4 – வேரோடும் நிழல்கள்
“மிஸ்டர்.. யாரு நீங்க? ஒரு பொண்ணு தனியா இருந்தா இப்படி தான் பேசுவீங்களா?” கோபமாக கேட்டாள்.
“நான் இப்ப என்ன கேட்டேன்? கல்யாணம் பண்ணிக்க சம்மதமான்னு தானே கேட்டேன். அதுக்கு ஏங்க இப்படி முறைக்கறீங்க? விருப்பம் இருந்தா இருக்குன்னு சொல்லுங்க.. இல்லைன்னாலும் யோசிச்சி சொல்லுங்க…” நீரஜ் அவளிடம் வேண்டுமென்றே வம்பிலுக்க பேசுவது போல இருந்தது.
“ச்சே.. நான்ஸென்ஸ்…” என அவ்விடம் விட்டு வேறிடம் சென்று அமர்ந்தாள்.
“ஹலோ மிஸ்.. மிஸ் நிழலினி.. உங்கள தாங்க.. நீங்க பாட்டுக்கு எதுவும் சொல்லாம போனா எப்படி? உங்க கோவத்த நான் சம்மதம்ன்னு எடுத்துக்கவா?”, என அவள் பின்னாலேயே அவன் கேட்டபடி சென்றான்.
“யாரு நீங்க? எதுக்கு இங்க வந்து கலாட்டா பண்ணிட்டு இருக்கீங்க? படிச்சவர் தானே நீங்க? இங்கிதம் இல்லாம இப்படி நடந்துக்கறீங்க. அசிங்கமா இல்லையா? கல்யாணம்ன்னு ஒண்ணு என் வாழ்க்கைல எப்பவும் இல்ல.. நீங்க வேற ஆள பாத்துட்டு போங்க..”, எனக் கூறிவிட்டு அந்த பூங்காவை விட்டு வெளியே சென்று ஆட்டோவில் ஏறியவள் திருவானைக்காவல் ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயம் செல்ல கூறிவிட்டு கண்மூடி சாய்ந்தாள்.
தற்போது இருக்கும் மனநிலைக்கு எங்கேனும் தொந்தரவு இல்லாமல் நிம்மதியாக இருக்க எண்ணி அங்கே சென்றாள். விசேஷமான நாட்களில் தான் கூட்டம் அதிகமிருக்கும். நடுநாட்களில் உள்ளூர் வாசிகள் தான் அதிகம் வந்து செல்வர். அதனால் அமைதியாக அங்கிருக்கும் மண்டபத்தில் அமர்ந்துக் கொண்டாள்.
இங்கே விஜயமும், ஞானப்பெருமாளும் சென்ற மகள் இன்னும் இல்லம் திரும்பவில்லை என்று உணர்ந்து அவளது தோழிக்கு அழைத்தனர்.
“விஷாலி.. நிலா அங்கயா இருக்கா?”, என விஜயம் கேட்டார்.
“இங்க இல்ல … ஏன் ?”, குரலை கடுமையாக வைத்துக் கொண்டு கேட்டாள்.
“சாயிந்தரம் பார்க் போறேன்னு போனா இன்னும் வரல..” என முழுதாக முடிக்காமல் இழுத்தார்.
அதிலேயே அவளுக்கு விஷயம் புரிந்திட, “நான் பாக்கறேன்.. அவளுக்கு பிடிக்காத விஷயத்த செய்யாதீங்க… அவள கொஞ்சமாது புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க…”, என முகத்தில் அடித்தாற்போல கூறி அழைப்பைத் தூண்டித்துவிட்டு, நிழலினி வழக்கமாக செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்றுப் பார்த்தாள்.
இரவு மணி 8 ஆகியும் அவள் எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை எனவும் சக்திசிவனுக்கு அழைத்தாள்.
“சசி .. நீ எங்க இருக்க ?”
“நான் திருவானைக்காவல்ல நெய் தோசை சாப்பிடலாம்னு வந்திருக்கேன்…” என ஹோட்டலில் தனக்கிட்ட இலையில் நீர் தெளித்தபடிக் கூறினான்.
“அப்டியே கோவில்குள்ள போய் நினி இருக்காளான்னு பாத்துட்டு சொல்லு..”
“என்னாச்சி?”
“சாயிந்தரம் கோவப்பட்டு வெளிய போனவ இன்னும் வீட்டுக்கு வரலன்னு அவங்கம்மாகிட்ட இருந்து கால் வந்தது..” எனக் கூறியபடி கல்லணை அணையில் மெல்ல பைக் செலுத்தியபடி நீர் போகும் அழகினைப் பார்த்துக் கொண்டே பேசினாள்.
