52 – ருத்ராதித்யன்
“எங்க போகணும் ? நாங்க சேனாதிபதிகளா?”, அர்ஜுன் அவன் அருகில் வந்து அஜகரனை தடவியபடி கேட்டான்.
“ஆமா… எனக்கு கிடைச்ச சுவடில அப்டி தான் இருக்கு… ரெண்டு வரிக்கு மேல அத என்னால படிக்க முடியல…. ரொம்ப பழைய வார்த்தைகளா இருக்கு…. “, நானிலன் பயந்தபடியே கூறினான்.
“மொதல் வந்து ரெஃபிரேஷ் ஆகி சாப்பிடுங்க… அப்பறம் பேசலாம்….”, என யாத்ரா அவனை தன் பின்னால் வரும்படி கூறிவிட்டு கிராமத்திற்குள் நுழைந்தாள்.
“உங்க பேரு என்ன?”,, யாத்ரா அவனை ஆராய்ந்தபடி கேட்டாள்.
“நானிலன் மேடம்….”, இப்போது சற்று பயம் விலகி மனம் அமைதியானது..
“எந்த ஊரு?”
“திருச்சி ..”
“நீங்களா எப்படி எங்கள பாத்து அப்படி சொல்லலாம்? யாராவது சொல்லி குடுத்து பேசறீங்களா?”, சந்தேகத்தை முழுதாக முகத்தில் காட்டி கேட்டாள்.
“நீங்க இப்ப மனுஷ இனத்துல இருந்து விலகி வித்தியாசமா இருக்கீங்க மேடம்…. இந்த இடமும், அந்த மிருகங்களும், இந்த போர்ட்ல இருக்க விசயங்களும்……”, எனக் கூறியபடி குமரி முனையை சுட்டிக்காட்டி தனது பேச்சை நிறுத்தினான்.
“அங்க என்ன இருக்கு?”
“அம்மன் சிலை….”, தெளிவான குரலில் கூறினான்.
“நீ சுவடி படிச்ச ரெண்டு வரில அது இருக்கா?”, வியப்பதை போல கேட்டாள் .
“இல்லீங்க மேடம்… ஒரு பெரியவர் சொன்னார்… “, என தனக்கு அந்த சுவடி கிடைத்தது முதல் மற்றொரு பெரியவர் பேருந்து நிலையத்தில் பேசியது என தன் வாழ்வில் அந்த சுவடி கிடைத்த பின் நடந்த அனைத்தையும் கூறி முடித்தான்.
“சோ.. இந்த சுவடியால தான் உன் குடும்பம் இவளோ கஷ்டம் பட்டுச்சா?”
“அது எனக்கு தெரியல மேடம்…. நான் அப்படி யோசிக்கவும் இல்ல…. என் அக்கா மாமா இறந்த அப்பறம், அம்மா எந்திரிக்க முடியாம அடிபட்ட சமயத்துல கூட இந்த சுவடி பாத்தா எனக்கு ஒரு ஆறுதல் தான் கிடைச்சது…. நான் காலேஜ் டூர் போனப்போ கடல் நடுவுல இருக்க அந்த இடத்துக்கு போக முயற்சி செஞ்சேன்.. ஆனா யாருமே அந்த இடத்துக்கு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க…. ஏதோ ஒரு காரியம் என்னால ஆக வேண்டியது இருக்குன்னு மட்டும் அடிக்கடி தோணுது.. ஆனா என்ன செய்யணும்னு தெரியல…. இப்ப சக்தி சார் இங்க கூட்டிட்டு வந்தது கூட எனக்கு எதுக்குன்னு முழுசா தெரியாது…. கிளம்பறப்போ இந்த சுவடி எடுத்துட்டு போகலாம்னு ஒரு உந்துதல்… அதனால் இத எடுத்துட்டு வந்தேன்…”, என தனக்கு திருவானைக்காவல் கோவிலில் கிடைத்த சுவடியைக் காட்டினான்.
அந்த சுவடியை கண்டதும் யாத்ரா தன் கைகளில் வாங்கி முகர்ந்துப் பார்த்தாள். சுவடியை பதப்படுத்த பயன்படுத்திய மூலிகைகளின் வாசம் நன்றாக தெரிந்தது. அதை கஜேந்திர நெடுமாறனை அழைத்து கொடுத்தனுப்பினாள் .
“நீ தங்கறதுக்கு இடம் பார்த்துட்டு வரேன்.. இங்கேயே இரு…”, எனக் கூறிவிட்டு ஒரு சீழ்க்கை அடிக்க இரண்டு பஞ்சவர்ண கிளிகள் அவனின் முன்னே வந்து அமர்ந்து அவனைக் கண்காணித்தனர்.
