6 – மீள்நுழை நெஞ்சே
“உன்கிட்ட ஒண்ணு சொல்லணும் .. இங்க உக்காரு..”, என அவன் கூறியதும் அங்கிருந்த ஷோபாவில் சற்று தள்ளி அமர்ந்தாள். அதைக் கண்டவன், “ஏன் இங்க பக்கத்துல உக்காந்தா உருகிடுவியா?”, என குதர்க்கமான சொற்கள் அவன் வாயில் இருந்து வெளியே கோபத்துடன் விழுந்தது.
அவன் முகத்தைப் பார்த்துவிட்டு, கொஞ்சம் தள்ளி அருகில் அமர்ந்தாள்.
“உன் தம்பிகிட்ட என்ன பேசிட்டு இருந்த?”
“நான் எப்பவும் போல சகஜமா தான் பேசிட்டு இருந்தேன்.. ஏன்?”
“எவ்ளோ நேரம் பேசிட்டு இருந்த?”
“அரை மணிநேரம் இருக்கும்”, ஏன் இப்படி கேட்கிறான் என்று புரியாமல் அவனைப் பார்த்தாள்.
“ஒரு பையன்கிட்ட உனக்கு என்ன அவ்ளோ நேரம் பேச்சு ?”, என அவன் கேட்டதும் அவளுக்கு கோபம் தான் முதலில் வந்தது.
“அவன் என் கூட பொறந்த தம்பி.. அவன்கிட்ட நான் எவ்ளோ நேரம் பேசினாலும் தப்பில்லயே ..”
“மொதல் இப்டி எதிர்த்து பேசாத.. என் அம்மா சொல்லியும் நீ என்கிட்டயும் இப்படி பேசற “, என முகத்தை இறுக்கினான்.
“உங்கம்மா அவங்க அக்கா தங்கச்சிகிட்ட ஒரு நாளைக்கு நாலு அஞ்சி மணி நேரம் பேசறாங்க.. நான் வாரத்துக்கு ஒரு தடவை என் தம்பிகிட்ட பேசறதுல என்ன தப்பு இருக்கு?”, என இவளும் அமைதியாகவே கேட்டாள்.
“அவன் ஒரு பையன். அதுவும் வயசு பையன்.. இன்னிக்கி இருக்கற பசங்க எல்லாம் எந்த நெனப்புல பேசறாங்கன்னு நம்ம சொல்ல முடியாது.. இனிமே அவன்கிட்ட பேச கூடாது.. நாளைக்கு நமக்கே பையன் பொறந்தாலும் அவனுக்கு 15 வயசு ஆனதுக்கு அப்பறம் அவனை நம்பி உன்ன தனியா விட்டுட்டு எங்கயும் போகமாட்டேன்.. ”, எனக் கூறினான்.
“இது என்ன மாதிரியான பேச்சு ? அவன் என் மொத கொழந்தை. நான் வளத்த பையன் அவன் ..”, என அவள் கூறி முடிக்கும் முன், “அவன் எப்படி நமக்கு கொழந்தை ஆக முடியும்? அப்டில்லாம் எப்பவும் நினைக்காத .. இனிமே அவன்கிட்ட பேசாத ..”, எனக் கூறிவிட்டு அறைக் கதவை அறைந்துச் சாற்றிவிட்டுச் சென்றான்.
அவன் சென்றதும் அவனின் அம்மா உள்ளே வந்து, “இனிமே ரொம்ப நேரம் ஃபோன் பேசாத துவாரகா .. அவனுக்கு கோவம் வரமாறி நடந்துக்காத .”, எனக் கூறினார்.
“அத சொல்றவங்களும் யோசிச்சி சொல்லணும். நீங்க உங்க அக்கா தங்கச்சிகிட்ட பேசறத விட நான் ஒண்ணும் அதிகமா பேசிடல அத்த..”, எனக் கூறிவிட்டு எழுந்து வெளியே சென்றாள்.
