4 – வலுசாறு இடையினில்
அந்த மாலை வேளை நங்கையும் வேலைக் கிடைத்த மகிழ்ச்சியில் புன்னகையுடன் வினிதாவுடன் பேசிக்கொண்டே கல்லூரி வாயிலுக்கு வந்தாள்.
அதே சமயம் தான் அந்த இரு ஆடவர்களும் அவர்களுக்கு முன் சென்ற பெண்ணிடம் பேச முயன்று அருகில் வந்தனர்.
வினிதா அதைக்கண்டு கோபம் கொண்டு அந்த ஆடவர்களை அதட்டச் சென்றாள்.
பயந்து பின்னே வந்த பெண்ணை நங்கை அருகில் நிற்க வைத்துவிட்டு, “யாரு டா நீங்க ? எந்த ஊரு ? பொம்பள புள்ளைங்ககிட்ட வம்பு பண்றதுக்குண்ணே கெளம்பி வருவீங்களாடா ? “, என அதட்டியபடி முன்னே வந்தாள்.
“நீ யாரு ? உன்னய பாக்க வந்த மாதிரி ஸீன் போடற .. ஒதுங்கி போயிரு .. இல்ல வேற மாதிரி ஆகிடும் “, என்றான் கையைப் பிடிக்க வந்த ஆடவன்.
“எந்த மாதிரி ஆகும்ன்னு நானும் பாக்கறேன்டா .. வாட்ச்மேன் கிட்ட போலீஸ கூப்பிட சொல்லு நங்கை .. பசங்க ஊருக்கு புதுசு போல .. நம்ம காலேஜ் பத்தி தெரியல “, வினிதா பேசியபடியே முன்னே வந்து நேருக்குநேர் நின்றாள்.
“உனக்கு என்ன மனசுல விஜயசாந்தின்னு நினைப்போ .. சீ பே .. “
“எம் பேரு வினிதா டா .. நீங்க அந்த வர்மண்ணே கடைல தானு வேல பாக்கறீங்க .. இந்தா கூப்பிடறேன் .. அவரு வந்து பேசினா தான் நீ சரி பட்டு வருவ.. “, என ஃபோன் எடுத்து வர்மனுக்கு அழைத்தாள்.
“ஹே ஹே .. அவர ஏன் இப்ப கூப்பிடற ? நாங்க போயிடறோம் .. “, இன்னொருவன் மற்றவன் கையை இழுத்தான்.
“டேய் இரு டா .. எந்த பொண்ண பாத்தாலும் அவன் பேர சொல்லி தப்பிச்சி போகுதுங்க .. இன்னிக்கி ரெண்டுல ஒண்ணு பாத்துடலாம் “, என அவன் கூறிமுடிக்கும் முன் வர்மன் கை அவன் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.
“என்னடா .. என்ன பாக்கணும் .. வா பாக்கலாம் .. நானும் உன்ன ஆரம்பத்துல இருந்து பாக்கறேன் ரொம்ப துள்ளுற .. டேய் சீனி .. நீயுமா ? தோப்புக்கு வா .. கணக்கு முடிச்சி விடறேன் “, என அவர்களை மிரட்டி அனுப்பிவிட்டு வினிதாவை பார்த்துவிட்டு, பின்னால் நின்ற நங்கையைப் பார்த்தான்.
“எப்டி இருக்க வினிதா ? எப்போ கல்யாண சாப்பாடு போட போற ?”, கேட்டபடி நங்கையைப் பார்த்தான்.
“நல்லா இருந்தேன் .. இப்போ நீ கேட்ட கேள்வில இருந்து நல்லா இல்ல “
“ஏன் ? அப்புடி என்ன கேட்டுட்டேன் ? மாப்ள உன்ன ரொம்ப நாள் படிக்கவிட போறதா இல்லன்னு கேள்விபட்டேன் “
“ஏண்ணே ? உங்களுக்கு தான் படிப்பு வரல .. படிப்பு வரவங்கள படிக்கவிட்டா தான் என்ன ?”
“பொட்டபுள்ள வீட்ல இருக்கவும், புள்ளைங்களுக்கு நாலு எழுத்து படிக்க சொல்லி குடுக்கற அளவுக்கு படிச்சா போதும் .. மெத்த படிச்சி எங்க தலை மேல ஏறி ஒக்காற விடணுமா ? “, நங்கையைப் பார்த்தபடிக் கூறினான்.
