50 – ருத்ராதித்யன்
நானிலன் சக்தி அவனிடம் பேசியபடியே தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான்.
தாயின் உடல்நிலை திடீரென மோசமானதும் என்ன செய்வதென அவனுக்கு புரியவில்லை… பாதிக்கும் மேலாக உடல் தேறி வந்திருந்தார்.
அன்று தந்தையுடன் மெல்ல நடந்து வருகிறேன் என அருகில் இருக்கும் பூங்காவிற்கு எப்பொழுதும் போல தனது ஊன்று கோலை எடுத்துக் கொண்டு மெல்ல நடந்து சென்றார்.
“ஹலோ….. இஸ் திஸ் மிஸ்டர் சக்தி ?”, என அலைப்பேசியில் பேச ஆரம்பித்தான்.
“ஆமா நானிலன்…. நான் சக்தி தான் …. உங்க மேனேஜேர் உங்ககிட்ட விஷயத்த சொல்லி இருப்பாரு…. நீங்க நாளைக்கு எனக்கு உங்க அம்மாவோட ரிப்போட்ஸ் எல்லாம் அனுப்புங்க…. நம்ம கம்பனி மூலமா உங்களுக்கு மெடிக்கல் ஹெல்ப் கெடைக்கும்….“.
தங்கள் நிறுவனத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களின் பெற்றவர்களின் உடல்நிலை சம்பந்தமான மருத்துவ உதவிகள் தேவைப்படும் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டுமென ஆருத்ரா இட்ட கட்டளையின் பேரில் தேடும் பொழுது சில நூறு பேர்களின் பெற்றோர்கள் உடல்நிலை மோசமாக இருப்பதாக தெரிந்தது, அவர்களின் மருத்துவ ஆய்வரிக்கையை சரி பார்த்து அவர்களுக்கு உதவுவதுடன், இந்த வாரத்தில் யாரின் தாய் உடல்நிலை மோசமாகிறதோ, அவன் தான் அவர்களின் உதவிக்கரம் என்று வனயட்சி ஆச்சி கூறிய கூற்றின்படி கண்டறிய செயலில் இறங்கினான்.
“ஓக்கே மிஸ்டர்.சக்தி… தேன்க் யூ………..”
அன்று மாலை பூங்காவிற்கு சென்ற தாய் தீடீரென சுயநினைவு இழந்து விழுந்து விட்டார் என்று அறிந்து அவசரமாக மருத்துவமனையில் சேர்த்தான்.
சக்தி அவனிடம் பேசிய ஒரு மணிநேரத்தில் மீண்டும் அழைத்து தாயின் உடல்நிலை மிகவும் மோசானதாக கூறி உடனே உதவி கிடைக்குமா என்று கேட்டான்.
“என்னாச்சி நானிலன்? இப்போ தானே வெளிய போய் இருக்காங்கன்னு சொன்னீங்க…”
“நல்லா தான் சக்தி போனாங்க…. அங்க போய் மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க…. பெரிய அமௌண்ட் இங்க சொல்றாங்க ட்ரீட்மென்ட் பண்றதுக்கு….”, அவஸ்தையுடன் பேசினான்.
“நீங்க அந்த ஹாஸ்பிடல் ரிப்போர்ட் எடுத்து எனக்கு ஃபோட்டோ அனுப்புங்க… உங்களுக்கு தேவையான உதவி உடனே வரும்….”, சக்தி துரிதமாக அவன் கூறியவையெல்லாம் உண்மை தானா என்று ஆட்களை வைத்து சோதனை செய்துக் கொண்டு அவனுக்கான உதவியை அரை மணிநேரத்தில் செய்து கொடுத்தான்.
“ரொம்ப நன்றி சக்தி….. இன்னிக்கி உங்களால என் அம்மா இப்போ உயிரோட இருக்காங்க…. ஆருத்ரா மேடம்க்கு என் நன்றி சொல்ல ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி குடுங்க.. நேர்ல பார்த்து அவங்களுக்கு என் நன்றியை சொல்லணும்… “, உணர்ச்சி வசப்பட்டு பேசினான்.
