41 – மீள்நுழை நெஞ்சே
“திவா….. திவா…..”, எனத் தொண்டைக்குழியில் இருந்து ஈனஸ்வரத்தில் குரல் வெளி வந்தது.
“ஹே.. துவா… இப்ப எப்படி இருக்கு உடம்பு? பரவால்லயா?”, என அக்கறையுடன் கேட்டான்.
“ம்ம்… படுத்து தூங்காம ஏன் இப்படி தூங்கற… முதுகு வலிக்கும்…. படு கொஞ்ச நேரம்”, எனப் பேசியபடி மெல்ல எழுந்தாள்.
“எங்க போற?”, அவள் கட்டிலை விட்டு இறங்குவது கண்டுக் கேட்டான்.
“பாத்ரூம் போறேன்…. “, நிற்க தடுமாறியபடிக் கூறினாள்.
“இரு துவா வரேன்”, என திவா கைப்பிடித்து அழைத்துச் சென்றான்.
மீண்டும் கட்டிலில் சாய்ந்து அமர்ந்து தண்ணீர் குடித்துவிட்டு அவனைப் பார்த்தாள்.
“என்னாச்சி?”, திவா அவள் முகம் பார்த்துக் கேட்டான்.
“மத்தவங்க எல்லாம் எங்க? நீ மட்டும் இங்க இருக்க?”, சுற்றிலும் பார்த்துவிட்டுக் கேட்டாள்.
“நான் தான் வீட்டுக்கு போயிட்டு வரச்சொல்லி அனுப்பிட்டேன். இப்ப பத்மினி ஆண்ட்டி வந்துடுவாங்க…”, எனக் கூறிவிட்டு அவள் முகம் பார்த்தான்.
அவன் தங்கை. எப்போதும் தந்தையுடன் ஊர் சுற்றிக்கொண்டு கடையிலும், சிற்றப்பாவுடன் வயலிலும் என, சிரித்த முகமாக வளம் வருபவள், இப்போது அவள் கடைசியாக மனம்விட்டு சிரித்தது எப்போதென்று ஞாபகம் இல்லை.. அத்தனை நாட்களும், மாதங்களும் கடந்திருந்தன. எதையும் அத்தனை சீக்கிரம் வெளிக்காட்டிக் கொள்ளமாட்டாள், ஆனால் மற்றவருக்கு ஒன்றென்றால் முதல் ஆளாக நிற்பாள். தயக்கம், பயம், எதுவும் பெரிதாக அவள் கொண்டதே இல்லை.
ஆனால் இன்று மன அழுத்தம் தாங்காமல் மூர்ச்சையாகி, மனம் இறுகி, சிரிப்பை மறந்து, தன் இயல்பைத் தொலைத்து நிற்பவளைக் கண்டு மனம் வெகுவாக கனத்துப்போனது.
இந்நிலையில் அவனின் திருமணம் அவனால் தடுக்கமுடியாத நிலையில் நடக்கவிருக்கிறது. நிச்சயமாக அவளுக்கு அங்கே குத்தல் பேச்சும், மனம் வலிக்கும் தருணங்களும் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதை அவள் கடந்தே ஆகவேண்டும். எதிர்கொண்டால் தான் மீண்டும் ஓடி ஒளிய மாட்டாள்.
தாயும், தந்தையும் இவளைக் கண்டால் தான் உயிர் பெறுவார்கள். இந்த அடம்பிடிக்கும் திடமனதுக்காரியை இன்னும் கொஞ்சம் திடப்படுத்தி அழைத்துச் செல்ல வேண்டும்.
அவள் முகம் எப்போதும் ஒரு அமைதியை கொடுக்கும், இப்போது அவளே அமைதியில்லாது அலையுறுவது நன்றாக அம்முகத்தில் தெரிகிறது. அவள் அமைதியை எப்படி கொண்டு வருவது ? இந்த கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. உண்மையில் கூறினால் எந்த மனிதனிடமும் இல்லை.
காலத்தின் கையில் தான் இருக்கிறது. அவளை அவளாக மாற்றம் செய்துக்கொள்ள, அவளே அவளை மீட்டெடுக்க, மீண்டும் அவள் மனதில் உயிர்ப்பைக் கொடுக்க, மீண்டும் அந்த அக்கினி பாதையில் நடந்தாக வேண்டும். எதிர்த்து ஒரு முறை நடந்துவிட்டால் போதும் மிச்சத்தைக் காலம் பார்த்துக் கொள்ளும்.