“துவா .. துவா .. “, என யாரோ அவளை அழைப்பது போல இருந்தது.
“துவா .. எழுந்திரி .. வா கொஞ்சம் ரெஃப்ரெஷ் பண்ணிக்கலாம்.. “ , என மித்ரா அவளை எழுப்பினாள்.
“ஹான்.. வரேன் மித்ரா .. கொழந்தை நல்லா தூங்கறான் .. “, எனக் கூறியபடிக் குழந்தையை வாகாகப் படுக்க வைத்து அருகில் முட்டுக் கொடுத்துவிட்டு காரில் இருந்து வெளியே வந்தாள்.
“இது என்ன எடம் ?”, எனச் சுற்றிப் பார்த்தபடிக் கேட்டாள்.
“தெரியல துவா.. டீ கடை வந்தது நிறுத்தியாச்சி .. “, எனக் கூறிவிட்டு முன்னே நடந்தாள்.
நான்கு வழி சாலை வந்த பிறகு நிறைய இடங்களில் இப்போது பேக்கரி முதல் சிறு சிறு ஹோட்டல் என ரோட்டின் மேல் முளைத்து இருக்கிறது. வெகு தூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு இது போன்ற கடைகள் தான் இளைப்பாறும் நிழல்கள்.
அந்த பகுதி மக்களுக்கு ஒரு நல்ல தொழிலாக இருப்பது மகிழ்ச்சி தான்.
“இன்னும் எவ்ளோ தூரம் இருக்கு மித்ரா ?”, என டீயை உறிஞ்சியபடிக் கேட்டாள்.
“இன்னும் பாதி தூரம் இருக்கு துவா.. அம்மா நல்லா தூங்கிட்டு இருக்காங்க .. அவங்களுக்கு பிளாஸ்க்ல வங்கிக்கலாமா ?”
“எழுப்புங்க மித்ரா.. அவங்களும் ரெஸ்ட்ரூம் போயிட்டு வருவாங்க“
“சரி.. இந்தா துவா இந்த ஃபோன் வச்சி இரு .. வந்துடறேன்..”, எனக் கொடுத்துவிட்டுத் தாயை எழுப்பச் சென்றாள் மித்ரா.
அப்போது ஒரு அழைப்பு வந்தது.
“ஹேய் பப்ளிமாஸ் .. எங்க இருக்க? “, என ஒரு ஆணின் குரல் அந்த பக்கம் கேட்டது.
“மித்ரா இங்க இல்ல.. ஒரு நிமிஷம் அவங்க கிட்ட மொபைல் தரேன்..”, என துவாரகா கூறிவிட்டு மித்ராவை அழைத்தாள்.
“நீங்க யாரு ?”, குரல் இப்போது கணீரென வந்தது.
“நான் துவாரகா .. மித்ராகிட்ட வந்துட்டேன் .. குடுக்கறேன் இருங்க “, எனக் கூறிவிட்டு மித்ராவிடம் மொபைல் கொடுத்துவிட்டு அன்பரசியின் கையைப்பிடித்துக்கொண்டாள்.
“சொல்லு முகில் .. “, என மித்ரா பேச ஆரம்பித்தாள்.
“உனக்கு இவ்ளோ தூரம் கார் டிராவல் சிரமம் இல்லயே ராகா ?”, என அன்பரசி அவள் முகத்தைப் பார்த்தபடிக் கேட்டார்.
“அதுலாம் ஒண்ணும் இல்ல ஆண்ட்டி .. நீங்க உள்ள போய்ட்டு வாங்க .. நான் இங்கயே நிக்கறேன் .. “, என ரெஸ்ட்ரூம் கதவைத் திறந்தபடிக் கூறினாள்.