“சீக்கிரமே அவங்கள நீங்க பாக்கலாம் நானிலன்…. உங்க உதவி எங்களுக்கு தேவை.. நாளைக்கு நைட் ரெடியா இருங்க நான் வந்து உங்களை பிக் அப் பண்ணிக்கறேன்….”
“அம்மா இப்படி இருக்கறப்ப?”, இழுத்தான்.
“உங்க அம்மாவுக்கு விஐபி ட்ரீட்மென்ட் இனிமே நடக்கும்… கவலைப்படாம என்கூட நாளைக்கு வாங்க…. உங்களுக்கு எது எல்லாம் தேவைப்படும்ன்னு நெனைக்கரீங்களோ அது எல்லாமே எடுத்துக்கோங்க… “, என கூறிவிட்டு தான் ஆருத்ரா விடம் நானிலன் பற்றிய விசயத்தை கூறினான்.
“நல்லது சக்தி…. அவன பத்தின விசயம் இந்நேரம் ரிஷித்துக்கும் தெரிஞ்சி இருக்கும்…. அவன தூக்க அவனும் ஆள அனுப்புவான்… நீயே போய் அவன கையோட கூட்டிட்டு வந்துடு…. “, ஆருத்ரா தூரத்தில் இருக்கும் இதழியை பார்த்தபடி கூறினாள்.
“தனுப்பா….. மிச்சம் நீங்க பேசிக்கோங்க….”, என கூறிவிட்டு அவசரமாக அவ்விடம் நோக்கி நடந்தாள்.
இதழி இயற்கை உபாதைக்கு ஒதுங்க அந்த பக்கம் சென்றாள் போலும், நிற்க முடியாமல் தள்ளாடுவதை கண்டுவிட்டு தான் அவளிடம் வேகமாக சென்றாள் .
அவளுக்கு முன் அங்கே கொம்பனும், பைரவனும் அவளிடம் நின்று அவள் விழாமல் இருக்கும்படி சுற்றி வந்து அவளுக்கு பிடிக்க தங்கள் முதுகை கொடுத்து நின்றனர்.
“இதழ்… என்னாச்சி ம்மா ?”, ஆருத்ரா அருகில் வந்து அவளை பிடித்தபடி கேட்டாள்.
“வலிக்குது அண்ணி…. “, என அடிவயிற்றை பிடித்தபடி கூறினாள்.
அதற்குள் யாத்ராவும் எங்கிருந்தோ குதித்துவந்து இதழை கைகளில் தூக்கிகொண்டு வனயட்சி ஆச்சி இருக்கும் குடிலுக்கு ஓடினாள்.
அவள் பின்னோடு ஆருத்ராவும் ஓடினாள், அதை கண்டு பைரவும், கொம்பனும் சிரஞ்சீவ் மற்றும் ஆதியை அழைக்க ஓடினர்.
அவர்களின் கால்சராயை இழுத்துக்கொண்டு முன்னால் சென்று அழைத்தன பின்தொடரும்படி…..
அவைகளின் சமிக்ஞையை பார்த்துவிட்டு ஆச்சியின் குடில் நோக்கி இருவரும் வேகமாக ஓடி வந்தனர்.
அர்ஜுனும் யாத்ரா ஓடியதும் அவள் பின்னால் வந்து குடிசையின் முன்னால் நின்றிருந்தான்.
உள்ளே நன்முகை வலியில் முனகும் சத்தம் தெளிவாக கேட்டது.
“அவள உக்கார வைங்க …”, என கூறிவிட்டு ஒரு எண்ணெயை தீபத்தில் காட்டி சூடு செய்தார்.
யாத்ரா ஒரு பக்கமும் ஆருத்ரா ஒரு பக்கமும் அவளை பிடித்து அமரவைத்து, அவளது உடையை தூக்கி விட்டு, முழுப் பிறையாக வளர்ந்து இருக்கும் வயிற்றைக் ஆச்சிக்கு காட்டினர்.
