41 – காற்றின் நுண்ணுறவு
“என்னாச்சி அவளுக்கு? ஏன் இப்படி நடக்குது?”, நாச்சியா பதற்றத்துடன் கேட்டாள்.
“எனக்கு ஒன்னுமே புரியலம்மா… எல்லா செடிகளும் சாம்பலாகிடிச்சி…. “, என அவரும் பதற்றமாகி வல்லகியின் அருகில் நின்று அவளைச் சோதித்துக்கொண்டிருந்தார்.
ஏஞ்சல் அவள் உடலில் சில பொருட்களை பொருத்தி, அவள் உடலில் நிகழும் மாற்றங்களைக் கண்காணித்துக் கொண்டிருந்தாள்.
அரை மணிநேரம் கழித்து அவளது உடல் சீராக ஆரம்பித்தது. அதுவரை அனைவரும் பதற்றமாகவே இருந்தனர்.
ம்ரிதுள் அதித் நிலைமையையும் அவ்வப்போது கண்டு கொண்டு, இங்கும் பார்த்தபடி நடந்துக்கொண்டிருந்தான். அவனும் கண் மூடி தியானத்தில் அமர்ந்திருந்தான்.
மெல்ல கண் விழித்த வல்லகி எழுந்து அமர்ந்தாள்.
“வல்லா…. வல்லா… உனக்கு என்னாச்சி? இப்ப எப்படி இருக்கு?”, என நாச்சியார் பதற்றத்துடன் கேட்டாள்.
“நல்லா இருக்கேன் நாச்சி…. பாலா தண்ணி குடு”, எனக் கேட்டு குடித்தாள்.
சிறிது நேரம் அவள் ஆசுவாசப்படுத்திக்கொள்ளட்டும் என ஜேக் அவளுடன் சிறிது தூரம் நடந்து வருவதாக ம்ரிதுள்ளிடம் கூறிவிட்டு நடந்தான்.
“சீனியர் நீங்களும் வாங்க”, என நாச்சியா தர்மனையும் அழைத்துக்கொண்டுச் சென்றாள்.
ஜேக் அவளைக் கைத்தாங்கலாகப் பிடித்திருந்தான்.
“நான் ஸ்டெடியா தான் இருக்கேன் ஜேக்…. நானே நடந்து வரேன்… “, என மென்னகையுடன் கூறிவிட்டு மெல்ல நடந்தாள்.
“என்ன வல்லகி.. என்ன விஷயம்? கொஞ்ச நேரத்துல எல்லாரையும் பயமுறுத்திட்ட நீ”, என அக்கரையுடன் கடிந்துக்கொண்டான்.
“சீனியர் என்ன ப்ளான்ல வந்திருக்கீங்க? இங்க இருந்து நாம எத்தனை பேர் திரும்பி போவோம்னு யாருக்கும் தெரியாது… எப்படியாவது நீங்க நாச்சியாவ காப்பாத்தி கூட்டிட்டு போகணும்”, எனத் தீவிரமானக் குரலில் கூறினாள்.
“நீ என்ன பார்த்த வல்லகி?”, என தர்மனும் தீவிரமான முகபாவத்துடன் கேட்டான்.
“அழிவு.. இருட்டு”, எனக் கூறிவிட்டு தன் மனதை சமன்படுத்திக் கொண்டிருந்தாள்.
“புரியல வல்லகி”
“எனக்கும் முழுசா புரியல சீனியர். ஆனா ரொம்பவே ஆபத்தான இடம்… அதுல எத்தனை உயிர் போகும்னு தெரியல… இத்தன பேர்ல பத்து பேர் மிஞ்சினா பெருசு”, எனக் கூறிவிட்டு பெருமூச்செறிந்தாள்.
சிறிதுநேரம் மூவரும் உரையாடிவிட்டு திரும்பி வந்தனர். செல்லும்போது வல்லகி முகத்தில் இருந்த இறுக்கம் இப்போது தளர்ந்திருந்தது என்பதை ம்ரிதுள்ளும் நாச்சியாவும் கண்டுக்கொண்டனர்.
சரியாக 3.45க்கு தசாதிபன் கண்விழித்து தியானத்தில் இருந்து எழுந்தார். அதித் ஒவிஸ்கரும் அத்தனை நேரம் தியானத்தில் இருந்தது தான் ம்ரிதுள்ளை மிகவும் குழப்பியது, கவலைப்படவும் வைத்தது.
அனைவரும் கிளம்ப ஆயுத்தமாயினர். நாச்சியா மீண்டும் ஒருமுறை வரிசையைச் சரிப் பார்த்துப் பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள்.
வல்லகி முன்னே செல்ல அவள் அருகில் ஜேக் நடந்தான். தர்மன் நாச்சியா அருகிலும், சுதாகர் தசாதிபன் அருகிலும், பிறைசூடன் ஏஞ்சல் அருகிலும், பாலா இனியன் அருகிலும் அனைவரையும் முன்னும் பின்னும் கண்காணித்தபடி ம்ரிதுள்ளும் அதித் ஒவிஸ்கருடன் நடந்தான்.
சரியாக ஐந்து மணிக்கு அந்தப் பாறைக் கூட்டத்திற்கு அருகில் வந்தனர்.
“இங்கயிருந்து எந்த பக்கம் போணும்?”, அதித் தசாதிபனிடம் கேட்டான்.
“பகலவன் அந்திசாயும் போது தோன்றும் வெளிச்சக்கடலில் …. உயிர்பறிக்கும் கதிர்பாய முதல் வாயில் திறந்திடுமே”, என அவர் பாட அதித் முகம் கடுகடுவென மாறியது.
