41 – அகரநதி
அகரன் மற்றும் நதியாளின் திருமணம் ஊர்கூட்டி விருந்துக் கொடுத்து அறிவிக்க பெரியோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அனைத்தும் துரிதகதியில் சிறப்பாக நடந்துக் கொண்டிருந்தது.
சரண் புதன்கிழமை காலையிலேயே மண்டபம் அலங்கரிக்க ஆட்களை அனுப்பிவிட்டான்.
அகரன் மற்றும் நதியாளின் விருப்பபடி மேடை அலங்காரம் முதல் மலர் மாலை, லைட்டிங், வரவேற்பு அலங்காரம் என அனைத்தும் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது.
விருந்து முடிந்து கருப்பசாமிக்கு கெடாவெட்டுவதால் சனி , ஞாயிறு இரண்டு நாட்களும் மண்டபத்தை எடுத்துக் கொண்டனர் மணமக்கள் வீட்டினர்.
புதன்கிழமை வருவதாக சொன்ன அகரன் வேலைக் காரணமாக வெள்ளிக்கிழமை தான் வீடு வந்து சேர்ந்தான்.
அகரன் ஊருக்கு சென்றதும் நதியாளை கண்ணன் ராதாவுடன் இருக்க அனுப்பி வைத்துவிட்டனர் சுந்தரம் தாத்தாவும் மீனாட்சி பாட்டியும்.
விருந்து முடிந்து அழைத்துக் கொள்வதாக கூறிவிட்டனர்.
நதியாள் எவ்வளவோ முயன்றும் அகரனுடன் சென்னை செல்ல வீட்டில் யாரும் அனுமதிக்கவில்லை.
அகரனும் பேசிப்பார்த்து பின் ஒரு வாரம் தானே என்று மனதைத் தேற்றிக்கொண்டுச் சென்றுவிட்டான். அதில் நதியாள் அவன்மீது கோபம் கொண்டு இன்று வரை பேசவில்லை.
அதுவும் அவன் புதன்கிழமை வருவதாகக் கூறிவிட்டு, வெள்ளிக்கிழமை வந்ததால் கோபம் பலமடங்கு பெருகி ருத்திர தாண்டவம் ஆடக் காத்திருந்தாள் நம் அகரனின் கண்மணி.
“அகரா…… என்னப்பா பிரயாணம் சவுகரியமா இருந்ததா? சாப்டியா?”, என சுந்தரம் தாத்தா அவன் வீட்டிற்குள் வந்ததும் கேட்டார்.
“நல்லா இருந்தது தாத்தா. வரும்போதே சாப்டுட்டேன். நீங்க இன்னும் தூங்கலியா தாத்தா?”, அகரன்.
“தூங்கணும் கண்ணு. நீ வருவன்னு தான் பாத்துட்டு இருந்தேன். நாளைக்கு காலைல சீக்கிரம் எந்திரிக்கணும்ல போய் தூங்கு. மீனா புள்ளைக்கு பால் குடு “, என உள்ளே சத்தம் கொடுத்தார்.
“வந்துட்டேன்ங்க…. வா ராசா….. என்னப்பா நாளைக்கு விஷேசத்த வச்சிட்டு இன்னிக்கு ரா பொழுது தான் வீட்டுக்கு வர…. முன்னமே கிளம்பி வரவேண்டியது தானு”, எனக் கரிசனமாக கேட்டார் மீனாட்சி பாட்டி.
“கொஞ்சம் அவசரவேலை பாட்டி. சரணும் இங்க வியாழக்கிழமை வந்துட்டான். நானும் இல்லைன்னா அப்பறம் வேலை நடக்காது . அதான் முடிச்சிகுடுத்துட்டு வந்தேன். ஞாயித்துகிழமை மத்தியமே கிளம்பணும் தாத்தா”, அகரன் குரலில் சோர்வு நன்றாகத் தெரிந்தது.
“என்னப்பா உடனே கிளம்பணும்ங்கற…. விஷேசம் முடிஞ்சி மறுவீடு போகணும் அங்காளி பங்காளி மாமன் வீட்டுக்கு எல்லாம் விருந்துக்கு போகணும்யா…. “, சுந்தரம்.
“அதுல்லாம் இன்னொரு நாள் வச்சிக்கலாம் தாத்தா. இப்ப நான் கட்டிட்டு இருக்கற ஒரு கட்டடம் முடியற கட்டத்துல இருக்கு. சென்னைல நாம ரிசப்ஷன் வைக்கிற நாள்ல தான் அவங்க கிரஷப்பிரவேசம் வச்சி இருக்காங்க. அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சி குடுக்கணும்”, அகரன்.