“ம்ம்… புள்ள நல்லா இறங்கிரிச்சி…. வலி நிக்காம வந்தா உடனே பிறந்துடும்… நுவலி…. நீ போய் அன்னிக்கி பாறகுகை கிட்ட காட்டின அந்த பச்சைய பரிச்சிட்டு வா…. ஓடு…”, என அவளை இடம் விட்டு அனுப்பினார்.
இன்னும் மூன்று தன் கிராம பெண்களை மட்டும் உள்ளே அழைத்து பிரசவம் பார்க்க தேவையானவற்றை ஏற்பாடு செய்ய சொன்னார்.
“கண்ணு…. இந்தா இத குடி…. வலி நிக்காம வரும்…. உக்காந்தமேனிக்கு புள்ளைய வெளிய தள்ள முடியும் தானே?”, என கேட்டார்.
“ரொம்ப வலிக்குது ஆச்சி….. எனக்கு தெரியல….”, என வலியில் உதட்டை கடித்தபடி பேசினாள்.
“நான் பிடிச்சிக்குறேன் ஆச்சி…. குழந்தை வெளிய வர போகுது…. “, என இதழியின் வயிற்றில் ஏற்படும் அசைவுகளை பார்த்து கூறினாள் யாத்ரா.
“நீயே பிரசவம் பாக்கறியா கண்ணு?”, என யாத்ராவை பார்த்து கேட்டார்.
“பாக்கறேன் ஆச்சி….. இவள சாயமா பிடிச்சிக்கணும். யார் பிடிப்பாங்க?”
“நான் பிடிச்சிக்கறேன் யாத்ரா…. நீ பாரு…”, என ஆருத்ரா அவளை தன் மேல் முழுதாக சாயித்துக் கொண்டாள்.
“சரி…. ஜாக்கிரதை.. இதே மாறி இருந்தா இன்னும் பத்தே நிமிஷம் தான்… ஈசியா குழந்தை வெளிய வந்துரும்…. “, என கூறிவிட்டு சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுத்து இடுப்பு தசையை பிடித்துவிட்டு லகுவாக்கினாள்.
வலி இடைவிடாமல் இடுப்பில் எடுத்ததும், நன்முகை கண்களில் நீர் நிற்காமல் வழிந்தது.
ஆனால் சத்தம் போட்டு அழுகவில்லை, தன் குழந்தையின் வரவில் அழப் பிடிக்கவில்லை .
“நல்லா மூச்சு இழுத்துவிடு முகை….. அவ்ளோ தான்.. இன்னும் சில நிமிஷத்துல உன் பையன் உன் கைல இருப்பான்….”, என யாத்ரா அவளிடம் குழந்தையின் அசைவும், அது வயிற்றை உந்தி தள்ள முற்படுவது பற்றியும் பேசிக்கொண்டே இருந்தாள்.
“என் மருமகனுக்கு கால் நல்ல நீளம்…. கையும் தான்…. நல்ல வழுவாவும் இருக்கு…. பாரேன் ரெண்டே உதைல யோனிக்கு தலை வந்திருச்சு…. இன்னும் ரெண்டு உதை விட்டு பூமராங் மாதிரி வெளிய வந்திருவான் போல….”, என பேசிக்கொண்டே இருந்தாள்.
“மூச்சு பிடிக்காத…. குழந்தை இதயத்துடிப்பு இம்சையாகும்… அவன் உதைச்சி வெளிய வர, அவன் இதயம் பலமா இருக்குனு அவன் உணரணும்… நீ நல்லா மூச்சு விடு…. உன் மனச திடப்படுத்து, நீ நல்லா இருக்கே…. உன் இதயத்துடிப்பு அதிகமாகுது…. பயப்படாத…. ரிலாக்ஸ்….. இதோ இன்னும் ஒரே புஷ் தலை வெளிய வந்துடும்…. “, குழந்தையின் தலை யாத்ராவின் கண்களுக்கு நன்றாக தெரிந்தது.