“அச்சச்சோ.. அவ ஃபோன் கொண்டு போலியா?” சசி உள்ளம் பதறக் கேட்டான்.
“நீ உள்ள போய் மண்டபத்துல உக்காந்து இருக்காளான்னு மட்டும் பாத்துட்டு, எனக்கும் ஒரு நெய் ரோஸ்ட் சொல்லி வை வந்துடறேன்…” எனக் கூறிவிட்டு கல்லணையில் இருந்து திருவானைக்காவல் வேகவழியை தேர்வு செய்து வண்டியை செலுத்தினாள்.
விஷாலி கூறியது போல கோவிலுக்குள் சென்றவன் மண்டப்பத்தில் ஒரு பெண் அமர்ந்திருப்பதாக காவலர்கள் பேசியபடி அங்கே செல்வதைக் கேட்டு அவனும் வேகமாக முன்னே சென்றான். தூணைக் கட்டிபிடித்தபடி, அவள் கண்மூடியமர்ந்திருப்பதுக் கண்டு அவன் மனம் கனத்துப் போனது.
அவள் மனதின் வலி அவனுக்கு முழுதாக தெரியாவிட்டாலும், அவளின் இந்நிலை அவளது மனவழுத்தம் எந்த அளவிற்கு இருக்கிறதென புரியவைத்தது. இவளை இப்படியே விடக்கூடாது என்ற மனதில் முடிவெடுத்தவன், அவளிடம் வேகமாக சென்று அழைத்தான்.
“நினி .. இங்க என்ன பண்ற? வா கோவில் மூட போறாங்கலாம்.. நாம வெளிய இருக்கலாம்..” என அவளைக் கைப்பிடித்துத் தூக்கிவிட்டு, தோளை அரவணைத்தபடி அழைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவர்கள் அப்படி வருவதைக் கண்ட பார்த்திபன், படம் பிடித்துக் கொண்டு கிரிஜாவிடமும், நீரஜிடமும் பகிர சென்றான்.
“இங்க உக்காரு… அண்ணா.. ரெண்டு நெய் ரோஸ்ட்…” எனக் கூறி அவளுக்கு அருகே நீரை நகர்த்தி வைத்தான்.
அதற்குள் விஷாலியும் அங்கே வந்துவிட, நிழலினி முதுகில் ஒன்று வைத்ததும் அவளை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“உன்கிட்ட எத்தன தடவ சொல்லியிருக்கேன் எங்க போனாலும் ஃபோன் கொண்டு போன்னு.. எங்கெல்லாம் உன்ன தேடறது? எனக்கு வண்டிக்கு பெட்ரோல் 2000 எடுத்து வை…” எனக் கூறியபடி முறுகலாக வந்த நெய் தோசையை வேகமாக பிட்டு வாயில் வைத்தாள்.
“இங்க தான் சசி நெய் ஊத்தி சுடறாங்க.. அந்த தாத்தா எப்படி தான் இத்தன வருஷமா ஒரேமாறி ரோஸ்ட் ஊத்தி எடுக்கறாரு? நெய் வழியுது பாரேன் … “, என அவனிடம் பேசியபடி நான்கு ரோஸ்ட் உள்ளே தள்ளியிருந்தாள்.
நிழலினி இன்னும் ஒரு வாய் கூட சாப்பிடாமல் அப்படியே அமர்ந்திருப்பதைக் கண்டு, சக்திசிவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“உனக்கு ரோஸ்ட் வேணாம்னா எனக்கு குடுத்துரு சசி.. சாப்பாட வேஸ்ட் பண்ணக்கூடாது…” எனக் கூறியபடி நிழலினி இலையில் இருந்ததை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.
அவள் தனது இலையில் இருந்து அவள் எடுத்ததைக் கூட உணராமல், இன்னும் சம்பாரில் விரலால் வரைந்துக்கொண்டிருந்தவளைக் கண்டு, “அங்க பாரு விஷா.. பாவம் டா..” என வாயசைத்தான்.
