53- ருத்ராதித்யன்
அதிபன் அலைபேசிக்கு விதுரன் கட்டப்பட்டுக்கிடக்கும் புகைப்படம் வந்தது.
அதைக் கண்டவனுக்கு கோபம் கண்மண் தெரியாமல் எழுந்தது. அந்த ரிஷித்தை தன் கைகளாலேயே கொல்லும் அளவிற்கு ஆத்திரமும் வந்தது. ஆனால் அவன் பலம் கண்டு கையை கட்டிக்கொண்டு தன் மனதை சமன்படுத்த முயன்று கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து ருதஜித்திற்கு அழைத்தான். “நான் போறதுக்குள்ள அந்த சக்தி வந்து அந்த பையனை கூட்டிட்டு போய்ட்டான். நீங்க விதுரன கடத்தறதால எந்த பிரயோஜனமும் இல்ல…”, அடக்கப்பட்ட கோபத்துடன் பேசினான்.
“அவனால உனக்கு எந்த பயனும் இல்லாம இருக்கலாம் அதிபன். எங்களுக்கு இருக்கு….. நாங்க சொல்றத நீ இனிமே எப்படியாவது செஞ்சே ஆகணும்…..”, ருதஜித் இறுக்கமான குரலில் கூறினான்.
“மேகமலை மறுபடியும் போகமுடியாது ருதஜித்…. அங்க அந்த ரெண்டு மனுஷ மிருகங்க காவல் காத்துட்டு இருக்கு…. என் ஆளுங்க அத்தனை பேரும் இப்போ தேனிய விட்டே ரொம்ப தூரம் வந்துட்டாங்க….நெறைய பேர அவங்க கொன்னுட்டாங்க…. “
“அது எனக்கு தேவை இல்லாத விசயம்…. இப்போ நீ ஆருத்ரா வீட்ல இருக்கற பவள லிங்கத்தை தூக்கிட்டு வரணும்…. ரெண்டு நாள் தான் டைம்….”
“எந்த வீட்ல இருக்கு?”
“அத தேடி கொண்டு வரவேண்டியது நீ….. “, எனக்கூறி பட்டென அழைப்பைத் துண்டித்தான் ருதஜித்.
“ஷிட்.. ஷிட்…ஷிட்…… “, பல காதில் கேட்கமுடியாத வார்த்தைகளில் ஏசினான். பின் அமைதியாக அமர்ந்து தன் மனதை சமன் படுத்தும் முயற்சியில் இறங்கினான்.
ஆருத்ரா அம்புவி வீட்டிற்கு இடம் மாறியது அவன் அறிந்தது தான். அங்கே தான் கோவிலில் ஹோமத்தில் ஒரு லிங்கம் வைத்து பூஜிக்கப்பட்டதாக அவனுக்கு தகவல் வந்தது. ஆனால் இப்போது அது அங்கே இருக்குமா? அவளின் அத்தனை வளர்ப்பு பறவைகளும், மிருங்கங்களும் மேகமலை வந்து விட்டது. லிங்கத்தையும் எடுத்து சென்று இருப்பார்களோ? அங்கே இருக்கிறதா என்று ஆராய்ந்து தான் ஆகவேண்டும்.
அதற்கான ஆட்களை தேடி பிடிக்க தனது உதவியாளனை தொடர்பு கொண்டு பேசினான்.
அருணாச்சலப் பிரதேசம்….
இங்கே ரன்வீர் ரிஷித் அருகில் இருந்தபடி அங்கு நடப்பவற்றை முழுதாக அறிய முயன்று கொண்டிருந்தான்.
மிகப்பெரும் நடமாடும் ஆராய்ச்சி கூடமாக பெரிய இரண்டு காரவென்கள் அங்கே வந்து சேர்ந்தது. மொத்தமாக மூன்று வண்டிகளில் வேதியல் மற்றும் இன்னபிற ஆராய்ச்சியாளர்கள் தனி தனி குழுக்களாக இருந்தனர்.
வெறி ப்பிடித்தவன் போல அவன் அந்த மலையின் அத்தனை இடத்தில் மண் எடுத்து பரிசோதித்து கொண்டிருந்தான். அவன் தேடும் ஏதோ ஒரு பொருள் அங்கே இருக்கிறது என்பது தெரிகிறது ஆனால் அது என்ன என்று அவனுக்கும் கூட இன்னும் தெரியவில்லை என்பது தான் ரன்வீருக்கு குழப்பமாக இருந்தது.
