40 – காற்றின் நுண்ணுறவு
“காத்து வழியா மனச படிக்கறேன்… உங்க மனநிலையும் எனக்கு இப்ப நல்லா தெரியுது… உங்க மனசுல அடிக்கற அபாயமணிக்கு காரணம் உங்க அண்ணன் மட்டும் தான். அவனுக்கு பதில் தெரியும்.. முடிஞ்சா அவன கேட்டுக்கோங்க”, என அவன் விழிப் பார்த்துக் கூறினாள்.
ம்ரிதுள் வல்லகியையும் நாச்சியாவையும் பார்த்துவிட்டு, “மறுபடியும் பாக்கலாம்”, என அங்கிருந்துச் சென்றான்.
“வல்லா… பதில் அதித்க்கு தெரியுமா?”, என நாச்சியா சந்தேகமாக கேட்டாள்.
“அவன் ஆசையா தேட்ற விஷயம் அவனுக்கு தெரியுணும்ல நாச்சியா”
“என்ன சொல்றீங்க வல்லகி?”, இனியன்.
“அவன் தேடறது இருட்ட…. வெளிச்சமா இருக்கற இடத்த இருட்டா மாத்த தான் அவன் நினைக்கறான். அது சம்பந்தமா ஏதோ அவனுக்கு கிடைச்சத வச்சி கடலுக்கு ஆளுங்கள அனுப்பி இருக்கான்”, என ஜேக் மற்றும் ஏஞ்சல் சென்றது முதல், அங்கு நடந்த விஷயங்களைக் கூறினாள்.
அப்போது ஜேக் அங்கே வரவும் அவன் எடுத்தக் காட்சிகளை அவர்களுக்குப் போட்டுக் காட்டக் கூறினாள்.
காட்சியைப் பாதியில் திருத்திய ஜேக் ஒரு இடத்தைச் சுட்டிக்காட்டி, “அங்க ஏதோ இருக்கு… சார்லஸ் சுழல்ல சிக்கி தண்ணிக்குள்ள போயிட்டான். அந்த கடலுக்கு அடில காலியான நிலப்பரப்பு இருக்கு. அங்க இருக்க விஷயங்கள் எல்லாமே விநோதமா இருக்கு. அந்த மயக்க மூட்டும் சுழல் மீன்கள் பாதுகாப்பு அடுக்கு போல பரவி இருக்கு”, என வீடியோவில் இருப்பதைக் காட்டினான்.
“ஏஞ்சல் போன இடத்துல என்ன ஆச்சி?”, நாச்சியா கேட்டாள்.
“பாறைக்கூட்டத்துல அந்த பொண்ணு காணாம போய் இருக்கு. கடைசியா அந்த பொண்ணு சொன்ன வார்த்தை பாறை மிதக்குது…. அதுக்குள்ள தண்ணி போயிட்டு வருதுன்னு தான்… அது பக்கத்துல அந்த பொண்ணு போயிருக்கு. அதுக்கப்பறம் காணோம்”, ஏஞ்சல் தன்னிடம் கூறியதை அவள் மனதை சுவாசம் மூலமாக உள்ளிழுத்து ஏஞ்சல் அனுபவித்த வேதனையை நினைவுகூர்ந்தபடி இப்போது கூறினாள் வல்லகி.
“அந்த இரண்டு இடத்துக்கும் கிட்டதட்ட 7700கி.மீ தூரம் இருக்கு…. இரண்டு மூலைல இரண்டு பேர் காணாம போய் இருக்காங்க… அதுக்கு நடுவுல மடகாஸ்கர் எத்தனை கி.மீல இருக்கு?”, இனியன் கேட்டான்.
“இரண்டு பாயிண்டுக்கும் நடுவுல 5500கி.மீ தூரத்துல மடகாஸ்கர் இருக்கு…. “, ஜேக் தூரத்தைக் கணக்கிட்டுக் கூறினான்.
“சோ ஜேக்….. நீங்க அந்த சுழல் தாண்டி பாத்தது நீளமான நிலபரப்பு .. சரியா?”, நாச்சியா கேட்டாள்.
“தெரியல… எனக்கு தெரிஞ்சது ஒரு உயரமான கோபுரம் மாதிரி இருந்தது… ஆனா இதுலையும் அது சரியா பதிவாகலையே”, என வீடியோவைக் காட்டிப் பேசினான்.
“ஒரு சந்தேகம்… கடல்ல சுழல செயற்கையா உருவாக்க முடியுமா?”, இனியன்.
“அது தெரியல… ஆனா இதுக்கு முன்ன அது நிலபரப்பா இருந்து கடல் புகுந்திருந்தா ஏற்பட வாய்ப்பிருக்கு… ஒரு மேல்மூடிய நீர்வளபாசன அறை மாதிரியான அமைப்பா இருக்கலாம்…. “, நாச்சியா யோசனையுடன் கூறினாள்.
“யூ மீன் pneumatic coission ?”, ஜேக் கேட்டான்.
“நீ ஆர்க்கிடெக்ட் ஆ?”, நாச்சியா அவன் கூறியச் சொல்லினால் கேட்டாள்.
“நோ…. எனக்கு அதுல ஆர்வம் இருக்கு…. சோ …. ஓரளவு தெரிஞ்சிகிட்டேன்”, என ஜேக் பதிலளித்தான்.
“குட் ஒன்… கீப் இட் அப் ஜேக்”, நாச்சியா அவனைப் பாராட்டினாள்.