சென்னை விமான நிலையம்…..
ஜான் ஆருத்ராவின் கட்டளைப்படி அக்ராவிலுருந்து தனி விமானத்தில் வந்தவர்களை எந்த விதமான இக்கட்டிற்கும் உட்படுத்தாமல், வழக்கங்களை முடித்து வெளியே அழைத்து வந்தான்.
தர்மதீரன் சுதாகருடன் பேசியபடி முன்னால் நடக்க, இனியன் ம்ரிதுளை சக்கர நாற்காலியில் அமர்த்தி தள்ளிக்கொண்டு நடக்க, நாச்சியாவும், வல்லகியும் பாலாவுடன் மும்முரமாக பேசியபடி மெல்ல நடந்தனர். அவர்களுக்கு பின்னால் ஜான் அவர்களை சந்தித்து விட்ட தகவல் அனுப்பிவிட்டு, அவர்களை பார்வையில் வைத்துகொண்டு மிகவும் பின்தங்கி தொடர்ந்தான்.
பாரதி மற்றும் சாரதி இருவரும் தனி தனியாக வாகனங்களை அவர்கள் முன் நிறுத்தி ஏற்றிக் கொண்டு ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் இறக்கிவிட்டனர்.
அனைவரும் சாப்பிட்டு படுத்துறங்கி இரவில் ஜான் அழைத்ததும் ஒரே இடத்தில் கூடி நின்றனர்.
“ஆருத்ரா மேடம்க்கு சுடரெழில் நாச்சியார் அண்ட் வல்லகி உதவி தான் தேவை. நீங்க எல்லாம் உங்க வீட்டுக்கோ இல்ல வேலை செய்யற இடதுக்கோ போகலாம்…. இனியன் சார் உங்கள பரிதி மேடம் கண்டாக்ட் பண்ணுவாங்க…. “, என தனக்கு கொடுக்கப்பட்ட தகவலை கூறினான்.
“இத காலைலேயே ஏன் சொல்லல?”, சுதாகர் வினவினான்.
“உங்களை எல்லாம் இங்க சட்டவிரோதமா தான் அழைச்சிட்டு வந்து இருக்கோம்…. அதுக்கான சில விசயங்களை நாங்க முழுசா முடிக்க இவ்வளவு நேரம் ஆச்சி…. “
“எதுக்காக அவங்க ரெண்டு பேர் மட்டும் வேணும்? ”, தர்மதீரன் கேட்டான்.
“அத சொல்ல அனுமதி இல்ல…. நேர்ல அங்க போனா அவங்க தெரிஞ்சிப்பாங்க…. “, ஜான் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் கூறினான்.
“தர்மா…. இது சிபிஐ சம்பந்த பட்ட விஷயம்… நாம அதிகம் உள்ள போக முடியாது… நான் ம்ரிதுள் கூட்டிட்டு என் வீட்டுக்கு போறேன் …. நீ நாச்சியார் மேடம் வீட்டுக்கு போய் விசயத்தை சொல்லிடு…. “
“இவங்கள அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போன அப்பறம் தான் எங்கள மேகமலை வர சொல்லி இருக்காங்க… சோ யாரும் தனியா தகவல் குடுக்க வேணாம்….”, ஜான்.
“நான் அதுவரை இவங்க கூட வரலாம் தானே….”, தர்மதீரன்.
“அவங்க விருப்பப்பட்டா வரலாம்..”, என ஜான் கூறிவிட்டு, இன்னும் ஒரு மணிநேரத்தில் கிளம்ப வேண்டும் என கூறி சென்றான்.
சுதாகர் தன் அலுவலகம் நோக்கி கிளம்ப, இனியன் தன் இல்லம் கிளம்ப தயாரானான்.
அனைவருக்கும் விடை கொடுத்துவிட்டு, சாரதியை வண்டி எடுக்க சொல்லிவிட்டு, ஜான் நாச்சியார், பாலா, வல்லகி மற்றும் தர்மதீரணை உள்ளே விட்டு கடைசியாக ஏறியதும் பல்லவபுரம் நோக்கி கிளம்பியது.
5 மணிநேரத்தில் நாச்சியார் வீட்டின் முன்பு வண்டி நின்றது. ஏற்கனவே நாச்சியார் பேசி இருந்ததால் அவளின் பெற்றோருடன், பாலாவின் பெற்றோரும் அவர்களுக்காக காத்திருந்தனர்.
“நாச்சி…. வல்லா….”, என அவர்களின் தாய் அவர்களை கட்டிகொண்டார். மனைவி தன் மக்களை கட்டிகொண்டு நிற்பது கண்டு தமிழோவியனும் அவர்களை அனைத்துகொண்டார்.