“என்னடா அப்படி பாக்குற?”, அவன் மனதில் ஏதோ சிந்தனையில் இருப்பதுக் கண்டுக் கேட்டாள்.
“என் பழைய துவாவ எப்ப பாக்க முடியும்?”
“ஹாஹா… எனக்கே அது மறந்து போச்சு திவா…. புதுசா என்னை நான் உருவாக்கிக்கணும்….”
“என் பழைய துவா புது பலத்தோட வந்தா போதும்…. உன்னை நாங்க கஷ்டப்பட விட்டுட்டோம். இப்ப மறுபடியும் கஷ்டப்படுத்தறோம்… ஆனா எங்களுக்கு நீ வேணும் துவா… எங்க துவா மீண்டு வரணும்…. உன்னை இப்படியே விடமுடியாது “, அவள் கைப்பிடித்துக் கூறினான்.
“நீ சொல்ல சொல்ல எனக்கு பயமும், சொல்ல தெரியாத தயக்கமும் தான் வருது திவா…. ப்ளீஸ்டா…. என்னை என் போக்குல விடுங்க”, என்று கூற கூற அவள் கண்கள் நீரை சிந்த ஆரம்பித்தன.
“ஏய் அழாத… நாங்க உன்னை கட்டாயப்படுத்தல…. இவ்வளவு பலவீனமான துவாரகாவ நாங்க பார்த்ததே இல்லை… அவ பலசாலி… இப்பவும் நிறைய பலம் சேர்த்துக்கற துவாரகாவ தான் நாங்க பாக்க விரும்பறோம்… எதை நினைச்சும் டென்ஷன் ஆகாத…. நீ கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்ன வா போதும்… உன்ன அப்ராட் அனுப்ப எல்லாருமா வருவோம்…. இப்ப ரிலாக்ஸா இரு.. நான் டீ வாங்கிட்டு வரேன்”, என எழுந்தான்.
“திவா…. இந்தாங்க இதுல டீ இருக்கு... நான் ஹாஸ்பிடல் பில் கட்டிட்டேன். ஒரு தடவை டாக்டர் செக் பண்ணதும் நாம கிளம்பலாம்…”, என முகில் அவள் முகத்தைத் தயக்கமாகப் பார்த்துக் கூறிவிட்டு வெளியே உட்கார்ந்துக் கொண்டான்.
“முகிலன் உன்கிட்ட என்ன சொன்னார் நேத்து?”, இருவரும் இயல்பில்லாமல் பார்ப்பதுக் கண்டு கேட்டான்.
“ஒன்னும் இல்ல…. நீ டீ விட்டு குடு…. பசிக்குது”
“இந்தா குடி…. ப்ரெட் சாப்பிடறியா?”
“வேணாம். ஆண்ட்டி பிஸ்கட் வச்சிருப்பாங்க பாரு.. அது குடு”, என அவள் கூறியதும் உள்ளே சிறிய டப்பாவில் சில பிஸ்கட்கள் இருந்தன.
திவாகர் எடுத்துக் கொடுத்துவிட்டு, அவனும் டீ குடித்தபடி வெளியே வந்து முகில் அருகில் அமர்ந்தான்.
“துவாரகா எப்படி இருக்காங்க?”
“அது நீங்களே கேக்கலாமே முகில்? என்னாச்சி நேத்து? இரண்டு பேரும் ஒன்னா தானே வெளியே போனீங்க?”, என நேரடியாகக் கேட்டான்.
“அது…. வந்து….. அது…..”, என விஷயத்தைக் கூற முடியாமல் தடுமாறினான்.
“பட்டுன்னு சொல்லுடா துவாரகாகிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்கறியான்னு கேட்டேன்னு ……”, எனக் கூறியபடி பத்மினி அங்கே வந்தார்.
“ஆண்ட்டி….”, திவாகர் அதிர்ந்துக் கேட்டான்.
“நீயும் மயக்கம் போட்டுடாத திவா …. என்னடா அதானே கேட்ட?”, பத்மினி முகிலனை மிரட்டும் பாவனையில் கேட்டார்.
“ம்ம்….”, எனத் தலையாட்டிவிட்டு தலைக்குனிந்து அமர்ந்தான் முகிலமுதன்.
“ஆண்ட்டி….”, என திவாகர் பேச்சை ஆரம்பிக்கும் முன் அவனை அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு துவாரகாவைப் பார்க்க உள்ளே சென்றார்.
