநாதையா தான் நின்னிருப்பேன்….”, என மித்ரா அவளைக் கட்டியணைத்து நன்றி தெரிவித்தாள்.
“ஒரு மனுஷியா செய்ய வேண்டியத தான் செஞ்சேன் மித்ரா… இனி நீங்க ஆண்ட்டிய பாத்துப்பீங்க… எனக்கு மதியம் இன்டெர்வ்யூ இருக்கு.. நான் கிளம்பறேன்… மறுபடியும் உங்கள மீட் பண்றேன்”, என அவர்களிடம் விடைப்பெற்றுக் கொண்டு தன் ஹாஸ்டல் நோக்கிப் பயணித்தாள்.
“ஆல் த பெஸ்ட் ராகா… முடிச்சிட்டு கால் பண்ணு… இல்லைன்னா நாங்க உன் ஹாஸ்டல் வந்துடுவோம்”, என அன்பரசி அவளுக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினார்.
ஹாஸ்டல் வந்தவள் வார்டனிடம் வந்து சாவி வாங்க வந்தாள்.
“என்னம்மா நீ…. ஹாஸ்பிடல்ல சேத்தினா அதோட வராமா அங்கயே தங்கி எல்லாம் பண்ணணுமா?”, என வார்டன் சிடுசிடுத்தார்.
“ரோட்ல உங்கம்மா அடிபட்டு கிடந்தாலும் அட்மிட் பண்ணிட்டா போதும்னு வந்துடுவீங்களா மேம்?”, என சற்றே காட்டமாக கேட்டாள்.
“யாரோவும் என் அம்மாவும் ஒன்னா?”
“எல்லார் உடம்புலையும் இரத்தமும் சதையும் தான் இருக்கு…. உதவிக்கு ஆள் இல்லாம அடிபட்டு ஒருத்தர் இருக்கறப்ப, சக மனுஷியா செய்ய வேண்டியத தான் செஞ்சிட்டு வந்திருக்கேன்… நான் எங்க இருக்கேன் என்ன பண்றேன் எல்லாமே இன்பார்ம் பண்ணிட்டு தானே இருக்கேன்…. எதாவது பிரச்சினை வந்தா நான் பாத்துக்கறேன்…. கொஞ்சமாது மனுஷத்தன்மையோட இருக்க பாருங்க மேம்…. இதே நிலைமை நாளைக்கு உங்க குடும்பத்துலையோ , உங்களுக்கோ வரலாம்… அப்ப நீங்க அட்மிட் பண்ணிட்டு போன்னு சொல்வீங்களா? நீங்க எனக்கு எப்ப ரூம் மாத்தறீங்க?”
“இன்னிக்கு மாத்திடறேன்… ஒருத்தர் காலி பண்றாங்க”, என தழைந்த குரலில் பேசினார்.
“ஷேரிங் வேணாம்…. சோலோ ரூம் வேணும்…. மாத்தினா இப்பவே மாத்துங்க.. இல்லைன்னா ஈவினிங் தான் நான் மாற முடியும்…. நான் இன்டெர்வ்யூ போகணும்”, எனக் கறாராகப் பேசிவிட்டு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு சென்றாள்.
“அந்த பொண்ணு என்ன பேச்சு பேசிட்டு போகுது…. ஏன் மேடம் கம்முனு இருக்கீங்க?”, அங்கிருந்த ஆயா கேட்டார்.
“அந்த பொண்ணு சொன்னது நிஜம் தானே ஆயா… ஒரு உயிருக்கு ஆபத்துன்னா கண்டுக்காம போறது தப்பு தானே…. இன்டெர்வ்யூ வச்சிட்டு அந்த பொண்ணு இவ்ளோ செஞ்சிட்டு வந்திருக்கு… நமக்கு கேட் தொறக்க கஷ்டம்ன்னு பேசறோம். தப்பு பண்ற பொண்ணுங்கள அதட்டாம இப்படி நல்லது பண்ற பொண்ணுங்கள அடக்கறது தப்பு தான்”, என கூறிவிட்டு தன் வேலையைக் கவனித்தார்.