இரண்டு தினங்களில் நான்கு மலையில் இருந்து மண் எடுத்தாகி விட்டது. முன்பு போல குகையை தான் தேடுகிறான் என்று அவனும் நினைத்து இருந்தான். ஆனால் அவன் தேடுவது குகையை அல்ல…. வேறு ஏதோ ஒரு கனிமமோ இல்லை, பிரித்தறிய முடியாத ஓர் பொருள் இம்மண்ணில் இருக்கிறது.
இதற்கிடையில் இன்னும் இரண்டு தினங்களில் தமிழ்நாடு செல்ல வேண்டும் என்றும் கூறி இருக்கிறான். அது அர்ஜுன் யாத்ராவை சந்திப்பதற்காக கூட இருக்கலாம் .. இல்லையென்றால் அந்த கண்மயாவை கடத்தி வருவதற்காகவும் இருக்கலாம்..
இல்லை நமக்கு இன்னும் முழுதாக எதுவும் தெரியவில்லை, ஒரே மர்மமாகவே இருக்கிறது இவனது தேடலும், பேச்சும். அதில் இருக்கும் மர்மத்தை உடைத்தே ஆகவேண்டும். அவன் எங்கு சென்றாலும் அவனுடனே நாமும் செல்ல வேண்டும். எப்படி அவனுடன் இணைவது என்று தீவிரமாக மண்வெட்டியில் மண்ணை கொத்தியபடி சிந்தித்துக் கொண்டிருந்தான்.
“ஹே விநாயக்… நிறுத்து… நான் எவ்வளவு நேரமா சொல்றேன்…. உன் கவனம் எங்க இருக்கு?”, என ரிஷித் அவன் தோள் தொட்டான்.
“சாரி பாஸ்… காலைல இருந்து சாப்பிடல அதான் காது அடைச்சிட்டு இருக்கு ..”, என கூறியபடி காதை ஆட்டி குடைந்தான்.
“சாப்பிடாம ஏன் மண்ணை கொத்திட்டு இருக்க?”, அவன் அந்த மண்ணின் அடிப்பாகத்தை கத்தியில் சொரண்டி எடுத்தான்.
“நெறைய பேருக்கு சாப்பாடு பத்தல பாஸ்… ஊர் விட்டு ரொம்ப தூரம் நாம வந்திருக்கோம்.. பக்கத்துல எதுவும் கிடைக்கல…”
“ஓ….சரி…. யாராவது ரெண்டு பேரை சாப்பாடு வாங்கிட்டு வர அனுப்பு….. இத என் வண்டில வை… நான் அந்த பக்கம் மண் எடுத்துட்டு வரேன். ருதஜித்-க்கு கால் பண்ணி நான் தமிழ்நாடு நாளைக்கு வரேன்னு சொல்லு…. அதுக்கு ஏற்பாடு பண்ண சொல்லு…”, என கூறிவிட்டு இன்னொரு வண்டியில் ஏறினான்.
விநாயக் @ ரன்வீர் சகஸ்ரா அருகில் சென்று அவளை பாவமாக பார்த்துவிட்டு, அவன் சொன்னது போல ருதஜித்தை அழைத்தான்.
“சார்… நாளைக்கு பாஸ் அங்க வராறாம் .. அதுக்கான ஏற்பாடு பண்ண சொன்னாரு….”
“சரி.. நீயும் அவரோட இன்னும் நாலு பேர கூட்டிட்டு வா… இங்க அவர சமாளிக்க ஆள் வேணும்… உனக்கு இப்போ பழக்கம் ஆகிரிச்சா?”
“சட்டுன்னு கோவம்மா பேசறார் சார்… அப்பறம் உடனே அமைதியா இருக்கார்… எனக்கும் ஒன்னும் புரியல… ஆனா அவர் என்ன சொன்னாலும் நான் அமைதியாக இருக்கேன்… அடிச்சாலும் வாங்கிக்கறேன் …”, பாவமாக கூறினான்.
