42 – மீள்நுழை நெஞ்சே
ப்ராஜெக்ட் டெஸ்டிங் சில தடைகள் கொண்டிருந்தாலும், அவையெல்லாம் உடனுக்குடனே சரி செய்யப்பட்டு இயக்கத்தில் வந்தது.
ஒரு வாரம் என்பது பத்து நாட்கள் ஆனது. அதுவரை அவள் அலுவலக கெஸ்ட் ஹவுஸில் தங்கிக்கொண்டாள். பெரிதாக எந்த தொந்தரவும் இல்லாமல் முதல் முறையாக மொத்த ப்ராஜெக்டும் அவள் மேற்பார்வையில் நடந்து முடிந்திருந்தது. கடைசி கட்டத்தில் அவள் வந்து கையில் எடுத்திருந்தாலும் அவளின் உழைப்பு அதில் சற்று அசாத்தியம் தான்.
அவளின் வலிகள் எல்லாம் வேலையில் வலிமை கொண்டதாக மாறியிருந்தது. இடையில் ஒரு நாள் விகாஷை காண வீட்டிற்கு சென்றாள்.
ஒரு மணிநேரம் அனைவரிடமும் பேசிவிட்டு அங்கிருந்துக் கிளம்பிவிட்டாள்.
“துவாரகா… இந்தா உனக்கு பிடிச்ச கல் தோசையும், சிக்கனும்….. சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு வா… “, என அன்பரசியும், பத்மினி தேவியும் பாசத்துடன் வழியனுப்பி வைத்தனர்.
“தேங்க்யூ ஆண்ட்டி…. “, இருவரையும் கட்டிப்பிடித்து விடைப்பெற்றாள்.
ப்ராஜெக்ட் முடிந்தது. அன்றிலிருந்து பதினைந்தாவது நாள் அவள் அமெரிக்கா செல்ல எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு, அன்பரசியின் இல்லம் வந்து சேர்ந்தாள்.
வரும்போதே அனைவருக்கும் சில பரிசுகளையும் வாங்கி வந்திருந்தாள்.
பெண்கள் நால்வருக்கும் புடவையும், உடன் சில சமையலறை பாத்திரங்களும்… மித்ராவிற்கு அழகான டிசைனர் புடவை மற்றும் ஒரு சிறிய கரை வைத்த பட்டுப்புடவை.
பத்மினி தேவிக்கு அழகான சுத்தமான காட்டன் புடவை மற்றும் சாஃப்ட் சில்க். அன்பரசிக்கு சில்க் காட்டன் மற்றும் சாஃப்ட் சில்க்.
வசந்திக்கு நான்கு பூனே புடவையுடன் ஒரு சாஃப்ட் சில்க்.. இராஜாங்கத்திற்கு அழகான வேஸ்டி சட்டை. முகிலனுக்கும் வேஷ்டி சட்டை எடுத்திருந்தாள்.
குட்டிப்பையன் விகாஷிற்கு சில துணிகளுடன் விளையாட்டு பொருட்கள்.
இது தவிர உருக்கிறும்பில் செய்த பிரியாணி பாட் மற்றும் மண்பாண்டத்தில் செய்த பெரிய கடாய்.
“என்ன இது? தனியா வீடு எடுத்து தங்க போறியா? எதுக்கு இத்தனை வாங்கி இருக்க துவா?”, பத்மினி கேட்டார்.
“யாரும் எதுவும் பேசக்கூடாது… இதுலாம் நான் குடுக்கற சின்ன பரிசு …. எல்லாருக்கும் பிடிச்சிருக்கான்னு மட்டும் சொல்லுங்க….”, என அவரவர் பொருட்களை அவரவருக்கு கொடுத்துவிட்டு சமையல் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு சமையலறையில் வைத்து, அதை பாதுகாக்கும் முறையை விளக்கிவிட்டு தான் தங்கியிருந்த அறைக்குச் சென்றாள்.
குளித்து முடித்து இலகுவான உடையில் கீழே வந்தாள். துவாரகா இந்த இல்லத்திற்கு வந்து இன்றோடு 55 நாட்கள் ஆகிவிட்டன். 45 நாட்கள் இங்கேயே வீட்டில் ஒருத்தியாய் வலம் வந்தவளை, கடந்த பத்து நாட்களாக அனைவரும் தேடினர். முகில் எதையும் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் நெருப்பில் நிற்பதை போன்ற உணர்வால் வீட்டிற்கு நடு இரவு வந்துவிட்டு அதிகாலையில் கிளம்பிக் கொண்டு இருந்தான்.
