46 – ருத்ராதித்யன்
டெல்லியில் நரேன் ரன்வீரை சஸ்பென்ட் செய்தவுடன், வேறு டீம் ஆட்களை இந்த வழக்கிற்கு நியமித்து முன்னெடுத்து செல்ல கட்டளையிட்டான்.
முன்பிருந்த டீமில் பாதி பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். அதனால் அனைவரும் அவரவர் ஊர் நோக்கி பயணத்தை தொடங்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
பரிதி, அர்ஜுனும் யாத்ராவும் காப்பாற்றப்பட்டனர் என்று அறிந்ததும் நரேனை காண அவன் வீட்டிற்கு வருவதாக கூறி இருந்தாள்.
செந்தில் தேனி வீட்டில் இருந்தபடி அவர்கள் இருவருக்கும் அவ்வப்போது தகவல்களை கொடுத்துக் கொண்டு இருந்தார். அவருக்கும் அர்ஜுன் யாத்ராவை காண ஆவலாக இருந்தது, ஆனால் இப்போது இருக்கும் இந்த சிக்கலான சூழ்நிலையில் தான் அங்கே செல்வது சரியாக வராது என்று உணர்ந்து பாதுகாப்பிற்கு பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் அவர்களை பார்த்து திருப்தி பட்டுக் கொண்டார்.
அன்றிரவு பத்து மணிக்கு மேல் பரிதி நரேன் இல்லம் சென்றாள்.
இப்போதும் அவரின் செல்ல மகளும், மனைவியும் அவருடன் ஏதோ வாக்கு வாதத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
“சாரி டா அம்மு…. அப்பா வேலை பிஸில மறந்துட்டேன் டா…… “, என மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்.
“அண்ணா…. நீங்க ஒவ்வொரு தடவையும் இதே தான் சொல்றீங்க…. என் தரு செல்லம் பாவம் தெரியுமா? அவ ஸ்போர்ட்ஸ் டே க்கு நீங்க போகாததால நிறைய கேம் விளையாடவே இல்ல…..”, நந்து தருணிகாவிற்காக பேசினான்.
“டேய்.. கம்முனு இரு டா…. அவன் இல்லாத கொறைய நீ ஃபில் பண்ணாத….”, நரேன் நந்தனை முறைத்தபடி கூறினான்.
“அடடே….. என்னாச்சி என் தரு செல்லத்துக்கு? இன்னும் ஸ்கூல் டிரஸ் கூட மாத்தாம அப்பா கூட வாக்குவாதமா?”, பரிதி உள்ளே வந்ததும் தருவை தூக்கி கொஞ்சியபடி கேட்டாள்.
தருவும் அவளிடம் மீண்டும் தன் தகப்பன் மீது குற்றச்சாட்டை வாசிக்க, பரிதியும் நரேனை குறை சொல்லவென சில நிமிடங்கள் விளையாடிக் களித்து, அனுவிடம் உரையாடி கொண்டிருந்தாள்.
அவளை சாப்பிட வைத்து உபசரித்து விட்டு, மகளை மனைவியுடன் உள்ளே அனுப்பிவிட்டு அமர்ந்தார்.
“என்னாச்சி நரேன் சார் ? “, பரிதி உணவை உண்டபடி கேட்டாள்.
“ரொம்ப கஷ்டம் மேடம். பொண்ணு பொறந்தா எனக்கு கொஞ்சம் சப்போட் பண்ணும்ன்னு நெனைச்சேன். ஆனா சின்ன தப்ப கூட இவ ஞாபகம் வச்சி வீட்டுக்கு எத்தனை மணிக்கு வந்தாலும் சண்டை போட்றா… அனு கூட இவ்ளோ சண்டை போட்டது இல்ல…. நீங்க இந்த இம்சை எல்லாம் இல்லாம ஜாலியா இருக்கீங்க….”, கடைசியாக அவளிடம் வந்து நின்றான்.
“ஏன் சார்? ஏன்? எனக்கு இந்த குடும்ப கட்டமைப்பு எல்லாம் இப்போதிக்கு ஒத்து வராது….. நம்ம வேலைய மொதல் பாப்போம்….”, என கூறிவிட்டு செந்தில் தனக்கு அனுப்பிய விவரங்களை தனது லேப்டாப்பில் காட்டினாள்.