“ஊருக்கு பாடம் எடுத்தா போதாது மச்சி.. கொஞ்சமாது வீட்லயும் வீரத்த காட்டணும். மிருகம் கூட வலிச்சா சீறி தன்னை காத்துக்கும். அந்த அளவுக்கு கூட சொரணை இல்லைன்னா இப்படி தான் திக்கு தெரியாம நிக்கணும். நீ பில் குடுத்துட்டு இவள ஆட்டோல ஏத்திவிடு. இவ வீட்ல இறங்கினப்பறம் வீட்டுக்கு போறேன்…” எனக் கூறிய விஷா ஒரு வார்த்தைக் கூட அவளிடம் பேசாமல் எழுந்து கொண்டாள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த நிழலினி, ஒரு வார்த்தைக் கூட பேசாமல் அவள் சொன்னதை போல ஆட்டோவில் ஏறாமல் அவளது வண்டியின் பின்னே அமர்ந்தாள். அவளது முதுகை இறுக்கப் பிடித்துக் கொண்டு, அவளது முதுகில் முகத்தை புதைத்துக் கொண்டாள்.
“நாளைக்கு நம்ம லீவு போட்டுட்டு ஒரு எடத்துக்கு போகலாம் விஷா… இப்படியே போனா இவ பைத்தியம் ஆகிடுவா..” நிழலினியைப் பார்த்தபடி கூறினான்.
“சரி… காலைல ஃபோன் பண்ணு இவள கூட்டிட்டு வந்துடறேன்..” எனக் கூறிவிட்டு தலையசைத்து வண்டியைக் கிளப்பினாள்.
“கிரி… நான் நிஜமா தான் சொல்றேன். அந்த பொண்ண நான் திருவானைக்காவல் கோவில்ல பாத்தேன். ஒருத்தர் தோள்ல சாச்சிட்டு கூட்டிட்டு போனாரு.. நான் அந்த போட்டோ அனுப்பறேன் பாரு..”
“டேய் லூசு மாதிரி பேசாத.. அவளுக்கு இருக்க ஒரே பிரெண்ட் விஷாலி. அப்றம் அவ கூட டீச்சர் ட்ரைனிங் எடுத்த சக்திசிவன்.. அவன் என்கூட காலேஜ்ல படிச்சவன்.. அவன்தான் இந்த போட்டோல இருக்கான்..”
“நீரஜ் சாயிந்தரம் அந்த பொண்ணுகிட்ட அப்படி பேசினப்பறம் தான் அந்த பொண்ணு..” என பார்த்திபன் முடிக்கும்முன், “கொஞ்சம் உன் நாரவாய மூடு.. மொத நீரஜ் அண்ணா எதுக்கு அவகிட்ட அப்படி பேசினாருன்னு கேளு.. எனக்கு நிழலினி கூட அதிகம் பழக்கம் இல்லைன்னாலும், அவமேல எனக்கு எப்பவும் ஒரு பிடித்தமும், அக்கறையும் இருக்கு.. ஏற்கனவே அவ ரொம்ப காயப்பட்டு இருக்கா.. நீங்களும் காயப்படுத்தாதீங்க…” என கிரிஜா காட்டமாக பேசிவிட்டு அழைப்பை வைத்தாள்.
“டேய் என்னடா ஓவரா பேசிட்டு இருக்கீங்க? அந்த பொண்ணுகிட்ட ஏன் அப்படி கேட்டேன் தெரியுமா? அவங்கம்மா போன மாசமே எங்க வீட்ல ஓகே சொல்லிட்டு அப்பறம் வேணாம்ன்னு சொல்லிட்டாங்க. அவங்கப்பா மூலமா ஒருதடவ இதே பொண்ணு போட்டோ வந்துச்சு.. அப்றம் அதுவும் வேணாம்னு சொல்லிட்டாங்க.. எனக்கு அங்க என்ன நடக்குதுன்னு புரியல அதான் அந்த பொண்ணுகிட்ட நேரா பேச போனேன். ஆனா அந்த பொண்ணு முகமே சரியில்ல, அதான் கொஞ்சம் மூட் மாத்தி விடலாம்னு அப்டி கேட்டேன். அது பாட்டுக்கு கத்திட்டு போயிடிச்சி. நானும் தானே அது பின்னாடியே போய் ரெண்டு மணிநேரம் அங்க உக்காந்திருந்தேன்… அந்த பொண்ணோட ஃப்ரெண்ட் வந்தான் எழுப்பி கூட்டிட்டு போனான்.. எந்த உணர்வும் இல்லாம அந்த பொண்ணு போறத பாத்து எனக்கு மனசே கஷ்டமா போச்சி மச்சான். அந்த பொண்ணுக்கு என்னடா பிரச்சனை? கிரிஜாகிட்ட முழுசா கேட்டு சொல்லு…” எனக் கூறிவிட்டு எழுந்து இல்லம் சென்றான்.