“வல்லகி”, என தசாதிபன் அழைத்தார்.
“ஐஞ்சு நிமிஷம் இருக்கு சார்”, எனக் கூறியவள் சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி ஆட்களை நிழல் இருக்கும் இடங்களில் நிற்கவைக்க கூறினாள்.
“முடியாது… எல்லாரும் எதிர்ல தான் நிக்கணும்”,என அதித் திட்டவட்டமாக கூறிவிட வல்லகி இளக்காரமாக அவனைப் பார்த்துவிட்டு தன் ஆட்களை விலகி நிற்கக் கூறினாள்.
சூரிய ஒளி அந்த மூன்றாம் பாறையின் பின் பக்கம் பட்டு, எதிரில் இருந்த பாறையில் தெறித்து, முன்பக்கமிருந்த இரண்டு பாறைகளையும் ஒளி வெல்லமாக மாற்றியது.
நேரம் கூட கூட அந்த பாறைகள் அந்த ஒளியை சுற்றிலும் பரப்பத்தொடங்க வல்லகி அனைவரையும் பாறைக்கு பின்னால் பதுங்கி அமரும் படி கத்திவிட்டு, நாச்சியாவையும் பாலாவையும் இழுத்துக்கொண்டு அகலமானப் பாறை நோக்கி ஓடினாள்.
நொடியில் அந்த இரண்டு பாறைகளும் அதிஉஷ்ண கதிர்களை வீசத் தொடங்கியது. நொடிகளில் அதன் உஷ்ணம் நூறு மடங்கு உயர்ந்து அவ்வொளி எதிரில் இருந்தவற்றை எல்லாம் பற்றி எரிய வைத்தது.
நொடிகளில் பலர் அந்த ஒளிக்கு சாம்பலாகி காற்றோடுக் காற்றாகக் கலந்தனர்.
அதைக் கண்ட மற்றவர்கள் மனதில் மரணபீதி எழுந்தது.
நாச்சியாவும் வல்லகியும் பாலாவை நடுவில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தனர்.
வல்லகியின் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது.
மூன்று நிமிடத்தில் அந்த ஒளிவெல்லம் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.
ஏஞ்சலை பிடித்தபடி பிறைசூடன் அமர்ந்திருந்தார். அவர் அருகில் இருந்த அடியாள், அந்த ஒளியில் சாம்பலானதைக் கண்டு ஏஞ்சல் உடல் நடுக்கம் எடுத்தது.
ம்ரிதுள் அங்கு நடந்த நிகழ்வுகளை ஜீரணிக்கமுடியாமல் நின்றிருந்தான்.
சில நொடிகளில் பலர் சாம்பாலானது அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“என்ன அதித் இது? இப்படியொரு இடத்தை ஏன் இத்தனை நாளா நீ தேடின? நம்ம கூட வந்த பாதி பேர் இப்ப இல்ல”,என அவனிடம் கத்தினான்.
“வரலாறுல இடம்பிடிக்க போறப்ப இதுலாம் சகஜம் ம்ரிதுள். அடுத்து எந்த பக்கம் போகணும் பாரு”, என அசட்டையாகப் பதில் கொடுத்துவிட்டு டைஸியை இழுத்துக்கொண்டு நடந்தான்.
“என்ன மச்சி இது?”, சுதாகர் அதிர்வுடன் கேட்டான்.
“இது டெத் ரேஸ் டா… பழங்காலத்துல எதிரி கப்பல் கடல் வழியா வர்றப்ப கலங்கரை தூண்ல ஒரு கண்ணாடி வச்சி சூரிய ஒளிய குவிச்சி எதிரொளிப்பாங்க.. அது போல இருக்கு இது… “, என அவனுமே உள்ளுக்குள் பதறித்தான் போனான்.
“நொடில ஆள சாம்பலாக்கிடுச்சி மச்சி”, சுதாகர்.
“நாச்சியா சொன்னது இது தான்டா… தொடக்கூடாத விஷயத்த நாம தொட்டுட்டோம்.. வந்துட்டோம்… வா விதி இருந்தா உயிரோட ஊருக்கு போலாம்”, என மெல்ல எழுந்து நாச்சியா இருக்கும் பாறைக்குச் சென்றான்.
அங்கே அவர்களும் நடுங்கித்தான் அமர்ந்திருந்தனர். வல்லகி இதை முன்னே எதிர்பார்த்ததால் சற்று மனதைத் தேற்றிக்கொண்டு தசாதிபனைத் தேடினாள்.
“சார் அடுத்து எந்த பாறை?”, வல்லகி.
“ஒளி முதல்ல வாங்கின பாறைக்கு ஓடு… நாச்சியா சீக்கிரம்… அந்த ஒளி முழுசா மறையறதுக்கு முன்ன அந்த பாறைகிட்ட போகணும்”, எனக் கத்தியபடி இனியனை இழுத்துக்கொண்டு ஓடினார்.
மற்றவர்களும் அவசரமாக எழுந்து அவர்கள் பின்னே ஓடினர்.
வல்லகி இரண்டு நிமிடத்தில் ஒரு கி.மீ தூரத்தைக் கடந்திருந்தாள்.
நாச்சியா பாலாவை இழுத்துக்கொண்டு அடுத்த இரண்டு நிமிடங்களில் அங்கிருந்தாள்.
“நாச்சி இங்க தண்ணி இருக்கு…. இதான் கடலோட ஆரம்பம்னு நினைக்கறேன்”,என அந்த மண்ணை தொட்டபடிக் கூறினாள்.