அன்பரசி அவனின் செயல்பாடுகளால் பெரிதும் வருத்திக் கொண்டிருந்தார். துவாரகாவை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்ற பத்மினி தேவியின் கட்டளையால் அதை மீறி அவளிடம் முகிலை பற்றி பேச முடியாமல் உள்ளுக்குள் தவித்தார்.
மித்ரா துவாரகாவின் மனநிலை மற்றும் கடக்க நினைக்கும் வலிகளை உடன் இருந்து பார்த்ததால், தன் அண்ணன் ஆனாலும் அவனுக்காக இந்த விஷயத்தில் துவாரகாவைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பத்மினி கூறியது போல அவளாக திருமண வாழ்விற்கு விருப்பப்பட்டால் மட்டும் தான் பேச வேண்டும் என்ற முடிவோடு தாயின் அலுவலக பாரத்தை தான் சுமக்க ஆரம்பித்திருந்தாள்.
இராஜாங்கம் அனைத்தையும் ஒரு பார்வையாளராகப் பார்த்துக்கொண்டு இருந்தார். துவாரகாவின் மேல் அவருக்கு தனி பிரியம் உண்டு. அவள் தன் மகனுக்கு மனைவியானால் மிகவும் மகிழ்வார் தான், ஆனால் துவாரகாவை கட்டாயப்படுத்த விரும்பவில்லை. முகில் முயற்சிக்கட்டும் என்று ஒதுங்கி நின்றார்.
இப்படியாக அங்கிருந்தவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் அவளை காயப்படுத்திவிடக் கூடாது என்ற எண்ணத்துடன் நடந்துக் கொண்டனர்.
“எல்லாருக்கும் என் செலக்க்ஷன் பிடிச்சிருக்கா?”, என்ற கேள்வியோடு விகாஸ் அருகில் வந்தமர்ந்தாள்.
அன்று அவள் முகம் சந்தோஷத்தில் விகசித்திருப்பதைக் கண்டனர். இத்தனை நாட்களாக பல் தெரிய கூட சிரிக்காதிருந்தவளை பார்த்தவர்களுக்கு எந்த தடையும், தயக்கமும் இல்லாத இயல்பான சிரிப்பை இன்று அவளது முகத்தில் பார்த்தனர்.
அவள் உத்தியோகத்தில் அடுத்த நிலையை எட்டிவிட்டதன் வெளிப்பாடு நன்றாக அவள் முகத்தில் தெரிந்தது.
பாதி உயிர்பெற்ற கருவிழிகள்….
மீதி உயிரை தேடாமலே போய்விடுமா?
கொண்டவனை தேடாமல்….
அவளைக் கொண்டாடாமலே நாட்கள் நகர்ந்திடுமா?
இதயத்தைச் சுற்றிய கயிறை அறுக்க..
அவள் இயல்பை உணர்த்திட…
காதலால் அவள் இதயம் நனைத்திட…. – அவள்
காதலனவன் எங்கிருக்கிறான்?
“எல்லாமே சூப்பர் துவாரகா…. உங்க செலக்க்ஷன் எல்லாமே ரொம்ப நல்லா இருக்கு…. ஆனா இவ்வளவு செலவு இப்ப எதுக்கு?”, என மித்ரா அவள் தோள் சாய்ந்துக் கேட்டாள்.
“இதோ.… இந்த தோள் சாய்தலுக்காக தான் மித்ரா…. முதல் தடவை ஒரு முழு ப்ராஜெக்ட் முடிச்சி இருக்கேன். கடைசி கட்டத்துல கைல எடுத்தேன், ரொம்பவே பயமா இருந்தது. எப்படியோ என் கம்பெனி எதிர்பாத்தத விட பெட்டரா சாப்ட்வேர் ரெடி பண்ணிட்டோம். சோ எல்லாரும் ஹேப்பி. நானும் ஹேப்பி…. அடுத்து 15 நாள்ல அரிசோனா போக போறேன்”, எனக் கூறிவிட்டு மித்ராவைக் கட்டிக்கொண்டாள்.
“அதுக்குள்ளயா? இன்னும் கொஞ்ச நாள் எங்க கூட இருக்க முடியாதா துவாரகா?”, இராஜாங்கம் சிறு குழந்தையைப் போல் கேட்டார்.