“அக்கா… நம்ம அஜ்ஜு யாதுவா இது?”, உருமாறி இருந்தவர்களை பார்த்து கண்கள் கலங்க கேட்டான் நந்தன்.
“ஆமா நந்து…. அவங்க இப்போ சாதாரண மனுஷங்க இல்ல…. உடம்புல நிறைய மாற்றங்கள் வந்திருக்கு…. தவிர….. “, என இடைவெளி விட்டு நிறுத்தினாள்.
“என்னாச்சி பரிதி?”, நரேன்.
“அவங்க மறுபடியும் நார்மல் ஆகற வாய்ப்பு ரொம்ப கம்மி…. இனிமே வாழ்க்கைய எப்படி கொண்டு போவாங்கன்னு தெரியல… நம்மள மாறி மனுஷங்களோட கலந்து வாழறது ரொம்ப கஷ்டம்….. “, பரிதி உணர்ச்சி துடைத்த முகத்துடன் கூறி கண் மூடி தன்னை நிதானித்து கொண்டாள்.
“யாருங்க அவன் இப்படி ஒரு பைத்தியம்? இயற்கையாக இருக்கற விசயங்களை மாத்தி என்ன சாதிக்க போறான்? எனக்கு இத எப்டி எடுத்துக்கறதுன்னே தெரியல….”, நரேனும் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார்.
“இவனுக்கு உலகம் முழுக்க காண்டாக்ட்ஸ் இருக்கு.. லீகல் அண்ட் இல்லீகல்…..இப்போ வல்லகின்னு ஒரு பொண்ணை தூக்க ஆளுங்கள அனுப்பி இருக்கான்…. “, பரிதி தனக்கு கிடைத்த தகவல்களை கூறினாள்.
“யார் அந்த பொண்ணு? அவ எதுக்கு இவனுக்கு வேணும்?”, நரேன்.
“சமீபமா சென்னைல ஒரு சயன்டிஸ்ட் காணம்-ன்னு ஒரு நியூஸ் வந்துச்சி தெரியுமா நரேன்?”
“யாரு பிறைசூடன் அ?”
“அவரே தான். அவரு அந்த பொண்ண இயற்கையா அட்வான்ஸ்ட் வெர்ஷன் அஹ் மாத்தி இருக்கறதா ஒரு புரளி வந்தது…. ஆந்திரா தமிழ்நாடு பார்டர்ல ஒரு ஆர்கியாலஜி டீம்… புரோபாசர் தசாதிபன் டீம் கடத்தப்பட்டதா சில கேஸ் ஃபைல் பண்ணி டெலீட் பண்ணி இருக்காங்க…. இன்டெலிஜென்ஸ் ஏ.சி யாழினியன் இதுல உள்ள போய் இருக்கறதா தகவல் வந்திருக்கு….”, பரிதி இந்த தகவல்களை சேகரித்து இருந்தாள்.
“நிஜமா இங்க என்ன நடக்குது மேடம்? அது எப்படி அட்வான்ஸ்ட் ஹுமன் இயற்கையா மாத்த முடியும்?”, நரேன்.
“முடியும் நரேன்… நம்ம சித்தர் பாடல்கள் நிறைய அதுக்கு சாட்சி இருக்கு… நம்ம உடம்பே ஒரு ரோபோ.. அதுல இப்போ இருக்கற இயல்புகள், குணங்கள், திறமைகள் எல்லாமே பேசிக் லெவல் … அதவாது, நம்ம விசயத்தை கத்துக்க ஆரம்பிக்கும்போது இருக்கற மனநிலை, புத்தியும் , அதே விசயத்தை கத்துகிட்ட அப்பறம் நாம அந்த குறிப்பிட்ட விசயத்தை பத்தி யோசிக்கறதும் மாறுபடும் இல்லையா?”
“ஆமா…. “
“அதே மாதிரி தான் நம்ம உடம்புல நிறைய வர்ம புள்ளிகள் இருக்கு… அதுல சில புள்ளிகள் ரொம்பவே ஆபத்தானது.. அதை இயக்க முடிஞ்சா இந்த உடலோட அதிகபட்ச திறமையும், பலமும் வெளி வரும்ன்னு ஒரு கூற்று இருக்கு.. ஆனா அந்த புள்ளிய இயக்கினா உயிர் போகும் வாய்ப்பு தான் அதிகம்… அது செஞ்சி புழைச்சவங்க ரொம்ப ரொம்ப கம்மி….. அப்படி இந்த பொண்ணுக்கு இயற்கையா அப்டேட் ஆகி இருக்கலாம்….”