“கொஞ்சமாவது மனுஷனா இருக்கணும் .. சுயபுத்தி வேலை செய்யணும் .. இல்லையா சொல் புத்தி இருக்கணும் .. ரெண்டுமே இல்லாத ஆளுங்க புத்தி இப்படி தான் போகும் .. “, என வாயிற்குள் முனகினாள் நங்கை.
“தைரியம் இருந்தா சத்தமா பேச சொல்லு உன் ஸ்நேகிதிய ..”
“யார்கிட்டயும் நான் பேசல .. வா வினி போலாம் “, நங்கை முகத்தைத் திருப்பிக்கொண்டுக் கூறினாள்.
“பாத்து கழுத்து சுலுக்கிற போகுது “
“உங்க வேலைய பாத்துட்டு போங்க .. அந்த பாசங்களுக்கும் உங்களுக்கும் இப்போ எந்த வித்தியாசமும் இல்ல “, முகம் சிவக்கக் கூறினாள் நங்கை.
“அந்த பொறுக்கி பசங்களும் நானும் ஒண்ணா டி ?”, அவனும் கோபமாகக் கேட்டான்.
“டி போடற வேலை எல்லாம் வச்சிக்காத வர்மா .. “, முகத்திற்கு நேராக கையை நீட்டிப் பேசினாள்.
“யார் முன்ன வெரல நீட்டுற ?”, அவன் அவள் விரலைப்பிடித்து இழுத்தான்.
“கைய விடு ..”, என தன் கையை இழுத்துக்கொண்டாள்.
“ரொம்ப துள்ளுற உங்கப்பன்கிட்ட சொல்லி ஒரு பூசைய போட சொல்லவா ?”, என கண்ணடித்துக் கேட்டான்.
“சே .. பொறுக்கி .. “, என திட்டிவிட்டு வினிதாவின் கையை இழுத்துக்கொண்டுச் சென்றாள்.
“உங்கப்பன் உனக்கு மாப்ள பாக்கறமாதிரி இருந்தா சொல்லு டி .. நானே உன்ன பெரிய மனசு பண்ணி கட்டிக்கறேன் .. உன் சலம்பல வேற எவனும் தாங்க மாட்டான் “, மீசையை முறுக்கியபடிக் கூறினான்.
“பாலுங்கெனத்துல விழுந்தாலும் விழுவேன் உன் கையால தாலி வாங்க மாட்டேன் டா .. நான் சொந்த கால்ல நிக்க தான் போறேன் .. பொம்பளன்னா அவளோ எளக்காரமா இருக்கோ .. நீங்க இல்லைன்னா நாங்க பட்டினி கிடந்து செத்துட மாட்டோம் “, நங்கையும் கோபமாகப் பதில் கொடுத்தாள்.
“இப்டி பகல் கனவு கண்டுகிட்டே இரு .. பொட்டச்சிய வேலைக்கு அனுப்ப மாட்டான் உங்கப்பன்.. ஒடம்பு நோவாம சோறாக்கி திங்கறவளுக்கு எதுக்கு இந்த திமிரு ?”
“சே .. ஆம்பள தனம்ன்னா மொதல்ல என்னனு தெரிஞ்சிக்க .. மீசைய முறுக்கிட்டு சுத்தறவன் எல்லாரும் ஆம்பள ஆகிடமுடியாது .. செயல்லையும் நடத்தைலையும் இருக்கணும் .. உனக்கு அது சொன்னாலும் மண்டைல ஏறாது .. வா வினி போலாம் .. “
“ஹேய் .. நில்லு டி “, அவள் அருகில் சென்று , “என்னைய ஆம்பள இல்லைன்னு சொல்லிட்டு நீ பாட்டுக்கு போற .. உன் கழுத்துல தாலி கட்டி நான் ஆம்பளன்னு காட்டறேன்டி .. அப்புடி பண்ணல நான் சிம்ம வர்மன் இல்லடி “
“உன் கையால நானும் தாலி வாங்க மாட்டேன் .. முடிஞ்சத பண்ணிக்க வர்மா “, அவளும் சற்றும் குறையாதத் திமிருடன் சாவல் விட்டாள்.
“ஹேய் என்னடி இப்படி சொல்லிட்ட.. அந்த அண்ணே சொன்னா அத அப்புடியே செஞ்சிடும்டி .. “, வினிதா பதற்றமாகக் கூறினாள் .