“துவாரகா…. எப்படி இருக்க?”, எனக் கேட்டபடி அவள் தலை வருடினார்.
“பைன் ஆண்ட்டி… சாரி எல்லாருக்கும் சிரமம் குடுத்துட்டேன்….”, என மனம் வருந்திக் கூறினாள்.
“இதுல என்னடா சிரமம்? நீ மனசு விட்டு பேச தானே இத்தனை பேர் காத்திருக்கோம்…. மனசுக்குள்ள இன்னும் எவ்வளவு அழுத்திக்க போற? மேல மேல திணிச்சிக்காத டா …..”, வாஞ்சையுடன் கூறினார்.
அவள் அமைதியாக அமர்ந்திருப்பதுக் கண்டு அவள் முகத்தை தன்பக்கம் திருப்பினார்.
“முகில் உன்கிட்ட கேட்டது உனக்கு பிடிக்கல அவ்வளவு தானே… அதுக்கு நீ ஏன் டென்ஷன் ஆகணும்? அவனை நீ ரிஜெக்ட் பண்ணதுக்கு அவன் தானே டென்ஷன் ஆகணும்….”, எனக் கேட்டார்.
“ஆண்ட்டி … உங்களுக்கு…..”, முழுதாகக் கூறமுடியாமல் தயங்கினாள்.
“அவன் மனசுல நீ எப்பவோ வந்துட்டன்னு அவனுக்கு முன்ன எனக்கு தெரியும் டா. அவன் என் பையன்ங்கறதுக்காக எல்லாம் உன்னை நான் கட்டாயப்படுத்தமாட்டேன்… உன் விருப்பம் தான் முக்கியம்…. உன்னை ஊருக்கு போக சொல்றது உன்னை கேவலமா நினைச்சவங்க முன்ன நீ நிமுந்துட்டன்னு சொல்லாம சொல்ல தான். மறுபடியும் நீ கல்யாணம் செஞ்சே ஆகணும்ன்னு நான் கட்டாயப்படுத்தல…. அது உன் சுயவிருப்பம். யாருக்காகவும் அதை நீ மாத்திக்க வேணாம். ஒருதடவை அப்பா அம்மா சொந்தம் பந்தம்னு அவங்களுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்ட.. அந்த வாழ்க்கைய அவங்க சரியா அமைச்சி குடுக்கல மறுபடியும் அதே செண்டிமென்ட்காக உன்னை நீ பலி குடுக்க வேணாம்…”
“ஆண்ட்டி… நீங்க என்னை தப்பா…. தப்பா நினைக்கலியே”, தயக்கத்துடன் கேட்டாள்.
“ஒரு பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் பாக்கத்தான் செய்வாங்க. அதுலையும் உன்னை போல பொண்ணு இருந்தா யார் மனசும் இளகும் டா… அது உன் தப்பில்ல. உன்னை விரும்பினதால அவனும் தப்பு பண்ணல…. அவன் விருப்பத்த அவன் சொன்னான். உன் முடிவ நீ சொல்லிட்ட.. அவ்வளவு தான். இதுக்கு மேல இதுல நீ உன்னை கஷ்டப்படுத்திக்க ஒன்னும் இல்ல டா…. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காம அமைதியா இரு.. நல்லா படுத்து தூங்கு… வில்சன் நேத்து இருந்து கால் பண்ணிட்டு இருக்கான். இப்ப கால் பண்ணுவான் பேசிடு இந்தா….”, என அவரின் தொலைபேசியை கொடுத்துவிட்டு அவள் டீ குடித்த கப்பை எடுத்துக் கொண்டு எழுந்தார்.
துவாரகாவிற்கு மனதில் இருந்த பெரும் பாரமே இறங்கியது போல இருந்தது. இவரும் தன் அப்பத்தாவை போலவோ, ஊராரை போலவோ ‘என் மகனை மயக்கிவிட்டாயா?’ என்று கேட்டிருந்தால் மன அழுத்தம் தாங்காமல் மீண்டும் மூர்ச்சையாகி இருப்பாள்.
பத்மினி தேவி நிஜமாகவே நிதர்சனம் உணர்ந்து நடப்பவர் என்று மீண்டும் உணர்ந்துக் கொண்டாள். அவரின் மேல் மதிப்பும், மரியாதையும் அதிகமானது.
மருத்துவமனை விட்டு வீட்டிற்கு வந்ததும் அவளின் ஆரோக்கியம் சீர் செய்ய பலமான கவனிப்பு நடந்தது.