“விடு அத எல்லாம் பெருசா எடுத்துக்காத …. எல்லாத்துக்கும் சேத்து உனக்கு சம்பளம் தந்துடறேன்… நீ மட்டும் அவர் கூடவே இருந்து சமாளிக்க கத்துக்கோ… என்னால அவர் சொல்றதும் பண்ணிட்டு அவரையும் சமாளிக்க முடியாது…”
“சார்…. அவர் ரொம்ப நல்லவர்… ஆனா நீங்க ஆயுஷ் ஏ மெரட்டுற ஆள். ஏன் இப்படி பயப்படறிங்க?”, புரியாதது போல கேட்டான்.
“அவர் உனக்கு நல்லவரா இருக்கறது எனக்கும் நல்லது… நான் சொன்னது ஞாபகம் வச்சு நடந்துக்கோ… நைட் நீங்க இருக்க இடத்துக்கு சாப்பர் வரும்… “, எனக் கூறி வைத்துவிட்டான்.
ரன்வீர் ஒரு முறை சுற்றிலும் பார்த்துவிட்டு சகஸ்ரா அருகில் சென்றான். அப்போது அவளுக்கு விக்கல் எடுக்க, அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளுக்கு மெல்ல புகட்டினான்.
சகஸ்ரா அவனை நன்றியுடன் பார்த்துவிட்டு இன்னும் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என வாய் திறந்து காட்டினாள்.
“என்ன உபசாரம் எல்லாம் பலமா நடக்குது?”, தமிழில் கேட்டபடி ரிஷித் உள்ளே வந்தான்.
“பாஸ்….”, விநாயக் புரியாமல் அவனை பார்த்தான்.
அவளைக் காட்டி இப்போது நடந்தது பற்றி கேட்டான்.
“அவளுக்கு விக்கிச்சி பாஸ்.. அதான் தண்ணி குடுத்தேன்….”
“ம்ம்…. என்னை கேட்காம இனிமே எதுவும் அவளுக்கு குடுக்க கூடாது…. ருதஜித் என்ன சொன்னான்?”, கட்டளையாக கூறிவிட்டு விவரம் கேட்டான்.
அவன் கூறியதை எல்லாம் கூறிவிட்டு , ரிஷித் முகத்தை பார்த்தபடி நின்றான்.
“சரி… உன்னோட அந்த ரெண்டு மலையும் தோண்டின ரெண்டு பேர மட்டும் கூப்டுக்க…. வெளிய இரு… சாப்பிட்டு எனக்கும் கொண்டு வா…..”
“பாஸ்.. உங்களுக்கு உள்ள தானே சமைக்கணும்….?”
“இல்ல…. இன்னிக்கி வெளிய வாங்கிட்டு வரதே நானும் சாப்பிடரேன்…”, என கூறிவிட்டு அந்த மண்ணை ஆராய அமர்ந்து விட்டான்.
உள்ளிருந்து ரன்வீரை அவன் கண்காணித்து கொண்டிருந்தான். ஆனால் அவன் செயல்களில் எந்த சந்தேகமும் இல்லை. தெளிவாக இவன் கூறியதை மட்டுமே செய்துக் கொண்டிருந்தான். அதிகமும் செய்யவில்லை, கம்மியாகவும் செய்யவில்லை. சொன்னதை மட்டும் செய்து வந்தான். அவனை விடுத்து அடுத்த வேலையில் ரிஷித் இறங்கினான்.
மேகமலை…..
ஜான் அவர்கள் அனைவரையும் பத்திரமாக மேகமலை கொண்டு வந்து சேர்த்தான். பாலா வல்லகியின் மடியில் உறங்கிக் கொண்டிருந்தாள். தர்மதீரன் சுற்றிலும் பார்வையை சுழற்றியபடி வந்தான். நாச்சியார் ஜான் மற்றும் சாரதியை பார்த்துக் கொண்டு வந்தாள்.
வல்லகி ஜன்னல் கண்ணாடியை இறக்கி காற்றை உள்ளிழுக்க ஆரம்பித்தாள்.
அற்புதமான வாசனை…. ‘ரொம்ப பெரிய விசயம் தான் நடக்க போகுது’ என தனக்கு தானே கூறிக்கொண்டாள்.
“நாச்சி … நான் கொஞ்ச மாசம் இங்க இருக்கலாம்னு நினைக்கறேன்….”, வல்லகி காற்றை உள்ளிழுத்து வெளியிட்டபடி கூறினாள்.