“அவனுக்கு அவளோ ஸீன் எல்லாம் இல்ல வினி .. வழக்கம் போல என்கிட்ட வம்பு இழுத்துட்டு போறான் .. வா பஸ் வந்துடும் “, என அவளுக்கு சமாதானம் கூறிப் பேருந்து நிறுத்தும் இடம் நோக்கி வேகமாக நடந்தாள்.
“ஏன் டி உனக்கும் அந்த அண்ணணுக்கும் ஆகவே மாட்டேங்குது ?”
“எல்லாம் என் வீட்ல இருக்கறவங்க மாதிரியே பேசறதால தான் வினி .. வீட்ல தான் திகார் ஜெயில் மாறி இருக்கு .. வெளியவும் அப்புடியே இருக்க மனுஷன பாத்தா ஆத்திரம் வரும்ல .. கொஞ்சம் கூட யோசனை இல்லாத மனுஷன் .. பொம்பளைன்னா அவளோ ஏளக்காரமா நினைக்கறது .. நம்ம என்ன அவங்களுக்கு சோறாக்கி போடவும், புள்ள பெக்கவும் மட்டுமா பொறந்து இருக்கோம் ? இன்னும் இந்த ஊரும் இருக்க ஜனங்களும் மாறாம இருந்தா அடுத்த தலைமுறை கூட அடிமையா தான் வருவாங்க “
“அதான் நம்ம ஊருகாரவங்க பொண்ண கூட தூரமா குடுக்கறதே இல்லயே அப்பறம் எங்க இருந்து மாற்றம் வரும் ?”, வினிதா சலிப்புடன் கூறினாள்.
“நம்ம நினைச்சா வரும் வினி .. பொம்பள கைல தான் அத்தனையும் இருக்கு. நம்ம வளர்க்கற விதத்துல தான் எல்லாமே மாறும். நம்ம அம்மாங்க மாதிரி நாம நம்ம பசங்கள வளத்தகூடாது. அதுல மட்டும் நான் உறுதியா இருக்கேன் .. “
“சரி இப்ப சவால் விட்டுட்டு போய் இருக்காரே வர்மாண்ணே அவர எப்டி சமாளிக்க போற ?”
“அவன எதுக்கு நான் சமாளிக்கணும் ? அவனே வந்து பொண்ணு கேட்டாலும் என் அப்பா அவனுக்கு குடுக்கமாட்டாரு .. அவர எதுத்து தானே இவன் சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சான் . அதுல என் அப்பாவுக்கு இவன் மேல செம காண்டு இருக்கு .. நம்ம மிச்சம் மூணு மாசம் காலேஜ்ல நல்லா என்ஜாய் பண்ணிட்டு வேலைல எப்டி போய் சேரறதுன்னு யோசிச்சா போதும் .. “, நங்கை சிரிப்புடன் கூறினாள் .
“என்னமோ சொல்ற .. பாப்போம் .. எப்போ நீ வேலைல சேரணும் ?”, வினிதா அடுத்த பேச்சை தொடர்ந்தாள்.
“எக்ஸாம் முடிஞ்சி கால் பண்ணுவாங்கடி .. உன் நம்பர் தான் குடுத்து இருக்கேன் .. அதனால என் மெயில் ஐடி அப்பப்ப செக் பண்ணிக்கோ டி .. கால் வந்தாலும் பேசி சமாளி .. என் விவரம் எல்லாமே உனக்கு தெரியும்ல“
“சரி சரி .. கவலை படாத .. நான் தான் இங்கயே குப்ப கொட்ட போறேன் .. நீயாவது வெளி ஊருக்கு போய் கொட்டு “, எனக் கூறியவள், தங்கள் நிறுத்தம் வரும்வரை சிரித்தபடிப் பேசிக்கொண்டு வந்தனர்.
வீட்டில் வந்து நடந்ததை எண்ணிப் பார்த்த நங்கை தன் வாழ்க்கையை நினைத்துச் சற்று பயந்து இருந்தாள்.
“ஒரு நல்லது நடந்தா பின்னாடியே நாலு கெட்டதும் நடக்குது .. என்ன தான் பண்றது ? ஆண்டவா .. எப்டியாவது எனக்கு கிடைச்ச வேலைக்கு நான் போற வரைக்கும் எவனும் வரக்கூடாது .. “, என மனதிற்குள் வேண்டியபடிப் படுத்தாள்.