“சரி இந்த பொண்ணயும் வச்சி அவன் ஆராய்ச்சி செஞ்சி இருக்கற மனுஷங்கல மிருகமாவும், மிருகத்தை மனுஷனாவும் மாத்த போறானா?”, நரேன் கோபத்துடன் கேட்டான்.
“எனக்கு தெரியாது.. நீங்க சொல்றது நடக்கவும் வாய்ப்பு இருக்கு. இப்போ புலி ரத்தத்த நம்ம அர்ஜுன் யாத்ரா உடம்புல புகுத்தி ஒரு கலப்பின வகையா மாத்தின மாதிரி நடக்கவும் வாய்ப்பிருக்கு….. ஆனா அந்த பொண்ணு இவன் கைக்கு கிடைக்கற வாய்ப்பு கம்மி…. அதித் ஒவிஷ்கர் அதுக்கு ஒத்துக்கவே மாட்டான்…. அவன் அந்த பொண்ணு, பிறைசூடன், தசாதிபன் அவரோட அசிஸ்டன்ட் சுடரெழில் நாச்சியார் எல்லாரும் மடகாஸ்கர் போய் இருக்கறதா இப்போ எனக்கு தகவல் வந்தது….. “
“அங்க எதாவது புதையல் எடுக்க போறாங்களா?”, நந்து.
“தெரியல நந்து….’
“சரி இப்போ நம்ம கேஸ் வாங்க….. இந்த ரிஷித், ராஜ் கர்ணாவ என்ன பண்ணலாம்?”, நரேன்.
“செந்தில் மேகமலைல நடக்குற விசயங்களை வச்சி குடுத்த தகவல், இதுல நாம எந்த வகைலையும் உள்ள போக முடியாது. அதிக பட்சமாக அர்ஜுன் ஆருத்ரா குடும்பத்தை பாதுகாக்க மட்டும் தான் முடியும்…. அமானுஷ்யமா பல விசயங்கள் நடந்துட்டு இருக்கு…. மிருகங்கள் பெரிய அளவுல கொல்லப்பட்றதும், கடத்தப்படுவதுமா இருக்கு.. அதை நாம தடுக்கணும்…. அப்பறம் ரிஷித் இன்னிக்கி மறுபடியும் அருணாச்சல பிரதேசம் போய் இருக்கான். ராஜ் கர்ணா ஆதி கூண்டுக்குள்ள இருக்கான்….”
“நிஜமாவா? அப்போ அவன உடனே நாம கஸ்டடில எடுக்கலாமே…”, நரேன் திகைப்புடன் கேட்டான்.
“முடியாது… “
“ஏன் ?”, நந்து நரேன் இருவரும் ஒரே சமயத்தில் கேட்டனர்.
“அர்ஜுன் யாத்ரா அவன வெளிய அனுப்ப முடியாதுன்னு சொல்லிட்டாங்க…. அங்கேயே வச்சி தான் அடுத்த கட்ட வேலைகளை பாக்க போறாங்களாம்….”
“அங்க இருந்து என்ன பண்ண முடியும்?”, நரேன்.
“எனக்கும் தெரியல நரேன் சார்…. நமக்கு இதுல பிரஷர் எங்க எப்படி வரும்னு தெரியாது…. “
“என்ன பரிதி இது? இவ்ளோ விசயம் நம்ம கண்ணு முன்ன நடக்குது…. ஆனா நம்ம என்ன பண்றதுன்னு புரியல…”, நரேன் தலையை பின்னால் சாய்த்துக் கொண்டான்.
“பரிதி க்கா …. இப்போ நாம என்ன பண்ணனும்னு அஜ்ஜு சொல்றான்?”, நந்து.
“அவனுக்கு சுடரெழில் நாச்சியார், வல்லகி ரெண்டு பேரும் வேணுமாம்…. “
“எதுக்கு?”