நாச்சியா அவள் கூறியதைக் கேட்டபடி அந்த பாறையைத் தடவிப் பார்த்தாள் .அது கல் அல்ல… உலோகம்…. அந்த சூரிய ஒளிப்பட்டப் பாறைகளை எல்லாம் ஓடிச்சென்றுத் தொட்டுத் தொட்டுப் பார்த்தாள்….
பின்னர் ஒளி வெல்லம் பாய்ந்தப் பாறைகளை நோக்கி ஓடினாள். அதைத் தொட்டுப் பார்க்க அதுவும் உலோகமாக இருந்தது. ஆனால் அது கண்ணாடி போன்ற மேற்பரப்பைப் பெற்றிருந்தது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ம்ரிதுள் அவளருகில் வந்து கேட்க அவள் அந்த பாறையில் அவன் கைகளை வைத்தாள்.
தர்மனும் சுதாகரும் வந்துத் தொட்டுப்பார்த்துவிட்டு, “டெத் ரேஸ் பில்லர்ஸ்”, என்றனர்.
ம்ரிதுள் முகத்தில் யாதென்றுப் புரியாத பாவம் இருந்தது. அவன் மனதினில் இறுகிக் கொண்டிருக்கிறான் என்பதை அவர்கள் மூவரும் உணர்ந்துக்கொண்டனர்.
நாச்சியார் வேகமாக நடந்து வல்லகியிடம் வந்து நின்றாள்.
“அடுத்து ஆகவேண்டியத பாரு நாச்சியா… நேரத்த வீணாக்காத”, என அதித் முன்னே வந்தான்.
தசாதிபன் அவனை உறுத்துப்பார்த்துவிட்டு ம்ரிதுள்ளைப் பார்த்தார். அந்தப் பார்வையின் வீரியம் தாங்காமல் அவன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான்.
“நாச்சியா… முதல் சாவி எடு”, என தசாதிபன் கூற இனியன் நாச்சியாவிடம் சென்றான்.
ஜேக்கும் உதவிக்கு வந்து நாச்சியாவிற்கு எடுத்துக்கொடுத்தான்.
அந்த சாவி உருண்டையாக இருந்தது. ஒரு பக்கம் மூன்று சதுர ஓட்டைகள் இருந்தது.
நாச்சியா அந்த மூன்று பாறைகளில் அது போல ஏதேனும் ஓட்டையில் பொருத்தி இயக்கும் மேல் பகுதி இருக்கிறதா என மற்றவர்களைப் பார்க்கச் சொன்னாள்.
மூன்று பாறைகளிலும் அது போல இருந்தது.
“வல்லகி… நீ தான் இப்ப உதவணும்”, என தசாதிபன் கூற அவள் ஒவ்வொரு பாறையாக தொட்டுப் பார்த்து நாச்சியாவை முதல் பாறையை திறக்கச் சொன்னாள்.
இரண்டாவது பாறையைத் தர்மனிடம் அதே சாவியைக் கொடுத்து திறக்கச் சொன்னாள். அதித்தை அழைத்து மூன்றாவது பாறையைத் திறக்கச் சொன்னாள்.
அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகில் தரைப் பிளந்து படிகள் தெரிந்தன.
அதில் முதலில் வல்லகி இறங்க பின்னால் மற்றவர்கள் இறங்கினர்.
“ஏஞ்சல்… டெம்ப்ரேச்சர் ஸ்கேனர் ஆன் பண்ணு”, வல்லகி.
சுமார் முப்பது படிகள் இறங்கி நின்றாள்.
மீதி இருந்த அடியாட்கள் வெளிச்சம் பாய்ச்சினர். அனைவரும் டார்ச்சை உயிர்பித்தனர்.
“இங்க பத்து மீட்டர்ல எதுவும் இல்ல வல்லகி”, என ஏஞ்சல் உறுதியாக கூறிவும் முன்னேறினர்.
“நாச்சியா அடுத்த சாவி எடுத்துக்க”, தசாதிபன்.
ஜேக் இனியன் மாட்டியிருந்தப் பையில் இருந்து இரண்டு என்று எழுதியிருந்தக் கவரை எடுத்துக்கொடுத்தான். நாச்சியா அதை கையில் பிடித்து வல்லகியைப் பார்த்தாள்.
ஓரடி உயரத்தில் கோடாளி போல இருந்தது அந்த சாவி.
“சீனியர் முன்னாடி வாங்க”, என வல்லகி அழைத்தாள்.
தர்மன் முன்னே வரவும் அவனிடம் அதைக் கொடுத்துவிட்டு அந்த தூணில் அழுத்தி திருகக் கூறினாள் நாச்சியார்.
சற்று கடினமாக இருக்க இனியனும் உதவினான்.
முன்பிருந்த பாறை விலகியதும் நூறடிக்கும் அதிகமான நீளமுள்ள புளு தரையில் படந்திருந்தது.
“என்ன இது?”, பாலா அச்சத்துடன் கேட்டாள்.
“ரிப்பன் வார்ம்”, என ம்ரிதுள் கூறினான்.
“அதை கொளுத்துங்க”, என அதித் உத்திரவிட்டான்.
கெமிக்கல் ஊற்றி அவர்கள் நடக்கும் இடம் மட்டும் பற்றவைத்தபடி வேகமாக நடந்தனர். அப்படியும் பிறைசூடனை அது பிடித்துவிட அவர் கால்கள் மரத்து அப்படியே நின்றார்.
“அப்பா…. அப்பா… வாங்க”, என ஏஞ்சல் அழைத்தும் அசையமுடியாமல் நின்றவரை, ஜேக் கத்தியால் அவர் கால்களை பற்றியிருந்த புளுக்களை அறுத்தெறிந்துவிட்டு, அவரைக் கைகளில் தூக்கிக்கொண்டான்.