அன்பரசி அவளின் செய்கைகளைப் பார்த்தபடி உள்ளே சென்றுவிட்டு வந்து சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
துவாரகா அந்த பக்கம் இருக்கும் இடங்களை கண்களால் அலசியபடி அன்பரசியின் கைப்பிடித்து மீண்டும் காரில் படுக்க வைத்தாள்.
மித்ரா இத்தனை தூரம் கார் ஓட்டிக்கொண்டு வந்துவிட்டாள். இனி தான் ஓட்ட வேண்டும் என்று நினைத்தபடி பின்சீட்டில் அன்பரசியை வாகாக அமரவைத்துவிட்டு, சில ஸ்நாக்ஸ் மற்றும் சாக்லேட் வாங்கிக் கொண்டு வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்தாள்.
அருகில் நிர்மலமான முகத்துடன் உறங்கும் விகாஷைப் பார்த்து மென்மையாக முத்தம் வைத்துவிட்டு மித்ராவை அழைத்தாள்.
“மித்ரா பேசிட்டே வந்து உக்காருங்க.. நான் டிரைவ் பண்றேன் .. “
“உனக்கு ரூட் தெரியுமா துவா ?”
“இவ்ளோ நேரம் நீங்க மட்டும் ரூட் தெரிஞ்சா டிரைவ் பண்ணிட்டு வந்தீங்க.. வாங்க .. கூகிள் மேப் இருக்கறப்போ என்ன பயம்? “, என கார் ஸ்டார்ட் செய்தாள்.
“யாரு வண்டி ஓட்றாங்க ?”, முகில் கேட்டான்.
“நான் சொன்னேன்ல துவாரகா.. அவங்க தான்..”, என மகனை தன் மடியில் படுக்க வைத்தபடிப் பேசிகொண்டு வந்தாள்.
“சரி பாத்து ஜாக்கிரதையா வாங்க.. எப்பவும் எச்சரிக்கையோட இருங்க.. “, எனக் கூறிவிட்டு அவன் வைத்துவிட்டான்.
“இவன எங்க இருந்து ம்மா உங்க அக்கா தூக்கிட்டு வந்தாங்க? எவ்ளோ கேள்வி .. எவ்ளோ அட்வைஸ் .. முடியல “, என மித்ரா தாயிடம் அவனைப் பற்றிக் கூறிச் சலித்துக்கொண்டாள்.
“உன்மேல இருக்க அக்கறைல சொன்னா உனக்கு இப்டி தோணுதா மித்தும்மா ?”, அன்பரசி சிரிப்புடன் கேட்டார்.
“நம்ப மாட்டேங்கறான் ம்மா.. எல்லாத்துக்கும் சந்தேகம்.. எல்லாத்துக்கும் ஒரு அட்வைஸ் .. ஹி இஸ் ரியலி நாட் யுவர் சிஸ்டர் சன் “, எனக் கூறிச் சிரித்தாள்.
“ஹாஹாஹா .. கேட்டியா க்கா.. முகில் உன் பையன் இல்லையாம் ?”, என அன்பரசி தன் போனில் பேச ஆரம்பித்தார்.
“.. .. .. .. .. .. .. .. . .. .. “
“இதோ போடறேன் .. பேசு க்கா “
“ஹே மித்து பொண்ணு.. அவன் என் பையனாங்கற சந்தேகம் எனக்குமே ரொம்ப வருஷமா இருக்கு டா.. அவன் எங்க ரெண்டு பேர் மாதிரியும் இல்ல.. புது டைப்ஆ இருக்கான்.. பட் அவன பஞ்சாங்கம்ன்னும் சொல்ல முடியாது .. அந்த அளவுக்கு சில விஷயங்களை யோசிக்கறான் டா .. “, அன்பரசியின் அக்கா பத்மினிதேவி கூறினார்.
“சரி தான் மினிம்மா .. எப்டி இருக்கீங்க? என் டாடி என்ன பண்றாரு ?”