“சரி…. இப்ப ஐஞ்சு கி.மீ சுற்றளவுல தானே அந்த சுழல் இருக்கு. அங்க இருந்து மடகாஸ்கர் வரைக்கும் பாத்தா நடுவுல ஆப்ரிகா நிலபரப்பு இருக்கே.. கடல்ல எப்படி அவ்வளவு பெரிய காய்ஷன் இருக்கும்? “, இனியன் மீண்டும் முக்கியமானக் கேள்வியைக் கேட்டான்.
“தெரியல இனியன்…. இந்த செய்யுள் படி வாசல் மடகாஸ்கர்ல இருக்கு”, என தசாதிபன் எழுதிக் கொடுத்தச் செய்யுளை அவர்கள் முன் வைத்தாள்.
“இது அவருக்கு உனக்கு மட்டும் புரியணும்னு எழுதி குடுத்திருக்காரு நாச்சியா”, வல்லகி அதைப் படித்துவிட்டுக் கூறினாள்.
“ஆமா வல்லா… ஆனா சாருக்கு அங்க போற வழி , அங்க என்ன இருக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும்னு தோணுது…. ஆனா ஏன் அவரும் அங்க போகணும்னு சொல்றாருன்னு தெரியல”, நாச்சியாவின் மனதில் வெகு நேரமாக அரித்துக்கொண்டிருந்தக் கேள்வியைக் கூறினாள்.
“அங்க போனா தெரியப்போகுது”, பாலா.
“சோ….நம்ம ப்ளான் என்ன? “, ஜேக்.
“நோ ப்ளான்…. சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நடந்துக்கணும்”, வல்லகி.
“ஜேக்… நீ ஏன் எங்க கூட சேர்ந்து வேலை பண்ண நினைக்கற?”, இனியன்.
“நான் டைஸிய கொல்ல தான் வந்தேன்… ஆனா….. அவ…. அவ ரொம்ப பெரிய கொடுமைய அதித் கிட்ட அனுபவிக்கறான்னு இங்க வந்ததும் தெரிஞ்சிகிட்டேன்…. நான் யோகேஷ் கீழ தான் வேலை பாத்தேன். நினைவில்லாம இருந்தப்ப இங்க கொண்டு வந்தாங்க… அதுக்கப்பறம் நினைவு திரும்பினப்பறம் டைஸிய கொல்ல நினைச்சி அதித் இருந்த இடத்துக்கு போனேன். அங்க அவள அவன் படுத்தின கொடுமைய பாத்து எனக்கு ரொம்வே சங்கடமா போச்சி…. ஒரு பொண்ண யாரும் இவ்வளவு கஷ்டப்படுத்தக்கூடாது… அப்படி ஒரு கஷ்டத்த அவ தினம் தினம் அனுபவிக்கறான்னு தெரிஞ்சப்பறம் அவமேல பரிதாபம் தான் வந்தது எனக்கு… சார்லஸ் எனக்கு நல்ல ப்ரண்ட்….அவன கண்டுபிடிக்கணும்னு தான் உங்களோட இருக்கேன்… தவிர ஐ லைக் வல்ஸ்… அவளுக்காகவும் அவ பக்கம் நிப்பேன்….”, என ஜேக் சிரித்தபடிக் கூறினான்.
“உன் அப்பா அம்மாவ கொன்ன டைஸிய நீ மன்னிச்சிட்டியா ஜேக்?”, வல்லகி அவனைக் கேட்டாள்.
“ஆமா வல்ஸ்…. அவள மன்னிச்சிட்டேன்… அவளுக்கு அந்த நரகத்துல இருந்து விடுதலை கிடைக்கணும்னு நினைக்கறேன்”, என ஜேக் கூற வல்லகி அவன் தோள்களைக் கட்டிக்கொண்டு, அவனைத் தட்டிக்கொடுத்தாள்.
பின்னர் ம்ரிதுள் அனுப்பி வைத்த பொருட்களில் வல்லகியின் உதவியோடு ஐந்து பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள்.
பல செய்யுட்களை ஆராய்ந்து அதன் உபயோகிக்கும் முறையையும் அறிந்துக்கொண்டாள்.
பின் வல்லகியைப் பற்றி பிறைசூடனிடம் பேசச் சென்றாள் நாச்சியார்.
“வா நாச்சியா”, என பிறைசூடன் அவளை வரவேற்றார்.
“நீங்கதான் என் அப்பா அம்மாவுக்கு கல்யாணம் செஞ்சி வச்சீங்கன்னு தெரியும். ஆனா நீங்க எப்படி இந்த கூட்டத்துல சேர்ந்தீங்க?”, நாச்சியார்.
“என் ஆராய்ச்சிக்கு பணம் அதிகமா தேவைபட்டது… ஒரு வகைல இவங்க கிட்ட கடன் வாங்கி இங்க சேர்ந்துட்டேன்… நீ எப்படி இருக்க? நீ இங்க வந்தப்பறம் தான் விஷயம் தெரிஞ்சது…. நீ அந்த இடத்துக்கு கூட்டிட்டு போகப்போறியா?”, பிறைசூடன் கலக்கமாகக் கேட்டார்.
“வேற வழி இல்ல… போய் தான் ஆகணும்… நீங்களும் வரணும்… வல்லகிக்கு அங்க எதுவும் ஆகிடக்கூடாது… அது உங்க பொறுப்பு….”