திவாகர் பத்மினி தேவியிடம் முகிலனின் விருப்பத்தைப் பற்றி பேசினான்.
“ஆண்ட்டி… உங்க வசதிக்கும், அந்தஸ்துக்கும் நாங்க இல்ல… என் தங்கச்சி நல்ல பொண்ணு ஆனா ஏற்கனவே கல்யாணம் ஆகி விவாகரத்து ஆனவ. அவளுக்கு விருப்பம் இருந்தா மட்டும் தான் மறுபடியும் கல்யாணம் செய்யணும்னு நான் முடிவோட இருக்கேன். நீங்க எல்லாரும் இவ்வளவு உபகாரம் செஞ்சும் நான் இப்படி பேசறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க… “
“இதுல தப்பா எடுத்துக்க என்ன இருக்கு திவாகர்? இந்த பணம் அந்தஸ்து எல்லாம் துவாரகா குணத்துக்கு முன்ன ஒன்னுமே இல்ல. எனக்கும் அவள கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வைக்க விருப்பம் இல்லை. முகில் மேல நம்பிக்கை வந்து கல்யாணம் செய்துக்க அபிப்பிராயம் வந்தா பேசிக்கலாம்…..”, என இராஜாங்கமும் பேச்சில் கலந்துக் கொண்டார்.
“அதுக்காக இன்னும் எவ்வளவு நாள் அமுதன நாம் காக்க வைக்கறது ?”, அன்பரசி.
“அவன் இத்தனை நாள் எங்கள் காக்க வச்சான்ல… அவ மனசுல இடம் பிடிக்கட்டும். அதுக்காக அந்த பொண்ணை தொந்தரவு பண்ணக்கூடாது… இரண்டு வருஷம் முயற்சி பண்ணட்டும். துவாரகா ஒத்துகிட்டா ஓக்கே இல்லைன்னா நாங்க பாக்கற பொண்ண கல்யாணம் பண்ணிக்கட்டும்….”, என பத்மினி தேவி முறைப்புடன் கூறிவிட்டு அத்துடன் பேச்சை முடித்துவிட்டார்.
முகிலமுதன் தாயை பாவமாக பார்த்துவிட்டு சிற்றன்னையிடம் சலுகையாக நின்றுக் கொண்டான்.
“விடு டா.. நான் ராகா கிட்ட பேசறேன்….”, அவன் முகம் வாடுவது பொறுக்காமல் கூறினார் அன்பரசி.
“அன்பு நீங்க யாரும் இத பத்தி துவாரகாகிட்ட பேசக்கூடாது…. அவளா இவனை ஏத்துகிட்டா தான். யாரும் அவனுக்காக சிபாரிசு பண்ணக்கூடாது… துவாரகாவ இக்கட்டுல நிறுத்தாதீங்க… அவ அப்பா வீட்ல மூச்சு விட முடியாம தான் வேலைக்கு இங்க வந்தா.. இங்க இருக்கற கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடுங்க…. அவள யாரும் இது விஷயமாக தொந்தரவு பண்ணக்கூடாது….”, என கண்டிப்புடன் கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
அவர் உள்ளே வரும்போது துவாரகா பெட்டியுடன் ஹாலில் நின்றாள்.
“என்ன துவா பெட்டியோட நிக்கற?”, அதிர்வுடன் கேட்டார்.
“இல்ல ஆண்ட்டி டெஸ்டிங் ஆரம்பிச்சிட்டாங்க. நான் ஆபீஸ்ல தங்க வேண்டிய சூழ்நிலை இது… எந்த நேரமும் என் ஆபீஸ்ல இருந்து பேசுவாங்க. நான் அங்க இருந்தா தான் வேலை நடக்கும்.. யாரும் தப்பா எடுத்துக்காதீங்க.. நான் ப்ராஜெக்ட் முடிச்சதும் இங்க வந்துட்டு தான் ஊருக்கு போவேன்”, எனக் கூறிவிட்டு திவாகரை அருகில் அழைத்தாள்.
“நில்லு துவாரகா… என் காரணமாக நீ இங்கிருந்து போக வேணாம். நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன்… இவங்களுக்காக நீ இங்க இரு.. நான் வெளியே இருந்துக்கறேன் “, முகில் பேசினான்.