“அதுல்லாம் சரண் பாத்துப்பான் விடுய்யா…. இங்க இருந்து நீ சொன்னா செய்யறதுக்கு ஆளு இருக்கறப்ப நீ ஏன் ஓடற? இந்த சடங்கெல்லாம் கையோட செஞ்சிடணும். நீ மறுக்க கூடாது”, சுந்தரம்.
“இல்ல தாத்தா… அது….”, அகரன் இழுக்கவும்.
“ஏ ராசா…. உன் கல்யாணத்த தான் நாங்க கண்குளிர சந்தோஷமா பாக்க முடியல இந்த சடங்காவது பாத்து நிறைவா செய்யணும்னு ஆசைபடறோம். கொஞ்சம் அனுசரிச்சிக்க கண்ணு”, என மீனாட்சி பாட்டி கண்ணகளில் நீர் கோத அகரனின் தாடைப் பிடித்துக் கேட்டார்.
அவரின் வார்த்தைகளில் இருந்த வலி, அகரனை அடிவாங்கியது போல மனதில் வலிக்கச் செய்தது.
உடனே அவன்,” சாரி பாட்டி… சாரி தாத்தா…. அவசரத்துல நதி கழுத்துல தாலி கட்டிட்டேன். அந்த நேரத்துல அவ என்னைவிட்டு போயிட்டா என்ன பண்றதுன்னு பயத்துலயே யாரையும் கேக்காம பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க”, என அகரனும் கண்களில் நீர்வழிய இருவரையும் அணைத்தபடி மன்னிப்புக் கேட்டான்.
“இது நீ சொல்லணுமாய்யா? எங்களுக்கே நெஞ்சு துடிக்கறத நிறுத்திரிச்சி யாரு கட்டினான்னு நினைக்கறப்பவே…. உன் மனசு எங்களுக்கு புரியாதா? ஏதோ கெட்டதுல நல்லதா நீயே தாலி கட்டிட்ட அந்த புள்ளைக்கு….. அவளுக்கு நிறைய ஆசை கண்ணு உங்க கல்யாணத்த பத்தி. ஆனா சட்டுன்னு நீ தாலி கட்டவும் புள்ளைக்கு வருத்தம் இருந்தாலும் வெளி காமிச்சிக்காம எங்க மனச இந்த ஒரு வாரத்துல தேத்திட்டாயா….. இந்த பொண்ண விட ஏத்தவ யாரும் உனக்கு கிடைக்கமாட்டாயா…. “, என மீனாட்சி பாட்டி அவனை சமாதானம் செய்தார்.
“சரி மீனா. புள்ளை மனச கஷ்டப்படுத்தாத. நீ போய் படு ராசா”, என சுந்தரம் தாத்தா மீனாட்சி பாட்டியை அதட்டினார்.
” தாத்தா அப்பா அம்மா எங்க?”, அகரன் அப்பொழுது தான் கவனித்தான்.
“அவங்க பக்கத்து ஊருக்கு போய் இருக்காங்க. வந்துடுவாங்க… நீ உன் பெட்டிய எடுத்துட்டியா வண்டில இருந்து….”, சுந்தரம் தாத்தா.
“அச்சோ மறந்துட்டேன். என் பிரண்ட் ஒருத்தனும் வந்து இருக்கான் அவன் கார்லயே தூங்கிட்டு இருக்கான்”, என வெளியே சென்றுக் காரில் தூங்கிக் கொண்டு இருந்தவனை எழுப்பினான் அகரன்.
“டேய் எந்திரி டா… நானே முழுசா ட்ரைவ் பண்ணிட்டு வந்துட்டேன். ஹெல்ப் பண்றேன்னு கூட வந்துட்டு கவுந்தடிச்சி தூங்கிட்டு இருக்க….. “, அகரன் அவனைத் தட்டினான்.
“டேய்…. எரும…..”.
“இவன….. “, என ஓங்கி ஒன்று முதுகில் வைக்க வலி தாங்காமல் எழுந்து அமர்ந்தான் அவன்.
“என்னடா?”, அவன்.
“வீடு வந்துரிச்சி. உள்ள வந்து படு வா”, அகரன்.
“வந்துரிச்சா….”, என கண்களை அலுந்த தேய்த்தபடி எழுந்து வெளியே வந்தான் அவன்.
“டேய் கரன்…. உன் வீடு செம்மையா இருக்கு. பகல்ல நல்லா பாக்கணும். கிராமத்து பண்ணைவீடு….”, அவன் வீட்டைப் புகழ்ந்தபடி நின்று வேடிக்கைப் பார்த்தான்.