“அவ்ளோ தான்…. இன்னும் ஒரே ஒரு புஷ்.. அவனும் உதைக்கறான்…. கம் ஆன் முகை…”, என அவள் கூறும்பொழுதே குழந்தையின் தலை வெளியே வந்து விட்டது.
மெல்ல தலையை பிடித்துக் கொண்டு உடலை வெளியே இழுத்தாள் யாத்ரா. பனிக்குடம் உடைந்த நீருடன் அவர்களின் முதல் உருப்பெற்ற உயிரணு மண்ணுலகம் வந்து விட்டது.
யாத்ரா மூக்கு, வாய் என அனைத்தையும் துடைத்துவிட்டு, முதுகை லேசாக தட்டவும் வீரிட்டு அழுதான்.
குழந்தையின் அழுகுரல் கேட்டதும் வெளியில் நின்றிருந்தவர்கள் முகத்தில் மகிழ்ச்சி வந்தது.
வலி எடுத்து அரை மணிநேரத்தில் குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது. தாயிற்கும் அதிக சிரமம் இல்லை. இருவரும் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பது கண்டு அங்கயற்கண்ணி இறைவனுக்கு நன்றி செலுத்தினார். தமிழன்பன் மாப்பிள்ளையை கட்டிகொண்டு ஆனந்த கண்ணீர் விட்டார்.
கஜேந்திர நெடுமாறன் கலவையான உணர்வுகளுடன் நின்றிருந்தான். ஆதியும், அர்ஜுனும் கட்டிக்கொண்டனர். பைரவ்வும், கொம்பனும் சிசுவின் வருகை உணர்ந்து தங்கள் நண்பர்களுக்கு கூற ஓடினர். மகதனும் உறுமி தன் வாழ்த்தை கூறினான்.
அஜகரன் மரத்தின் மேல் இருந்து அந்த குடிசையை பார்த்துக் கொண்டிருந்தது.
நுவலி பச்சிலை அரைத்து கொடுக்க வனயட்சி ஆச்சி முகைக்கு வேண்டிய மருத்துவ பக்குவங்கள் செய்து தாய்ப்பால் கொடுக்க கூறினார். ஒரு மணிநேரம் கழித்து தான் வெளியே குழந்தையை காட்டினர்.
“நான் சொன்னேன் ல சிவி இப்போ பாரு என் மருமகன…..அப்படியே அர்ஜுன் மாதிரி இருக்கான்..”, யாத்ரா குழந்தையுடன் சிவி அருகில் சென்று கூறினாள்.
“முகை எப்படி இருக்கா?”,தவிப்புடன் கேட்டான்.
“நல்லா இருக்கா…. தூங்கறா….. பக்கத்துல போய் பாத்துட்டு வந்துடு….”, என அவனை உள்ளே அனுப்பினாள்.
“இந்தாங்க அத்தான்….. உங்க மருமகன்…..”, என ஆதியின் கையில் குழந்தையை கொடுத்தாள்.
“எனக்கு தூக்கதெரியாது யாதுமா….”, பயத்துடன் பிடித்து கூறினான்.
“பழகிக்கோங்க அத்தான்….. இனிமே நம்ம குடும்பத்துல அடுத்தடுத்து நம்ம புள்ளைங்க பொறக்க போகுது…..”, என ஆருத்ரா ஆதியின் கையில் இருந்த குழந்தையை ஏந்தி நிற்பது கண்டு கூறினாள்.
“உன் வாய் முகூர்த்தம் பலிக்கட்டும் யாத்ரா….. “, என கூறியபடி ரணதேவ் அருகில் வந்து குழந்தையை பார்த்தார்.
அங்கயற்கண்ணி யாத்ரா வெளியில் வரும்போதே குழந்தையை பார்த்துவிட்டு மகளை காண உள்ளே சென்றுவிட்டார்.
தமிழன்பன் குழந்தையை யாத்ரா அருகில் நின்று பார்த்தபடி உடன் இருந்தார்.
“கைல வாங்குங்க தமிழன்பன்… பேரன் வந்துட்டான்…. அதனாலேயே எங்களுக்கு இன்னிக்கி ஸ்பெஷல் விருந்து எல்லாருக்கும் வைக்கணும் சொல்லிட்டேன்….”, என ரணதேவ் கூறி சிரித்தார்.