“எதுவும் ஆகாது…. வல்லகி ரொம்பவே திடமா இருக்கா… தன்னை நல்லா கையாள கத்துகிட்டா…. அவளோட திறன் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே தான் போகுது…. அவளுக்கு எந்த ஆபத்தும் வராது”, எனக் கூறினார்.
“அவளுக்கு எந்த விதத்துலையும் வரக்கூடாது…. இனிமே அவள ஆராய்ச்சி பண்ணணும்னு யாரும் அவள தேடக்கூடாது”, என அர்த்தமாகப் பார்த்தபடிக் கூறினாள்.
“யாரும் வரமாட்டாங்கம்மா…. நான் மன்னிப்பு கேட்டதா ஓவியன் கிட்டயும் , அரசிம்மா கிட்டயும் சொல்லிடு…. இதுக்கு மேல என்னால எந்த பிரச்சினையும் உங்க குடும்பத்துக்கு வராது”, என உடைந்தக் குரலில் கூறினார்.
“பெரியப்பா…. ஏன் இப்படி பேசறீங்க “, என பாலாவும் வல்லகியும் ஆளுக்கு ஒரு பக்கம் அவர் தோளில் சாய்ந்துக்கொண்டனர்.
“நாச்சியா… இவர் நம்ம பெரியப்பா… அதை நியாபகம் வச்சிக்கோ…. அவர் வேணும்னு எதுவும் பண்ணல… அவர் அவ்வளவு மோசமானவரும் இல்ல”, என வல்லகிச் சற்றுக் கடுமையாகவே கூறினாள்.
“என்னால ஏத்துக்க முடியாது வல்லா .. ஆனாலும் இவர நீங்க இவ்வளவு நம்பறது ஆச்சரியமா இருக்கு “, என நாச்சியார் தன் மனதில் இருப்பதை வெளிப்படையாகக் காட்டினாள்.
“நீ இருக்கியே……. சரி நாளைக்கு தேவையானத சொல்லு அதை எடுத்துக்கலாம்”, என வல்லகி அடுத்த வேலையைப் பற்றிக் கூறினாள்.
“இனியன் ம்ரிதுள் வரசொல்லுங்க”, நாச்சியார்.
“ஏஞ்சல் உன் டெம்ப்ரேச்சர் டிடெக்டர், அப்பறம் மத்த புது டிவைஸஸ் எடுத்துக்கோ…. தேவைபடலாம்”, என வல்லகி உற்சாகமாகக் கூறினாள்.
“சரி வல்லகி…. மிஸ் நாச்சியார்…. நீங்க என் அப்பாவை மரியாதை இல்லாம பேசறதை என்னால பொறுத்துக்க முடியாது… அவர் வேணும்னு எதையும் பண்ணல…. அதை நீங்க புரிஞ்சிகிட்டா நல்லது….”, ஏஞ்சல்.
“வேணும்னு செய்யாம தான் எடுத்து வளர்த்த உங்க இரண்டு பேரையும் இவனுங்க கிட்ட விட்டாறா? அதுக்கு வேற வார்த்தை சொல்லணும் ஆனா அதை நான் சொல்ல விரும்பல ஏஞ்சல்…. என்னை பொறுத்தவரை அவர் பண்ணது தப்பு… நம்பிக்கை துரோகம்… அதை நான் என்னிக்கும் மன்னிக்கமாட்டேன்…. நாம போறது எப்படிபட்ட இடம்னு யாருக்கும் தெரியாது….லைட் வையிட் ஹை டெக் கேட்ஜெட்ஸ் எடுத்துக்கோங்க….மூச்சு திணறல் ஏற்பட வாய்ப்பிருக்கு… அதுக்கு தகுந்தமாதிரி எதாவது ரெடி பண்ணுங்க”, எனக் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.
ஏஞ்சல் பிறைசூடனைப் பாவமாகப் பார்த்துவிட்டு அங்கிருந்துச் சென்றாள்.
நாச்சியார் கூறிய வார்த்தையின் வீரியம் அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பாலாவும் வல்லகியும் பிறைசூடனுடன் சிறிது நேரம் அளவளாவி விட்டு வருவதாக இனியனை அனுப்பி வைத்தனர்.
“மேம்… அடுத்து என்ன ப்ளான்?”, இனியன் நாச்சியாரிடம் கேட்டான்.
“சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நடந்துக்கணும் இனியன். வல்லகி பாலாவ நீங்க தான் பாத்துக்கணும். அவங்க இரண்டு பேருக்கும் எதுவும் ஆகக்கூடாது”, நாச்சியார் மனம் கனத்தது.
“ஆகாது மேம். உங்களுக்கும் எதுவும் ஆக விடமாட்டோம்…. உங்களுக்கு சொல்லணும்னு இல்ல நீங்க தைரியமா தான் இருக்கீங்க.. அத அப்படியே மெயின்டெயின் பண்ணுங்க போதும்… “, இனியன்.
ம்ரிதுள்ளை சந்திக்க வேண்டும் என இனியனிடம் கூற, அவனுக்கு தகவல் கொடுத்தான்.
“என்ன நாச்சியா வரசொன்னியா?”, எனக் கேட்டபடி ம்ரிதுள் வந்தான்.
“ம்ம்…. நாளைக்கு எத்தனை பேர் ஏற்பாடு செஞ்சி இருக்கீங்க?”.
“ஐம்பது பேர்… “.