“சரி பாக்கலாம். முதல்ல கார்ல இருந்து லக்கேஜ் எடுத்துட்டு உள்ள வா”, அகரன்.
“சரி. உன் வொய்ப் எங்கடா வாசல்ல உனக்காக வெயிட் பண்ணுவாங்கன்னு சொன்ன. யாரையும் காணோம்?”, எனக் கேட்டபடி உள்ளே நுழைந்தான்.
“அவன் பொண்டாட்டி அவங்க அப்பாரு வீட்ல இருக்கா தம்பி. தம்பி எந்த ஊரு? பேர் என்ன?”, என மீனாட்சி பாட்டி அவனுக்கு தண்ணீர் கொடுத்தபடிக் கேட்டார்.
“என் பேர் துவாரகன் பாட்டி…. சென்னை தான். உங்க பேரன் கூட தான் படிச்சேன்”, எனத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“பாட்டி…. நதிய ஏன் அங்க அனுப்பனீங்க?”, அகரன் அதிர்ந்துக் கேட்டான்.
“எல்லாரும் இங்க வேலையா இருந்தோம். அதான் அவள அங்க அனுப்பிட்டோம். நாளைக்கு மண்டபத்துல பாத்துக்கலாம் . போய் வெரசா தூங்குங்க இரண்டு பேரும்… வெள்ளன்னவே எந்திரிக்கணும்”, என மீனாட்சி பாட்டி அவர்களை அனுப்பினார்.
“என்ன மச்சி இவ்வளவு ஷாக்?”, துவாரகன்.
“இல்லடா ஆல்ரெடி அவ என்மேல கோவத்துல இருக்கா… இப்ப நான் லேட்டா வரவும் இன்னும் கோபம் அதிகமாகி இருக்கும். இங்க இருந்தா சமாதானம் பண்ணிடலாம்னு நெனைச்சேன்….”, எனக் கூறியபடி தன் அறைக்கு வந்தான் அகரன்.
“கரன் நிஜமா நீ தானா இது? காலேஜ்ல எப்படி இருந்த… இப்ப என்னடா இப்படி ஆகிட்ட…. “, துவாரகன் ஆச்சரியமாகக் கேட்டான்.
“எப்படி இருந்தேன் எப்படி ஆகிட்டேன்?”, அகரன் இடுப்பில் கைவைத்தபடிக் கேட்டான்.
“இல்ல.. காலேஜ்ல பொண்ணுங்க தேடி வந்து ப்ரபோஸ் பண்ணப்ப கூட கண்டுக்காம போன. இவ்வளவு ஏன் நம்ம காலேஜ் கரஸ்பாண்டண்ட் பொண்ணு எத்தனை நாள் உன் பின்னாடி சுத்திச்சி அவ்வளவு அழகா இருக்கும் ஹைட்டா ரோஸ் கலர்ல.. அதையே திரும்பி பாக்கல. பசங்க லவ்வர்கிட்ட சாரி கேட்டா கூட திட்டுவ. இப்ப என்னடான்னா இப்படி பொலம்புற?”, துவாரகன்.
“ஹாஹாஹா…. துவா…. அது காலேஜ்…. எனக்கு எந்த பொண்ணு மேலயும் காதல் வரல அதான் நான் யாரையும் கிட்ட வரவிடல. இப்ப எனக்கு கல்யாணம் ஆகிரிச்சி டா. அவ என் பொண்டாட்டி… என்னோட பாதி.. அவ கோவப்பட்டாலும் சந்தோஷப்பட்டாலும் அதோட பிரதிபலிப்பு முதல்ல எனக்கு தான். காலேஜ்ல லவ்வர்னு சொல்லிட்டு இருந்ததுல எத்தனை பேர்டா கல்யாணம் பண்ணிகிட்டாங்க? அப்படியே பண்ணவங்களும் இப்ப காதலோட இருக்காங்களா? பாதிக்கும் மேல டைம்பாஸ் பண்ணாங்க டா. அதனால அவங்க கீழ இறங்கி போறத திட்டினேன். ஆனா இங்க அப்படி இல்ல”, அகரன் நதியாளை நினைத்தபடிக் கண்களில் காதல் மின்னக் கூறினான்.
“ப்பா…. எவ்வளவு பெரிய விளக்கம். சரி நாளைக்கு ஸ்டேஜ்ல தான் உன் வொய்ப்ஆ பாக்கபோற… எப்படி சமாதானம் பண்ணுவ?”, துவாரகன் அவனின் புரிதலை வியந்தபடிக் கேட்டான்.