“அவரு உன்கிட்ட நேர்ல தான் பேசுவாராம்.. ஏண்டா மித்து பொண்ணு இவ்ளோ நாள் எங்க கிட்ட எதுவுமே சொல்லாம இருந்துட்ட? முன்னயே சொல்லி இருந்தா உனக்கு இவ்ளோ கஷ்டம் வந்திருக்காது ல ?”, குரலில் மகளின் மீதான அன்பை உணர முடிந்தது.
“உங்கள கஷ்டப்படுத்த விரும்பல மினிம்மா .. ஆனா என் கொழந்தைய கஷ்டபடுத்த விரும்பல அதான் இப்டி ஒரு முடிவு எடுத்தேன்.. சரியா தப்பான்னு எனக்கு தெரியாது.. எனக்கு என் விகாஷ் முக்கியம் அவன யாரும் காயப்படுத்த நான் அனுமதிக்க முடியாது..”, என்ற மித்ராவின் குரலில் இருந்த திடம் துவாரகாவைத் திரும்பிப் பார்க்க வைத்தது.
“நாங்க எல்லாரும் இருக்கோம்ன்னு சொல்வோம் டா.. ஆனா நாங்களுமே சில சமயம் உன்னை காயப்படுத்தலாம்.. இனிமே இங்க இருக்க சமுதாயம் உன்னை நிறையவே டெஸ்ட் பண்ணும்.. சோ எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண உன்ன நீ தயார் படுத்திக்க.. “, பத்மினி தேவி இவ்வாறு கூறியதும் துவாரகா தனக்குள்ளே ஒரு பெருமூச்சை விட்டுக்கொண்டாள்.
“கண்டிப்பா மினிம்மா.. நீங்க எப்பவும் சொல்றது போல நான் வலிய ஏத்துக்க தயாரா தான் இருக்கேன்.. அப்ப தானே அத கடந்து வர முடியும்..”
“நிச்சயம் நீ கடந்து வருவ டா.. நீங்க வீட்டுக்கு வரும்போது நானும் டாடியும் அங்க இருப்போம். ராத்திரிக்கு நான் செஞ்சிட்டு வந்துடறேன் .. நீங்க கம்முன்னு ரெஸ்ட் எடுங்க .. “
“அதுலாம் வேணாம் க்கா .. வீட்ல வசந்திகிட்ட சொல்லிட்டேன்.. நீ சும்மா கிளம்பி வா.. இங்கயே சாப்டு போலாம் .. அத்தான்கிட்ட சொல்லிடு.. “, அன்பரசி இடையிட்டுப் பேசினார்.
“அடிபட்டு இருக்கறவகிட்ட யார் ஃபோன் குடுத்தீங்க? இப்போவே ஆரம்பிச்சிட்டா .. அந்த ஃபோன் ஒரு வாரம் ஆஃப் பண்ணி வை மித்து.. “
“அப்பறம் என் வேலை எல்லாம் யாரு பாக்கறது ?”
“அதான் முகில் இருக்கானே .. அவன் தான் தினம் ஆபீஸ் போய்ட்டு வந்து உனக்கு எல்லாம் சொல்றான்ல.. அப்பறம் நீ ஏன் டென்ஷன் ஆகற ?”, மூத்தவராகக் கண்டித்தார் பத்மினிதேவி.
“அவனே எவ்ளோ பாக்க முடியும். அவன் ஆபீஸ் வேலையும் அவனுக்கு இருக்கு.. நீ ஆபீஸ் பாத்துக்கிட்டா அவனுக்கு கொஞ்சம் ஹெல்ப்பா இருக்கும் .. நீ தான் போகமாட்டேன்-ன்னு அடம் பண்ற..”, சந்தடி சாக்கில் அக்காவின் மேல் இருக்கும் வருத்தத்தைக் கூறினார்.