“அவங்க குடும்பமெல்லாம்?”
“தேவையானது எப்பவும் போகும் அவங்க இல்லைன்னாலும்… “, என அழுத்திக் கூறினான்.
“ம்ம்…. வெறும் பணத்த வச்சி சந்தோஷத்தையும், மனுஷங்க குடுக்கற அன்பையும் நிறைக்க முடியாது ம்ரிதுள்….”, எனக் கூறியவள், “நாளைக்கு சாயந்திரம் நாலு மணிக்கு அங்க இருக்கணும்… அதுக்கு தகுந்தமாதிரி பாத்து கிளம்பலாம்…. “, என ஒரு பெருமூச்செடுத்துக் கூறினாள்.
“ம்ம்…. “, என அவன் கூறியதும் நாச்சியா எழுந்து நடந்தாள்.
“நாச்சியா … ஒரு நிமிஷம்…..”, என அழைத்தான்.
திரும்பி அவனைப் பார்த்தாள், “எனக்கு அதித் முக்கியம்… அதே மாதிரி எதுவும் தப்பா நடக்கவும் நான் விடமாட்டேன்… ஐ ப்ராமிஸ் யூ”, எனக் கூறினான்.
“பாக்கலாம்”, எனக் கூறிவிட்டு அவள் தன்னறை நோக்கி நடந்தாள்.
ம்ரிதுள் அவள் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
“ஹ்ம்ம்…. அவங்க போய் ரொம்ப நேரமாச்சி”, என இனியன் குரல் கொடுத்தான்.
“நீ என்ன பண்ணிருக்க… உன் ப்ரண்ட்ஸ் அங்க போயிட்டாங்களா?”, எனக் கேட்டான் ம்ரிதுள்.
“நான் ஒன்னும் பண்ணல…. போகப்போற இடத்துக்கு தகுந்தமாதிரி நடந்துப்பேன் அவ்வளவு தான். உங்கள இன்டர்காப் தொட முடியல… உன்ன அரெஸ்ட் பண்றதும் வேஸ்ட் தான். எனக்கு தேவை மூணு பொண்ணுங்களும் பத்திரமா இருக்கணும். அதை மட்டும் தான் நான் செய்யப்போறேன்…. “, எனத் திடமாகக் கூறினான்.
“ம்ம்… ஆல் தி பெஸ்ட்….”, எனக் கூறிவிட்டுச் செல்பவனை இனியன் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தான்.
அங்கிருந்து தன் அறைக்கு வந்த ம்ரிதுள், யோகேஷை அழைத்து சில விஷயங்களைக் கூறிவிட்டு , ஏஞ்சலிடம் இருந்து சில தகவல்களை அவனுக்கு அனுப்பி வைத்தான்.
விடிகாலையில் தனி விமானத்தில் அதித் ஒவிஸ்கர் முதல் ம்ரிதுள் நாச்சியா வல்லகி பாலா என அனைவரும் கிளம்பினர்.
நாச்சியா இனியனிடம் அவளது பையைக் கொடுத்துப் பத்திரமாக வைத்துக்கொள்ளும்படிக் கூறினாள்.
“என்ன இருக்கு?”, இனியன்.
“சாவி”
“இவ்வளவா?”
“ஆமா…. பத்திரம்… இது இல்லைன்னா எதையும் திறக்க முடியாது”, எனக் கூறிவிட்டு வல்லகி மற்றும் பாலா அருகில் சென்று அமர்ந்துக் கொண்டாள்.
“நாச்சி… ஏன் இவ்வளவு டென்ஷனா இருக்க?”, என வல்லகி கேட்டாள்.
“என்ன நடக்கும்னு பதற்றம் தான் வல்லா… நீங்க இரண்டு பேரும் இங்க இருக்கறது தான் எனக்கு இவ்வளவு பதற்றம் குடுக்குது”, நாச்சியா.
“எங்களுக்கு ஒன்னும் ஆகாதுக்கா… நீங்க கவலப்படாதீங்க… நாம பத்திரமா வீட்டுக்கு ஒன்னா போலாம்”, என பாலா அவளைத் தேற்றினாள்.
இருவரையும் இரு தோள்களில் சாய்த்துக்கொண்டவள் தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.
அதித் ஒவிஸ்கர் டைஸியுடன் தனியறையில் இருந்தான்.
டைஸியின் அலறல் அங்கிருந்தவர்களுக்கு நன்றாகவே கேட்டது.
ஜேக் அவளை எப்படியாவது இவனிடம் இருந்து விடுவித்துவிட வேண்டும் என மனதில் உறுதிக் கொண்டான்.
ஒரு மணிநேரம் கழித்து உடலெல்லாம் இரத்தம் வழிய வெளியே வந்தவளை ஜேக் தாங்கிப்பிடித்து, அவளுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு தூக்கிச்சென்றான்.
ம்ரிதுள் மன இறுக்கத்துடன் தன் புஜங்களை இறுக்கினான்.
டைஸிக்கு புத்துணர்ச்சி தரும் வைத்திய முறையைக் கொடுத்த அரைமணிநேரத்தில் மிடுக்குடன் வெளியே வந்தவள் அதித் அருகில் அமர்ந்து அவனைப் பார்த்துக்கொண்டாள்.
இவர்களுக்கு நடுவில் நடக்கும் விஷயத்தைப் புரிந்துக்கொள்ள முடியாமல் மற்றவர்கள் குழம்பிதான் போயினர்.