“அதான் யோசிச்சிட்டு இருக்கேன் துவா. எப்படியாவது அவள பாக்கணும். பத்து நாள் ஆச்சி அவகிட்ட பேசி”, அகரன் முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கூறினான்.
“ஹம்ம்…. அப்படி என்னதான் கல்யாணத்துல இருக்கோ தெர்ல எல்லாரும் இப்படி ஆகிட்றீங்க டா…. “, துவாரகன் அலுத்துக்கொண்டான்.
“ஹாஹா….அது உனக்கு கல்யாணம் ஆனா தான் புரியும். மைராகிட்ட எப்ப லவ் சொல்லி எப்ப கல்யாணம் பண்ணிக்க போற?”, எனக் கண்ணடித்துக் கேட்டான்.
“அதுல்லாம் ஒன்னும் இல்ல….. சும்மா உளறாத… அவ பிரண்ட் அவ்ளோ தான்… நீயா கற்பனை பண்ணாத”, என துவாரகன் தடுமாறியபடிக் கூறினான்.
“சும்மா சமாளிக்காத மச்சான். மைரா என்கூட ஊருக்கு வரேன்னு சொன்னதும் தானே நீயும் கிளம்பி வந்த….. லாஸ்ட் மினிட்ல அவளாள வரமுடியல நீ திரும்பி போகமுடியாதுன்னு கார்ல ஏறி தூங்கிட்ட “, என அகரன் கூறியதும் துவாரகன் அசடுவழிந்தபடிச் சிரித்தான்.
“கண்டுபிடிச்சிட்டியா? எப்படி மச்சி? “, துவாரகன் கேட்டான்.
“அதான் அவள பாக்கறப்ப எல்லாம் முழுங்கற மாதிரி பாக்கறியே… அதுலயே தெரியுது…. அவளும் உன்னை கண்டா ஓட்றா… என்னடா பண்ண அப்படி?”, அகரன்.
“ஒன்னும் பண்ணல மச்சி. என்னை பாத்தாலே ஓட்றா…. எப்ப லவ் சொல்லி அவள வழிக்கு கொண்டு வரதுன்னு தெரியல…..”, என துவாரகன் சற்றே வருத்தம் தோய்க்க கூறினான்.
“விடு பாத்துக்கலாம். முதல்ல ப்ரபோஸ் பண்ணு நீ அவகிட்ட”, எனக் கூறியபடி அகரன் குளியல் அறையில் புகுந்தான்.
சிறிது நேரத்தில் வெளியே வந்தவன் டீசர்ட் ட்ராக் பேண்ட் அணிந்து மேலே ஒரு ஜெர்கின்னும் அணிந்து வெளியே கிளம்பத் தயார் ஆனான்.
“எங்கடா கிளம்பற இந்நேரத்துல?”, துவாரகன் அவனை பார்த்தபடிக் கேட்டான்.
“என் பொண்டாட்டிய பாக்க போறேன். நீ என்ன பண்ற கதவ லாக் பண்ணிட்டு பால்கனி கதவ தொறந்து வச்சிட்டு தூங்கு. நான் போயிட்டு வந்துடறேன்”, என அகரன் தன் மொபைல் எடுத்தபடி அவன் அறையில் இருக்கும் மற்றொரு கதவைத் திறந்தான்.
“டேய் நில்லுடா… வந்ததும் என்னை விட்டுட்டு நீ மட்டும் போற… நானும் உன்கூடவே வரேன்டா”, துவாரகன்.
“என்கூட வந்தா வெளியே பனில தான் நிக்கணும். சம்மதம்னா வா”, அகரன் சிரித்தபடிக் கூறினான்.
“இங்க தனியா இருக்க உன்கூட வந்துடறேன். தனியா இருக்கறதுன்னா எனக்கு பயம்னு உனக்கு தெரியாதா?”, துவாரகன் முறைத்தபடிக் கேட்டான்.
“அவ்ளோ பெரிய கம்பெனி எம்.டி தனியா இருக்கறதுக்கு பயப்படற…. வந்து தொல. டிரஸ் சேன்ஞ் பண்ணிட்டு ஐஞ்சு நிமிஷத்துல வரணும். ஜெர்கின் இருந்தா போட்டுக்க குளிரும்”, அகரன்.
அவன கூர்கா வேலை பார்க்க வைக்க போறான் நம்ம அகன் செல்லம்……
“வந்துட்டேன் டா… போலாம். யாரும் இதுக்கு மேல உன் ரூமுக்கு வந்து பாக்க மாட்டாங்களா?”, துவாரகன்.