“கால் சரியாக கொஞ்ச நேரம் ஆகும். ஆனா இது குகைல இருக்க புளு… என்ன மாதிரியான விளைவுகள் குடுக்கம்னு தெரியல”, ம்ரிதுள்.
ஏஞ்சல் கவலையுடன் பார்க்க, ஜேக் தான் அவரைச் சுமப்பதாக அவளை ஆசுவாசப்படுத்தினான்.
ஜேக் அவரை முதுகில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தான்.
இருநூறு அடிகள் வந்த பிறகு ஒழுங்கில்லா பாறைகள் பாதையை மறைத்திருந்தன.
தசாதிபன் அந்த பாறைகளைத் தொட்டுப் பார்த்துவிட்டு நாச்சியாவை அழைத்தார்.
“இது திறக்கற சாவி நம்மகிட்ட இருக்கா?”, எனக் கேட்டார்.
நாச்சியா தன்னிடமுள்ள அனைத்தையும் பார்த்துவிட்டு அந்த பாறையில் இருந்த அச்சு பொருந்தும் பொருள் எதுவும் இல்லையென கூறினாள்.
அதித் முன்னால் வந்து டைஸியின் கழுத்தைக் கீறி அதில் வழிந்த இரத்தத்தை தோய்த்து எடுத்து அந்த டாலரை அந்த பாறை அச்சில் பதித்ததும் இதற்கு முன் வந்த வாயில்கள் அடைத்துக்கொண்டன.
சில நொடிகள் கழித்து அந்தப் பாறைகள் ஒவ்வொன்றாகச் சரிந்தது.
“எல்லாரும் குனிங்க”, என வல்லகி கூறும்முன் முன்னால் நின்றிருந்த அடியாட்களை விஷம் தாக்கியிருந்தது.
மெல்ல வல்லகி எதிரே வெளிச்சம் பாய்ச்ச, அங்கே பாம்புகள் அனைத்தும் நேராக பிடித்து இழுத்து கட்டிவைக்கப்பட்டு, வீரியமாக விஷம் கக்கும்படி சில அடிகள் தூணில் அமைத்திருந்தனர்.
ஒரு முறை விஷம் கக்கிய பிறகு மறுமுறை விஷத்தை வீசும் வீரியம் பெற சில நொடிகள் ஆகும். அந்த நேரத்தை பயன்படுத்தி அந்தத் தூண்களைக் கடந்து உள்ளே செல்லவேண்டும்.
தசாதிபன் முதலில் சென்றார்.. அவருக்கும் பின் நாச்சியாவும் பாலாவும் சென்றனர்.
தர்மன் வல்லகியோடு வேகமாக கடந்தான். ஜேக் கால் எடுத்து வைக்கும்போது விஷம் கக்க தயாராகின அந்த பாம்புகள்.
அதித்ஐ நோக்கி வந்த விஷத்தை அருகில் இருந்த அடியாளை முன்னே இழுத்துப் பிடித்தபடி அந்தத் தூண்களைக் கடந்தான்.
டைஸி வெலவெலத்தபடி அவன் கைப்பிடியில் நின்றிருந்தாள்.
“ஓஹ்ஹோ…. பயப்படாத டார்லிங்… நாம சாம்ராஜ்யமே அமைக்க போறோம்.. அதுக்கு இதுலாம் சகஜம்….”, என அவளைக் கட்டிக்கொண்டு ஆசுவாசப்படுத்தினான்.
அடுத்தடுத்துக் கிடைத்த இடைவெளியில் அனைவரும் இந்த பக்கம் வந்ததும் வீழ்ந்து கிடந்த பாறைகள் மீண்டும் சுவறாக மாறியது.
“சுதாகர் சார்… இங்கிருந்து எப்படி வெளியே போறது? எல்லா வழியும் மூடிகிட்டே வருது”, இனியன்.
“விதி இருந்தா ஊருக்கு போவோம் வாங்க இனியன்”, என சுதாகர் கூறவும் ஙே என முழித்தான்.
“கம்முனு சஸ்பெண்ட் ஆனதுக்கு வீட்ல படுத்திருந்து உடம்ப தேத்தாம கடமை கண்ணியம் கட்டுப்பாடுன்னு வந்து சிக்கிட்டேன்…. தேவையா எனக்கு”, எனத் தனக்குத் தானே புலம்பியபடி நடந்தான்.
அடுத்து அவர்கள் வழியை அடைத்தபடி கிடந்தது மனித எழும்புகளால் செய்யப்பட்ட பெரும் கதவு.
அதற்கு அந்த பக்கம் பளிங்கினால் செய்யப்பட்ட பாதை கண்களுக்கு தெரிந்தது.
நாச்சியா தசாதிபனைப் பார்க்க அவர் பெருமூச்செடுத்தபடி முன்னால் வந்தார்.
“இங்க உயிர்பலி குடுக்கணும்”, என நாச்சியார் கூற அதித் அடியாட்களில் இருபது பேரின் தலையை துண்டித்து அந்த எழும்புகளில் தடவ, அந்த எழும்புகள் இரண்டு ஆள் செல்லும் அளவிற்கு வழி கொடுத்தது.
“அதித்….”, ம்ரிதுள் கத்தினான்.
“ஷட் அப் ம்ரிதுள்… இனி நான் சொல்றது மட்டும் தான் எல்லாரும் கேக்கணும்”, என அதிகாரமாக மொழிந்தவன், வல்லகியை முன்ன செல்லக் கூறினான்.