“தமிழு .. தமிழு .. இந்தா பாதாம் பாலு .. உன் அப்பா குடுக்க சொன்னாரு .. தினம் குடிக்கணுமாம்”, எனக் கொண்டு வந்தவர், அவள் குடித்த பின் கதவை சாற்றிவிட்டு படுக்கவந்தார்.
நங்கை உள்ளுக்குள் பயந்தாலும் கடவுளை பிரார்த்தனை செய்தபடி கண் உறங்கினாள்.
அடுத்த நாள் காலையில் அவளை சீக்கிரம் எழுப்பி குளிக்க அனுப்பிவிட்டு, காமாட்சி அவளுக்கு தேவையான நகைகளை எடுத்துவந்தார்.
“எதுக்குமா இவ்ளோ ? ஒரு செயின் போதும் ..”
“கஷ்டபட்டு சம்பாதிச்சி வாங்கிட்டு வந்தா, அத போட்டுக்க கூட வலிக்குதோ ? என் கௌரவம் முக்கியம் அதுக்கு தான் இவ்ளோ பண்றேன் .. ஒழுங்கா எல்லாத்தையும் போட்டு பாரு .. ஏதாவது மாத்தனும்ன்னா இன்னிக்கே கடைக்கு போய் மாத்திக்கலாம் .. சீக்கிரம் .. “, என ஏகாம்பரம் வந்து பொறிந்துத் தள்ளிவிட்டுச் சென்றார்.
“பேசாம எல்லாத்தையும் போட்டுக்க தமிழு .. எங்கப்பா எல்லாம் ஒரு செயின் வளையல் கூட வாங்கி தரல .. உன் அப்பாவ பாத்தியா உனக்கு எவ்ளோ நகை வாங்கி தந்து இருக்காரு “, இப்படி கூறும் தாயை அவள் உணர்வுகளற்ற பார்வைப் பார்த்துவிட்டுத் தயாரானாள்.
அதிகம் எந்த ஒப்பனையும் இல்லாமலே கலை கொண்ட முகம் தான் அவளுக்கு, இன்று புடவை கட்டி பொன்னகை எல்லாம் பூட்டி ஆர்பாட்டமில்லாத அழகுடன் மிளிர்ந்தாள்.
ஆனால் முகத்தில் புன்னகை என்பது துளியும் இல்லை .. நூல் பொம்மை போல பெற்றவர்களின் இழுப்பிற்கு எல்லாம் சென்றாள்.
போட்டோ எடுத்துவிட்டு, ஒரு நகையில் மட்டும் சிறிது மாற்றம் செய்ய வேண்டியது இருந்ததால் கடைக்கு அவளையும் அழைத்துச்சென்றனர்.
அப்போது வர்மனின் பாட்டி நீலாயதாட்சி அங்கே இருந்தார். அவளைக் கண்டு உள்ளுக்குள் ஒரு கணக்கைப் போட்டுக்கொண்டு, அவளைப்பற்றி விசாரித்தார்.
“தம்பி .. அது யாரு வீட்டு பொண்ணு ?”, என நகைக்கடை முதலாளியைக் கேட்டார்.
“நம்ம ராஜன் சூப்பர் மார்க்கெட் வச்சி இருக்க ஏகாம்பரம் பொண்ணு தான் மா .. கல்யாணத்துக்கு பாக்கறாங்க போல .. நேத்து தான் 50 சவரனுக்கு நகை எடுத்தாங்க .. இன்னிக்கி இருவது எடுத்து இருக்காங்க மா “, மொத்த விவரமும் கொடுத்தார்.
“எந்த தரகர் கிட்ட ஜாதகம் இருக்குனு விசாரிங்க .. “, எனக் கூறிவிட்டுச் சென்றார்.
அவளை எடுத்த போட்டோவை ஏகாம்பரம் அந்த ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு, “ இந்தா ஜோசியரே போட்டோ .. எனக்கு ஏத்த எடமா சீக்கிரம் பாரு “, எனக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
ஜோதிடர் அவளின் முகம் பார்த்து, “சீக்கிரமே உனக்கு ஒரு விடிவு காலம் வரும் மா “, என கூறிவிட்டு அவள் ஜாதாகத்தோடு வைத்தார் .