51 – ருத்ராதித்யன்
அருணாச்சலப் பிரதேசம்…..
பனி மலையும், பச்சை கம்பளி போன்ற மலையும் எதிரெதிர் நிமிர்ந்து நின்றது.
குளிரும், வெயிலும் ஒரே நேரத்தில் வர, இதமான வெப்பம் அங்கே பரவி இருந்தது.
ரிஷித் அங்கே தனது இன்னொரு தேடல் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருந்தான்.
ராஜ் கர்ணா இல்லாமல் இரண்டு கைகளும் உடைந்தது போல தான் இருந்தது. அவனிடம் அவனுக்கு ஒன்று வேண்டுமென்று கூறிவிட்டால் போதும் அது எப்படியேனும் அவன் கரங்களுக்கு வந்து விடும்.
சட்ட விரோதமான பல மருந்துகளை கண்டுபிடித்து, அதை நிழலுலகில் விற்று வந்த பணத்தை வைத்து தான் அவன் இத்தனை பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தான். இன்று நிழல் உலகின் ஓர் முக்கியமான அங்கமாகவே அவன் வலுப்பெற்று நிற்கிறான்.
அவனது மருந்துகள் அனைத்தும் மனிதனின் இயற்கையான செயல்பாட்டை நிறுத்தி, எதிர் பதமான செயல்பாடுகளை உடலில் நிகழ்த்தி, அணு அணுவாக உயிர் கொல்லும் அபாயமான வேதியல் கலப்புகள் தான்.
ஒருமுறை அந்த மருந்தை செலுத்திவிட்டால் , அவன் ஆயுளுக்கும் உடலில் ஒன்று மாற்றி ஒன்று என்றென உபாதைகள் தொடர்ந்துகொண்டேயிருக்கும்,உயிரும் அத்தனை எளிதாக போகாது.
உயிர் பிரியா சித்திரவதை செய்வதற்கென்றே பல மருந்துகளை இவன் தயாரித்து கொடுக்க, ராஜ் கர்ணா விற்கிறான். இவன் எது செய்தாலும் உடன் நிற்கும் அற்புதமான நட்பு இருவருக்கும்.
அப்படிப்பட்ட நண்பன் இல்லாமல் இன்று மனிதர்களை விரட்டி வேலை வாங்குவது தான் பெரும் இம்சையாக போனது.
“இடியட்….. இங்க வந்து இத தோண்ட சொன்னா நீ என்ன பண்ற?”, மலையின் ஒரு ஓரத்தில் மண்ணை குடையச் சொல்லி இருந்தான்.
ருதஜித் அனுப்பிய ஆட்களோ அவன் பேசுவது புரியாமல் அவனது பொறுமையை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.
“சார்…. ருதஜித் சார் அனுப்பினார்….”, என ரன்வீர் அவன் அருகில் வந்து கூறினான்.
“உனக்கு இங்கிலீஷ் நல்லா தெரியுமா?”, ரிஷித்.
“தெரியும் சார்…. ஆஸ்திரேலியால சர்வர் ஆ கொஞ்ச மாசம் இருந்தேன்…. “, பவ்யமாக கைக்கட்டி தலைக் குனிந்து கூறினான்.
“இந்த ஊர் பாஷை?”
“நல்லா தெரியும் சார்… நான் சின்ன பையனா இருந்தப்போ இங்க தான் இருந்தேன்… இதுவும், மனிப்புரியும் நல்லா புரியும் சார்…”, ரன்வீர்
“உன் பேரு என்ன?”
“விநாயக் ஷர்மா சார்…”
“பைன்…. எனக்கு வேலை சீக்கிரம் நடக்கணும்… நாளைக்கு நைட்குள்ள இந்த இடத்தை இவங்க தோண்டி சுத்தம் செஞ்சிருக்கணும்…. புரியுதா?”, என ஆங்கிலத்தில் மளமளவென கட்டளையிட்டுவிட்டு தனது காரவென் உள்ளே சென்றான்.