“இன்னிக்கு வரமாட்டாங்க. வா சீக்கிரம். சத்தம் போடாம பாலோ பண்ணு “, என அகரன் அறைக் கதவை உள்பக்கம் பூட்டி, இந்தக் கதவை வெளிபக்கமும் பூட்டிக்கொண்டு சத்தமில்லாமல் நதியாள் இல்லம் நோக்கி வயல்வரப்பில் இறங்கினான்.
சுற்றிச் சென்றால் பதினைந்து நிமிடம் ஆகும் . வரப்பு வழியாக சென்றால் ஐந்தாவது நிமிடம் நதியின் இல்லத்தை அடையலாம் என அதில் நடந்தான்.
அகரன் வேகமாக நடக்க, துவாரகன் தடுமாறி அவனைப் பின்தொடர்ந்தான்.
“டேய் மெயின் ரோடுல போறமாறி இவ்ளோ வேகமா போற. மெல்ல போடா. இருட்ல எங்க கால் வைக்கிறதுன்னே தெரியல”, துவாரகன் அகரனைத் திட்டியபடி பின்தொடர்ந்து நதியாளின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.
பின்பக்க வாசலிலேயே சீரியல் பல்ப் தோரணம் வீடு முழுக்க போடப்பட்டு இருப்பது தெரிந்தது.
“என்னடா இதான் வீடா? சரி வா உள்ள போலாம்…”, என துவாரகன் முன்னே நடந்தான்.
“யாருடா அது கிணத்துகிட்ட”, எனப் பக்கவாட்டில் ஒரு பெரியவர் கத்த, கிணறு என்றதும் துவாரகன் நான்கடி துள்ளி அகரனிடம் வந்து நின்றுக் கொண்டான்.
“அடேய் சண்டாளா…. கூட்டிட்டு வந்து கிணத்துல தள்ளிவிட பாக்கறியா?”, துவாரகன் சத்தமில்லாமல் திட்டினான்.
“உன்ன யாரு போக சொன்னா? நானே டவுட்ல தான் எந்த பக்கம் போறதுன்னு நின்னு யோசிச்சிட்டு இருக்கேன்”, அகரன்.
“அப்படியே வந்த பக்கமே வீட்டுக்கு போயிடு மச்சான். அது தான் நல்லது “, எனக் கூறியபடி சரண் அங்கே வந்தான்.
“டேய் மச்சான்….. இப்ப தான்டா உன்ன நினைச்சேன் நீ இங்க இருக்கியா இல்லையான்னு தெரியாம யோசிச்சேன்”, அகரன் சரணைக் கட்டிக்கொண்டுக் கூறினான்.
“எதுக்கு வந்த இப்ப?”, சரண் அகரனை விலக்கி நிறுத்தியபடிக் கேட்டான்.
“இவன் பொண்டாட்டிய பாக்க தான்”, துவாரகன்.
“அவன் அவ பொண்டாட்டிய பாக்க வந்தான் நீ எதுக்கு கண்ணு தெரியாம வயல்ல விழுந்து எழுந்து வந்த எரும? அவன் கூப்டதும் கிளம்பி வரியே உனக்கு அறிவில்ல? “, சரண் துவாரகனைத் திட்டினான்.
“அவன் என்னை தனியா விட்டுட்டு போறேன்னு சொன்னான்டா. அதான் நானும் கிளம்பி வந்தேன்”, துவாரகன்.
“தனியா இருக்கமாட்டியா நீ? அவன எதுக்கு நீ போகவிட்ற? அமுக்கி அவன அங்கயே வச்சிக்க வேண்டியது தானே…. உனக்குலாம் எத்தனை வருஷம் ஆனாலும் அறிவு வராது துவா… “, சரண் கோபமாக கூறினான்.
“டேய் அவன் கிளம்பி வந்தா அவன திட்றா. என்னை ஏன்டா திட்ற? எனக்கு தனியா இருக்க பயம்னு உனக்கு தெரியும்ல அதான் அங்க பயந்து சாவறதுக்கு கிளம்பி வந்துட்டேன். இப்ப அவன் பொண்டாட்டிய பாக்கணுமாம் அதுக்கு நீ ஏற்பாடு பண்ணு”, துவாரகன் பதில் கூறியபடி சரணைத் திட்டினான்.
“உங்கள வச்சிட்டு…. “, சரண் தலையில் அடித்துக்கொண்டான்.