“வந்துட்டியா டைஸி… ஐ மிஸ்ட் யூ”,என அவளை தன் தோளில் சாய்த்துக்கொண்டான்.
“நான் இங்க தான் இருக்கேன் டியர்… உங்க ஆசை நிறைவேறப் போகுது… அதை மட்டும் நினைங்க டியர்…”, என அவனைத் திசைத்திருப்பிக்கொண்டிருந்தாள்.
ஜேக் தூரத்தில் இருந்து அவளைக் கவனித்தபடி இருந்தான்.
வல்லகி ஜேக்கை அழைத்து அவன் காதுகளில் சில விஷயங்களைக் கூறி அனுப்பினாள்.
“வகி.. அப்படி அவன் அவள என்ன பண்றான்”, பாலா.
“போற இடத்துல தெரியும்”, எனக் கூறி அமைதியாகிவிட்டாள் வல்லகி.
இட்சிங்கி….. மடகாஸ்கரின் மேற்கு பகுதியில் இருக்கும் ஒரு சதுப்பு நிலப்பகுதி… இதைப் பாதுகாக்கப்பட்டப் பகுதியாக அறிவித்துள்ளனர்.
அதித், விமானம் தரையிறங்கியதும் பெரிய வேன்களில் மற்றவர்களை ஏற்றிக்கொண்டு இட்சிங்கி நோக்கிச் சென்றான்.
மடகாஸ்கர் தான் இன்றும் பல அரிய உயிரனங்கள் வாழும் பிரதேசமாக இருக்கிறது. உலகெங்கிலும் காணப்படும் பல வகை மிருகங்கள் அந்த தீவில் காணப்படுகிறது.
இட்சிங்கி அடைந்ததும் காட்டு வழியே நடக்கத்தொடங்கினர்.
முன்னால் பத்து அடியாட்களுக்குப் பின் ம்ரிதுள், நாச்சியா, வல்லகி, பாலா, இனியன், ஏஞ்சல், பிறைசூடன், ஜேக் என வரிசையாக வந்தனர்.
அதற்கு பின் சில அடியாட்கள் விட்டு அதித் டைஸி நடுவில் வந்தனர். அதற்கு பின் அடியாட்கள் வரிசையில் பாதுகாப்பு வளையம் அமைத்துச் சுற்றிலும் பார்வையைச் சுழற்றியபடி நடந்தனர்.
“இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”, ம்ரிதுள் கேட்டான்.
“பாறைக்கூட்டம் கிட்ட போகணும்….. ப்ரோபஸர் எங்க இருக்காரு ன்னு பாக்கணும்… அவருக்கு தான் இனிமே தெரியும்”, என நாச்சியார் பதிலளித்தாள்.
“உன் ப்ரோபஸர் உன்ன தான் நினைச்சிட்டு இருக்காரு நாச்சி… “, என மூச்சை உள்ளிழுத்தபடி வல்லகி கூறினாள்.
“எங்க இருக்காரு?”, ம்ரிதுள்.
“நான் மோப்ப நாய் இல்ல ம்ரிதுள்… எதிர் வந்த காத்துல அது எனக்கு தெரிஞ்சது…. ஆளுங்கள அனுப்பி தேடச்சொல்லுங்க”, என வல்லகி முறைப்புடன் கூறிவிட்டு சுற்றிலும் உள்ள காற்றை உள்ளிழுத்து வெளியேற்றிக்கொண்டிருந்தாள்.
“என்ன ம்ரிதுள்?”, எனக் கேட்டபடி அதித் முன்னே வந்தான்.
“ப்ரோபஸர் தசாதிபன் இங்க இருக்காரு… எங்கன்னு தேடணும்”, ம்ரிதுள்.
“ஓ…. பொழச்சிட்டாரா? நீயும் அதை என்கிட்ட சொல்லல…. சரி அவர கூட்டிட்டு வாங்க… நேரமாகுது”, எனக் கூறிவிட்டு நாச்சியார் அருகில் வந்தான்.
நாச்சியார் அவனைச் சுட்டெறிக்கும் பார்வைப் பார்க்க, “இந்த பார்வை வேணாம் நாச்சியா….நீயும் என் எண்ணத்துக்கு துணைபோனா இன்னும் நல்லா இருக்கும்… உன்னால தான் இதுவரைக்கும் வந்தேன்…. உனக்கு பெருசா எதாவது செய்ய ஆசைப்படறேன்”, என அவளைச் சுற்றி நடந்தபடிக் கூறினான்.
“முதல்ல உள்ள போக முடியுதான்னு பாரு அதித்.. பகல் கனவு காணாத”, என நாச்சியார் அவனைத் தாண்டி சென்று வல்லகி அருகில் நின்றுக்கொண்டாள் .
“நான் இருட்ட தான் கனவா பாக்கறேன்”, என தனக்குத் தானே கூறிக்கொண்டு கழுத்தில் அணிந்திருந்த டாலர் செயினை வெளியே இழுத்துப் போட்டுக்கொண்டான்.
வல்லகி அவன் செயலையும், அவனையும் ஆராய ஆரம்பித்தாள். பின்,”நாச்சி… உன் பேக்கட்ல என்னவோ இருக்கு பாரு”, எனக் கூறினாள்.
அன்று இரண்டு சித்தர்கள் கொடுத்தபோது நம்பிக்கையில்லாமல் பார்த்த வேர் அவளது பேண்ட் பாக்கெட்டில் இருந்தது.