உள்ளே சகஸ்ரா எழும்பும் தோலுமாக ஒரு சாய்வு நாற்காலியில் அமரவைக்கப் பட்டிருந்தாள்.
அவள் சுயநினைவு தவிர, மற்ற எந்த பாகமும் அவளின் ஆணைக்கு அடிபணியாமல் இருந்தது. ரிஷித் கோபம் எல்லைக்கடக்கும் போதெல்லாம் இவளும் மரணத்தினெல்லையை தொட்டு வருவாள்.
“சகஸ்ரா பேபி …. என் ராஜ் இல்லாம எனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா…… உனக்கும் மாயா இல்லாம இப்படி தானே இருக்கும்…..”,என சற்று அவள் முகத்தை உற்று பார்த்துவிட்டு, “எனக்கும் மாயா இல்லாம என் வேலை எல்லாமே ஸ்லோவா நடக்குது…. சீக்கிரம் அவள நம்ம கூட்டிட்டு வந்திடலாம்…. அதுக்கு முன்ன இங்க இன்னொரு முக்கியமான பொருள் நாம தேடி எடுக்கணும்…. நம்ம இயற்கைய தோக்கடிக்கற முக்கியமான படியில இருக்கோம்….. இந்த தடவ கண்டிப்பா முழுசா வேலைய முடிக்கணும்… முடிக்கறோம் …..“, என வன்மை பொருந்திய மென் குரலில் அவளிடம் கூறிவிட்டு, தனக்கு கிடைத்த குறிப்புகளை ஒன்றிணைக்க ஆரம்பித்தான்..
ருதஜித் அந்த பழைய சுவடிகளை படிக்க ஆட்கள் அழைத்து வந்து, முழுதும் குறிப்புகளாக மாற்றி ரிஷித் கைக்கு அனுப்பி இருந்தான்.
ஒவ்வொரு சுவடியும் ஒவ்வொரு கால கட்டத்தில் எழுதியது என்று உறுதியானது.. ஒருவரே அனைத்தையும் எழுதி இருக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்றும் ஒரு குறிப்பை கூறி இருந்தனர். அது தான் எப்படி என்று மற்றவர்களுக்கு புரியவில்லை.
ரிஷித் அத்தகவலை கேட்டதும் மிகவும் ஆர்வமாகி, மொத்த சுவடிகளையும் குறிப்புகளாக மாற்றி அவனுக்கு விளக்கங்களுடன் அனுப்பி வைக்க சொன்னான்.
இங்கே வந்து இரண்டு தினங்களில் இந்த மலையை கண்டுப்பிடித்து, மண்ணில் இருக்கும் தாதுக்களை கண்டறிந்து இடத்தை சரி பார்த்துக் கொண்டிருந்தான்.
“சூரிய சந்திரர்களின் குணத்தின் மத்தியில்,
மின்னும் கற்பாறைக்கும்,
பாதரஸமூற்றி அலங்காரம் பார்க்கும் மணலுக்கும்,
இடைப்பட்ட ஓர் காத தூரத்தில்…
நின்றிருக்கிறதே நான் பதப்படுத்திய……..”
என்ற வரிகளோடு நின்றிருந்தது அந்த செய்யுள்……
“இது ஏன் பாதில நிக்குது? தமிழ் புரியாம ரொம்ப கஷ்டமாக இருக்கு….. இனிமே வர காலத்துல கட்டாயம் தமிழ் எழுத படிக்க தெரிஞ்சி இருக்கணும்னு ரூல்ஸ் போடணும்… அதுவும் நிழல் உலகத்துக்கு ரொம்பவே முக்கியம்…..”, என தனக்கு தானே பேசிக்கொண்டு, விடுபட்ட வரிகள் வேறு எங்கேனும் உள்ளதா என தேட தொடங்கினான்.
“சார்,….”, என ரன்வீர் வெளியே இருந்து அழைத்தான்.