ஆயாவும் ஒரு புன்னகையுடன் தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்..
குளித்து ரெடியாகி இன்டெர்நெட் கனெக்ஷன் எல்லாம் சரிபார்த்துக் கொண்டு தன் வேலை நேர்காணலுக்காகக் காத்திருந்தாள்..
அதற்குள் சிறிது உணவு எடுத்துக்கொண்டு, மூளையை ரிலாக்ஸ் செய்ய மெல்லிசை பாடல்களை ஓடவிட்டு, கேம் விளையாடிக்கொண்டிருந்தாள்.
அப்போது போன் அடிக்க, “ஹேய் ராக்ஸ்…. வீ ஆர் வைட்டிங் பார் யூ… கம் சூன்… நவ் அவர் நியூ எம்.டி இஸ் கோன்னா டூ யூவர் இன்டெர்வ்யூ… ஆல் த பெஸ்ட்… ராக் இட் ராக்ஸ்”, என படபடவென பட்டாசாக பேசினான் அவள் நண்பன் ரிச்சர்ட் வில்சன்..
“வில் மீட் யூ சூன் வில்ஸ்…. ஹௌ இஸ் அவர் டீம்?”
“நோ…. அவர் டீம் இஸ் ஸ்பிலிட்டட் டியர்….. யூ கம் அண்ட் ரிஜாயின் அவர் டீம்… “, எனச் சோகமாகக் கூறினான்.
“வை? வாட் எபௌட் இனியா?”
“ஷீ ஆல்சோ கான் டியர்… லாட் ஹேப்பன்ஸ்…. நீட் டூ ஷேர் யூ… அட் யூவர் டைம் 3pm யூ வில் கெட் இன்டெர்வ்யூ கால்… பீ ரெடி”, எனக் கூறிவிட்டு வைத்தான்.
ஒருவழியாக அவள் இன்டெர்வ்யூ முடிந்து அவளும் தேர்வாகினாள். ஆனால் அவளை இரண்டு மாதம் கோயம்புத்தூரில் உள்ள ஒரு ஐடி கப்பெனியில், அவர்கள் கம்பெனி ப்ராஜெக்ட்டில் பங்கெடுத்து கண்காணித்து தலைமை தாங்க கூறினர். அதை முடித்த கையோடு அவளைத் தலைமை அலுவலகம் வந்துச் சேர்ந்துக் கொள்ளக் கூறினர்.
இதைக் கேட்ட அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, சரியென கோயம்புத்தூர் செல்ல வேண்டிய நாளை கேட்டு, அதன்படி தன் வேலைகளை வரிசைப்படுத்தினாள்.
அன்பரசி, “கோயம்புத்தூரா…. சூப்பர்… பாத்தியா…… நீ வரமாட்டேன்னு சொன்ன ஆனா விதி எப்படி உன்னை என்கூட வரவச்சிடிச்சி…. நீ எதுவும் பேசக்கூடாது… நம்ம வீட்ல தான் தங்கணும்… கம்பெனி பேர் மட்டும் சொல்லு”, என அவளிடம் குஷியுடன் கேட்டார்.
“ஆண்ட்டி… எனக்கு கம்பெனில கெஸ்ட் அவுஸ் குடுப்பாங்க.. அங்க தங்கிக்கறேன்… உங்களுக்கு சிரமம் வேண்டாம்….”
“எதுவும் பேசாத துவாரகா…. நீ நம்ம வீட்ல தான் தங்கற…. “, என மித்ரா கட்டளையாகக் கூறி அவள் ஆபீஸ் விவரங்களை வாங்கிக் கொண்டாள்.
அவர்கள் வீட்டு அருகிலேயே தான் அதுவும் இருந்ததால் துவாரகாவினால் மறுக்க முடியாதபடி பேசி, அவளை சரி செய்தனர் அன்பரசியும், மித்ராவும்.
இரண்டு நாட்களில் அவர்களுடன் அவளும் கோயம்புத்தூர் நோக்கி புறப்பட்டாள்…