“சாரி மிஸ்டர் முகில்…. நான் யாருக்காகவும் இங்க இருந்து கிளம்பல. என் வேலைக்காக தான் போறேன்… என் மத்த திங்க்ஸ் எல்லாம் இங்க தான் இருக்கு… இது நான் அங்க ஒரு வாரம் தங்கறதுக்கு தேவைபடற திங்க்ஸ் தான் …. தேவையில்லாத யோசனை எல்லாம் வேணாம்…. ஆண்ட்டி, அங்கிள், அன்பு ஆண்ட்டி, மித்ரா, வசந்திக்கா… விகாஷ் எல்லாருக்கும் டாட்டா… வரேன்… “, எனக் கூறிவிட்டு காத்திருந்த டாக்ஸியில் கிளம்பினாள்.
துவாரகா கிளம்பியதும் பத்மினி தேவி வாய்விட்டு சிரித்தார்.. இராஜாங்கமும் மனைவியுடன் சேர்ந்து சிரிக்க முகில் மூக்கில் காத்தடித்துக்கொண்டிருந்தான்.
“அவ என்ன சீரியல் ஹீரோயின்னு நினைச்சியா? என் நிஜ ஹீரோயின் டா…. போ போய் வேலைய பாரு…. இத்தனை வருஷமா கல்யாணம் பண்ணிக்க சொல்லி கெஞ்சினேன்ல காதுல வாங்கினியா…. உனக்கு எல்லாம் இப்படி நடந்தா தான் புத்தி வரும்… “, எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.
“அக்கா… அவன் நம்ம பையன் க்கா”, என அன்பரசி கோபமாகக் கூறினார்.
“அதுக்காக எல்லாம் நான் நியாயத்தை மாத்த முடியாது அன்பு… நியாயம் எல்லாருக்கும் ஒன்னு தான்…. அவன் எந்த அளவுக்கு துவாரகாவ புரிஞ்சிகிட்டான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் அவள ஓரளவு நல்லாவே புரிஞ்சி வச்சிருக்கேன்…. இந்த விஷயத்துல நான் இவனுக்காக மட்டுமே யோசிக்க மாட்டேன். இவன் மனச விட துவாரகாவோட மனசு எனக்கு முக்கியம். அது மறுபடியும் மறுபடியும் காயப்படறத நான் அனுமதிக்க முடியாது….”
“துவாரகா நமக்கு முக்கியம் தான் க்கா… ஆனா முகில் அவள விட முக்கியம் இல்லையா? அவன் விரும்பின பொண்ண கட்டிவைக்க நாம நினைக்கிறது தப்பா?”
“கண்டிப்பா தப்பு தான் அன்பு… வாழ்க்கைல முதல் கல்யாணம் எப்படி வேணா நடக்கலாம். ஆனா முதல் கல்யாணத்துல தோத்து, மனசு வெறுத்தவங்க, இரண்டாவது தடவை செஞ்சிக்கற கல்யாணம் ஆண் பெண் இரண்டு பேருக்கும் அக்னி பரிட்சை தான்…. உடம்பும், மனசும் எந்தளவுக்கு அதுல அவதிப்படும்? எவ்வளவு மன அழுத்தம்? எவ்வளவு ஆசை? எவ்வளவு நம்பிக்கை? எவ்வளவு மனஇறுக்கம் ? எவ்வளவு தயக்கம்? எவ்வளவு அவமானம்? எவ்வளவு மனதைரியம்? இப்படி நிறைய நாம முதல் கல்யாணத்துல பார்க்க தவறிய விஷயங்களை தான் முதல் பாக்கணும்….. அடிபட்டு எந்திரிச்சு நின்னுட்டா வலி இல்லைன்னு அர்த்தமில்லை… வலிய தாங்கி நின்னுட்டு இருக்காங்கன்னு அர்த்தம். அவங்களுக்கு நாம மருந்தா இல்லைன்னா பரவால்ல, மறுபடியும் குத்தி கிழிக்கற கத்தியா இருக்க கூடாது…. அவ டீன் ஏஜ் பொண்ணு இல்ல… அவளுக்கு எது தேவைன்னு அவளுக்கு நல்லா தெரியும்… இவன் மொத துவாரகாவ நிஜமா விரும்பறானான்னு சுயபரிசோதனை செய்துக்க சொல்லு… அவகூட நடக்க முடிவு பண்ணிட்டா அது கண்டிப்பா மலர்பாதையா இருக்காது… முள் பாதையா தான் இருக்கும். அதுக்கு அவன் தயாராகிக்கணும்”, எனக் கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.