“ஒரு சில சுவடி படிச்சி சொல்ல நாச்சியார் வேணும்.. வல்லகி எதுக்குன்னு தெரியல….”
“அவங்க தான் மடகாஸ்கர் போயிட்டாங்கன்னு சொன்னியே க்கா…”, நந்து
“அவங்கள ரெண்டு நாளைக்குள்ள மேகமலை கொண்டு போகணும் …. அதுக்கு தான் நரேன் சார் ஹெல்ப் கேக்க வந்தேன்….”, பரிதி நரேனை பார்த்தபடி சொன்னாள்.
‘ என்ன ?’, என்பது போல நரேன் பார்த்தான்.
“நீங்க தான் அவங்கள கண்டுபிடிச்சு மேகமலை கொண்டு போகணும்….”
“என்ன மேடம் விளையாடரீங்களா? நான் எப்படி செய்ய முடியும்?”
“அந்த அதித் ஒவிஷ்கர் தம்பி ம்ரிதுள உங்களுக்கு தெரியும்னு அஜ்ஜு சொன்னான்…. “
“மேடம் அந்த கேங் பத்தியே நீங்க சொல்லி தான் இவ்ளோ தெரியும்… ம்ரிதுள் இங்க ஒரு கேஸ் விசயமா பாத்து இருக்கேன் அவ்ளோ தான்… பழக்கமும் இல்ல அவன் எங்க இருக்கான்னு எனக்கு தெரியாது….”, நரேன்.
அப்போது அர்ஜுன் அழைத்தான். “டேய் அர்ஜுன்.. எப்படி டா இருக்க? யாத்ரா எப்படி இருக்கா?”, நரேன் உள்ளே பரவும் சந்தோசத்துடன் கேட்டான்.
“நல்லா இருக்கோம் அண்ணா…. நீங்க தருகுட்டி அண்ணி எல்லாம் எப்படி இருக்கீங்க?”
“டேய்.. எல்லாரும் பைன் டா… எப்போ டா இங்க வர?”
“அண்ணா… நான் சொல்றத நல்லா கேட்டுக்கோங்க…….”, என கூறிவிட்டு கால் மணிநேரம் அவனுக்கு சில விசயங்களை கூறிவிட்டு, அவனுக்கு தேவையான விசயங்களை செய்து கொடுக்குமாறு கூறினான்.
அவன் கூறிய விசயங்களை எல்லாம் கேட்டுக்கொண்ட நரேன், நந்துவிடம் ஃபோனை கொடுத்துவிட்டு, உள்ளே அலுவலக அறைக்கு சென்று சிலருக்கு ஃபோன் செய்து அவனுக்கு தேவையான தகவல்களை விசாரித்துக் கொண்டிருந்தான்.
“டேய் அஜ்ஜு.. என்னடா இப்படி?”,நந்து மேற்கொண்டு பேச முடியாமல் அமைதியானான்.
“சில விஷயம் நம்ம கைல இல்ல டா… நீ எப்படி இருக்க? கால் பரவாலயா ?”
“இப்போ பரவால்ல டா…. புல்லட் மேலோட்டமாக தான் இருந்தது… ரெண்டு மாசம் லீவ் குடுத்துட்டாங்க…. வீட்ல நான் எதுவும் சொல்லல டா..”
“நானும் இப்போ இந்த கிராமத்த விட்டு வெளிய போக முடியாது டா…. எல்லாரும் இங்க தான் இருக்கோம்…. அதுக்கே இன்னிக்கி அறுவது பேர் உள்ள வந்துட்டானுங்க….”
“எப்படி டா சமாளிச்சிங்க ?”
“நானும் யாத்ராவும் எல்லாரையும் கொண்ணுட்டோம்.. அதிரன், ராஜ் கர்ணா மட்டும் தான் உயிரோட இருக்காங்க…. “
“எப்படி டா? துப்பாக்கி கூட இல்லாம?”
“எனக்குள்ள வந்து இருக்க மாற்றம் அடிச்சே கொல்ல வச்சது டா… எங்க மாற்றம் எங்களுக்கு இன்னிக்கி உதவிச்சி ஆனா, இதுவே மக்கள் மத்தில வாழறப்போ கஷ்டம் தான்… கூட இருக்கறவங்கள காயப்படுத்திடுவோமோன்னு பயமா தான் இருக்கு… “,அர்ஜுன் குரலில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.
