47 – ருத்ராதித்யன்
நானிலன் தன்னை ஆருத்ரா வரச் சொல்லி இருப்பது கேட்டே அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. சில தினங்கள் முன்பு தான் இந்த நிறுவனத்தில் அவன் சேர்ந்திருந்தான்.
ஆருத்ராவின் நிறுவனங்களில் இவன் பணிபுரியும் இந்த மென்பொருள் நிறுவனமும் ஒன்று. ஆரம்ப நிலையில் இருக்கும் இதில் கற்றுக்கொள்ள நிறைய வாய்ப்புகள் இருக்குமென்று கணக்கிட்டு தான் இதற்கு நேர்காணல் விண்ணப்பம் அனுப்பி இருந்தான். அவனது தேவைக்கு ஏற்ப சம்பளமும் கொடுக்கப்பட்டது. தாயின் மருத்துவ செலவிற்கு வீட்டை விற்ககூடாது என்று தந்தையிடம் கூறியதால், அப்போதைய தேவைக்கு மட்டும் கடன் வாங்கி மருத்துவம் பார்த்தனர்.
“அப்பா…. எனக்கு வேலை கெடைச்சிரிச்சி.. நமக்கு தேவையான சம்பளமும் கொடுக்கறாங்க…. வீட்ட விக்கணும்னு இனிமே நினைக்காதீங்க….. இது போக சின்ன சின்ன வெளி வேலைகளும் நான் செய்றேன்… அதுவே நம்ம வீட்டு செலவுக்கு போதும். என் சம்பளம் வச்சி கடனும், அம்மாவோட வைத்தியமும் பாத்துக்கலாம் ப்பா….”, என அனைத்தும் யோசித்து கூறினான்.
“சரிப்பா.. அம்மாகிட்ட இந்த சந்தோசமான விஷயத்தை சொல்லு….. நான் இனிப்பு வாங்கிட்டு வரேன்…..”, என வெளியே சென்றார்.
“அம்மா….. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? உங்க பையன் இனிமே சாப்ட்வேர் எம்ப்ளோயி….. “, என கூறியபடி அவருடன் அமர்ந்து அன்று அவன் சந்தித்த நபர்கள் மற்றும் நிகழ்ந்த விசயங்களை அவர் சிரிக்கும்படி கூறிக் கொண்டு இருந்தான்.
“ஹாஹாஹா…. நீ நெனைச்ச மாதிரி உனக்கு வேலையும் கெடைச்சிரிச்சி…. இனிமே கவனமா வேலை கத்துகிட்டு அதுல உயரணும் கண்ணா….. உன் அக்கா இருந்திருந்தா இந்நேரம் வீட்டையே ரெண்டாக்கி இருப்பா…. “, என மகளின் நினைவு எழுந்ததும் கண்களில் நீர் கோர்த்தது.
அவனுக்கும் அவன் அக்காவின் நினைவு தான் முதலில் வந்தது. எந்த விஷயத்தையும் முதலில் தமக்கையிடம் பகிர்ந்து வளர்ந்தவன், இந்த சில மாதங்களாக மனதில் இருப்பதை பேச கூட யாரும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.
“டேய் நிலா…. உனக்கு வேலை கிடைச்சா எனக்கு தான் முதல் சொல்லணும். அதே மாதிரி உன் மொத மாச சம்பளம் எனக்கு தான்… நீ கூட அதுல பங்கு கேக்க கூடாது சொல்லிட்டேன்….”, அவன் கணினி பொறியாளர் படிப்பில் சேரும் போதே கூறினாள்.
முதல் சம்பளம் மட்டுமின்றி அவள் என்ன கேட்டாலும் வாங்கி தர இப்போது சித்தமாக இருக்கிறான். ஆனால் அவள் திரும்பி வரும் தூரத்தில் இல்லையே…. அவன் கண்களும் கலங்கியது.
“அம்மா….. நீ இவ்ளோ மனச அழுத்திக்க கூடாது…. டாக்டர் சொல்லி இருக்காருல்ல.. அமைதியா இரு…. அக்கா நம்ம கூடவே தான் இருப்பா….. நீ வேனா பாரு எனக்கு அவ தான் பொண்ணா வந்து பொறப்பா.. நீ தான் வளத்தனும்…. அதுக்கு நீ உன் உடம்ப சரி பண்ணனும்ல? இப்படி அழுதா உடம்பு கெடும் தானே…. அழக்கூடாது…. இன்னிக்கி உனக்கு பிடிச்ச வெங்காய சட்னி செஞ்சி தோச சுட்டு தரேன்… சரியா?”, தாயை தாங்கும் தாயுமானவனாக மாறினான்.
“நிலா….. இந்தா ப்பா…. அம்மாவுக்கு இனிப்பு குடு….”, என்றபடி அவன் தந்தை உள்ளே வந்தார்.
“நீங்களும் எடுத்துக்கோங்க ப்பா….. “,என அவருக்கு முதல் கொடுத்துவிட்டு தாயிற்கும் சிறிது ஊட்டிவிட்டான்.