“இன்று உனக்கு இது கண்டிப்பாக தேவைப்படும் நாச்சியா… “, என்ற வாக்கியம் அவள் மனதில் ஒலித்தது.
“ஆமா… பத்திரமா வச்சிக்க நாச்சி…. நிறையவே தடைகள் இருக்கு…. ஆனா கடைசி கட்டத்துல தான் இதை நீ உபயோகிக்கறமாதிரி வரும்”, என வல்லகியும் நாச்சியாவின் கையைப் பிடித்தபடிக் கூறினாள்.
ம்ரிதுள் அருகில் இருந்த உயரமான மரத்தில் ஏறி, பைனாகுலரில் சுற்றிலும் மனிதர்கள் தென்படுகிறார்களா எனப் பார்த்தான்.
ஏஞ்சல் டெம்ப்ரேச்சர் பைண்டர் வைத்து மனித உடலின் வெட்பம் அருகில் இருக்கிறதா என ஆராய்ந்தாள்.
எண்ணூறு அடி தூரத்தில் மூன்று மனித வெட்ப அலைகள் காட்டியது.
நாச்சியாவிடம் அதைக் காட்டிய ஏஞ்சல் காட்டில் இருந்தபோது உபயோகித்த சீழ்க்கை ஒலியை எழுப்பினாள்.
பதில் ஒலி கிடைத்ததும் முகம் மலர முன்னே நடந்தாள்.
சில நிமிடங்களில் தசாதிபன் கண்ணெதிரே தென்பட்டார். அவரும் ஆர்வமாக நாச்சியாவை எதிர்கொண்டு அணைத்துக்கொண்டார்.
“ஏஸ் ஆல்வேஸ் ப்ரேவ் கேர்ள்… “, என அவள் முதுகைத் தட்டிக்கொடுத்தார்.
“எப்படி இருக்கீங்க சார்?”
“நான் நல்லா இருக்கேன் நாச்சியா…. நீ எப்படி இருக்க? நம்ம டீம் எப்படி இருக்காங்க?”, அவளுக்கு பின்னால் வருபவர்களையும் அளந்தபடி அவளிடம் விசாரித்தார்.
“அவங்கள எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க சார்”, என நாச்சியா தான் டென்ட் விட்டு சென்றதில் இருந்து நடந்த விஷயங்களைச் சுருக்கமாக அவரிடம் கூறினாள்.
“ஹலோ மிஸ்டர் ம்ரிதுள்…. தேங்க்யூ….. “, என அவனுக்குக் கைக்கொடுத்தார்..
“நான் உங்கள சுட்டேன். எனக்கு ஏன் கைகுடுக்கறீங்க?”, ம்ரிதுள் சந்தேகமாகப் பார்த்தபடிக் கேட்டான்.
“அதனால தான் என்னால இந்த இடத்த தெரிஞ்சிக்க முடிஞ்சது”
“புரியல”
“சொன்னாலும் புரியாது… மிஸ்டர் அதித் ஒவிஸ்கர் எங்க?”, என அவராகவே அவனைக் கேட்டார்.
“இங்க தான் இருக்கேன் மிஸ்டர் தசாதிபன். எல்லாம் தெரிஞ்சிகிட்டு தான் இங்க வந்திருக்கீங்க…. தைரியம் தான்”, என அவரை மெச்சலானப் பார்வைப் பார்த்துக் கைக்குலுக்கினான்.
“நீயே இவ்வளவு தைரியமா வரும்போது நான் வரமாட்டேனா ஒவிஸ்கர்…. களத்துல இறங்கிட்டோம்…. யாருக்கு வெற்றின்னு பாக்கலாம்”, என மர்மமாகப் புன்னகைத்தபடிக் கூறினார் தசாதிபன் .
இருவரின் சம்பாஷணையும் அங்கிருந்த மற்றவர்களுக்குப் புரியவே இல்லை.
ஜேக் இனியனை கேட்க அவனும் உதடுப் பிதுக்கிப் புரியவில்லை என்றான்.
வல்லகியும் பாலாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டுத் தோளைக் குலுக்கிக் கொண்டனர்.
சிறிது நேரத்தில் தர்மதீரனும் சுதாகரும் வந்து சேர்ந்தனர்..
நாச்சியா தர்மனைப் பார்த்துவிட்டுப் புன்னகைத்தாள். தர்மனும் பதிலுக்குப் புன்னகைத்துவிட்டு ம்ரிதுள் மற்றும் அதித்-ஐ கண்டான்.
“இவங்க தர்மதீரன் அண்ட சுதாகர்… எனக்கு ஹெல்ப் பண்ண வந்திருக்காங்க….”, எனப் பொதுவாகக் கூறினார்.
“தெரியும்…. தமிழ்நாட்டோட இரண்டு பெஸ்ட் டீடெக்டீவ்ஸ்…. “, என ம்ரிதுள் முன்னே வந்து அவர்களுக்குக் கைக்கொடுத்தான்.
“உனக்கு கை குடுக்கறதால நீயும் நானும் ஒரே பக்கம் நிக்கப்போறதில்ல ம்ரிதுள்… ஆனா உன்ன பாராட்டியே ஆகணும்… எவ்ரி சிங்கிள் மூவ் நீ கேல்குலேட் பண்ணி ஆளுங்கள வழிநடத்தின…. “, என தர்மதீரன் அவனைப் பாராட்டினான்.