அகரன் சிரித்துவிட்டு ,” மச்சான் என் பொண்டாட்டி ரூமோட பால்கனி இந்த பக்கம் தானே? கதவு தொறந்து இருக்குமா? என்ன டைப் லாக் போட்டோம்?”, யோசித்தபடிக் கேட்டான்.
“நீ அவகிட்ட வாங்கி கட்டிக்காம கிளம்பமாட்ட….. ××××× லாக் தான். இந்தா மாஸ்டர் கீ…. அவ உன்மேல கொலைகாண்டுல இருக்கா. விடியறதுக்குள்ள சமாதானம் பண்ண முடிஞ்சா பண்ணிட்டு வீட்டுக்கு ஓடிடு…. இல்லைன்னா மத்தத நாளைக்கு பண்ணிக்க. உனக்கு ஒன் ஹவர் தான் டைம். போ ஏணி வச்சி இருக்கேன்”, என சரண் சாவியை கொடுத்துவிட்டு துவாரகனை இழுத்துக்கொண்டு சென்று கார்ஷெட் அருகில் மறைந்து நின்றுக் கொண்டான்.
“என் மச்சான்டா நீ”, என அகரன் அவனை அணைத்துவிட்டு, ஏணி இருக்கும் பக்கம் சென்று மலமலவென்று ஏறினான்.
அகரன் பால்கனியில் இறங்கியதும் துவாரகன் சரணிடம்,” அவன் வருவான்னு முன்னயே ரெடி பண்ணிட்டியா மச்சி?”, எனக் கேட்டான்.
“ஆமா… எப்படியும் அவ அங்க இல்லைன்னதும் இவன் பாக்க வருவான்னு தெரியும். அதான் ஏணி எடுத்து வச்சிட்டு உங்கள பாக்க வீட்டுக்கு வந்தேன். நான் கதவ தட்றப்ப நீங்க சைட்ல இருந்து வயலுக்கு போறத பாத்தேன் அதான் உடனே இங்க வந்துட்டேன். ஊர்காரன் எவனாவது பாத்தான் அவ்வளவு தான்”, சரண் அகரனின் மனம் புரிந்துச் சொன்னான்.
மேலே ஏறிய அகரன் சத்தம் வராமல் பால்கனி கதவை திறந்து சாற்றிவிட்டு அறைக்குள் திரும்பினான்.
பெண்ணவள் சேலையில் தேவதையாக மிளிர்ந்தாள். மெத்தையில் ஒரு கையில் பொம்மையை அணைத்தபடி, ஒரு கையை வயிற்றில் வைத்துக்கொண்டு சிறுகுழந்தை என உறங்கும் அழகை எப்புலவனும் வர்ணிக்க வார்த்தைக் கிடைக்காமல் தடுமாறுவான்.
ஆண் அவன் காதல் நெஞ்சமும் அவளைக் கண்டு இன்பமாக அதிர்ந்து பின் இதழில் மென்னகைப் பூசிக்கொண்டது.
தூக்க கலகத்தில் சற்றே சேலை விலகி தசமிநிலவு போல அவளின் இடை தெரிய கூந்தலை ஒதுக்கியபடி போர்வையைத் தேடியது அவளின் கரங்கள்.
“ராட்சசி…. என்னை கொல்ற டி. ஹ்ம்ம்…. சின்ன பப்பா மாதிரி தான் இன்னும் தூங்கற…. போர்வை ஒருபக்கம் நீ ஒருபக்கம்…. எனக்காக காத்திருப்பன்னு பாத்தா இப்படி தூங்கிட்டு இருக்கியே பேபி… இப்ப எழுப்பினாலும் சண்டை போடுவ…. கம்முன்னு கொஞ்ச நேரம் உன்னை இரசிச்சிட்டு வீட்டுக்கு போறேன். நாளைக்கே புல் டோஸ் வாங்கிக்கறேன்”, என அவளின் நெற்றி நீவி இதமாக இதழ் பதித்துவிட்டு போர்வையைப் போர்த்திவிட்டு அருகிலேயே அமர்ந்தான் அவளின் அகன்.
அகரனின் ஸ்பரிசம் உணர்ந்து நதியாள் முகத்தில் மந்தகாச மென்னகைத் தூக்கத்திலும் பரவ, கண்களில் இரசனை வழிய அவளின் முகத்தைப் பார்த்தபடி அமர்ந்தான் அகரன். சிறிது நேரத்தில் தூக்கத்தில் புரண்டவள் போர்வை விலக பெண்ணவளின் பொண்ணிற மேனி ஆங்காங்கே காட்சியளித்தது. அகரன் மனம் அலைபாய இதற்கு மேல் முடியாது என அவளை நன்றாகப் படுக்கவைத்துவிட்டு லேசாக இதழில் இதழ் பதித்து அங்கிருந்து கிளம்பினான்.