“என்னம்மா… கண்ணு கலங்கி இருக்கு? கால் வலிக்குதா?”, என மனைவியின் முகம் பார்த்து கேட்டார்.
“அக்காவ நினைச்சி தான் ப்பா… அதான் நான் சொன்னேன்… எனக்கு அக்கா தான் வந்து பொறப்பா.. அவள வளத்த நீங்க உடம்ப தேத்துங்கன்னு…. நான் சொல்றது சரி தானே ப்பா?”, என மகன் கேட்டதும் அவன் முகத்தை பார்த்தார்.
எப்போதும் அளவாக பேசும் மகன் தான் இப்போது அவனின் உடன் பிறந்தவள் நினைவில் நாங்கள் வாடக்கூடதென அதிகமாக பேசுகிறான். அவனின் இயல்பை விட்டு வெளியே வந்து தன்னையும், சுற்றி உள்ளவர்களையும் தேற்றும் அவனது செயல் ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவன் அமைதி தொலைந்து போனது கண்டு வருத்தமும் எழுந்தது.
“உண்மை தான் நிலா…. உனக்கு நல்ல படியா கல்யாணம் செஞ்சி பேர கொழந்தைய பாத்தா தான் எங்களுக்கு உண்மையான சந்தோசமும், நிறைவும் எங்க வாழ்க்கைக்கு கெடைக்கும்….”, என அவன் தலையில் கை வைத்து வருடியபடி கூறினார்.
அவன் பணியில் சேர்ந்து இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் தான் நாம் இதுவரை பார்த்த விசயங்கள் நடந்தது.
நானிலன், மிகவும் முக்கியமான கருவி ஆதி – ஆருத்ரா பயணத்தில்…… அவன் இல்லாமல் அடுத்த கட்டம் நகராது.
அதே நிலை தான் ரிஷித்திற்கும்…. யார் முதலில் அவனை கைப்பற்ற போகின்றனர் என்பதை நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்……
இங்கே அந்த பெரியவர் ரிஷித் கைகளில் எவ்வாறு சிக்கினார் என்பதை பார்த்துவிடலாம்…
ராஜ் கர்ணாவிடம் அந்த சுவடி வைத்திருந்த பெரியவர் வேண்டும் என்று கூறிய நாளில், அவன் மீண்டும் கேரளா செல்ல வேண்டிய சூழ்நிலைகள் உருவானது.
அப்படி செல்லும் போது தான், அந்த பெரியவர் அவன் கண்களில் சாலையில் தென்பட்டார்.
அதே அழுக்கு வேஷ்டி, மேல் துண்டை உடலில் போர்த்திக் கொண்டு, அழுக்கு படிந்த வெள்ளை நிற ஜோலனா பையை மாட்டிக்கொண்டு, ஒரு பழமையான சிவன் கோவிலுக்குள் சென்றார்.
அவரின் பின்னால் இவனும் சென்று அந்த கிழவன் தானா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளச் சென்றான்.
சிவனை மனதார அவர் வணங்கிவிட்டு, தன் ஜோலனா பையை விரித்து, அதில் இருந்த சில சுவடிகளை அங்கே உலக நன்மைக்காக எரிந்து கொண்டிருந்த வேள்வியில் எறிந்து விட்டு, மீதமுள்ளதை பத்திரப்படுத்திக் கொண்டார்.
சுவடியை யாக குண்டத்தில் எறிவதை கண்டதும் ரிஷித் பதற்றம் கொண்டு அவரை தடுக்கும் முன் சில சுவடிகள் தீயில் எரிய துவங்கி விட்டன.
எல்லா சுவடிகளையும் தீக்கிறையாக்கி விடுவாரோ என்று பயந்து அவரின் அருகில் வரும் போது, அவர் அங்கிருந்து கூட்டத்தில் புகுந்து வேறு பக்கம் சென்றுவிட்டார்.
அவரை பின் தொடர்வது இனியும் நஸ்டத்தை ஏற்படுத்தும் என்று நினைத்து, தன் ஆட்களுக்கு அவரை கடத்த ஆணையிட்டான்.
அவன் ஆட்களும் அக்கிழவனை தூக்கி கொண்டு வாகனத்தில் அமர வைத்தனர்.
“வா அபராஜிதா வர்மா…… நலம் தானா?”, என அந்த பெரியவர் கேட்டார்.
“என்னை உங்களுக்கு தெரியுமா?”, ரிஷித் சந்தேக கண்களுடன் அவரை பார்த்து கேட்டான்.
“உன் குருவடா நான்…. உன்னை அறியாமல் இருப்பேனா?”, என அவன் கண்களை கூர்ந்து பார்த்து கேட்டார்.
“என் குரு ஆ? உங்களுக்கு பைத்தியமா? நான் இப்ப தான் உங்க முகத்தையே பார்க்கறேன்..”
“அப்படியென்றால் இதற்கு முன் என் முதுகைப் பார்த்து இருக்கிறாய் என்று தானே பொருள்?”, என அவர் கேட்டதும் அவனுக்குள் ஆர்வம் மேலோங்கியது.