“இவனும் நாச்சியாவும் ஒரே மாதிரி போல ம்ரிதுள். கை குடுத்தா அவங்களும் குடுக்கணும்ங்கற மேன்னர்ஸ் இல்ல”,எனக் கூறியபடி அதித் அவனை அருகில் வந்து அளந்தான்.
“உங்க கைல விலங்கு மாட்ட கைநீட்டுவான் மிஸ்டர் ஒவிஸ்கர்”, எனக் கூறிவிட்டு தசாதிபனிடம், “நேரமாச்சி சார்”, என அவரை கிளப்பினான் சுதாகர்.
அதித் கோபத்தில் கண்காட்ட ஒருவன் சுதாகரைத் தாக்க முனைந்தான்.
வல்லகி நொடியில் தாக்கவந்தவனை மயங்கி சரியவைத்தாள்.
அவளின் இந்த வித்தையை இதுவரை யாரும் அறியாததால் சற்றே ஆச்சரியமாகத் தான் பார்த்தனர்.
“இங்க இரண்டு பேருக்கும் தேவை அந்த இடத்துக்கு போறது. ஆனா நோக்கம் வேற வேற… இதுக்கு நடுவுல எங்க ஆளுங்கள யாராவது எதாவது பண்ண நினைச்சா நாங்க சும்மா இருக்க முடியாது”, என வல்லகி பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டபடிக் கூறினாள்.
“நீ சொல்றது பிடிச்சிருக்கு கார்ஜியஸ்…. ஆனா நீ எனக்கு முன்ன இப்படி பேசி தப்பு பண்ணாத… இன்னொரு முறை நான் பொறுத்துக்க மாட்டேன்”, என அந்த செயினை இழுத்து கையில் சுற்றிக்கொண்டு டைஸி அருகில் சென்றான்.
“நோ டியர்… கோவப்படாதீங்க”,என டைஸி அவன் கொடுக்கும் ரணங்களைப் பல்லைக் கடித்தபடித் தாங்கிக்கொண்டாள்.
அந்த செயினில் இருந்த கூரான பகுதியில் அவள் தோளைத் திருகி எடுக்க அந்த இடத்தின் மேல் சதை அந்த டாலரில் ஒட்டிக்கொண்டு வந்தது. மேலும் சொல்ல முடியாத பல வகை வதைகளை அவள் அனுபவித்துக் கொண்டிருந்தாள்.
இப்படியாக கண்ணில் படாத சதையும் அவனால் கொடூரங்களை அனுபவித்தது . டைஸி வலியுடன் அருகில் இருந்த பெண்ணை மருந்திட உத்திரவிட்டு, போதை மருந்துள்ள சிகரெட்டை பற்றவைத்து அவனுக்குக் கொடுத்தாள்.
அவன் டைஸி அருகில் சென்றதும், ம்ரிதுள் தசாதிபனோடு தனியே சென்று அந்த இடத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தான்.
“அங்க என்ன இருக்கு? அன்னிக்கு சொன்ன பதில இன்னிக்கும் சொல்லாதீங்க ப்ரோபசர்”, என ம்ரிதுள் கேட்டான்.
“நேர்ல பாத்து தெரிஞ்சிக்க”, என ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டவர், தர்மன் அருகில் சென்று நாச்சியாவை முன்னே அழைத்துக்கொண்டு வரச்சொல்லி நடந்தார்.
“நாச்சியா”, என தர்மன் அழைக்க நாச்சியா அவனுடன் சென்றாள்.
வல்லகியும் பாலாவும் அவள் பின்னாலே சென்றனர்.
உடன் இனியன், ஜேக், ஏஞ்சல், பிறைசூடன் என அனைவரும் சென்றனர்.
அவர்களுக்குப் பின் சிலரை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு அதித் உடன் வருமாறு மற்றவர்களுக்கு உத்திரவிட்டு முன்னே நடந்தான் ம்ரிதுள்.
“சார்… அடுத்து எங்க போகணும்?”, என நாச்சியா கேட்டாள்.
“அங்க தெரியற பாறை கூட்டத்துக்கு போகணும் நாச்சியா… உன் தங்கச்சியால தான் வழி காட்ட முடியும்….”, எனக் கூறினார்.
“அவ எப்படி சொல்ல முடியும் சார்?”, பாலா.
“அந்த பாதைல ரொம்பவே அழுத்தமான, உஷ்ணமான நினைவுகள் படர்ந்திருக்கும். உன்னால காத்த படிக்கமுடியும்… அதான்”, என அவள் கண்களைப் பார்த்துக்கூறினார்.
“அந்த காத்து அங்கயே இருக்கும்னு எப்படி சொல்ல முடியும்? நீங்க சொன்ன நினைவுகள் பலநூறு வருஷங்களா அங்கயே சுத்திட்டு இருக்குமா?”
“ஆமா…. அசாதரணமான விஷயங்கள் நடந்த இடங்கள்ல அங்க நடந்த நினைவுகள் அங்கயே தான் சுத்திட்டு இருக்கும் வல்லகி… பல கோடி வருஷமானாலும் அதோட தடையங்களும் அங்க தான் இருக்கும்… நீ அத பாத்து முன்ன போ”, எனக் கனத்த மனதுடன் கூறி முடித்தார்.
“என்ன இருக்கு சார் அங்க?”, நாச்சியார் அவரின் வருத்தம் தோய்ந்த முகம் பார்த்துக்கேட்டாள்.