“கண்டிப்பாங்க ஐயா… எனக்கு பொறந்த உடனே இருக்க குழந்தைய தூக்க தெரியாது…. தலை கொஞ்சம் நிக்கட்டும் அப்றம் என் தோள் விட்டு எறக்க மாட்டேன்… “, என கூறியபடி மெல்ல பிஞ்சு பாதங்களை பிடித்து முத்தமிட்டார்.
அர்ஜுன் தன் மறு உருவமாக பிறந்திருக்கும் மருகனை கூர்ந்து பார்த்தான்.
“என்ன செழியன்…. என்ன சொல்றான் நம்ம மருமகன்?”, யாத்ரா கேட்டாள்.
“இவனுக்கான நல்ல சூழ்நிலைய நாம உருவாக்கி தரணும் ரது….. வாழ்க்கைய பயமில்லாமல் வாழனும்… இயற்கையை முழுசா அனுபவிக்கனும்…. இயற்கையான ஆரோக்கியமான வாழ்க்கை இவன் வாழனும்….“, என கையில் இருக்கும் குழந்தையை பார்த்தபடி கூறினான்.
“கண்டிப்பா நம்மளால முடிஞ்ச அளவுக்கு இவன இயற்கையோடு வாழவைக்கலாம் செழியன்…”
“அதுக்கு அந்த ரிஷித் அ மொதல் ஒழிக்கணும் “, ஆருத்ரா இருவரையும் பார்த்து கூறினாள்.
இருவரும் அவள் கண் பார்த்தனர். குழந்தையை அங்கயற்கண்ணியிடம் கொடுத்துவிட்டு, ஆருத்ராவுடன் அவர்கள் ஏற்படுத்தி இருந்த டென்ட் சென்றனர். அவர்களை அமரச்சொல்லி ஒரு கோப்பையை அவர்களிடம் நீட்டினாள்.
“இது இதுவரைக்கும் ரிஷித் செஞ்ச ஆராய்ச்சியோட பலி எண்ணிக்கை…. அவன் பல அழிந்த உயிரினத்தை மறுபடியும் உயிர் பெற வச்சி, அதுல மாறுதலும் ஏற்படுத்தி இருக்கான். அவன் செய்யற எல்லாமே அழிக்க கூடிய சக்தியா தான் இருக்கு…. உங்க உடம்புல ஏத்தின புலி இரத்தம் மாதிரி இன்னும் பலக் காம்பீனேஷன் மிருக மனித கலப்பினத்த உருவாக்க முயற்சி செஞ்சி இருக்கான். அப்படி செத்த மனுஷங்க எண்ணிக்கை மட்டும் 40000 … மிருக வதை கணக்கே இல்லாம செஞ்சி இருக்கான்…. அவனோட குறி இயற்கைய அழிக்கணும்.. அவன் அதுக்காக ரொம்பவே வேகமா செயல்பட்டுட்டு இருக்கான் யாத்ரா…. “ சில நொடிகள் விட்டு, மீண்டும் தொடர்ந்தாள்.
“நானிலன் தான் நமக்கு உதவக்கூடிய ஆள்… வனயட்சி ஆச்சி சொன்ன விசயங்கள எல்லாமே சரியான்னு தெரிஞ்சிக்க ஆளுங்கள ஏற்பாடு செஞ்சிருந்தேன்…. அவங்க சொன்னமாதிரி அவன் இது நாள் வரை செஞ்சதெல்லாம் தெரிஞ்சுகிட்டேன்….”, என கூறி இன்னொரு கோப்பையை அவர்களிடம் கொடுத்துவிட்டு ஆதியை அழைக்க சென்றாள்.
“அவன விடவே கூடாது ரது டார்லிங்….”
“அவன விட்டா நாம வாழறதுல அர்த்தமே இல்லை செழியன்…”, என இருவரும் கண்களில் வெறி மின்ன கூறினர்…..