“இவன் சரியில்ல.. அச்சோ இனிமே என்னை தானே கொடைவான் எதுக்கெடுத்தாலும்.. ஏண்டா நீ லவ் பண்றது கூட வேற ஏதாவது பொண்ண பண்ணாம என் ஆளு கூட்டத்துல தான் பண்ணுவியா?”, என தலையில் கைவைத்து அமர்ந்து புலம்பினான்.
“வாடா.. கைகால் கழுவிட்டு வா சாப்பிடுவியாம்…” என அன்னை அழைக்கவும் சாப்பிட அமர்ந்தான். அதன்பின் அவனது நினைவில் நிழலினி பின்னால் சென்றிட, குடும்பத்தவர்களுடன் ஒன்றிவிட்டான்.
“ஏன் கண்ணு அந்த பூங்கா தெரு பொண்னோட அப்பா மறுபடியும் ஃபோன் பண்ணாரு.. அந்த அம்மாவும் சாயிந்தரம் ஃபோன் பண்ணாங்க.. ஏதோ சரியில்லன்னு தோணுது எனக்கு.. நம்ம வேற பொண்ண பாக்கலாமா?” என மகனிடம் கேட்டார் அன்னை கனகா.
“அந்த சம்பந்தம் வேணாம் கனகா.. புருஷன் பொண்டாட்டி அனுசரணை இல்லாதவங்க போல தெரியுது… நமக்கு குடும்பத்த அனுசரிச்சி ஒத்துமையா இருக்க புள்ள தான் சரிபடும்.. மறுபடியும் ஃபோன் வந்தா வேணாம்னு சொல்லிடு” என தந்தை பாலதேவன் கூறினார்.
“புள்ளைய ஒரு வார்த்தை கேட்டுக்கலாம் இருங்க..”
“கொஞ்ச நாள் எந்த பொண்ணும் பாக்க வேணாம்மா… நானே சொல்றேன்.. அப்பறம் பேசிக்கலாம்…” எனக் கூறிவிட்டு தனது அறைக்குச் சென்றான்.
பெற்றவர்கள் அவனைப் பார்த்தபடி இருக்க, “டேய் தம்பி .. இப்ப வேணாம்னா என்ன அர்த்தம்? ஏதாவது பொண்ண புடிச்சிருக்கா உனக்கு?” எனக் கேட்டபடி அக்கா மைதிலி உள்ளே வந்தாள்.
“வாக்கா.. வாங்க மாமா..” என வரவேற்றவன் அக்காவின் மகனைத் தூக்கிக் கொஞ்சியபடி கீழே அமர்ந்து விளையாட ஆரம்பித்தான்.
கனகா வந்தவர்களுக்கு சாப்பிட எடுத்து வைக்க, அனைவரும் சாப்பிட்டு முடித்து வெளியே திண்ணையில் அமர்ந்தனர்.
“ஏன்ப்பா அந்த பொண்ணு வேணாம்? நேர்ல பாத்தப்ப பிடிச்சதால தான நம்மலே வெவரம் தேடி போனோம்..” மைதிலி கேட்டாள்.
“ஆமா கண்ணு.. ஆனா அந்த புள்ளையோட அப்பா அம்மா அனுசரணை இல்லாம பல வருஷமா பேசிக்காம இருக்காங்கலாம்.. அதனால அந்த பொண்ணும் கல்யாணமே வேணாம்னு சொல்லுதாம்.. இப்படிபட்ட சூழ்நிலைல வளந்த புள்ள நம்ம குடும்பத்துக்கு சரிவராது கண்ணு. விசாரிச்சிட்டு தான் வேணாம்னு சொல்றேன்.” என பாலதேவன் பேசிவிட்டு மகனைப் பார்த்தார்.
“எனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்குப்பா.. நான் முயற்சி செஞ்சி பாக்கறேன்.. முடியலன்னா விற்றுவோம்..”
“இது உங்க ரெண்டு பேரோட வாழ்க்கை கண்ணு.. விளையாட்டு இல்ல.. சும்மா அந்த பொண்ண தொந்தரவு பண்ணிட்டு இருக்ககூடாது.” கண்டிப்புடன் பேசினார் பாலதேவன்.
“அவன் அந்த பொண்ண விரும்பறான்ப்பா … “, எனக் கூறியபடி பார்த்திபன் அங்கே வந்தான்.