“நீ மட்டுமா?”
“நானும் பாலாவும்…. நீயும் இருக்கலாம் தான் ஆனா உன்னால ரொம்ப நாள் இங்க இருக்க முடியாது….”
“இங்க நல்லவிதமாக இருக்கா?”
“ரொம்பவும் நல்ல விதமாக இருக்கு…. இந்த மலையும், இந்த காத்தும்….. இங்க இருக்க உயிர்களும்….”, என மெல்ல ஒவ்வொரு வார்த்தையாக கூறினாள்.
“உனக்கு இங்க தேவையான விசயம் இருக்கா வல்லா?”
“நம்ம பூமிக்கே தேவையான எல்லாம் இங்க இருக்கு…. ஜான் ப்ரோ…. கொஞ்சம் சீக்கிரம் போலாம் ….. “, என கூறினாள்.
அந்த மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் வல்லகி ஒரு இடத்தில் வண்டியை நிறுத்த சொன்னாள்.
கீழே இறங்கி மண்ணில் வெறும் கால்களோடு நின்று ஆழ மூச்செடுத்து உள்ளேயே தேக்கி சில நிமிடங்கள் நின்றாள்.
“ஜான் ப்ரோ.. இந்த இடத்தை அடையாளம் வச்சுக்கோங்க….. சீனியர் நீங்களும்…..”, என கூறிவிட்டு, நாச்சியாரை அழைத்துகொண்டு காட்டின் ஓரத்தில் சில அடிகள் நடந்தாள்.
அவளுக்கும் அங்கே சில விசயங்களை கூறிவிட்டு மீண்டும் வண்டியில் ஏறினாள்.
“உங்க மேடம் ஓட வளர்ப்புகள் எல்லாம் எங்க இருக்கு ப்ரோ?”, வல்லகி கேட்டாள்.
“கிராம எல்லையில் ஒரு பக்கமாக இடம் ஒதுக்கி குடுத்தாச்சி மேடம்…”
“நல்லது…. அந்த புலி எங்க இருக்கு?”, என கேட்டதும் ஜான் திரும்பி அவளை பார்த்துவிட்டு, காட்டிற்குள் ஒரு இடத்தை கூறினான்.
“அந்த வயசான பாட்டி நேத்து இருந்து இன்னும் வீட்டுக்கு வரல… ஏன் ?”, அடுத்த கேள்வியில் மற்றவர்களும் அதிர்ந்தனர்.
“தெரியல மேடம். அங்க போனா தான் எனக்கும் தெரியும்…”
“உங்க மேடம் லிங்கத்தை எடுக்க நேத்து யார் கூட போனாங்க?”
“எந்த லிங்கம்?”, நாச்சியார் கேட்டாள்.
“ஆருத்ராவோட பரம்பரை லிங்கம்.. பவளலிங்கம்…. அந்த லிங்கத்தோட ஜோடியை எடுக்க தான் நாம போகணும் நாச்சி…. கூடவே இன்னொரு இடத்துக்கும்….”, எனக் கூறிவிட்டு தர்மத்தீரனைப் பார்த்தாள்.
அவர்கள் கிராமத்தில் நுழையும் நேரத்தில் ஆருத்ராவும் ஆதியும் வந்திறங்கினர். அஜகரன் எல்லையில் இருந்து அவர்களைப் பார்த்தது. பைரவன் கொம்பனின் பயிற்சியில் இருந்து தப்பித்து ஓடி வந்தது. தீரன் அவனை துறத்தியபடி வரவும், யாத்ரா தீரணை பிடிக்க ஓடி வந்து அவர்கள் முன்னால் குதித்தாள்.
பாலா வாய்பிளந்து அவளை பார்த்தபடி அருகே செல்ல, மகதன் பாய்ந்து வந்தான் அர்ஜுனை துறத்தியபடி. அந்த இடமே பூமியின் ஒட்டுமொத்த கலப்பிடமாக காட்சியளித்தது.
நடுகாட்டில் இருக்கும் வனதேவி முகத்தில் புன்சிரிப்பு மலர்ந்தது. வனயட்சி ஆச்சி அந்த சிரிப்பில் தன்னை மறந்து மயங்கி விழுந்தார்.