மிகப்பெரும் ஆபத்தை கடந்து உயிருடன் வந்துவிட்டார்கள். இனி அவர்களை ஜாக்கிரதையாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
வல்லகியை பற்றிய விசயம் பலருக்கு சென்றுவிட்டது. இனி அவளை எப்படி பாதுகாப்பது என்கிற தீவிர சிந்தனையில் இருக்கிறார். பாலாவும் அதீதமாக இந்த விசயத்தில் அடிபட்டுவிட்டாள், வல்லகியை பிரியேன் என்றும் கூறுகிறாள்.
நிச்சயமாக ஒன்று மட்டும் விளங்கியது, இனி இவர்களால் சகஜமான சமூகம் சூழ்ந்த வாழ்வை வாழ்வது கடினம். இவர்களால் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்து வரும். அப்படி எதுவும் நடக்காத வண்ணம் இனி அவர்களின் வாழ்க்கை தொடரவேண்டும்.
அனைவரும் ஒருவரை ஒருவர் நன்றாக பார்த்து, நலம் விசாரித்து, அன்பை பகிர்ந்து கொண்டிருந்தனர்.
ஜான் இன்னும் மூன்று மணி நேரத்தில் கிளம்ப வேண்டும் என்று நாச்சியார் அருகில் சென்று கூறினான்.
“நானும் வல்லகியும் மட்டும் தான் வரணுமா?”
“ஆமாங்க மேடம்…. அங்கேயும் சிக்கல் இருக்கு.. வேற யாரும் தேவை இல்லாம வந்து சிக்கிற கூடாதுன்னு ஆருத்ரா மேடம் நெனைக்கராங்க…. மத்தபடி நீங்க நம்பற உங்களுக்கு உதவி செய்யக்கூடிய ஆளுங்கள கூப்பிட்டுக்கலாம்….. அதிக ஆளுங்க வேணாம்….”, ஜான் கூறியதை யோசனையாக கேட்டுக்கொண்டே நான்கு பேரும் வருகிறோம் என்று கூறினாள்.
“ஓக்கே மேடம்…. நான் கிளம்ப அரைமணிநேரம் முன்ன வந்து உங்களை பாக்கறேன்…”, என கூறி அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகி நின்று காவல் காத்தான்.
“யாரும்மா அது?”, தமிழோவியன் கேட்டார்.
“எங்களை இங்க கூட்டிட்டு வந்தவங்க ஆள் ப்பா… என் உதவியும், வல்லகி உதவியும் வேணும்ன்னு கேட்டு இருக்காங்க… சிபிஐ இன்வால்வ் ஆகியிருக்காங்க…. மூணு மணிநேரத்தில் கிளம்பணும்….”, தாங்கள் இந்தியா வந்த விதத்தை விலக்கினாள்.
“ஜாக்கிரதை டா…. வல்லகி பத்தி வெளிய விசயம் போயிருச்சு… அவள இனி எப்படி பாதுகாக்க போறோம்னு தெரியல…”, கலக்கத்துடன் கூறினார்.
“ஒரே எடத்துல இருந்தா தான் பிரச்சனை … இடம் மாறிக்கிட்டே இருந்தா பெருசா வராது… தவிர நாம எல்லாருமே கொஞ்ச மாசம் இல்ல வருஷம் இடம் மாறி இருக்கறது எல்லாருக்கும் நல்லது… யோசிச்சி வைங்கப்பா…”, என கூறிவிட்டு தர்மதீரன் அருகில் சென்றான்.
“நாம நாலு பேரும் மேகமலை வரோம்ன்னு சொல்லிட்டேன்…. உங்களுக்கு சரி தானே ?”
“அதான் சொல்லிட்டியே…. நீ கூப்பிடலன்னாலும் நான் ஃபாலோ பண்ணி வந்திருப்பேன்…. அவங்கள முழுசா நம்பி உங்களை அனுப்ப முடியாது…”
“சரி… மூணு மணிநேரத்தில் கிளம்பணும்…. “, என கூறிவிட்டு பாலாவின் பெற்றோரிடம் சென்றாள்.
“நான் ரெடி…. இருங்க நான் என் டிரஸ் பேக் பண்ணிட்டு வரேன்…”, என தன் இல்லம் நோக்கி ஓடினாள்.
மற்றவர்களும் தங்களுக்கு தேவையானதை எடுத்து பேக் செய்து கொண்டனர். தர்மதீரன் வழியில் தனக்கு தேவையானதை வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டான்.
அதன்பின் உண்டுமுடித்துவிட்டு, ஜான் உடன் அவர்கள் நால்வரும் மேகமலை நோக்கிய பயணத்தை தொடர்ந்தனர்.