“நான் லைப் என்ஜாய் பண்ண போறேன்.. என்னால இதுக்கு மேல எல்லாம் ஆபீஸ்ச கட்டி அழ முடியாது. நீயும் உன் பைய்யணுமே அழுங்க .. “
“இதுக்கு மேல என்ன என்ஜாய் பண்ண போறக்கா நீ?”
“ஏன் டி எனக்கு எல்லாம் அம்பது வயசுக்கு மேல வாழ்க்கை இல்லையா ? நான் அத என்ஜாய் பண்ண கூடாதா ? “, பத்மினி கோபமாகக் கேட்டார்.
“கேட்டது தப்பு தான் .. நீ உடனே ஆரம்பிக்காத .. பாவம் என் அத்தான்..”, என அன்பரசி சிரிப்புடன் அக்காவிடம் சரணடைந்தார்.
“உன் அத்தான நீயே கொண்டு போய் வச்சி சோறு போடு.. நான் வேர்ல்ட் ட்ரிப் போறேன் ..”
“அக்கா .. “
“முகிலுக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் போவேன்னு சொன்னீங்களே மினிம்மா ..”
“அவன் கல்யாணம் பண்ற மாதிரி எனக்கு தெரியல மித்து பொண்ணு.. அவன் கல்யாணம் பண்றதுக்கு முன்ன எனக்கு சத்து போயிடும் போல.. நான் என் உடம்புல தெம்பு இருக்கறப்போ எல்லாத்தையும் சுத்தி பாத்துட்டு வந்துடறேன் ..”
“ஹாஹாஹாஹா .. முகில் பாவம் மினிம்மா ..”
“நான் தான் இவங்ககிட்ட மாட்டிக்கிட்டேன் மித்துபொண்ணு.. நீ நேர்ல வா நெறைய இருக்கு .. “, எனக் கூறி பத்திரமாக வரும்படி கூறிவிட்டு வைத்துவிட்டார்.
“எப்டி ம்மா மினிம்மா மட்டும் இப்படி இருக்காங்க ?”, மித்ரா சிரித்தபடிக் கேட்டாள்.
“அதான் அவங்க பலம் மித்தும்மா .. இவங்க தான் நம்ம ஃபேமிலி ல பாதி பேருக்கு இன்ஸ்பிரேஷன் .. எனக்கும் ..” , என மென்னகையுடன் கூறினார்.
“உங்க கூட பிறந்த அக்காவா ஆண்ட்டி?”
“இல்ல ராகா.. இவங்க என் பெரியம்மா பொண்ணு.. ஆனா ரொம்ப எதார்த்தமானவங்க .. அந்த காலத்துல இருந்து அவங்க மனசுக்கு சரின்னு படரத மட்டும் தான் செஞ்சிட்டு இருக்காங்க .. வாழ்க்கைய அது போக்குல வாழ பழகணும்-ன்னு சொல்வாங்க.. அவங்களும் அப்படி தான்.. ஊரு பேசுதுன்னு எல்லாம் கவலை படமாட்டாங்க.. மை இன்ஸ்பிரேஷன் .. மை மென்டார் ..”, எனக் கூறிவிட்டுக் கண்மூடி படுத்துக்கொண்டார்.
துவாரகா அனைத்தையும் கேட்டபடி பத்மினியின் உரையாடல்களை நினைவுக் கூர்ந்துப் பார்த்தபடி கோயம்புத்தூர் நோக்கி காரை விரட்டிக்கொண்டு இருந்தாள்.
சில மணிநேர பயணத்திற்கு பிறகு, மாலை மங்கி இருள் சூழும் நேரம் அன்பரசியின் இல்லம் வந்துச் சேர்ந்தாள்.
வசந்தி ஆரத்தி தட்டுடன் வந்து நின்று மித்ராவை நிற்க கூறினார்.
“மூணு பேருக்குமே எடு வசந்தி.. “, எனக் கூறியபடி பத்மினிதேவி அங்கு வந்து நின்றார்.