“இனி அவள முன்ன அனுப்பமாட்டேன் அதித்”, என நாச்சியார் அவளுக்கு முன்னே வந்து நின்றாள்.
“கவலை படாத நாச்சியார் அவளை இப்ப கொல்ல மாட்டேன்”, எனக் கூறி, வல்லகியை அந்த செயினால் தொட அவள் அவன் இழுத்த இழுப்பிற்கு நடந்தாள்.
“அவள என்ன பண்ற?”, நாச்சியார் கோபமுடன் கேட்டாள்.
அவன் செயினை அனைவரையும் நோக்கி விலாச அனைவரும் அவன் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்.
ஜேக்கின் மீது அதில் இருந்த வசியத்துளிகள் படவில்லை ஆனாலும் அவனும் தன் மேல் பட்டதுபோல நடந்துக்கொண்டான்.
அத்தனைக் கொடுமை செய்தும் டைஸி ஏன் அவனைத் தேடியே மீண்டும் வந்தாள் என்பது இப்போது அவனுக்குப் புரிந்தது.
நாச்சியா சில நொடிகள் ஸ்தம்பித்து நின்றுவிட்டாள்.
அவர்களுடன் வந்த அனைவருமே அவனுக்குக் கட்டுப்பட்டுப் பொம்மைகளாக நிற்பதுக்கண்டு உறைந்துப் போனாள்.
“என்ன பண்ற நீ அதித்?”
“என்னால உன்னை மட்டும் கட்டுப்படுத்த முடியல நாச்சியா… உன் கண்ல தெரியற சுடர் எனக்கு கட்டுப்படமாட்டேங்குது…. இப்ப நீ நான் சொல்றத மட்டும் தான் கேக்கணும்…. இல்லைன்னா அத்தனை பேரும் சாவாங்க… “, அதித் அவளருகில் வந்துச் சிரித்தபடி மிரட்டினான்.
“உன் தம்பியும் தானே இருக்கான்”, என நாச்சியார் கூறவும் வாய்விட்டு சிரித்தான்.
“அவன் சரியான சென்டிமென்ட் இடியட்…. அவனோட திறமைக்கு யாரும் அவனோட மோத முடியாது.. ஆனா அவன் யார் உயிரும் எடுக்கமாட்டேன்…. அது பண்ணமாட்டேன் ….. இது பண்ணமாட்டேன்னு பினாத்துவான்… அவன வளர்த்தவங்க சரியில்லை…. ஆனா என் மேல பாசமா இருக்கற மாதிரி வளத்ததால எனக்கு பயன்படுது…. இப்ப சொல்லு அடுத்து எத்தனை கதவு இருக்கு?”, எனத் தீவிரமான முகத்துடன் கேட்டான்.
“ஒன்னு தான்”, நாச்சியா திடம் கொண்டு நிமிர்ந்துக் கூறினாள்.
“வல்லகி… முன்னாடி போ”, என அவன் கூற, அவள் அவன் குரலுக்குக் கட்டுப்பட்டு முன்னே நடந்தாள்.
அவளுக்குப் பின் நாச்சியா நடக்க, அதற்குபின் அதித் மற்றவர்கள் சூழ நடந்தான்.
உள்ளே செல்ல செல்ல அவன் வாய்திறந்து கூறாமலே, அவனது எண்ணப்படி அனைவரும் நடந்துக்கொண்டனர்.
அந்த பளிங்கு பாதையில் நடக்கும் போது வந்த வெளிச்சத்தில் சுற்றிலும் கடல் நீர் இருப்பது தெரிந்தது.
நீருக்கடியில் இருப்பதால் அவ்விடம் சில்லிட்டு இருக்கவேண்டும் ஆனால் அங்கே வெட்பம் அதிகமாக இருந்தது.
கினியாவில் ஜேக் கண்ட மயக்கத்திரள் மீன் கூட்டங்கள் ஆங்காங்கே தென்பட்டன.. முழுதாகத் தலை நிமிர்த்தாமலே ஜேக் அங்கு நடப்பதையும், சுற்றி உள்ளவற்றையும் கவனித்தபடி மயங்கிக்கிடந்த பிறைசூடனைச் சுமந்தபடியே நடந்தான்.
“ம்ம்…. அதை வெளியே எடு”, என அதித் ஆணையிட இனியன் அவன் தோளில் இருந்த பையில் இருந்து அந்த வாளை எடுத்தான்.
வல்லகி கையில் அதை வாங்கிக் கொண்டு முன்பிருந்தக் கதவுத் துளையில், சதக்கெனக் குத்தி இழுக்க ஜேக் பின்னால் இருந்தவர்கள் கீழே சரிந்தனர்.
நான்கு முறை அதே போல செய்யப் பளிங்குக் கல்லிற்கு நடுவில் இருந்த உலோக பகுதியில் இருந்து, உயிர்பறிக்கும் ஆயுதங்கள் அதற்கு நேர் நின்றவர்களை உயிர்குடித்தது.
ஜேக் மெல்ல மெல்ல ஏஞ்சல் அருகில் வந்து நின்றுக்கொண்டான். அவள் கையில் இருந்த ஸ்மார்ட் வாச்சில் ஒரு பட்டனை அழுத்த யோகோஷ் அவர்கள் இருக்கும் இடம் தெரிந்ததும் புறப்பட்டான்.
“ம்ம்…. கதவ திற”, என நாச்சியாரை முன்னே தள்ளினான்.
வல்லகி நாச்சியாரை இழுத்து முன்னே நிறுத்தித் திறக்க வைத்தாள்.