“உள்ள வா விநாயக்…..”, அவனின் குரல் உத்தரவு கிடைத்ததும் ரன்வீர் பொறுமையாக எல்லாவற்றையும் வாய் பிளந்து பார்த்தபடி அவன் அருகே சென்றான்.
“என்ன கைல?”
“நீங்க இன்னொரு பக்கம் மண் எடுத்து தர சொன்னீங்களாம்…. எடுத்து குடுத்தாங்க சார்…. “, என மேலே பக்கவாட்டில் என எல்லாவற்றையும் பார்த்தபடி கூறினான்.
“இடியட்… மண்ணு கொட்டுது … எங்க பாத்துட்டு இருக்க நீ?”, என கோபமாக திரும்பினான்.
ரன்வீர் அடக்கமுடியாத ஆச்சர்யத்தில் அந்த காரவெனை பார்ப்பதை பார்த்துவிட்டு, “ஒழுங்கா நின்னு வச்சிட்டு பேசு….”, என கண்டிப்பு குரலில் கூறினான்.
“சாரி சார்….. இது வடக்கு பக்கம் எடுத்த மண்ணு சார்…”, என கூறிவிட்டு மீண்டும் வாயை பிளந்து பார்த்தபடி வெளியே சென்றான்.
“விநாயக்….. நான் சொன்னா ஆள தூக்கிட்டாங்களான்னு ருதஜித் கிட்ட கேளு…..”, என அடுத்த கட்டளையிட்டான்.
“ஓக்கே சார்….”, என அங்கேயே நின்று ருதஜித்திற்கு ஃபோன் செய்தான்.
“நமஸ்தே சார்….. பெரிய சார் உங்ககிட்ட ஆள தூக்கியாச்சான்னு கேட்டாரு சார்….”
“தூக்கிருவாங்க இன்னும் கொஞ்ச நேரத்துலன்னு சொல்லு….”, எரிச்சலும் பயமும் கலந்த குரலில் கூறினான்.
“சார்… கொஞ்ச நேரத்துல தூக்கிடுவாங்க ன்னு சொன்னாரு….”
இங்கே வா என செய்கையில் அழைத்து அலைபேசியை வாங்கினான்.
“அந்த அதிபன் என்ன பண்றான்?”
“அவன்….. அவன்….”, என பயத்தில் எச்சில் விழுங்கியது இந்த பக்கம் நன்றாக கேட்டது.
“என் டைம் வேஸ்ட் பண்ணாத ருதஜித்…..”, மென்மையான குரலில் மிரட்டல் வந்தது.
“அவன் அங்க போறதுக்குள்ள, சக்தின்னு ஒரு பையன் அவன கூட்டிட்டு மேகமலை போய்ட்டான் ….”, என வெளிவராத குரலில் கூறினான்.
“அவன் தம்பி விதுரன் எங்க இருக்கான்?”, அடுத்த கேள்வியே ருதஜித்திற்கான அடுத்த கட்டளையாக வந்தது.
“ஒரு மணிநேரத்துல கால் பண்றேன் சார்…”, என அவசரமாக கூறி வைத்தவுடன், தனது ஆட்களுக்கு அழைத்து விதுரணை கடத்தச் சொன்னான்.
அதிபன் தங்களிடம் வந்ததுமே ராஜ் கர்ணா அவன் தம்பியியை கண்காணிக்க ஆட்களை அனுப்பி பின்தொடரும்படி கூறிவிட்டான். அதனால் இப்போது அவன் இருக்குமிடத்தில் இருக்கும் அடியாட்களுக்கு அடுத்த கட்டளை சென்றது. அரை மணிநேரத்தில் விதுரன் ருதஜித் முன்னே கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தான்.
“சார்….. நம்ம இடத்துக்கு கொண்ட வந்துட்டேன்….”, என ருதஜித், விநாயக் போனிற்கு விதுரன் படத்தை அனுப்பினான்.
“சார்,….”, என விநாயக் உள்ளே வந்து காண்பித்தான்.