“இந்த உலகத்துக்கு ஆபத்து தர இடத்துக்கு போறோம் நாச்சியா…. இதுக்கு மேல என்னை எதுவும் கேக்காத… இது தான் ஒவ்வொரு வாயிலும் திறக்கவேண்டிய முறை. அதுக்கான பொருள இங்கயே எடுத்து வச்சிக்க… நாலு மணிக்கு நாம இங்க இருந்து கிளம்பலாம்”, எனக் கூறிவிட்டு அவர் தனியாக ஓர் இடத்தில் தியானத்தில் அமர்ந்துவிட்டார்.
நாச்சியா இனியன் கொண்டு வந்த பையை கேட்க, அவன் அதை எடுத்துக் கொடுத்தான்.
தசாதிபன் எழுதி வைத்தக் குறிப்பின் படி, நாச்சியார் ஒவ்வொரு பொருளையும் வரிசை வாரியாக எடுத்து வைக்க ஆரம்பித்தாள்.
அனைத்தும் செய்யுளாக இருக்க இனியனும் தர்மனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு, “இந்தாளு நம்மல ஒன்னும் தெரியாம முழிக்க வைக்கணும்னே கங்கணம் கட்டிட்டு இருப்பாரு போல…. இது நாச்சியா மேம்க்கு தான் புரியும்”, எனச் சலித்துக்கொண்டான்.
“நானும் உதவி பண்ணலாமா ?”, என ம்ரிதுள்ளும் அவர்களுடன் கலந்துக்கொண்டான்.
அந்த தமிழை அவன் படித்து விளக்கம் கூறி ஜேக்கை வரிசைபடுத்தக் கூறிக்கொண்டிருந்தான்.
ஏஞ்சல் ஒரு பக்கம் அந்த பொருட்களின் உடற்கூறுகளை ஸ்கேன் செய்து சேமித்துக்கொண்டாள். பிறைசூடன் அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
சுதாகரனும், தர்மனும் ஒரு பக்கம் நாச்சியாவிற்கு உதவிக்கொண்டிருந்தனர்.
வல்லகி தனக்குள் ஏதோ நடப்பதை உணர்ந்து அங்கிருந்து சற்று தள்ளி நடந்து சென்று மரத்தினடியில் அமர்ந்தாள்.
அவளது சுவாசம் சீர்கெட்டுக்கொண்டிருந்தது.
பாலா அவளைக் கவனித்துவிட்டு, “பெரியப்பா… வகிக்கு என்னமோ ஆகுது”, எனக் கத்தினாள்.
அனைவரும் அவளிடம் சென்றனர். நாச்சியார் அவள் மூச்சு விட சிரமப்படுவதைக் கண்டு வேதனைகொண்டு பிறைசூடனைப் பார்த்தாள்.
அவர் அவசரமாக ஒரு மருந்தை ஊசியில் ஏற்றி வந்து அவளுடம்பில் செலுத்தினார்.
“என்னாச்சி வல்லகி? இங்க சுத்தமான காத்து இல்லையா?”, எனக் கேட்டார்.
“காத்துல உஷ்ணம் அதிகமா இருக்கு பெரியப்பா… நெருப்பு புகையற ஸ்மெல் வருது…. நேரம் ஆக ஆக அது அதிகமாகுது”, என வல்லகி மூச்சு விடச் சிரமப்பட்டபடிக் கூறினாள்.
தர்மன் அவள் படும் சிரமம் கண்டு வருந்தி அவளகில் சென்று, “வல்லகி….. உன்ன நீ கன்ட்ரோல் பண்ணு…. எந்தளவுக்கு அந்த காத்து உனக்குள்ள போகணும்னு முடிவு பண்ணி உள்ள இழு….”, எனக் கூறினான்.
“முடியல சீனியர்… எரிமலைக்கு பக்கத்துல நிக்கற மாதிரி இருக்கு”, என அவன் கையைப் பிடித்துக்கொண்டாள்.
“நாச்சியா…. இவ உடம்பு கொதிக்குது”,என தர்மன் கூற ஏஞ்சல் அவள் உடல் உஷ்ணத்தைக் கண்டு பிரமித்து நின்றாள்..
“இத்தனை நாள்ல இந்த அளவுக்கு இவங்க உடம்பு சூடாகல…. சார்.. இதை பாருங்க”, என அவரிடம் மானிட்டரைக் காட்ட அவரும் குழம்பினார்.
“இப்ப என்ன பண்றது?”, தர்மன் கேட்டான்.
“அந்த மூலிகை செடிகள எடுத்துட்டு வாங்க”, என பிறைசூடன் கூறவும் ம்ரிதுள் உடனே எடுத்துவரக் கூறினான்..
அவர்கள் கொண்டு வந்த எந்த மூலிகையும் அவள் உஷ்ணத்தை குறைக்கவில்லை, மாறாக அதை அவள் தாங்கும் சக்தியை கொடுத்தன.
சுதாகரும் இனியனும் தசாதிபனைக் கண்காணித்தபடி, அங்கும் பார்த்துக்கொண்டிருந்தனர்.
இருபது நிமிடத்தில் அத்தனை செடிகளும் பஷ்மமாகி இருந்தது.
வல்லகி மயங்கிச் சரிந்திருந்தாள். அவளை நாச்சியார் மடிதாங்கிக் கொள்ள, பாலாவும் ஜேக்கும் அவளுக்கு விசிறினர்..