அந்த இடைவெளியில் அந்த வேரை வல்லகியில் வாயில் திணித்தாள் நாச்சியார்.
உள்ளே உடல் உறையும் குளிர் எடுத்தது.
அதித் டைஸியை அழைத்து இறுக்கிப் பிடித்தபடி, இருவரின் கையையும் அறுத்துக்கொண்டு எதிரே இருந்த மேடையில் கைவைத்தான்.
இத்தனை ஆண்டுகளாக இருள் அவனுக்கு போதித்தபடி அவளை வதைத்தவனுக்காக, அவளரியாமல் அவளை பலி கொடுக்க தயாரானாள்.
அதித் ஒவிஷ்கர் தன்னிடம் சில ஆண்டுகளுக்கு முன் இருள் கூட்டம் கொடுத்தப் பெட்டியை எடுத்து அந்த மேடையில் வைத்து முணுமுணுத்தான்.
பின் டைஸியை அந்த மேடையில் படுக்க வைத்து அங்கிருந்த சங்கிலியால் பிணைத்தான்.
அப்போது அந்த இடமே ஆடியது….
ஒரு பலத்த சத்தம் எழ, அனைவரும் காதை அடைத்தபடிக் கீழே விழுந்தனர்.
தலையில் அடிபட்டதும் அனைவருக்கும் புத்தி தெளிய ஆரம்பித்தது.
முதலில் எழுந்த ம்ரிதுள், “அதித் … ரொம்ப தப்பு பண்ற…. வேணாம்… டைஸிய விட்று… நீ இங்க வா… எவ்வளவு பணம் அதிகாரம் வேணும்னாலும் நான் சம்பாதிச்சி தரேன்… நீ ஏதோ ரொம்ப பெரிய தப்பு பண்ற… பண்ணாத டா”, எனப் பலவீனமானக் குரலில் கத்தினான்.
தர்மதீரன் தலையைப் பிடித்தபடி எழுந்து நின்று அதித்-ஐ பிடித்து இழுத்தான்.
அங்கே டைஸியின் இரத்தத்தை அந்த மேடை உறிஞ்சிக்கொண்டிருந்தது.
அவள் இரத்தம் உறிய உறிய இவர்களுக்கு காதுகளில் இரத்தம் வழிய ஆரம்பித்தது.
அனைவருக்கும் மீண்டும் சுயநினைவுத் தவறத் தொடங்கியது.
அதித் தர்மனைத் தூக்கி எறிந்துவிட்டு டைஸி அருகில் நின்றிருந்த வல்லகியின் கையை அறுக்கச் சென்றான்.
ஜேக் ஓடி வந்து வல்லகியைத் தன்பக்கம் இழுத்துக்கொண்டு அவளை மறைத்து நின்றான்.
“ஜேக்… அவள விடு”, என அதித் பேசும் போதே தர்மன் அந்த பக்கம் டைஸியை அந்த இடம் விட்டு நகர்த்தினான்.
அதில் அதித் வெறிக்கொண்டு அவர்களைச் சரமாரியாகத் தாக்கத்தொடங்கினான்.
அவ்வறையில் மிச்சம் இருந்தது பிறைசூடன், தசாதிபன், நாச்சியா, பாலா, வல்லகி, தர்மன், இனியன், சுதாகர், ஜேக், அதித், டைஸியுடன் இரண்டு அடியாட்கள் மட்டுமே….
அனைவருக்கும் முழுதாக மயக்கம் தெளியாமல், குத்துமதிப்பாக அவனை எதிர்த்துக்கொண்டிருந்தனர்.
வல்லகி மெல்ல மெல்ல பலம் பெற்றுக்கொண்டிருந்தாள்.
அந்த அறையின் ஒரு மூலையில் நீட்டிக்கொண்டிருந்த பாறையின் மேல் அமர்ந்ததும் கடல்நீர் பக்கவாட்டில் உள்ள வந்தது.
அந்த நீரில் கேட் அடித்து வரப்பட்டாள்.
மற்றொரு பக்கம் தர்மன் பாறையை அழுத்திப்பிடித்து எழும்போது உள்ளே வந்த நீரில் சார்லஸ் கிடந்தான்.
ஜேக் அவனைப் பார்த்துவிட்டான் ஆனாலும் அதித்-ஐ சமாளித்தபடி இருந்தான்.
நாச்சியா சட்டென தன் பாக்கெட்டில் இருந்த வேரை கசக்கி அனைவரின் வாயிலும் சில துளிகள் விட்டபடி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தாள்.
தர்மனுக்கு கொடுத்துவிட்டு நகரும்போது, ” நாச்சியா…. சார் அந்த மேடடைகிட்ட கொண்டு போ… அவன நாங்க நிறுத்தறோம்”, எனக் கூறினான்.
அந்த சாறு உள்ளுக்குள் சென்றதும் அனைவருக்கும் புத்தி தெளிவாகியது.
ம்ரிதுள் அருகில் வந்தவள் அவன் அதித்-யிடம் அடிவாங்கி இரத்தம் வழிய கிடப்பதைக் கண்டவள் ஒரு நொடி தயங்கி நின்று அந்த சாற்றை அவனுக்கும் புகட்டினாள்.
“தேங்க்ஸ் நாச்சியா”, எனக் கூறியவன், ” இங்கயிருந்து வெளியே போற வழிய கண்டுபிடி சீக்கிரம்”, எனக் கூறினான்.
இனியனும் சுதாகரும் புத்தித் தெளிவானதும் அதித்துடன் சண்டையிட்டுக்கொண்டிருந்தனர்.
“சார்… சார்… எப்படி இங்க இருந்து வெளிய போறது?”, நாச்சியா கேட்டாள்.