“கால் பண்ணு..”, ஒரு நொடி அதை பார்த்துவிட்டு கூறினான்.
ஸ்பீக்கர் போட்டுவிட்டு அலைப்பேசியை ரிஷித் பக்கவாட்டில் வைத்துவிட்டு நகர்ந்து நின்றான்.
“ அந்த ஓநாய் கூண்டு பக்கத்துல அவன கட்டி வை…. அதிபனுக்கு அவன கட்டிவச்சிருக்க ஃபோட்டோ அனுப்பு….”, என கூறிவிட்டு, விநாயக் வெளியே செல்ல கூறினான்.
“விநாயக்…. இன்னும் ஆறு அடி தோண்டி, மண் எடுத்து கொண்டு வா வடக்கு பக்கம்….
கிழக்கு பக்கம் என்ன ஆச்சி?”
“அங்க பாறையா இருக்குன்னு சொல்றாங்க சார்….. அந்த மண் எடுத்துட்டு வரவா?”, ஆவலோடு கேட்டான்.
“இத அடுத்த கருப்பு வண்டில குடு…”, என ஒரு கோப்பையை கொடுத்தான்.
விநாயக் அதை பவ்வியமாக வாங்கிக் கொண்டு சென்றான்.
செல்பவனை பார்த்தபடி ரிஷித் யோசனையில் ஆழ்ந்தான்.
“நானிலன்….. இங்க இருங்க நான் மேடம் கிட்ட சொல்லிட்டு வரேன்…”, என அவர்கள் புதிதாக அமைத்து இருந்த டென்டில் அமரவைத்துவிட்டு சென்றான்.
நானிலன் சுற்றிலும் பார்த்துவிட்டு, எதிரே இருந்த பலகையில் சில குறிப்புகளை படித்தான்.
அவசரமாக தனக்கு கிடைத்த ஓலை சுவடியை எடுத்து படித்தான்.
குமரிக்கடல் நடுவே அவன் செல்ல நினைத்த இடம் இங்கே குறிப்பிலிருந்தது.
“வாங்க நிலன் அண்ணே… சௌக்கியமா? அம்மா எப்படி இருக்காங்க?”, என கேட்டபடி நுவலி உள்ளே வந்தாள், மகதனுடன்……
புலியை கண்டதும் நானிலன் திகைத்து, பயந்து பின்னால் சென்றான்.
பின்னால் தீரன் அவன் முதுகை முன்னால் தள்ள, கொம்பனும் பைரவனும் அவன் தோள் வரை எகிறி நின்றன.
“இது.. இது…”, என பயத்தில் நாவு மெலன்னத்தில் ஒட்டிக் கொண்டது.
“உங்களை பாக்க இன்னொருத்தனும் கிராம எல்லைல நிக்கிறான்…. வாங்க போலாம்….”, என அவன் கை பிடித்து அழைத்து சென்றாள் நுவலி..
நானிலன் பயத்துடன் நுவலி இழுத்த இளுப்பிற்கு சென்றான்.
அஜகரன் நானிலனை கண்டதும் சந்தோசம் கொண்டு, தனது உடலால் அவனை சுற்றிக் கொண்டது.
தன்னை சுற்றி பல்வேறு மிருகங்கள் நிற்க நானிலன் பயத்தோடு நுவலி கைப்பற்றி நின்று இருந்தான்.
“என்ன மீட்டிங் இங்க?”, என கேட்டபடி அர்ஜுனும், யாத்ராவும் அங்கே வந்தனர்.
“நீங்க அர்ஜுன் யாத்ரா தானே? நீங்க பைரவக்காட்டு சேனாபதிகள்….. நான் பைரவக்காட்டுக்கு போகமுன்ன இன்னொரு இடத்துக்கு போகணும்……”, என அதிர்ச்சியுடன் ஆரம்பித்து தெளிவாக கூறினான்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவனைக் கூர்ந்து பார்த்தனர்….