“அப்படி எல்லாம் நடக்காது இளா… உங்களை சரி பண்ணிடலாம்… அந்த பாட்டி கிட்ட சொல்லி வேற மருந்து ரெடி பண்ண சொல்லுங்க….”, நந்து சமாதானம் கூறினான்.
“ஆதி கல்யாணம் முன்ன நானும் ரதுவும் எங்கயோ போகனுமாம்… அந்த பாட்டி சொல்றத நம்பவும் முடியல, ஆனா அவங்க செய்யற விசயத்த எல்லாம் பாக்கறப்போ, அவங்க பேச்சை தட்டவும் முடியல டா…. எனக்கு முழுசா எதுவுமே புரியல….”, தன் எண்ணத்தை பகிர்ந்து கொண்டான்.
“யாத்ரா என்னடா சொல்றா?”
“அவ இந்த பிளோல போலாம்….. எல்லாத்துக்கும் எதாவது காரணம் இருக்கும். நம்ம சரி ஆகவும் இதுல வாய்ப்பு இருக்கலாம் தானே ன்னு சொல்றா….”
“உங்களுக்கு யார் மேலேயும் சந்தேகம் இருக்கா?”
“இல்ல டா… இது பழங்குடி மக்கள் வாழ்ற இடம். ஏரன் ஐயா கிராமம்… நம்ம ஒரு தடவ இங்க அமாவாசை குறி சொல்றாங்க ன்னு வந்தோம் அம்மா கூட…. அந்த குறி சொன்ன பாட்டி தான் எங்கள இப்போ தெளிய வச்சி இருக்காங்க…. அந்த புலி, பைரவ், தீரன் எல்லாமே எங்க கூட ரொம்ப ஒட்டுதலா இருக்கு. அவங்க எண்ணம் எங்களுக்கு புரியுது டா….. நமக்கு தெரிஞ்ச அறிவியலுக்கு அப்பாற்பட்ட விசயம் தான் எங்களுக்கும், எங்கள சுத்தியும் நடக்குது…. “
“நீ இவ்ளோ பேசறதும் அதிசயமா தான் டா இருக்கு…. சரி யாத்ரா சொல்ற மாதிரி பிளோல போலாம்…. ஒரு அளவுக்கு மேல நம்ம கைல எதுவும் இல்ல.. இரு பரிதி அக்காகிட்ட தரேன்….”
“அஜ்ஜு….”
“ம்ரிதுள் கண்டாக்ட், யாழினியன் கண்டாக்ட் நமக்கு வேணும் க்கா….. அதுக்கு எந்த உதவி வேணும்னாலும் ஆருத்ரா அண்ணி செய்ய ரெடின்னு சொல்ல சொன்னாங்க….”
“அவங்கள இந்தியா கொண்டு வர பிளைட் தான் அவங்க ஏற்பாடு பண்ணா நல்லா இருக்கும். நரேன் வராரு…. பிடிச்சி இருப்பாருன்னு நினைக்கறேன்….”,அவரிடம் ஃபோன் கொடுத்தாள்.
“யோகேஷ் கண்டாக்ட் கெடைச்சி இருக்கு…. எல்லாரும் மடாஸ்கர் போயிட்டாங்கன்னு சொல்றான்… “
“அது நமக்கும் தெரியுமே…. எப்போ வருவாங்க?”
“அது அவனுக்கும் தெரியல…. ஏதோ ஒரு பொருளை தேடி போய் இருக்காங்க…. சிக்னல் வந்தா அங்க இவன் கெளம்பி போய் பாக்கறேன்னு சொல்றான்….”
“சரி ரெண்டு நாள் தான் டைம் …. அதுக்குள்ள அவங்க எனக்கு வேணும்….”, எனக்கூறி வைத்தான்.
நரேன், நந்து, பரிதி மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு பெருமூச்சு விட்டனர்.
இங்கே சக்திக்கு நானிலன் பற்றிய தகவல் வந்தது. அவனுக்கு வந்த நொடி ரிஷித்துக்கும் வந்தது. இருவரும் அவனை தங்கள் இருப்பிடம் கொண்டு வர ஆட்களை ஏவினர் …..