“என்னடா அதுக்குள்ள வந்துட்ட…”, துவாரகன்.
“அவ தூங்கிட்டு இருக்கா டா. நாளைக்கு பேசிக்கலாம்னு வந்துட்டேன். வா போலாம். வரேன் சரண். நாளைக்கு நீ மண்டபத்துக்கு போயிடுவியா?”,அகரன்.
“ஆமா அகர். அங்க பாக்கலாம். பாத்து போங்க”, என அவர்களை அனுப்பிவைத்துவிட்டு சரணும் உறங்கச் சென்றான்.
அடுத்தநாள் கலகலப்பாக நாள் விடிய ,ராதா நதியாளை எழுப்பி தலைக்கு குளிக்க கூறிவிட்டு மற்ற ஏற்பாடுகளை கவனிக்கச் சென்றார்.
“யாள்… மண்டபத்துல வந்து ரெடி ஆகிக்க… வா கிளம்பளாம்”, என சரண் அவளை அழைத்துக்கொண்டு முன்னே சென்றான்.
மண்டப வாசலில் அவளுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்துச் சென்றனர்.
அலங்காரம் செய்ய ஆட்களை சென்னையில் இருந்து மீராவும் ஸ்டெல்லாவும் அழைத்து வந்திருந்தனர்.
“ஹேய் பக்கீஸ்….”,என நதியாள் அவர்களைக் கட்டிக்கொண்டாள்.
“ஹாய் கல்யாண பொண்ணு”, என இருவரும் கோரசாக கூறி அணைத்துக்கொண்டனர்.
“எப்ப வந்தீங்க? ஏன் வீட்டுக்கு வரல?”, நதியாள்.
“நாங்க நைட் தான் வந்தோம். மீரா வீட்டுக்கு போயிட்டோம் டா. அங்க எல்லாரையும் கூட்டிகிட்டு சீக்கிரமே இங்க வந்துட்டோம். அதான் உன்னையும் இங்க வச்சே ரெடி பண்ணிடலாம்னு மீரா சரண் சார்கிட்ட சொல்லி வரவச்சா”, ஸ்டெல்லா .
“பைன். ஓவர் மேக்அப் வேணாம் மீரா. என் பேஸ் மாறாம பண்ணுங்க. ரொம்ப வையிட்டா எதுவும் தலையில வைக்க கூடாது”, நதியாள் ஆரம்பிக்கும் முன் கண்டிஷன் போட்டாள்.
“உன் தலைல கல்லா வச்சி கட்டப்போறோம். இன்னிக்கு எதுவும் பேசாம அமைதியா உட்காரு. நகை எல்லாம் யார்கிட்ட இருக்கு? மேடம் நீங்க ஆரம்பிங்க”, என அலங்கரிப்பவரை ஆரம்பிக்க கூறிவிட்டு மீரா நதியாளை அடக்கினாள்.
“நகை அம்மா கொண்டு வருவாங்க”, நதியாள்.
“சரி. அதுக்குள்ள மத்த மேக்அப் முடிச்சிக்கலாம்”, மீரா.
பின் ஒரு மணிநேரத்தில் அழகோவியமாக நதியாள் தயாராகி இருந்தாள். நடுவில் மீனாட்சி பாட்டி, சரோஜா பாட்டி, திலகவதி, செல்லம்மாள், ராதா , மதி என அனைவரும் வந்து பார்த்துவிட்டுச் சென்றனர்.
“ஸ்டெல்லா நீ போய் அம்மாகிட்ட நகை வாங்கிட்டு வா”, என மீரா கூறிவிட்டு நதியாளுக்கு புடவை உடுத்த உதவினாள் மீரா.
ராதாவும், திலகவதியும் நகை பெட்டியோடு உள்ளே வந்தனர். ராதாவின் கண்ணெல்லாம் கலங்கி சந்தோஷத்தில் அவருக்கு வார்த்தை வரவில்லை.
தவமிருந்து பெற்ற ஒற்றைப் பெண்குழந்தை அவள். அவளுக்கு திருமணம் செய்வது பற்றி நிறைய கனவுகள் அவருக்கு இருந்தது. ஆனாலும் சூழ்நிலை காரணமாக மனதில் இருந்த வருத்தத்தைத் துடைத்துவிட்டு, இன்று விஷேசத்தை சிறப்பாக நடத்த இருவீட்டாரும் முடிவு செய்து இருந்தனர்.