“சரி தான்… அப்டி கூட சொல்லலாம் …. என் பதிலுக்கு இப்படி ஒரு கோணமும் இருக்குன்னு சொன்னதுக்கு நன்றி…. “, என கூறிவிட்டு அவரின் ஜோலனா பையை பார்த்தான்.
“என்ன அபராஜிதா… இந்த பை வேண்டுமா?”, அவன் பார்வை சென்ற இடம் கண்டு கேட்டார்.
“உள்ள இருக்க சுவடி வேணும்….”
“ஹாஹாஹா….. விவரம் குறையவில்லை தான் உனக்கு….. இந்தா வைத்துக் கொள்…. “, என பையுடன் அனைத்தையும் கொடுத்தார்.
அவர் கேட்டதும் கொடுப்பார் என்று அவன் நினைக்கவில்லை தான், ஆனாலும் இதில் ஏதோ உள்ளர்த்தம் இருப்பதாகவே தோன்றியது.
“நான் கேட்டதும் கொடுத்துட்டீங்க… உங்களுக்கு என்ன வேணும்?”
“விலை பேசுகிறாய்….. ஹாஹாஹா…. சரி உன்னால் என்ன கொடுக்க முடியும் எனக்கு?”, என கையூன்றி அவன் கருவிழியை குத்திட்டு பார்த்தபடி கேட்டார்.
“எத கேட்டாலும் குடுக்க முடியும்…. பொண்ணு பொருள், ஆஸ்தி…. எதுவும்…”, அழுத்தமான குரலில் கூறினான்.
“உன் குரலில் சந்தேகம் உணர்கிறேன்…. உனது குரல் ஸ்திரமாக ஒலிக்கவில்லை…. நான் என்ன கேட்பேன் என்பதை உன்னால் யூகிக்க முடியவில்லை யா அபராஜிதா ?”, அசைக்க முடியாத உறுதி நிறைந்த குரலில் கேட்டார்.
“உன் கடந்த காலம் அறிந்த பின் கேட்கலாம் தான்… ஆனால் அதுவரை இம்மண்ணில் ஜீவித்திருக்க எனக்கு அனுமதி இல்லை….. ஆதலால் ……”, என நிறுத்தி அவனை பார்த்தார்.
“நீங்க செத்தாலும் என்னால உயிர் குடுக்க முடியும்….. அதபத்தி கவல படாதீங்க பெரியவரே….”,திமிராக கூறினான்.
“ஹாஹாஹா,……. உயிர் கொடுப்பாயா ? இந்த ஜடத்திற்கா? ஹாஹாஹா…… உன் அகம்பாவம் சற்றும் குறையவில்லை அபராஜிதா….. உன் அழிவும் இதனால் தான் அப்போது நேர்ந்தது….. மீண்டும் அதே அகம்பாவம் உன் தலையில் தொங்குகிறது…. மீண்டும் உன் சிரத்தை அறுக்கவும் காத்திருக்கிறது…. “
“இதுக்கு முன்ன என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியாது….. ஆனா இந்த முறை நான் தோக்கமாட்டேன்….”, அழுத்தமாக ஸ்திரமாக கூறினான்.
“இந்த திடத்தை நீ பைரவக்காட்டை நெருங்கும் போது பார்க்கிறேன் ஆத்ம உருவில்…… “, என அவனுக்கு சலைத்தவன் அல்ல என்பது போல அவனை பார்த்து கூறினார்.
“நீ இதுவரை ஆத்மாவை பற்றி சிந்திக்கவே இல்லை…உடலை மட்டுமே மட்டுமே ஆராய்ந்து கொண்டு இருக்கிறாய்…. ஆத்மாவை பற்றி உன்னால் எப்போதும் அறிய முடியாது…. அந்த ஞானம் உனக்கு வாய்க்காது … பல லட்ச மிருகங்களின் சாபம் அது…. “
“வாய மூடு கெழவா….என்னால முடியாதது இங்க எதுவும் இல்ல… இது என் முதல் பிறவியும் இல்ல, கடைசி பிறவியும் இல்ல…. இந்த உடம்பு இருந்தா தான் ஆத்மா தங்க முடியும்…. அதை நான் உருவாக்க முடியும்ங்கறப்போ அந்த ஆத்மாவையும் என்னால கட்டுப்படுத்த முடியும்…..”, என அவரின் கழுத்தை நெரித்து கூறினான்.
“அப்படியா…… சரி உன் வாழ்வின் புதிரை முதலில் விளங்கிக் கொள்….”, என அவன் கையை அசிரத்தையாக எடுத்து விட்டுவிட்டு கூறினார்.
“இந்த சுவடிகளுக்காக நான் உன்னிடம் கேட்பது ஒன்று தான் அபராஜிதா…. உன் உயிர்…. அது இவுடலை விட்டு பிரியும் நொடி நான் அங்கே நிற்பேன் அரூபமாக…. உன் முந்தீர்வு ஆத்ம காலத்தை காவு வாங்க…. “, என கூறிவிட்டு கண்களை மூடிக் கொண்டார்.