“அந்த மேடைக்குள்ள ஒரு பொருள் இருக்கு.. அதை உடைச்சா வழி தெரியும்”, எனக் கூறியவர் வல்லகியை அழைத்து வாளின் கைப்பிடிக் கொண்டு நடுவில் ஓங்கி அடிக்கச்சொன்னார்.
அவளின் பலம் பலமடங்கு அதிகரித்திருந்ததால் ஒரே அடியில் சுற்றியுள்ள பாறைகள் உடைந்து, ஒரு கருப்புப் பெட்டித் தெரிந்தது.
அதை அதித் அணிந்திருந்த செயின் டாலர் கொண்டே திறக்க முடியும்.
“அந்த டாலர் வேணும் நாச்சியா”, என மூச்சு திணறியபடிக் கூறினார் தசாதிபன்..
“தர்மா…. அந்த டாலர் வேணும்”, என நாச்சியார் கத்தினாள்.
ம்ரிதுள் பின்னிருந்து அதித் கைகளைப் பிடித்துக்கொள்ள, இனியன் தோள்களை அழுத்திப் பிடித்தான்.
ஜேக் கால்களை அழுத்திக்கொண்டான். சுதாகர் அவனை கீழே படுக்க வைக்க முயற்சித்தான்.
தர்மதீரன் அவன் கழுத்தில் இருக்கும் செயினை எடுத்துக்கொண்டு வந்து கொடுத்தான்.
அந்த பெட்டியை தசாதிபன் திறந்ததும், “வல்லகி நான் பெட்டிய தொறந்ததும் எதுவும் பாக்காமா நடுவுல இருக்க கருப்பு இதயத்துல ஒரே வீச்சுல இறக்கி ரெண்டாக்கிடு .. உன்ன அது மயக்க பாக்கும், உன் கவனம் வேற எதுக்கும் போகவே கூடாது .. புரிஞ்சதா ? “, எனக் கேட்டபடித் திறந்தார்.
அந்த பெட்டியைத் திறந்ததும் ஆளுக்கு ஒரு பக்கமாக தூக்கி வீசி எறியப்பட்டனர். டைஸியின் ரத்தம் அந்த பெட்டியின் வலிமையை வெளிபடுத்த செய்தது. அதீத ஓலமும், அதிக படியான எதிர்மறை கதிர்களும் அவ்விடத்தை நொடிக்கும் குறைவான நேரத்தில் நிறைத்தது.
கேட் அருகில் நாச்சியார் விழுந்ததும் அவள் கண்விழித்தாள்.
அங்குள்ள நிலைமைப் புரியாவிட்டாலும் தவறாக இருக்கிறது என்பது புரிந்து நாச்சியா எழ உதவினாள்.
அதித் அனைவரையும் உதறித் தள்ளிவிட்டு மயங்கிக் கிடக்கும் டைஸியைத் தூக்கிக்கொண்டு, அந்தப் பெட்டியை நோக்கி நடந்தான்.
இருவரின் இரத்தமும் ஒன்று சேர அந்த பெட்டியில் பிழிந்துவிட்டு டைஸியின் கைக்கொண்டு அந்தப் பொருளை எடுத்தான்.
கருநிற இதயம் இரத்தம் பாய்ந்ததும் துடிக்க ஆரம்பித்தது. சட்டென மயான அமைதி அவ்விடத்தை சூழ , அந்த இதயத்தின் துடிப்பு மட்டும் அந்த அறை முழுதும் எதிரொளித்தது.
அதை அவன், அவன் இதயத்திற்கு அருகில் எடுத்துச் செல்லும்போது வல்லகி எதிர்பக்கமாக வந்து, அந்த இதயத்தை வாள் கொண்டுப் பிளந்தாள்.
அவள் பிளந்ததும் அதித் உடலும், டைஸியின் உடலும் தரைக்குள் புதைய ஆரம்பித்தது.
ஜேக் ஓடி வந்து டைஸியை இழுத்தான்.
கேட் -உம் வந்து கைக்கொடுத்தாள். தரை கருநிறச் சுழலாக மாறி அவனை உள்ளே இழுத்தது.
டைஸி ஜேக்கின் பலமான இழுவையினால் மேலே வந்தாள். அதித்-ஐ காப்பாற்ற ம்ரிதுள் கைக்கொடுத்தான். ஆனாலும் அவன் உள்ளே சென்றுவிட்டிருந்தான்.
அதித் என ம்ரிதுள் கதறிக்கொண்டிருந்தான்.
“தர்மா… ஈட்டிய எடு”, என தசாதிபன் கத்தினார்.
“எங்க சார் எறியணும்?”, தர்மன் ஈட்டியை எடுத்து பிடித்தபடிக் கேட்டான்.
‘இப்ப கடல்தண்ணி உள்ள வரும். அப்ப மேலே உச்சில ஒரு ஓட்டை தெரியும்.. அதுல எறி… “, எனக் கூறி அனைவரையும் நடுவில் நிற்கக்கூறினார்.
பிறைசூடன் இன்னும் மயங்கியே கிடந்தார். அவரை அந்த இரண்டு அடியாட்களும் தூக்கிக்கொண்டனர்.
அந்த இடம் முழுக்க கடல்நீர் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தது.
நீரின் வேகம் கூடக் கூட அந்த அறையின் கிழக்கு பக்கம் ஒரு கூடம் உயர்ந்துக்கொண்டே போனது.
அவர்கள் நீரில் நீந்த ஆரம்பித்ததும் மேலே மாடத்தில் ஓட்டை தெரிந்தது.
“தர்மா”, என ம்ரிதுள் அழைத்தான்.