“உடனே கிளம்ப சொன்னாங்க அங்கிள். நான் பேசி 15 நாள் டைம் வாங்கி இருக்கேன்… இரண்டு நாள்ல அண்ணன் கல்யாணம். சோ நாளைக்கு காலைல அங்க போயிட்டு கல்யாணம் முடிஞ்சி இங்க வந்துடறேன்… “
“உங்கப்பா விடுவாரா?”, பத்மினி கேட்டார்.
“ஹாஹா…. ஆண்ட்டி… அவங்க பஞ்சாயத்து வைக்காம விட்டாலும் நீங்க விடமாட்டீங்க போலவே”, எனச் சிரித்தபடிக் கேட்டாள்.
“அதுவும் வச்சி முடிச்சா தானே பினிஸ்ஸிங் கரெக்டா இருக்கும் துவாரகா….”
அனைவரும் பேச அன்பரசி மட்டும் அமைதியாக அங்கு நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
துவாரகா அதைக் கவனித்துவிட்டு அனைவரும் எழுந்து சென்றதும் அன்பரசியின் அறைக்குச் சென்றாள்.
“ஆண்ட்டி…. எப்படி இருக்கீங்க? உடம்பு நல்லா இருக்கு தானே?”, என அருகில் அமர்ந்துக் கேட்டாள்.
“இருக்கேன் ம்மா…. நீ எப்படி இருக்க? உன்னை இப்ப தான் இவ்வளவு சிரிச்சி பாக்கறேன் ராகா… பாக்கவே சந்தோஷமா இருக்கு…. இப்படியே இரு டா எப்பவும் “, என அவள் தலையில் கைவைத்து தடவினார்.
“உங்க மனசுல என்ன குழப்பம் ஆண்ட்டி? முகிலமுதன் பத்தியா?”, என நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.
“ஆமா டா…. ஆனா நான் உன்ன கட்டாயப்படுத்த முடியாது…. அவன் கஷ்டப்படுறதையும் என்னால பாக்க முடியல…. “, எனக் கூறி அமைதியானார்.
“ஆண்ட்டி… என்னோட மனநிலை என்னனு உங்களுக்கு நல்லாவே தெரியும்னு நினைக்கறேன்…. எனக்கு கல்யாணம் மேல நம்பிக்கை இல்லை… எப்ப மறுபடியும் எனக்கு அந்த ஆசை வரும்னு எனக்கு தெரியாது…”
சிறிது இடைவெளிவிட்டு, “அதுக்கு நிறைய காலம் எடுக்கும்…. முகில் மேல எனக்கு விருப்போ வெறுப்போ எதுவுமே இல்ல…. அவர நான் காத்திருக்க சொல்ல முடியாது.. என்னால யார் வாழ்க்கையும் வீணாகறத நான் விரும்பல ஆண்ட்டி…. உங்களுக்கு புரியுதா ? “, எனக் கேட்டுவிட்டு அவர் முகம் பார்த்தாள்.
“எனக்கு புரியுது டா… அதான் அமைதியா இருக்கேன்….”, எனக் கூறிவிட்டு அவளை அணைத்துக் கொண்டார்.
அதன்பின் அவர்களுடன் அன்று நாள் முழுக்க பேசி சிரித்து விளையாடி நேரத்தைச் செலவழித்தாள்.
அன்றிரவு நன்றாக தூங்கி எழுந்து அதிகாலையில் அவள் மட்டும் கிளம்பினாள். மற்றவர்களை அடுத்த நாள் வரச்சொல்லி விட்டு பஸ் ஏறி கிளம்பினாள். அவள் அங்கிருந்து கிளம்பும் வரையிலும் முகில் இல்லம் வரவில்லை..
கிட்டதட்ட இரண்டு மாதங்கள் கழித்து தன் சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தாள். அவள் நேராக கனிமொழி இல்லம் வந்து இறங்கியதும், தீயாக அந்த தகவல் ஊர் முழுக்கப் பரவியது.
கனிமொழி அவளுக்காக அதிகாலையில் இருந்து வாசலிலேயே காத்திருந்தாள். துவாரகா ஆட்டோவில் இருந்து இறங்கியதும் தாவி கட்டிக்கொண்டாள்.
மரகதமும் வாசலில் சத்தம் கேட்டதும் ஓடி வந்து பார்த்து, அவளை இன்னொரு பக்கம் அணைத்துக் கொண்டார்.