அகரனும் வீட்டிற்கு ஒரே வாரிசு. திலகவதிக்கும் ஆனந்தம் மேலிட வார்த்தை வரவில்லை. இருவரும் ஒன்றுபோல அவளைக் கட்டி அணைத்து ஆனந்தத்தை வெளிபடுத்தினர்.
அவர்கள் கொடுத்த நகைகளை அவளுக்குப் பூட்டி அவளின் அலங்காரத்தை முழுநிலவு போல முழுமைபடுத்திவிட்டு தோழிகள் இருவரும் அவளுக்குத் திருஷ்டி கழித்தனர்.
சரோஜாபாட்டி மையெடுத்து அவளின் காதிற்கு பின்னால் சற்றே கீழிறக்கி திருஷ்டி பொட்டு வைத்தார். மரகதம்மாள் நதியாளை மனதாற ஆசிர்வதித்து பரிசு கொடுத்தார். தேவ் தன் கடை திறப்புவிழா நெருங்குவதால் வேலை அதிகம் இருக்க, விஷேசத்திற்கு வர இயலவில்லை. மதி, சந்திரகாந்த், மரகதம்மாள் மட்டும் வந்திருந்தனர்.
அகரனும் தயாராகி மேடைக்கு அழைத்து வரப்பட்டான். சிறிது நேரத்தில் நதியாளும் மேடையில் நிற்கவைக்கப்பட்டாள்.
அகரனை அறைக்குள் இருந்தபடி இரசித்துக்கொண்டிருந்தவள் வெளியே வந்ததும் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் வேறுபக்கம் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.
நதியாளைக் கண்ட அகரனோ மூச்சு விடவும் மறந்து அவளைக் கண்களால் பருகியபடி நின்றிருந்தான். அருகில் சரணும் துவாரகனும் இடித்து சுயநிலைக்கு வரவைத்தனர்.
பின் தாய்மாமன் முறையில் உள்ளவர்கள் இருவருக்கும் மாலைக் கொடுத்து மாற்றிக்கொள்ள கூறினர்.
மாலையிடும் சமயம் நதியாளும் அகரனும் ஒருவரை ஒருவர் கண்களால் தழுவியபடி சில நொடி நிற்க அருகில் உள்ளவர்கள் கொடுத்த சத்ததில் மாலை மாற்றிக்கொண்டு திரும்பி நின்றனர்.
அகரனும் நதியாளும் அங்கு நின்ற தருணத்தை மனதாற இரசித்தபடிப் புன்னகை முகமாக அனைவரையும் வரவேற்றபடி நின்றிருந்தனர்.
இருவரும் ஒரு வார்த்தைக் கூட நேரடியாக உரையாடவில்லை. ஆனாலும் இருவரும் ஒருவர் மற்றவரின் அருகாமையில் லயித்து மகிழ்ந்திருந்தனர்.
வந்த ஊர்காரர்கள் முதல் உறவினர் வரை அனைவரும் அவர்களை வாழ்த்தி ஆசி வழங்கிச் சென்றனர். பெற்றவர்கள் மனமும் அதில் குளிர்ந்தது. பின் நேரம் கடக்கப் பந்தியை ஆரம்பித்தனர்.
சரண் பந்தியை கவனிக்க சென்றுவிட, துவாரகன் அகரன் அருகில் நின்றான். நதியாள் அருகில் மீராவும், ஸ்டெல்லாவும் இருந்தனர். ரிஸ்வானா சென்னையில் நடக்கும் ரிசப்ஷனில் கலந்துக் கொள்வதாகக் கூறியிருந்தாள். சஞ்சயும் திலீப்பும் கூட வரவில்லை. மதுரனும் வரமுயன்று முக்கியமான மீட்டிங் இருப்பதால் வரமுடியாமல் போக மைராவும் அதில் சிக்கிக் கொண்டாள்.
பின் அனைவரும் உணவுண்டு புதுமண மக்களை இல்லம் அழைத்துச் சென்றனர்.
இன்றும் ஆரத்தி எடுத்து இருவரையும் உள்ளே அழைத்துச்சென்றனர். பின் நதியாள் பூஜை அறையில் விளக்கு ஏற்றி கற்பூரம் காட்டினாள் இவர்களின் மணவாழ்க்கை இனிதாக நிறைவாக அமைய அனைவரும் பிராத்தித்தனர்.
இதுவரையிலும் அகரனும் நதியாளும் பேசிக்கொள்ளவில்லை. இனி தனிமையில் இருவரும் இருக்கும்பொழுது தான் ……