“இங்க இருந்து எப்படிடா எறியறது?”, சுதாகர்.
“தர்மா அங்க கிட்ட போ”, தசாதிபன்.
வல்லகியும் கேட்-உம் அந்த ஓட்டைக்கு கீழே சென்றுப் பார்க்க அது உயரமாகிக்கொண்டே சென்றது.
“சார்.. அது மேலே போயிட்டே இருக்கு….”, என வல்லகி கத்தினாள்.
“தர்மா .. சீக்கிரம்…. நமக்கு நேரமில்ல… வெளிச்சம் மறையறதுக்குள்ள எறி”, எனக் கூறினார்.
“தர்மா… நாங்க உன்ன தோள்ல தூக்கிக்கறோம். நீ மேல எறி”, என ம்ரிதுள் கூற அனைவரும் சரியென அவனுக்குத் தோள் கொடுத்தனர்.
“வல்லகி உன்னால மேல வரைக்கும் எகிற முடியும்… நீ அந்த பாறைகிட்ட நின்னு அவனுக்குக் குடு”, பிறைசூடன் முழுதாக மயக்கம் தெளிந்துக் கூறினார்.
“தர்மா…. சின்ன சின்ன பிளவு இருக்கு…. இரண்டு ஆள் உயரத்துக்கு மேல நீ வந்துட்டா அதுல கால் வச்சி ஏற முடியும்”, என நாச்சியார் அந்த பாறைச் சுவற்றைத் தடவியபடிக் கூறினாள்.
“நீ அங்கயே நில்லு நாச்சியா…. “, என ம்ரிதுள்ளும் தர்மனும் கத்தினர்.
“இனியா…. ரெடி… ஒன் டூ த்ரீ”, என தர்மனை தம்பிடித்து மேலே தூக்கி விட்டனர்.
வல்லகி சரியாக எம்பி தர்மன் கையில் ஈட்டியை கொடுக்க, நாச்சியா கூறிய இடத்தில் கால் வைத்து அந்த உச்சியோட்டையைக் குறிப்பார்த்து வீசினான்.
ஈட்டி முனை ஓட்டையை அடைந்ததும் அனைவரும் நீரினால் அலைகலைக்கப்பட்டு சுழலில் சிக்கினர். ஆளுக்கு ஒரு பக்கமாக சுழல ஆரம்பிக்க சார்லஸ் அப்போது தான் கண் விழித்தான்.
“இன்னுமா நான் சுழல்ல சுத்திட்டு இருக்கேன்.. “ என அவன் நினைத்து முடிப்பதற்க்குள் பெரும் அலை ஒன்று, அந்த சுழலுடன் மோதியது.
பல நிமிட போருக்கு பின் பேரலைச் சுழலைத் தோற்கடித்தது.
நீருக்கும் நீருக்கும் ஏற்பட்ட போரில் அனைவரும் சுயநினைவிழந்து கடலில் மிதந்தனர்.
மற்றொரு பேரலை இவர்களை அடி ஆழத்தில் இருந்து மேற்பறப்பிற்குத் தூக்கி வந்தது.
சிறிது நேரத்திற்குப் பின் கடல் அலைகள் அவர்களைக் கரையில் ஒதுக்கியது.
சுமார் இரண்டு மணிநேரங்கள் கழித்து மெல்ல ஒவ்வொருவராக கண்திறந்தனர்.
யோகேஷ் ஏஞ்சலின் சிக்னல் வைத்து அவ்விடம் வந்து சேர்ந்தான்.
அவன் கடற்கறைக்கு வரவும் ம்ரிதுள் எழுந்திரிக்கவும் சரியாக இருந்தது.
“என்ன ம்ரிதுள் செம ஃபன் போல”, எனக் கேட்டபடி அவனைத் தூக்கிவிட்டான்.
“ஏன்டா கேக்கமாட்ட…. இங்க ரூம் புக் பண்ணிட்டியா? எல்லாருக்கும் ரெஸ்ட் வேணும்…. “, எனக் கேட்டான்.
“நானும் இப்பதான் வந்தேன்… ஒன்னு ஒன்னா பண்றேன்…”, எனக் கூறிவிட்டு ஒவ்வொருவர் அருகிலும் சென்றுப் பேசியபடி எழுப்பினான்.
வல்லகியும் நாச்சியும் பாலாவை தோளில் தாங்கியபடி நடந்தனர். ஜேக் சார்லஸைக் கட்டிக்கொண்டு மகிழ்ந்தான்.
தர்மனும், இனியனும், சுதாகரும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்..
ஏஞ்சல் கேட்-ஐ கட்டிக்கொண்டு சந்தோஷத்தில் குதித்தாள்.
தசாதிபன் பிறைசூடனுக்கு கைக்கொடுத்து எழுப்பி விட்டார்.
அந்த இரண்டு அடியாட்களும் ம்ரிதுள் அருகில் நின்று அவன் கட்டளைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
தசாதிபன் அனைவரையும் பார்த்தபடி கடல் அலைகளைப் பார்த்துவிட்டு வானத்தைப் பார்த்தார்.
சூரியன் உதிக்கும் நேரம் வந்திருந்தது ….
இருள் நீங்கி வெளிச்சம் பாய்ந்தது….
இங்கே தர்மன் ஈட்டியை எரிந்த நொடியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் ராகவியும், நாச்சியாரும் கண்ட பாறையானது முழுதாக பிறழ்ந்தது ….
காற்றுடனான நுண்ணுறவு தொடரும் ……
அடுத்த பாகத்தில் இவர்களை மீண்டும் சந்திப்போம் ..