“அழாதீங்க ரெண்டு பேரும்… வாங்க உள்ள போலாம் .. இல்ல என்னை வாசலோட அனுப்ப போறீங்களா?”, என அவள் கேட்டதும் கனிமொழி அவள் கன்னத்தில் அறைந்தாள்.
“ஏன்டி அடிக்கற?”, துவாரகா கன்னத்தைப் பிடித்தபடி கேட்டாள்.
“சொல்லாம வீட்ட விட்டு போவியா?”
“அதுக்கு இப்படியா அடிப்ப? நீ இப்படி அடிப்பன்னு தெரிஞ்சிருந்தா அப்படியே அமெரிக்காவுக்கு போயிருப்பேன் டி”, என்றாள் கலங்கிய கண்களைத் துடைத்தபடிக் கூறினாள்.
“உள்ள வா துவாரகா….. “, என மரகதம் அவளை உள்ளே அழைத்துச் சென்றார்.
துவாரகா அவ்வீட்டினுள் வந்த ஐந்தாவது நிமிடம் பவானியும், மாதவியும் அங்கே ஓடி வந்தனர்.
அவள் தண்ணீர் குடிக்கும் போது பவானி உள்ளே வந்து அவளைப் பார்த்தபடி நின்றார்.
“துவா…..”, என கமறிய குரல் கேட்டதும் துவாரகா திரும்பிப் பார்த்தாள்.
“அம்மா….”, என துவாரகாவும் அவரை தாவி அணைத்துக் கொண்டாள்.
“எப்படி டி இருக்க? ஏன்டி இப்படி பண்ண?”, என அவளை இறுக்கமாகக் கட்டிக்கொண்டபடிக் கேட்டார்.
“அதனால் தான் இப்ப நான் ப்ராஜெக்ட் மேனேஜர் ஆகி இருக்கேன் ம்மா…. அரிசோனா ஆபீஸ்ல தனி கேபின் எனக்கு…. அங்க நீ சொல்ற மாதிரி சாமி படம் வச்சி வெளக்கு ஏத்திக்கலாம் தெரியுமா?”, எனக் கூறினாள்.
“நீ சரியான அடம் பிடிக்கற கழுதை டி….”
“அப்படி இல்லாம போனதால தான்ம்மா இப்ப நான் உங்க எல்லாருக்கும் பாரமாகிட்டேன்… நான் நானாவே இருந்திருந்தா இவ்வளவு பிரச்சினை வந்திருக்காதும்மா….”, எனக் கூறி விலகி நின்றாள்.
மாதவியும் அவளை அணைத்து கண்ணீர் வடித்தார்.
தாய்மார்கள் இருவரிடமும் அளவளாவி கொண்டிருந்தாள். அந்த சமயம் அருணாச்சலமும், மனோகரும் உள்ளே வந்தனர்.
“வாங்கண்ணே….வா மனோகரா…. “, என மரகதம் அழைத்ததும் தான் மற்றவர்கள் அவர்களைப் பார்த்தனர்.
“அப்பா……”
“ராகா…..”, என அவர் தன் மகளை நெஞ்சில் தாங்கிக்கொண்டார்.
“சாரிப்பா…. உங்கள கஷ்டப்படுத்திட்டேன்…. “
“இல்லடா… நான் தான் உன் வலி புரியாம இருந்துட்டேன்…. நீ எப்படி டா இருக்க? “, என வாஞ்சையுடன் கேட்டார்.
மனோகரனும் துவாரகாவின் தலையை தடவிக்கொடுத்தார்.
“வாடா வீட்டுக்கு போலாம்….”
“இல்லப்பா.. நான் இங்க இருந்தே கல்யாணத்துக்கு வரேன்… அதான் எல்லாருக்கும் நல்லது”, எனக் கூறிவிட்டு நகர்ந்து நின்றாள்.
“அதுதான் முடியாது… நீ எங்க கூட இப்பவே வீட்டுக்கு வர…. வா”, என பவானி அவள் கைப்பிடித்து தரதரவென இழுத்துக்கொண்டு வீட்டிற்கு முன் வந்து நின்றார்.
அப்பத்தா கிழவியும், மனோஜ்ஜும் சிரித்தபடி ஏதோ திண்ணையில் அமர்ந்துப் பேசிக்கொண்டு இருந்தனர். அவளைக் கண்டதும் அப்படியே ஸ்தம்பித்து நின்றனர்.